யமுனா ராஜேந்திரன், அம்சவள்ளியோடு இணைந்து, உலக திரை இயக்குநர்கள் குறித்து நடத்திய உரையாடல்களின் தொகுப்புதான் 'உலக அரசியல் சினிமா பதினாறு இயக்குனர்கள்'. யமுனா ராஜேந்திரன் சிறந்த விமர்சகர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படங்கள் குறித்து தொடர்ந்து எழுதி வருகிறார். கடந்த ஆண்டு, 'பியூர் சினிமா' என்ற அமைப்பு, வாரம்தோறும் ஒரு குறிப்பிட்ட திரைப்படத்தை எடுத்துக்கொண்டு, இணையம் வழியாக உரையாடலை நடத்தியது. அந்த உரையாடல்களை 'பேசாமொழி' இணைய இதழின் ஆசிரியர் தினேஷ் நூலாக தொகுத்துள்ளார். இந்த நூல் சிறந்த 16 இயக்குநர்களின் படங்களைப் பேசுகிறது. மூன்றாம் உலக சினிமா குறித்த ஒரு கட்டுரையும் உள்ளது.

yamuna rajendran bookகாங்கோ நாட்டின் பழங்குடி மக்களை ஒன்று திரட்டி, பெல்ஜியத்தின் காலனியாதிக்கத்திற்கு எதிராகப் போராடி ஆட்சி அமைத்தவர் பட்ரிசியா லுமும்பா. இவரைப்பற்றி ராவுல் பெக் (Raoul peck) இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'லுலும்பா' (Lulumba). ஒரு தனியார் பல்கலைக்கழகத்தின் ஊடகத்துறையில் பேராசிரியராக இருக்கும் அம்சவள்ளி, இந்தப் படத்தின் காட்சிகள் குறித்து, அரசியல் குறித்து, தொழில்நுட்பம் குறித்து கேள்விகள் கேட்க, அதற்கு யமுனா ராஜேந்திரன் விளக்கம் அளிக்கிறார். கேள்வி- பதில் பாணியில் இந்த புத்தகம் உள்ளது.

200 ஆண்டுகால காலனி ஆதிக்கத்தை எதிர்த்த, மக்கள் போராட்டங்களின் விளைவாக அறுபதுகளின் இறுதியில், காங்கோவிற்கு விடுதலை வழங்க பெல்ஜியம் ஒப்புக்கொள்கிறது. ஆனால் பெல்ஜியத்தின் இராணுவம் தொடர்ந்து காங்கோவில் இருக்கும்; பெல்ஜியத்தின் அதிகார வர்க்கம் அங்கேயே இருக்கும்; பெல்ஜியத்தின் வசம் இருக்கும் சுரங்கங்கள் காங்கோ நாட்டிற்கு திருப்பித்தர மாட்டாது என்ற நிபந்தனையின் பெயரில் பெல்ஜியம் முதலில் விடுதலை வழங்குகிறது. தேர்தலில் போட்டியிட்டு தேர்வாகி பட்ரிசியா லுமும்பா ஆட்சி அமைக்கிறார். "இந்த சுதந்திரம் என்பது யாருடைய கருணையாலும் எங்களுக்கு தரப்படுவதில்லை. எங்களது சுதந்திரமான கல்விக்காக, சுதந்திரமான பொருளாதார கொள்கைக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம்" என்று சூளுரைத்தார். இதனால் கோபமுற்ற பெல்ஜியம் மன்னர் அமெரிக்காவுடன் சேர்ந்து இவரைக் கொலை செய்கிறார். கொலை செய்த பிறகு, இறந்த உடலை மூன்று நாட்கள் கழித்து தோண்டி எடுத்து, ரம்பத்தால் அறுத்து, கோடரியால் வெட்டி, முடிந்தவரை அமிலத்தில் கரைக்கின்றனர். அங்கிருந்த ஒருவன் லுமும்பாவின் இரண்டு விரல்களை வெட்டி எடுக்கிறான். பல்லை உடைத்து தன்னுடன் வைத்துக் கொள்கிறான். அந்த பல்தான் பிற்பாடு லுலும்பாவின் மகள் வசம் ஒப்படைக்கப்படுகிறது. 'லுலும்பா' ஒரு அரசியல் படம். உலகக் கலைஞர்களை, தத்துவவாதிகளை ஆதர்சம் செய்யும் புரட்சியாளர்களான ரோசா லக்சம்பர்க், சேகுவாரா ஆகியோருடன் லுமும்பாவும் இடம் பெறுகிறார். இது இந்த நூலின் இரண்டாவது கட்டுரை.

