தேர்தலே இலக்கு, சாமர்த்தியமே வழிமுறை:
ஓர் இயக்கம் இக்கட்டான சூழலில் தனது கொள்கைகளைக் கைவிடுவது என்பது வேறு, கொண்ட கொள்கையைக் கைவிட காலத்தை எதிர்ப்பார்த்துக் கொண்டிருப்பது என்பது வேறு. அண்ணா மீது அன்பு கொண்டவர்கள் திராவிட நாடு விடுதலைக் கோரிக்கையை வேறு வழியின்றி அண்ணா கைவிட்டதாகக் கருதிக் கொள்வார்கள். ஆனால் அண்ணாவின் செயல்பாடு இரண்டாவது வகையைச் சேர்ந்தது.
திராவிட நாடு பிரிவினையை அண்ணா நம்பினாரா?
திராவிட நாடு விடுதலைக் கோரிக்கையில் அண்ணா உண்மையிலேயே நம்பிக்கை வைத்திருந்தாரா? 1949இல் திராவிட முன்னேற்றக் கழகம் உருவாக்கப்பட்ட போது, திராவிடர் கழகத்தின் எல்லாக் கொள்கைகளையும் திமுகவும் கொண்டிருப்பதாகத்தான் கூறப்பட்டது. 1949 செப்டம்பர் 17ஆம் நாள் சென்னையில் நடைபெற்ற திமுக தொடக்க விழாவில் பேசிய அண்ணா “திராவிடர் கழகமாகட்டும் - திராவிட முன்னேற்றக் .........கழகமாகட்டும், படைவரிசை வேறு .......என்றாலும் ......கொள்கை ஒன்றுதான், கோட்பாடு ஒன்றுதான், ......திட்டமும் வேறு அல்ல…” என்று குறிப்பிட்டார் (டி.எம்.பார்த்தசாரதி, திமுக வரலாறு, பக்.123)
1940ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி, திருவாரூரில் கூடிய ஜஸ்டிஸ் மாகாண மாநாட்டில் பெரியார் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், திராவிட நாடு பிரிவினைத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அன்று முதல் திராவிட நாடு பிரிவினைக் கோரிக்கை உயர்த்திப் பிடிக்கப்பட்டு வந்தது. 1944இல் ஜஸ்டிஸ் கட்சி திராவிடர் கழகமாகப் பெயர் மாற்றம் பெற்ற போதும் இக்குறிக்கோள் மாற்றமின்றித் தொடர்ந்தது. 1949இல் திமுக உதயமான போதும் கூட திராவிடர் கழகக் கொள்கைகளில் மாற்றம் ஏதுமின்றி திமுக தொடரும் என்றே அண்ணா அறிவித்தார்.
திராவிட நாடு விடுதலை பற்றிப் பேசி எல்லோரையும் நம்பச் செய்த அண்ணாவுக்கு, திராவிட நாடு விடுதலைக் கோரிக்கையின் வெற்றியில் என்றைக்காவது நம்பிக்கை இருந்ததா? கட்சியைத் தொடங்கும் போதே திராவிட நாடு விடுதலையில் அண்ணா நம்பிக்கையற்றவராக இருந்தார் என்று கருதவும் இடமிருக்கிறது. 1948இல் அப்படிப்பட்ட நம்பிக்கையின்மையை அண்ணா.... வெளிப்படுத்தியதாக 1969இல் ஒரு கட்டுரையில் ஈ.வெ.கி. சம்பத் தெரிவிக்கிறார்.
1942இல் சர் ஸ்ட்ராபோர்டு கிரிப்ஸ் தலைமையில் 'கிரிப்ஸ் தூதுக்குழு' இந்தியத் தலைவர்களைச் சந்தித்துப் பிரச்சனைகளைத் தீர்க்கும் திட்டத்துடன் வந்தது. தந்தை பெரியாரின் தலைமையிலான குழு திராவிட நாடு பிரிவினைக் கோரிக்கையை அக்குழுவின் முன் வைத்த போது, அது சாத்தியமில்லை என்று நிராகரிக்கப்பட்டு விட்டது. முகமது அலி ஜின்னாவிடம் பாகிஸ்தான் கோரிக்கையோடு........... திராவிடஸ்தான் கோரிக்கை யையும் முன்னெடுக்க வேண்டும் என்று பெரியார் வைத்த கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்த ஜின்னா ‘உங்கள் மக்கள்தான் போராட வேண்டும்’ என்று கூறி விட்டார். திராவிட நாடு போராடாமல் கிடைக்காது என்ற நிலை தெளிவான போது, அண்ணாவின் உளப்போக்கு என்னவாக இருந்தது?
