தற்போதைய வங்காள நாட்டின டாக்கா மாவட்டத்தில் சியோரதாலி எனும் கிராமத்தில் 1893 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6 ஆம் நாள், ஜகநாத சாஹ – புவனேசுவரிதேவி தம்பதியினரின் மகனாகப் பிறந்தார்.

                தமது கிராமத்தில் ஆரம்பக் கல்வி பயின்றார். ஆனந்த குமாரதாஸ் என்ற மருத்துவரின் உதவியால் நடுநிலைப்பள்ளியில் சேர்ந்து பயின்று முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். அரசு உதவித் தொகை அளித்தது.

                டாக்கா கல்லூரிப் பள்ளியில் 1905 ஆம் ஆண்டு சேர்ந்து கல்வி பயின்று கொண்டிருந்தார். அப்போது வங்கப் பிரிவினை ஏற்பட்ட காலம். நாடு முழுவதும் வங்கப் பிரிவினைக்கு எதிரான போராட்டம் தீவிரமாக நடைபெற்று வந்தது. மேகநாத் சாஹா பயின்ற பள்ளிக்கு வங்கப் பிரிவினைக்குக் காரணமான ஆளுநர் கர்சன் பிரபு வருகை புரிந்தார். அவரது வருகையை பள்ளி மாணவர்கள் புறக்கணித்தனர். மேகநாத் சாஹாவும் மாணவர்களும் இணைந்து நின்று ஆளுநரை புறக்கணித்ததால், அவருக்கு அரசு வழங்கி வந்த கல்வி உதவித் தொகையை நிறுத்திவிட்டது. பள்ளியை விட்டு வெளியேறினார். அவரிடம் தாய் நாட்டுப் பற்று மேலோங்கி நின்றது.

                கிஷோரிலால் ஜீப்ளி கல்விக்கூடத்தில் சேர்ந்தார். கல்கத்தா பல்கலைக் கழக நுழைவுத் தேர்வில் 1909 ஆம் ஆண்டு கிழக்கு வங்க மாணவர்களில் முதல் மாணவராகத் தேறினார். டாக்கா கல்லூரியில் இடைநிலை அறிவியல் தேர்வில் வேதியியலிலும், கணிதவியலிலும் முதல் தகுதி பெற்றுத் தேர்ச்சியடைந்தார். மேலும், ஜெர்மன் மொழியிலும் தேர்ச்சி பெற்றார்.

                பின்னர், கல்கத்தா பிரசிடென்சிக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். பி.சி.ரே, ஜே.சி.போஸ், டி.என்.மல்லிக், சி.இ.குல்லிஸ் முதலிய புகழ்பெற்ற பேராசிரியர்களிடம் கல்வி கற்கும் நல்வாய்ப்பைப் பெற்றார்.

                கணிதவியலில் இளங்கலைச் சிறப்புப் பட்டம், பயன்பாட்டுக் கணிதவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். இந்தியப் பொருளாதாரப் பணித் தேர்வு எழுத விழைந்தார் சாஹா. அரசு அதற்கு அனுமதி வழங்கவில்லை.

                கல்கத்தா பல்கலைக் கழகத்தில் 1916 ஆம் ஆண்டு புதிதாகப் பல்கலைக் கழக அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது. அக்கல்லூரியில் கணிதவியல் துறையில் விரிவுரையாளராகச் சேர்ந்தார். பின்னர் இயற்பியல் துறைக்கு மாற்றப்பட்டார்.

                சாஹா, நீர்நிலைப்பு இயல், நிறமாலை அளவியல், வெப்ப இயங்கியல் முதலிய தலைப்புகளில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தினார்.

                செல்வி ஏக்னஸ் கிளார் என்பவர் எழுதிய, சூரியன் மற்றும் விண்மீன்கள் குறித்து இரண்டு நூல்கள் சாஹாவின் கவனத்தை ஈர்த்தன. மேலும் பிளாங்க் நெர்னஸ்ட் எழுதிய அறிவியல் நூல்களும் இவரது சிந்தனையைக் கூராக்கின. ஜன்ஸ்டின் பொது சார்பியல் கோட்பாட்டின் நிரூபனத்தை, ஜெர்மன் மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் சாஹா.

                மின்காந்த கோட்பாடுகள் மீதான ஆய்வு முடிவுகள், ‘மேக்ஸ்வெல் தகைவுகள்’ எனும் கட்டுரையை 1917 ஆம் ஆண்டு ஃபிலாசிபிகல் மேகசின்’ என்ற அறிவியல் இதழில் வெளியிட்டார்.