ஒவ்வொரு கட்டுரையின் தொடக்கத்திலும், இதன் தொகுப்பாளரான தினேஷ் படத்தின் கதைச்சுருக்கம், வெளியான ஆண்டு, இயக்குநர் இயக்கியுள்ள மற்ற படங்கள் பற்றிய குறிப்புகளைத் திரட்டிக் கொடுத்துள்ளார். எனவே வாசகர்களுக்குச் சுலபமாக புரிகிறது. உதாரணமாக ராவுல்பெக் 'the young Karl Marx' என்ற படத்தை (2017) இயக்கியுள்ளார்; லுமும்பா படம் வெளியான ஆண்டு 2000 என்பது போன்றத் தகவல்களை கொடுத்துள்ளார்.

இந்த நூலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்தியர் அபர்ணா சென்; பெண் இயக்குநர். இவர் புகழ்பெற்ற வங்காள இயக்குநரான சத்யஜித் ரேவிடம் நடிகையாக நடித்தவர்; பிறகு படங்களை இயக்குகிறார். இவர் இயக்கிய Mrs. and Mr. Iyer ஒரு முக்கியமான படம். அசாமில் இருந்து, சென்னை நோக்கி தன் கைக்குழந்தையோடு பயணிக்கும் ஒருத்தி, தனக்கு அடுத்த இருக்கையில் இருக்கும் முஸ்லிம் இளைஞனை மதவெறியர்களிடமிருந்து காப்பாற்ற, தன் கணவன் என்று கூறிவிடுகிறாள். எனவே பேருந்தில் இருக்கும் அனைவரும் இவர்களை கணவன்- மனைவி என்றே நம்பிவிடுகிறார்கள். பயணிக்கும் அந்தச் சில தினங்களில் அவர்களிருவரிடையே நிலவும் பரஸ்பர புரிதலும், நேசமும் ஓர் உணர்ச்சிக் காவியம். முதலில், முஸ்லிமான அவனிடம் தண்ணீர் வாங்கி குடிப்பதையே அசூசையாக நினைத்த ஒருத்தி, அவன் உயிரைக் காப்பாற்றுவதில் வெளிப்படுவது மனிதம் அன்றி வேறென்ன !

அபர்ணா சென் இயக்கிய 'காய்ரே பாய்ரே ஆஜ் '(வீடும் உலகமும் இன்று) என்ற படத்தைப் பற்றி இந்த நூல் பேசுகிறது. நோபல் பரிசு பெற்ற வங்காளக் கவிஞர் ரவீந்திர நாத் தாகூர் 1916 ல் எழுதிய 'வீடும் உலகமும்' என்ற கதையை மையமாக வைத்து 1984 ல் சத்யஜித் ரே ' இயக்கிய படம் 'காய்ரே பாய்ரே' (வீடும் உலகமும்). இந்தக் கதை இன்றைய காலகட்டத்தில் நடந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் 'காய்ரே பாய்ரே ஆஜ்'. வலதுசாரி சிந்தனையுள்ள ஒருவன், மலைக்கிராமம் ஒன்றில் கோவிலுக்குப் பதிலாக மருத்துவமனை கட்ட முற்படும் ஒருவனை கொலைசெய்து பழியை நக்சல்கள் மேல் போடும் கதை. தெளிவான சமகால அரசியல் நிலைப்பாட்டை இந்தப்படம் எடுக்கிறது. வலதுசாரி இளைஞனின் தலித் விரோத மனநிலையை, நண்பனை கொலை செய்வதை, நண்பனின் மனைவியோடு உறவு வைத்திருப்பதை இக்கதை பேசுகிறது. தாகூர், சத்யஜித் ரே என்ற இரு மேதைகள் கையாண்ட படைப்பை அபர்ணா சென் அற்புதமாக முன்னெடுத்துச் சென்றுள்ளார்.

அதேபோல எனக்குப் பிடித்த இன்னொரு திரைப்படம் ' the two popes'. கத்தோலிக்க மதத்தின் தலைமை குரு போப் ஆண்டவர். ஜெர்மனி நாட்டைச் சார்ந்த போப் ஆண்டவரிமிருந்து, அர்ஜென்டினா நாட்டைச் சார்ந்த போப் ஆண்டவர் பொறுப்பேற்றுக்கொள்கிறார். முன்னவருக்கு சிறுவர்களை பாலியல்ரீதியாக துன்புறுத்திய மதகுருமார்களை தண்டிக்காமல் விட்ட குற்றவுணர்ச்சி இருக்கிறது. அர்ஜெண்டினாவைச் சார்ந்தவருக்கு இலத்தீன் அமெரிக்க நாட்டில் புரட்சியாளர்கள் சர்வாதிகாரிகளால் படுகொலை செய்யப்பட்டதை மௌன சாட்சியாக பார்த்த குற்றவுணர்ச்சி இருக்கிறது. இதைப் போல பல அம்சங்களை 2019ல் பெர்ணாண்டோ மெரில்லஸ் இயக்கத்தில் வெளியான 'தி டூ போப்ஸ்' பேசுகிறது. இந்த இயக்குநர் 'the city of gods' என்ற படத்தையும் இயக்கியவர். ஒன்று அடிமட்ட மக்களைப் பேசுகிறது; வேறொன்று உயர்மட்ட பிரிவில் இருப்பவர்களைப் பேசுகிறது.

