வன்கொடுமைப் புகார்கள் பல்வேறு அழுத்தங்கள் காரணமாக முதல் தகவல் அறிக்கையாகப் பதிவு செய்யப்பட்டாலும்கூட, மிகப் பெரும்பான்மையான நேர்வுகளில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவு களை உள்ளடக்கிய குற்றப் பத்திரிகையாக அது பரிமாணம் பெறுவதில்லை. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுதல் தொடர்பான புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, இந்த உண்மை தெளிவாகப் புலப்படும். வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகளை உள்ளடக்கி தாக்கல் செய்யப்படும் மிகச் சில வழக்குகளும்கூட, வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகள் இவ்வழக்கிற்குப் பொருந்தாது என்று நீதிமன்றங்களால் கூறப்பட்டு, குற்றச்சாட்டுகள் விலக்கப்படுகின்றன.

உள்ளாட்சித் தேர்தலில் பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு, ஆதிக்க சாதியினரின் எதிர்ப்பை மீறி போட்டியிட்டு வென்ற காரணத்திற்காக, தலைவர் முருகேசன் மற்றும் அய்வர் படுகொலை செய்யப்பட்ட மேலவளவு வழக்கு; இலவச தொகுப்பு வீடு ஒதுக்கீடு செய்ய வாங்கிய லஞ்சப் பணத்தை திருப்பிக் கேட்டதற்காக கொடுந்தாக்குதல் நடத்தி, இரு தலித்துகளை மலந்தின்ன செய்த திண்ணியம் வழக்கு; கோயில் பொது நிலத்தை ஆதிக்கச் சாதியினருடன் சட்டப்படி போட்டி போட்டு ஏலம் எடுத்ததற்காக இரு தலித்துகள் படுகொலை செய்யப்பட்ட சென்னகரம்பட்டி வழக்கு போன்ற தமிழகம் அளவிலான மிகப்பெரிய, நன்கு அறியப்பட நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகளும், ஒரு தலித் குடும்பம் ஆதிக்கச் சாதியினரின் கட்டுப்பாட்டை மீறி, தங்கள் உழைப்பால் தன்மானத்துடன் தனித்து தலை நிமிர்ந்து வாழ்ந்த காரணத்தால் நிகழ்த்தப்பட்ட, தேசிய அளவில் அறியப்பட்ட, மகாராட்டிர மாநிலம் கயர்லாஞ்சி வன்கொடுமையும்கூட நீதிமன்றங்களால் அவ்வழக்குகளுக்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகள் பொருந்தாது என்று தீர்ப்புரைக்கப்பட்டுள்ளது, இந்தியர்களிடையே எவ்வித அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை என்பது வேதனைக்குரியது.

வன்கொடுமைப் புகார் முதல் தகவல் அறிக்கையாகப் பதிவு செய்யப்பட்ட பிறகு, அவ்வழக்கை துணைக் காவல் கண்காணிப்பாளர் பதவிக்குக் குறையாத ஒரு காவல் அதிகாரியால் புலன் விசாரணை செய்யப்பட வேண்டும் என்று வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விதி 7 கூறுகிறது. ஆனால், பெரும்பாலான வன்கொடுமை வழக்குகளில், புலன் விசாரணை இவ்வாறு 30 நாட்களுக்குள் முடிக்கப்படுவதில்லை. மாறாக, வன்கொடுமைப் புகாரை, வன்கொடுமை நிகழ்வே நடைபெறவில்லை; பொய்யான புகார் என்று முடிவெடுக்க காவல் துறையினருக்கு உள்நோக்கம் உள்ள வழக்குகளில் மட்டும் புலன் விசாரணை அதிவிரைவாக நடைபெறும். சில வழக்குகளில் 24 மணி நேரத்துக்குள்ளாகவேகூட புலன் விசாரணை முடிக்கப்பட்டு, வன்கொடுமைப் புகார் பொய்யென அறிக்கை தயாரிக்கப்படும்.

இவ்வாறு நடைபெறும் புலன் விசாரணையின் இறுதியில் புலன் விசாரணை அதிகாரி, தனக்கு கிடைத்துள்ள சாட்சிகள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக குற்றப்

பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். புலன் விசாரணை முடிந்த பின் கூடிய விரைவில் இறுதி அறிக்கையை புலன் விசாரணை அதிகாரி, உரிய குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 173 கூறுகிறது.

