ஆஸ்கர் போட்டிகளில் சிறந்த திரைப்படம் விருதுக்காகப் போட்டியிடும் ஒன்பது படங்களில் இதுவும் ஒன்று. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்க்க ஆரம்பித்தேன். படம் முடியும்போது ஏதோ ஒரு பாரத்தை, ஒரு பாசிட்டிவ் எனர்ஜியை மனதில் விதைத்து விட்டது. கண்டிப்பாக அழுகாச்சி காவியம் இல்லை.
படத்தின் முதல் நாற்பது நிமிடங்கள் இந்தியாவில் நடக்கிறது. கதாப்பாத்திரங்கள் இந்தியிலேயே பேசிக் கொள்கிறார்கள். அதனால் ஆங்கிலப் படம் பார்ப்பதைப் போன்ற எண்ணமே ஏற்படவில்லை. எளிதில் படத்துடன் ஒன்றிவிட முடிந்தது. மேலும் இது ஒரு உண்மைக்கதை.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் காந்த்வா நகரத்திலிருந்து ஐந்து வயதில் தொலைந்து போகும் சரூ என்ற சிறுவனின் பயணமே இந்த லயன். சரூவும் அவனின் அண்ணனும் ஓடும் ரயிலில் இருந்து நிலக்கரியைத் திருடி, அதை விற்று பால் வாங்கும் காட்சிகள் காக்காமுட்டையை நினைவுபடுத்துகின்றன. அண்ணனுடன் இரவுநேரத்தில் ரயில் நிலையத்திற்குச் செல்லும் சரூ தவறுதலாக ஒரு ரயிலிலேயே உறங்கிவிட, கண் விழித்துப் பார்க்கும் பொழுது ரயில் எங்கோ சென்று கொண்டிருக்கிறது. அவன் வீட்டிலிருந்து 1600 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கல்கத்தா நகரில் இறங்குகிறான். அங்கிருந்து ஆஸ்திரேலியா வரை செல்லும் அவனின் அடுத்த இருபத்தைந்து ஆண்டுகால வாழ்க்கையின் நெகிழ்வூட்டும் சம்பவங்கள்தான் மீதி திரைக்கதை. நாம் தெருவில் தினமும் கடந்து செல்லும் ஒரு பிச்சையெடுக்கும் சிறுவனை அவன் குடும்பத்தார் எங்கோ தேடிக் கொண்டிருக்கலாம் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்துகிறது.
தேவ்பட்டேலும், அந்த ஐந்து வயது சிறுவனும் அருமையாக நடித்திருந்தார்கள். இந்தப் படம் ஆறு ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. La La Land திரைப்படம்தான் சிறந்தத் திரைப்படத்திற்கான விருதைப் பெற வாய்ப்புகள் அதிகம் என்றாலும், லயனுக்குக் கிடைத்தால் நன்றாக இருக்கும். ஏனென்றால் இது வெளிநாட்டவர்கள் இயக்கிய ஒரு இந்திய சினிமா. கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்.
- சாண்டில்யன் ராஜூ