காதலின் நாணம் ஒரு சிறு அமைதியை பூக்கிறது. வெட்கத்தில் மலர்ந்த முகத்தோடு... வேக வேகமாய் அசையும் புன்னகையோடு... அவள் அவனை கடப்பது போல ஒரு நொடி அசைதலை செய்ய... சட்டென அவள் கரம் பற்றிய அவன்... ஆண்மை மிளிர பாடுகிறான்.
"சித்திரமே...... சொல்லடி...."
காதலின் ஆழத்தை வரிகளில் இழுக்கிறான்.
"ஐயோ...! என்ன இவன்....? என்னவோ திட்டம் போட்ருக்கான் போலயே....!" என்பதாக வெட்கம் நாணம் அச்சம் மடம் என அத்தனையும் பொங்க...போகவும் முடியாத... அவன் பற்றுதலை விடவும் முடியாமல் அவன் அசைவுக்கு இசைந்து அருகே பின்னோக்கி நகர... அடுத்த வரியில் வெடிகுண்டை மலர்த்துகிறான்.
"முத்தமிட்டால் என்னடி....?"
அமைதிக்குள் இருந்து ஆகாயத்தாமரை சிதறுகிறது நமக்கு. அடி நாதத்தில்... அலைபாயும் ஆசையை வரியாக்கி விட்ட திருப்தி தலைவனுக்கு.
சரியா போச்சு... பொல்லாத காதலன் எங்கு வருகிறான் என்று தெரிந்து விட்டது.காட்சியும் கோணமும் இசையை சேர்த்துக் கொண்டு அவளை காவல் காக்க ஆரம்பிக்கிறது. அவனும் நாமும் விடுவோமா. அடுத்தடுத்த வரியில் அதகளம் செய்ய தொடங்க... படத்தின் இயக்குனர்... ஸ்ரீதர் எனும் சிருஷ்டி... காட்சிக்கு காட்சி... கலர் கூட்டி கவிதை பின்னிக் கொண்டிருக்கிறார். ஊரே ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க... ஊரையே இளமை புதுமை என்று இழுத்தவர்.
"சித்திரமே சொல்லடி
முத்தமிட்டால் என்னடி
சித்திரமே சொல்....லடி
முத்தமிட்டா.....ல் என்ன்னடி..."
சொல்லடி எனும் போதே தடுக் தடுக்கென விழ ஆரம்பிக்கும் பின்னணி இசை... கூடவே வந்து குடுமியை பிடித்து குதூகலிக்க செய்வது... விஸ்வநாதன் ராமமூர்த்தி செய்த வித்தை. மெல்லிசை மேதைகளின் மயக்கும் சித்து.
பூந்தோட்ட பாதையில் இடுப்பாட்டி இடுப்பாட்டி அப்படி ஒரு நடை. சிரிப்பும் சிலிர்ப்பும் மெய்ம்மறக்க செய்கிறது. உண்மையில்... தலைவனுக்கு நடிக்கவும் தெரியவில்லை. தலைவிக்கு நடனமும் தெரியவில்லை. அந்த தெரியாத இன்னொசென்ட் தான் இந்த பாடலுக்கு மெருகூட்டுகிறது. அப்படி காதலோடு பார் என்று சொல்லி இருப்பார்கள். அந்தம்மாவுக்கு விவரம் இல்லை. சொல்லிக் கொடுத்ததை அப்படியே செய்கிறது. ஆனால் அதில் இருக்கும் அழகு.... கொள்ளை. அவரும் புதிது. சிவாஜி சாயலும் வரக் கூடாது. ரவிச்சந்திரன் சாயலும் வரக்கூடாது. தலைவன் எம் ஜி ஆர் சாயல் வந்து விடவே கூடாது. எவ்ளோ கஷ்டம். மனிதர் சமாளிக்கிறார். ஒன்றும் குறையில்லை. காதலும் காதல் சார்ந்த காலமும் அவர்களாகி ஏக்கமும் விளையாட்டுமாக... தாபமும் தூபமுமாக கிறங்கடிக்கிறது.
"நித்தம் நித்தம் தென்றல் உன்னை
தொட்டதில்லையோ
தொட்டுத் தொட்டு நெஞ்சில் இன்பம்
பட்டதில்லையோ...?"
அருகருகே பார்க்கையில் முட்டை கண்களில் அதிரூபம் காட்டுகிற தலைவி மீது திரை தாண்டி சிறு காதல் நமக்கும் தான். அது சித்திரம் அசைவதாகவே நம்பலாம். தென்றல் தொட்டதில்லையா.... கள்ளி... அதன் இன்பம் கண்டதில்லையா காதல் துள்ளி... என்று சாடை மாடையாக கேட்கையில்... எழுதிய கைகளுக்கு இதயம் தரலாம். (கண்ணதாசா.... நீ பண்ணு தாசா)
"சித்திரமே சொல்லடி
முத்தமிட்டால் என்னடி"
மேலேறும் பாதையில் ஓடி... ஏறி விட்டு பிறகு அவன் கை பிடிக்க... கீழிறங்குகையில்... கழுத்தை ஒரு பக்கமாக சாய்த்துக் கொண்டு பார்வையை மட்டும் சாய்க்காமல் அவன் மீது வீசி... டபக் டபக் என குதித்து குதித்து ஆடிக்கொண்டே வரும் அவளை ரசிப்பது தான் ஒரே வழி. இளமை துள்ள... அவன் பற்றிய கையோடு தன் பக்கம் இழுக்க... பார்த்துக் கொண்டே வரும் அவளை பார்த்துக் கொண்டே இருக்கலாம். பருவம் நிறைந்த முகத்தில் பவளம் முளைத்த திருப்தி.
