சக மனிதனின் அழுகைதான் இருப்பதிலேயே மிகப்பெரிய ஆயுதம். அந்த ஆயுதம் உயிரோடு கொன்று போடும். செத்த பின் இல்லாமல் செய்து விடும். 
 
இப்போது நாட்டில் நடந்து கொண்டிருக்கும் அதே கதை தான் இந்தப் படத்தின் கதை. 
 
Train to Busan - Director : Yeon Sang-ho -South Korean- 2016 
 
train to busanமனைவியை பார்க்க தன் 7 வயது பெண் பிள்ளையை அழைத்துக் கொண்டு ஹீரோ Busan க்கு பயணிக்கிறான். அதே ட்ரைனில்...ஒரு ஜோடி... அவள் நிறை மாத கர்ப்பிணி வேறு. கல்லூரி டீம் நண்பர்கள். அதிலும் ஒரு ஜோடி. வயதான அக்கா தங்கை...ஒரு பிச்சைக்காரன்.. என்று அந்த கப்பார்ட்மெண்ட் ஆட்கள். 
 
ட்ரெயின் கிளம்பிய நொடியில்..... கடைசி நேரத்தில் ஒரு பெண் ஓடி வந்து ஏறுகிறாள். வினை சொட்டும் குருதிப் புனல் கதை சொல்லும் நேரம் இனி.
 
வண்டி வேகம் எடுக்கிறது. அப்போது தான் நாம் கவனிக்கிறோம். அந்த பெண் ஏதோ ஒருவகை வைரஸால் பாதிக்கப்பட்டு உடல் நடுங்கி.. தலை ஆடிக் கொண்டேயிருக்கறது. உடல் வெட்டி வெட்டி இழுக்கிறது. கீழே படுத்து உருளுகிறாள். என்ன ஏதென்று விசாரிக்க போன ட்ரெயின் பணிப்பெண்ணின் கழுத்தை கடித்து குதறுகிறாள். பட்டென்று அந்த பணிப்பெண்ணும் அவளை மாதிரியே தொற்றுக்கு ஆளாகி மற்றவரைக் கடிக்க கத்தி கொண்டே விரட்டுகிறாள். அங்கிருந்து ஆரம்பிக்கிறது.. ஒரு "மிருதன்" கதை.
 
ஒருவர் இன்னொருவரை கடிக்க இன்னொருவர் இன்னொருவரைக் கடிக்க அது நான்காகி எட்டாகி கூட்டமாகி பெருகி ட்ரைனில் இருக்கும் பெரும்பாலானோர் கிட்டத்தட்ட தொற்றுக்கு ஆளாகி பிசாசுகளை போல ரத்தம் குடிக்க அலைகிறார்கள். சிக்கினால்... சிதறடித்து விடும் குரூரம் அவர்களிடம். கூட்டம் கூட்டமாய் உடல் வெட்டி வெட்டி இழுக்க......கண்கள்... வெள்ளையாகி... வாயெல்லாம் ரத்தம் ஒழுக....... வெறி கொண்டு நிற்கையில்.. பார்த்து பார்த்து கட்டிய மானுடம்... ஒரேயடியாக சரிவதைக் காண முடிகிறது. 
 
ட்ரெயின் ஓட்டுனருக்கு எல்லாம் தெரியும். வேறு வழியில்லை. வண்டியை நிறுத்த முடியாது. ட்ரையினை ஓட்டிக் கொண்டே இருக்கிறார். 
 
படத்தின் முதல் காட்சியிலேயே ஒரு வண்டி ஒரு மான் மீது மோதும். அடிபட்டு ரத்தம் சொட்ட மயங்கிக் கிடக்கும் அந்த மான் சில நொடிகளில் படக்கென்று எழுந்து ஒடிந்த காலை நிமிர்த்தி நின்று சுற்று முற்றும் பார்த்து விட்டு நடக்க ஆரம்பிக்கும். தொற்றின் ஆரம்ப நிலை அதுவாகயிருக்கலாம்.
 
