மிகச் சிறிய வாழ்வை நோக்கித்தான் அவளின் நகருதல்... 

அது பணமென்னும் தூண்டிலின் வழியே அவளின் அச்சிறிய வாழ்வை சிறையின் உறுப்புக்குள் தள்ளி விட்டு நிழல் பேசும் நிர்பந்தங்கள்... கனத்து விடும் காட்சிகளின் தொகுப்பென படம் நெடுக அலியாவின் அழியா சுவடுகள் நீங்க மறுக்கிறது. 

udta punjab

படம் முடிந்த பின்னிரவு யோசனை வரையும்....அதற்கு அப்பாலும்... நீளும் தொடர் வானத்து திகீர் திருப்பங்களில்...அவளை முத்தமிட்டு யுத்தமிட்டு அந்த தனித்த அறையில்  அவளோடு காதல் கொள்ளும் அவனை பின்னொரு காட்சியில் குத்தி குத்தி குத்தி குத்தி குத்தி குத்தி குத்தி குத்தி குத்தி குத்தி குத்தி கொன்று விட்டு அவனைக் கொண்ட உடலை மீட்டு விட்ட திருப்தியில் அவள் வெளியேறும் காட்சி திகைப்பின் உச்சம். 

கதவு திறந்து இருக்கிறது.. அவள் வாசலில் நிற்கிறாள். மேலே கும்பலின் தலைவன் கத்துகிறான். அதன் பிறகே கதவு திறந்திருப்பது அலியாவுக்கு தெரிகிறது. அங்கு ஆரம்பிக்கும் பீஜியம்... அவள் ஓடி ஓடி ஓடி களைத்து அடுத்த காட்சிக்குள் நுழையும் வரை...  அதகள படுத்துகிறது. இசையோடு சேர்ந்த ஒளிப்பதிவும்.... அவள் ஒளிந்தோடும் பதிவும்....

ராக் ஸ்டார் ஷாகித்....   போதை பொருளுக்கு அடிமையான கலைஞன். ஆடி ஆடி பாடி ஓடி.. களைத்த ஒரு நாளில்... அவனை உச்சியில் இருந்து தூக்கி வீசும் ரசிகர்களை அவனால் ஒப்புக்கொள்ள முடியவில்லை... அது எல்லா கலைஞனுக்கும் நடக்கும் அநீதி. 

உச்சியிலேயே நின்று விட்ட எனக்கு தெரிந்த ஒரே கலைஞன் நிஜத்தில் ஜெயகாந்தன் மட்டுமே...

ஷாகித்தை போதை காலமெல்லாம் துரத்துகிறது. அவனை தூக்கி கொண்டாடிய கூட்டம் ஒரு நாளில் உதறித்தள்ளுறது. ஓடுகிறான். ஓடுகிறான். அவனால் திருப்பி அடிக்க முடியாத ஒரு தருணத்தில் அலியா காப்பாத்துகிறாள்.  பார்த்து பழகிய சில மணித்துளிகளில்.....அவளை உடன் சாக அழைக்கிறான் ஷாகித். அத்தனை அவநம்பிக்கையை அவன் வாழ்வு அவனக்கு அவன் கண்டெடுத்த இசையின் வழியேயும் போதையின் வழியேயும் வழிக்கியிருக்கிறது. பெரிய பெரிய கலைஞர்களின் தற்கொலைக்கு பின்னால் இருக்கும் தீராத தனிமையின் துயர் ஒரு பேயைப் போல அவர்களை தொடர்ந்திருக்கிறது என்பதற்கு சாஹித்தின் கதா பாத்திரம் ஒரு பதம்.

