முன்குறிப்பும் தமிழாக்கமும் : யமுனா ராஜேந்திரன்

martinvantorto 350ரோஸா போலந்தில் பிறந்த ஒரு யூதப் பெண்மணி. ஜெர்மனியில் பாஸிஸ்ட்டு எதிர்ப்புப் போரில் முன்நின்றவர். பாஸிஸ்ட்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டவர். போலந்து - ரஷ்யா - ஜெர்மனி போன்ற நாடுகளின் புரட்சிகர நடவடிக்கைகளில் பங்கு பற்றியவர். தன் காலத்தின் மிகப்பெரும் சிந்தனையாளர்களுடன் விவாதத்தில் ஈடுபட்ட பெண்மணி. தீவிர அரசியல் படிப்பை மேற்கொள்கிறவர்கள் எவரும் இவருடைய சிந்தனைகளை மறுதலித்துவிட முடியாது. ரோஸா லக்ஸம்பர்க்கின் தன்னெழுச்சி பற்றிய கோட்பாடுகள் தேசிய இனப் பிரச்சினைகள் பற்றிய விவாதங்கள் அவரது காதல் வாழ்வு அவரது தனிமை அவரது சோகம் போன்றவை பற்றி பெண் நிலை நோக்கில் ‘ரோஸா லக்ஸம்பர்க்’ படம் பேசுகிறது. ‘ரோஸா லக்ஸம்பர்க்’ படம் உலகெங்கும் இடதுசாரிகளிடம் அரசியல் சினிமா ஆர்வலர்களிடம் எதிர்பார்ப்புகளையும் விவாதங்களையும் தூண்டியவை.

1985 ஆம் ஆண்டு ஜெர்மன் மொழியில் ‘ரோஸா லக்ஸம்பர்க்’ திரைப்படம் வெளியானது. ஐரோப்பிய அரசியல் சினிமா பாரம்பரியத்தில் ‘ரோஸா லக்ஸம்பர்க்’ திரைப்படம் கலை-அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு. மார்கரட் வான் ட்ரோட்டா இப்படத்தின் இயக்குனர். மரபு வழியிலான பெண் புரட்சிவாதிகள் குறித்த சித்திரிப்புகளைக் கேள்விக்குள்ளாக்குபவை இவரது அணுகுமுறைகள். மார்கரட் வான் ட்ரோட்டா 1942 ஆம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்தார். மூனிச்/பாரீஸில் ஜெர்மன்-இலத்தீன் இலக்கியம் பயின்றவர். 1968 இல் நடிகையாக வாழ்வைத் தொடங்கியவர். இவரது ‘ரோஸா லக்ஸம்பர்க்’ படத்தையட்டிய கலந்துரையாடலுக்காக 1986 ஆம் ஆண்டு லண்டனில் ‘நேஷனல் பிலிம்’ தியேட்டருக்கு வருகை தந்திருந்து பார்வையாளர்களை நேரில் சந்தித்து ‘ரோஸா லக்ஸம்பர்க்’ படம் பற்றி உரையாற்றினார்.

கலந்துரையாடல் ஒவ்வொரு காட்சியமைவு பற்றியதும் வரலாறு பற்றியதும் திரைப்படத்தில் வரலாற்றை மறுபடைப்புச் செய்வதில் உள்ள பிரச்சினைகள் பற்றியதுமான பிரச்சினைகள் இடம் பெற்றது. உரையாடல் தன்னளவிலேயே படத்தின் கதையை வரலாற்றை பல்வேறு பார்வையாளர்களின் விமர்சனங்களை எடுத்துச் சொல்கிறது. இந்த நேர்முகத்தையும் கலந்துரையாடலையும் தமிழில் தருவதன் நோக்கம் சினிமாவில் அரசியல் சினிமா பெண்நிலைவாத நோக்கில் அரசியல் வரலாறு போன்றவற்றைப் பற்றி ஒரு புரிந்துணர்வை தமிழ்ச் சூழலில் உருவாக்குவதுதான். இக்கலந்துரையாடலில் ஒருசில கேள்விகள் ‘ரோஸா லக்ஸம்பர்க்’ தவிர்த்த பிற படங்கள் பற்றியதாக இருந்தது. அதை நான் இங்குத் தவிர்த்திருக்கிறேன். ‘ரோஸா லக்ஸம்பர்க்’ பற்றிய விவாதங்களை மட்டுமே நான் முழுமையாகத் தர விரும்பினேன். மற்ற விவாதங்களும் ரோஸா படத்தின் விவாதங்களின் நீட்சியாகவே பிறந்தவை. 

மார்கரட் வான் ட்ரோட்டாவுடன் நேர்காணல் செய்தவர்கள்: ஷீலா ஜான்ஸ்டன் மற்றும் பார்வையாளர்கள்.

ஷீலா: நாங்கள் பெரும்பாலானோர் உங்கள் ரோஸா படத்தைப் பார்த்தோம். இந்தப் பிரச்சினையில் உங்களுக்கு எவ்வாறு ஈடுபாடு வந்தது?

ரோஸாவுடனான எனது சந்திப்பு 1960 களில் (1968-1969ஆம் ஆண்டுகளில்) ஜெர்மனியில் நடை பெற்ற மாணவர் கிளர்ச்சிகளின் போது ஏற்பட்டது. லெனின், மார்க்ஸ், ஹோசிமின் போன்றோர்களின் படங்களை கிளர்ச்சியாளர்கள் ஏந்திச் சென்றனர். அப்படங்களில் இருந்த ஒரேயரு பெண் புரட்சியாளரின் படம் ரோஸாவினுடையதுதான். நான் அவளைப் பார்த்தேன். அவள் இவ்வாறு தெருவில் ஏந்திச் செல்லக்கூடிய வகை மட்டுமல்ல; அவளது முகம் வெறுமே ஒரு நடவடிக்கையாளர் முகம் மட்டுமல்ல; அவளது முகம் ஆழ்ந்து உள்நோக்கிய சோகமான முகம், அது என்னை ஈர்த்துக் கொண்டது. புத்தகங்கள், கடிதங்கள், அரசியல் கருத்துக்கள் என நிறைய வாங்கிப் படித்துக் கொண்டேயிருந்தேன்.

நான் அப்போது வெறும் நடிகை மட்டுமே. வேறொரு நாளில் நான் இவள் பற்றிய திரைப்படம் செய்வேனென நினைத்திருக்கவில்லை. 1962ஆம் ஆண்டு பாஸ் பைன்டர் தனது இறுதிப் படமாக ‘ரோஸா’ பற்றி ஒரு படம் செய்ய விரும்பினார். அவர் மரணமுற்றார். அவர் இறந்த பின்னால் தயாரிப்பாளர் என்னைத் தேடி வந்தார்.