ஒரு கட்டத்தில்...  ட்ரெயின் இதற்கு மேல் போகாது.......என்று அடுத்து வந்த ஒரு ஸ்டேஷனில் ஓட்டுநர் நிறுத்தி விட மிஞ்சியவர்கள் ஸ்டேஷனில் இறங்கி நடக்க ஆரம்பிக்கிறார்கள். ஆனால் அங்கு மிலிட்டரி உள்பட பாதிக்கப்பட்டிருக்கும் கூட்டம் அவர்களை துரத்த ஆரம்பிக்கிறது. அதற்குள் ரயில்வேயில் வேலை செய்யும் ஒரு சுயநல அதிகாரி, " இங்கு நிலவரம் சரி இல்லை... நாம் busan சென்று விடலாம்" என்ற கட்டளையின் பேரில் மீண்டும் ட்ரெயின் busan க்கு  புறப்படுகிறது. தற்போது இருக்கும் ஸ்டேஷனில் பலர்... தொற்றுள்ள மனிதர்களிடம் சிக்கி பாதிக்கப்பட.... அதில் மிஞ்சியவர்கள்.....சிலர் மட்டும் பலகட்ட போராட்டத்துக்கு பின் ஓடி வந்து கிளம்பி விட்ட ட்ரைனில் ஏறும் காட்சி திரை தாண்டி மெய் சிலிர்க்கும் காட்சி. நம்மூர் ஆபாவாணனை மிஞ்சி இருக்கிறார் இயக்குனர்.
 
முதல் காட்சியில்... ஹீரோவுக்கும்....செகண்ட் ஹீரோவுக்கும் முட்டிக் கொண்டிருக்கும். ஆனால்.. ஹீரோ ட்ரெயினில் ஏறி விட்டு செகண்ட் ஹீரோ ஓடி வருகையில் ஒருவருக்கொருவர் உதவி செய்தபடியே... கை கொடுத்து உள்ளே தூக்கி விடுகையில்... இணைந்த கைகள்... ராம்கி அருண்பாண்டியனை பார்த்தது போல இருந்தது. இவர்கள் எப்படியும் தப்பித்து விடுவார்கள் என்று நம்ப வைக்கும் காட்சி இது. ஆனால் பெட்டி மாறி ஏறி விடுவார்கள். ஹீரோ.... .செகண்ட் ஹீரோ..... அந்தக் கல்லூரி பையன்......மூவரும் ஆறாவது கம்பார்ட்மெண்டில் இருக்க..... ஹீரோவுடைய மகள்... செகண்ட் ஹீரோவுடைய நிறைமாத கர்ப்பிணி மனைவி... கல்லூரி பையனின் தோழி கம் காதலி...(காதல் ட்ரைனில் வந்த பிறகு தான் கன்பஃர்ம் ஆகிறது...) 12 வது கம்பார்ட்மெண்டில் மாட்டிக் கொள்கிறார்கள். 

வேறு வழியில்லாமல்.. அங்கிருந்து மெல்ல மெல்ல பல வகையான ஏமாற்று வேலைகள் செய்து அடுத்த பெட்டிகளில்... உடலை ஆட்டிக் கொண்டே.. கழுத்தை திருப்பிக் கொண்டே.. தன் உடலை தானே சுருட்டிக் கொண்டே........ நடுங்கியபடி கடித்து குதற காத்திருக்கும் அதுகளின் காதுகளின் கவனத்தை திருப்பி விட்டு ஒவ்வொரு பெட்டியாக கடக்கிறார்கள். ட்ரெயின் டன்னல்க்குள் செல்கையில்... இருட்டி விட... அப்போது தான் ஒரு விஷயம் புரிகிறது. அதுகளுக்கு இருட்டில் கண் தெரிவதில்லை.  அதை புரிந்து கொண்டு அதற்கு தகுந்தாற் போல தப்பிக்கிறார்கள். அப்படி இருந்தும் கடைசி ஆள் அந்த பெட்டியைத் தாண்டுகையில்... டன்னல் விட்டு ட்ரெயின் வெளியேறிவிட.. வெளிச்சம் பட்டு கண்கள் தெரிந்து......ஆஹ்...என அதுகள் விரட்டிக் கொண்டு வருகின்றன. அங்கொரு போராட்டம். கதவை அந்தப் பக்கமிருந்து அவர்கள் அடைக்க இந்தப் பக்கமிருந்து அதுகள் திறக்க முயற்சிக்க சாதாரண வெறிக்கும்... தொற்றுள்ள வெறிக்கும் இடையேயான கடும் போட்டி அங்கே அரங்கேறுகிறது.
 
