மயில்: அப்பா-மகள் பாசம்தான் கதை. தந்தையின் கடமையும், மகளின் உரிமையும் என்று எடுத்துக் கொள்ளலாம். எல்லோருக்குமே கடமையும் உள்ளது, உரிமையும் உள்ளது. ஆனால் இந்தப் படத்தில் இரண்டுமே சரியாகப் பதிவு செய்யப்படவில்லை. அப்பா காட்டும் பாசம், பல இடங்களில் மிகையாகவும், செயற்கையாகவும் உள்ளது. அது மட்டுமல்லாமல், இது ஒரு மேல் தட்டு மக்களின் கதை. அப்பா ஒரு பெரிய தொழிலதிபர். பெண் என்ன கேட்டாலும் வாங்கிக் கொடுக்கலாம். எல்லோருக்கும் அது இயலுமா? எனவே பணம் இருந்தால்தான் பாசம் என்பது போலாகிவிடும்.
செந்தில்: இன்று வெளிவந்து கொண்டிருக்கும் வெகு மக்களுக்கும், வணிகத்திற்குமான படங்களுக்கிடையில், இது ஒரு நல்ல படம். நேர்மையான படம் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படம். இப்படத்தை வெறும் அப்பா-மகள் பாசக் கதை என்று மட்டும் சொல்லிவிட முடியாது. குடும்பச்சிக்கலும் படத்தில் சொல்லப் பட்டுள்ளது. அம்மாவினுடைய பாத்திரத்திற்கும் ஒரு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருக்கிறது. அதே நேரத்தில் இது பொழுது போக்குப் படம்தான். நடுத்தட்டு மக்கள்தான் திரைப்படங்களை அதிகமாகப் பார்க்கின்றவர்கள். அவர்களை ஈர்க்கும் வகையில், இது நல்ல பொழுதுபோக்குப் படமாக உள்ளது.
ராஜன்: பொதுவாகத் திரை உலகத்தைப் பொறுத்தவரையில், பி அன்ட் சி மையங்கள்தான் முக்கியம். அதிலும் சி மையங்களில்தான், திரும்பத் திரும்பப் படம் பார்ப்பவர்கள் அதிகம். அவர்களை இந்தப் படம் கவருமா என்று சொல்ல முடியவில்லை. மேலும், நடுத்தட்டு மக்களைத் திருத்தும் படம் என்றும் சொல்ல முடியாது.
செந்தில்: திருத்தும் என்று சொல்லவில்லை. சில பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றுதான் சொன்னேன்.
ராஜன்: என்னவிதமான பாதிப்பை ஏற்படுத்தும்?
செந்தில்: குறைந்தபட்சம் சில சலனங்களையாவது ஏற்படுத்தும்.
மயில்: ஏற்படுத்தாது. பிள்ளைகளின் காதலை எல்லாம் நடுத்தட்டு மக்களும், மேல்தட்டு மக்களும் இப்போது அதிகமாக எதிர்ப்பதில்லை. படிப்பு முக்கியம் என்பதில் மட்டும்தான் கவனமாக இருக்கிறார்கள். வேறு இனத்தைச் சேர்ந்த ஒருவரை மகள் காதலித்தாலும், சாதிப் பிரச்சனைக்குள் எல்லாம் கதை போகவே இல்லை.மகளுக்காக எதையும் செய்யும் ஒரு தனிப்பட்ட அப்பா மட்டுமே நம் கண்முன் நிற்கிறார். சமூகப் பிரச்சினையாக எல்லாம் இப்படத்தில் காதல் காட்டப்படவில்லை. மேலும், காதலன்-காதலி மனம் விட்டுப் பேசுவதாகக் கூடக் காட்டப்படவில்லை. அந்தப் பெண் தன் உணர்வுகளை ஒரு தோழியோடு கூடப் பகிர்ந்து கொள்ளவில்லை. ஒரு பெண்ணுக்கு அப்பா மட்டுமே முழுமையான, ஒரே ஒரு நண்பராக இருக்க முடியாது. எல்லாமே மேலோட்டமாக உள்ளது.