இதைப் பற்றி, 1969இல் அண்ணா இறந்த பிறகு சில வாரங்களில் ஈ.வெ.கி.சம்பத் எழுதிய கட்டுரையில் ‘கிரிப்ஸ் தூதுக்குழு விடம் அடைந்த தோல்வி அண்ணாவைத் திராவிட நாட்டில் நம்பிக்கை இழக்கச் செய்து விட்டது’ என்று கூறியுள்ளதாக, இரா. கண்ணன் தமது அண்ணா (Anna – The Life and Times of C.N.Annadurai) என்ற நூலில் ஒரு செய்தியைப் பதிவு செய்கிறார்:
1948இல் கும்பகோணத்தில் நடந்த திராவிடர் கழக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தன்னிடம் அண்ணா விவாதித்ததைச் சுட்டிக் காட்டினார் சம்பத்:
“திராவிட நாடு பிரிவினை இனியும் கேட்பது சரியா என்று அண்ணா சலிப்போடு பேசினார். கிரிப்ஸ் கமிசன் வந்த போது அவர்கள் ஜின்னாவின் பாகிஸ்தான் பிரச்சனையில் காட்டிய அக்கறையை, திராவிடஸ்தானில் காட்ட வில்லை. தொடர்வண்டி தப்பி விட்டது. இனியும் அதைத் தொடர்ந்து கோருவது அர்த்தமில்லாதது என அவர் வாதங்களை அடுக்கினார். எந்த ஒரு லட்சியத்தையும் நம்மால் முடியுமா? முடியாதா? என்ற எண்ணத்தில் பார்ப்பதை விட, நியாயமா நியாயமில்லையா என்ற எண்ணத்தில்தான் பார்க்க வேண்டும். திராவிட நாடு பிரிவினை வேண்டும் என்பதில் அவசியமும், நியாயமும் இருந்தால், கிரிப்ஸ் கொடுக் காமல் போய் விட்டார் என்பதற்காகக் கோரிக்கையை விட்டு விடுவதா?' என ஆத்திரமாகக் கேட்டேன்.
அன்றே அவருக்குப் பிரிவினை மிகவும் அநியாயமான கோரிக்கை என்று நன்கு தெரிந்திருக்க வேண்டும். அப்போது அது மிதமாக இன அடிப்படையில் கிளப்பப்பட்ட நேரம். ‘பிரிவினை முடியாது’ என்பதை விடக் கூடாது என்று அவருக்கு அன்றே புலப் பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால், அதை முடிவாக்கி, நிலையெடுக்க அவர் பெரிதும் தயங்கி, மீண்டும் திராவிட நாட்டுப் பிரிவினைக்குப் புதுப்புது ‘நியாயங்களை’ சோடித்துத் தரும் பிரதமத் தளபதியாகப் பெரியாருக்கு விளங்கி வந்தார்.”
(மேற்கோள், இரா. கண்ணன், 'அண்ணா', (Anna – The Life and Times of C.N.Annadurai) விகடன் பிரசுரம், 2010, பக்.88 - 89)
திராவிட நாடு விடுதலை உள்ளிட்ட திராவிடர் கழகக் குறிக்கோள்களை அடையப் புறப்பட்ட புதிய படை வரிசையான திமுகவைத் தொடங்குவதற்கு (1949) ஓராண்டுக்கு முன்னரே (1948), திராவிட நாடு பிரிவினையில் அண்ணா நம்பிக்கை இழந்திருந்தார் என்பதுதான் ஈ.வெ.கி.சம்பத் பதிவு செய்துள்ள செய்தி. ஆனால், இதே திராவிட நாடு கோரிக்கையை அறிவியல் பூர்வமானதன்று என்று விமர்சித்து, பிரிந்து போய் நேர் எதிரிடையான முகாமில் அடைக்கலமாகிப் போன ஈ.வெ.கி.சம்பத்;தின் கூற்றை அப்படியே ஏற்பது சரியானதா? ஈ.வெ.கி. சம்பத்தின் கூற்றை அப்படியே ஏற்க வேண்டிய தில்லை என்றாலும், 1948 அளவில் திராவிட நாடு விடுதலையில் முழு நம்பிக்கை யற்றவராக அண்ணா இருந்தார் என்ற செய்தியை ஏற்கலாம். தாம் நம்பாத ஒன்றை பிறர் நம்பும்படி பேசினார். நம்பச் செய்தார் என்பதுதான் அண்ணாவின் சாமர்த்தியம். திராவிட நாடு கொள்கையைக் கைவிடும் போது கூட தொண்டன் அதிர்ச்சியடையாத வகையில் அதைக் கைவிட வேண்டும் என்ற பார்வையை அண்ணா கொண்டிருந்தார் என்பது இக் கட்டுரைத் தொடரின் முன் பகுதிகளில் பதிவு செய்யப் பட்டுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம் என்று தமது கட்சிக்குப் பெயரைத் தெரிவு செய்யும் போதே அண்ணா திராவிட நாடு விடுதலையை ஓரம் கட்டி விட்டார் என்று கருதலாம்.
