காட்டை காட்டும் போதெல்லாம் எனக்கு அழுகை வந்தது. எனக்கு அழுகை வரும் போதெல்லாம் காடு அசைந்தது.
அங்கே ரத்தத்தின் அத்தியாயமாக நிற்கும் மரங்களின் ஆற்றாமை கொடிதிலும் கொடிது. இயற்கையோடு வாழ்ந்த ஒருவனின் வாழ்வு... அவன் வாங்க ஆசைப்பட்டு... அத்தனை கஷ்டங்களுக்கு பின் வாங்கிய இடத்தின் பொருட்டு நடக்கும் வாழ்வின் திருப்பு முனை சம்பவங்களால் அதே இடத்துக்கு செக்யூரிட்டியாக அமருகிறான். அப்போது ஆழ் மனதுக்குள் நகம் கொண்டு பிராண்டி எதையோ எடுத்துக் கொண்டு போகிறது இந்த மானுடத்தின் விளிம்பு நிலை மனித வாழ்வு. ஒவ்வொரு கேட் வாசலிலும் நிற்கும் செக்யூரிட்டிகளுக்கு பின்னால் மூடி அடைத்த ஒரு பெரு வாழ்வு இருப்பதை உணருகையில்... உள்ளே பதறும் மூச்சிரைப்பை முடிந்தளவு உரிந்து எடுத்து விடுகிறது வீணாய் போன உலக மயமாக்கலும்.......வெட்கங்கெட்ட உள்ளூர் உலக அரசியலும்.
செத்துப் போவதை விட கொடியது செத்தது போல போவது.
ரங்கசாமி அப்படித்தான் இருக்கிறான். அவன் இறுதியில் செக்யூரிட்டியாக அமர்கையில் எல்லாமே மறத்து விடுகிறது. முன்பெல்லாம் தோன்றிய கனவுகள், மறந்து விடுகின்றன. காடும் காடு சார்ந்த வாழ்வின் முக்கோணங்கள் தகர்க்கப் படுகின்றன. காற்றுக்காக அமைக்கப்பட்டிருக்கும் ராட்சஷ விசிறிகள் மத்தியில் மூச்சுக்கு துளி காற்றில்லாமல் பிணம் போல அமர்ந்திருக்கும் அவனை அப்படியே விட்டு விட்டு கடந்து விடுகிறது உலகம். உலகம் என்ன செய்யும். உருண்டு கொண்டிருப்பதைத் தாண்டி வேறு என்ன செய்யும் உலகம்.
இருமிக் கொண்டேயிருந்தாலும்...... அந்த காட்டின் மொத்தமும் அதை எதிரொலித்துக் காட்டினாலும்... தன் மேல் வைத்திருக்கும் நான் என்ற நம்பிக்கையின் முடிச்சுகளில்.... அந்த இருமல் மனிதனின் உடல் கட்டப் பட்டிருப்பதை திரைக்குள்ளிருந்தே காண்பது போலத் தான் திரைக்கதையும்.... கதையும். வசனங்களில் எந்த மெனெக்கெடலும் இல்லை. தேவையுமில்லை. அது அவர்களின் வாழ்வு. அவர்கள் பேச்சில் இருக்கும் உரிமை அது. அப்படியே இருக்கிறது. மலையும் மலை வாழ் பகுதியும் என்ற காரணத்தோடு தான் எனக்கு அழுகை முட்டியது. அந்த காட்டில்... அந்த காய்த்து போன பாத சுவடுகள் வழியே எரியும் தீ பந்தங்கள் காரணமில்லாதவர்களுக்கும் அழுகை மூட்டும்.
ஏதாவது செய்து மிச்ச பணத்தை சேர்த்தி விடலாம் எனும் போது ஏலக்காய் மூட்டை வாங்கி கை மாற்றும் யோசனை வர....அதைத் தொடர்ந்து, தெரியாமல் நிகழும் ஒரு சம்பவத்தால் அந்த ஏலக்காய் மூட்டை மலை உச்சியில் இருந்து தவறி விழுகிறது. பார்க்கும் நாம் ஒரு குடும்பத்தின் தற்கொலையை தடுக்க முடியாத கையறு நிலைக்குத் தள்ளப்படுகிறோம். ரங்கசாமி ஒரு காட்டு மாடைப் போல அதை தேடி ஓடுகையில் உயிர் அறுந்து விழும் ஓசை நமக்கு கேட்கிறது. உடல் சிதறி மலை அடிவாரத்தில் விழும் மூட்டைக்குள்ளிருந்து வெளியே விழுவது ஏலக்காய் மட்டுமல்ல. ரங்கு காடு வாங்க சேர்த்து வைத்திருந்த லட்சியம்.. ஆசை... உரிமை... எல்லாமே.