ரோஸாவை மறுகட்டமைப்புச் செய்ய ஒரு தருணம் என்று நினைத்தேன். பாஸ் பைன்டருக்கு ஒரு அஞ்சலியாகவும் இதைச் செய்ய நினைத்தேன். பாஸ் பைன்டர் ஏற்கெனவே பீட்டர் மார்த்தஸீமர் படத்துக்காக ஒரு ஸ்கிரிப்ட் எழுதியிருந்தார். பைன்டர் அதில் நிறைய திருத்தங்கள் செய்திருந்தார். அதை நான் பார்த்தேன். இது பிறருக்காக வேறொருவர் செய்தது என்பதால் என் வழி நான் போகிறேன். இப்பெண்ணைப் பற்றிய என் பார்வையைச் சொல்ல விரும்பினேன். இப்படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுது வதற்கும் படப்பிடிப்பிற்கும் எனக்கு மூன்று வருடங்கள் ஆகின. பிற்பாடு பணப் பிரச்சினை வந்தது. முதலில் தயாரிப்பாளர் தன்னிடம் இருக்கிறதென்றார். பிற்பாடு அவரிடம் இல்லாது போயிற்று. பணத்தை நானே நிரப்ப வேண்டி வந்தது.

ஷீலா: ரோஸாவின் சொந்தக் கடிதங்களும் எழுத்துக் களும் எவ்வகையில் உங்களுக்கு உதவின? எந்த அளவுக்கு உங்கள் படத்துக்கு அது பொருந்துகிறது?

அவளது கடிதங்கள் ஐந்து பாகங்களாக இப்« பாது தொகுக்கப்பட்டிருக்கின்றன. 2500 கடிதங்கள். இவை எனக்கு முக்கியமானவை. அவரது அரசியல் எழுத்துக்கள் அறிவார்ந்தவை. நான் பலமுறை இவைகளை வாசித்தேன். நீங்கள் படித்திருப்பீர் களானால் உங்களுக்குத் தெரியும். அவளது மொழி அவளுக்கேயுரிய மொழி. படத்தில் அந்த விசேஷ மொழி இருக்க வேண்டுமென நான் விரும்பினேன்.

பீட்டர் மார்த்தஸீமர் ஸ்கிரிப்ட் குறித்த என் பிரதான விமர்சனம் இதுதான். ரோஸாவின் எழுத்துக் களினதோ அல்லது உரைகளினதோ ஒரு சொல்லும் அதில் இல்லை. அவர் பார்வையாளர்களுக்கு ரோஸாவின் பேச்சுக்கள் புரிந்துகொள்வது மிகக் கடினம் எனக் கருதினார். ஆனால், அவளது ஆளுமை அவளது மொழியோடு இணைந்தது என நான் நினைத்தேன். வெறுமனே உங்கள் மொழியை

அவள் வாயில் திணிக்கமுடியாது. நீங்கள் இப்போது அவள் உரைகளில் கேட்கிற அனைத்தும் அவள் வார்த்தைகள்; ஆங்கிலத்தில் கொஞ்சம் குறைக்கப் பட்டிருக்கலாம். அவள் கவித்துவமான உணர்ச்சி பூர்வமான மொழியைப் பாவித்தாள். அவள் புரட்சிக் காரியாக மாறாதிருந்திருப்பாளானால் ஒரு நாவலாசிரியை யாகவோ கவியாகவோ வந்திருப்பாள்.

ஷீலா: ரோஸாவை மறு நிர்மாணம் செய்வது என்று சொன்னீர்கள். அது என்னவென்று சொல்ல முடியுமா? அதன் அவசியம் என்ன?

ஆமாம். ரோஸா பற்றி ஜெர்மனியில் இரு விதமான பார்வைகள் இருக்கின்றன. இவள் வெறுமனே கொடூரமான இரத்தவெறி பிடித்த ரோஸா என்னும் வலதுசாரி விமர்சனம். இடதுசாரி களின் பார்வையில் ரோஸா ஒரு அரசியல் தியாகி.

மாணவர்கள் அவளது படத்தை ஏந்தி ஊர்வலம் போனாலும் இவள் யாரெனத் தெரிந்திருக்கா தென்றே நினைத்தேன். 1970-இல் இவளது முகத்துடன் ஒரு தபால் வில்லை வெளியிடப்பட்டது. பல போஸ்ட்மேன்கள் அதைக் கையாள மறுத்தார்கள். பலர் கடிதங்களைப் பெற்றுக்கொள்ள மறுத்தார்கள். ஆகவே நான் நினைத்தேன்; ஜெர்மன் வரலாற்றில் இவள் மிக முக்கியமான பெண். உண்மையில் இவள் போலந்துப் பெண். போலந்து யூத இனத்தவள். அவளுக்கு மக்களோடு பேச இப்போது ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தேன். இப்படம் முழுமையானது அல்ல. யதார்த்தத்தில் அவளது வாழ்வின் ஒரு துளி இது. அவள் சிந்தனையின் ஒரு துளி. வெறும் இரண்டு மணி நேரத்தில் இத்துணை அற்புதமான ஆளுமையின் முழுப் பிரபஞ்சத்தையும் கொடுத்துவிட முடியாது.

நான் அவளது அரசியல் வாழ்வுக்கும் தனிமனித வாழ்வுக்கும் இடையில் சமநிலை பேண விரும்பினேன். பொது வாழ்வில் சொன்னதற்கேற்ப சொந்த வாழ்வை வாழ்ந்த மிகச் சில அரசியல்வாதிகளில் இவரும் ஒருவர். அரசியல்வாதிகள் பெரிய விஷயங்கள் பேசுவார்கள். அவர்கள் வாழ்வு முற்றிலும் மாறான தாயிருக்கும். ரோஸா ஆதர்ஷமாக வாழ்ந்தாள். அவளது சிந்தனையும் அவளது திட்டங்களும் அவளது சொந்த வாழ்விலும் நுழைந்தன.

ஷீலா: இந்தப் பாத்திரத்தை நடிப்பதற்கு நடிகை தேடுவதற்கு சிரமங்கள் இருக்கின்றனவென்று கேள்வி யுற்றோம். இது பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்.

