ஒரு புரட்சியாளரின் வாழ்க்கை பற்றிய குறிப்புரை

சாரு மஜூம்தார் 1919ஆம் ஆண்டு வாரணாசியில் பிறந்தார். தேதி சரியாகத் தெரியவில்லை. அது ஜெய்த்திசியா என்ற வங்காள மாதம். ஆங்கிலக் கணக்குப்படி மே-ஜூன் மாதம். அவருக்கு 7 வயது இருக்கும்போது சிலிகுரியில் உள்ள அவரின் பெற்றோர் இல்லத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Charu Mazumdarசிலிகுரி என்ற ஊர் தற்போதைய மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங்கில் இருக்கிறது. சிலிகுரி ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் அவரை ஆறாம் வகுப்பில் சேர்த்தார்கள். அவர் அங்கு மெட்ரிகுலேஷன் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பின்னர் (தற்போது வங்கதேசத்தில் இருக்கும்) பாப்னாவில் உள்ள எட்வர்டு கல்லூரியில் 1937ஆம் ஆண்டு சேர்ந்தார். அவர் மிகச் சிறந்த மாணவர். இருந்தபோதும் படிப்பை முடிக்காமலேயே சிலிகுரிக்கு வந்து சேர்ந்தார்.

அவர் பள்ளியில் படிக்கும்போதே தேசிய விடுதலை இயக்கத்தில் ஆர்வமுள்ளவராக இருந்தார். 1938ல் காங்கிரஸ் சோசலிசக் கட்சியில் சேர்ந்தார். அவரது தந்தை பிரேஷவர் மஜூம்தார் டார்ஜிலிங் மாவட்டக் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார். அவருடைய தாய் உமா சங்கரி தேவி மிகவும் முற்போக்கான பெண்மணி. அவர் மக்கள் இயக்கங்களையும் பல்வேறு நல்ல பணிகளையும் ஆதரித்து வந்தார். சாருவின் வாழ்க்கையை வடிவமைப்பதில் அவர் தாயின் பங்கு மிகவும் முக்கியமானது.

1939ல் அருகாமையில் உள்ள ஜல்பைகுரி மாவட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி துவக்கப்பட்டபோது அதில், உடனே சாரு சேர்ந்தார். அதன் முழு நேரப் பணியாளர் ஆனார். அவர் மிகவும் கொடூரமான முறையில் ஒடுக்குமுறைக்கு ஆளாகியிருந்த விவசாயிகள் மத்தியில் பணி செய்தார். அந்த மாவட்டப் பொருளாதாரத்தின் மிக முக்கியமான தூணாக இருந்தவர்கள் ஆதியார் எனப்படும் பிரிவினர். அவர்கள் குத்தகை விவசாயிகள். விளைச்சலில் 'ஆதாவை' அதாவது பாதியை அவர்கள் நிலப்பிரபுவுக்குக் கொடுக்க வேண்டும் என்பதால் ஆதியார் என்று குறிப்பிடப்பட்டனர்.

ஆதியார்கள் விளைய வைத்ததில் பெரும்பங்கு நிலப்பிரபுவிற்குப் போனதால் விவசாயிகள் கடுமையான வறுமையின் பிடியில் சிக்கியிருந்தனர். அதன் காரணமாக, விவசாயம் இல்லாத நாட்களில் நிலப்பிரபுவிடமிருந்து தானியத்தை, அநியாய வட்டிக்குக் கடனாகப் பெற்றனர். பின்னர் அந்தக் கடனை அடைக்க விடாது பாடுபட்டனர். கடனுடன் வட்டியையும் சேர்த்தால் அதனை ஒரு நாளும் அடைக்க முடியாது. கடன் வலையில் சிக்கியே விவசாயிகள் தங்கள் வாழ்க்கையை அழித்தனர்.

இப்படியாக ஜல்பெய்குரியின் விவசாயிகள் பண்ணை அடிமைகள் ஆகிப் போயிருந்தனர். தங்கள் ஊரில் கம்யூனிஸ்ட் கட்சியைக் கண்டவுடன் விவசாயிகள் போராட்டப் பாதையில் பயணப்படத் துவங்கினர். கட்சியின் தலைமையில் விவசாயிகள் சங்கமும் எதிர்ப்புப் போராட்டப் படையும் அமைக்கப்பட்டன. ஆனால், இயக்கம் வலுப்படத் துவங்கியவுடன் அரசு ஒடுக்குமுறையும் வேகம் பிடித்தது.