1949 செப்டெம்பர் 17 அன்று திமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் எனப் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டமை குறித்து அண்ணா விளக்கினார்:
“திராவிடர் கழகத் திலிருந்து பிரிந்த நம் கட்சிக்கு ‘திராவிடர் முன்னேற்றக் கழகம்’ என்று பெயர் இருப்பதுதானே பொருந்தும் என்று சில நண்பர்கள் கேட்கிறார்கள். அவர்கள் கேள்வியிலே பொருள் இருக்கிறது. அதே சமயம், நாம் இன்னும் சற்று விரிவான கண்ணோட்டத்துடன் நம் கட்சியின் பெயரை அணுக வேண்டுகிறேன். ‘திராவிடர் முன்னேற்றக் கழகம்’ என்று கூறும் போது, அதில் திராவிடர்கள் மட்டும் அங்கம் பெறலாம் என்று அரண் எழுப்புவதாக அமைந்து விடுகிறது. இப்போதுள்ள உலகச் சூழ்நிலைக்கு, காலப்போக்குக்கு இது உகந்ததாக எனக்குப் படவில்லை. நம்முடைய கட்சியின் லட்சியம், திராவிட நாட்டைச் செழுமையான பூமியாகப் பேணிக் காப்பதாகும். அத்தகைய திராவிட மண்ணில், திராவிடர்கள் மட்டுமே வாழலாம் என்று வரையறை செய்வது குறுகிய நோக்கமாகும்! முடியாத செயலுமாகும். இந்த மண்ணுக்கு நன்றி உள்ளவர்களாக நடந்து கொள்ளும் எந்த இனத்தவரும் இன்னலின்றி இன்ப வாழ்வு வாழப் பணியாற்றுவதே நம் கட்சியின் லட்சியமாக இருக்க வேண்டும். அதே சமயம், நம் திராவிட நாட்டுக்கே உரிய பண்பாட்டைக் காக்கவும், தொழில் வளத்தைப் பெருக்கவும் நாம் பின்வாங்கத் தேவையில்லை. திராவிடர் கழகம் போல இன நலனுக்காக மட்டும் போராடாமல், பூகோள அடிப் படையில் ‘திராவிடம்’ முழுமைக்கும் நன்மைகள் உண்டாக - முன்னேற்றம் காண - நாம் பாடுபட வேண்டியிருப் பதால், திராவிடர் முன்னேற்றக் கழகம் என்பதை விட திராவிட முன்னேற்றக் கழகம் என்று நம் கட்சிக்குப் பெயர் இருப்பதே எல்லா வகையிலும் பொருந்தும் என்பது என் தாழ்மையான எண்ணம்” (மேற்கோள், இரா. கண்ணன், ‘அண்ணா’, பக், 225 - 226)
பெரியாரின் திராவிடர் கழகமும், அண்ணாவின் திராவிட முன்னேற்றக் கழகமும் உள்ளீட்டால் ஒன்று அல்ல என்பதை மேலோட்டமாகப் பார்த்த நிலையிலேயே ஒருவர் புரிந்து கொள்ளலாம். “இப்போதுள்ள உலகச் சூழ்நிலைக்கும் காலப் போக்குக்கும்” ஏற்ப பெயரைத் தேர்வு செய்வதாக அண்ணா கூறுகிறார். ‘திராவிட நாட்டுக்கே உரிய பண்பாட்டைக் காக்கவும், தொழில் வளத்தைப் பெருக்கவும் நாம் பின்வாங்கத்....... தேவையில்லை’ என்று தம் வேலைத் திட்டத்தைத் தொடக்கத்திலேயே குறைத்துக் கொள்கிறார். திராவிட நாடு விடுதலையை அமைப்பின் பெயரிலோ அல்லது விளக் கத்திலோ அண்ணா குறிப்பிடக் கூட இல்லை என்பதைக் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும்.
திமுகவின் தொடக்க விழா வரையில், தம் கட்சியை ‘ஒட்டுமாஞ்செடி’ என்று அண்ணா விவரித்தார். “ஒட்டுமாஞ்செடி பூத்துக் காய்த்துக் கனி குலுங்கும் நாள் வந்தே தீரும்” என்றார் அண்ணா. அவர் கூறியபடியே திமுக பூத்துக் காய்த்துக் கனி குலுங்குகிறது. தேர்தல் பாதையிலே பதவிக் கனி பறித்து ஆரவாரிக்கிறார்கள் கட்சிக்காரர்கள். ‘அண்ணா வாழ்க!’ என்றும் அவ்வப்போது சொல்லிக் கொள்கிறார்கள். அண்ணாவின் பேச்சிலும் எழுத்திலும் பூத்த விடுதலைப் பூக்கள் பொய்ப் பூக்கள்@ அவை ஒருபோதும் காயாகாது, கனியாகாது. அண்ணா பயிரிட்ட ‘ஒட்டுமாஞ்செடி’ பதவிக் கனிகளுக்காகவே பிரத்தியேகமாகப் பயிரிடப்பட்டது. விடுதலையே இலக்கு என்றால் பெரியாரை விட்டு வந்திருக்க வேண்டிய தேவையே எழுந்திருக்காது.