நான் இப்படத்தில் நடிக்க உண்மையிலேயே ஜெர்மன் மொழி பேசுகின்ற போலந்து யூத நடிகையைத் தேடினேன். போலந்து சென்றேன். பல்வேறு நடிகைகள், இயக்குநர்களிடம் பேசினேன். எவரும் நடிக்க விரும்பவில்லை. போலந்தில் ரோஸாவை வெறுத்தார்கள். காரணம், அவர் ஒரு கம்யூனிஸ்டாயிருந்ததும் சர்வதேசியவாதியா யிருந்ததும் தான். சில நடிகைகள் அந்த வேடத்தில் நடித்தால் போலந்தில் தாங்கள் புறக்கணிக்கப் படுவோம் என நினைத்தார்கள்

ஒரு இயக்குனர் சொன்னார், ‘ஏன் நீ அவளை அந்தக் கால்வாயிலிருந்து மீட்க நினைக்கிறாய்? அவள் அங்கேயே கிடக்கட்டும் விடு’ என்று. அவர்கள் போலந்தின் இன்றைய நிலையிலிருந்து பிரச்சினையைப் பார்க்கிறார்கள் என்று புரிந்துகொண்டேன். அவர்கள் ரோஸாவை மாறுபடும் ஆளுமை என்று கருதப் போவதில்லை என்பதையும் உணர்ந்தேன். டேனியல் ஒல்ப்ரிக்ஸி லியோ ஜோகித்ஸ்கியாக நடித்த நடிகர் ஆரம்பத்தில் இப்படத்திற்கு எதிராக இருந்தார். நாங்கள் ரோஸாவைப் பற்றிப் பேசப் பேச நடிக்கத் தொடங்கி அவர் மிக ஈடுபாட்டோடு நடித்தார். போலந்துக்கு இப்படம் கொணரப்பட்டு விவாதிக்கப் பட முடியாது என்றார். ஆகவே என்னால் நடிகையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் மறுத்தது மட்டுமல்ல, என்னால் சரியான நடிகையையும் காண முடியவில்லை. நான் உடலளவிலும், முகத்திலும் ரோஸாவை ஒத்திருக்க வேண்டும் என நினைத்தேன். ஒன்று அமைந்தால், ஒன்று அமையவில்லை. நான் பார்பரா சகோவாவைப் பிறகு தேர்ந்தேன். ரோஸாவைப் போல பார்ப்பதற்கு இருக்க மாட்டார். ஆயினும் ரோஸாவின் உணர்ச்சியும் குணச்சித்திரமும் கொண்டவர். நடவடிக்கையிலும் ஆட்களை வென்றெடுப்பதிலும் ரோஸாவைப் போன்ற பேச்சாற்றல் கொண்டவர். நான் ஏற்கெனவே அவரோடு வேலை செய்திருந்தேன். ஜெர்மனியில் அப்போது நிலவிய அரசியலில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டவர் அவர். நான் அவரை இப் பாத்திரத்தைச் செய்யுமாறு கேட்டுக் கொண்டேன்.

பார்வையாளர்: எப்போதேனும் இதை கறுப்பு - வெள்ளை யிலேயே செய்ய வேண்டுமென நினைத்தீர்களா?

இல்லை நான் கறுப்பு - வெள்ளைப்படமொன்று செய்ய நினைத்தேன். ஆனால் அது வரலாற்று ரீதியான படமல்ல. அது எனக்கு மிக அவசியமென்று பட்டது. கறுப்பு - வெள்ளையில் எடுத்தால் அது விவரணப்படம் மாதிரி. இப்படம் விவரணப்படம் என பாசாங்கு செய்ய நான் விரும்பவில்லை. இது புனைவு. இது மிகுந்த ஆதாரத் தன்மை வாய்ந்தது. ஆனால் இப்போதும் இது புனைவுதான்.

பார்வையாளர்: ரோஸாவின் கொலைக்கு யார் காரணம்? அதிகாரத்திலிருந்த அரசா அல்லது சோசல் டெமாக்ரட்டுக்களா?

ரோஸாதான் என்னளவில் பாஸிசத்தின் முதல் பலி. ரோஸாவைக் கொன்றவர்கள்தான் இறுதியில் பாஸிஸ்ட்டுகளானார்கள்; ஹிட்லரின் அடியற்றியவர் களாகிறார்கள். சோசல் டெமாக்ரட்டுக்கள் பதவிக்கு வந்ததன் காரணம் வலதுசாரி இராணுவ ஜெனரலுடன் பார்ப் முதலாம் உலகப் போரில் ஜெர்மனி தோல்வி யுறும் எனக் கருதினார். அவர் பொறுப்பெடுக்க விரும்பவில்லை.

உங்களுக்குத் தெரியும். ஜெர்மனி அமெரிக்கா வுடன் சமாதான உடன்படிக்கை செய்தது. இராணுவம் சோசல் டெமாக்ரட்டுக்களின் மீது பழிபோட விரும்பியது. யுத்தத்தில் சோசல் டெமாக்ரட்டுக்கள் தோல்வியுற்றார்கள் என்று காட்ட விரும்பியது. வலதுசாரி சோசல் டெமாக்ரட்டுக்கள் எபர்ட் மற்றும் ஸ்கீட்மேன் இறுதியில் தாங்கள் அதிகாரத்தில் இருப்பதில் பெருமிதமுற்றார்கள். ஆனால் அவர்கள் புரட்சிகரமானவர்களல்லர்; ஏற்கெனவே முதலாளித்துவ வாதிகள்.

காரல் லீப்னெட்டும் ரோஸாவும் அவர்களுக்கு ஆபத்தானவர்கள். இவர்களுக்கு ரோஸா, லீப்னெக்ட் கொல்லப்படுவது தெரியும். ஆனால் அதில் அவர்கள் தலையிடவில்லை. கொலை வலதுசாரி இராணுவ அதிகாரிகளாலும் போர்வீரர்களாலும் செய்யப்பட்டது. எபர்ட் இதை அறிவார். சோசல் டெமாக்ரட்டுக்கள் தான் கொலையின் பொறுப்பாளிகள்.

பார்வையாளர்: அவர்களோடு உங்களுக்கு நல்ல உறவு இருக்காது. அப்படித்தானே?

இல்லை. இது வெறுமனே வரலாறு. அதற்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லையென நினைக்கிறார்கள்.

பார்வையாளர்: இந்தப் படம் பற்றி அவர்களிடமிருந்து ஏதேனும் விளைவுகள் வந்ததா?

