குறிப்பு: இது ஒரு இன்றைய அரசியல் நிகழ்வுகளின் அலசல்தான்.. அரசுக்கோ அல்லது இன்றைய காங்கிரஸ் கட்சிக்கோ ஆதரவானதல்ல...

கர்நாடக மாநிலத் தேர்தல் முடிந்து விட்டது. பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்து விட்டது. இந்த முடிவுகள் எதிர்பார்த்ததுதான் என்று தேசியக் கட்சிகளே அதிலும் தோல்வியுற்ற கட்சியே கூறி விட்டது. ஆனாலும், இந்த ஊடக மைனர் அம்பிகளுக்கு அந்த முடிவு ஜீரணிக்க இயலாததாகப் போய்விட்டது. பெரும் அதிர்ச்சியாய் அமைந்த இந்த முடிவுகளுக்கு இந்த மைனர் அம்பிகள் ராப்பகலாய் தங்கள் மூளையைச் சுரண்டி சில காரணங்களைக் கண்டுபிடித்தனர்.

ஆம், இந்த முடிவுகள் கர்நாடக ஊழல் எதிர்ப்புக்கானது, உட்கட்சிப் பூசலின் விளைவு, காங்கிரஸுக்கு ஆதரவானதல்ல என்பவைதான். ஆமாம், இருபத்து நாலு மணி நேரமும் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி ஊழலில் திளைத்துக் கிடக்கின்றது என்ற அக்கினிக் குஞ்சினை கண்டு, அதனை ஊடகத்தின் பலத்தினால் ஊதோ ஊதென்று ஊதி... நாடே பற்றியெரிவதாகப் படம் காட்டியும் தங்கள் எண்ணத்தில் இப்படி மண் விழுந்து விட்டால் அதனை அவர்களால் எப்படி ஜீரணிக்க முடியும். மேலும் அடுத்து வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் இதே போல் நடந்து விட்டால் தங்கள் முயற்சி விழலுக்கிறைத்த நீராகி விடும் என்ற கவலையின் வெளிப்பாடுதான் இவை.

நாடு முழுவதும் ஊழல் கட்சி என்று இவர்களால் சித்தரிக்கப்பட்ட ஒரு கட்சியை, அதுவும் அனைத்து அச்சு மற்றும் மின் ஊடகங்களிலும் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையிலும் கர்நாடக மாநில மக்கள் எப்படி அதனை ஊழலற்ற கட்சி என்று ஆட்சியில் அமர்த்த இயலும். பல்லவியே இப்படிப் பல்லிளித்தால் கட்டமைத்து, மெட்டமைத்தவர்களுக்கு எவ்வளவு வேதனையாயிருக்கும். அதனால்தானோ என்னவோ இந்த மெத்தப் படித்த மேதாவிகள் வித விதமாய்க் காரணம் கண்டு பிடித்து மனச் சாந்தி பெறுகின்றனர். அதுவும் திரு சந்தோஷ் ஹெக்டே போன்றவர்கள் தலைமையேற்றுப் போராடிய பெங்களூருவிலேயே இந்த மைனர் அம்பிகளின் வேட்பாளர்கள் சட்டை செய்யப்படவில்லையே?.

உள்நாட்டு, பன்னாட்டு பகாசுர நிறுவனங்களும், பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ களும்..

மத்திய அரசினை எதிர்த்து உள்நாட்டு, பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களின் தயவுடனும், பன்னாட்டு நிறுவனங்களின் தயவில் வயிறு வளர்க்கும் வரைமுறைப் படுத்தப்படாத வருமானங்களில் மிதக்கும், வர்ணாஷ்ரமத்தின் அர்ச்சகர்கள், நடிகைகளுக்கு ஆத்ம பாடம் பயிற்றுவிக்கும் பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ களின் ஆசீர்வாதத்துடனும்தான் நடந்ததுதான் இந்த மைனர் அம்பிகளின் போராட்டம். பல பன்னாட்டு நிறுவனங்கள், (அதன் தலைமைப் பொறுப்பிலும் இவர்கள்தானே) விடுமுறையளித்து அவர்தம் ஊழியர்களை இத்தகைய கூட்டங்களுக்கு அனுப்பி வைத்த சம்பவங்கள் நிறைய நடந்தன. தங்களுக்குத் தாங்களாகவே நேர்மையாளர்கள் என பிரகடனப்படுத்திக் கொண்ட இந்த மைனர்களுக்குத் தலைமை வேண்டாமா? அதற்கென இந்த வர்ணத்தின் மைந்தர்கள் கண்டு பிடித்த நபர்தான் அன்னா. அவரும் தன்னாலான அளவு ஊடக உதவியுடன் நாடகத்தினை அரங்கேற்றினார்.

இளைய தளபதியும்...சூப்பர்ர்ர்ர்ர்ர்ரும்...

