சில நாட்களுக்கு முன்னால் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கின்றது. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒரு திரைப்படம் ஓடுவதற்கு வேகமான திரைக்கதையும், நொடிக்கு ஒருதடவை வெடிக்கும் துப்பாக்கிகளும், கொடூர கொலைகளும், ரத்தமும் வன்முறையும் மட்டுமே போதுமானதாக இருக்கின்றது.
சமீபத்தில் வந்து வெற்றிபெற்ற ரஜினியின் ஜெயிலர், விஜயின் லியோ போன்ற அனைத்து படங்களும் அதன் மோசமான வன்முறை நிறைந்த காட்சிகளுக்காக மட்டுமே வெற்றி பெற்றன.
இது போன்ற படங்கள் ஒரு சமூகத்தில் எவ்வளவு மோசமான வன்முறை கலாச்சாரத்தை ஏற்படுத்தும் என்பதெல்லாம் இயக்குநர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் நன்றாகவே தெரியும்.ஆனால் 100 கோடி போட்டு 400 கோடி லாபம் எடுக்க வேண்டும் என்றால் அதற்காக எந்த எல்லைக்கும் சென்று சமூகத்தை சீரழிக்க சினிமா வியாபாரிகள் தயாராகவே உள்ளார்கள்.
இது போன்ற மசாலா குப்பை படங்கள் எந்தளவிற்கு சமூகத்திற்கு ஆபத்தானதோ அதே போல கருத்து சொல்கின்றேன் என்ற போர்வையில் மக்களின் உணர்வுகளையும் வலிகளையும் மிக மலினமாக காசாக்கும் திரைப்படங்களும் மிக ஆபத்தானதாகும்.
வெறுமனே மக்களின் பிரச்சினையை பற்றி மட்டும் பேசிவிட்டு சென்றுவிட்டால் நமக்கும் ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனால் அந்த பிரச்சினைக்கு தீர்வு சொல்கின்றேன் பேர்வழி என்று அபத்தத்தையும் அசிங்கத்தையும் வாந்தி எடுத்தால் நிச்சயம் அதை நாம் விமர்சனம் செய்துதான் ஆக வேண்டும்.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் இந்தியாவின் முதல் கருப்பு கதாநாயகனாக மாற விரும்பும் ஒரு ரவுடிக்கும் அவனை கொல்வதற்காக காவல்துறையால் அனுப்பப்படும் ஒருவனுக்குமான படமாக தொடங்குகின்றது.
ரவுடி அல்லியன் சீசரை கொன்றுவிட்டால் கிருபாகரன்( ரே தாசன்) மீதான கொலை வழக்கில் இருந்து அவரை விட்டுவிடுவதாகவும் காவல்துறையில் பணி வழங்குவதாகவும் அவருக்கு உறுதி அளிக்கப்படுகின்றது.
இதை நம்பி மதுரை செல்லும் கிருபாகரன் அங்கே சினிமாவில் நடிக்க வேண்டும் என முயற்சித்துக்கொண்டிருக்கும் அல்லியன் சீசரை சந்தித்து கதை சொல்கின்றார்.அப்படியே அல்லியன் சீசரை கொல்வதற்காக பல முயற்சிகளையும் செய்கின்றார். ஆனால் அவை அனைத்தும் தோல்வியடைகின்றது.
இறுதியில் அல்லியன் சீசரின் சொந்த மலை கிராமத்தில் யானை வேட்டையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் சட்டானியை அழித்து விட்டால் அந்த படம் பார்ப்பதற்கு உண்மைக்கு நெருக்கமாக இருக்கும் என்று ரவுடி அல்லியன் சீசருக்கு ஆசை காட்டி அவனை காட்டிற்கு அழைத்துச் செல்கின்றார் ரே தாசன்.