ஒரு மலைக்காட்டின் வாழ்வை ஜன்னல் திறந்து வைத்து பார்த்துக் கொண்டிருப்பது போலத்தான் நாம் படம் பார்க்கிறோம். அத்தனை கச்சிதத்தோடு வாழ்வின் நிதர்சனம் அங்கே நகர்கிறது. எங்கு தேவையோ அங்கு இசை தேவன்.. பாடுகிறார்... இசைக்கிறார்..... மற்ற இடங்களில் காட்டையே இசைக்க விட்டு வேடிக்கை பார்க்கிறார். காடும் இசைத்து விட்டு வேடிக்கை பார்க்கிறது.
எல்லாக் கால கட்டத்திலும் எங்கும் இருக்கும் நயவஞ்சகமும்... நரித்தனங்களும்...திருட்டும்...சபலப் பார்வையும் இங்கும் இருக்கின்றன. அதன் பின்னணியில் கொலை, சிறை என்று கோபத்தின் அடுத்த பக்கமும் அரங்கேறுகிறது. இறுதியில் விதைக் கடைக்காரர், திட்டமிட்டு இதுவரை கொடுத்த கடனுக்கு இடத்தை மாற்றி விடக் கேட்டு பத்திரத்தில் கையெழுத்து கேட்கையில், ரங்கசாமி.. மறுபேச்சின்றி தானாக கையெழுத்து இடுகிறான். எல்லாம் விட்டு போன ஒரு மனிதனின் இயலாமையை எழுதி முடிகிறது க்ளோஸ் அப் ஷாட்டில் யாரோ யாருக்கோ எழுதிய விதி.
காட்டுக்குள் திரியும், 'யானையைக் கொல்ல போறேன்.... எல்லா யானையையும் கொல்ல போறேன்" என்று சொல்லிக் கொண்டே திரியும் அந்த வளையல் கிழவி...... இந்த காடும் காடு சார்ந்த வாழ்வின் வாழ்வின் மீதான பெரும் அச்சத்தை நமக்குள் விதைத்து விட்டு போகிறது. யானை பற்றிய முடிவுக்கு நாம் வரவே முடியாது. வராமல் இருக்கும் வரைதான் அவைகள் யானைகள்.
எல்லாமே இங்கு குறியீடாகவே இருக்கிறது. காடு ஒரு குறியீடு. இறுதிக் காட்சியில் காட்டப்படும் JJ ரெசிடென்சி ஒரு குறியீடு. ரங்கு நடந்து வந்த பிறகும்... காட்சிக்குள் இருந்து முறைத்துப் பார்க்கும் அந்த ஸ்கார்பியோவும் அதில் எழுதி இருக்கும் லோகு ப்ராப்பர்ட்டிஸ் பிரைவேட் லிமிடெட்-ம் குறியீடுகளின் குறியீடு. அரசியலின் சாயம் வெளுக்கும் இடம் இது.
ஒரு விலை நிலம்... உலக மயமாக்கலுக்கு விலை போவதை படம் முடிய போகும் கடைசி இருபது நிமிடங்களில்தான் நமக்கு புரிகிறது. அதன் பிறகு இந்த மொத்த படத்தின் ஓட்டம் மீண்டும் ஒரு முறை நம் மனக்கண்ணில் ஓடுகிறது. அதுதான்....அற்புதமான திரைக்கதையாக விரிகிறது. ஒரு வீட்டுக்காக ஒருவனை பலி கொடுக்கலாம். ஒரு ஊருக்காக ஒரு குடும்பத்தை பலி கொடுக்கலாம். ஒரு உலகத்துக்காக ஒரு நாட்டை பலி கொடுக்கலாம். தப்பில்லை. ஆனால் பலி கொடுக்கப்படும் எல்லாமுமே ஏழையாகவும்... இயலாமையில் இருப்பதாகவுமே இருக்கிறது. அதுதான் இங்கு சட்டமாகவும் இருக்கிறது. அரசியல் தத்துவங்களில்.. கீழே, காலுக்கடியில் இருப்பவனுக்கு கடைசிப் பக்கம் கூட இல்லாமல் இருப்பதுதான் இன்னமும் தொடரும் அவலம். அவமானம். அரசாட்சி.