அவள் கத்துகிறாள். வானம் கிழியும் வரை கத்தி அழு கொண்டே போகும் அவளின் பின்னால் அவனைத் தாக்க தொடங்கியிருப்பார்கள். அழுத கணம் நிறைந்த முனையில் மெல்ல திரும்புகிறாள். வெறி கொண்டு கட்டை ஒன்றை எடுத்துக் கொண்டு ஓடி சென்று அவனை தாக்கியவர்களை அடித்து நொறுக்கி அவனைக் காபாபத்தி காப்பாத்தி விட்டு........"ஏன் சாகனும்.. என்னை இவன் வன்கலவி செய்தான். அவன் செய்தான். சில சமயம் கூட்டாக சேர்ந்து செய்தார்கள். நான் செத்தா போய்ட்டேன்...நான் கூட ஹாக்கி பிளேயர் தான். வறுமை என்னை வயலுக்கு வேலைக்கு போக வெச்சிருச்சு. இப்போ கூட... நான்  எப்படியும் இங்க இருந்து  தப்பிச்சிருவேன்... "என்று மிருகத்தனமாக நம்பும் அவள் மீது நொடிக்கும் குறைவான நேரத்தில்.... வந்து விடும் காதலை, நம்பிக்கையை, மிச்ச வாழ்வை மீட்டெடுத்து விடும் கடவுள்தனத்தை அந்த இருளின்... தனிமையின்.. பயத்தின்... தவிப்பின் சுயம் பிரித்து புரிந்து நிறைகையில்..கொண்டு விடுகிறான். 

சில கதைகள் அதுவாகவே தன்னை பின்னிக் கொள்ளும். இது அப்படி ஒரு கதை.

முந்தைய ஒரு காட்சியில் போதை கும்பலில் ஒருவன்  கடித்து தின்று வீசிய எலும்பை அலியா எடுத்து தின்னும் காட்சி போதைக்கும் பேதைக்கு இடையே அல்லாட வைக்கும் அசுரத்தனமான திரைக்கதையின் விசித்திரம்...

கரீனாவை, என்ன செய்கிறோம் என்று தெரியாமல் குத்திக் கொன்று விட்டு கையை கால் முட்டிக்கு கொடுத்து கட்டிக்கொண்டு அழுபடியே அமர்ந்திருக்கும் அந்த பதின் பருவத்து  இளைஞன் பகீர் பயத்தை தெளிக்கிறான். அவன் போதையின் பின்னால் சென்று சீரழிந்த இளைய சமுதாயத்தின் குறியீடு. கரீனாவை காட்சிகளினூடாகவே காதலித்து .....சற்று முன் தன்னிடம் நாளை  போதை கும்பலை பிடித்து கொடுத்த பின்னால் தன்னுடன் தேநீர் குடிக்க வர வேண்டும் என்று கூறி விட்டு அதன் மூலம் தன் காதலையும் சொல்லி விட்டு சென்ற கரீனா கழுத்தில் குத்தப்பட்டு பிணமாக கிடக்கையில்.... அதன் அருகே தன் தம்பி அமர்ந்திருக்கிறான் என்று பார்க்கையில்....பதறித் தவிக்கிறது.. நம் விழி. இத்தனைக்கும் அந்த போலீஸ் கதாபாத்திரம் அழுவது கூட இல்லை. ஆனாலும்.... அத்துமீறி வெடிக்கும் துயரத்தின் செவ்வகத்தை திரைக்குள் கடத்தி இருப்பது ஒரு தச்சுக்காரனின் சாமர்த்தியம் இயக்குனர்க்கு.

இறுதிக் காட்சியில்... அலியாவின் ஹாக்கி விளையாட்டு கொண்டு அவளின் ஊரைக் கண்டு பிடித்து அவள் வீடு சென்று அவளின் ஹாக்கி மட்டையை எடுத்துக் கொண்டு 100 கிலோ மீட்டர் சைக்கிளை மிதித்துக் கொண்டே வந்து அவளை அடைத்து வைத்திருக்கும்... இடத்தை அவள் கூறிய அந்த ஹோர்டிங் அடையாளத்தை வைத்துக் கொண்டு கண்டு பிடித்து எழுகையில்.... அதுவரை மூச்சிரைத்த நாமும் ஆசுவாசம் கொள்வோம். 