ஆனால் ரே தாசனின் எதிர்ப்பார்ப்பிற்கு மாறாக சட்டானியை ரவுடி அல்லியன் சீசர் பிடித்து அரசிடம் ஒப்படைக்கின்றார். பதிலுக்கு வனப்பகுதியில் இருந்து விசாரணைக்காக பிடித்துவரப்பட்டு அடைத்துவைக்கப்பட்டிருக்கும் தன்மக்களை விடுதலை செய்யச்சொல்கின்றார்.
ஆனால் சட்டானியை காவல்துறை விடுதலை செய்து மீண்டும் யானை வேட்டையில் ஈடுபட அனுப்பிவைக்கின்றது. இதற்கு பின்னணியில் அரசியல்வாதிகள், காவல்துறை கூட்டு இருப்பதை அறிந்துகொள்ளும் ரவுடி அல்லியன் சீசர் தன் மக்களைக் காப்பாற்றினாரா என்பதுதான் கதை.
படத்தின் முதல்பாதி சினிமாவில் கோலோச்ச வேண்டும் என்றால் சிவப்பாக இருந்தால் மட்டுமே முடியும் என்று இருந்த நிலையில் ஒரு கருப்பு கதாநாயகன் அதில் வெற்றிபெற முடியுமா? என பயணித்து அதைபற்றி எதுவுமே சொல்ல மெனக்கெடாமல் இரண்டாம் பாதிக்குள் கதை நுழைகின்றது..
இரண்டாம் பாதியில் காடுகளில் வாழும் மக்களின் பிரச்சினைகளைப் பேசுகின்றேன் என்று ஆரம்பித்து யானை வேட்டை, காடுகளில் இருந்து மக்களை வெளியேற்றினால் மத்தியில் இருந்து கொடுக்கப்படும் முதலமைச்சர் பதவி என விரிந்து ஒரு முட்டுச்சந்தில் போய் கதை நின்றுவிடுகின்றது.
எப்படியும் தப்பிக்க முடியாது!. காரணம் ஆளும் வர்க்கத்தின் அரசியலை சொல்லி விட்டோம் அதற்கு தீர்வையும் சொல்லியாக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டவுடன் அதே ஆளும் வர்க்கத்தின் நிலையில் இருந்தே அரசு பயங்கரவாதத்தில் இருந்து எல்லோரும் தப்பி உயிர்பிழைத்து ஓடுவது, இல்லை என்றால் ஆயுதங்களை மெளனிக்க செய்துவிட்டு தங்களை காவல்துறையின் கொலைவெறி தாக்குதலுக்கு ஒப்புக்கொடுப்பது என்ற மொன்னையான தீர்வை படம் முன்வைத்து இருக்கின்றது.
அதுமட்டுமல்ல படம் நடைபெறுவதாக சொல்லப்படும் 1975 காலகட்டம் இந்தியா முழுவதும் புரட்சிகர கம்யூனிச இயக்கங்கள் கோலோச்சிக் கொண்டிருந்த காலகட்டமாகும்.
பழங்குடியின மக்கள் எப்போதுமே எதிரிகளுக்கு அடிபணிந்து போகும் குணாதிசயம் இல்லாதவர்கள். அதனால்தான் இன்றுவரையிலும் பசுமை வேட்டை என்ற பெயரில் எவ்வளவோ அடக்குமுறைகளை இந்திய அரசு பழங்குடியின மக்கள் மீது ஏவிய போதும் இன்றுவரை தண்டகாரண்ய காடுகளை இந்திய ஆளும் வர்க்கத்தால் கைப்பற்ற முடியவில்லை.
சுதந்திரத்திற்குப் பின்னரும் கூட, பழங்குடி சமூகங்கள் தங்கள் நிலம், நீர், காடு, மொழி, கலாச்சாரம் மற்றும் அடையாளத்தின் மீதான அத்துமீறலுக்கு எதிராக தொடர்ந்து போராடி வந்திருக்கின்றார்கள்.
