the unknown saintவெயிலாந்திரத்தில் வாழ்க்கை அமைந்து விட்ட அரேபிய நிலம் அது.

போலீஸ் விரட்டுகையில் தப்பித்து ஓடி வரும் நாயகன் திருடிய பண பையை அந்த குன்றின் தலையில் குழி தோண்டி புதைத்து விட்டு அதை ஒரு பிண குழி போல பாவனைத்து விட்டு வெறும் ஆளாக போலீசிடம் மாட்டிக் கொள்கிறான்.

பிறகு சிறையில் இருந்து வெளி வரும் அவன் அந்த இடத்துக்கு ஆவலோடு வருகிறான். இனி கஷ்டம் தீர்ந்தது என்பது போல அவன் கண்களில் எதிர்கால ஒளி.

ஆனால் புழக்கத்தில் இருக்கும் மானுட நடுக்கம்... அவன் பணத்தை புதைத்து வைத்த இடத்தில் ஒரு கோயிலைக் கட்டி வைத்திருக்கிறது. ஒரு மேடெழும்பிய புதை குழியை சாமியாராக்கி அதன் மீது தங்கள் அறியாமையை கட்டி எழுப்பி அதை வழி பட்டு... இல்லாத ஒன்றை இருக்கும் எல்லாமும் சேர்ந்து உருவாக்கி... நிழலில் நிம்மதி தேடும் வறட்சியான மனங்களின் கூட்டு தான் அந்த கிராமம். நமக்கு மேலே ஒரு சக்தி எப்போதும் வேண்டும் என்று நம்பும் அடிமை மனோபாவ அறியாமை தான் அங்கே அவர்களை அந்த இல்லாத செயிண்ட்டை சொந்தம் கொண்டாட செய்கிறது. நம்மூரிலும் சாமி கண்ணில் பால் வடிந்ததாக ஒருமுறை கதை சுற்றியதே. அதே போக்கு தான். யாரோ எவனோ எதற்கோ சும்மா வேலையில்லாமல் கொளுத்தி போடுவது தான் பிறகு கொன்று தீர்த்துக் கொள்ளும் குலசாமியாக கூட ஆகி விடுவதெல்லாம்.

பகலில் மக்கள் வந்து போய் இருக்க இரவில் ஒரு கரெக்ட் ஆபீசர் தன் நாயோடு காவல் காக்கிறான். நோட்டம் விடும் நாயகன் ஊருக்குள் இருக்கும் விடுதியில் அறை எடுத்து தங்குகிறான். ஜன்னல் வழியே தெரியும் அந்த மலை கோயிலை ஆயிரம் அர்த்தத்தோடு பார்க்கிறான்.

"உள்ளே சாமியும் இல்ல பூதமும் இல்ல. என் பணம் தான்டா இருக்கு" என்பது தான் அவன் மனதில் ஊசலாடும் சொற்கள்.

ஒவ்வொரு இரவும் அங்கே வருவதும்.... பணத்தை எடுக்க முடியாமல் அல்லல் படுவதும்.... இரவு நேர காட்சியமைப்பில் மனதுக்குள் சிரித்துக் கொண்டே காணும்படியாக...அமைதியாக... திரைக்கதையில்... பாலைவனத்தில் ஒரு சோலை செய்திருக்கிறார்கள். விரக்தியும் அயர்ச்சியுமான மனிதர்களின் கூடாரமாக அந்த கிராமம் இருக்கிறது.

திருடுவதற்கு துணையாக வரும் நண்பன் அந்த குன்றின் வலது பக்கம் ஏறி கொண்டிருக்க... "உன்ன வலது பக்கம் தான ஏற சொன்னேன்... நீ ஏன் இடது பக்கம் ஏறிட்டுருக்க..?" என்று அலைபேசியில் நாயகன் கேட்க.... "நான் நீ சொன்ன பக்கம் தான் ஏறிட்டு இருக்கேன்" என்று திருட்டு நண்பன் சொல்ல.... அப்போது தான் நமக்கும் தெரிய வருகிறது. அவர்களை போலவே இன்னொரு திருடனும் இடது பக்கம் மலை ஏறி கொண்டிருப்பது. அவன் யார்... அவன் எதற்காக திருடுகிறான் என்பதெல்லாம் நிஜமான ப்ளாக் காமெடி.