வன்கொடுமை வழக்குகளில் புலன் விசாரணையை விரைந்து நடத்தி முடித்து, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய அழுத்தம் கொடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் வன்கொடுமை நிகழ்வில் பாதிக்கப்பட்டோருக்கும், அவர்களுக்கு உறுதுணையாகச் செயல்படும் சமூக ஆர்வலர்களுக்கும், மேலும் குறிப்பாக, பாதிக்கப்பட்டோருக்கு சட்ட வழிகாட்டல் மற்றும் அறிவுரை வழங்கும் வழக்குரைஞர்களுக்கும் உண்டு.

ஒருவேளை, சட்ட விதி குறிப்பிட்டுள்ள 30 நாட்களுக்குள் புலன் விசாரணை முடிக்கப்படவில்லையெனில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த காவல் நிலையத்தின் பொதுத் தகவல் அதிகாரிக்கு தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பம் அளித்து, புலன் விசாரணை மேற்கொள்ளும் துணைக் காவல் கண்காணிப்பாளரின் விபரங்கள், அவர் வழக்கை புலன் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நாள், புலன் விசாரணை முடிவடைந்து விட்டதா, முடிவடைந்து விட்டதெனில் குற்றப் பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நாள், குற்றப் பத்திரிகை நீதிமன்றத்தால் கோப் பிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதா என்ற விபரம், கோப்பிற்கு எடுத்துக் கொள்ளப் பட்டதெனில் நீதிமன்றம் வழங்கியுள்ள வழக்குக் கோப்பு எண் போன்ற விபரங்களைக் கோரலாம். இதன் மூலம், காவல் துறையினர் வன்கொடுமை வழக்கின் புலன் விசாரணையை விரைந்து நடத்தி முடிக்க வேண்டிய நிர்பந்த நிலைக்கு தள்ளப்படுவர்.

தகவல் உரிமைச் சட்டத்தின் பிரிவு 8இன்படி ஒரு குற்றவியல் வழக்கின் புலன் விசாரணைக்கோ, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களை கைது செய்வதற்கோ அல்லது குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதற்கோ இடை யூறாக இருக்கக்கூடிய தகவல்களை மட்டுமே காவல் துறையினர் இச்சட்டப்படி விண்ணப்பதாரருக்குத் தர முடியாது என்று கூற முடியும். இந்த வகைப்பாட்டிற்கு உட்படாத தகவல்களைக் கேட்டுப் பெற்றே வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ முடியும் என்பதையும் செயல்பாட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு வன்கொடுமை வழக்கில் சட்டப்படியான கால அவகாசத்திற்குள் காவல் துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக் கொடுக்கப்படும் அழுத்தம் பலனளிக்கவில்லையெனில், குறிப்பிட்ட வன்கொடுமை நிகழ்வில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யுமாறு புலன் விசாரணை அதிகாரிக்கு உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்றத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 482இன் கீழ் மனு தாக்கல் செய்து அத்தகைய உத்தரவைப் பெறலாம். வழக்கு துரிதமாகக் கையாளப் படுவதற்கு இது ஓர் அரிய வாய்ப்பாக அமையும். இதன் மூலம்,

குற்றம் சாட்டப்பட்ட நபர்களும் சாட்சிகளைக் கலைப்பதற்கு வாய்ப்பு ஏதும் இல்லாமல் செய்யவும் முடியும்.

குற்றப் பத்திரிகை கூடிய விரைவில் தாக்கல் செய்ய வைக்கப்பட்டால்தான், வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விதிகளின்படி மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டிய தொகை, பொருள், வேலை போன்ற தீருதவிகளை உடனடியாகப் பெற ஏதுவாக அமையும். ஏனெனில், அவ்விதிகளின்படி தீருதவித் தொகை பெரும்பாலும் மூன்று கட்டங்களில் வழங்கப்பட வேண்டும். முதல் கட்டம், வன்கொடுமை தொடர்பான முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டவுடன்; இரண்டாம் கட்டம்,

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட வுடன்; மூன்றாம் கூட்டம், வழக்கில் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்ட பின். எனவே, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டால்தான் தீருதவியின் பெரும்பகுதி வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் என்பதால், அதற்குரிய அழுத்தம் தரப்பட வேண்டும்.