எதிர்விளைவேதேனும் வந்ததென எனக்குத் தெரியாது. ஆனால் சோசல் டெமாக்ரட்டிக் கட்சியின் முக்கியமான பழைய பத்திரிகை விமர்சகர் இந்த இரத்தக்கறைக்குப் பொறுப்பாக எபர்ட் விசாரணைக் குட்படுத்தப்பட வேண்டும் என எழுதி யிருக்கிறார். எபர்டுக்கு ரோஸா கொல்லப்படுவது தெரியும். ஸ்மித்தும் ஸ்டெம்மீம் சிறையில் சுட்டுக் கொல்லப் பட்ட நால்வர் பற்றித் தெரியும். ஆனால் இவர்கள் கண்டுகொள்ளவில்லை என எழுதினார். இது வெறுமனே ஊகம்தான். ஸ்மித்தின் பங்கு என்ன? ஸ்மித் கோபம் கொண்டார். அந்த விமர்சகரும் பத்திரிகை ஆசிரியரும் தூக்கியெறியப்பட்டார்கள். இது எதிர்விளைவு தானே?

பார்வையாளர்: இந்தப் படத்திற்கு நிதி திரட்டுவதில் நீங்கள் அடைந்த துன்பங்கள் என்ன?

எனது எல்லாப் படங்களுக்குமே நிதி எப் போதும் பிரச்சினைதான். எப்படியோ கடைசியில் கிடைத்துவிடும். ரோஸா தான் இன்றளவும் நான் அதிக செலவு செய்து எடுத்த படம்.

பார்வையாளர்: பெண் நிலைப்பாடு என்னும் பிரச்சினையை உங்கள் பெண் பாத்திரங்களில் -  குறிப்பாக, ரோஸா படத்தில் எவ்வாறு கட்டமைக்கின்றீர்கள்? பொதுவான அரசியல் அர்த்தத்தில் ஜெர்மனியின் பின்னணியில் இதைக் கொஞ்சம் விளக்குங்கள்.

உண்மையில் ரோஸா தன்னை ஒரு பெண்நிலை வாதி என்று கருதிக்கொள்ளவில்லை. அவர் வழியில் அவர் அவ்வாறுதான் இருந்தார் என்று நான் நினைக் கிறேன். அவள் குழந்தைகள் வேண்டுமென்றாள். ஜோகித்சேயுடன் காதலும் திருமணமும் வேண்டு மென்றாள். அதே சமயம் ஒரு அரசியல் ஜீவியாகவும் அவள் வாழ விரும்பினாள். என்னளவில் இது முக்கியமான விடயம் என்று நான் நினைக்கிறேன். வீட்டுக்கும் சொந்த உறவுகளுக்கும் வெளியில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள விரும்புகிற, செயல்பட விரும்புகிற ஒவ்வொரு பெண்ணுக்கும் இது முக்கியம்.

ரோஸா இவை இரண்டையும் விரும்பினாள். இதில் மிகுந்த நியாயமுள்ளது. ஆனால் அந்த ஆண் அவளது நிலைக்குச் சிந்திக்க முடியவில்லை. அவள் ஒரு புரட்சிக்காரி என்று மட்டும்தான் அந்த ஆண் ஒப்புக் கொள்கிறான். ‘உனது கருத்துக்கள்தான் உனது குழந்தைகள்’. இந்தச் சம்பவம் அவளது வாழ்வில் திருப்புமுனையானது என்று நான் நினைக்கிறேன். அவள் தனது மேஜையில் பூனையோடு உட்காரும் போது அது மிகக் கொடுமையாக, துயரமாக இருக்கிறது. அவள் விரும்பிய குழந்தைக்குப் பிரதியீடு அந்தப் பூனை. ரோஸாவை தனிப்பட்ட முறையில் அறிந்த ஒரு பெண்னை நான் சந்தித்தேன். அவருக்கு இப்போது 92 வயது. ரோஸா சோசல் டெமாக்ரட்டிக் பாடசாலையில் வகுப்பெடுத்தபோது பெர்லினில் ரோஸாவின் மாணவி இப்பெண். அவள் தான் ரோஸா பூனையோடிருந்த இச்சம்பவத்தைச் சொன்னாள்.

இது அவளைப் பற்றி எழுதப்பட்ட எந்த வாழ்க்கை வரலாற்றிலும் இல்லை. வரலாற்றாசிரியர்களுக்கு இது ஒரு சம்பவமே அல்ல! அப்பெண் சொன்னாள் ஒருமுறை ரோஸா அவளை உணவருந்த அழைத் திருக்கிறாள். அவள் சென்றபோது ரோஸா வீட்டு மேசையில் மூன்று தட்டுகள் இருந்தன. அப்பெண் நினைத்தாள். மூன்றாவது தட்டு அவ்வீட்டு தாதிப் பெண்ணுக்கென. ஆனால் அந்தத் தட்டு பூனைக்கு. அந்தப் பூனை வளர்ச்சியடைந்த பெரிய மனிதன் போல் மேஜையில் உட்கார்ந்து மிகச் சரியாகச் சாப்பிட்டது. நான் நினைத்தேன் அக்காட்சி ஒரு அசாதாரணமான சித்திரம். இந்தப் பெண் - மிக அற்புதமான ஆளுமையுள்ள அறிவுள்ள பெண். அந்தப் பூனையுடன் சமாந்தரமாக உட்கார்ந்து சாப்பிடுகிறாள்! இச்சம்பவம் அவளது தனி மனிதத் துயருக்கு ஒரு சாட்சி. நான் அதை படத்தில் சித்திரித்தேன். அந்தப் பூனையை அவ்வாறு நடந்து கொள்ளச் செய்வதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது.

பார்வையாளர்கள்: பெண்கள் புரட்சிக்காரர்கள் எனும் அளவில் ரோஸா சிறப்பாக எதையேனும் பிரதிநிதித்துவப் படுத்துகிறாளா?

நல்லது. எப்படி வாழவேண்டுமென அவள் சொன்னாளோ அதன்படி வாழ்ந்தவள் அவள் காலத்தில் ரோஸாதான். இது நிச்சயமாக பெண்ணின் வழமை என்று நினைக்கிறேன். சென்ற முறை ஜெர்மனியில் அரசியல் மாற்றம் வந்தது. தாராள வாதிகள் முதலில் இடதுசாரிகளோடு நின்றார்கள். பிற்பாடு சோசல் டெமாக்ரட்டுகளோடு நின்றனர். மறுபடி வலதுசாரிப் பக்கம் போயினர். அவர்கள் நோக்கம் அதிகாரம். ஆனால் தாராளவாதக் கட்சியின் உறுப்பினர்களில் அதிகாரத்துக்கெதிராக நின்றவர்கள் பெண்கள் மட்டும்தான். இதே மனோநிலையை நான் ரோஸாவில் காண்கிறேன்.

பார்வையாளர்: நீங்கள் அதிகமாக தனிநபர்களைப் பற்றி அக்கறைப்படுகிறீர்களா? அல்லது அரசியல் பற்றியா?