                விண் இயற்பியலில், “தனிப் பாங்கான கதிர்வீச்சு அழுத்தம்” குறித்த இவரது ஆராய்ச்சியைப் பாராட்டி கல்கத்தா பல்கலைக் கழகம் முனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

                சாதாரண நெருப்பில் சோடியம் பொலிவுடனும், சூரிய ஒளியில் இருண்டும் வெளிப்படுவதேன்? “உண்மையில், எரியும் நெருப்பில் சோடியம் தன் கிளர்ந்த நிலையிலிருந்து தாழ்ந்த ஆற்றல் தளத்திற்குக் கீழே விழும்போது தனக்கே உரிய ஆற்றலை உமிழ்கின்றது. அதனால் கோடு பொலிந்து காணப்படுகிறது. அதே வேளையில் சூரியனில் இந்த சோடியம் அவை தனக்கே உரித்தான சூரிய ஆற்றலை உறிஞ்சி புறச் சுற்று வட்டாரத்தில் உள் எலக்ட்ரானை உதறிவிட்டு அயனியாக நிலைத்திருப்பதாயின் நிறமாலையில் இருண்ட கருப்புக் கோடு அல்லது வெற்றிடம் தான் பதிவாகும்.” - இதுதான் ‘சாஹா சமன்பாடு’ ஆகும். இவர் வெளியிட்ட, ‘கோட்பாட்டியல் நோக்கில் விண் இயற்பியல்’ எனும் நூலின் முன்னுரையில், “இத்துறை முன்னோடியாக போர் (Bohr) கருதப்பட்டாலும், அணுக்கோட்பாட்டியல் அடிப்படையில் விண்மீன் நிறமாலையினை விளக்க முற்பட்ட ‘மேகநாத் சாஹா’ எனும் இந்திய இயற்பியலாலர் குறிப்பிடத்தக்கவர்” என்று எஸ்.ரோஸ்லாண்ட் எனும் அறிஞர் குறிப்பிட்டுள்ளார்.

                சாஹா, கல்கத்தா பல்கலைக் கழகம் 1919 ஆம் ஆண்டு வழங்கிய ‘பிரேசந்த்’ ராய்சந்தி உதவித் தொகை’ மூலம் அய்ரோப்பா சென்றார். லண்டனில் இரண்டு ஆண்டுகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். தாயகத்திற்கு 1921 ஆம் ஆண்டு திரும்பினார். கல்கத்தா பல்கலைக் கழகத்தின் இயற்பியல் துறையில் ‘கெய்ரா’ பேராசிரியராகச் சேர்ந்தார். (கெய்ராவைச் சேர்ந்த குமார் குருப்பிரசாத் சிங் பெயரிலான சிறப்பு இருக்கை அது)

                தமது முப்பதாவது வயதில் அலகாபாத் பல்கலைக் கழகத்தில் 1923 ஆம் ஆண்டு, இயற்பியல் துறைத் தலைவராகப் பொறுப்பேற்றார். பதினைந்து ஆண்டுகள் இப்பணியில் நீடித்தார்.

                கல்கத்தா, இந்திய அறிவியல் பேரவைச் சங்கத்தின் இயற்பியல் கணிதத்துறைக் கருத்தரங்கம் 1926 ஆம் ஆண்டு நடைபெற்றது. அக்கருத்தரங்கிற்குத் தலைமை வகித்துச் சிறப்பித்தார்.

                சாஹா இலண்டன் அரசவைக் கழகச் சான்றோனாக (F.R.S.) வும் 1927 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய அரசும் இவரது ஆராய்ச்சிப் பணிக்கு உதவித் தொகை வழங்கியது.

                சாஹா, ஜெர்மனி, இங்கிலாந்து, லாகூர் போன்ற பல இடங்களுக்கு அறிவியல் பயணம் புரிந்தார்.

                கல்கத்தா பல்கலைக் கழகத்தின் இயற்பியல் துறை ‘பாலிட்‘ பேராசிரியராக 1938 ஆம் ஆண்டு பதவி ஏற்றார். கல்கத்தா நகரில் இயங்கிவந்தார். ‘இந்திய அறிவியல் வளர்ச்சி சங்கத்தின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சாஹா பெரும்பாடுபட்டார். இச்சங்கத்தின் இயக்குநராகவும் செயல்பட்டார்.

                அலகாபாத் ‘தேசிய அறிவியல் கழகத்தின்’ முதல் தலைவராகவும், ‘தேசிய அறிவியல் நிறுவனத்தின்’ இரண்டாவது தலைவராகவும் விளங்கினார் சாஹா’

                மேனாள் குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் 1948 ஆம்ஆண்டு நியமித்த, இந்திய அரசின் பல்கலைக் கழகக் கல்விக் குழு உறுப்பினராகவும், ‘இந்திய அறிவியல் செய்திச் சங்கத்தின் வெளியீடான, ‘அறிவியலும் கலாச்சாரமும்’ எனும் திங்களிதழின் கட்டுரையாளராகவும், தேசியத் திட்டக்குழு உறுப்பினராகவும் மேகநாத் சாஹா விளங்கினார்.

                சோவியத் அறிவியல் கழகத்தின் 220-வது ஆண்டு விழாவில் இந்திய பிரதிநிதியாக ரஷ்யாவிற்குச் சென்று கலந்துகொண்டார்.

                கல்கத்தா வடமேற்குத் தொகுதியிலிருந்து 1951 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

                இந்திய விண்இயற்பியல் அறிவியலாளரான மேகநாத் சாஹா 16.02.1956 ஆம் நாள் இயற்கை எய்தினார். அவர் மறைந்தாலும், அவரது பெயர் இந்திய அறிவியல் வரலாற்றில் நிலைத்து நிற்கும்!

Pin It