மா (MAA) குறும்படம் என்னைப் பார்க்கச் சொல்லி தோழி ஒருவர் லிங் அனுப்பியிருந்தார். அதோடு அப்படம் பார்த்த பின்பு மிகுந்த பயம்... பதற்றம்... அவர்களைத் தொற்றிக் கொண்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஒரு குழு விவாதத்திற்காக திரையிடப்பட்டு பின்பு விவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஒரு குறும்படம் பயமும்... பதற்றமும்... நிறைந்ததாகக் காட்சிப்படுத்தியிருக்க முடியுமா? அப்படி என்னதான் அதில் சொல்லப்பட்டிருக்கிறது எனப் பார்த்தேன்.
10 வது படிக்கும் மாணவி, தனது சக தோழிகளுடன் ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் பயிற்சியின் போதே... மயங்கி விழுந்து விடுகிறாள். அவளுக்குத் தண்ணிர் கொடுத்து தேற்றி உட்கார வைக்கிறார்கள். தனக்கு ஒருபோதும் இப்படி நேர்ந்தது கிடையாதே எனத் தடுமாறுகிறாள். அவளுக்குள் பலத்த யோசனை. குழப்பம்... ஏதோ விடை காண முற்படுவது போல முகத்தின் அறிகுறி!
சக தோழி அருகில் வந்து, “இப்போ பரவாயில்லையா?” எனக் கேட்டுக் கொண்டிருக்கும் போதே,
“உனக்கு எப்போதாவது பீரியட்ஸ் தள்ளிப் போயிருக்கா?” என அம்முவாகிய அம்மாணவி கேட்கும் போது நமக்கு மெல்ல விசயம் புரியத் தொடங்குகிறது.
10 வது படிக்கும் சிறுமிக்கு எல்லாமும் தெரிகிறது என நினைக்கத் தோன்றினாலும் பொறுமையாக என்னதான் சொல்கிறார்கள் எனப் பார்த்தேன்.
அவளது கோச் அம்மாணவியின் அம்மாவிடம் சத்தான உணவு கொடுக்கச் சொல்கிறார். மயங்கி விழுந்தது போதிய ஆற்றல் இல்லாததால்தான் என அவர் நினைத்து விடுகிறார். ஆனால் அம்முவாகிய அம்மாணவிக்குக் காரணம் புரிகிறது. தன் தாயிடம் தைரியமாக, “நான் கன்சிவாக இருக்கிறேன்னு நினைக்கிறேன்” எனச் சொல்கிறாள்.
உடனே உணர்ச்சிவசப்பட்டு தன் மகளை அடிக்கிறார். அதன் பின்பு அம்முவின் தாய் நிதானமாக யோசிக்கிறார். மகளை தேற்றுகிறார்... அரவணைக்கிறார்...
இதை தன் கணவரிடம் சொல்ல முற்படும் போது அவரது கண்டிப்பான இயல்பைப் பார்த்து சொல்லாமல் அப்படியே விட்டுவிடுகிறார். சொன்னால் விசயம் பூதகரமாக மாறிவிடும். அவரையும் மகளையும், அப்பாவாகிய அவரது பங்கிற்கு அடிக்கவும் திட்டவும் கூடும். அதனால் அதிலிருந்து தீர்வு கிடைக்குமா என்பது கேள்விக்குறியே?
பிள்ளையை ஒழுங்காக வளர்க்கவில்லை என்கிற பலியையும் தான் சுமக்க வேண்டியதிருக்கும் என்ற கண்ணோட்டத்திலேயே அந்தத் தாய் நிதானித்திருக்கிறார் என நினைக்கத் தோன்றுகிறது.
‘நரகலில் கால்பட்டுவிட்டது. அதற்காக அதை வெட்டி எறியவா முடியும்?’ என சொலவடை ஒன்று சொல்வார்கள். அதனால் அதை எப்படிச் சரிசெய்ய அவர் முற்படுகிறார் என்பதே கவனிக்கப்பட வேண்டிய விசயமாக நான் பார்த்தேன்.
மகளுக்கும் தாயிக்குமான உறவு ஏன் நெருக்கமாக அமைந்துவிடுகிறது என்ற கேள்வி எனக்குள் பல நாட்களாக இருந்தது. அதற்கான விடையை நான் உணர்ந்த தருணமாகக்கூட இக்குறும்படத்தை பார்க்கிறேன்.
மகளின் உணர்வுகளைப் புரிந்தவளாக தாய் மட்டுமே இருக்க முடியும்! தந்தையானவர் அன்பு காட்டலாம்... அரவணைக்கலாம்... வேண்டியதை எல்லாம் வாங்கிக் கொடுக்கலாம்... ஆனால் அதையும் தாண்டி உணர்வுகளைப் புரிந்து நெறிப்படுத்தும் இடத்தில் மகள்களைப் பொறுத்தவரை தாயின் பங்கே பிரதானம் என நினைக்கிறேன்.
ஏனென்றால் தந்தையானவர் பல நேரங்களில் ஆணாகக்கூட பிரதிபலிக்க முடியும். அது மகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள உதவாது. அந்நேரத்தில் அரவணைக்கவோ... அன்பு காட்டவோ... முடியவே முடியாது. அதனால்தான் தந்தையைவிட தாயின் உறவு மகள்களைப் பொறுத்தவரை கூடுதல் நெருக்கமாக அமைந்து விடுகிறது.
தவறு யார் செய்தாலும் அது தவறுதான். ஆண் செய்யும் போது தவறாகவும், பெண் செய்யும் போது அது மதிப்பீடாகவும், மானம், மரியாதை, கௌரவமாக மாறிவிடும் போது அங்கு அவர்கள் பெண்ணாகத்தான் பார்க்கப்படுகிறார்கள். அப்போது மகளாகவோ, மனைவியாகவோ, தாயாகவோ, சகோதரியாகவோ பார்க்கப்படுவதில்லை என்பதையும் நான் உணர்ந்து கொண்ட தருணம்!