தனிமனிதர்களுக்கும் அரசியலுக்குமிடையில் என்ன வித்தியாசம் என்று கேட்கிறேன்? நான் அதிக வித்தியாசத்தைப் பார்க்கவில்லை. நாம் குறிப்பிட்ட சமூக அமைப்பில் சித்தாந்தக் கட்டமைப்பின் பாதிப்பில் அதிகாரத்தில் கட்டுப்படுத்தப்பட்டவர்களாகவே வாழ்கிறோம். அதனால் பாதிக்கப்படவும் செய் கிறோம். ஆகவே நீங்கள் ஒரு தனி நபராயிருந்தால் உங்கள் குடும்பத்துக்குள் நீங்கள் பாதிப்புக்குள்ளா கின்றீர்கள். எனக்கு அதுவும் அரசியல் ரீதியானதுதான். அதுவும் எனக்கு காண்பிக்கப் படத்தக்க அரசியல் தான். எனது சில படங்களில் நான் வெளிப்படை யாக அரசியல் பேசுகிறேன். ரோஸா போல பிற படங்களில் தனிமனித உறவுகளைச் சித்திரிக்கிறேன். இவையனைத்தும் அரசியல் ரீதியிலானவைதான்.

பார்வையாளர்: பிரிட்டனில் ‘சிட்டி லிமிட்ஸ்’ பத்திரிகை ‘ரோஸா’ படம் ரோஸாவின் அரசியல் மதிப்பீடுகளை கீழாக மதிப்பிட்டிருக்கிறது என விமர்சித்திருக்கிறது. இன்றைக்கு ரோஸா பயனற்றவர் என்ற ரீதியில் உங்கள் படம் இருக்கிறது என்கிறது. நீங்கள் இதுபற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

நீங்களே தீர்மானியுங்கள். ரோஸா இன்றும் பொருத்தம் என்றே நினைக்கிறேன். சிறப்பாக அவரது இராணுவவாதம் பற்றிய, சமாதானம் மற்றும் யுத்தம் பற்றிய கருத்துக்கள் இன்று மிகப் பொருத்த மானவை. அவள் எழுதிக் குவித்திருக்கிறாள். 2 மணி நேரத்தில் என்ன சொல்லிவிட முடியும்? அது ஒரு முழு வாழ்வு! எல்லோரும் அவளை மறுபடி படிக்க வேண்டும். அதுதான் எனது படத்தின் நோக்கம். மனுஷியாக அவளில் ஈடுபாடு கொள்ள வைப்பது. அவள் கருத்துக்களில் ஈடுபட வைப்பது. பிறகு ஆழங்களுக்குள் சென்று அவள் சிந்தனைகளைப் பார்ப்பது. இதைத்தான் ஒரு படத்தில் செய்ய முடியும் என்று நான் நினைக்கிறேன்.

பார்வையாளர்: ரோஸா படத்தில் ரஷ்யப் புரட்சி பற்றி அதிகம் சொல்லப்படவில்லை. 1917 அக்டோபர் புரட்சிகூட குறிப்பிடவில்லை. 1905 புரட்சிகூட குறிப்பிடப்பட்டிருந்தது. ஒரு ஸ்பார்டகஸ் எழுச்சித் தோழர் பிரஸ்தாபிக்கப்படும் வரை 1917 புரட்சியாளர் பற்றி குறிப்பேதுமில்லை. ஏன் அதன் முக்கியத்துவம் படத்தில் இல்லை?

ரோஸா ரஷ்யப் புரட்சியை முதலில் போற்றினார். பிற்பாடு லெனின் மற்றும் தோழர்களின் எதேச் சாதிகார வகையிலான புரட்சி நடவடிக்கைகளால் ரோஸா அதை விமர்சித்தார். நான் இது தொடர்பாக சில காட்சிகளைப் படம் பிடிக்கவும் செய்தேன். ரஷ்யப் புரட்சி காண்பிக்கப்பட வேண்டுமானால் அதுபற்றி விவாதிக்க நிறைய இடமும் காலமும் விடப்பட வேண்டும். நான் ரோஸாவின் சிந்தனை களை ஜெர்மன் வரலாறு, ஜெர்மன் புரட்சி என்ப வற்றோடு வரையறைக்கு உட்படுத்திக் கொள்ள விரும்பினேன். ஆனால் அதிலும் முழுமையாக என்னால் காண்பிக்க முடியவில்லை. ஏனெனில் ஜெர்மன் புரட்சி மிகுந்த சிக்கல்களைக் கொண்டது.

நான் இரண்டு மாதம் ஒருநாள் நிகழ்ச்சிகளை மட்டும் படத்தில் சொல்ல முயன்றேன். நான் இதைத் தீர்மானிக்கக் காரணம் ஜெர்மன் புரட்சி ரோஸாவுக்கு மாபெரும் நம்பிக்கை தந்தது. ஜெர்மனிக்கு அவள் திரும்பக் காரணம் அதுதான். அவள் வந்தபின்தான் கண்டாள் : ஜெர்மன் சோசல் டெமாக்ரட்டிக் கட்சி சீர்திருத்தவாதிகளுக்கு பிற்போக்குக் கட்சியென்று. அவள் ஜெர்மனியில் இருந்த வாழ்நாள் முழுவதும் இந்தப் போராட்டம் தான் அவளது வாழ்வின் முக்கியக் குறியாக ஆனது.

பார்வையாளர்: உங்கள் பொருளாதார வரை யறைக்குள் எவ்வாறாக நீங்கள் ரோஸாவில் இத்தனை உள்ளார்ந்த விசயங்களைக் காட்ட முடிந்தது? எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

இல்லை. இது பொருளாதாரம் சம்பந்தமான பிரச்சினை இல்லை. அது என் தேர்வு. நான் ரோஸாவின் இரு பக்கங்களையும் காண்பிக்க விரும்பினேன்.

பார்வையாளர்: உங்களது நான்கு படங்களும் இறுதியில் நம்பிக்கையைக் கொடுத்தன. ரோஸாதான் அந்த மாதிரி இல்லாத முதல் படம். ‘ரோஸா’ படம் அவநம்பிக்கையைத் தரும் படம் என்று நீங்கள் கருதுகிறீர்களா?

அப்படியானால் சரி அதுதான் வரலாறு! அது சோகமான முடிவுதான். நிஜத்தில் வேறு வகையில் அதை நான் காட்டியிருக்க முடியாது.