பல சிறந்த இயக்குனர்களிடம் நடித்தும் நடிப்பென்றால் என்னவென்றெ புரியாத டாக்டர், நாளைய முதல்வர், இளைய தளபதியும் கூட அன்னாவின் பின்னால் தோன்றிய ஒளி வட்டத்தில் தன்னை இணைத்துக் கொள்ள புது தில்லிக்கே சென்று அந்த மேடை நடிப்பில் சோக ரசம் சொட்டச் சொட்ட நின்று, கிரண் பேடியின் வேலைக்கு உலை வைக்கத் தெரிந்தார்.. இளைய தளபதி கலந்து கொண்டால் போதுமா... கலந்து கொள்ள வேண்டிய நேரத்தில் கலந்து கொள்ளும் நமது சூப்பர்ர்ர்ர்ர்ரும் தனது திருமண மண்டபத்திற்கு வாடகை வாங்காமல் பெருந்தன்மையுடன் இந்த மைனர்களின் போராட்டத்திற்கு உதவியதன் மூலம் நாட்டின் ஊழல் ஒழிப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். இவர் கங்கை காவிரி இணைப்புக்கு கொடுத்த கோடிகளைப் போல், இந்த போராட்டங்களும் சென்ற இடம்தான் தெரியவில்லை.

அக்கினிக் குஞ்சுகள்தான் மக்களின் பிரதி நிதிகளா..

இவர்களின் கொள்கைகள் மட்டும்தான் நாட்டை மீட்டெடுக்கும் என அராஜகமாக தங்களுக்குத் தாங்களே பிரகடனப்படுத்திக் கொண்டு அனைவரையும் தங்கள் ஊடக பின்புல அகங்காரத்தினால் அணி திரட்டி விட்டதாக பொய் முகம் காட்டிய குழு ஏதோ இந்தியாவே இந்த அக்கினிக் குஞ்சுகளால் அக்கினிப் பிழம்பாய்த் தகித்து தங்கள் பின்னால் ஓடி வருவதாகக் காட்டிக் கொண்டனர். அடாவடித்தனமாக நாட்டிலுள்ள நடுத்தர வகுப்பினர் அனைவரின் சார்பாகவும் போராடுவதாக இவர்களாகவே பிதற்றுவதும் வேடிக்கையாக இருந்தது. இவர்களின் எண்ணத்தில் மண்ணள்ளிப் போட்டது இந்தக் கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள். உண்மையென்னவென்று பார்த்தோமேயானால், புதிய மத்தியதர வர்க்கம் அதாவது சமீபத்திய பொருளாதார மாற்றங்கள் அல்லது வளர்ச்சியின் காரணமாய் தங்கள் ஏழ்மை நிலையிலிருந்து விடுபட்ட புதிய கீழ் மட்ட நடுத்தர வர்க்கத்தினர் இந்த பாதுகாக்கப்பட்ட காலனிகளில்(Gated Communities) வசிக்கும் மைனர் அம்பிகளின் கருத்தினை துல்லியமாக நிராகரித்தனர். மேலும் இந்தப் புதிய நடுத்தர மக்களுக்கு தங்கள் நிலை உயர இன்னும் அரசின் ஆதரவும், தங்களைப் போன்ற மக்களைக் கரிசனத்துடன் நோக்கும் அரசாங்கமும் தேவையாயுள்ளது என முடிவெடுத்ததன் வெளிப்பாடுதான் இந்த தேர்தல் முடிவுகள்.

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியா....ஒரு பக்க வீக்கமா..

இப்பொழுதும் புதிய நகர் உருவாக்கம் என்ற பெயரில் நவீன அக்ரஹாரங்களை உருவாக்குவதும் அதனை சட்டபூர்வமாக நீதிமன்றங்கள் மூலமாக அங்கீகாரம் பெற எத்தனிப்பதும் நடை பெறும் நிலையில் இவர்கள் எப்படி அனைவருக்குமான வளர்ச்சியை சிந்திப்பார்கள்? அதனை அமைதியாக இந்த நாட்டின் பெருவாரியான மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் இவர்களை, இவர்களின் சித்தாந்தங்களை வெகுஜன மக்கள் நிராகரிக்காமல் என்ன செய்வார்கள். அடித்தட்டு மக்களை, அவர்களின் தேவையை, அவர்களுக்கான வளர்ச்சியை, கனவினை முற்றிலுமாய் அலட்சியப்படுத்திவிட்டு, தங்களை, தங்கள் மேதாவித்தனத்தினை, மேனாமினுக்கித் தனத்தினை மக்கள் அங்கீகரிக்க வேண்டுமென்று வேறு இவர்கள் எண்ணுவதுதான் விந்தையிலும் விந்தை. இவர்கள் வாழ்ந்ததும், வளர்ந்ததும், வசதி வாய்ப்புகளைப் பெற்றதும் இந்த நாட்டின் வரிப்பணத்தில்தான், இந்த அரசியல் அமைப்பினால்தான், இதுவரையில் இந்த நாடு கடைபிடித்த கொள்கைகளால்தான். ஆனால் புதிதாய் கிடைத்த வளர்ச்சியினால் தாங்கள் ஏதோ வேற்றுக் கிரகவாசிகள் போல் இந்த மக்களைக் கீழானவர்களாகக் கருதி இந்த Midnight Masala மைனர்கள் கிடைத்த ஊடகங்களிலெல்லாம் நீதி போதனை நடத்துவதுதான் அநாகரீகமாய் மட்டுமல்ல, அருவருக்கத் தக்கதுமாயுள்ளது. நாவலாசிரியர் ஜெயகாந்தன் அவர்கள் கூறியது போல இந்த மண்ணில் தாயின் அந்தரங்க உறுப்பில் பிறந்து, அவளின் முலைப்பாலருந்தி, இந்த மண்ணில் உருண்டு புரண்டவர்கள்தான் அனைவரும். பிற நடுத்தர வர்க்கத்தினர் இவர்களை வேடிக்கை பார்த்திருக்கலாமேயொழிய இவர்களின் போராட்டத்தினை வேடிக்கையாகக் கூட நமபவில்லை. அதுதான கர்நாடக தேர்தல் முடிவுகள் காட்டும் பாடம்.