குறிப்பாக பலமு-கும்லா பகுதியில் உள்ள 256 கிராமங்கள் இடம்பெயர்வதைத் தடுக்க கேந்திரிய ஜன் சங்கர்ஷ் சமிதியின் 45 ஆண்டுகாலப் போராட்டமும் கோயல் மற்றும் கரோ நதிகளில் அணை கட்டியதால் 245 கிராமங்கள் வேரோடு அழிக்கப்பட்ட ஹைடல் திட்டத்தை எதிர்த்து 40 ஆண்டுகளாக கோயல் கரோ மக்கள் இயக்கமும் மிக முக்கியமானது.
நவம்பர் 15, 2000 அன்று ஜார்க்கண்ட் தனி மாநிலமாக உருவானவுடன், அப்போதைய பாஜக அரசு முன்னணி முதலீட்டாளர்களை மாநிலத்திற்கு அழைக்கத் தொடங்கியது. அடுத்த நான்கு ஆண்டுகளில், அரசாங்கம் 150க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. அப்போதுதான் பழங்குடியினர் மற்றும் பழங்குடியின சமூகங்கள் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட சக்தியாக அதற்கு எதிராக எழுந்தனர்.
குந்தி-கும்லா மாவட்டத்தில், எஃகு நிறுவனமான ஆர்செலர் மிட்டல் சுமார் 40 கிராமங்களை இடம்பெயர்த்து எஃகு ஆலையை அமைக்க முன்வந்தபோது, அப்பகுதியின் பழங்குடி விவசாயிகள் 'ஒரு அங்குல நிலத்தைக் கூட நாங்கள் கொடுக்க மாட்டோம்' என்ற முழக்கத்துடன் எதிர்த்தனர்.
கிழக்கு சிங்பூமில் பூஷன் ஸ்டீல் மற்றும் ஜிண்டால் ஸ்டீல் நிறுவனங்களுக்கு எதிராகவும், தும்காவின் கதிகுண்ட் பகுதியில் நிலக்கரி நிறுவனத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராகவும் நடந்த போராட்டங்களும் வெற்றி பெற்று இருக்கின்றன.
அதே போல ஒரிசாவில் ‘நியாம்கிரிக்காக எங்கள் இரத்தத்தை சிந்துவோம், நாங்கள் நியாம்கிரிக்காக இறப்போம்" என்று வேதந்தா நிறுவனத்திற்கு எதிராக கோந்த் பழங்குடியின மக்கள் போராடி வருகின்றார்கள்.
சட்டீஸ்கர் மாநிலம் தாண்டேவாடா, சுக்மா, பிஜப்பூர் பகுதிகளில் பரந்து விரிந்து கிடக்கும் பல இலட்சம் கோடி மதிப்புள்ள கனிம வளங்களை, டாட்டா, ஜிண்டால், அதானி உள்ளிட்ட பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்த்தது முந்தைய மன்மோகன்சிங் அரசு.
கனிம வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு வழங்குவதற்கு வசதியாக, அந்தக் காடுகளிலும் மலைகளிலும் காலங்காலமாக வாழ்ந்து வரும் அந்த பழங்குடி மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் வேலையை துணை இராணுவத்தைக் கொண்டும், சல்வா ஜூடும் எனும் கொலைகார சட்ட விரோத அமைப்பைக் கொண்டும் செய்து வந்தன, அன்றைய மத்திய காங்கிரஸ் அரசும் சட்டீஸ்கர் மாநில பாஜக அரசும்.
இந்நிலையில் அந்தப் பகுதி மக்களுக்கு எதிரான துணை இராணுவம் மற்றும் சல்வாஜூடும் தாக்குதல்களுக்கு எதிராக அப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் ஆயுதப் போராட்டத்தை நடத்தினர். இதனை வாய்ப்பாக வைத்துக் கொண்டுதான் மாவோயிஸ்ட்டுகளை ஒழிப்பதற்கான நடவடிக்கை எனும் பெயரில் “பசுமை வேட்டை” (Operation Green Hunt) எனும் தாக்குதலை அங்கிருந்த பழங்குடியின மக்கள் மீது நடத்தி அவர்களை வெளியேற்ற முயற்சித்தது இந்திய அரசு.