அந்த விஷயம் ரோஸா மூன்று முறை கொல்லப் படுகிறாள். அது எனக்கு மிக முக்கியமானது. எல்லா தேவதைக் கதைகளிலும் ஜெர்மன் கதைகளிலும் எப்போதும் இந்த மந்திர எண் மூன்று இருக்கும். ஏதாவது நிஜமாக வேண்டுமானால் இதை நீ மூன்று முறை செய்ய வேண்டும். இங்கே ரோஸா கொல்லப் படுகிறாள். மூன்று முறை கொல்லப்படுகிறாள். முதலில் சுடுகிறார்கள். மறுபடி சுடுகிறார்கள். மூன்றாம் முறை கால்வாயில் எறிகிறார்கள்.

நிஜமாக அவர்கள் அவளை மூன்று முறை கொல்கிறார்கள். எத்தனை பயம் அவர்களுக்கு - இந்தச் சின்னப் பெண்ணைக் கண்டு! உடலளவில் பலவீனமான இப்பெண்ணைக் கண்டு எத்தனை பயம் அவர்களுக்கு! அவள் கருத்துக்கள் அவர்களுக்கு பயமூட்டின. அது அசலான ஜெர்மன் நடவடிக்கை. அதுதான் முடிவு. பிற்பாடு கால்வாயைப் பாருங்கள். அது ஆடிக் கொண்டே இருக்கிறது இன்று வரை. எனக்கு அந்தக் கடைசி பிம்பம் உண்மையில் வரலாறு. அது ஓடிக் கொண்டே இருக்கிறது. வரலாற்றின் துளியாக ஓடிக் கொண்டே இருக்கிறது. அது நமக்கும் வரலாம். அவளைப் போன்ற வேறொருவரும் அவள் மாதிரியே கொல்லப் படலாம் என்று நான் நினைக்கிறேன்.

பார்வையாளர்: நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். சோகமான முடிவு எப்போதும் அவநம்பிக்கை தர வேண்டுமென்றில்லை. ரோஸாவின் வாழ்வும் எழுத்தும் நமக்குச் சொல்வது இதுதான். அவளது கருத்துக்களும் புரட்சியும் எப்போதும் தோல்வி யுறாது. நாம் இந்த உணர்ச்சியோடு போனோமானால் இது உனக்குச் செயல்பட உதவும்.

அதுதான் உண்மை. வரலாற்று நிகழ்வுகளின்படி இது அவநம்பிக்கை தரும் முடிவு. ஆனால் அவள் குணம், அவள் அணுகுமுறை, அவள் பொறுமை, அவள் வீரம், அவளது வரலாற்று நம்பிக்கை. அது நம்பிக்கை தரத்தக்கது. அவள் தன்னளவிலும், வரலாற்றுக்கும் மிகப் பொறுமையாய் இருந்தாள். இப்போது இரண்டொரு வருடங்களில் கருத்துக் களையும் பொருட்களையும் வேகமில்லையென்றால் வீசிவிடுகிறோம். அவள் அப்படியில்லை. அவள் தனது நம்பிக்கையைத் தூக்கியெறியவேயில்லை. அதோடு வாழ்நாள் சிறையில் கொல்லப்படுகையிலும் இது முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.

பார்வையாளர்: எனக்குத் தெரியவில்லை. ஆங்கில மொழியாக்கத்தில் ஏதேனும் குறைபாடு இருந்திருக் கலாம். படத்தில் ஆரம்பத்தில் ரோஸா லக்ஸம்பர்க் ஒரு பஸிபிஸ்ட் என்று குறிப்பிடப்படுகிறாள். ரோஸா இராணுவத்திற்கு எதிரானவர்தான். புரட்சிகர யுத்தத்திற்கு எதிரானவரல்லர். ரோஸா லக்ஸம்பர்க் அமைதி வழிக்கு உறுதி பூண்டவர் என்று நான் கருதவில்லை. புரட்சிகர இயக்கத்தில் ஆயுதம் பயன்படுத்தக் கூடிய அவசியம் வருமானால் அதற்கு உறுதி பூண்டவர் ரோஸா. உங்கள் படம் அதி அற்புத மானதும் அழகானதும் உணர்ச்சி பூர்வமானதும் என்று நான் கருதுகிறேன். ஆனால் ரோஸாவை ஒரு பஸிபிஸ்ட் ஆகச் சொல்வதன் மூலம் நீங்கள் தவறிழைக்கின்றீர்கள் என்று நான் கருதுகிறேன்.

நீங்கள் சொல்வது சரி. பசிபிஸ்ட் என்னும் பதம் சரியாகத் தேர்வு செய்யப்படாத வார்த்தை தான். அவரது நோக்கம் பாட்டாளி வர்க்கப் போராட்டமே. அதே சமயம் வன்முறைக்கு எதிரானவர். பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தை வென்றெடுப்பதற்கான பலம் பெற்ற சூழலிலேயே இரத்தச் சிந்துதலற்று அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமென்று அவர் விரும்பினார். அது அவரது சொற்களிலேயே இருக்கிறது. ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்புக்கு எழுதிய கட்சி அறிக்கையில் இதை அவர் குறிப்பிடுகிறார். லீப்னெட்டுக்கும் இதை உறுதி செய்கிறார். தமது நோக்கம் வன் முறையோ இரத்தம் சிந்துதலோ அல்ல என்கிறார்கள் அவர்கள். 1918 ஆம் ஆண்டு புரட்சிக்கான சூழல் இல்லையென்று சொல்லி எழுச்சியை நிராகரித்த ரோஸா அச்சமயத்தில் இரத்தக்களறி நடக்கும் அதிகாரத்தை வெல்ல முடியாது என்பதால் “நாம் காத்திருப்போம்” என்கிறார்.

நான் நினைக்கிறேன், அவரது வாழ்வின் இறுதிக் காலத்தில் அவளுக்கிருந்த மிகப்பெரும் பிரச்சினை அதுதான். அதிகாரம் எடுத்துக் கொள்ளப்படும்போது இரு தரப்பிலும் மனிதர்கள் கொல்லப்படுவார்கள். அவள் விலங்குகளை நேசித்தாள். மலர்களை நேசித்தாள். இரத்தம் சிந்தும் புரட்சியோடு இவை களை அவளால் இணைக்க முடியவில்லை. இதுதான் என் பிரச்சினை. இது எனது வியாக்கியானமாகவும் இருக்கலாம். ஆனால் அது ஆவணப்படுத்தப் பட்டிருக்கிறது. அவளது வாழ்வின் இறுதி இரு வாரங்களில் ஒவ்வொரு நாளும் பலமுறை அவள் மயங்கி விழுந்தாள். நான் இதைக் காண்பிக்கிறேன். அச்சமயத்தில் அதை அவள் உணர்ந்திருக்கிறாள். முழு மனித குலத்தையும் இயற்கையையும் நேசிக் கிறோம். அதே சமயம் இரத்தம் சிந்தும் அரசியல் போராட்டத்திலும் நாம் பங்கு பெறுகிறோம்.