அண்ணாவுக்கும் அவருடைய தோழர்களுக்கும் இலக்கு சட்ட மன்றம்தான் என்ற கருத்தைப் பெரியார் கொண்டிருந்தார். 1949 செப்டம்பர் 19ஆம் நாளைய ‘விடுதலை’ தலையங்கத்தில் பெரியார் இவ்வாறு எழுதினார். அது திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்து இரண்டு நாட்களில் எழுதப்பட்டது:
“அவர்கள் பேசுவதெல்லாம் வெறும் மோசடி. அவர்களுக்குத் தெரியும் என்னோடு இருந்தால் சட்ட சபைக்குப் போக முடியாது@ பதவியை அடைய முடியாது. அதனால்தான் திருமணத்தை ஒரு சாக்காகச் சொல்கிறார்கள். அவர்களுக்கும் கொள்கைகளுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? என்ன?”
அண்ணாவின் புதுவகை அரசியல்
அண்ணாவுக்கும் பிற தலைவர் களுக்கும் வேறுபாடு உண்டு. இவர் புதுவகை அரசியல்வாதி, நாவண்மை, எழுத்தாற்றல், விரிவான வாசிப்பு, படைப்புத் திறன், பிரச்சினைகளை எளிதில் புரிந்து கொள்ளும் திறன், பிறருக்கு எளிதில் புரிய வைக்கும் திறன், இவற்றோடு பணிவு, தன் விருப்பத்தைப் பிறர் கருத்தாகக் காட்டி நிறைவேற்றிக் கொள்ளும் திறன், தன் கட்சியினர் மட்டுமன்றி எதிர்க்கட்சியினர், இதர பிரிவினர் அனைவரையும் வென்றெடுக்கும் நளினமான செயல்பாடு, ‘மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு’ என்ற நடைமுறைத் தத்துவம், ‘வசவாளர் வாழ்க’ என்று கூறியே வைதாரின் வாழ்த்துக்களையும் பெற்று விடும் வழிமுறை, எல்லாவற்றுக்கும் மேலாக அனைத்துத் தரப்பினரையும் ஆதரவாளர்களாக மாற்றிக் கொள்ளும் ‘விலாங்கு மீன் அரசியல்’- இத்தனையும் வாய்க்கப் பெற்ற இன்னொரு தலைவரைக் காண்பது அரிது. அண்ணா தன் இலக்கில் வெற்றி பெற்றார். தேர்தல் அரசியலே அவருடைய இலக்கும், வழிமுறையும் ஆகும். அதில் அவர் வென்றார்.
சாதிக்கலவரமும் அண்ணாவின் சாமர்த்திய அரசியலும்:
1957ஆம் ஆண்டு சட்ட மன்றத் தேர்தலில் திமுக போட்டியிட்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்ட மன்றம் சென்றவுடனேயே, விலாங்கு மீன் அரசியல் உத்தியை அண்ணா பயன்படுத்த வேண்டிய தேவை எழுந்தது. முதுகுளத்தூர் கலவரமும் அதையொட்டி நிகழ்ந்த படுகொலைகளும் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன. இது சட்ட மன்றத்திலும் எதிரொலித்தது. இப்பிரச்சனையைச் சட்ட மன்றத்தில் அண்ணா கையாண்ட விதம் அவர் எவ்வளவு பெரிய கைதேர்;ந்த அரசியல்வாதி என்பதை வெளிப்படுத்தியது. தம்முடைய கட்சி வளர்ச்சி எதிர்காலத்தில் பாதிக்காத வகையிலும், மேலும் தென் மாவட்டங்களில் தேவர்கள் மற்றும் ஆதி திராவிடர்கள் ஆகிய இரண்டு சமூகங்களின் ஆதரவையும் பெறும் வகையிலும், அதே நேரம் காங்கிரசு அரசாங்கத்தைக் குற்றம் சுமத்தியும், கலவரத்தில் ஈடுபட்ட இரண்டு சமூகங்களின் தலைவர் களையும் புகழ்ந்தும், யார் குற்றம் செய்தவர்கள்? யார் பாதிக்கப்பட்டவர்கள்? என்பதைக் கடைசி வரைக் கூறாமலும், திமுகவின் தேர்தல் வெற்றிகள் எதிர்காலத்தில் எவ்வகையிலும் பாதிக்கப்படாத வகையிலும் சட்ட மன்றத்தில் அண்ணா ஆற்றிய உரை அண்ணாவின் சாமர்த்திய அரசியலை வெளிப்படுத்தும். இதன் விளைவு அண்ணாவின் அடுத்த தேர்தலில் (1962) திமுக 50 இடங்களைக் கைப்பற்றி சட்ட மன்றத்தில் முதன்மை எதிர்க் கட்சியானது.