அந்நிய அங்கீகாரம்..

இத்தகைய அநீதிகளை எதிர்த்துப் போராடுவதாய் போக்குக் காட்டுபவர்களுக்கு அந்நிய அங்கீகார நாடகம் வேண்டாமா? அதுவும் இவர்களால் மிகவும் பாராட்டப்படும் அமெரிக்கர்களின் அங்கீகார நாடகம் மிகவும் முக்கியமானதல்லவா? அப்பொழுதுதானே இந்த வசூல் ராஜாக்களால் அன்னைத் திருநாட்டில் மட்டுமல்ல, அயல் நாட்டிலும் வசூல் செய்ய இயலும். நான்கு மாதங்களின் முன்பாக இந்தியா வந்த ஆரக்கிள் குழுமத்தின் Thomas Friedman, புதிதாய் வாழ்வு வந்த (அவருக்குத் தெரிந்ததைப் பேசியுள்ளார்..இந்த நடுத்தர வர்க்க மைனர் அம்பிகள் கால காலமாய் நாம் பார்ப்பவர்கள்தான்) இந்த மைனர்கள்தான் இந்தியாவின் எதிர்காலத்தினை நிர்ணயிப்பார்கள் என்பதாக அவர்களை உச்சி மோந்து கொண்டரென்பது நினைவு கூரத்தக்கது. இத்தகைய வெளி நாட்டு நபர்களின் பாரட்டினை உருவாக்கம் செய்து அதனை உண்மையென வெளிச்சம் போடும் பொழுதில் இவர்கள் இரட்டிப்பு புளகாங்கிதம் அடைவதனை நாம் பல சமயங்களில் காண இயலும். இவர்களைச் சார்ந்தவர்களை வைத்து இவர்களே அந்த வெளி நாட்டினரை அழைத்து வந்து தங்களைப் பாராட்டி அதனை ஊடகங்களில் முன்னிறுத்திச் செயல்படுவது - சமீபத்தில் குஜராத்தில் வெட்ட வெளிச்சமானது போல - நாம் காணக் கூடியதுதான். ஆனால் இத்தகைய கணிப்புகளில்கூட மண்விழுந்தது போல் நடந்து கொண்ட இந்த கர்நாடக வாக்காளர்களை ஒழுங்கீனர்களாகவும், அரசியல் பூர்வமாய்ப் பின் தங்கியவர்களாகவும் சித்தரிக்கக் கூட முயல்வார்கள். ஏனென்றால் கனவில் மண் விழுந்துவிட்டதல்லவா?

லோக்பாலா.. மைனா பாலா...

இந்த அக்கினிக் குஞ்சுகளின் பின்னால் இந்த இந்தியாவே ஓடி வரும் என்றும் அணிதிரண்ட மைனர் அம்பிகள் மற்றும் ஊடகங்களின் தயவால் ஊரெங்கும் பரவிய வியாதிகளில் ஒன்றுதான் லோக்பால். வழக்கறிஞர்களுக்கே எத்தனை சட்டங்கள் உள்ளன என்று தெரியாத நிலையில் இன்னுமொரு சட்டத்தினால் என்ன ஆகி விடப் போகின்றதோ தெரியவில்லை. ஆடத் தெரியாதவன் கூடம் கோணல் என்றது போல. ஆனாலும், இந்த மக்களுக்கு ஞாபக மறதி அதிகம்தான். பின்னே ஊடக மைனர் அம்பிகள் இவ்வளவு கரடியாய்க் கத்தியும், கும்கி மேனன் வந்த பின்பு மைனா பாலையே மறந்து போனது போல லோக்பாலையுமல்லவா மறந்து விட்டார்கள்?