செந்தில்: மற்ற பாத்திரங்களும் சில செய்திகளைக் கூறத்தான் செய்கின்றன. அதிகம் பேசாமல், மௌனமாக வந்து போகும் மனோபாலா பாத்திரம் கூடக் குறிப்பிடத் தக்கதுதான். உலகில் நடப்பதை எல்லாம் தெரிந்தும் தெரியாதவர்கள் போல் இருப்பவர்கள் நிறையப் பேர் உள்ளனர். அவர்கள் மீதான விமர்சனம் தான் அந்தப் பாத்திரப் படைப்பு. அதேமாதிரி, வில்லன் போன்ற பாத்திரம் எதுவுமே கதையில் கிடையாது. நல்ல செய்திகள், நல்ல குணங்கள் மட்டுமே முன்நிறுத்தப்பட்டுள்ளன. ஒரு பிச்சைக் காரன் கூட, எப்படி நல்ல விதமாகப் பயன்படுத்தப்படலாம் என்பதைப் படம் சொல்கிறது.
ராஜன்: அதெல்லாம் நடைமுறையில் ஒத்து வருமா? செயற்கையாக இல்லையா?
செந்தில்: அப்படிப் பார்த்தால் படங்களில் வரும் பாடல் காட்சிகள் எல்லாமே செயற்கை தான்.
ராஜன்: நம் சமூகத்தில் பெண்களுக்கான உரிமைகள் மிகக் குறுகிய வரம்பிற்குட்பட்டவை. ஆனால் ‘அபியும் நானும்’ படத்தில் அந்த எதார்த்தம் மிக விலகிப்போய் உள்ளது.
செந்தில்: அப்படியில்லை.அதற்கான சில காட்சிப் பதிவுகள் உள்ளன. 12ஆம் வகுப்பில்தான், அந்தப் பெண் மிதிவண்டி கேட்கிறாள். உரிய வயதில்தான் காதலனைத் தேடுகிறாள். எங்கே இருக்கிறது வரம்பு மீறல்?
மயில்: நீங்கள் சொல்வதுபோல் எந்தச் செய்தியும், படம் பார்ப்பவர்கள் நெஞ்சில் பதியவில்லை.
ராஜன்: தனக்கு, தனக்கு மட்டுமே என்கிற ஓர் உளவியல் மனப்பான்மை (Possessiveness) படத்தில் தென்படுகிறது.
செந்தில்: காதலர்களுக்குள் மட்டும்தான் அந்த மனப்பான்மை இருக்க வேண்டுமென்ப தில்லை. அப்பா, பிள்ளைகளிடமும் சிலவிடங்களில் அது உண்டு என்பதுதான் கதை தரும் செய்தி.
ராஜன்: படத்தில் வசனங்கள் நிறைய உள்ளன. காட்சிப் பதிவுகள் (Visual effect); இல்லை. அதுவும் கூட, மனத்தில் ஆழமாகப் படியாமல் இருப்பதற்கான காரணமாக இருக்கலாம்.
செந்தில்: நாடகத்தன்மை இருக்கத்தான் செய்கிறது. அது எல்லாப் படங்களிலும் இருக்கும். ஆனால் ‘சிவாஜி'யில் காணப்படும் நாடகத்தன்மையும், இப்படத்தில் காணப் படும் நாடகத்தன்மையும் ஒன்றாகுமா? எல்லாவற்றையும் ஒன்றாகப் பார்ப்பதும், அதன் விளைவாக நல்ல படங்களையும் பாராட்டாமல் இருப்பதும் சரியானதில்லை.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அபியும் நானும் - திரைப்படம் குறித்த ஒரு சின்ன விவாதம்
- விவரங்கள்
- கருஞ்சட்டைத் தமிழர் செய்தியாளர்
- பிரிவு: திரை விமர்சனம்