இந்த அரங்கத்தில் இருக்கின்றவர்களை எல்லாம் மதவாரியாக அமருங்கள் என்று பிரித்தால் மூன்று நான்கு பிரிவாக பிரிக்க வேண்டி வரும்.

சாதிவாரியாக அமருங்கள் என்று சொன்னால் முப்பது நாற்பது பிரிவாக பிரிக்க வேண்டி வரும்.

எல்லோரையும் தமிழராக அமரச் சொன்னால் பிரிவென்பதேது?

தமிழ் நம்மை இணைக்கும். சாதி நம்மைப் பிரிக்கும். மதம் நம்மைப் பிளக்கும்.

ஏனிந்த இழிநிலை என எண்ணுவதற்கும், இப்படித்தான் நாம் எப்போதுமே இருந்தோமா என எண்ணுவதற்கும் தான் "அரசர் காலத் தமிழர் வாழ்வில் சாதியக் கட்டமைப்பு" என தலைப்பை வழங்கியிருக்கிறார்கள்.

tamil thinaiசங்கத் தமிழிலே சொல்லப்பட்ட எந்தப் புலவனுக்கும் பெயர் இருக்குமே தவிர பெயருக்குப் பின்னால் சாதி இருந்தது கிடையாது. பெயருக்கு முன்னால் அவருடைய புலமையை, ஆற்றலை காட்டக்கூடிய ஓர் அடைமொழி இருக்கும்; கணக்காயர், நக்கீரனார், கணியன் (பூங்குன்றனார்) என்று தான் இருக்கும்; அதைத் தான் தொல்காப்பியர் சொல்கிறார்,

''சிறப்பினாகிய பெயர் நிலைக்கிளவிக்குமியற் பெயர்க்கிளவி முற்படக் கிளவார்”.

சிறப்புக்குரிய எந்த அடைமொழியும் பெயருக்கு முன்னால் இருக்குமே தவிர பெயருக்குப் பின்னால் இருக்காது.

தற்போது பெயருக்குப் பின்னால் எழுதும் சாதிப் பெயர்கள் இழிந்தது என தொல்காப்பியர் சொல்கிறார். பெயருக்கு முன்னால் போடுவது மட்டுமே பெருமைக்குரியது. பெயருக்குப் பின்னால் போடும் எதுவும் இழிந்தது.

பெயருக்குப் பின்னால் போடும் சாதிப் பட்டம் எப்போது அறிமுகமானது?

பல செய்திகளை நம் காதில் கேட்கும் போது வியப்பாகவும் இருக்கிறது, அருவருப்பாகவும் இருக்கிறது. ராஜ ராஜ சோழனுக்கு ஐப்பசி வந்தால் சதய திருவிழா நடக்கும். எல்லா சாதிக்காரர்களும் அவரை எங்கள் சாதிக்காரர் என்று சொல்வார்கள். எல்லா சாதிக்காரர்களுமே எங்கள் சாதியைச் சேர்ந்த ராஜ ராஜனுக்கு என்று சுவரொட்டி ஓட்டுவார்கள்.

ஒரு சாதி சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்னைத் தேடி வந்தார்கள். உண்மையைச் சொல்லுங்கள் ராஜ ராஜன் எந்த சாதி எனக் கேட்டார்கள்.

ராஜ ராஜன் காலத்தில் சாதியே இல்லை என சொன்னேன். அவர்களுக்கு அதிர்ச்சி. மன்னர்களுக்கு சாதி இல்லை. வெற்றி பெற்றவன் தான் மன்னனே தவிர, மன்னர்களுக்கு சாதி இல்லை.

சாதி என்பதனுடைய வரலாறே வெறும் 800 ஆண்டு வரலாறு தான்.

ஒவ்வொரு சாதிக்காரர்களும் ஏதோ உலகம் பிறந்தபோதே சாதி இருந்ததைப் போலவே பேசுகிறார்கள்.

சாதிப் பெயர் இருந்தது உண்மை. ஆனால் சாதி ஏற்றத்தாழ்வு இருப்பது 800 ஆண்டுகள் தான் என்பது அதைவிடப் பெரிய உண்மை, வரலாற்று உண்மை.

பெயருக்கு முன்னாலே இருந்து வந்த சாதி, பிறப்பு வழி வந்த சாதி அல்ல. அது தொழில் வழி சாதி.

ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே,
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே,
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே,
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே,
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்,
களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.

சங்க இலக்கியத்திலே கொல்லன் உண்டு.

நான்கு குடிகளாக நாம் இருந்தோம். மாங்குடி மருதனார், “துடியன், பாணன், பறையன், கடம்பன் என்று இந்நான்கல்லது குடியும் இல்லை ” என்கிறார் (புறநானூறு.335.7-8).

நம்முடைய மரபு, செய்த தொழிலின் காரணமாக வந்த குடி மரபு. அந்தக் குடி, இனக் குழுவானது, குலமானது. அதை இலக்கணப்படுத்தி வரையறைப்படுத்தினார்கள், அது தான் திணை அமைப்பு. அந்த திணைக்குள்ளே நிலம் வரும், மக்கள் வருவார்கள், வாழ்க்கை முறையும் வரும். அந்தத் திணை வழி அமைப்பைத் தான் பிற்காலத்திலே சாதி ஆக்கிவிட்டார்கள்.

ஊரைக் காவல் காத்தவர்கள் காமிண்டர்கள். கி.பி. 11 நூற்றாண்டு வரை காமிண்டன் தான். இப்போது கவுண்டர்.

கள்ளர் உண்டு, மறவர் உண்டு, அகமுடையார் உண்டு, செட்டியார் உண்டு, வெளிநாட்டிற்குச் சென்றால் செட்டி ஷெட்டி ஆவதும் உண்டு. ஷெட்டி சேட் ஆவதும் உண்டு, சேட் சேட்ஜி ஆவதும் உண்டு.