அடுத்த ஒரு பெட்டியைத் தாண்டுவதற்கு வேறு வழியின்றி மூவரும் அதுகளோடு சண்டை போட வேண்டியதாகி விடுகிறது. ஒரு கட்டத்தில் கல்லூரி பையன் தொற்றால் பாதிக்கப்பட்ட அவன் நண்பர்களை அடிக்க முடியாமல் தவிக்கையில்...இந்த வாழ்வில் இன்னும் என்னவெல்லாம் காண வேண்டியிருக்குமோ என்று உள்ளுக்குள் நமக்கு பத பதைக்கிறது. புரிந்து கொண்ட செகண்ட் ஹீரோ....அவனை நகர சொல்லி விட்டு......அடித்து வீழ்த்துகிறான். ஒரு வழியாக 12 வது பெட்டிக்கு சென்று விடுகிறார்கள். அங்கே ஒரு பிச்சைக்காரனும் அவர்களோடு இருக்கிறேன். 
 
அவன் ஒரு தீர்க்கதரிசி போல முதல் காட்சியிலேயே.. எல்லாரும் சாக போறோம்....... சாக போறோம் என்று முணங்குவான். மாட்டிக் கொண்ட பின் பிச்சைக்காரன் என்ன லட்சக்காரன் என்ன. எல்லா காரன்களும் சாவுக்கு முன் வெற்றுக் காரணிகள்தான். 
 
அங்கிருந்து அடுத்த பெட்டியை நோக்கி மீண்டும் ஓட்டம். பதட்டம். ட்ரெயின் போய்க்  கொண்டேயிருக்கிறது. காப்பாற்ற எந்த சூப்பர் ஹீரோவும் வரப் போவதில்லை. busan-ல் மட்டும் தொற்று பரவாமல் இருக்கிறது. அதை நோக்கி தான் நகர்தல். 
 
ஒரு கட்டத்தில் முதல் பெட்டியை தொட்டு விட இவர்கள் முயற்சிக்கையில் அதில் இருக்கும்.. அந்த சுயநல அதிகாரி தலைமையிலான ஒரு கூட்டம் இவர்களை தொற்று பாதித்தவர்கள் என்று நினைத்து உள்ளே விட மறுக்கிறது. பின்னால் இருக்கும் கதவு அதுகளால் உடைபட்டுக் கொண்டிருக்கிறது. எத்தனை கெஞ்சியும் அவர்கள் உள்ளே விடுவதில்லை. 
 
சக மனிதனை சக மனிதன் நம்பாமல் போகும் காலத்தில் சக மனிதனை சக மனிதன் அடித்து கொன்று தன்னை காப்பாற்றிக் கொள்ள நேரிடும். 
 
இதோ அதன் ஆரம்ப கட்ட மாதிரி வெர்சன் தான் இப்போது நம் நாட்டில் நடந்து கொண்டிருப்பது. இந்த படத்தின் முடிவு கண்டிப்பாக உண்மையில் நடந்து விடக் கூடாது என்று எல்லாம் வல்ல இயற்கையை பிரார்த்திக்கிறேன்.
 
எல்லா கால கட்டத்திலும் நல்ல மனிதர்கள் நம்மோடு இருந்து கொண்டேயிருப்பார்கள். அப்படி ஒரு நல்ல ஆன்மா அந்த செகண்ட் ஹீரோ. தன்னை பலி கொடுத்து தன்னோடு இருக்கும் அந்த நால்வரை காப்பாற்றுகையில்.. "சாமி இறங்கி வராது... சக மனிதன்தான் அது" என்று ஊர்ஜிதமானது. கதவை உடைத்துக் கொண்டு அதுகள் முன்னேறி விடாமல் தடுத்துக் கொண்டே...." போய்டுங்க.. எல்லாரும் போங்க...." என்று கத்தியபடியே.. ஹீரோவிடம் தன் மனைவியை பார்த்துக்கோ என்று சொல்கிறான். அந்த கண்களில் அன்பின் முத்துக்கள் மின்னுகின்றன. கண்கள் கலங்க மனைவியிடம் கத்தி சொல்வான். "பிறக்க போகும் நம்ம குழந்தைக்கு இப்போ பேர் கிடைச்சிடுச்சு.." ஆனால் சொல்லி முடிப்பதற்குள்... என்ன பேர் என்று சொல்வதற்குள் அதுகளிடம் கடி வாங்கி அதுவாக மாறி விடுவான். கதறிய மனைவியையும் தன் பிள்ளையையும் அந்த பிச்சைக்காரனையும் இழுத்துக் கொண்டு ஹீரோ அடுத்த பெட்டிக்குள் அடித்து பிடித்து செல்கிறான்.  
 