ஒருநாள் ஜல்பெய்குரி கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு இளைஞன் ஒருவன் வந்தான். பெரிய கண்களும், வாரப்படாத முடியும் கொண்ட அந்த வசீகரமான இளைஞன் கட்சி செயலாளரிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான். ''என் பெயர் சாரு மஜூம்தார். நான் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து விவசாயிகள் மத்தியில் பணி புரிய விரும்புகிறேன்'', என்று சொன்னான்.

செயலாளர் அவனிடம், ''உன்னால் சிரமங்களைத் தாங்கிக்கொள்ள முடியுமா?'', என்று கேட்டார். அந்த இளைஞன் நிச்சயம் என்பது போலத் தலையசைத்தான்.

அதன்பின் மாவட்டச் செயலாளரான சச்சின் தேஷ்குப்தா சாருவை டோராஸ் பிராந்தியப் பயணத்தில் அழைத்துச் சென்றார். பயணம் என்றால் நடைபயணம்தான். மூன்று மாதங்கள் அந்தப் பயணம் நீடித்தது. அவர்கள் ஏழை விவசாயிகளின் வீடுகளில் தங்கினர். சில சமயம் அவர்களுக்கு உணவு கிடைக்கும். சில சமயம் கிடைக்காது. சில சமயம் வெட்டவெளியில் படுத்துறங்க வேண்டிவரும். சில சமயம் ஜல்தக்கா நதி பாலத்தில் உறங்குவார்கள். சில சமயம் தூங்குவதற்கு மாட்டுத் தொழுவத்தில் இடம் கிடைக்கும்.

எந்தவொரு சூழலையும் தாக்கு பிடிக்க முடியும் என்பதையும் விவசாயிகளுடன் ஒன்று கலக்க முடியும் என்பதையும் சாரு மஜூம்தார் நிரூபித்தார். சச்சின் தேஷ்குப்தாவிற்கு சாருவின் மீது நம்பிக்கை வந்தது, அவரின் கவலையும் விட்டது. இப்படித்தான், விவசாயிகளுடனான சாரு மஜூம்தாரின் முடிவற்ற நீண்ட உறவு துவங்கியது.

மிகக் குறுகிய காலத்திலேயே சாரு மஜூம்தார் விவசாயிகள் மத்தியில் பிரபலமாகி விட்டார். அவரைப் பார்த்தாலே விவசாயிகளுக்கு மகிழ்ச்சி வெள்ளம் பொங்கும். விவசாயிகளின் மனதைப் படிப்பதில் அவரும் நிபுணராக இருந்தார். 1942ல் கட்சியின் முழுத் தகுதி வாய்ந்த உறுப்பினரானார். அப்போது கட்சி வேலை தேயிலைத் தோட்டங்களுக்கும், இரயில்வே துறைக்கும் விரிவடைந்துகொண்டிருந்தது. அவற்றிலும் சாரு மஜூம்தார் செயல் துடிப்புள்ள பங்கெடுக்க ஆரம்பித்தார்.

1943 ஆம் ஆண்டு பஞ்சத்தின்போது, சாரு அளித்த ஆலோசனையின்படி போர்க்குணம்மிக்க ஆதியார்களின் போராட்டம் துவங்கியது. நிலப்பிரபுக்கள் தங்களின் தானியக் களஞ்சியங்களைப் பாதுகாப்பாக வைத்திருந்தனர். ஆனால் ஆதியார்களோ பட்டினியில் செத்துக் கொண்டிருந்தனர். அப்போது கட்சி ஒரு கோஷத்தை முன்வைத்தது. ''நாங்கள் பட்டினியால் சாக மாட்டோம்... துப்பாக்கிக் குண்டுகளால் சாவோம்'' என்பதுதான் அந்த முழக்கம்.

அந்த முழக்கம் கிராமப்புற ஏழைகளின் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது. நிலப்பிரபுக்களின் களஞ்சியங்களில் இருந்து ஏழைகள் நெல்லைக் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட நெல் நியாய விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. விற்பனையில் கிடைத்த பணம் சம்பந்தப்பட்ட நிலப்பிரபுவிடம் ஒப்படைக்கப்பட்டது. நிலப்பிரபு வாங்கிக்கொள்ள மறுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால், நிலப்பிரபுவின் பணம் வழக்கு நீதியில் சேர்த்துக்கொள்ளப்பட்டது.

