ஃபகத் ஃபாசில் நடித்து திலிஸ் போத்தன் இயக்கத்தில் பிரபல மலையாள இயக்குனர் ஆசிக் அபு தயாரித்து வெளிவந்து மிகப்பெரிய வெற்றியடைந்த படம் "மகேஷிண்டே பிரதிகாரம்". இறங்குமுகமாக சென்று கொண்டிருந்த ஃபகத்தின் கேரியரை மீட்டெடுத்த படம். சிறந்த மலையாளத் திரைப்படம் மற்றும் சிறந்த ஒரிஜினல் திரைக்கதைக்காக தேசியவிருதும் பெற்றது.
இப்பொழுது மீண்டும் அதே கூட்டணி இணைந்து "தொண்டிமுதலும் த்ருக்சாட்சியும்" திரைப்படத்தை எடுத்திருக்கிறார்கள். மகேஷின்டே பிரதிகாரம் மிகவும் பசுமையான பின்னணியில் எடுக்கப்பட்ட கண்களுக்கு குளிர்ச்சியான ஒரு படம். ஆனால் இந்தப் படம் கர்நாடக எல்லையிலுள்ள கேரளத்தின் ஒரு வறண்ட பகுதியில் நடக்கும் கதை. உள்ளடக்கத்திலிருந்து லொகேஷன்,கதாபாத்திர வடிவமைப்பு வரை அனைத்தும் முந்தையப் படத்திலிருந்து முற்றிலும் வேறானது. மகேஷின்டே பிரதிகாரம் படத்தில் இருந்த சிறிது மசாலாத்தனத்தையும் தூக்கிப் போட்டுவிட்டு முழுக்க முழுக்க வேறு ஒரு எதார்த்த சினிமாவை எடுத்திருக்கிறார்கள். சில இடங்களில் படத்தின் பின்னனி இசை மட்டும் நம்மைக் காப்பாற்றாவிட்டால் இது மிகவும் வலி நிறைந்த ஒரு படைப்பாகவே மாறியிருக்கும்.
ஒரு திருடன்,அவனிடம் திருமணச் சங்கிலியைப் பறிகொடுத்த ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட ஒரு தம்பதி,அந்தத் திருடனை விசாரிக்கும் ஒரு காவல் நிலையம் அதிலுள்ள காவலர்கள். இதில் விசாரிக்க என்ன இருக்கிறது. ?. . இருக்கிறது. . ஏனென்றால் அதை அவன் மறைத்து வைத்திருக்கும் இடம் அவனுக்கு மட்டுமே தெரியும். படம் முழுக்க அதை நோக்கியே பயணிக்கிறது.
மகேஷின்டே பிரதிகாரம் படத்தின் இறுதி சண்டைக்காட்சி திரையில் எப்படி இருந்திருக்கும் என இன்றும் நினைக்கிறேன். அந்தப் படத்தைத் திரையரங்கில் பார்க்க முடியாத ஏக்கம் இந்தப் படத்தைப் பார்த்ததும் தீர்ந்தது.
ஃபகத் இந்தப் படத்தின் கதாநாயகன் கிடையாது. நாயகன் வேறு யாரென்றால் யாரும் கிடையாது. இது ஒருசிலரின் வாழ்வில் நடக்கும் சில சம்பவங்கள். அதை நாம் பார்க்கிறோம். அவ்வளவே.
முதல்காட்சியில் ஃபகத்தைத் திரையில் காட்டியவுடன் மலையாள ரசிகர்கள் எண்பது சதவீதம் நிரம்பியிருக்கும் திரையரங்கமே(ஈகா) குதூகலிக்கிறது. அதன்பின் ஒவ்வொரு காட்சியிலும் அவர் பத்துபேரை தூக்கிப் போட்டு உதைத்துவிட்டு பஞ்ச் வசனங்களைப் பேசவில்லை. ஆனாலும் அதற்குரிய கைதட்டலும் விசில் சத்தமும் ஃபகத்தின் உடல்மொழிக்கும்,இடைவேளையில் அவர் காட்டும் நக்கல் சிரிப்புக்கும் கேட்ட வண்ணம் இருந்தது. கேரள சினிமாக்காரர்கள் அவர்களது ரசிகர்களை பழக்கியிருக்கும் விதம் ஆச்சர்யமூட்டியது. ஃபகத்தான் தென்னிந்திய சினிமாவின் முகமாக மாறப்போகிறார் சில வருடங்களில்.
படத்தின் சில காட்சிகள் விசாரணை படத்திலிருந்து இன்ஸ்பையர் ஆகி எடுக்கப்பட்டிருக்கலாம் எனத் தோன்றியது. காவல் நிலையத்தில் காவலர்கள் செய்யும் நகைச்சுவை அட்டகாசங்கள் திலீஸ் போத்தன் டச்.
படத்தின் மிகமுக்கியமான ஒரு காட்சி. கால்வாயில் வைத்து ஃபகத்தை சுராஜ் இறுக்கப் பற்றிக் கொள்ளும் காட்சி. நடுத்தர வர்க்கத்தினர் தனக்கு வாழ்க்கையில் முன்னேறிச் செல்ல கிடைத்திருக்கும் ஒரு வாய்ப்பை நழுவவிடுவதற்கு எந்தசூழ்நிலையிலும் தயாராக இல்லை என உணர்த்தும் காட்சி அது. சுராஜ் தேசியவிருதை முன்பே வாங்கி விட்டார்.
நம் கெளதம் மேனன்கள் இன்னும் குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டிருக்க திலீஸ் போத்தன்கள் உலகசினிமாவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
தேசியவிருது பெற்ற கலைஞர்களால் உருவாக்கப்பட்ட தேசியவிருது பெறப்போகும் திரைப்படம் இந்த "தொண்டிமுதலும் த்ருக்சாட்சியும். . "
- சாண்டில்யன் ராஜூ