அந்த அதிகாரியோடு இருப்பவர்கள் இவர்களை வெளியே போக சொல்லி கத்துகிறார்கள். எல்லார்க்கும் பயம். யாரை நம்புவது.. யாரிடம் அது இருக்கிறது... எல்லாருக்கும் குழப்பம். மனிதனை மனிதன் விரட்டி விடும் நாடகம் அரங்கேறுகிறது. ஒரு பக்கம் தொற்று கொண்ட வெறி. ஒரு பக்கம் சக மனிதனின் பயம் கொண்ட வெறி. இடையில் இந்த நால்வரும் மாட்டிக் கொண்டு அல்லல்படுவது..... சாவுக்கு முந்தின கட்டம்..... இந்த மாதிரி தான் இருக்கும் போல. 
 
ஒரு கட்டத்தில் உடைந்து அழுவான் ஹீரோ. அவனால் அப்போது அழ மட்டுமே முடிகிறது. அம்மா இறந்து போன செய்தி அலைபேசி வழியாக கிடைக்கிறது. பிரிந்திருக்கும் மனைவிக்கு என்ன ஆனது என்று தெரிவதில்லை. இப்போதைக்கு மகளும் அந்த கர்ப்பிணி பெண்ணும் மட்டும் தான். ட்ரெயின்  விபத்துக்குள்ளாகிறது. பிச்சைக்காரன் தப்பிக்க வைக்க தன் உயிரைத் தருகிறான். கூட்டிக் கொண்டு ஓடுகிறான். ஓட ஓட விதி விரட்டுகிறது. அந்த கல்லூரி ஜோடி பெண்ணை அதுகளிடம் தள்ளி விட்டு அந்த சுயநல அதிகாரி தப்பிக்கிறான். அந்த பெண் தொற்றால் துடிக்கிறாள். அந்த காதலன் அவளை மடியில் போட்டுக் கொண்டு அழுகிறான். "இப்போ நான் என்ன பண்ணனும் தெரியலையே..." என்று மடியில் கிடக்கும் காதலியைக் கட்டிக் கொண்டு அழ அழவே.. அவள் தொற்று முற்றி அவனை கடிக்க ஆரம்பித்து விடுகிறாள். அப்போதும் அவளை கட்டிக் கொண்டே அவனும் அதுவாகவே மாறி விடுகிறான். காதல் ஒரு போதும் கை விடாது. அப்படி கை விட்டால் அங்கே பெரும்பாலும் காதல் இருக்காது.
 
அந்த ஸ்டேஷனில் யாருமே இல்லை. எங்கு திரும்பினும் மயான அமைதியும் மரித்து போன சலடங்களும். அப்போது ஒரு ட்ரெயின் நகர்வதை பார்த்து அந்த ட்ரைனில் ஓடி ஏறுகிறார்கள். அப்போது... அவர்களுக்கு பின்னால் தொற்றால் பாதிக்கப்பட்ட கொத்து கொத்தாய் மனிதர்கள் இந்த மூவரை பிய்த்து தின்று விட ட்ரைனுக்கு பின்னால் விரட்டிக்  கொண்டு வருகிறார்கள். பீஜியம் சும்மா எகிறி அடிக்கும். மனதுக்குள் மூளை உறையும்....காட்சி. இதயம் கண்களில் துடிக்கும் காட்சி. மனித மூட்டைகள் ஒன்றின் மீது ஒன்று சேர்ந்து கொண்டு ட்ரெயின் கம்பியை பற்றி தரையோடு தரையாக இழுபட்டுக் கொண்டே வருகையில்... ஹீரோ.. சற்று பின் வந்து கம்பியை பற்றி இருக்கும் கைகளை உதைத்து உதைத்து ஒவ்வொரு கையாக விடுபட செய்கிறான். போதும் போதும் என்றாகிவிடும் நமக்கு. அவர்கள் விடு பட்ட பின் ட்ரெயின் ஓட்டுநர் யார் என்று பார்த்தால் அந்த சுயலான அதிகாரி. ஆபத்து காலத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும் எப்படி உதவி வருமோ.. அப்படி துரோகமும் எங்கிருந்து வேண்டுமானாலும் வரும். அவருக்கும் தொற்று ஏற்பட்டிருக்கிறது. 
 