‘நிர்பயா’ வில் காணாமல் போன மைனா பாலை இல்லையில்லை லோக்பாலை நமது உள்ளூர் காவித் தம்பிகளையும், பூஜ்ய ஸ்ரீ களையும் வைத்து எப்படியும் இந்தப் பாராளுமன்றத் தேர்தலுக்குள் தண்ணீர் தெளித்து உசுப்பேற்றிக் கொண்டு வந்து விட மாட்டார்களா என்ன? தணல் அணையாமலிருந்தால்தானே தேர்தலில் தாங்கள் நினைத்தவர்களை ஆட்சி பீடத்தில் அமர்த்த இயலும்.

ஏன் அரசியல்வாதிகளை எதிர்க்கிறார்கள்..

தங்களின் நேர்மைக்கும், தகுதிக்கும் தாங்கள் அமெரிக்காவிலிருக்க வேண்டும், ஏனென்றால் அங்கேதானே இவர்களால் மைனாரிட்டி உரிமையைப் பெற முடிகின்றது. இங்கு கேவலமாய் இட ஒதுக்கீட்டினை பேசும் இந்த மைனர்கள் அங்கே இட ஒதுக்கீடு வாங்குவது அமெரிக்க பகவான்களின் அனுக்கிரஹமோ என்னவோ? இந்த பிரம்ம / சிதம்பர ரகசியங்கள் பற்றி விரல் சூப்பும் ஊடக உலகம் மறந்தும் வெளிப்படுத்துவதில்லையே. அதனால்தான் இங்குள்ள அரசியலை அமெரிக்க மயமாக்குவதில் மும்முரமாய்ச் செயல்படுகின்றனர்.

அதன் ஒரு கட்டமாகத்தான் இவர்கள் முனைப்புடன் இங்கு நிகழும் அனைத்துத் தவறுகளுக்கும் அரசியல்வாதிகளைக் காரணமாக்குகின்றனர். அதாவது அனைத்துத் தவறுகளுக்கும் அரசியல்வாதிகளையே காரணமாக்குவதன் மூலமாக பெரு முதலாளிகளின், பல பகாசுர வர்த்தக நிறுவனங்களின் ஊழல்களும், குற்றங்களும் திட்டமிட்டுத் திசை திருப்பப் படுகின்றன. சாதாரணமாகப் பார்த்தோமேயானால் கூட நாட்டின் செல்வங்கள் மற்றும் வளங்களினைக் கொள்ளையிடுவதனைத் தூண்டுவதும் அதனால் பலனடைவதும் இந்த வியாபார நிறுவனங்களாகவும், வங்கிகளைத் திவாலாக்கி விளையாடும் விஜய் மல்லையா மற்றும் அரசையும் நாட்டின் வளர்ச்சியையுமே கேள்விக்குறியாக்கி போக்குக் காட்டும் அம்பானி போன்ற வியாபாரிகளாகவும்தான் இருக்க முடியும்.

ஆனால் அவர்களிடம் கோடிக் கணக்கில் நன்கொடை பெற்றுக் கொள்ளும் இவர்களின் தொண்டு நிறுவனங்களயோ, பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ களையோ இவர்கள் மறந்தும் கேள்வி கேட்பதில்லை. இப்படிப்பட்ட இவர்கள் கூறும் மாற்று அரசியலான அமெரிக்க அரசியலைப் பற்றிப் பார்த்தோமேயானால் அதுவும் இவர்களைப் போன்றே பல்லிளிக்கக் கூடியதுதான். கிட்டத்தட்ட 1500 கோடி டாலர்களை தேர்தல் நிதியாகப் பெற்று அதிபர் தேர்தலுக்காகச் செலவளிக்கும் அமெரிக்க அரசியல்வாதிகள், அதனை சேகரித்துத் தருபவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாதவர்களைப் போலவும், இங்கிலாந்துப் பிரதமர்கள் லண்டனிலுள்ள ஏதோவொரு வர்த்தக நிறுவனத்தின் பொருளாதார நலனில் அக்கறையுடைய விற்பனைப் பிரதிநிதிகளாகத் தங்களைத் தாங்களே தரம் தாழ்த்திக் கொண்டதைப் பற்றியும் இவர்களுக்கு ஒன்றுமே புரியாதது போல் காண்பித்துக் கொள்கின்றனர்.

உண்மையென்னவென்றால் இந்த நாட்டின் ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் முக்கியமானதாகக் கருதப்படுவது பாராளுமன்றமும், சட்டமன்றமும்தான். அதன் உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நிலையில், பெரும்பான்மையான மக்களின் ஆதரவுடடையவர்களே தேர்ந்தெடுக்கப்பட இயலும். அதனால்தான் நாடாளும் மன்றங்களில் அது பஞ்சாயத்தோ, பாராளுமன்றமோ பிற சமுதாயத்தினர் வர இயல்கின்றது. அதில் அவர்களுக்கான குரல் அதிகமாகிக் கொண்டே வருவதும் அதில் இவர்கள் ஆதிக்கம் படிப்படியாய்க் குறைவதும்தான் இவர்களின் ஊழல் எதிர்ப்பானது அரசியலையும், அரசியல்வாதிகளையும் மட்டும் மையப்படுத்துவதன் காரணம். இதுதான் நவீன சாணக்கியத்தனம்.

