Soundarapandian 400ஒரு இனம் பகுத்தறிவோடு வளர வேண்டுமென்றால் அந்நாட்டில் நூலகத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே சமூக நீதிக் கொள்கை.

ஓர் இனத்தை அழிக்க வேண்டுமானால் முதலில் அவர்களின் இலக்கியத்தை அழிக்க வேண்டும் என்பதே பாசிச கொள்கை.

ஹிட்லர், நாசிச கொள்கை ஆட்சி ஜெர்மனியை ஆளத் தொடங்கியதும் 1933ஆம் ஆண்டு மே10 நாளன்று செய்த முதல் கொடூரம் பெர்லின் நகரில் இருந்த நூலகத்தில் 20000 புத்தகங்களை தீயில் போட்டு எரித்தது தான்.

தமிழகத்திலும் நூலகத்தை அழிக்கும் வேலை கடந்த பத்தாண்டு அதிமுக ஆட்சியில் நடந்தது. தெற்காசியாவில் மிகப்பெரிய நூலகமான அண்ணா நூற்றாண்டு நூலகத்தை சிறுகச்சிறுக அழித்தொழிக்கும் வேலையை செய்தோடு தமிழகத்தின் சிறு நூலகங்களிலும் எவ்வித பராமரிப்பும் இன்றி தமிழகத்தின் எதிர்காலத்தை இருண்ட காலமாக்க அனைத்துவித பாசிச வேலையை தங்கள் ஆட்சி முடிவதற்குள் செய்து முடித்திருந்தார்கள்.

தமிழ்நாட்டின் புதிதாக பதவியேற்றுள்ள திமுக அரசு கொரோனா கொடுந்தொற்றை ஒருபுறம் சிறப்பாக சமாளித்தாலும் மறுபுறம் எதிர்கால கல்வி கட்டமைப்புகள் நூலகத்தை பராமரிக்கும் பணியை தொடங்கியது. அதில் முக்கிய நிகழ்வாக மதுரையில் 70 கோடி செலவில் கலைஞர் நூலகம் அமைப்பதாக அறிவித்தார்கள்.

ஒன்றிய மோடி அரசு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை என்று அறிவித்து ஏழு ஆண்டுகள் ஆகியும் ஒரு செங்கல் கூட எழுப்பாமல் இருப்பது போல் நூலக விடயத்தில் வெறும் அறிவிப்போடு நின்றுவிடாமல் உடனடியாக நூலகம் அமைவிடத்தை பார்வையிட தமிழக அமைச்சர்கள் குழு மதுரையில் ஆய்வு செய்தது பாராட்டுக்குரியதே.

ஆனால், திமுக ஆட்சிக்கும் அமைச்சர்களுக்கும் ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறோம்.

1949இல் அறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட போது அதில் பட்டிவீரன்பட்டி சவுந்திர பாண்டியானரும் உறுப்பினரானார்.

சவுந்திர பாண்டியனார் யாரென்றால் சென்னை தியாகராயநகரில் உள்ள பாண்டி பஜார் என்று அழைக்கபடுகிற சாலை அவர் பெயரிலான சாலை தான்.

1929இல் ராமநாதபுரம் ஜில்லா தலைவராக சவுந்திர பாண்டியனார் இருந்த போதுதான் ஆதிதிராவிடர்களை பேருந்தில் ஏறக்கூடாது என்று உத்தரவிட்ட பேருந்து உரிமையாளர்களிடம் ஆதிதிராவிடரை ஏற்ற மறுத்தால் பேருந்து உரிமம் ரத்து செய்யப்படும் என்கிற உத்தரவை பிறப்பித்தார்.

பெரியார் நடத்திய சுயமரியாதை இயக்கத்தின் தலைவராகவும் சுயமரியாதை மாநாட்டின் தலைவராகவும் இருந்தவர்.

1930இல் சனாதன கோட்டையாக இருந்த காரைக்குடியில் ஆதிதிராவிட மாநாடு ஒன்றை நடத்த பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களின் தந்தையார் இராம.சுப்பையா ஏற்பாடு செய்தார், அந்த மாநாட்டை நடத்தவிடாமல் தடுக்க நகரசபை தலைவரான சிதம்பரம் செட்டியார் மாநாட்டுப் பந்தலை கொளுத்திட்டா என்று கர்ஜித்திருக்கார்.

இதைக் கேள்விப்பட்ட இராம.சுப்பையா அவர்கள் ஆணவப் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பட்டுக்கோட்டை அழகிரியை அழைத்து மாநாடு விளக்கக் கூட்டம் ஒன்றை நடத்தினார் அதில் அழகிரி பேசும் போது மாநாட்டு பந்தலை தீவைத்து கொளுத்துவேன் என்று ஒருவர் சொல்லியிருக்கிறார். சரி கொளுத்தி கொல்லட்டும் நாங்க வேறு கொட்டகை போட்டுக் கோள்வோம். ஆனால் நாங்கள் கொளுத்த சொன்ன செட்டியாரே கொளுத்திட்டோம்னா என்று பேச...

பயந்து போன சிதம்பரம் செட்டியார் அழிகிரி பேச்சை காரணம் காட்டி நீதிமன்றத்தின் மூலமாக மாநாட்டுக்கு தடை உத்தரவு வாங்கிவிடுகிறார்.

