ஓர் ஓடை, மலையிலிருந்து பாய்ந்தோடி வந்து கொண்டிருந்தது. அதன் கீழ்ப் பகுதியில் ஓர் ஆட்டுக்குட்டி தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தது. மேல் பகுதியில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த ஓர் ஓநாய், ‘ ஆடே.... நீ ஏன் நான் குடிக்கும் தண்ணீரைக் கலக்கிவிடுகிறாய்?’ என்றது. ‘அது எப்படி, கீழே நீர் அருந்தும் நான், மேலே இருக்கும் நீங்கள் குடிக்கும் நீரைக் கலக்கிவிட முடியும்?’ என்றது ஆட்டுக்குட்டி. நீ செய்யாவிட்டால் உன் அப்பன் செய்திருப்பான்’ என்று கூறி அந்த ஓநாய், ஆட்டுக்குட்டியை விழுங்கியது.
kaadu movie"நீ செய்யாவிட்டால் உன் அப்பன் செய்திருப்பான்’’ என்று கூறி, அந்த ஓநாய், ஆட்டுக்குட்டியை விழுங்கி விட்டது" - இது ஓர் ஈசாப் கதை. இதை அறியாதவர்கள் இருக்க முடியாது. ஆனால், அவ்வளவாகத் தெரியாத செய்தி ஒன்று உண்டு. ஈசாப் ஓர் அடிமை. அவர் கிறிஸ்து பிறப்பதற்கு 600 ஆண்டுகள் முன்பு கிரேக்க நாட்டில் வாழ்ந்திருந்தார். அவரால், ஏழைகளின் வாழ்வைச் சுரண்டிக் கொழுக்கும் ஆள்வோரின் கதையை இப்படி ஒளித்து மறைத்துத்தான் சொல்ல முடியும்.

ஆனால், இன்று கண்ணுக்கு முன்னால் நடக்கும் அத்தனை அநியாயங்களைக் கண்டு கொள்கிறோமா? பக்கத்து வீட்டுக்காரர்களுக்காவது உதவிக்கரம் நீட்டி உதவி செய்கிறோமா? அப்படி நம் மக்களிடையே சமூகச் சிக்கல்களைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க ஊடகங்கள் துணை புரிகின்றனவா ? அந்த வகையில் திரைப்படங்கள் எந்த அளவிற்குச் சமூகத்தில் விழிப்புணர்வை அதிகரிக்கின்றன? இவ்வாறு பல கேள்விகள் நமக்குள்ளே கேள்விக் கணைகளைத் தொடுக்கும் பொழுதில் 2014 ஆம் ஆண்டு வெளியான திரைக்காவியம் ஒன்றைப் பார்ப்போம். திரைப்படத்தின் தலைப்பு காடு.

திரைப்படம் – காடு :

இயக்குநர் ஸ்டாலின் அவர்கள் இயற்கை மற்றும் காட்டுவளத்தின் முக்கியத்துவத்தை மக்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் இப்படத்தை இயக்கியுள்ளார். இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதால், வன விலங்குகள் மனிதன் வாழ்கின்ற இடங்களுக்கு வந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், சரியான கதையுடன் வந்திருக்கும் படம் இது. காட்டில் வசிக்கும் மக்களின் எளிமையான வாழ்க்கையையும், அவர்கள் கேட்கும் உரிமைகள் மறுக்கப்படுவதையும், காட்டை விட்டு அவர்களை துரத்த அரசு மற்றும் பணமுதலைகள் நடத்தும் சதிகளையும் வெட்ட வெளிச்சம் போட்டு காட்டுகிறார்கள். இந்தச் சூழல் பல நூற்றாண்டுகளாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. இன்னும் தீர்வு காணாத இச்சிக்கலுக்கு மேலும் கூடுதல் செய்திகளைப் பகிர்ந்துகொள்ளும்வகையில் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

கதைச் சுருக்கம்

இக்கதையானது கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியை தன்னகத்தே கொண்ட தருமபுரி மாவட்டத்தின் மலைகிராமம் ஒன்றில் நகர்கிறது. வேலு என்பவன் அவனது கிராமத்தின் சாகாக்களோடு காட்டில் விறகு வெட்டிக் கொண்டிருக்கிறார்கள். அங்கே வரும் ஒரு மரக் கடத்தல் குண்டர் கும்பலனது தலைவன் வேலுவை அழைத்து, “நான் சொல்றபடி செஞ்சா... இந்தக் காட்டுல வாழ்ந்து கஷ்டப்படாம கார், பங்களான்னு சொகுசா வாழலாம்” எனத் தூண்டில் போடுகிறான்.