1945 இறுதி வாக்கில், வரலாற்றுப் புகழ்பெற்ற தெபகா இயக்கம் துவங்கியது. அதனைப் பச்சாகரில் இருந்து வழிநடத்தும் பொறுப்பு சாரு மஜூம்தாருக்குக் கொடுக்கப்பட்டது. பச்சாகார் முஸ்லீம்கள் நிறைந்த பகுதி. தற்போது அது வங்கதேசத்தில் உள்ளது. அது தெபகா இயக்கத்தின் முக்கிய மையங்களில் ஒன்றாக இருந்தது. சாரு தலைமறைவாக இருந்து இயக்கத்தை வழிநடத்தினார். அவரின் தலைமையின் கீழ் மிகப் பெரும் பகுதி ஏறக்குறைய மக்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அதாவது அது பகுதியளவு விடுதலை செய்யப்பட்ட பகுதி என்ற நிலையை எட்டியது. பச்சாகார் அனுபவம் சாருவிற்கு நிறையப் பாடங்களைக் கற்றுத் தந்தது. பின்னர் அவர் நக்சல்பாரி இயக்கத்தை வழிநடத்தியபோது அது பயனாகியது.

போலீசின் கொடும் ஒடுக்குமுறையைத் தாண்டிப் போராட்டம் டோராஸ் பிராந்தியம் முழுமைக்கும் பரவியது. தோட்டத் தொழிலாளர்களும் விவசாயிகளும் சேர்ந்து மிகப் பிருமாண்டமான பேரணிகளை நடத்தினர். நிலப்பிரபுக்களின் பயிர்களைக் கைப்பற்றினர். ஜெல்பைகுரியின் மங்கலபரி- நெருமாஜ்ஹரி பகுதியில் நடந்த மோதலில், போலீசாரின் துப்பாக்கிகளை விவசாயிகள் பறித்துக் கொண்டனர். 11 விவசாயிகள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்தப் போராட்டம் இரயில்வே தொழிலாளர்கள் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பெங்களா- டோரா பிராந்திய இரயில்வேயில் வலுவான தொழிற்சங்கக் கிளையொன்று துவக்கப்பட்டது.

இயக்கம் வலுப்பட வலுப்பட போலீஸ் ஒடுக்குமுறையும் வலுப்பெற்றது. அனைத்துக் கடினங்களையும் எதிர்கொண்டு இயக்கத்தை வலுப்படுத்தக் கட்சி கிளை திட்டமிட்டபோது, போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று மாநிலக் கட்சிக் கமிட்டி முன்மொழிந்தது. அரசு இதனை ஓர் இயக்கம் என்று ஒப்புக்கொண்டதைக் காரணம் காட்டியது மாநிலக் கமிட்டி. ஆனால், சாரு மஜூம்தாரும் இதர பிற உள்ளூர் தலைவர்களும் அதனை ஒப்புக்கொள்ள மறுத்தனர். விவசாயத் தொழிலாளர்களை ஏன் அணி திரட்டமுடியவில்லை என்பது குறித்து மாநிலக் கமிட்டி பரிசீலிக்க வேண்டும் என்றும், மேலும் எப்படி முன்னேறிச் செல்வது என்று ஊழியர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்றும் உள்ளூர் தலைவர்கள் கோரினர்.

ஆனால், மாநிலக் கமிட்டி போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று ஆணையிட்டது. தனது முடிவை டார்ஜிலிங் தோழர்கள் மீது திணித்தது. எதிர்காலத்தில் முகிழவிருந்த பெரிய வெற்றி முளையிலேயே கிள்ளப்பட்டுவிட்டது என்று டார்ஜிலிங் தோழர்கள் கருதினர். சாரு மஜூம்தாருக்குப் அது மிகக் கடுமையான மனப் பின்னடைவை ஏற்படுத்தியது. காவல்துறை கடுமையான ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடும் என்று அவர் எதிர்பார்த்தார். அவர் எதிர்பார்த்ததுதான் நடந்தது.

1948ல் இரண்டாவது காங்கிரஸ் அறிக்கையைக் கட்சி அலுவலகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது, காவல்துறை உள்ளே நுழைந்து, சாரு மஜூம்தார் உட்பட அனைவரையும் கைது செய்தது. முதலில் சாரு மஜூம்தார் ஜல்பைகுரி சிறையில் அடைக்கப்பட்டுப் பின்னர் டும்டும் சிறைக்கு மாற்றப்பட்டார். டும்டும் சிறையிலிருந்து அவரை விமானத்தின் மூலம் பாக்சர் சிறைக்குக் கொண்டு சென்று அடைத்தனர். 1951ல் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

1952 ஜனவரி 9 அன்று சாரு மஜூம்தார் லீலா சென்குப்தாவைத் திருமணம் செய்துகொண்டார். லீலா சென்குப்தாவும் கட்சியின் முழு நேர ஊழியர்தான். கல்யாணத்திற்குப் பின்பு இருவரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் டார்ஜிலிங் மாவட்ட உறுப்பினர்கள் ஆனார்கள். அந்தச் சமயத்தில் சாரு மஜூம்தார் ஒரே சமயத்தில் கிராமங்களிலும் தேயிலைத் தோட்டங்களிலும் கட்சி பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் சிலிகுரியின் ரிக்ஷா தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார்.