ரஷ்யப் புரட்சி பற்றி 'உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்' நூலை எழுதிய அமெரிக்க பத்திரிகையாளர் ஜான் ரீடின் வாழ்வைச் சொல்லும் 'ரெட்ஸ்' படத்தை (1981) அமெரிக்க இயக்குநர் வாரன் பெட்டி ( Warren Beatty) இயக்கியுள்ளார்.

இதே போல கிரேக்கத்தின் தியோ ஆஞ்சலோபெலோஸ், கோஸ்டா காவ்ரஸ், ஆஸ்திரியாவின் மைக்கேல் ஹெனகே, பிரான்சின் ழான் லுக் கோதார்த், உருகுவேயின் அல்வேரோ ப்ரெக்னர், இங்கிலாந்தின் ஆலன் பார்க்கர், பாலஸ்தீனத்தின் எலையா சுலைமான் போன்ற இயக்குனர்கள் குறித்து இந்த நூல் பேசுகிறது.

"கலைஞன் நிலவுகிற மதிப்பீடுகள், நிலவுகிற சமூக ஒழுங்குகள் ஆகியவற்றை அப்படியே ஒப்புக்கொள்ள இயலாது. உண்மையான கலைஞன் தான் நினைத்த, தான் கனவு காண்கின்ற சமூகம் தொடர்பாக பேச வேண்டும். நிச்சயம் அதற்கு தடைகளும் வரும். இடையூறுகளும் வரும். இந்த இடையூறுகளை மீற வேண்டிய 'மீறல்' குணமும் கலைஞர்களிடம் இருக்க வேண்டும்" என்கிறார் டென்மார்க்கை சேர்ந்த லார்ஸ் வான் ட்ரையர்( Lars Von trier). இவர் தன் படங்களில் அதிகமாக பரிசோதனை முயற்சிகளைச் செய்தவர். இவர் இயக்கிய 'Dancer in the Dark' என்ற படம் பேசப்படுகிறது. இதில் அமெரிக்கா எப்படி ஏழை மக்களை நடத்துகிறது என்று கூறுகிறார். இவர் Anti Christ, 2009, breaking the waves, 1996 படங்களையும் இயக்கியுள்ளார்.

இதிலுள்ள ஒவ்வொரு இயக்குநரும் எப்படிச் சிறந்தவர்கள், எதனால் இந்தப்படம் பேசப்படுகிறது போன்ற எண்ணற்ற தகவல்களை அருவி போல கொட்டி இருக்கிறார் யமுனா ராஜேந்திரன். இதிலுள்ள திரைப்படங்கள் பலவும் இணையதளத்தில் காணக் கிடைக்கலாம். கேள்வி கேட்கும் அம்சவள்ளி படத்தின் சிறப்பு பற்றி குறிப்பான கேள்வி கேட்கிறார் என்றால், அக்கால அரசியலை, அதன் பிறகான காலமாற்றத்தை, அந்தப் படம் எடுக்க வேண்டிய சூழ்நிலையை விவரிக்கிறார் யமுனா ராஜேந்திரன்.

தமிழ் சினிமாவின் செவ்வொளி இயக்குனர் ஜனநாதன் அவர்களின் நினைவுகளுக்கு இந்த நூலின் ஒரு பக்கத்தை ஒதுக்கியுள்ளனர்.

"ஒரு திரைப்பட உருவாக்கத்திற்கு முன்னும், பின்னுமான அரசியல் என அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு புத்தகமாக கொண்டு வர செய்த முயற்சிதான் இந்த நூல்" என்று அம்சவள்ளி/ தினேஷ் இதன் முன்னுரையில் குறிப்பிடுகின்றனர்.'மாற்றத்தை விரும்பும் பத்து பேர் கைகளில் இந்தப் புத்தகம் கிடைத்தாலும் மகிழ்ச்சியே' என்று இந்த நூல் பற்றிக் கூறுகின்றனர்; இந்த நூல் நமது ரசனை மட்டத்தை உயர்த்தும்.

பேசாமொழி பதிப்பகம், வடபழனி, சென்னை - 26/பக்கம் 566/ ரூ.620/ஜனவரி 2022.

- பீட்டர் துரைராஜ்

Pin It