பார்வையாளர்: ஆனால் அவசியம் என்று வருகிற போது ஆயுதப் போராட்டத்தை அவள் விலக்கி விடவில்லை.

இல்லை இல்லை. ஒருபோதும் அறிவுப் பூர்வமாக அல்லது அவள் எழுத்துக்களில் அவ்வாறு சொல்லவில்லை. ஆனால் உங்களுக்குத் தெரியும். ஒரு காலத்தில் அவள் தன் பூனை ஒரு பறவையைக் கொன்றதைப் பற்றிச் சொல்கிறாள். இதனால் இவளுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவள் மாத்திரைகளை விழுங்குகிறாள். அவள் பறவைகளை நேசித்தாள். அதேசமயம் தன் பூனையையும் நேசித்தாள். நீங்கள் அந்தக் கடிதத்தைப் படிக்க வேண்டும். அது மிக மிக உணர்ச்சி செறிவானது. இது அவள் குணச்சித்திரத்தின் ஒரு பக்கம்.

அதிகாரத்தை ஆயுதங்கள், போராட்டங்கள் மூலம் எடுத்துக் கொள்ள வேண்டுமென அவள் நினைத்தாள். மறுபுறம் அதிகாரத்தை வென்றெடுப் பதற்காக மனிதனைக் கொல்வதை அவளால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. நீங்கள் உத்வேகமிக்க புரட்சிக்காரனாக இருக்கவேண்டும் என்கிறார். அதே சமயம் புரட்சியில் கவனப்பிசகாக ஒரு பூச்சியைக் கொல்வதைக் கூட குற்றம் என்கிறாள் அவள்.

பார்வையாளர்கள்: நான் மிக ஆச்சரியப்பட்டேன். ரோஸா சக சிறைக் கைதியான பெண்களோடு கலந்து கொள்ளவே இல்லை. அவள் கருத்துக்களை அவர்களோடு பகிர்ந்து கொள்ள அது மிக நல்ல சந்தர்ப்பமாயிருந்திருக்கும்.

அவளால் முடியாது. ஏனெனில் அவள் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டிருந்தது தான்.

பார்வையாளர்: ஓ அப்படியா-நான் ரோஸா அவ்வாறு தேர்ந்து கொண்டிருந்தாள் என்று நினைத்தேன்.

இல்லையில்லை... அப்படியில்லை. அவள் உண்மையான அரசியல் கைதி இல்லை. அரசியல் அல்லது சமூகக் குற்றத்திற்காக அவர் சிறையில் அடைக்கப்படவில்லை. யுத்தத்திற்கு எதிராக பேசுவதைத் தடை செய்வதற்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். ஆகவே அவளை அவர்கள் தனிமைப்படுத்தி வைத்திருந்தார்கள்.

பார்வையாளர்: ரோஸா படத்தின் இசை அழகானது. இசையமைப்பாளர் நிக்கோலாஸ் எக்கோனமுடன் பணியாற்றிய அனுபவத்தைச் சொல்லுங்களேன்.

ரோஸா, நானும் அவரும் சேர்ந்து வேலை செய்யும் மூன்றாவது படம். நான் மறுபடி மறுபடி நிக்கோலாவிடம் சொன்னேன். நீ ஒரு முகாரி இசையை அமைத்துக் கொடு. என்னளவில் இப்படம் எனக்கு மரணத்தின் சோக இசை. நான் படப் பிடிப்பில் இருந்தபோது இசை மேதை வெர்டியின் சோக இசையை நினைத்துக் கொண்டேயிருந்தேன். எனக்கு ரோஸா படம் அரசியல் நடவடிக்கைகள் பற்றிய சித்திரம் என்பதை விடவும் மரணமுற்ற பெண்ணின் மனப்பதிவாகவே இருந்தது. ஆகவே எனது மனப்பதிவை இசையில் தெளிவாக வெளிப்பட வைத்தேன். நீங்கள் அதை உணர்ந்தீர்களா எனக்குத் தெரியாது. நான் அப்படித்தான் அர்த்தம் கொண்டேன்.

பார்வையாளர்: கிளாராஜெட்கின் ரோஸா நட்புபற்றி என்ன கண்டுபிடித்தீர்கள்? அது விசேடமான நட்பா?

ஆம் ரோஸாவுக்கு இரண்டு ஆத்ம சிநேகிதிகள் உண்டு. லூயிஸா காவுட்ஸ்கி மற்றும் கிளாரா ஜெட்கின். காவியநயமான நட்பு அவர்களுடையது. கிளாரா ரோஸா நட்பு தோழமை பூர்வமானது ஒன்றுபட்டுப் போராடியவர்கள் இந்த இரு பெண்கள். ரோஸாவைச் சுற்றிய எல்லாப் பெண் களுமே உண்மையில் அவர்கள் ஆளுமைக்கு குறை வான வகையிலேயே சித்திரிக்கப்பட்டிருக்கிறார்கள். நான் பிறருக்குச் சரியாக நியாயம் செய்யவில்லை என நினைக்கிறேன். கிளாரா ஜெட்கின் அவரளவிலே உறுதியான ஆளுமையுள்ள முக்கியமான பெண்மணி.

பார்வையாளர்: ரோஸா லக்சம்பர்க்கின் புகழ்வாய்ந்த ஒரு வாசகத்தை விட்டுவிட்டு படம் செய்திருப்பதைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். அது ‘சுதந்திரம் என்பது எப்போதுமே மற்றவரின் சுதந்திரம்!’

ஆமாம் அது புகழ் பெற்ற வாசகம். நான் ஒரு காட்சியும் படம்பிடித்தேன். கடைசியில் நீக்கி விட்டேன். ரோஸா பற்றி எல்லோருக்கும் தெரிந்தது அந்த ஒரு வாக்கியம்தான். ஆகவே அதை நான் எடுத்துவிட்டேன்.

பார்வையாளர்: வேண்டுமென்றே செய்தீர்களா?

வேண்டுமென்றே செய்தேன். வேண்டுமென்றே எடுத்தேன். (சிரிக்கிறார்)

பார்வையாளர்: உங்கள் Friends and Husbands படத்திலும், German Sisters படத்திலும் நிறையக் கனவுகளும் மிதப்பு மனநிலைகளும் அதிகம் சித்தரிக்கப்பட்டிருந்தன. ஏன் ரோஸா படத்தில் கனவுகள் இல்லை?

