maragatha naanayam

சூதுகவ்வும் படத்துல பேயை நடமாட விட்டா எவ்வளவு சுவாரஸ்யமா இருக்கும்.அதான் மரகதநாணயம்.ரொம்பநாள் கழிச்சி ஒவ்வொரு காட்சியும் ரசிச்சிப் பாக்குற மாதிரியான ஒரு படம். ரிலிசாகி ஒரு மாசம் பக்கமா ஆனாலும் இரவுக்காட்சி ஃபேமிலி ஆடியன்சோட அரங்கு நிறைஞ்ச காட்சிகளா ஓடுறது சாதாரண விசயம் இல்ல.எல்லா மசாலாவையும் சரியா கலந்தா மட்டும்தான் இது சாத்தியம்.இத்தனைக்கும் ஒரே ஒரு பாடல் மட்டும்தான் படத்துல இருந்ததுன்னு நினைக்குறேன்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னாடி வாழ்ந்த இரும்பொறை அரசன்ங்குற மன்னனுக்கு சொந்தமான மரகத நாணயம்ங்குற அதிசயக் கல் இந்த நூற்றாண்டைச் சேர்ந்த மனிதர்கள் கைகளில் கிடைக்குது.அந்தக் கல் யார் கைகளிலெல்லாம் கிடைக்குதோ அவர்கள் வரிசையாகக் கொல்லப்பட அந்த சாவுக்குக் காரணம் இறும்பொறை அரசனுடைய ஆவின்னு வதந்திகள் உலவ ஆரம்பிக்குது.இப்போ கதாநாயகன் ஆதி அந்தக் கல்லை எடுக்க முயற்சி பண்றாரு. அதுல வெற்றி பெற்றாரா இல்லையாங்குறதுதான் கதை.

இவ்வளவு என்ஜாய் பண்ணி ஒரு படத்தைப் பாத்து ரொம்ப நாளாகுது.இயக்குனரோட புத்திசாலித்தனம் கோட்டா சீனிவாசராவோட அறிமுகக் காட்சியில ஆரம்பிச்சி க்ளைமாக்ஸ்ல பிரம்மானந்தத்தோட அறிமுகக் காட்சி வரை நீளுது.ஒரு அறைக்குள்ள அத்தனை ஆவியையும் காட்டுற காட்சி,முனீஸ்காந்த் நண்பர்களுக்காக பிணங்களைத் தேடி போற காட்சி,ஹூரோயினைப் பயன்படுத்துன விதம்,ஆனந்த்ராஜ் கேங் அட்டகாசங்கள்,கறுப்பு ஆளில்லா ட்ரக்...இதெல்லாம் எப்படிய்யா யோசிச்ச..?

படத்தோட தூண் ரெண்டுபேரு.ஒன்னு ராமதாஸ்.இன்னொன்னு ஆனந்த்ராஜ்.ராமதாஸ்,நிச்சயமா வடிவேலுவோட இடத்தைப் பிடிக்கதான் போறாரு.ஒரு உயிர் பிரியாம தடுத்து நிறுத்துற காட்சியில மத்த ரெண்டுபேரோட நடிப்பையும் விட  ராமதாஸோட நடிப்பு வெகு இயல்பா இருக்கும்.ஆனந்த்ராஜ்,நானும் ரவுடிதானுக்குப் பிறகு அவரோட செகன்ட் இன்னிங்க்ஸ்ல கலக்குறாரு.இதை அவர் இனி விடப் போறதில்லன்னு தெரியுது.ஈரம் படத்துக்கப்புறம் இதுலதான் ஆதியைப் பிடிச்சது.(ரொம்ப யோசிக்க வேணாம்...அதுக்கு முன்னாடி மிருகம் மட்டுந்தான் நடிச்சாரு)

இன்னொரு முக்கியமான விஷயம் தமிழ்சினிமாவுக்கு நீண்டநாளா 'பெப்பே' காட்டிட்டு இருக்குற "தேவையில்லாத காதல்" காட்சிகளைவச்சி இம்சை குடுக்கல.நிக்கி கல்ராணி ஸ்க்ரீன்ல இருந்தாலும் அவங்களையும் காமெடிக்காக மட்டுமே பயன்படுத்திருக்காங்க.நிக்கி மாதிரி நல்ல லிப்-சிங்க் செய்யத்தெரிந்த நடிகைகளை விட ஹன்சிகா போன்ற ஒன்றும் தெரியாத ஆட்களுக்குத்தான் வாய்ப்புகள் குவிகிறது என ஏக்கத்துடன் தெரிவித்தார் அந்த ஏழை விவசாயி.

தமிழ்ராக்கர்ஸ்ல படம் வந்துடுச்சு ஆனாலும் இந்தப் படத்தை முழுமையா என்ஜாய் பண்ணனும்னா தியேட்டருக்குப் போனாதான் முடியும்.செம்ம ஜாலியான ஒரு சீன்கூட போரடிக்காத ஹாரர் ஃபேன்டசி காமெடி இந்த மரகதநாணயம்.

Pin It