வெகுண்டெழும் வேலு, “உயிர் வாழ்றதுக்காக காட்டுலேர்ந்து எதை வேணும்னாலும் எடுத்துக்குவோம். ஆனால் வசதியா வாழறதுக்காக ஒரு செடியைக் கூட பிடுங்க மாட்டோம். போய்யா.. நீயும் உன் பணமும்” என்று முகத்தில் அறைந்தார்போல பேசிவிட்டு விறுவிறுவென்று நடக்கிறான். இந்த வசனமே இக்கதையின் சாரம்சமாகும்

கதையின் நாயகன் வேலுவுக்கு கல்வி அறிவு இல்லாவிட்டாலும், அனுபவ அறிவு காரணமாக தான் பிறந்து வளர்ந்த காட்டையும், அதனோடு இணைந்த தன் வாழ்வையும் நேசிக்கிறான். வேலுவின் நண்பனான கருணாவோ (முத்துக்குமார்) நன்கு படித்தவன். வாழ்வாதாரம் இல்லாத மலைகிராமத்து வாழ்வை வெறுப்பவன். எப்படியாவது வனத்துறையில் வேலைக்குச் சேர்ந்து, அரசு ஊழியன் ஆகி வசதியாக வாழ வேண்டும் என்பது அவன் கனவு. ஆனால், வேலையில் சேர இரண்டரை லட்சம் ரூபாய் லஞ்சப் பணம் கொடுக்க வேண்டியிருப்பதால், அதைத் திரட்ட சந்தன மரங்களைக் கடத்திப் பிடிபடுகிறான்.

தன் மீது வழக்கு பதிவானால் அரசு வேலை பெறமுடியாது என்று தனது நண்பன் வேலுவைக் கட்டாயப்படுத்தி தனது குற்றத்தை ஏற்றுக் கொள்ள வைக்கிறான். நண்பனுக்காக பழியை ஏற்று வேலு சிறை சென்ற பிறகு கருணாவுக்கு வனக்காவலர் வேலை கிடைக்கிறது. அவனது சுயநலம் மற்றும் பணவெறியால் மரக் கொள்ளையர்களுக்கு துணை போகிறான். நண்பனையும் சிறையிலிருந்து வெளியே வரமுடியாதவாறு பார்த்துக் கொள்கிறான். மரக் கடத்தலுக்கு கிரா மத்து மக்களால் பிரச்சினை வரக்கூடாது என்று அவர்களை மலையிலிருந்து துரத்தியடிக்கும் திட்டத்தைச் செயல் படுத்துகிறான்.

புரட்சிமிக்க கருத்தும் பாடலும்

சமூக விரோதிகளால் காடு அழிவதையும், காலம் காலமாக அங்கே வாழும் மக்களை துரத்தியடிக்கத் துடிக்கும் அரசு இயந்திரத்தையும் காய்ச்சி எடுக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஸ்டாலின் ராஜாங்கம். ஆனால், திரைக்கதை இன்னும் அழுத்தம் தரக்கூடிய காட்சிகளை இயக்குநர் சேர்த்திருக்கலாம்.

புரட்சிகர எழுத்தாளராக வரும் நந்தாவின் (சமுத்திரக்கனி) கதாபாத்திரம் சமூக அரசியலைச் சாட்டை அடி வசனங்கள் மூலம் குறுக்கு விசாரணை செய்கிறது. கனமான குரலும், நிலைகுத்தி நிற்கும் பார்வையுமாக அலட்டிக் கொள்ளாத நடிப்புடன் நந்தாவை நம் மனதில் நிற்க செய்கிறார் சமுத்திரக்கனி.

 நந்தா “காடு உன் வீடு மட்டுமில்ல அது உன் ஆன்மா, அதை வெட்டுபவனை திரும்ப வெட்டு” என வன்முறை வழியை போதிக்கிறார் நந்தா. மேலும், உழைப்பாளிகளின் உன்னதத்தை மிக அழகாகக் கைதிகளுக்கு எடுத்துக்கூறும் நந்தா கதாமாந்தரின் நடிப்பு அளவானது, அழகானது. பார்ப்போருக்கு ஒரு புதிய உத்வேகத்தைக் கொடுத்துள்ளது.