முதுகுளத்தூர்... கலவரம் மற்றும்...... படுகொலைகள் பற்றிய அண்ணாவின் அணுகு முறையை அறிந்து கொள்ள வேண்டும். இராமநாதபுரம் முதுகுளத்தூரில் மோதிக் கொண்டவர்கள் தேவர்களும் ஒடுக்கப்பட்ட மக்களுமாவர். நாடார்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவும் பின்புலமாகவும் இருந்திருக்கின்றனர். முக்குலத் தோரின் அடக்குமுறைகள் அங்கே இருந்தன என்பதை மறுப்பதற்கில்லை. முக்குலத்தோரின் போற்றப்பட்ட தலைவராக உ.முத்துராமலிங்கத் தேவர் இருந்தார். முத்துராமலிங்கத் தேவர் காங்கிரசுக் கட்சியில் இருந்த வரை அடக்குமுறைகள் குறித்து காங்கிரசு வாய் திறக்கவில்லை. 1937இலேயே தேர்தலில் காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்ட அவர், மக்களை ஒடுக்கும் செயல்களில் ஈடுபட்டார் என்று பதிவுகள் உள்ளன. அன்றைய இராஜாஜியின் அரசு, முத்துராமலிங்கத் தேவர் தன்னுடைய கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் என்றும் பாராமல் நன்னடத்தை ஜாமீன் கோரியது. பின்னர் முத்துராமலிங்கத் தேவர் காங்கிரசை விட்டு வெளியேறி பார்வர்டு பிளாக் கட்சியின் முக்கியத் தலைவராக விளங்கினார். முத்துராம லிங்கத் தேவரை மீறி ஒரு தேர்தல் முடிவு அமைய முடியாது என்ற நிலை இருந்தது.
ஒடுக்குமுறைக்கு உள்ளாகி வந்த தாழ்த்தப்பட்ட மக்கள் காங்கிரசையும், காமராசரையும் ஆதரித்தனர். 1957இல் முத்துராமலிங்கத் தேவரும், அவருடைய ஆதரவாளர்களும் குறைந்த வாக்குகள் வித்தியாசத் திலேயே வெற்றி பெற்றனர். முக்குலத்தோருக்கு இது ஆத்திரத்தை ஏற்படுத்தியது என்றும் இதுவே கலவரத்திற்கு இட்டுச் சென்றது என்றும் கருத்துகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. முதுகுளத்தூர் பகுதியில் நெருக்கடியான நிலை தோன்றியதும், அரசு தலைவர்களை எச்சரிக்கை செய்தது. மாவட்ட ஆட்சியர் செப்டம்பர் 10ஆம் நாள் ஒரு சமாதான மாநாட்டைக் கூட்டினார். அதில் 10 மறவர் பிரதிநிதிகளும், 2 நாடார்களும், 3 தாழ்த்தப்பட்டோர் தலைவர்களும் பங்கேற்றனர். தாழ்த்தப்பட்டோர் தலைவராகப் பங்கேற்ற இம்மானுவேலுக்கும் முத்துராமலிங்கத் தேவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது என்று தெரிகிறது.
பிறகு..... சட்ட மன்றத்தில் முதுகுளத்தூர் கலவரம் குறித்துப் பேசப்பட்டபோது, சமாதானக் கட்டத்தில் இமானுவேல் கடைசி வரையில் உட்காராமல்.... நின்று கொண்டேயிருந்தார் என்றும் சமாதான அறிக்கையில் கையெழுத்துப் போடுவதற்குக் கூட அவரை உட்காரும் படி முத்துராமலிங்கத் தேவர் அனுமதிக்கவில்லை என்றும் எஸ்.சந்தானம் என்ற திமுக உறுப்பினர் சட்ட மன்றத்தில் தெரிவித்தார். இந்த சமாதான மாநாடு செப்டம்பர் 10ஆம் தேதி நடைபெற்றது. அடுத்த நாள் இரவு இமானுவேல் கொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து கலவரச் சூழல் ஏற்பட்டது.
