நிலநடுக்க – ஆழிப்பேரலை பேரழிவினால் மிகவும் மோசமாகச் சீர்குலைந்திருப்பது சப்பானின் மூத்த குடிமக்களாக இருப்பார்கள் என்று அண்மைய பேரழிவு குறித்த தகவல்கள் கணிப்பு கூறுகின்றன. சப்பானின் மொத்த மக்கள்தொகையில் 23 விழுக்காடு 65 வயதைக் கடந்தவர்கள். 

பெரும் மூத்த குடி வீதம் கொண்ட சப்பானில் நிகழ்ந்து கொண்டிருக்கும் சீற்றங்கள், இந்த உலகம் எதை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தும் ஒரு சிறு அடையாளமே என்று அமெரிக்க மூப்பியல் சமூகத்தைச் சேர்ந்த சேம்சு அப்பில்பை என்பவர் கூறுகிறார். சப்பானின் மக்கள் கணக்கில் உள்ள வயதுச்சாய்வும் பேரழிவுகளின் பின் விளைவுகளும் தொடர்பில் வைத்து நோக்கும்போது மூத்த குடிமக்களே அதிக பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர் என்பது புலப்படும்.

எடுத்துக்காட்டாக மே 12 2008 அன்று சீனாவின் வென்சுவான் மாகாணத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்திற்குப் பின் அம்மாகாணத்தின் இளஞ்சிறார் (ஒரு வயதுக்குட்பட்டோர்) இறப்பு வீதம் இரண்டு மடங்கானது. அதேபோல கட்ரினா சூறாவளியில் இறந்தவர்கள் – தொலைந்து போனவர்கள் கணக்கில் முக்கால் வாசி 60 வயதைக் கடந்தவர்கள்.

 இத்தருணத்தில் நமது எண்ணம் – கவலை சப்பான் குடிமக்களை நோக்கி இருக்கையில் அவர்கள் உணவு, குடிநீர், உயிர்காக்கும் மருந்து ஆகியவற்றின் கடும் தட்டுப்பாட்டினால் அவதிப்படுகின்றனர். சூழிடர்ப்பட்டு மருத்துவக் கவனத்திற்குக்  காத்துக்கிடக்கும் நிலையில் மக்கள் உள்ளனர்.

புவியியல் தகவல் கட்டமைப்பினால் வழுபடத்தக்க இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு சீற்றங்கள் ஏற்படும்போது ஆயத்தமாக உள்ள வகையில் படைகள், இன்றியமையாப் பொருட்கள் ஆகியவற்றின் தேவை உணரப்படுகிறது.

 பல்லடுக்கு கொண்ட வெளியேற்றுதல் திட்டம், சமூகத்தொடர்பு வலை, பேரிடர் காலக் கருவிப்பெட்டி போன்றவை நெருக்கடி நிலைகளில் பயனுள்ளதாக இருக்கும். ஒவ்வொரு குடும்பமும் தனது பேரிடர் கால கருவிப்பெட்டியில் குடும்பத்தினரது தொடர்பு தகவல்கள், ஊட்டச்சத்து மிக்க உணவு, இன்றியமையா மருந்து போன்றவற்றை வைத்திருப்பது தேவையாகும்.

 இயற்கைச் சீற்றங்களைத் தடுப்பது என்பது மனிதகுல இயலாமை; ஆனால், அதை எதிர்நோக்கி ஆயத்தமாயிருத்தல் என்பது அறிவுடைமை; இன்றைய காலத்தேவையும் கூட.

ஆங்கில மூலம்: http://www.sciencedaily.com/releases/2011/03/110318153331.htm

Pin It