திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், அக்கரைப்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ளது மல்லையாபுரம் கிராமம். வழக்கமாக எல்லா சேரிகளையும் போலவே தலித்துகளுக்கு எதிரான ஆதிக்க சாதியினரின் பெயரையே தாங்கி நிற்கிறது மல்லையா (நாயக்கன்) புரம். மதுரையிலிருந்தும் தேனியிலிருந்தும் வரும் சாலை, தாராபுரம் போகும் சாலையில் இணையும் இடமான செம்பட்டியிலிருந்து தோராயமாக 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு பராமரிப்பில்லாத குண்டும் குழியுமான சாலையில் பயணித்து, மல்லையாபுரத்தை அடைய வேண்டும்.
தமிழகம் முழுவதும் 30.10.2011 அன்று அனைத்து தேர்தல் அரசியல் கட்சித் தலைவர்களாலும், கள்ளர் சாதியினராலும் கொண்டாடப்பட்ட பசும்பொன் முத்துராமலிங்கம் குருபூசையை, மல்லையாபுரம் கிராமத்தில் வாழும் கள்ளர் சாதியினர், தலித்துகள் மீதான வன்முறைத் தாக்குதலுடன் கொண்டாடி முடித்திருக்கின்றனர்.
மல்லையாபுரம் கிராமத்தில், சுமார் 150 சக்கிலியர் குடும்பங்களும், 40 கள்ளர் குடும்பங்களும், சுமார் 350 நாயக்கர் குடும்பங்களும் வசிக்கின்றனர். சக்கிலியர்கள் விவசாயக் கூலிகளாகவும், சென்னை முதலான வெளியூர்களுக்கு சென்று பறையடிப்பதையும் தொழிலாக செய்து வருகின்றனர். கள்ளர் சாதியினர் திருப்பூர் உள்ளிட்ட வெளியூர்களில் வேலை செய்து கொண்டும், கறவை மாடுகள் வைத்து பால் வியாபாரம் செய்யும் தொழிலையும் மேற்கொண்டு வருகின்றனர். நாயக்கர்களிடம்தான் பெரும்பாலான நிலங்கள் உள்ளன, நாயக்கர்கள் விவசாய முதலாளிகளாக உள்ளனர்.
ஆண்டு தோறும் 30.10.2011 அன்று முத்துராமலிங்கம் பிறந்த நாளில் மல்லையாபுரத்தில் ஒரு தோட்டத்திலிருந்து முத்துராமலிங்கத்தின் படம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, ஊரின் மய்யப்பகுதியில் வைத்து கும்மியடித்து பூஜைகள் செய்து கொண்டாடப்படுவதும், ஊர்வலத்தின் போதும் பூஜைக் கொண்டாட்டங்களின் போதும் – உள்ளூர் சக்கிலியர்கள் இலவசமாகப் பறை அடிப்பதும் வழக்கமாக இருந்து வந்துள்ளது.
இந்த ஆண்டும் வந்து இலவசமாகப் பறை அடித்து தருவதாக தலித்துகள் ஒப்புக் கொண்டுள்ளனர். மாலை 4 மணிக்கு ஊர்வலம் கிளம்புகிற நேரத்தில் மழை பெய்து கொண்டிருந்ததால், தலித்துகள் பறை அடிக்கப் போகவில்லை. தலித்துகளை பறையடிக்க வருமாறு மைக்செட் மூலம் கள்ளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். தலித்துகள் செல்போன் மூலம், “மழை பெய்து கொண்டிருப்பதால்தான் வரமுடியவில்லை, மழையில் அடித்தால் தப்பு கிழிந்து விடும், எங்க பொழப்பே போய்விடும்'' என்றும் தகவல் சொல்லியனுப்பியுள்ளனர்.
“ஓ! நாங்க சொல்ற நேரத்துக்கு நீங்க அடிக்க மாட்டீங்க? உங்களுக்கு வசதியான நேரத்துலதான் நாங்க சாமி கும்பிடணுமோ?'' என்று கேட்டு, செல்போனை துண்டித்து விட்டனர். பறை முழக்கம் இல்லாமலேயே பூசை கொண்டாட்டங்களை முடித்து விட்ட கள்ளர் சாதியினரில் சுமார் 40 பேர் கொண்ட கும்பல், தலித்துகள் வசிக்கும் தெருவுக்குள் புகுந்து வீடுகளை அடித்து நொறுக்கி, வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தவர்களை பெயர் சொல்லி தட்டி எழுப்பி, வீடுகளின் தாழ்வாரங்களில் கட்டி தொங்க விடப்பட்டிருந்த பறைகளை கிழித்து எறிந்து, “இந்த தப்ப வெச்சுக்கிட்டுதானடா இந்த ஆட்டம் காட்டுறீங்க?'' என்று சொல்லிக்கொண்டே வீடுகளையும் தலித்துகளையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.