செப்டம்பர் 12ஆம் தேதி அருங்குளத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் ஏற்பாடு செய்திருந்த நாடகம் பாதியில் நிறுத்தப்பட்டது. நாடக நடிகர்கள் முத்துராமலிங்கத் தேவரைப் புகழ்ந்து பாடல்கள் பாட ஆரம்பித்ததே இதற்குக் காரணம். அடுத்த நாள் (செப்டெம்பர் 13ஆம் நாள்) அருங்குளத்தில் கொலைகள் விழுந்தன. தாக்கு தலில் ஐந்து தாழ்த்தப்பட்ட மக்கள் கொலையுண்டார்கள். மருத்துவ மனையில் இரண்டு மறவர்கள் மாண்டார்கள். இம்மானுவேலைக் கொலை செய்தவர்களைக் கைது செய்ய 14ஆம் தேதி காலை காவல்துறையினர் கீழத்தூவல் வந்தனர். காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 மறவர்கள் கொல்லப்பட்டனர். செப்டம்பர் 16-17 ஆகிய நாட்களில் கலவரம் மேலும் பரவியது. வீராம்பலில் மாதா கோயிலில் அடைக்கலம் புகுந்த தாழ்த்தப்பட்டோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பல இடங்களில் தாக்குதல்கள் தேவர்கள் மற்றும் பள்ளர்கள் ஆகிய இரு சமூகத்தாராலும் நடத்தப்பட்டன. ஆனால், அவை முறையே தாக்குதல்கள், எதிர்த்தாக்குதல்கள் என்ற வகையில் அமைந்திருந்தன. இறப்புகள் இருதரப்பிலும் நிகழ்ந்தன. ஆனால் பெரும் தாக்குதலுக்கும் இழப்புக்கும் தாழ்த்தப்பட்டோர் ஆளாயினர். செப்டம்பர் 13;ஆம் தேதி நடைபெற்ற மறவர் தலைவர்களின் ரகசியக் கூட்டத்திற்குப் பிறகு, தாக்குதல்கள் அதிகமாயின. மறவர்கள் மஞ்சள் நீர் தெளித்தத் துணிகளைக் கட்டிக் கொண்டு ஆயுதங்களுடன் போருக்குச் செல்வது போல தாக்குதலில் ஈடுபட்டனர்.
கீழத்தூவலில் ஐந்து மறவர்களைக் கட்டிவைத்துக் காவல்துறை சுட்டது என்ற குற்றச்சாட்டும் கண்டனமும் முக்குலத்தோர் தரப்பிலிருந்து எழுப்பப்பட்டது. இதை அரசு மறுத்தது.
முதுகுளத்தூர் கலவரத்திற்குத் தலைவர்களின் எதிர்வினை எப்படி இருந்தது? முதுகுளத்தூர் கலவரம் பற்றிக் கேள்விப் பட்டவுடன், தந்தை பெரியார், உடனடியாக இராணுவத்தை அனுப்பிக் கலகத்தை அடக்க வேண்டுமென்று கோரினார். முதுகுளத்தூர் கலவரத்தை ஒட்டி, முத்துராமலிங்கத் தேவர் கைது செய்யப்பட்டதை வரவேற்றார்.
காங்கிரசிலிருந்து வெளியேறியவர்கள் உருவாக்கிய காங்கிரசு சீர்திருத்தக் கட்சி முத்துராமலிங்கத் தேவரின் ஆதரவைப் பெற்றிருந்தது. 1957 தேர்தலில் 16 சட்டமன்ற இடங்களை அக்கட்சி வென்றது. பின்னர் அக்கட்சி தன் பெயரை சனநாயகக் காங்கிரசு என்று பெயர் மாற்றம் செய்து கொண்டது. அதன் மதுரை மாநாட்டிற்குச் சென்று விட்டுத் திரும்பும் போது (செப்டெம்பர் 28) முத்துராமலிங்கத் தேவர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இமானுவேல் கொலை வழக்கில் முதல் எதிரியாகச் சேர்க்கப்பட்டார்@ புதுக்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
முதுகுளத்தூர் கலவரத்தையொட்டி காங்கிரசு அரசின் போக்கைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் எம்.கல்யாண சுந்தரம் தமிழகச் சட்ட மன்றத்தில் 1957 அக்டோபர் 26 அன்று நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தார். கலவரம் குறித்து அண்ணாவின் பார்வை எப்படிப்பட்டதாக இருந்தது என்பதுதான் முக்கியமானது.
திமுகவின் உறுப்பினர் திருமதி சத்தியவாணி முத்து, முத்துராமலிங்கத் தேவரின் அடக்குமுறைகள் பற்றியும் குறிப்பிட்டார்@ அரசாங்கம் தக்க நடவடிக்கைகள் எடுக்காமல் இருந்தமைக்குக் கண்டனமும் தெரிவித்தார். மறுநாள் பி.எல்.சந்தானம் உரையாற்றினார். தாழ்த்தப்பட்டோர் தாக்கப்பட்ட விவரங்களைத் தெரிவித்துக் கடும் கண்டனம் தெரிவித்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது@ சமாதானக் கூட்டத்தின் போதே தேவரைக் கைது செய்திருக்க வேண்டும் என்ற கருத்தையும் வைத்தார்.