காதல் எப்போதும் காதல் தான் என்று மெய் சிலிர்க்க வைக்கும் அரிதான சம்பவங்களின் கோர்வையால் கோர்க்கப்பட்ட காட்சிகள் அற்புதம். ஆறு போல ஓடிக் கொண்டே சென்று கடலில் தான் யாரென்றே தெரியாமல் கலந்து விடும் வாழ்வை அவள் அவனுக்கு மாற்றி அமைக்கிறாள். பிறழ் மனம் கொண்ட அவனின் தீரா துயர் அவளை கண்டடையும் நேரத்தில் சரி செய்யப்படுகிறது. எல்லா கதாபாத்திரங்களும்... இறுக்கமான நுற்பங்களால் தைக்கப்பட்டவைகள் தான். சக்தியின் ஒருவரமாய் அவள் அவனை கண்ட அந்த ஒரு நொடியில் ஒரு நிமிட வாழ்வில் அவளின் வன்கலவிகள் எல்லாம் சுத்தம் செய்யப்பட்டதாகவே நாம் நம்புகிறேன். சாகித்தின் போதை விட்டொழிந்த இனி வாழப் போகும் வாழ்க்கை...பெரும் பாடலாய் அவன் முன்னே விரிகிறது.

துப்பாக்கி நீட்டி இருக்கும் முனைக்குள் எகிறி குதித்த சாகித் திக்கென்று நிற்க... நல்ல போலிஸ் அடி வாங்கி முட்டி போடப் பட்டு இன்னொரு துப்பாக்கி முனையில் சிக்கிக் கொண்டிருக்க... அந்த காட்சி.. மனித பிழையின் சந்தர்ப்பத்தை வெகு அற்புதமாக கையாளும் திருப்பத்தில் முடிகையில் அட போட வைக்கிறது.

போதை பொருளின் நெட்ஒர்க்  முதல் காட்சியிலேயே பளிச்சென்று இருட்டை நமக்குள் விரட்டி விடுகிறது. மனிதனின் மூளை எப்போதும் கரப்ட் ஆக காத்துக் கொண்டேயிருக்கிறது. அப்படித்தான் அதன் சுழற்சியின் போக்கும் இருக்கிறது. அதுவும் சாத்தானின் வாசம் நாசியை உடலாகும் கூறு கொண்டது. அதைத்தான் இளைய சமுதாயம் இந்த போதையின் வழியே எடுத்தாள்கிறார்கள். மாய பிசாசைப் போல சாகித்தை விரட்டும் தன்னால் தன் பாட்டால்.....தன் போலியான கட்டமைப்பால் போதைக்கு அடிமையான இளைஞர்கள்.... இப்படி ஒரு நெட் ஒர்க் இங்கே இளைய சமுதாயாயத்தை அழித்துக் கொண்டு இருப்பதை கண்டும் காணாமல் இருக்கும் நம்மையும் விரட்டுவதாகவே நான் நம்புகிறேன். 

"எத விடறது பஞ்சாபையா......போதையையா.......?"  என்பது போல மிக கூரான வசனங்கள் ஆங்காங்கே படத்தை, நீள் முடி கொண்ட சாகித்தின் ஆரம்ப கட்ட ஆரவாரம் போலவும்... அலியாவின் இரவைக் கிழிக்கும் வானம் புதைக்கும் ஆத்திரம் கொண்ட அழுகை போலவும்... லஞ்சம் வாங்கி விட்டு தானே விடுவித்த போதை பொருளால் தன் தம்பியே பலி ஆனதும்... அவனே, இந்த கும்பலை கண்டு பிடிக்க தூண்டி விட்டவளும்.. கண்டு பிடிக்க துணை நின்றவளும்... எல்லாவற்றுக்கும் மேலாக அவனை போதை பழக்கத்தில் இருந்து விடுவிக்க போராடும் மருத்துவரானவளும், சமுதாய சிந்தனை கொண்ட நாளை காதலியாக ஆக போகிறவளுமான ஒரு பரிசுத்த ஆத்மாவை கொன்று விட்ட பிறகு கொள்ளும் அந்த நல்ல போலிசின் கனத்த மௌனம் போலவும்... மூன்று திசையெங்கும் முகமூடி கிழிக்கிறது...முக்கோண கதையின் முடிச்சை வைத்து புரட்டி எடுத்த போதை.

வழி மாறுதலே இங்கே அடிக்கடி நடக்கும் மானுடம். தப்பித்தலின் பொருட்டு சிறு ஆட்டின் நடுக்கம் எப்போதும் இருக்கட்டும் ஒரு பக்கம். எப்பக்கமிருந்தும் யாரும் தூக்கி வீசலாம் உங்களை.

- கவிஜி 

Pin It