குற்றப் பத்திரிகையுடன் காவல் துறையினர் பல்வேறு ஆவணங்களைத் தாக்கல் செய்வர். அவற்றில் முக்கியமானவை : 1. முதல் தகவல் அறிக்கை 2. சம்பவத்தைக் கண்ணுற்ற சாட்சிகள் மற்றும் பிற சாட்சிகளின் வாக்குமூலங்கள் 3. சம்பவம் நிகழ்ந்த இடத்தின் வரைபடம் 4. மகஜர் எனப்படும் பார்வை மற்றும் பொருட்களைக் கைப்பற்றுதல் அறிக்கைகள் 5. ஒப்புதல் வாக்குமூலங்கள், 6. உடல்கூராய்வுச் சான்றிதழ் (அ) காயச் சான்றிதழ் 7. மருத்துவரின் இறுதி அறிக்கை 8. பகுப்பாய்வு அறிக்கை 9. கைது அறிக்கை போன்றவையாகும்.

வன்கொடுமைப் புகார் என்பது, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் மீது பட்டியல் சாதியினரல்லாத, பழங்குடியினரல்லாத நபர்களால் இழைக்கப்படும் வன்கொடுமை தொடர்பானது என்பதால், பாதிக்கப்பட்ட நபர்கள் பட்டியல் சாதியினராகவும் பழங்குடியினராகவும் உள்ள தையும், குற்றம் சாட்டப்பட்டவர் வேறு சாதியைச் சார்ந்தவராக இருப்பதையும் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு நிரூபிக்க வேண்டும் என்பதால், வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்டோர் மற்றும் குற்றம் சாட்டப்பட்டோர் ஆகியோரின் சாதிச் சான்றிதழ்களை புலன் விசாரணை அதிகாரி குற்றப்பத்திரிகையுடன் தாக்கல் செய்ய வேண்டியது அவசியம்.

புலன் விசாரணையின்போது தயாரிக்கப்பட வேண்டிய இத்தகைய இந்த ஆவணங்கள் குறித்து இத்தொடரின் 4 ஆம் பகுதியில் ("தலித் முரசு' – ஏப்ரல் 2008) விவரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தாக்கல் செய்யப்படும் குற்றப்பத்திரிகை மற்றும் அதனுடன் இணைந்த ஆவணங்கள் ஆகியவற்றின் சான்றிட்ட நகல்களை, பாதிக்கப்பட்டோர் குறிப்பிட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்குரைஞரின் உதவியுடன் மனு செய்து பெற வேண்டும். அப்படிப் பெற்றவுடன், அதை முழுவதுமாகப் படித்து, ஆய்வு செய்து, வன்கொடுமை நிகழ்வு குறித்த முழு உண்மையும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்றுத் தரும் அளவிற்குப் போதுமானதாக உள்ளதா என்பதைப் பரிசீலிக்க வேண்டும். குற்றப் பத்திரிகையின் போதாமை என்ன என்பதைக் கண்டறிந்து, அதனைக் களைவதன் மூலமே வன்கொடுமையாளருக்கு சட்டப்படியான தண்டனையைப் பெற்றுத் தரமுடியும்.

பெரும்பாலான நேரங்களில் முதல் தகவல் அறிக்கையாகப் பதிவு செய்யப்பட்டாலும்கூட, வன்கொடுமைப் புகார்கள் குற்றப்பத்திரிகையில் வேண்டுமென்றே விடப்பட்டுவிடும். அத்தகைய நேர்வில், புலன் விசாரணை அதிகாரி பதிவு செய்துள்ள சாட்சியங்களின் வாக்குமூலங்களைப் பார்த்தால், விடுபடுதலுக்கான காரணத்தைப் புரிந்து கொள்ள முடியும். வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகளை நீக்கித் தாக்கல் செய்யப்படும் குற்றப்பத்திரிகையைத் தயாரிக்கும் புலன் விசாரணை அதிகாரிகள், வன்கொடுமை நிகழ்வில் புகார்தாரராக இருப்பவர் தவிர மற்ற கண்ணுற்ற, சந்தர்ப்ப சாட்சிகளை விசாரித்து அவர்களின் வாக்குமூலங்களை வேண்டுமென்றே பதிவு செய்வதில்லை. பாதிக்கப்பட்டவர் வன்கொடுமை நிகழ்வின்போது அங்கிருந்த நபர்கள் குறித்த விபரங்களைத் தெரிவிக்கும்போதுகூட, அச்சாட்சிகளை புலன் விசாரணை அதிகாரி விசாரிப்பதில்லை. அப்படியே விசாரித்தாலும், பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்திற்கு முரணாகவே அச்சாட்சிகள் வாக்குமூலம் அளித்திருப்பதாகக் கூறி வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவை குற்றப் பத்திரிகையில் சேர்ப்பதில்லை. அதேபோல், உரிய சாட்சியங்களை – காயச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் போன்றவை – குற்றப்பத்திரிகையுடன் தாக்கல் செய்யாமல் குறையுடையதாகவே நீதிமன்றத்தில் பதிவு செய்கின்றனர்.

