ஒரு தனி மனிதன் தன்னுடைய ஆளுமையால் இந்த உலகை திரும்பிப் பார்க்கச் செய்யலாம். கவிதையால், கதையால், இசையால், ஓவியத்தால் நடனத்தால், பேச்சாற்றலால், அறிவால் மக்களின் மனங்களை கொள்ளை கொள்ளலாம். அப்படி உலகில் பலர் இருக்கின்றார்கள். அப்படி இருந்த, இருக்கும் பல பேரிடம் படைப்புக் கர்வம் என்ற ஒன்று இருப்பதை நாம் பார்த்திருக்கின்றோம்.
பெரும்பாலும் சாமானிய மனிதர்களின் வாழ்வை ஒட்டி தங்களின் படைப்பை உருவாக்கிக் கொள்ளும் பலரிடம் அது இருப்பதில்லை. அவர்கள் படைப்பு என்பதை தன் வாழ்வின் கடமையாக, உயிர் வாழ்வதற்கான அடையாளமாகக் கருதுவார்கள். ஆனால் தனது படைப்பாற்றலை பணம் ஈட்டும் கருவியாக பயன்படுத்துபவர்களிடம் அந்த படைப்புக் கர்வம் என்னும் தலைக்கனம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.
ஒரு கண நேர மகிழ்ச்சிக்கு நம்மை ஆட்படுத்தும் அது போன்ற நபர்களின் தலைக்கனத்தை வேண்டுமென்றால் போனால் போகின்றது என்று பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் தனது படைப்பாற்றலுக்காக ஊர் மேய்வதற்கான அனுமதியையும் அங்கீகாரத்தையும் கோரினால் அவர்களின் அண்டர்வேயர் நிச்சயம் கிழிக்கப்படும் என்பதை நாம் அன்போடு சொல்லிக் கொள்ள கடமைப் பட்டிருக்கின்றோம்.
இப்படி சில ஆபாச ஆளுமைகள் ஊர் மேய்வதற்கு சிறப்புரிமை கோருவதற்கான தைரியம் எங்கிருந்து வருகின்றது என்றால், தன்னுடைய ஆபாச இலக்கிய மலத்தின் மனத்தில் கிறங்கிக் கிடக்கும் அடிமைகளிடம் இருந்து வருகின்றது.
இந்த அடிமைகள் சாதாரணமானவர்கள் கிடையாது. ஆபாச ஆளுமைகளின் அருவருக்கத்தக்க குப்பைகளுக்கு இவர்கள் தான் இலக்கிய அங்கீகாரம் வழங்குபவர்கள். அவர்களின் ஆபாசக் குப்பைகளை மேடை போட்டு விதந்தோதுபவர்கள், விழா எடுப்பவர்கள், விருது கொடுப்பவர்கள். இன்னும் ஒரு படி மேலே போய் விளக்குப் பிடிப்பவர்கள்.
13 வயது சிறுமியுடன் பாலியல் உறவு கொண்டேன் என சாரு நிவேதிதா என்ற ஒரு நான்காம் தர எழுத்தாளன் எழுதியபோது அவனையும் ஒரு எழுத்தாளுமை என ஒரு அரிப்பெடுத்த கும்பல் கொண்டாடியது. அவனது ஆபாச குப்பைகளை சில மாமா பதிப்பகங்கள் சிலாகித்து வெளியிட்டு கல்லா கட்டியது. இன்றும் கூட அவனுக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கின்றது. அவன் எதை எழுதிக் கொடுத்தாலும் வெளியிடுவதற்கு பதிப்பகங்களும் இருக்கின்றன.