செல்போன் மூலம் தலித்துகள் காவல் நிலையத்துக்கு தகவல் சொல்ல, உடனடியாக செம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் கணேசனும், டி.எஸ்.பியும் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர். முதலில் "மைக்செட்'காரரையும், அவர் அடையாளம் காட்டிய நான்கு பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். வழக்கம் போல ஆதிக்க சாதியினர் வாழும் பகுதிக்கு மட்டும் காவல் துறையினரை பாதுகாப்புக்கு நிறுத்திச் சென்றுள்ளனர். சம்பவ இடத்திலேயே தலித்துகளை விசாரித்த டி.எஸ்.பி., மறுநாள் பசும்பொன் குருபூஜைக்கு போய்விட்டு திரும்ப வருகிறவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய கடமை இருப்பதால், மறுநாள் மாலை 5 மணிக்கு மேல் காவல் நிலையம் வரச்சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
மறுநாள் மாலை 5 மணிக்கு தலித்துகள் காவல் நிலையம் சென்றுள்ளனர். ஆதித்தமிழர் பேரவை மாவட்ட அமைப்புச் செயலர் முருகன், மாவட்டத் தலைவர் ராசாராம், மாவட்ட அமைப்பாளர் சண்முகம், மாவட்டப் பொறுப்பாளர் காளிராஜ், சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி பொறுப்பாளர் ஆபிரகாம் உள்ளிட்டோர் உடன் சென்றுள்ளனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் மைதீன்பாபு, ஆத்தூர் ஒன்றிய செயலாளர் அரசு, தமிழன் தொலைக்காட்சி செய்தியாளர் கதிர் ஆகியோரும் காவல் நிலையத்தில் இருந்துள்ளனர்.
செம்பட்டி காவல்நிலைய ஆய்வாளர் கணேசன் தலித்துகளை நோக்கி, “எழுத்து மூலமான புகார் தந்தால்தான் புகார் பதிவு செய்வேன்! என்னப்பா எழுத்து மூலமான புகார் தர்றீங்ளா?'' என மிரட்டும் தொனியில் கேட்க, தலித்துகள் “நேற்றே வாக்குமூலம் தந்தோமே'' என்று சொல்லியுள்ளனர். இடையில் குறுக்கிட்ட ஆதித்தமிழர் பேரவை மாவட்ட அமைப்புச் செயலர் முருகன் காவல் நிலைய ஆய்வாளரிடம், “என்னங்கய்யா இது அநியாயமாக இருக்கு? பாதிக்கப்பட்ட தலித்துகள் பகுதிக்கு பாதுகாப்பு போடாமல் தாக்குதல் நடத்தியவர்கள் பகுதிக்கு பாதுகாப்பு போட்டிருக்கிறீர்கள்! நேற்றே வாக்குமூலம் பதிவு செய்துவிட்டு அதை வைத்தே முதல் தகவல் அறிக்கை போடாமல், எழுத்து மூலமான புகார் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள்'' எனக்கேட்க, “நீ ஒண்ணும் எனக்கு சட்டம் சொல்லித் தர வேணாம்! இந்த மக்கள் (தலித்துகள்) ஒரு நாளும் ஒண்ணு சேந்து போய் அவங்கள (கள்ளர்களை) அடிச்சுர மாட்டாங்க! அவங்க ஒண்ணு சேந்து அடிச்சுரக்கூடாதேன்னுதான், அங்க போலீச நிறுத்தினேன்!'' என்று சொல்ல, பதிலுக்கு முருகன், “தலித்துகள் ஒருநாளும் ஒண்ணு சேரமாட்டாங்கன்னு எப்படி நீங்களே முடிவு பண்ணலாம்? வாக்குமூலத்தை வைச்சே முதல் தகவல் அறிக்கை போடலாம்; ஆனா எழுத்துப்பூர்வமா புகார் வேணும்னு தலித்துகளை மிரட்டுறீங்க! உங்ககிட்ட நியாயம் கிடைக்கும்னு தெரியல! நாங்க எஸ்.பி.ய பார்க்கப் போகிறோம்'' என்று சொல்லி விட்டு கிளம்ப, காவல் துறையினர் அங்கிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை தலித்துகளிடம் பேசச் சொல்லியுள்ளனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தலித்துகளிடம், “எப்படியும் அவங்க நெலத்துக்குதான் வேலைக்குப் போயாகணும், அவங்கள பகைச்சுகிட்டு வாழ முடியுமான்னு யோசிச்சுப் பாருங்க! வேணுமுன்னா இனிமே, இப்படி அடிக்க மாட்டோம்னு அவங்க கிட்ட எழுதி வாங்கிக்கலாம்!'' என்று சொல்ல, தலித்துகளும் அவ்வாறே எழுதிக் கொடுத்துவிட்டு வந்து விட்டனர். இதற்கிடையில், வீடுகள் நொறுக்கப்பட்ட காட்சிகளை "தமிழன்' தொலைக்காட்சியில் ஒளிபரப்பாமல் இருக்க ஒரு கணிசமான தொகையை பெற்றுக் கொண்டு, விடுதலைச் சிறுத்தைகள், சி.டி.யை கள்ளர்களிடமே கொடுத்தது தனிக்கதை. பிடியாணை தேவைப்படாத குற்றங்களுக்கு யாருடைய புகாரும் தேவையில்லை என்கிற சட்டவிதிகளை எல்லாம் காற்றில் பறக்க விட்டு விட்டு, மநுதர்மத்தை "மிகச் சிறப்பாக'வே நடைமுறைப்படுத்தியுள்ளனர் காவல் துறையினர்.
– நீலவேந்தன், முருகன்