அடுத்துப் பேசிய அண்ணாவின் போக்கு எப்படி இருந்தது? எப்பக்கமும் சாராமல் தன் எதிர்காலத் தேர்தல் அரசியலுக்கு ஏற்பத் தன் கருத்தை அண்ணா முன்வைத்தார். அவருடைய சாமர்த்திய அணுகுமுறைக்கு அவருடைய உரையே சான்று.
அண்ணா நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை ஆதரித்துப் பேசினார்:
“இந்தச் சர்க்காரிடத்தில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று தெரிவித்துக் கொள்வதற்குக் காரணம், உங்கள் ஆட்சியிலே சட்டம் மதிக்கப்படவில்லை@ பாதுகாக்கப் படவில்லை. உங்கள் ஆட்சியிலே பலாத்காரம் தலைதூக்குகிறது. சட்டத்தை மதித்து, பலாத்காரம் தலைதூக்காமல் செய்யக் கூடிய திறமை உங்களுக்கு இல்லை. இந்த இராஜ்ய மக்களுடைய ஆதிதிராவிட மக்களாக இருந்தாலும் சரி - பிற்பட்ட இனத்து மக்களாக இருந்தாலும் சரி - உயிருக்கோ, உடைமைக்கோ உங்களால் பாதுகாப்புக் கொடுக்க முடியவில்லை. அவர்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பதற்குப் பதிலாக, அவர்கள் மேல் எடுக்கப்படுகின்ற பலாத்காரச் செயல்களுக்கு நீங்களும் உங்கள் சுயநலத்தின் காரணமாக உடந்தையாக இருக்கிறீர்கள் என்கின்ற காரணத்தால் உங்கள் மீது நம்பிக்கை இல்லை என்று சொல்கிறேன்.” (கே.ஜீவபாரதி, பசும்பொன் தேவரும், திராவிட இயக்கங்களும், சுவாமிமலைப் பதிப்பகம், சென்னை, 2003, பக்கம் 54)
அது வரை தென் மாவட்டங்களில் திமுக கிளையே கிடையாது என்பதை அண்ணா குறிப்பிட்டார்:
“இன்றைய தினம் பெருமையோடு சொல்கிறேன் அந்த வட்டாரத்தில் எங்கள் கழகத்திற்கு இதுவரையிலே ஊன்றுகோல் இல்லை.
25 ஆண்டுகளாக நான் பொதுவாழ்வில் இருக்கிறேன். நான் பரமக்குடிக்கு அப்பால் போய்ப் பேசியதில்லையே என்று எண்ணியதுண்டு. அங்கெல்லாம் நம் கழகம் பரவவில்லையே என்று எண்ணிக் கொண்டிருந்தேன். இப்பொழுது நான் எண்ணிக் கொள்கிறேன், நல்ல வேளையாகப் பரவவில்லை என்று” (மேலது பக்.51)
எவரையும் குற்றம் சாட்டாமல் பேசிய அண்ணா இரண்டு தரப்பாரையும் வருடிக் கொடுத்துப் பேசினார்: “இந்தப் பிரச்சனையைப் பற்றிப் பொது மேடைகளிலும் சரி, சந்தர்ப்பம் கிடைக்கிற நேரத்தில் மிக ஜாக்கிரதையாக நழுவ விட்டிருக்கிறேன், பேசாமல் இருந்திருக்கிறேன். பத்திரிகையில் ஒரு வார்த்தை கூட எழுதவில்லை. காரணம்? இந்தப் பக்கத்தில் நியாயம் இருக்கிறதா? அந்தப் பக்கத்தில் நியாயம் இருக்கிறதா? என்பது ஒரு புறத்தில் தெரிந்து கொள்ள முடியாத சூழ்நிலை சிருஷ்டிக்கப் பட்டிருக்கிறது என்பது மட்டுமல்ல. அந்தப் பிராந்தியத்து ஜனங்கள் மிக சீக்கிரத்தில் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள்… இந்தச் சமயத்தில் எந்தப் பக்கத்தை ஆதரித்து நம்முடைய செல்வாக்கை அதிகப்படுத்திக் கொள்வோம் என நாங்கள் சிலரைப் போல அரசியல் தந்திரம் படைத்தவர்களாக இருக்க விரும்பவில்லை.” (மேலது பக்.57)
“முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் பல காலமாக மற்ற கட்சிகளைப் பற்றி எந்த அளவிற்குப் பேசியிருக் கிறார்கள், என்னைப் பற்றியும் என் கட்சியைப் பற்றியும் எத்தனை விதமாகப் பேசியிருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்… முத்துராமலிங்கத் தேவர் 1933ஆம் வருஷத்திலிருந்தே பாண்டிய மண்டலத்தில் சாதித் துவேஷம் வளர்க்கக் கூடிய வகையில் பிரச்சாரம் செய்து வந்திருக்கிறார்கள் என்று சொல்லப் பட்டது. வகுப்புக் கலவரம் சாதித் துவேஷம் இவை எல்லாவற்றுக்கும் அவர் உடந்தையாக இருந்து வந்தவர் என்று பேசப்பட்டது. இப்போதுதான் எனக்கு ஒரு தபால் வந்தது. அது ஒரு பத்திரிகை. ரங்கூன் நகரத்தில் கடல் கடந்து நிற்கும் தமிழர்கள் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த தின விழாவைக் கொண்டாடும் அழைப்பிதழ்.