"முத்தமிட்டால் என்ன்னடி...?" என்று முடிக்கையில்.... வந்து டபக்கென்று நிற்கும் அந்த முகத்தில் இருக்கும் விளையாட்டுத்தனம்.... வாய் விட்டு நம்மை சிரிக்க செய்து விடும். மனம் முட்டி அவளை மேய தொடங்கி விடும்.
செட் போட்டிருந்தாலும்... அந்த பூந்தோட்ட பின்னணி றோஸ் நிற கனவை நமக்கு கடத்த தவறுவதில்லை. இருவர் ஆடைகளும் நேர்த்தி. காதலின் கீர்த்தி கெஞ்சுதலும் கொஞ்சுதலுமாக சலங்கை கட்டி ஆடுகிறது. ஆண் கொஞ்சம் அலைவான். பெண் கொஞ்சம் பிகு காட்டுவாள் தானே. காதலின் அழகை அப்படித்தானே ஆண்டாண்டு காலமாக கொண்டிருக்கிறோம். திரையில் தத்தளிக்கும் நான்கு கண்களும்... காதலின் மூச்சுக்கு ஏங்குவதை.... காதலோடு காண்கிறேன். துடிக்கும் இதயத்துக்கு அடுத்தடுத்த வரிகளே தீனி.
"கன்னி இதழ் மீது
தென்றல் படும்போது
அதில் இல்லாத சுவை இருக்கும்"
"அந்த சுகம் வேறு
சொந்தம் கொள்ளும் போது
அதில் பொல்லாத பயம் இருக்கும்"
நீ சொல்றது எல்லாம் சரிதான். ஆனா பயமா இருக்குமே. காதலில் பெண்களின் ஆயுதம் அந்த அச்சம் தானே. நைச்சியமாக அவன் கேட்பதற்கு நைச்சியமாகவே சொல்லும் பதிலில் கூட... அட இன்னும் கொஞ்சம் கேள்றா... கிடைக்கும் என்ற பொடி இருக்கும். கிட்ட வராதே என்று சொல்லி எட்ட போகாமல் நிற்கும் பெண்ணின யுக்தி. அது ஆதி ஏவாள் புத்தி.
அடுத்தவரி மீண்டும் முதல் வரி. முகத்தருகே முகம் கொண்டு ரகசியம் சொல்வது போல பாடுகிறாள். ரகசியத்தைத் தான் ஓதுகிறாள்.
"சித்திரமே நில்லடி
முத்த்தம் இல்லை..... சொல்லடி..."
நன்றாக பார்த்தால் புரியும். அவன் அழைத்த சித்திரமாகவே... தன்னை தானும் அழைக்கும் கள்ளத்தனம்... முத்த்தம் இல்லை சொல்லடி என்று சொல்கையில்.... கண்கள் விரிந்து இதழும் திறந்து முகமே மலர்ந்த வேகத்தில் பாவனை செய்வது எப்படி இருக்கிறது தெரியுமா. நான் அப்டித்தா சொல்வேன்... ஆனா அப்புறமா தருவேன்... என்பதாக. பெண்களின் இல்லைக்கு இருக்கு என்ற இன்னொரு பொருளை... காதலிக்கும் ஆண்களால் தான் புரிய முடியும். புரிந்தவன் சொல்கிறேன். காதலின் வழி கண்களில் உண்டு. காதலியின் வழி முத்தங்களில் உண்டு.
இந்த முறை கொஞ்சம் தைரியம் கூடி விட்டது. அவள் துப்பட்டாவை வலையாக்கி முதுகோடு சேர்த்து இழுத்து பிடித்தபடி பாடி மீண்டும் அதையே கேட்கிறான்.
"நித்தம் நித்தம் தென்றல் உன்னை
தொட்டதில்லையோ
தொட்டுத் தொட்டு நெஞ்சில் இன்பம்
பட்டதில்லையோ..."
கேட்டு விட்டு ஒரு சுற்று சுற்றி தோளோடு சேர்த்து சரித்து வைத்துக் கொண்டு மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கிறான்.