மற்ற ஊடகம் உள்ளிட்ட மூன்று ஜனநாயக அமைப்புகளிலும் இவர்கள் ஆதிக்கம் கொடி கட்டிப் பறக்கும் நிலையில் குறிப்பாக தங்கள் கையிலுள்ள ஊடக உதவியினால் தொடர்ந்து அரசியல்வாதிகளை அதிலும் குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் கீழ்த்தரமாக விமர்சிக்கத் தலைப்படுகின்றனர்.

இன்றும் கூட மின் ஊடகங்களில் இவர்கள், முகம் தெரியாதவர்கள் என்ற பெயரில் பிற வகுப்பு அரசியல்வாதிகளை, தங்களுக்குப் பிடிக்காத சித்தாந்தங்களுடைய அரசியல் கட்சிகளை, அவர்தம் குடும்பத்தினரை, தனிப்பட்ட வாழ்வினையும் கூட ஆபாசமாய் அர்ச்சித்துத் தங்கள் கோர முகங்களை வெளிப்படுத்துவதனைக் காண இயலும்.

அறுபது ஆண்டுகளாக நாட்டை சீரழித்தது யார்..

அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அதிகார மையங்களெல்லாம் இந்த உயர்ஜாதி ஆதிக்கத்தில்தானே இருந்தது. ஏன் இந்த வானத்தை இவர்களால் வளைக்கவோ, வசப்படுத்தவோ முடியவில்லை? அவர்களின் தகுதியும், திறமையும் அவ்வளவுதானா?

ஊரெல்லாம் வெளிப்படைத் தன்மை குறித்து பாடம் நடத்தும் பொழுதில், மத்திய பணியாளர் தேர்வாணையம் உச்சநீதி மன்றத்திலேயே தங்களின் தெரிவு பற்றி வெளிப்படையாக்காமல் இருப்பது ஏன்? கிட்டத் தட்ட விடுதலையடைந்து அறுபது ஆண்டுகளுக்கு மேலாகியும் இதில் கூட வெளிப்படையாய் இருக்க இயலாதவர்களால் எதை வெளிப்படையாய் கூற இயலும்?

சேஷன் தேர்தல் கமிஷனர் ஆனார், அவரால்தான் அந்தப் பதவி புனிதமடைந்தது என புளகாங்கிதமடைந்தால் அதற்கு முன்னால் அந்த அமைப்பில பதவி வகித்தவர்கள் யார்? பிற்படுத்தப்பட்டவர்களா அல்லது தாழ்த்தப்பட்டவர்களா? இல்லையே.. பின் ஏன் மற்றவர்களால் எந்த முன்னேற்றத்தினையும் கொண்டு வர இயலவில்லை?

இன்று மத்திய கணக்குத் துறை பலவற்றில் முறைகேடுகளைக் கண்டறிந்துள்ளது. சரிதான். அப்படியானால் கடந்த அறுபது ஆண்டுகளாக இந்த அமைப்பு என்ன செய்தது கொண்டிருந்தது. அது கடமையை செய்யத் தவறியது என்றால் அதற்கான தண்டனை என்ன? அதிலென்ன பிற்படுத்தப்பட்டவர்களும், தாழ்த்தப்பட்டவர்களுமா தலைமை வகித்தார்கள், இல்லையே?

வருமான வரி கட்டாத பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ கள், கருப்புப் பணப் பாதுகாவலர்களாய், ஊரெல்லாம் ஆஸ்ரமம் அமைத்து சொந்த வர்ணத்தின் வளர்ச்சிக்கு உதவுவதால்தானே கேள்வி கேட்பாரின்றி உலா வர இயல்கின்றது. அதனை இதுவரையில் ஏன் ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயலவில்லை?.

இவர்கள் யாரும் இந்த ஊடக நிறுவனங்களுக்கும், வர்த்தக நிறுவனங்களுக்குமான நியாயமற்ற உறவினை எங்காவது கேள்வி கேட்கின்றார்களா?

இதில் இவர்கள் சமநீதிக்கான மாணவர் அமைப்பு என்ற பெயரில் தேர்தல் களத்தில் வேட்பாளர்களை இறக்கி ஆழம் பார்ப்பதும் நடை பெற்றுக் கொண்டுதான் உள்ளது. இவற்றிற்கெல்லாம் பணம் வேண்டுமே.. அதென்னங்காணும் பெரிய விஷயம்.. நமக்குத்தான் இந்த பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளனவல்லவா?