ஊருக்கு புதிதாக வரும் மருத்துவரும் அவருக்கு துணையாக இருக்கும் உதவியாளர் பாத்திரமும் ஆளே இல்லாத ஊரில் யாருக்கு ஊசி போட காத்திருக்கிறார்கள் போல அது ஒரு தனி அத்தியாயம். உதவியாளராக வரும் மூப்பு பாத்திரம் இரவுகளில் செய்யும் அசட்டுத்தனம்... ஆகா ராகம். போர் அடிக்குது... என்ன பண்ண என்று சொல்லும் விளக்கம் ஏக ரகளை. எதிலும் ஈடுபாடு இல்லாத சோர்வுற்ற வறட்டு கிராம மக்கள்... செம்மண் புழுதியில் தீரா தூர பாலைவன அடுக்குகளின் வழியே வானத்தை பார்த்துக் கொண்டே கிடப்பது சொட்டு மழைக்கான சொப்பனம்.

இதற்கு நடுவே ஒரு அப்பாவும் பையனும்... அந்த மண்ணை உழுது ஏதாவது பசுமைக்கு வழி செய்து விட செய்யும் போராட்டம் தனி யுத்தாயுதம். அதுவும் தன் இடத்தில்... தன்னை மீறி யாருக்கோ கோயில் கட்டி இருப்பதை அந்த அப்பாவால் பொறுத்துக் கொள்ளவே முடிவதில்லை. ஒரு கட்டத்தில் கோயிலை இடிக்க கூட முயற்சிக்கிறார். தன்னளவில் இடிந்து போகும் திரைக்கதை தான் வாழ்வாய் அமைந்திருக்கிறது அவருக்கு. எப்போதும் ரேடியோவில் எதையாவது கேட்டுக் கொண்டே இருப்பது தான் அவரின் இருத்தலை உறுதிப்படுத்தும் சுயம். ஓய்வில்லாத உளைச்சலால்... சொந்த மண் மீது கொண்ட தவிப்பினால்... மரணம் கூட சம்பவிக்கிறது. மாற்றி யோசிக்கையில் மரணம் கூட தப்பி செல்லும் வழி தான் போல. இறந்த அப்பாவை ஊர் மக்கள் சிலரோடு சேர்ந்து மகன் தூக்கி கொண்டு போகும் காட்சி.... திரையில் இந்த பக்கம் நுழைந்து அந்த பக்கம் மறையும் வரை நடக்கும் ஒளி ஊர்வலம். அந்த சவ ஊர்வலத்தில் நாமும் கேமராவின் வழியாக கலந்து கொள்கிறோம். தூரத்து காட்சியில் எப்போதும் ஒரு மென் துக்கம் இருப்பதை உணர முடிகிறது. நகரும் ஓவியத்தை நாம் நகராமல் காண்கிறோம்.

இப்படி படம் நெடுகிலும்... ஒளிப்பதிவின் உற்சவம் நடக்கிறது. தேவை இல்லாத ஓர் அசைவு கூட கேமராவில் இல்லை. இலை அசையும் அளவுக்குத்தான் இசை அசைக்கிறது. இளம் வெயிலின் பரவலை... இளம் இருட்டின் நிரவலை... காட்சிக்கு காட்சி மடைமாற்றம் செய்திருப்பதில் அரேபிய பாலைவனத்தில் அரூபமாய் நாமும் திரிகிறோம்.

ஒரு நாளில் காலத்துக்குமான காத்திருந்த மழை வருகிறது. அந்த மகனோடு சேர்ந்து அந்த நிலத்தின் சூடு நனைந்தழ அந்த மழை போதுமானதாக இருக்கிறது.

நான் திருடன் தான். கொலைகாரன் கிடையாது என்று நாயகன் பேசும் வசனமாகட்டும். மருத்துவரின் உதவியாளன் கடவுளின் பெயர் பொறித்த பலகையை திருடி செல்வதாகட்டும்... படம் நெடுகிலும் மானுட ஆழ்மன சுய பரிசோதனைகள்.

ஊருக்கு பொதுவானது பார்பர் ஷாப். அங்கே நிகழும்... குறுக்கு நெடுக்குகள்.... ஊர் வம்புகள்... என்று அது ஒரு குட்டி அரசியல் மேடையை கண் முன் நிறுத்துகிறது. போல இருத்தலில் நிகழும் கூத்துகளின் வழியே அறியாமை... அவர்களின் ஆயுதமாக வியாபித்திருப்பதை சிரித்துக் கொண்டே உணர்கிறோம். எல்லா ஊர் பார்பர் ஷாப்பிலும் ரெண்டு வெட்டி ஆசாமிகள் ஒன்றுக்கும் ஆகாமல் பொழுதை கழிப்பார்களே... அப்படி இருவர் இந்த படத்திலும் இருக்கிறார்கள். மூப்பு பூத்த அவர்களை பார்த்தாலே சிரிப்பு தான்.

சுய பகடியில் சுய எள்ளலில் படம் ஒவ்வொருவரின் பாத்திரத்திலும் நிரம்பி வழிந்து ஒரு கட்டத்தில் கோயில் காக்கும் நாய் மீது வந்து நிற்கிறது.