எப்படி கம்பரசத்தைக் கொண்டாடிய பாலியல் வக்கிரம் பிடித்த நபர்களின் உண்மையான யோக்கியதையை அண்ணா வெளியே கொண்டு வந்தாரோ, அதே போல தமிழ்நாட்டில் இருக்கின்ற கவிப் பேரரசர்களின், வாலிபக் கவிஞர்களின் ஆபாசக் குப்பைகளைத் தோண்டி வெளியே எடுத்தால் அவர்களுக்கு முட்டு கொடுக்கும் இலக்கிய அதிமேதாவிகளின் யோக்கியதையை நாம் தெரிந்து கொள்ளலாம்.
எவன் ஒருவன் பாலியல் வக்கிரம் பிடித்தவனாக இருக்கின்றானோ, அவன் தன்னைப் போலவே உள்ள பாலியல் வக்கிரம் பிடித்தவனை ஆதரிக்கின்றான். அது போன்ற கழிசடைகள் தான் பெண்களிடம் ஆதாரத்தைக் கேட்பவர்கள்.
“அவன் உன்னை படுக்க கூப்பிட்டதற்கு ஆதாரம் இருக்கின்றதா?”
“அவன் உன்னை பலவந்தப் படுத்தி பாலியல் உறவு கொண்டான் என்பதற்கு ஆதாரம் இருக்கின்றதா?”
“அப்படி இல்லாமல் குற்றம் சாட்டினால் நீ வேசி, நடத்தை கெட்டவள்."
இப்படி சொல்பவன் ஒரு பிற்போக்குவாதியாய் இருந்தால் “போடா பொறுக்கி நாயே” என்று கடந்து சென்று விடலாம். ஆனால் தன்னை பெரியாரிஸ்ட், கம்யூனிஸ்ட் என்று சொல்லிக் கொள்ளும் நபர்களாக இருந்தால்...? அப்படியும் சிலர் இருக்கின்றார்கள் என்பதும், பாலியல் குற்றவாளிகளுக்கு முட்டுக் கொடுக்கின்றார்கள் என்பதும் வெட்கக் கேடாக இருக்கின்றது.
மலையாளக் கவிஞர் ஓ.என்.வேலுக்குறுப்பு நினைவாக வழங்கப்படும் ஓ.என்.வி விருது இந்த ஆண்டு கவிஞர் வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. மலையாள மொழி தாண்டி பிற மொழிப் படைப்பாளருக்கு இவ்விருது அறிவிக்கப்படுவது இதுதான் முதன்முறையாகும்.
ஆனால் வைரமுத்துவிற்கு விருது வழங்குவதற்கு நடிகை பார்வதி போன்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அவருக்கு வழங்கப்பட இருக்கும் விருது பற்றி மறுபரிசீலினை செய்யப்படும் என ஓ.என்.வி விருதுக்குழு அறிவித்ததை அடுத்து, தனக்கு இன்னும் வழங்கப்படாத விருதை ‘பெருந்தன்மையோடு’ திருப்பித் தருவதாக வைரமுத்து அறிவித்து இருக்கின்றார்.
'ME TOO' விவகாரத்தில் பாடகி சின்மயி உள்ளிட்ட 18 பேர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்தார்கள். ஆனால் வைரமுத்து மீது இதுவரை எந்த நடவடிக்கையையும் ஆளும் அரசுகள் எடுக்கவில்லை.
வைரமுத்து திமுகவின் ஆதரவு பெற்ற எழுத்தாளராக அறியப் பட்டிருந்தாலும் வைரமுத்துவின் ரசிகர் பட்டாளம் அதிமுக, காங்கிரஸ், பிஜேபி என எல்லா இடங்களிலும் இருக்கின்றது.
கார்ப்ரேட் கட்சிகள் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் ரீதியான தாக்குதல்களை எப்போதுமே உணர்வுப்பூர்வமாக அணுகியது கிடையாது. இதற்குக் காரணம் ஒவ்வொரு கட்சியும் பல பாலியல் குற்றவாளிகளை தங்களுடைய கட்சியில் வைத்திருப்பது தான்.
அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை எந்த ஒரு ஊடகமும் அறத்தோடு அனுகவில்லை என்பதை நாம் பார்த்தோம். அவற்றை ஊடகங்களும் பெண்ணியம் பேசும் சில முற்போக்கு அமைப்புகளும் மிக எளிதாகக் கடந்து போயின.
பொள்ளாச்சி பாலியல் வழக்கும், தாத்தாக்கள் சம்மந்தப்பட்ட நிர்மலா தேவி வழக்கும் குற்றவாளிகளைத் தப்புவிக்கும் நோக்கத்திலே நடத்தப்பட்டன. அப்படிப்பட்ட ஆட்சியில் வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்ததில் எப்படி ஆச்சரியப்பட முடியும்?
ஆனால் இன்று பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் போக்சோ உள்ளிட்ட 5 சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டதை அடுத்து தொடர்ச்சியாக பல பள்ளிகள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர் மீதும், சாஸ்த்ரா பல்கலைப் பேராசிரியர் வரதராஜனுக்கு எதிராகவும், பிரைம் ஸ்போர்ட் அகாதெமி என்ற தடகள பயிற்சி நிறுவனத்தை நடத்தி வரும் தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் என்பவர் மீதும் பாலியல் புகார்கள் எழுந்துள்ளது. அரசு நடவடிக்கையும் எடுத்துள்ளது.
ஆனால் இதே அரசு கவிஞர் வைரமுத்து மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுக்களை புறக்கணித்து விட்டு அவருக்கு விருது வழங்கப்படுவதற்கு வாழ்த்து சொல்கின்றது.
இதை நாம் எப்படி எடுத்துக் கொள்வது? அரசியல்வாதிகளையும், அதிகார வர்க்கத்தையும் தெரிந்து வைத்திருந்தால் 18 பெண்களை என்ன, நினைத்த பெண்களை எல்லாம் படுக்கக் கூப்பிடலாம் என்று எடுத்துக் கொள்ளலாமா?
ஸ்டாலினே வாழ்த்து சொல்லி விட்டதால் சில பெண்ணியவாதிகள் முரட்டுத்தனமாக வைரமுத்துவுக்கு முட்டுக் கொடுக்கின்றார்கள். அவர்கள் ஊர் மேயும் பார்ப்பனன் குறித்தும், சூத்திரன் குறித்தும் வர்ண பேதத்தின் வெளிச்சத்தில் கருத்து சொல்கின்றார்கள்.
தவறு யார் செய்தாலும் தவறு என்பது தான் நீதியே ஒழிய, அதிகார பலமும், பண பலமும் பொருந்திய சிலருக்கு விலக்கு அளிப்பது எப்படி நீதியாக இருக்க முடியும்?. ஆனால் சில முற்போக்காளர்களுக்கு அதுதான் நீதியாகப் படுகின்றது.
ஏதோ வைரமுத்து பார்ப்பனியத்துக்கு எதிராக போர் முரசு கொட்டும் கவிஞன் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தப் பார்க்கின்றார்கள். ஆனால் வைரமுத்து எவ்வளவு பெரிய பார்ப்பன சொம்பு தூக்கி என்பது யாருக்கும் தெரியாத ரகசியமில்லை.
நட்டு வைத்த வேலுக்கு பொட்டு வைத்து அழகு பார்த்ததும் ஆர்.எஸ்.எஸ் கைக்கூலி தருண் விஜயை அழைத்து வந்து விழா எடுத்ததும், அதற்கு பிரதி பலனாக தேசிய விருதை வாங்கியதும்தான் வைரமுத்துவின் மாபெரும் பார்ப்பனிய எதிர்ப்பு.
அப்படி இருந்தும் ஏன் வைரமுத்துவை குற்றத்தில் இருந்து தப்புவிக்க முற்போக்கு பேசும் சிலர் முயற்சிக்கின்றார்கள் என்றால் சுட்டுவிரல் தன்னையும் நோக்கி இருக்கின்றது என்பதுதான் காரணம்.
