anna tamil'அதிகாரம்' என்பதைப் பற்றி உலக அளவில் இரண்டு வகையான சிந்தனை மரபுகள் உள்ளன. ஒன்று மேக்ஸ் வெபர் கூறுவது போல 'அதிகாரமென்பதை ஒரு தனி நபரோ அல்லது சிறு குழுவோ தனது விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கான செயல்பாட்டில் ஒட்டுமொத்த சமூகத்தையே ஈடுபடச் செய்வதற்கான கருவி’ என்கிறது. அதாவது ஆதிக்க வர்க்கத்தின் நலன் காக்கவே அதிகாரம் பயன்படும் என்கிறது இந்தத் தரப்பு.

மற்றொரு வகையான சிந்தனைப் போக்கு, அதிகாரம் என்பது ஏதோ சிலருக்கு மட்டுமே உரியது அன்று, அது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் உரியது என்கிறது.

ஒரு சமூகத்தில் உருவாகின்ற உயரிய விழுமியங்கள், ஒரு கூட்டு இலட்சியத்தை உருவாக்கும். அச்சமூகத்தின் விழுமியங்கள் மற்றும் இலட்சியங்களின் அடிப்படையில் அதனை முன்னேற்றுகிறோம் என வாக்குறுதி வழங்கும் அரசியல் கட்சியிடம் தன்னை வழிநடத்திச் செல்லும் அதிகாரத்தை அச்சமூகம் வழங்குகிறது. அதன்மூலம் அச்சமூகமே அதிகாரம் மிக்கதாக மாறுகிறது.

உதாரணமாக மேற்கத்திய நாடுகள் பொருள்முதல்வாதத்தைத் தங்கள் விழுமியமாகவும், பொருளாதார முன்னேற்றத்தை இலட்சியமாகவும் கொண்டு இருந்ததால் அதனை உறுதிப்படுத்தக்கூடிய ஆட்சியாளர்களிடம் அதிகாரத்தை வழங்கி இன்று அதிகாரமிக்க முன்னேறிய சமூகங்களாக மாறின.

சரியான விழுமியங்கள், உயர்வான கூட்டு இலட்சியம் நிலவுகின்ற ஒரு ஜனநாயக நாட்டில் ஆட்சியியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் என்பது வங்கியில் உள்ள வைப்பு நிதியைப் போன்றது. மக்கள் வாடிக்கையாளர்களைப் போன்றவர்கள்.

வங்கியின் மீது நம்பிக்கை இழந்தால் வாடிக்கையாளர்கள் தங்களின் வைப்பு நிதியைத் திருப்பி எடுத்துக் கொள்வது போன்று, ஆட்சியாளர்களின் மீது நம்பிக்கை இழந்தால் தேர்தல் மூலம் மக்கள் அவர்கள் வழங்கிய அதிகாரங்களை மீண்டும் எடுத்துக் கொள்வார்கள்.

இந்த இரண்டாவது வகைச் சிந்தனைப் போக்கின் சாராம்சம், அதிகாரம் சமூக மேம்பாட்டிற்காகவும் பயன்படக்கூடும் என்பதாகும்.

இந்த இருவேறு வாதங்களில் இதுதான் சரி என்று அறுதியிட்டுக் கூறிவிட முடியாது. இரண்டு தரப்புக்கும் நியாயம் கற்பிக்கக் கூடிய உதாரணங்கள் இருக்கவே செய்கின்றன. கடந்த இரண்டாயிரம் ஆண்டு கால இந்திய வரலாறு முதல் தரப்பிற்கான சரியான எடுத்துக்காட்டு. ஏனெனில் இங்கு அதிகாரம் என்பது உயர்சாதி என்கிற சிறு குழுவின் நலனைக் காக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டது.

அதே சமயம் இந்திய சமூகப் பரப்பில் அதிகாரம் என்பது சமூக மேம்பாட்டிற்காகவும் பயன்படக் கூடும் என்கிற மற்றொரு தரப்பிற்கு நியாயம் கற்பிக்கும் விதத்தில் தேர்தல் அரசியலில் களம் புகுந்தவர் அறிஞர் அண்ணா.