அவரைப் பற்றி இப்போது வெறுத்து ஒதுக்கத்தக்கவராகப் பேசிக் கொண்டிருக் கிறோம். அங்கே அவர்கள் உள்ளத்தில் வைத்துக் கொண்டாடப்படுபவராக இருக்கிறார். உலகத்தார் வைத்திருக்கின்ற கருத்து இன்றைய தினம் இந்த ராஜ்ய ஆட்சியாளர் வைத்திருக்கிற கருத்தாகத்தான் இருக்க வேண்டும் என்பது இல்லை… ஆனால் உலகத்தார் வைத்திருக்கிற கருத்துக்கு மதிப்பு அளிக்க வேண்டும்.
உலகத்தார் எல்லாம் போற்றுகின்ற உத்தமராக முத்துராமலிங்கத் தேவர் இருப்பாரானால், நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அவரோடு கலந்து பேசி ஒரு சமரச சூழ்நிலையை அந்தப் பிராந்தியத்தில் உண்டு பண்ண ஏன் முயற்சிக்கக் கூடாது?...
திரு. இமானுவேல் படுகொலை செய்யப்பட்டதைப் பற்றி இங்கு பேசினார்கள். உண்மையில் அவர் தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிட மக்களுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கே ஒரு பெரிய தியாகம் செய்திருக்கிறார். இமானுவேல் இராமநாதபுரத்து மண்ணிலே மறைந்த மாவீரர் மட்டுமல்ல, உலகமே புகழும் ஒரு வீரனாகவே அவரைக் கருத வேண்டும்.
நாட்டின் ஒற்றுமைக்காகப் பாடுபட்டு தன்னையே பலியாக்கிக் கொண்ட ஒரு தியாகியை இழந்தோம்…”
“முத்துராமலிங்கத் தேவரின் செல்வாக்கை நீங்கள் (காங்கிரசுக் கட்சி) திருப்பரங்குன்றத்தில் உபயோகித்துக் கொள்ளவில்லையா? அப்பொழுதெல்லாம் தேவர் பலாத்கார மனிதராக இல்லாமல் போனது ஏன்?” (மேலது பக்.59 - 63)
அண்ணா தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், முக்குலத்தோருக்குமாக மாறி மாறிப் பரிந்து பேசி இறுதியில் தாமதமாகக் காவற்படை அனுப்பிய காங்கிரசு அரசைக் குற்றவாளி என்றும் ஆட்சியாளர்கள் கையாண்ட முறையில் நம்பிக்கை இல்லை என்றும் பேசி, நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை ஆதரித்துத் தம் உரையை முடித்தார். கலவரத்தில் தொடர்புடைய இரு சமூகங்களும் திமுக தங்களை அனுதாபத்துடன் பார்ப்பதாக உணர்ந்தனர்.
இப்போது பரமக்குடியைத் தாண்டி திமுக பரவுவதற்கான வழி பிறந்து விட்டது. காங்கிரசையும் காமராசரையும் தங்கள் குல விரோதியாகக் கருதிய முக்குலத்தோருக்கும் திமுக என்ற புதிய துணை கிடைத்தது. முத்துராமலிங்கத் தேவரின் மறைவுக்குப் பின்னர், முக்குலத்தோர் பெருவாரியாகத் திமுகவில் சேர்ந்தனர்.
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்துப் பேசிய அண்ணா வாக்கெடுப்பில் கலந்துகொண்டு தீர்மானத்தை ஆதரிக்கவும் இல்லை. வாக்கெடுப்பு நேரத்தில் திமுக உறுப்பினர்கள் வெளியேறி விட்டனர். இப்போது, அண்ணா முக்குலத்தோர், ஒடுக்கப்பட்டோர் மற்றும் கடும் நடவடிக்கை எடுத்த காமராசரின் அரசு என்று மூன்று தரப்பாரையும் மன நிறைவு கொள்ளச் செய்து விட்டார். 1957 தேர்தலில் 15 இடங்களை வென்ற திமுக 1962 தேர்தலில் 50 இடங்களை வென்றது. அண்ணாவின் உத்திகள், உணர்வ+ட்டல் இவற்றோடு அண்ணாவின் சாமர்த்திய அரசியல் களைகட்டத் தொடங்கியது.
(வரும்)