அவர் கெஞ்சுவார். "எப்படியாவது என்னை காப்பாற்று.. ஊரில் என் அம்மா எனக்காக காத்திருப்பார்..  காப்பாற்று " என்று சொல்லிக் கொண்டே ஹீரோ மீது பாய்ந்து விடுகிறார். நடக்கும் சண்டையில் சுயநல அதிகாரியை தூக்கி வெளியே வீசி விட்டு அப்பாடா நிம்மதி எனும் போது தான் ஹீரோ உள்பட எல்லாரும் கவனிப்போம். 
 
ஹீரோ கை கடி பட்டிருக்கும். 
 
அடுத்து தனக்கு என்ன நிகழப் போகிறது என்று ஹீரோவுக்கும் தெரியும். அந்த கர்ப்பிணிக்கு தெரியும். அந்த சிறுமிக்கும் தெரியும். ட்ரைனை எப்படி நிறுத்த வேண்டும் என்று வேக வேகமாய் கர்ப்பிணிக்கு சொல்லி விட்டு.. தன் மகளிடம் பேசும் வார்த்தைகள் மானுட சாபத்தின் வலி மிகுந்த கண்ணீர் துளிகள். கதி கலங்க வைக்கும் அன்பின் தாங்கொணா துயரங்கள். 
 
"பத்திரமா இருக்கனும்... இந்த ஆண்டி கூடயே இருக்கணும்....உன்ன நீ தான் பாத்துக்கணும்.. அப்பா இனி இங்க இருக்க கூடாது...." அவன் பேச பேசவே அவனில் அது வேகமாய் பரவ ஆரம்பித்து விட....அந்த சிறுமி கதறி அழுவாள். 
 
"அப்பா........ போகாத....... போகாதப்பா.........ப்ளீஸ்.......ப்பா போகாத......"
 
முதல் சில காட்சியில்... சுயநலமாக இருக்கும் அப்பாவை பார்த்து... அந்த சிறுமி கேட்பாள். 
 
"உன்னை மட்டும் பார்த்துகிட்டதால தான் அம்மா வை பார்க்காம விட்டுட்டியாப்பா... நாம எல்லாரையும் தான பாக்கணும்..." என்று அவள் சொன்னது நம் நினைவுக்கு வருகிறது. மற்றவருக்காக வாழ்கையில்... மற்றவருக்காக சாகையில்... இரண்டுக்குமே அர்த்தம் கிடைக்கிறது. அதன் பிறகு தான் அவன் ஹீரோவாகிறான்.   
 
சிறுமி கத்த கத்த அவன் நிழல் ட்ரைனில் இருந்து அப்படியே தண்டவாளத்தில் கீழே விழும். காலம் மெல்ல நகருவதை அந்த ஸ்லோமோஷன் காட்சி நம்மிடம் உணர்த்தும்.

இப்போது ட்ரைனில் அந்த கர்ப்பிணியும் அந்த குழந்தையும் மட்டும் தான். 

Busan வந்து விடுகிறது. 

திக் திக் என்று படம் முடியும் நேரம்...... படத்தின் தாக்கம் இன்னமும் நம்மை விட்டகல்வதில்லை. மனிதனின் பேராசை...இயற்கைக்கு எதிரான வாழ்வு முறை.....என்று என்னெல்லாமோ சேர்ந்து இப்படி பூச்சிக்கும்... கடிக்கும் ஒளிந்து வீட்டுக்குள் அமர வைத்து விட்டது. இந்த நிலை இதோடு முடிந்தால் பரவாயில்லை. ஒருவரையொருவர் விரட்டி கடித்து......தின்று.... .....கொன்று..... சாவதெல்லாம்.. நினைக்கும் போதே.... அத்தனை இலகுவாக இல்லை.
 
நம்பிக்கைக்கும் அவ நம்பிக்கைக்கும் இடையே மனிதன் மாட்டிக் கொள்ளும் போது.......தானே சிலுவையாகிறான். 
 
ரத்தம் பாவம் கழுவுகிறது. அயர்ச்சி ஓடித் தீர்கிறது.

- கவிஜி 
Pin It