இத்தகைய குறைபாடுகள், அவை வழக்கை பாதிக்கும் விதத்தில் அமைந்திருக்கும் பட்சத்தில், கவனமுடன் பரிசீலிக்கப்பட்டு, அந்த வழக்கின் குறிப்பிட்ட புலன் விசாரணை அதிகாரிக்கும், அவரது உயர் காவல் அதிகாரியான மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் எழுத்து மூலமான விரிவான மனுவாகத் தந்து அக்குறைபாடுகளை நீக்கி வழக்கைத் திறம்பட நடத்திட கூடுதல் புலன் விசாரணை செய்யுமாறு கோர வேண்டும். அதற்கு அந்தந்த வழக்கில் காணப்படும் குறைபாடுகளை விரிவாகச் சொல்லி, அவற்றைக் களைவதற்கான ஆதாரங்களையும் அடிப்படையையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

அத்தகைய எந்த மனுவும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கும், புலன்விசாரணை அதிகாரியான துணைக் கண்காணிப்பாளருக்கும் பதிவு அஞ்சலில் அனுப்பப்பட வேண்டும். அம்மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனில், பாதிக்கப்பட்டோர் சார்பாக நீதிமன்றத்தில் மனு செய்யலாம். இம்மனு, முதல் தகவல் அறிக்கை பதிவாகியுள்ள, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திலோ, உயர் நீதிமன்றத்திலோ தாக்கல் செய்து வன்கொடுமை வழக்கில் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 173(8)இன்படி கூடுதல் புலன் விசாரணை செய்யு

மாறு கோரி தக்க ஆணை பெறலாம்.


இக்கட்டுரைத் தொடரின் கடந்த மூன்று பகுதிகளில், காவல் துறையினர் வன்கொடுமை நிகழ்வு தொடர்பான புகாரைப் பொய்யென்று கூறி தள்ளுபடி செய்து ஏற்படுத்தும் சிக்கல்கள் குறித்து விரிவாகப் பார்த்தோம் :

ஒரு வழக்கில் (சங்கர் வழக்கு) முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்ட வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவு புலன் விசாரணை செய்கையில், வன்கொடுமைச் சட்டப் பிரிவு பொருந்தாது என்று கூறி, வழக்கமான இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின்படி மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மற்றொரு வழக்கில் (அழகர்சாமி வழக்கு) வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகளை விடுத்து, கடுமை ஏதுமில்லாத இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின்படி உள்நோக்கத்துடன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர் குற்றத்தை ஒப்புக்கொண்டு – குறைந்த அளவு அபராதம் மட்டுமே செலுத்தி, வன்கொடுமைக் குற்றச்சாட்டிலிருந்து மிக எளிதாகத் தப்பியது. பிறிதொரு வழக்கில் சாட்சிகள் மற்றும் சாட்சியம் அனைத்தும் ஒரு சிறுமியைப் பாலியல் வன்கொடுமை புரிந்ததை நிரூபணம் செய்யுமளவிற்கு இருந்த போதிலும், புலன் விசாரணை அதிகாரியின் உள்நோக்கமுடைய கவனக்குறைவான போக்கின் காரணமாக, பாலியல் வன்கொடுமைப் புகாரே காவல் துறையினரால் தள்ளுபடி செய்யப்பட்டதாகும். இந்த மூன்று வழக்குகளுமே சரியான முறையில் கையாளப்பட்டதன் விளைவாக, வன்கொடுமைப் புகார் மீளவும் விசாரிக்கப்பட தக்க உத்தரவுகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் பெறப்பட்டன.

Pin It