ஆமாம். நான் அதை ஒப்புக்கொள்கிறேன். வாழ்வின் யதார்த்தத்தில் ஒரு பகுதியைத்தான் நீங்கள் நடைமுறையில் வாழ்கிறீர்கள். இதனோடு சேர்த்து உங்கள் சிந்தனைகள், உங்கள் தரிசனங்கள், உங்கள் கடந்த காலம், உங்கள் கனவுகள். என்னளவில் இவை யாவும் ஒரு தரத்திலானவை தான். ஏன் ரோஸாவில் கனவுகள் இல்லையென்று கேட்பது நியாயம்தான். ரோஸா ஒரே ஒரு கனவைப் பற்றித்தான் குறிப் பிட்டிருக்கிறாள். கனவுகள் பற்றி அவ்வளவு கவனங் கொள்ளவில்லை ரோஸா. ஆகவே நான் கொஞ்சம் கனவுகளைக் கண்டுபிடிக்க விரும்பவில்லை.

பார்வையாளர்: ஐரோப்பாவில் பெண்களின் படத் தயாரிப்பில் ஏற்படும் அனுபவங்கள் எம்மாதிரி யானவை? குறிப்பாக, இம்மாதிரி அரசியல் படங்கள் இன்றைய தினம் எடுக்கப்படும் போது என்ன பிரச்சினைகள் வருகின்றன?

எனது சக ஆண் இயக்குனர்களோடு ஒப்பிடப் படும்போது நான் மிகுந்த சிரமங்களை அடைய வேண்டியிருக்கிறது.

ரோஸா புரட்சிக்காரியாகவும் இருக்கிறாள் என்பதனால் மட்டும் தாக்கப்படவில்லை; அவள் பெண்ணாகவும் இருந்ததால்தான் கட்சிக்குள் அவளுக்கு பல நெருக்கடிகள் இருந்தன. அவளது கோட் பாட்டுப் பங்களிப்புகள் ‘நரம்புத்தளர்ச்சி மார்க்சியம்’ என்று சொல்லப்பட்டது. அதன் அர்த்தம் என்ன வென்று தெரியுமா? ‘நரம்புத் தளர்ச்சி’ என்ற வார்த்தை ஆணுக்கு ஒருபோதும் உபயோகிக்கப் படுவதில்லை. எப்போதுமே கலகக்காரர்களா யிருந்தால் பெண்கள்தான் ‘நரம்புத் தளர்ச்சிக் காரர்கள்’! நான் இதைப் பற்றியெல்லாம் உணர்ந்து தான் இருக்கிறேன். But I don’t care.

பார்வையாளர்: உங்கள் படங்களில் பெண்களுக்கிடையிலான நட்பு தோழமை அதிகம் பேசப்படுகின்றது. German Sisters படத்தில் ஸ்வொட்டர்கள் பரிமாறிக் கொள்கிறார்கள். ஆதூரமாகத் தழுவிக் கொள்கிறார்கள். ஆறுதல் சொல்கிறார்கள்.

ஆம் ரோஸாவில் கூட ரோஸா துக்கத்தில் இருக்கும்போது தனது சினேகிதியின் தோள்களில் சாய்ந்துகொள்கிறாள். ரோஸாவின் ஒரு கடிதம் சொல்கிறது. அவள் மிகப் பலவீனமாக உணர்கிற போது லூயிஸாவிடம் சென்று ஒரு குழந்தை மாதிரி அவள் தோள்களில் வீழ்ந்து விடுவாள். லூயிஸாதான் ரோஸாவின் அந்தரங்கச் சினேகிதி. எனக்கு இந்த நிமிடங்கள் தான் மிக முக்கியமானவை.

பார்வையாளர்: நான் சமீபத்தில் எங்கேயோ வாசித்தேன். நீங்கள் ரோஸாவை உருவாக்க மிகச் சிரமப்பட்டிருக்கிறீர்கள். பல்வேறு சந்தர்ப்பங்களில் தயாரிப்பை விட்டு விடலாமென்றும், நிறுத்திவிடலா மென்றும் நினைத்ததாகக் கூடப் படித்தேன். இப்படத்தை உருவாக்கியதன் மூலம் நீங்கள் ஏதேனும் கற்றுக் கொண்டீர்களா?

எனக்குத் தெரியாது. என்னளவில் நான் என்னைப் பற்றி ஏதேனும் கற்றுக் கொண்டேனா தெரியாது. ஆனால் ரோஸா பற்றி நிறையக் கற்றுக் கொண்டேன். அவளைப் போன்ற பொறுமை எனக்கில்லை. மேலாக நான் அதிகத் தன்னிரக்கம் கொண்டவள். தன்னிரக்கம் இல்லாமல் நானிருக்க வேண்டும் என்பதை நான் அவளிடம் கற்றுக் கொண்டேன்.

பார்வையாளர்: அரசியல் ரீதியில் நீங்கள் நம்பிக்கைவாதியா?

இல்லை. வரலாறு பற்றியும் எதிர்காலம் பற்றியுமான அவநம்பிக்கைவாதி. இந்தப் புரிதல் ‘ரோஸா’விலும் இருந்ததென்று நான் கருதுகிறேன். ஆனால் ரோஸா அவநம்பிக்கைவாதியில்லை; நான் அவநம்பிக்கைவாதி. இது இப்படத்தில் கொஞ்சம் இருக்கிறது. அவருக்கு இந்தத் திட்டம் இந்தக் கொள்கைகள் எங்கும் நடைமுறைக்கு வரவில்லை. ஆகவேதான் ரோஸாவில் பேபலின் சொற்பொழிவை நான் பயன்படுத்தியிருந்தேன்.

இந்த நூற்றாண்டில் அவர் பார்த்தார். சொன்னார்: ‘பத்தொன்பதாம் நூற்றாண்டு எதிர்பார்ப்புகளின் நூற்றாண்டு. இருபதாம் நூற்றாண்டு சாதனைகளின் நூற்றாண்டு!’ நிஜத்தில் இந்த நூற்றாண்டு சாதனைகள் நிறைவேறவில்லை. அவர்கள் நிறைய நம்பிக்கைகள் கொண்டிருந்தார்கள். ரோஸா கொண்டிருந்தாள். ஆனால் எனக்கு இனிமேல் அத்துணை நம்பிக்கை இல்லை.

(இந்நேர்முகம் இலண்டன் Fourth Estate பதிப்பகம் வெளியிட்ட Talking Films (1991)  புத்தகத்திலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்டதாகும்.)

Pin It