உடன் மைதானத்தில் விளையாடும் மாணவன் ஒருவனோடு பழகி தனது விருப்பத்தின் பெயரில் உறவு வைத்துக் கொண்டு அதன் வழியாக கருத்தரித்துவிடும் போது அச்சிறுமியை என்ன செய்வது? அல்லது இதுபோன்ற தவறுகளைச் செய்துவிட்டு கருத்தரிக்காமலோ, பாதுகாப்பாகவோ இருந்து கொண்டால் யாருக்கும் தெரியப் போவதில்லை. அப்படியானாலும் இதை அனுமதிக்கவும் முடியாதுதானே?
அறியா பருவம் என்று சொல்ல முடியாது. அறிந்தே தெரிந்தே விருப்பத்தின் பெயரிலேயே அவர்கள் கூடி விடுகிறார்கள். அது தவறு என்பதெல்லாம் அவர்களுக்குத் தோணவில்லை. எதிலும் முயன்று பார்த்துவிட வேண்டும் என்ற துணிச்சல் இன்றைய இளைய தலைமுறையினரிடையே தலை தூக்கிவிட்டது.
தன்னுடைய தேவை, தன்னுடைய முடிவு, தன்னுடைய சுதந்திரம்... இதில் யார் தலையிட உரிமை இருக்கிறது எனப் பெற்றோரைகூட தள்ளி வைத்துவிடவே நினைக்கிறார்கள். தன்னை சுற்றியுள்ளவர்கள் குறித்தெல்லாம் இன்றைய இளைய தலைமுறைக்கு அக்கறை எதுவும் இல்லாததும், அதேநேரத்தில் பாதிக்கப்பட்டு அல்லல்படும் போது தன் பெற்றோரே கதி எனச் சரணடைவதையும் இயல்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
பெரும்பாலும் வீட்டில் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் மட்டுமே இருப்பதால் அவர்களுக்கு அளவற்ற சுதந்திரமும், வாய்ப்புகளும் கிடைத்து விடுகிறது. அதுவே இளைய தலைமுறையை சுயநலத்தோடு அல்லது தனிப்பட்ட விருப்பம் என்ற கோணத்தில் நகர்த்திச் சென்றுவிடுகிறது.
சரியான வயதும், போதிய உடல் தகுதியும் இல்லாத போது அவர்கள் உடல் தேவையை பூர்த்தி செய்து கொள்வதையை காதல் என நினைத்துக் கொள்ளும் அளவுக்குத்தான் மனதளவில் வளர்ச்சி பெற்றிருக்கிறார்கள், அல்லது புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
காதல் என்பது அதுவல்ல! அதற்கென இன்னும் முதிர்ச்சி தேவைப்படுகிறது. காதல் என்பது உடலால் கூடுவது என்று நினைத்துக் கொண்டு பக்குவமில்லாத வயதில் அவசரப்படும் போது அதனால் வரும் விபரீதங்களை சந்திக்க முடியாமல் சிலர் தன்னையே மாய்த்துக் கொள்ளவோ அல்லது அவர்களைச் சார்ந்தவர்களையோ அவமானம் தாங்கிக் கொள்ள முடியாமல் அத்தகைய சூழலுக்குள் தள்ளிவிடுகிறார்கள்.
பல இடங்களில் இப்படி இருந்தாலும் தவறுகளை சரிசெய்து மீண்டும் வழி தவறாமல் நடப்பதற்கான வழிமுறை என்ன என யோசித்து அதை நோக்கி பயணிப்பதுதானே சரியானதாக இருக்கும்?
அந்த விதத்தில் மா (MAA) குறும்படம் இன்றைய இளைய தலைமுறையினரின் பெற்றோர்களாகிய நாம் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம். இப்படம் பார்ப்பதினால் தன் பிள்ளைகள் தவறு செய்துவிடுவார்களோ அல்லது தவறு செய்யட்டும் என ஊக்குவிப்பதற்காகவோ அல்ல.
இன்றைய சூழலில் எதையும் அசாதாரணமாக எடுத்துக் கொண்டு பின்வரும் விளைவுகளை சிறிதும் யோசிக்காமல் துணிச்சலோடு தவறு என்றே உணராமல் செய்துவிடும் இளைய தலைமுறையினரோடு நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அதனால் இத்தகைய மனத்திடத்தை உருவாக்கிக் கொள்வதற்கும், தனக்குத் தெரிந்தவர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ அல்லது ஓர் ஆசிரியராகவோ இதுபோன்ற சம்பவங்களிலிருந்து மீள வழிகாட்டியாகக்கூட நாம் இருக்க இக்குறும்படம் உதவும் என நினைக்கிறேன்.
இத்தகைய குறும்படங்களை நாம் பெரும்பாலும் விவாதத்திற்கு உள்ளாக்கப்படாமலே விட்டுவிடுவதும் நடக்கக்கூடும். அப்படிச் செய்யும் போது தற்காலிகமாக இதுபோன்ற பிரச்சனைகளிலிருந்து நாம் தப்பித்துக் கொள்கிறோமே தவிர அது நிரந்தரமல்ல!
இதுபோன்ற குறும்படங்களை விவாதிப்பதும் இதுகுறித்த கலந்துரையாடலை முன் எடுப்பதும் அதில் இரு தலைமுறையினரும் பங்கேற்பதும் இன்றைய காலத்தின் கட்டாயமும்கூட!
- மு.தமிழ்ச்செல்வன்