இவர்களுக்கு சட்டபூர்வமான பிரச்னைகளுக்குத்தான் இந்த அரசின் மிகப் பெரிய பதவிகளில் சுகம் கண்டவர்கள், பொது நல வழக்குக்காகவே ஒரு தொண்டு நிறுவனத்தினை உருவாக்கி நீதி மன்றத்தில் இட ஒதுக்கீடு முதல் இன்றைய மத்திய அரசினை எதிர்த்து பல வழக்குளை பொது நல வழக்காகப் பதிவு செய்வது வாடிக்கையாகி வருகின்றதே அது எதனால்? இதற்கும் மத்திய அரசு தனக்குத் தெரியாமலே தொண்டு நிறுவனங்களுக்கான உதவிகளைச் செய்யுமோ என்னவோ? இந்த முன்னாள் அதிகார கனவான்களுக்கு இன்று அதிகாரத்திலிருப்போர் பல வசதிகளைச் செய்து தந்து கொண்டுதானே இருக்கின்றனர். அதற்காக பொருள் வேண்டுமென்பதற்குத்தானே அரசின் மக்கள் நலத் திட்டங்களை தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்குத் திருப்பி விடும் முயற்சிகளில் வெற்றியடைந்துள்ளனர். இந்தத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பின்னால் இருப்பவர்கள் யாரென்று பார்த்தோமேயானால் இவை யாருக்கான தொண்டு நிறுவனங்கள் என்பது புரியும். ஆனால் இந்த அரசின் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் மறைமுகமாக இவர்களுக்கு உதவுவதுதான் இத்தகைய சீரழிவுகளுக்குக் காரணம். அரசின் பணம் தங்கள் ஜாதியினருக்குப் பயன்படும் விதமாக எப்படியெல்லாம் சிந்தித்து ஆமாம் ரூம் போட்டு..அந்த ரூமையும் அரசின் செலவிலேயே போடப்படும்.. தங்கள் இனத்திற்காய் செயல் படுகின்றனர் இவர்கள். பலன்கள் எந்த மக்களைச் சென்று சேரும் என்பது தெரியாததா என்ன?

கோயில் நிலங்கள் கொள்ளை என்று ஊரே பாட்டாய்ப் பாடும் இவர்கள், மயிலாப்பூரின் பிரபலப் பள்ளி அமைந்துள்ள இடமே கபாலி கோயில் நிலம் என்பதும் அதற்கு அந்தப் பள்ளி செலுத்தும் வாடகைத் தொகை அற்ப சொற்பம் என்பதும் தெரியாதவர்களா? பிரபலக் கர்நாடக இசைப் பாடகர் வீடு அமைந்திருப்பதும் அக்கோயில் நிலத்தில்தானே. அதற்காக அவர் உயர் நீதி மன்றம் சென்றவர்தானே.. சிவன் கோயில் சொத்து குல நாசம் .. யாருக்கு..?

தன்னிச்சையா.. லோக்பாலா...

இதையெல்லாம் மறந்து விட்டு, தன்னிச்சையான அமைப்புகளை உருவாக்கத் தலைப்படுவது அதிகார வர்க்கமும், ஆன்மீக வளர்ச்சியும், ஊடக உலகமும் தங்களுக்காக தங்களால் தாங்களே உருவாக்கிக் கொண்டது என்பதும், அதில் விரிசல் விழுந்து விடுமோ எனும் போதில் இத்தகைய போராட்டங்கள் மூலமாக மக்களைத் திசை திருப்பி தங்கள் அதிகார ஆதிக்கத்தினை நிலை நிறுத்த முயல்வதுதான் இந்த மைனர் அம்பிகளின் ஆயுதம். அதற்கு விலைபோவதில் பிற சமுதாயத்தின் சந்தர்ப்பவாதிகள்.

ஏழை பாழைகளின் காணி நிலக் கனவுகளைக் காவு கொடுத்து வானளாவிய அதிகாரக் கனவுகளில் வளைய வரும் இந்த அதிகாரக் கும்பலின் கைப்பாவையாய்ச் செயல்படும் தரகுக் கும்பல்களாய் மாறி விட்ட அச்சு ஊடக வியாபாரிகள்.

மன்னர்களைக் கேள்வி கேட்போம்... எங்களை...

வியப்பான விசயமென்னவென்றால் பிரதமரையே கேள்வி கேட்கும் அமைப்பு தேவையென்று ஓலமிடும் நபர்கள், CBI, CAG, UPSC போன்ற அமைப்புகள் தன்னாட்சி பெற்ற அமைப்புகளாயிருக்க வேண்டும் அவற்றின் அதிகாரத்தில் எவ்விதத் தலையீடும் இருக்கக் கூடாது என்று அங்கலாய்ப்பதன் காரணம் பெரிய சிதம்பர ரகசியமொன்றுமல்ல. அவர்களுக்கான அமைப்பாக இவையெல்லாம் வர்ணாஷ்ரமத்தினைப் போற்றிப் பாதுகாப்பதாக இருக்க வேண்டுமென்பதும் மற்றவர்களை மடையர்களாக்கி தங்கள் அதிகாரத்தினை நிலை நாட்டுவதும்தான்.