"சித்திரமே சொல்லடி
முத்தமிட்டால் என்னடி"
"அய்யயோ இன்னைக்கு கண்டிப்பா விட மாட்டான்....போலயே.." என்று வெட்க தோரணையில் அவள் முகத்தில் நாணவில் தோன்றுகையில்... அவன் வாயசைப்போடு அதே வரிகளை வாய்க்குள் முனகி... கண்களில் வண்டு பறக்க... இதழில் நண்டு துடிக்க... காதலின் உச்சத்தை நெற்றியில் கோடிட்டு... தேகம் இலகுவாக காதலின் ரசனையை ஒப்புக்கொடுக்கும் நொடி.... அந்த ஃபிரேம்... மொத்த பாடலுக்கும் மோக முடிச்சு. அப்படியே ஃப்ரீஸ் செய்து பார்த்துக் கொண்டே இருக்கலாம். நிர்மலா... எனும் வெண்ணிற ஆடை... தேவதை ஆன நேரம் அது. கழுத்தை சாய்த்து கண்களை வளைக்கும் வித்தையில் சிறுமிக்கும் இளமைக்கும் இடையே ஒருத்தி வந்து போகிறாள். சாமியார் கூட சாய்ந்திடுவான். வெட்கப்பட்டுக் கொண்டே ஓடி விடுதலில் இருக்கும் காதலின் சிறுபிள்ளை.. ரசிக்க ஊரும் தென்பெண்ணை.
நடனத்திற்கான வர்ணனை. நாட்டியத்திற்கான தோரணை. அசைந்து அசைந்து ஆசுவாசம் பெற்று இடைவெளி குறைக்க.... காதலின் வடிவம் வட்டத்தை குறைத்துக் கொண்டே வந்து புள்ளியாகும் கணக்கிற்கு காத்திருக்கும். பின்னழகு மின்ன.. கண்ணழகு தின்ன... ஆளுக்கொரு தனி தனி க்ளோஸ் அப். திரை நிறையும் அழகு ரெண்டும். மனம் நிறைய சிமிட்ட மறப்போம்.
சீனிவாஸ் குரலில் இருக்கும் கிறக்கம்.... ஜானகி குரலில் இருக்கும் மயக்கம்... எத்தனை முறை கேட்டாலும்... அத்தனை முறையும் முசுமுசுக்கும். முயங்கடிக்கும். முனியடிக்கும்.
"மேனி என்னும் மேடை
மூடி நிற்கும் ஆடை
நானாக மாறவில்லையா..."
நிர்மலா தன்னையும் மீறி அவருக்கும் சேர்த்து டப்பிங் கொடுக்கும் பிழை கூட கலையாகி விட்டது.
இல்லை அவன் பாடுவதை சொல்லி பார்த்து ஐயோ என்ன கேக்கறான் பாரு என்ற காதலி பாவனை கூட காட்சிக்குள் விழுந்து விட்டது.
"மேனி என்னும் மேடை
மூடி நிற்கும் ஆடை
நானாக மாறவில்லையா.."
ஆண் இடும் கொக்கி... கொக்கின் ஒற்றைக்கால் தகதிமி. நெஞ்சோடு அணைத்துக் கொண்டு... தலைக்கும் தலைக்கும் இடைவெளி விட்டு... காதலைக் காணும் முகங்கள் ஆசையில்... பரிபாஷையில். சேர துடிக்கும் கண்களோ ஒரே திசையில் புது இசையில்.
"அது மாறி விட்டால்
இந்த மேனியிலே
ஒரு தேனாறு ஓடும் இல்லையா"
அவளுக்கு தெரியும். காதலின் சங்கமம் தேகத்தில் குங்குமம். காதல் கள்ளனுக்கு காதல் கள்ளியின் பதில்... கள் ஊர சொல்லானது.
இடைவெளி விட்டு இன்னும் ஒரு வரி பிட்டு.... மெல்ல வீசுகிறவன் மீசை வர்க்கம்.
"இடை தானாக வாடும் இல்லையா....!?"
"பாலிருக்கும் கிண்ணம் மேல் இருக்கும் வண்ணம் நீ செய்த கோலம் இல்லையோ
பாலிருக்கும் கிண்ணம் மேல் இருக்கும் வண்ணம் நீ செய்த கோலம் இல்லையோ"
முதல் முறை மூச்சில் எழுகிறது. அதே வரி மறுமுறை ஸ்காட்ச்சில் விழுகிறது. இடுப்பசைய பூங்கா கல் இருக்கை பூங்கொத்தாய் அசைகிறது.
"அந்தக் கோலம் எல்லாம் இதழ் மீது வந்தால் இன்பம் கோடான கோடி இல்லையோ"
அந்த சுவை இதழ் மீது வந்து விட்டால்...இன்பம் கோடி அடி பெண்ணே என்று சூட்சும பதில். பொடி கொண்ட கேள்விக்கு சூடி களித்த சுகம் இப்போது.
உடனே கேட்கிறாள் பாருங்களே.
"அதைக் காணாமல் போவதில்லையோ...?"
அப்போ அதை பார்க்காம போ மாட்ட... இல்லயா. யாருக்கு தான் விவரம் இல்லை. காதலின்பால்... யாவருமே கள்ளர்கள் தான். அதுவும் கவிதை தெரிந்த கள்ளர்கள் காதலின் பில்லர்கள்.
"சித்திரமே சொல்லடி" விடாமல் விரட்டுகிறான்.
"முத்தம் இல்ல்லை சொல்லடி" வெட்க தோரணை தொடர்கிறது.
பாடல் முடிகிறது... கூடல் சொல்வதற்கில்லை.
- கவிஜி