ஆயிரமாயிரம் ஆண்டுகளாகச் சாதி என்னும் இருட்டறையில் கட்டுண்டு கிடந்த தமிழர்களின் வாழ்வில் பகுத்தறிவு ஒளி வீசி, சுயமரியாதை உணர்வூட்டி, சமத்துவ சமூகத்திற்கான உயர்ந்த விழுமியத்தை விதைத்தவர் தந்தை பெரியார்.

அவர் உருவாக்கிய இலட்சியம் நோக்கிய பயணத்தை வழிநடத்த, தமிழ்ச் சமூகத்தால் தங்கள் நம்பிக்கையை, அதிகாரத்தை முதலீடு செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் அறிஞர் அண்ணா.

ஆனால், அறிஞர் அண்ணா சமூக சீர்திருத்தத்திற்கு முன்னுரிமை தராமல் அரசியல் சீர்திருத்தத்திற்கு முன்னுரிமை தந்து விட்டார் என இன்றளவும் விமர்சிக்கப்படுகிறார். அரசியல் சீர்திருத்தமா? சமூக சீர்திருத்தமா? என்ற விவாதத்தை வறட்டுத்தனமான ஒன்று என்று விமர்சிக்கிறார் அண்ணல் அம்பேத்கர்.

அவர் கூறுவதாவது: "ஒரு சமூகம் வளர்ச்சி பெறவும் முன்னேற்றம் அடையவும் பல்வேறு வழிமுறைகளைக் கையாள வேண்டியிருக்கும். ஒவ்வொரு வழிமுறைக்கும் ஒரு முக்கியத்துவம் இருக்கும். அவற்றை நடைமுறைப்படுத்தும் போது முதலில் இது, அடுத்தது இது என்றெல்லாம் வரிசைப்படுத்த முடியாது" (நான் இந்துவாக சாகமாட்டேன், 5ஆம் பதிப்பு, பக்கம் 66).

அம்பேத்கர் தன்னளவில் சமூக மாற்றத்திற்குத்தான் முதலிடம் கொடுப்பேன் என்று கூறியிருந்தாலும் மற்ற தளங்களிலும் தொடர்ந்து மாற்றத்திற்கான செயல்பாடுகள் நடைபெற வேண்டும் என்பதில் உறுதி காட்டுகிறார்.

நிலச் சுவான்தார்களும், சாஸ்திரிகளும், ஆச்சாரியார்களும் அரசியலில் கோலோச்சிய காலகட்டத்தில், தந்தை பெரியார் சமூக தளத்தில் சாமானிய மக்களுக்குள் விதைத்த சமத்துவ இலட்சியத்தை அரசியல் தளத்திலும் முன்னெடுத்துச் செல்வதற்கான வெற்றிடம் இருக்கவே, அதன் முக்கியத்துவம் உணர்ந்து அப்பொறுப்பை ஏற்பதற்காக, பெரியாரிடமே முரண்பட்டுத் தனி இயக்கம் கண்டவர் அண்ணா.

அதுவரை இருந்த அரசியல் தலைவர்கள் போல நான்தான் உங்களைக் காப்பாற்ற முடியும் என்ற தொனியில் மக்களைத் தனக்கு ஆதரவளிக்க வற்புறுத்தியவரில்லை அண்ணா. மக்களிடமிருந்து கற்று, அவர்களிடமிருந்து இயக்கத்தைக் கட்டமைத்து, சாமானிய மக்களின் பிரதிநிதியாகவே தன்னை நிறுவிக் கொண்டார்.

அரசியல் தளத்தில் எங்கெல்லாம் அதிகாரம் குவிக்கப்பட்டுள்ளதோ அத்தனையும் தகர்த்துப் பரவலாக்க ஓங்கி ஒலித்தது அவரது குரல். அதிகாரத்தைச் சாமானிய மக்களுக்கும் நெருக்கமானதாகக் கொண்டுவர அவர் முன்மொழிந்த வழிமுறைகள்தான் மத்திய அரசின் அதிகாரத்தை எதிர்க்கும் மாநில சுயாட்சி கோரிக்கை, இருமொழிக் கொள்கை, நிலச் சீர்திருத்தத்திற்கான அவரது ஆதரவு, சமூக நலத் திட்டத்திற்கு அவர் கொடுத்த முக்கியத்துவம் ஆகியவையெல்லாம்.