1956ல் பாலக்காட்டில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 3வது காங்கிரசுக்குப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்பு அந்தக் கட்சியின் வழியுடனான அவரின் மாறுபாடு தீவிரமடையத் துவங்கியது. 1957ல் அவரைக் கல்கத்தாவுக்கு அழைத்த கட்சி, விவசாயிகள் போராட்டத்திற்கு வழிகாட்டும் பொறுப்பை ஏற்கும்படி கோரியது. அவர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

இதற்கிடையில் குடும்பத்தின் பொருளாதார நிலை மிக மோசமடைந்தது. அதைவிட முக்கியமாகக் கட்சி வழியுடனான அவரின் முரண்பாடு நாளுக்கு நாள் தீவிரமடைந்தது. இவற்றின் காரணமாக அவர் சிலகாலம் சோர்வுற்றிருந்தார். அப்போது சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான மாபெரும் விவாதம் துவங்கியது. அது 1960களின் துவக்கம். அது சூழலை உயிர்த்துடிப்புள்ளதாக ஆக்கியது. கட்சி அமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும், தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு பிராந்தியங்களான ஜல்பைகுரியிலும், டார்ஜிலிங்கிலும் விடுதலை செய்யப்பட்ட பகுதிகளை உருவாக்க வேண்டும் என்றும் டார்ஜிலிங் தோழர்கள் முடிவு செய்தனர்.

சீன இலக்கியங்களைப் படித்து, அதனால் உருவான புரிதலின்படி ஓர் ஆவணத்தைத் தயார் செய்யும் பொறுப்பு சாருமஜூம்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அந்தச் சமயத்தில் அவர் நக்சல்பாரியில் கட்சி வேலைகளுக்கு வழிகாட்டவும் செய்தார். 1962ல் மேற்சொன்ன ஆவணம் இறுதி செய்யப்பட்டது. அதனை மாநிலக் கமிட்டிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது பிரமோத் தேஷ்குப்தா சிறையில் இருந்தார். அவர் அங்கிருந்தபடியே ஆவணத்தைப் படித்துவிட்டு, 'இந்த ஆவணத்தை உருவாக்கியவரை உடனடியாகக் கட்சியை விட்டு நீக்குங்கள்' என்று கருத்துரைத்தார். ஆனால் மற்றத் தலைவர்கள் வேறுவிதமான கருத்துகளை வைத்திருந்தனர். விளைவாகத் தேஷ்குப்தாவின் அறிவுரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

1963ல் சிலிகுரி சட்டமன்றத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. உள்ளூர் தோழர்களின் நிர்ப்பந்தத்தின் காரணமாகச் சாரு மஜூம்தாரை வேட்பாளராக அறிவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் கட்சித் தலைமைக்கு ஏற்பட்டது. அப்போது சிறையிலிருந்த சாரு மஜூம்தார் அங்கிருந்தபடியே வேட்பு மனு தாக்கல் செய்தார். பிரச்சாரத்தின்போது ஆயுதப் போராட்டம் பற்றியும், சீனாவின் மீது இந்தியா செய்த ஆக்கிரமிப்பு குறித்தும் சாரு பிரச்சாரம் செய்தார். அப்படிச் செய்வது அப்போதைய கட்சி வழிக்கு எதிரானதாகும்.

தேர்தலில் சாருவுக்கு 3000க்கும் குறைவான வாக்குகள் கிடைத்தன; டெபாசிட்டை இழந்தார். 'நாம் வெற்றிப் பேரணி நடத்துவோம்', என்று அறிவித்தார் சாரு மஜூம்தார். தேசவெறி வாதத்துக்கு எதிராகவும் ஆயுதப் போராட்டத்தை ஆதரித்தும் இத்தனை பேர் வாக்களித்திருப்பது பெரிய வெற்றி என்றார் அவர். அவர் சொன்னபடி பேரணியும் கட்டமைக்கப்பட்டது.

1964ல் மிகத் தீவிரமான உட்கட்சிப் போராட்டத்திற்குப் பின்பு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பிறந்தபோது சாரு மஜூம்தார் அதில் சேர்ந்தார். ஆனால், அப்போது கம்யூனிச இயக்கத்தில் ஏற்பட்ட பிளவு, எதிர்வரவிருந்த, மேலும் அடிப்படையான பிளவுக்கு முன்னோட்டமாக அமைந்தது.

