வெற்றி என்பது கிடைக்கப் பெறுவதல்ல உருவாக்கப்படுவது. ‘சித்திரம் பேசுதடி' படத்தின் 100 வது நாள் வெற்றி விழா சென்னை கலைவாணர் அரங்கில் உருவாக்கப்பட்டது. இனி வெற்றி உருவான இடத்திலிருந்து...
ஏவிஎம் சரவணன் :
எங்க அப்பா காலத்துல நடிகர வெச்சி கதை எழுவது கிடையாது. கதைக்காகத்தான் நடிகர்களைப் போட்டோம். இதுல எக்ஸப்ட் ‘அன்பே வா'. அப்படி கதைக்காக நடிகர்களை போட்டிருக்காரு மிஷ்கின். தமிழ் சினிமாவை பொறுத்தவரைக்கும் ஆக்ஷன் பிக்சர்ஸ்ல லாஜிக் இருக்காது. லாஜிக் இருந்தா ஆக்ஷன் இருக்காது. ஆனால் சித்திரம்பேசுதடியில இரண்டையும் பார்க்க முடியும்.
இயக்குநர் பி.வாசு:
‘சேது' படம் பார்த்துட்டு டைரக்டர் யாருன்னு தேடினேன். அதற்கப்புறம் ‘சித்திரம் பேசுதடி' பார்த்துட்டு மிஷ்கின் யாருன்னு தேடினேன். இந்த படத்துல யாரும் நடிக்கல வாழ்ந்திருக்காங்க.
இயக்குநர் தங்கர்பச்சான் :
‘சித்திரம் பேசுதடி' பொருள் பொதிந்த தலைப்பு. அது வாழ்க்கை. அதற்குள் இருக்கிற சித்திரங்கள் பேசின. கிராமம் மட்டுமே நேட்டிவ்விட்டியில்லை. நகரத்தை மையமா வைத்து எடுக்கப்படுக்கிற படங்களும் நேட்டிவ்விட்டி படங்கள்தான். அந்த வகையில இதுவொரு நேட்டிவ்விட்டி படம்தான். இந்த படத்திற்கு விருது கிடைக்கும். ஆனால் அரசு கலைஞர்களை மதிக்கிறதில்லை. ஏதோ ரேஷனில் அரிசி தர்றமாதிரி ஒவ்வொருத்தரா வரிசையில வரச்சொல்லி விருது கொடுக்குது. இந்த நிலை மாறனும். இங்கு ஏமாற்றுகிறவர்கள் ஏமாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். ஏமாறுகிறவர்களும் ஏமாந்துக் கொண்டே இருக்கிறார்கள். கலைஞனுக்கு கலையை பணம் பண்ணுவதைவிட கலையை உருவாக்குதின் மீது பொறுப்பு வேண்டும். இதை மிஷ்கின் உணர்ந்ததால தான் அவரோட முதல் படமே மிகுந்த வெற்றியைப் பெற்றிருக்கு.
இயக்குநர் கதிர் :
நான் முதன்முதலா ராஜாவை (மிஷ்கின்) லேண்ட் மார்க்ல தான் பார்த்தேன். அங்கு அவர் துடிப்பு மிகுந்த இளைஞரா உலக இலக்கியங்களையும் அவற்றை படைத்தவர்களையும் தெரிந்த நபராய்த்தான் இருந்தார். நன்கு படித்த இளைஞர் வேண்டும் என்று நான் லேண்ட் மார்க்கில் போர்ட்டு மாட்டியபோது ஏன் நான் இல்லையா என்று ராஜா கேட்டதும் உடனே அவரை என்னோடு அழைத்துக் கொண்டேன். அப்படித்தான் அவர் என்னுடைய உதவியாளரா வந்தார்.
இயக்குநர் மனோபாலா:
மிஷ்கினோட இந்த படம் ஒரு சுனாமியலை. இது தொடர்ந்து அடிக்கணும். இது வெறும் படமாக வரவில்லை. பாடமாக வந்திருக்கிறது.
இயக்குநர் சீமான்:
எல்லோராலையும் உதாசீனப்படுத்தப்பட்ட படங்கள்தான் வரலாற்றில் இடம் பெற்றிருக்கின்றன. குதிரையை வெச்சி ஒரு படம் எடுத்ததால அந்த படமே ரிலீஸ் பண்ண முடியாம இருக்கு. அதுபோல இங்க 45க்கும் மேற்பட்ட படங்கள் இருக்கின்றன. ஒரு ராஜா போர்க்களத்துக்கு வர்றாரு. அவர் வரும்போது குதிரையிலதான் வருவாரு. டாடா சுமோவிலயா வரமுடியும். மிருகவதை தடைச்சட்டத்தை வைத்துக்கொண்டு இந்த தணிக்கைக் குழு செய்கிற அலம்பல் இருக்கிறதே தாளமுடியவில்லை. அதை அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். அப்போது தான் நல்ல படங்கள் வெளிவரும்.
- இலாகுபாரதி
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அரசு தரும் விருதில் கலைஞனுக்கு மதிப்பில்லை
- விவரங்கள்
- சா.இலாகுபாரதி
- பிரிவு: திரைச் செய்திகள்