மக்கள் மன்றம், சட்டமன்றம், நாடாளுமன்றம் என அவர் தடம் பதித்த அத்தனை இடங்களிலும் அதிகாரக் குவிப்பை அடித்து நொறுக்கும் வேலையையே செய்தார் அண்ணா.

நாடாளுமன்றத்தில் தனது முதல் பேச்சிலேயே, 'தேசம் என்றால் என்ன என்ற மறுசிந்தனைக்கு மறுமதிப்பீடு, மறு வியாக்கியானங்களுக்கான நேரம் வந்துவிட்டது' என்று பேசி நாடெங்கும் அதிர்வலைகளைக் கிளப்பியதும்,

முதல்முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதே 'சட்டத்தின் மூலம் மட்டும் தேசிய கௌரவத்தை நிலைநிறுத்திட முடியாது' என முழங்கியதும், சாதி, மதம், தேசியம் என எந்த வடிவத்தில் ஆதிக்கம் திணிக்கப்பட்டாலும் அவற்றைத் தகர்த்தெறியும் பெரியாரின் சுயமரியாதை, சமூகநீதிக் கொள்கை வழங்கிய உந்துவிசையால்தான்.

இன்று தமிழ்நாடு இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் இருந்து வேறுபட்டு அனைவரையும் உள்ளடக்கிய ஜனநாயகத் தன்மை வாய்ந்த வளர்ச்சிப் பாதையில் பயணிக்க அதுவே காரணம்.

காஞ்சிபுரத்தில் எளிய நெசவுக் குடும்பத்தில் பிறந்த அண்ணாதுரை என்னும் அந்தச் சிறிய உருவம் அதுவரை தமிழக ஆட்சி அதிகாரத்தில் கோலோச்சிய பார்ப்பனிய ஆதிக்கத்தை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்தது என்பது அதிகாரத்தின் மீது உள்ள ஆசையால் அன்று, சமூகநீதிக் கொள்கையை அரசியல் அரியணை ஏற்ற வேண்டிய வேண்டிய வரலாற்றுத் தேவையை மக்களிடம் கொண்டு சென்று அவர்களின் நம்பிக்கையை மூலதனமாகப் பெற்றதனால்தான். அவரது தலைமையிலான இயக்கம் பெற்ற அதிகாரம் என்பது சாமானியனின் அதிகாரம்.

தனக்குக் கிடைத்த அதிகாரம் என்பது ஒட்டுமொத்த உழைக்கும் சமூகத்திற்கான அதிகாரம் என்பதையும் உணர்ந்ததாலோ என்னவோ அவர் "அண்ணாதுரை கொண்டு வந்தவற்றை எல்லாம் மாற்ற வேண்டும் என்று எண்ணும் போதே மக்கள் வெகுண்டு எழுவார்களே! என்ற அச்சமும் கூடவே வரும் இல்லையா? அந்த அச்சம் இருக்கிற வரையில் இங்கே யார் ஆண்டாலும் அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள்!" எனத் துணிந்து சொன்னார்.

தமிழ்ச் சமூகத்தில் பகுத்தறிவு, சுயமரியாதை, சமூகநீதி என்னும் உயரிய லட்சியங்களை விதைத்த பெரியார் என்னும் அடிக்கட்டுமானம் மீதுதான், அண்ணா ஆட்சி அதிகாரத்தை கட்டியெழுப்பினார்.

அண்ணா வகுத்த வழியில் பெரியார் விதைத்த லட்சியங்களில் இருந்து வழுவாமல், தனக்குக் கிடைத்த அதிகாரம் ஒவ்வொரு சாமானிய மக்களின் அதிகாரம் என்பதை இன்றைய ஆட்சியாளர்களும், ஆட்சிக்கு வர விரும்புபவர்களும் மறப்பார்களேயானால், தமிழ்ச் சமூகம் தங்கள் நம்பிக்கையின் மூலம் அவர்களுக்கு வழங்கிய அதிகாரத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளும், மீண்டுமொரு அண்ணா உருவாகும் வரை.

- குண.சந்திரசேகர்

Pin It