இயற்கையோடு ரத்தமும் சதையுமாக வாழ்ந்த ஒருவன்.. இந்தப் பொருளாதார முட்டு சந்தில் மாட்டிக் கொண்டு செக்யூரிட்டியாக அமரும் தற்கொலை பாதக செயலை அனுமதித்து விட்டு நாம் திரை அரங்கை விட்டு வெளியேறுகிறோம். நமக்குள் இருக்கும் மானுட பரிணாமம் எங்கோ பிசிறு தட்டி விழுகிறது.
அப்பாவும், ஊர் சக மனிதரும் மாப்பிள்ளை பேச்சை எடுத்ததுமே.. அருகே இருக்கும் கதை நாயகி பெண் முகத்தில் காடு கொள்ளா கனவு வழிகிறது. அதில் காதல் என்ற சொல் மிகப் பழையது. அதற்கும் முன்னே இருக்கும் ஆதி நிற அன்பு வெட்கத்தில் தாவுகையில்... வீணை வாசிக்கிறது... காட்டுக்குள் ஒரு மூங்கில். "மச்சா...... மச்சான்" என்று மாமன் பெண் கேலி செய்யும் காட்சிகள்... மாமன் பெண்கள் கொண்ட மச்சான்ங்கள்.. பாக்கியவான்கள். கருப்பு தேனீரோயோடு ஜீனி சேரும் இரவு நேர மழையில் யாராவது காட்சியை பார்த்துக் கொள்ளட்டும்.. காட்சியாகவே இருந்து விடலாம் போல நாம்.
யாரும் நடிக்கவில்லை. அது அவர்களின் வாழ்வு. கேமராவைப் பற்றி ... என்ன சொல்வது...!
மழையாகட்டும்... மலையாகட்டும்... ஒற்றையடி... ஒற்றை மரம்... உச்சிப்பாறை.... தூரத்து கொக்கென பறக்கும் வேட்டி... வளையல் கிழவியின் ஒற்றை ஷாட்... மொத்த காட்டையும் கழுகு பார்வையில் பின்னோக்கி இழுத்து போகும் லாவகம்.... உலக சினிமா இனி இப்படித்தான் இருக்கும்.
ஒத்தை மூக்குத்தி அம்மாக்கள்... 'மெல்ல போ' என்பதை 'பைய போ' என்று சொல்லும் மொழி... உரிமையோடு எல்லாரையும் திட்டும் கிழவிகள்... சூட்சுமாகவே எல்லாவற்றையும் உள் வாங்கிக் கொள்ளும் அறிவுள்ள மனிதர்கள்... ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்தாசை செய்து கொள்ளும் சக உறவுகள்....நட்புகள்... ஊரே ஒருவரை ஒருவர் சார்ந்து இருக்கும்.. வாழ்வு முறை என ஒரு மலை கிராம மக்களின் வாழ்வை எல்லாருக்கும் தெரிந்தோ அல்லது யாருக்கும் தெரியாமலோ படம் பிடித்திருக்கும் இயக்குனர் "லெனின் பாரதி"க்கு... கை தட்டலோ....வாழ்த்துக்களோ போதாது. எழுந்து நின்று சிரம் தாழ்த்தி வணங்க வேண்டும்.
ரங்கசாமி தன் மனைவிக்கும் மகனுக்கும் மலை உச்சியில் இருந்து கீழே தெரியும் தங்கள் காட்டை காட்டும் அந்த ஷாட் போதும். மொத்தக் கதையின் குறியீடு அது.
மேற்கு தொடர்ச்சி மலை என்பது ஆதியின் மிச்சம். அங்கு தான்... அலைந்து கொண்டிருக்கிறது... என்னை போல காட்டைத் தொலைத்தவனின் மூச்சுக் காற்று.
- கவிஜி