பாதிக்கப்பட்ட பெண்களை வழக்கு தொடு என்கின்றார்கள். வாய் கிழிய பெண்ணியம் பேசிவிட்டு தன்னுடைய அமைப்புகளில் ஒரு பெண்ணைக் கூட தலைமைப் பொறுப்பில் நியமிக்காத யோக்கிய சிகாமணிகள் இன்னமும் இந்த கேடுகெட்ட ஆணாதிக்க வக்கிரம் பிடித்த மண்ணின் கள எதார்த்தம் தெரியாமல் மாய உலகில் உலாவிக் கொண்டு இருக்கின்றார்கள்.
இந்திய நீதிமன்றங்களில் புரையோடிப் போய் இருக்கும் ஆணாதிக்க சிந்தனை எப்படி பாதிக்கப்பட்ட பெண்களை அணுகுகின்றது என்பதற்கு தற்போதைய சூடான ஆதாரம் தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் மீதான குற்றச்சாட்டுகள் தள்ளுபடி செய்யப்பட்டது தான்.
அவரை விடுதலை செய்ய நீதிபதி சொன்ன காரணம் பாலியல் குற்ற வழக்குகளில் ஆதாரம் கேட்கும் அனைத்து அயோக்கியர்களுக்கும் நிச்சயம் செருப்படியாக இருக்கும்.
தீர்ப்பு கொடுத்த மேன்மை மிகு நீதிபதி க்ஷமா ஜோஷி அவர்கள் “பாலியல் தாக்குதல் நடந்ததாகக் கூறப்பட்ட சிறிது நேரத்திலேயே எடுக்கப்பட்ட புகைப்படங்களில், அந்த இளம் பெண் 'புன்னகையுடனும் மகிழ்ச்சியாகவும், சாதாரணமாகவும், நல்ல மனநிலையில் இருந்ததாகவும்', "அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்பட்ட உடனேயே எடுக்கப்பட்ட இந்தப் படங்களில், அவர் எந்த வகையிலும் அதிர்ச்சிக்கோ அச்சத்துக்கோ ஆளானதாகத் தெரியவில்லை' என்றும் தனது துப்பறியும் அறிவை வெளிப்படுத்தி இருக்கின்றார்.
மேலும் பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை தனது அறையில் உடன் வசிக்கும் பெண் தோழியிடம் கூறாமல், மூன்று ஆண் சகாக்களிடம் கூறியது குறித்து கேள்வி எழுப்பி இருக்கின்றார்.
ஏன் அந்தப் பெண் தன் நண்பர்களிடம் சொல்லி அழவில்லை என்றும், பாதிக்கப்பட்ட பெண் நடந்து கொள்ளும் வழக்கமான முறையில் நடந்து கொள்ளவில்லை என்றும், அவர் கடுமையாகப் போராடியதாகக் கூறுகிறார்; ஆனால் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பது நம்ப முடியாததாக இருக்கிறது என்றும் நீதிபதி தீர்ப்பு எழுதி இருக்கின்றார். (நன்றி:பிபிசி).
இப்போது சொல்லுங்கள் வைரமுத்துவுக்கு முட்டுக் கொடுக்கும் முற்போக்கு வியாதிகளே!. இந்திய நீதி அமைப்புகள் இந்த லட்சணத்தில் இருக்கும் போது உங்களுக்கு ஆதாரம் ஒரு கேடா? இனி உங்களிடமோ உங்கள் அமைப்புகளிடமோ பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுத்தால் அவர்களிடம் வீடியோ இருக்கின்றதா எனக் கேளுங்கள். த்தூ…
எப்படி புழுக்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக மலம் இருக்கின்றதோ, அதே போல பாலியல் வக்கிரம் பிடித்த பொறுக்கிகள் பாதுகாப்பாக வாழும் இடமாக உங்கள் அமைப்புகள் மாறாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
- செ.கார்கி