அரசனையே கேள்வி கேட்கும் அதிகாரமுள்ளவர்கள் இன்றும் அதனை எதிர்பார்ப்பதும், ஆனால் தாங்கள் வழ்க்கம் போல இந்த சட்ட நடைமுறைகளுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதால்தானே தன்னாட்சி பெற்ற அமைப்புகள் வேண்டும் என்று மறு புறம் கூக்குரலிட்டு அதற்கு நமது அறிவிலிகளைத் துணையாக்கிக் கொள்வதும் நடந்து கொண்டுள்ளது.

இந்த அமைப்புகளுக்கான கடிவாளம் எங்கு உள்ளது? கடிவாளமே இல்லையென்றால் அவையென்ன தவறே செய்யாதவர்களால் கட்டமைக்கப்பட்டவையா? அதில் தவறேதும் நடை பெற வாய்ப்பேயில்லையா? அப்படியிருக்க இயலுமா என்றால் இயலாது என்பதுதான் உண்மையாயிருக்க முடியும்.

மத்திய பணியாளர் தேர்வாணையம்

உதாரணமாக மத்திய பணியாளர் தேர்வாணையம் பற்றிப் பாத்தோமேயானால் அது கடந்த ஆண்டு வரையில் குடிமைப் பணிகளுக்கான தனது தெரிவுகள் பற்றி, மதிப்பெண்கள் பற்றி முறையாக வெளிப்படையாக்க நீதி மன்றத்திலேயே மறுத்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டில் மதிப்பெண் பட்டியலை வேறு வழியின்றி வெளிக் கொணர்ந்தது. அதிலும் நாம் கூர்ந்து கவனித்து ஆராய வேண்டியது இந்த நேர்காணல் மதிப்பெண்கள்தான், ஏனென்றால் அதில்தான் பல சித்து வேலைகளைச் செய்ய வாய்ப்புகள் அதிகமாயிருக்கின்றது. இப்பொழுது வெளியிட்ட மதிப்பெண்களின் படி உயரிய மதிப்பெண்ணே 53 சதவிகிதம்தானென்றால் அங்கிருக்கும் தகுதியும் திறமையும் அவ்வளவுதானே? பொதுப் பிரிவினரின் தகுதி மதிப்பெண்கள் குறைந்த பட்சமாக 45 சதவிகிதம் வரை என்று கூறப்பட்டுள்ளது. அப்படியென்றால் இந்தத் தகுதியை ஏன் வெளியிட இதுவரை மறுத்து வந்தார்கள்? பிற சமூகத்தினரின் குறைந்த பட்சத் தகுதி மதிப்பெண்கள் இதிலிருந்து 10 சதவிகிதம் வரை குறந்துள்ளது. இதுவும் கூட தொடர்ந்த நீதிமன்ற வழ்க்குகளுக்குப் பின்புதான நடைபெற்றது. அதுவரையில் பொதுப்பிரிவில் உயர் ஜாதி மாணவர்களை மட்டும் கணக்கிட்டு 50.5 சதவிகிதம் சட்ட விரோத இட ஒதுக்கீட்டினை அனுமதித்து வந்தது தவறான வழிமுறைதானே! பொதுப் பிரிவில் பிற சமுதாயத்தினரை நயவஞ்சகமாக ஓரங்கட்டி சட்ட விரோத இட ஒதுக்கீட்டினை இன்னும் பல பொதுத் துறை நிறுவனங்கள் அனுமதித்துக் கொண்டுதானே உள்ளன.

நீதி

பல முறை தேச முக்கியத்துவம் வாய்ந்த பல பிரச்னைகளில் உயர்வான நடத்தையினை நிரூபித்திருக்கும் நீதிமன்றங்களே சில குறைபாடுகளைச் சீர் செய்ய வேண்டிய நிலையில் இருப்பதுதான் இன்றைய நிலவரம்.

இவையெல்லாம் நீதிமன்ற்ங்களின் மேலான நன்மதிப்பைக் குறைப்பதற்காகவோ அல்லது அதன் சுதந்திரத்தினைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காகவோ அல்ல. மாறாக அதனுடைய செயல் பாடுகள் இன்னும் கூர்மையுடன் சாதாரண மக்களுக்கான இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கான பிரச்னைகளைக் கனிவுடன் அணுக வேண்டும் என்பதுதான்.