இயக்குநர் கட்டுப்படுத்திய எல்லைக் குள்ளேயே சுழன்றாலும் மகேந்திரன் ஜயராஜூவின் ஒளிப்பதிவும், கேயின் பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்ப்பவை. ‘உன்னை பத்தி நினைச்சாலே’ பாடலும், படத்தின் முடிவுப் பகுதியில் வரும் புரட்சி பாடலும் கவர்கின்றன.

படத்தில் சறுக்கல்களும் ஓட்டைகளும் இருந்தாலும், ‘காட்டிலும் மலையிலும் வாழும் மக்களால் மட்டுமே காட்டை பாதுகாக்க முடியும், அதனால் காட்டை பாதுகாக்கும் பணியை எங்களிடமே அரசு கொடுக்க வேண்டும்’ என்ற கருத்தை முன்வைத்தமைக்காக காட்டுக்கும் ஒருமுறை வனநடை சென்று வரலாம்.

கதையில் சில சறுக்கல்கள்

கதையின் நாயகன் வேலு தன்னுடைய நண்பனுக்காக சந்தனமரம் வெட்டிய குற்றத்தை ஏற்றுக் கொண்டு சிறைக்குப் போகிறார். வழக்கம்போல அந்த நண்பன் இரண்டகம் செய்து விடுகிறார். அதன்பிறகு அந்த நண்பனைப் பழி வாங்குவதுதான் வழக்கமான திரைப்படங்கள் போலவே இருந்தது.

விரும்புத்தக்க காட்சியமைப்பும் வசனங்களும்

படத்தில் கொஞ்சநேரமே வந்தாலும் சமுத்திரக்கனி கவனிக்கப்படுகிற இடத்தில் இருக்கிறார். அவர் கண்முன்னாலேயே ஒரு அப்பாவிக் கலைஞரைப் போட்டு அடித்துத் துவைக்கும்போது அசராமல் பார்த்துக் கொண்டிருக்கும் காட்சியில் தலைமைப் பண்பைச் சுட்டுகிறார் இயக்குநர். அதைச் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார் சமுத்திரக்கனி.

மரணத்தை உண்ணுகிறோம் என்றுதெரிந்தும் கம்பீரமாக லட்டை உண்ணும் காட்சி சிறப்பு. ‘சமாதானக்காலத்தில் எல்லாம் அதிகாரங்களே வெற்றி பெற்றிருக்கின்றன’, ‘ஏமாற்றுபவர்களுக்கும் ஏமாறுபவர்களுக்குமான உலகமாக இது இருக்கிறது, என்னால் இரண்டாகவும் இருக்கமுடியவில்லை’, ‘மரம் நம் முன்னோரின் ஆன்மா, அதை வெட்டுகிறவனை நீ வெட்டு’ என்பது உட்பட சமுத்திரக்கனி பேசுகிற வசனங்கள் எல்லாமே நிற்க அதற்குத்தக என்பதாகவே இருக்கின்றன.

கே இசையமைப்பில் யுகபாரதியின் பாடல்கள் நன்று. இறுதிப் பாடல், போராளிகளுக்கு ஊக்கம் கொடுக்கிற வகையில் அமைந்திருக்கிறது. மு.காசிவிஸ்வநாதனின் படத்தொகுப்பு படத்துக்குப் பலமாக அமைந்திருக்கிறது.

இயக்குநரின் பொதுடைமைச் சிந்தனைகள்

உயிர் வாழ்வதற்காகக் காட்டிலிருந்து எதை வேண்டுமானாலும் எடுப்போம் ஆனால் வசதியாக வாழ்வதற்காக ஒரு செடியைக்கூடப் பிடுங்க மாட்டோம் என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்வதும், இறுதியல் வனம் பற்றித் தெரிந்தவர்களே வனஅதிகாரிகளாக வரவேண்டும் ஆகிய கருத்துகளுக்காக இயக்குநர் ஸ்டாலின் இதைப் படமாக்கிய தயாரிப்பாளர் நேரு நகர் நந்துவையும் பாராட்டலாம்.

யாதும் எங்கள் ஊர் என்று பாட்டன் சொல்லக் கேட்டோமே, ஊரை விட்டுப் போ என்றார் யாரும் போக மாட்டோமே என்ற யுகபாரதியின் ஆழமான வரிகள் இப்படத்தின் நுட்பமான அரசியலை அலசிக் காட்டியுள்ளது என சொல்லலாம். எதிர்கால சந்ததியினருக்கு இப்படம் வெறும் படமல்ல, பாடம் என்பதே நாம் அனைவரும் கருத்தில் கொள்வோமாக...

- கலைவாணி இளங்கோ

Pin It