இவை எல்லாம் அசுரத்தனமான ஆயுத பலத்தோடும் ஆட்பலத்தோடும் வளர்ந்துள்ள இந்திய இராணுவத்தை எதிர்த்த போராட்டமாகும். அப்படி என்றால் படம் நடக்கும் 1975 காலகட்டத்தில் இந்திய அரசும் மாநில காவல்துறையும் எப்படிப்பட்ட ஆயுதங்களை வைத்திருந்திருக்கும் அவர்களை பழங்குடியின மக்கள் எப்படி கையாண்டிருப்பார்கள் என்பதை எல்லாம் நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
கடந்த 75 வருடங்களில் பழங்குடியின சமூகம் மிகப்பெரிய இழப்பை சந்தித்து இருக்கின்றது. சுதந்திரம் அடைந்ததில் இருந்து இதுவரை 22 லட்சம் ஏக்கர் வன நிலங்கள் வளர்ச்சி என்ற பெயரில் பல்வேறு திட்டங்களுக்காக கையகப்படுத்தப்பட்டுள்ளன.
நகரமயமாக்கலுக்காக, ஒவ்வொரு ஆண்டும் பழங்குடி சமூகத்திடமிருந்து லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பறிக்கப்படுகின்றன. அவர்கள் இப்போது நகரங்களில் அத்துக்கூலிகளாக வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இரண்டு கோடிக்கும் அதிகமான பழங்குடியினர் மற்றும் தலித்துகள் இடம்பெயர்ந்து வாழ்வாதாரம் இல்லாமல் உள்ளனர்.
கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் பழங்குடியினர் பகுதிகள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளன. ஆனால் படம் பழங்குடியின மக்களின் பிரச்சினைகளை ஆழமாகப் பேசாமல் மேலோட்டமாக சினிமாத்தனமாக எடுக்கப்பட்டுள்ளது.
பிஹாரில் சந்தால்களின் போராட்டத்தை முன்னெடுத்த டில்கா மாஞ்சி ,சோட்டா நாக்பூர் பகுதியில் பழங்குடி மக்களை ஒன்றிணைத்து ஆங்கிலேயே படைகளுக்கு எதிராக போராடிய பிர்சா முண்டா,அதே போல ஆந்திராவில் ஆங்கில அரசுக்கு எதிராக பழங்குடியின மக்களை திரட்டி போராடிய அல்லுரி சீதாராம ராஜு போன்றோரை எல்லாம் பார்த்த நமக்கு அல்லியன் சீசர் போன்ற ரவுடி கதாபாத்திரம் மிக கேவலமானதாக, அருவருப்பாகத் தெரிகின்றது.
எந்த பழங்குடியின இளைஞன் இப்படி காடுகளில் இருந்து சமவெளிப்பகுதிக்கு வந்து மக்கள் விரோத ரவுடியாக இருக்கின்றான்? இது திட்டமிட்டே அவர்களை குற்றவாளிகளாக சித்தரிக்கும் அயோக்கியத்தனமான செயலாகும்.
கார்ப்பரேட்டுகள், அதானி மற்றும் அம்பானிகளுக்கு ஆதரவாக, நரேந்திர மோடி வன உரிமைச் சட்டத்தின் விதிகளை மாற்றுகிறார். சரணாலயங்கள் என்ற பெயரில், தலைமுறை தலைமுறையாக காடுகளில் வசிக்கும் பழங்குடியின மக்கள் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இப்படி இந்திய ஆளும் வர்க்கத்தால் மையப்படுத்தப்பட்ட தாக்குதலுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் பழங்குடியின மக்களின் பிரச்சினைகளைப் பற்றி எந்தவகையான அரசியல் புரிதலும் இல்லாமல் மேலோட்டமாக அதே சமயம் ஆளும் வர்க்கத்திற்கு நோகாத தீர்வை படம் முன்வைக்கின்றது.
- செ.கார்கி