உச்ச நீதிமன்றமே மணப்பெண் எரிப்பு வழக்கொன்றில் பஞ்சாப் உயர் நீதிமன்றத்தின் வரைமுறையற்ற, பகுத்தறிவுக்கு ஒவ்வாத வாய்தாக்கள் கண்டு தாங்கொணாத் துயரும், வேதனையும் அடைந்ததாகக் கூறியுள்ளது நினைவு கூரத்தக்கது

இன்றைய சூழலில் மாவட்ட நீதி மன்றங்களில் 2.7 கோடி வழ்க்குகளும், உயர் நீதி மன்றங்களில் கிட்டத்தட்ட 50 லட்சம் வழக்குகளும், உச்ச நீதிமன்றத்தில் 50000 வழ்க்குகளும் நிலுவையில் உள்ளதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மாவட்ட நீதி மன்றங்களில் 3422 பணியிடங்களும், உயர் நீதி மன்றங்களில் 276 பணியிடங்களும், நிரப்பப் படாமலுள்ளது. மேலும் இந்த நீதிபதி பணி நியமனங்களானது உலகில் வேறெங்கும் இல்லாத அளவில் இந்தியாவில் மட்டும் நீதிபதிகளின் குழுவாலேயே நியமிக்கப்படுவதும் விந்தையாயுள்ளது. தங்களுக்குத் தாங்களே நியமனம் செய்து கொள்ளும் இந்த அதிகாரம் சரியற்றது என்று முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மாண்பமை வி ஆர் கிருஷ்ணய்யர் அவர்கள் தொடர்ந்து பவலியுறுத்தி வருவது குறிப்பிடத் தக்கது. கிட்டத தட்ட ஆறு உயர் நீதி மன்றங்களுக்கு அந்தக் குழுவுமே முழு நேரத் தலைமை நீதிபதிகளை நியமிக்க இயலாதிருப்பதுதான் இன்றைய நிலைமை. வெளிப்படைத் தன்மையென்பது இல்லாத இத்தகைய நியமனங்கள், ஏதோ தனித் தீவாய் நீதித் துறையானது செயல் படுவதைத் தானே காட்டுகின்றது.

அது மட்டுமல்ல முன்னாள் தலைமை நீதிபதி வி என் கரே அவர்களே நீதித்துறையில் மலிந்து கிடக்கும் ஊழல்களைக் கள்ளங் கபடமின்றி ஒத்துக் கொண்டுள்ளார்.

தகவலறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கான பதிலில், மத்திய சட்ட அமைச்சகம் கடந்த ஏப்ரல் 2012ல், உயர் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் பணியிலிருக்கும் சுமார் 75 நீதிபதிகள் பற்றிய ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து தக்க நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட உயர் நீதி மன்றங்களின் மற்றும் உசச நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளுக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும், ஆனால் நடவடிக்கை எடுக்கப்பட்ட தகவல்கள் குறித்து தெரியவில்லை என்றும் கூறியுள்ளது குறிப்பிடத் தக்கது.

அவரவர் கவலை...

இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுதில் இந்த நாட்டில் பெரும்பான்மையான மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேறாத வரையில் இந்த மைனர் அம்பிகளின் அரைவேக்காட்டுத்தன ஊழல் ஒழிப்பு என்ற நாடகத்தினை இவர்கள் தங்கள் சபாக்களில் அரங்கேற்றலாம். சபாபதிகளான இந்த ஓய்வு பெற்ற அதிகாரிகளால் அத்தகைய அரங்குகள் நிறைக்கலாம். ஆனால் மக்கள் மன்றம் என்பது வேறு.. அந்த மக்களின் கவலைகள் ஊழலை ஒழித்து ஆடி, பி எம் ட்பில்யூ களில் வெண்ணெய் போன்ற சாலைகளில் வழுக்கிச் செல்ல வேண்டும் என்பதல்ல. அரை வயிற்றுக் கஞ்சியைக் குடித்து விட்டு அடுத்த வேலைச் சாப்பாட்டுக்கு வழியில்லாதவனிடம் கனவு தேசத்தை, தொடர்ந்து ராம ராஜ்யத்தை நிர்மாணிப்பதனை பற்றி இந்த மைனர்கள் விற்பனை செய்தால் அவர்கள் எப்படி அதனை செவி மடுப்பார்கள்.

அவரவருக்கான தேவைகள் வேறு வேறாயிருக்கின்றன. அம்மா கஞ்சிக்கு அழுதால்..பிள்ளை இஞ்சிப் பச்சடிக்கு அழுததாம். மக்கள் மன்றம் வேறு மைனர்களே...எனவே அடுத்த முறை அனைவருக்கும் ஓட்டுரிமை எனும் ஜன நாயகத்தை வேண்டுமானால் மாற்ற முயற்சி செய்யுங்கள்.. ஆம்.. நீங்கள் வேட்பாளர் படித்தவராயிருக்க வேண்டும் முயன்றது போலவே.. ஜன நாயகத்தில் பெருவாரிதான் ஆட்சியாளர்களை நிர்ணயம் செய்யும். அவர்களின் கனவுகளுக்கு வடிவம் கொடுத்துக் கைகொடுத்தீர்களேயென்றால் ஒரு வேளை உங்களின் கவலை அவர்களின் கவலையுமாகலாம்... அதுவரையில் உங்கள் எண்ணம் ஈடேறாது ..

- ரெ.கா.பால முருகன்

Pin It