பணத்தை எடுக்க விடாமல் தடுக்கிறதே என்று திருட்டு நண்பன் வேண்டுமென்றே ஏற்படுத்திய விபத்தால் பற்கள் உதிர்ந்து அடிபட்டு கிடக்கும் நாயை காப்பாற்ற... அதற்கு தங்க பல் கட்ட என்று அந்த காவலன் எடுக்கும் முயற்சிகள் - அவர்கள் சீரியஸாக செய்து கொண்டிருப்பார்கள். நாம் சிரித்து துவளுவோம். அதன் பிறகு கோழி ஆடு என எல்லாவற்றையும் கொண்டு வந்து மனிதர்களுக்கான மருத்துவமனை வாசலில் காத்திருக்கும் ஊர் மக்கள் என்று அறியாமையின் மேற்பரப்பில் வாழும் வெள்ளந்தி மனிதர்களின் கதை காட்சிக்கு காட்சி களேபரம் தான்.

மணல்வெளியின் சந்தன நிறம் நறநறக்க... வெயிலின் தகிப்பு கண்களில் மொறுமொறுக்கிறது. குறைவான வசனங்களோடு திருதிருவென நகர்கிறது காட்சி மொழி..

பெரும்பாலான சமயங்களில் சீரியஸான நடைமுறையில் மிக இலகுவாக ஒரு காமெடி நிகழ்ந்து கொண்டிருக்கும். அப்படித்தான் இந்த படம். நிறுத்தி நிதானமாக நின்று அமர்ந்து நகரும் படத்தில் எல்லா பாத்திரங்களுமே அவரவர் வேலையில் சீரியஸாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் அது இணைக்கப்பட்டிருக்கும் திரைக்கதையில் டார்க் காமெடி பளிச் பளிச் என மின்னுகிறது. குறிப்பாக அந்த நர்ஸ் பாத்திர வடிவமைப்பு... பழக்கமான ஒரு வாழ்க்கை முறையில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள செய்யும் முன் பின் ரூல்ஸ் மீறல். உண்மையில் மானுட மனம் குற்றங்களை விரும்பும் குரூரத்தில் ஒளிந்திருப்பவைதான். பலகீனங்களின் வழியே சுய திருப்தியை மேற்கொள்ளும் பரிசோதனைகளை அந்தரங்கம் நிகழ்த்திப் பார்த்துக் கொண்டே இருக்கும். அது தான் இங்கே நடக்கிறது.

ஒரு பக்கம் நாயகன் பணத்தை எடுக்க...போராடிக் கொண்டிருக்க.... ஒரு பக்கம் நிலத்தை மீட்டெடுக்க... அந்த மகன் போராடிக் கொண்டிருக்க... மருத்துவர் ஒரு பக்கம் நாயை காப்பாற்ற போராட... நர்ஸ் செய்யும் கோமாளித்தனம்... குண்டக்க மண்டக்க ஐடியா கொடுத்து சொதப்பும் நாயகனின் நண்பன்... பார்த்தாலே சிரிப்பு வரும் முடி திருத்துபவரின் சமயோசித பாவனை என்று படம்... உலகத்துக்கு ஒதுக்குப்புறமான ஒரு குக்கிராமத்தில் வெயிலும் மணலுமாக படு சீரியஸாக ஓடிக் கொண்டிருக்க... நாம் சிரித்துக் கொண்டே எங்கோ நின்றிருப்போம். எல்லாவற்றுக்கும் படக் படக்கென கூடி விடும் ஊர் மக்கள் உடைத்து பார்த்தால் பொக்கை என்பது போல சும்மா இருக்கிறார்கள். காரண காரியம் தேவையே இல்லை. ஒருவன் போனால் இன்னொருவனும் போவான். இப்படி முட்டாள்தனத்தில் இருக்கும் இன்னசென்ஸ் தான் கதையின் அடிநாதம்.

இறுதியில் என்ன தான் ஆனது. பணம் கிடைத்ததா. கோயில் என்ன ஆனது. நாய் பிழைத்ததா. தலைப்பில் இருக்கும் அந்த unknown saint யார்.... என்று ஒரு கிளாசிக் தன்மையோடு படம் முடிகிறது. செயின்ட்கள் வருவார்கள் தங்களையும் மீறி செய்ய வந்ததை செய்து விட்டு போய் விடுவார்கள். எது நடக்க வேண்டுமோ அது நடந்து கொண்டு தான் இருக்கும்.

Film: The Unknown Saint
Director: Alaa Eddine Aljem
Year : 2019
Language: Arabic

- கவிஜி

Pin It