இந்தியக் கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட்) கட்சி புரட்சிகரப் போராட்டத்தைக் கட்டமைப்பதைத் தவிர்த்துத் தேர்தல் மூலமாக அதிகாரத்தைக் கைப்பற்றுவது நோக்கிச் சரிந்த காரணத்தால், புதிய திருத்தல்வாதத்தைத் தத்துவ ரீதியாகவும் நடைமுறையிலும் முறியடிப்பதற்கான போராட்டத்தைச் சாரு மஜூம்தார் தோழர்களுடன் சேர்ந்து முன்னெடுத்தார். நக்சல்பாரி தேசத்தையும் உலகத்தையும் குலுக்கியது. இந்தியக் கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சிக்கு உள்ளும் வெளியிலும் இருந்த புரட்சியாளர்கள் கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களின் அகில இந்திய ஒருங்கிணைப்புக் கமிட்டியில் இணைந்தனர். அந்த அமைப்பு 1968ன் பின்பகுதியில் துவங்கப்பட்டது. 1969 ஏப்ரல் 22 அன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) ஸ்தாபிக்கப்பட்டது.

விதிவிலக்கான ஒன்றாக, அரசியல் துடிப்பு மிக்கதாக, ஜெயில் வாழ்க்கையும் குடும்ப வாழ்க்கையும் இணைந்ததாகச் சாருவின் அரசியல் வாழ்க்கை இருந்தது. அவருடைய இரண்டு மகள்களுக்கும் ஒரு மகனுக்கும் அன்பு நிறைந்த தந்தையாக அவர் விளங்கினார். அவர்களின் படிப்பில் அவர் அவர்களுக்கு உதவினார். ஆங்கில இலக்கணம்- அகராதி துணையின்றி ஆங்கில நாவல்களைப் படிக்க வேண்டும் என்று அவர்களுக்குச் சொன்னார். 'அப்படித்தான் ஆங்கிலத்தைப் படிக்க முடியும்' என்பார் அவர். இரவீந்தரநாத், சரத் சந்திரர், பக்கிம்சந்திரா எழுத்துக்களைப் படிக்கும்படி அவர்களைத் தூண்டினார். இலக்கியத்துவமிக்க இசையை அவர் மிகவும் நேசித்தார். அதுபோன்ற இசையை வானொலியில் கேட்பது அவரின் வழக்கம்.

அந்தப் புரட்சியாளர் பலமுறை சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார். தீவிரமான படிப்புக்குச் சிறை வாழ்க்கையைப் பயன்படுத்திக் கொண்டார். 1964 துவங்கி வாழ்க்கையின் இறுதி வரை அவர் கொடுமையான ஆஸ்த்துமா நோயினால் பாதிக்கப்பட்டார். அவருக்குச் சிக்கலான இதயப் பிரச்சனையும் இன்னும் பிற உடல் நலக்குறைபாடுகளும் இருந்தன. இருந்தபோதும், தலைமறைவு வாழ்க்கை நடத்திக்கொண்டு, கைது செய்யப்படும் வரை, புரட்சிகர இயக்கத்தை வழிநடத்தும் பொறுப்பைத் தாங்கி முன்நடந்தார். அவர் இறுதியாக 1972 ஜூலை 16 அன்று கைது செய்யப்பட்டார். அதன்பின் 11 நாட்களுக்குச் சொல்ல முடியாத மனிதத் தன்மையற்ற சிறைத் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டார். அந்த 'விசாரணை' கல்கத்தாவின் அவப்புகழ் பெற்ற லால் பஜார் லாக் அப்பில் நடைபெற்றது. ஆனால், அவரிடமிருந்து எந்த ஒப்புதல் வாக்குமூலத்தையும் வாங்க முடியவில்லை. ஒரு வார்த்தையைக் கூட அவரின் வாயிலிருந்து பெற முடியவில்லை.

இறுதியில் புரட்சியே வெற்றிபெறும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் நிமிர்ந்த தலையுடன் 1972 ஜூலை 28 அன்று மாலை 4 மணி அளவில் அவர் இறுதி தியாகத்தைச் செய்தார். அவரின் உடலைக் கூட அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவில்லை. காவல்துறையினரே அவரின் உடலை மயானத்திற்குச் சுமந்து சென்றனர். மொத்தமாக மயானப் பகுதி முழுவதும் காவல் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. யாரையும் அனுமதிக்காமல் அவர் உடலைத் தீக்கு இரையாக்கினர்.

தமிழில் - சி.மதிவாணன்

(Tamil version of an article from ''Charu Mazumdar- The Man and His Legacy''- Liberation Publication)

Pin It