இதை கேள்விப்பட்ட சவுந்திர பாண்டியனார் மதுரை கோர்ட்டில் மேல்முறையீடு செய்து மாநாட்டு தடை உத்தரவை நீக்கியதோடு மாநாட்டுக்கு பாதுகாப்பு அளிக்க நிறைய ஆட்களை அனுப்பி வைத்து நல்லபடியாக மாநாடு நடக்க பார்த்துக் கொண்டார் இதுகுறித்து இராம. சுப்பையா கூறும்போது செட்டிநாட்டு பணபலம் அன்று வெல்லவில்லை பாண்டியனாரின் படைபலம் தான் வென்றது என பதிவு செய்துள்ளார்.

பெரியாருடன் நீதி கட்சியுடன் சுயமரியாதை இயக்கத்துடன் இணைந்து செயல்பட்ட சவுந்திர பாண்டியனார் நீதிக்கட்சி திராவிடர் கழகமாக பெயர் மாற்றம்பெற்ற சேலம் மாநாட்டில் பேசியபோது அடுத்த ஆறு மாதத்திற்குள் திராவிடர் கழகத்திற்கு பத்தாயிரம் உறுப்பினர்களை சேர்ப்பேன் என்று உறுதியளித்தார். ஆனால் பெயர் மாற்றம் பெற்ற அடுத்த ஆறு மாதத்தில் சொன்னதை விட மூன்று மடங்காக 30000 புதிய உறுப்பினர்களை திராவிடர் கழகத்தில் இனைத்தார்.

பொது வாழ்க்கை மட்டும் அல்லாமல் தொழில் துறையிலும் சிறந்து விளங்கினார் சவுந்திர பாண்டியனார்.

இரண்டாம் உலகப்போர் காரணமாக வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு சர்க்கரை இறக்குமதி தட்டுப்பாடு ஏற்பட்டிருந்த சூழலில், இன்றைய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களின் தாத்தா பி.டி.ராஜன் அவர்களது இணைந்து ஒரு சர்க்கரை ஆலையை தொடங்கினார். அதற்காக ஐந்தாண்டு காலம் செலவிட்டார் அப்படி சர்க்கரை ஆலை தொடங்கப்பட்ட பகுதிக்கு சவுந்தரபாண்டியனார் பி.டி.ராஜன் பெயரை இணைத்து பாண்டியராஜபுரம் என பெயரிடப்பட்டது.

தந்தை பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனிக்கட்சி தொடங்கிய அறிஞர் அண்ணாக்கும் தன்னாலான அனைத்து உதவிகளும் செய்வதாக உறுதி அளித்தார். அதில் முக்கியமானது மதுரையில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு என்று தனி அலுவலகம் அமைத்து அதில் தன்னிடமுள்ள 5000 புத்தகங்களை கொடுத்து ஒரு பெரிய நூலகம் அமைக்க வேண்டும் என்று நினைத்தவர் சவுந்தர பாண்டியனார்.

அத்துடன் 1952இல் திராவிட முன்னேற்ற கழக இளைஞர்களுக்கு பேச்சுப் பயிற்சி அளிப்பதற்காக தனது தோட்டத்தில் ஏற்பாடு செய்து திமுக இளைஞர்கள் வருவதற்கு வாகனம் முதல் தரமான உணவு வகைகளை ஏற்பாடு செய்து பேச்சாளர்களை உருவாக்கினார்.

தனது செல்வம் உழைப்பு என அனைத்தையும் திராவிட இயக்க வளர்ச்சிக்கு செலவிட்ட சவுந்தர பாண்டியனார் 16.02.1953 அன்று மாரடைப்பால் காலமானார்.

சவுந்தர பாண்டியனார் செயலையும் தியாகத்தையும் பெருமைப்படுத்தும் விதமாக திராவிடன் இதழ் 1953ஆம் ஆண்டு ஒரு மலரை வெளியிட்டது அதில் அறிஞர் அண்ணா எழுதிய கட்டுரையில்:

அவர் இறந்தார் இறந்து போய்விட்டார் என்பதை இனி மறப்போம். இனி நாம் கூற வேண்டியது அவர் இறந்தார் என்றல்ல அவர் நம்மோடு கலந்துவிட்டார், அவருடைய பண்புகளை, ஆற்றலை, அறிவுத்திறனை, நமக்கு அளித்துச் சென்றிருக்கிறார்.

எனவே அவர் நம்மோடு கலந்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும். அவர் காட்டிய பாதையில் நாம் நடந்து செல்வதும் பிறர் நம்மைப் பார்த்து இவர்கள் 'இந்த பாண்டியர் படையினர் என்று கூறுவதும் தான் நாம் செய்ய வேண்டிய கடமை.

இப்படி ஆரம்ப கால திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வழிகாட்டியாக இருந்தவர் மதுரையில் திமுக சார்பாக நூலகத்தை ஏற்படுத்த திட்டமிட்டு இருந்த சவுந்தர பாண்டியனார் பெயரும் புதிதாக உருவாக்கப்படவுள்ள கலைஞர் நூலகத்தில் ஏதாவது ஒரு அரங்கத்திற்கு ஒரு தளத்திற்கு அவர் பெயரை சூட்டி இன்றைய திமுக அரசு சவுந்தர பாண்டியனாரின் தியாகத்திற்கு நன்றி செலுத்த வேண்டும்.

- இக்லாஸ் உசேன்

Pin It