செய்த தொழிலின் காரணமாக நாம் அவற்றிற்குப் பெயரைக் கொடுத்தோம். எதிரி நாட்டினுடைய படையை கள்ளத்தனமாக ஆய்ந்து வருபவனுக்குப் பெயர் கள்ளன், அரண்மனையின் செயல்களைப் பார்ப்பவன் அகமுடையன், எதிர்த்து நின்று போரிடுபவனுக்குப் பெயர் மறவன். விளைகின்ற பொருளை செட்டாக வாங்கி செட்டாக விற்பவன் செட்டியார். மாணவர்களிடத்தில் ஆசு (குற்றம்) இல்லாமல் செய்வது ஆசிரியர், அதைப்போல மரத்தில் உள்ள ஆசை அறிந்து நீக்குகின்றவர்கள் ஆசாரி. சொற்பொருளில் ஆசிரியரும் ஆசாரியும் ஒன்று தான். ஆனால் இருவருக்கும் ஒரே மதிப்பா? இப்பொழுது ஆசாரி என்பது இழிவு என்று கருதி விஸ்வகர்மா ஆக்கிவிட்டார்கள். கோனார் என்பதை கூட இப்போது யாதவராகி இப்போது 'யாதவ்' ஆக மாறியிருக்கிறது. நாடாரைக் கூட பண்டாரி ஆக்கும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது.

காரணம், வரலாற்றைப் பின்னோக்கிப் பார்க்கின்ற வாய்ப்பை வழங்காதது கூட காரணமாக இருக்கலாம். எல்லா சாதிக்கும் ஒரு காரணம் உண்டு.

இன்றைக்கு சான்றோர் என்பதற்குப் பொருள் அறிவொழுக்கங்களால் நிறைந்த பெரியோர். ஆனால் சங்க காலத்தில் சான்றோர் என்பதற்குப் பொருள் வீரர். போர் வீரராக இருந்தவர் சான்றோர். சான்றோர் தான் சாணார் ஆனார், சாணார் தான் நாடார் ஆனார்.

குந்தம் என்றால் போர்க்கருவி. போர்க்காலங்களில் குந்தம் என்ற கருவியை ஏந்துவார்கள். ஓய்வு காலங்களிலே குந்தம் என்ற போர்க்கருவியால் நெசவு செய்வார்கள். அவர்கள் தான் செங்குந்தர்.

சங்க காலத்தில் அப்பா செட்டியாராக இருப்பார், மகன் காமிண்டராக ஊரைக் காவல் காப்பவராக இருப்பார், அவனுடைய மகன் மரத்திலே கலைப்பொருள் செய்யும் ஆசாரியாக இருப்பான். இது தான் தமிழ்ச் சமூக வரலாறு.

சாதி கட்டமைப்பு என்பது அப்படி தான். தாத்தா ஒரு சாதி, மகன் ஒரு சாதி, பெயரன் ஒரு சாதி என்பது தான். பிறப்பு வழி சாதி என்பது அல்ல, தொழில் வழி சாதி. சாதிப் பெயர் உண்டு, ஆனால் அதில் ஏற்றத்தாழ்வுகள் இல்லை.

பிறப்பு வழி சாதி என்பது 12 நூற்றாண்டுக்குப் பிறகு தான்.

யாயும் ஞாயும்
யாயும் ஞாயும் யாரா கியரோ,
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்,
யானும் நீயும் எவ்வழி யறிதும்,
செம்புலப் பெயனீர் போல,
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.

-(குறுந்தொகை - 40)

அகமண முறை அப்போது இல்லை. சாதியினுடைய கொடிய பண்புகள் கடந்த 800 ஆண்டுகளாக வந்தவை. அதிலே முதன்மை அகமணம் (Endogamy). குறிப்பிட்ட பிரிவுக்குள் தான் திருமணம் செய்ய வேண்டும். நான்கு பேர் என்ன சொல்வார்கள்? என் சாதிப் பெருமை என்னாவது என நினைக்கும் போது தான் ஆணவக் கொலை நடக்கிறது; சாதி ஆணவக் கொலையை தான் கவுரவக் கொலை (honour killing) என்கிறார்கள். அந்த அகமண முறை தான் சாதியை இன்னும் இறுக்கமாக வைத்திருக்கிறது.

இப்போது வேறு சில‌ கேள்விகள் வரும். இசுலாம் மதத்தில் இல்லையா? கிருத்துவ மதத்தில் இல்லையா? வேறு நாடுகளில் இல்லையா?

அங்கு பிரிவுகள் உண்டு, அடுக்குகள் (hierarchy) இல்லை. இங்கே இருக்கும் சாதி முறை என்பது அடுக்குமுறை ( hierarchy based ). மற்ற மதத்திலே சமத்துவம் உண்டு. அனால் நம்முடைய சாதிமுறை என்பது படிக்கட்டு இல்லாத மாளிகை என அண்ணல் அம்பேத்கர் சொல்லுவார். மேலேயும் போக முடியாது, கீழேயும் போக முடியாது. அதில் அடைக்கப்பட்டவன், அடைக்கப்பட்டவன் தான். ஒவ்வொரு சாதிக்கும் ஒரு பெருமை உண்டு. காரணம் எனக்கு கீழே பல பேர் இருக்கிறார்கள். இந்த அடுக்குமுறை என்பது சாதியில் கொடுமையான பண்பு.

அடுத்தது தீண்டாமை...

மற்ற மதங்களிலே, நாடுகளிலே பிரிவுகள் இருக்கலாம், தீண்டாமை இல்லை. இங்கே இருக்கும் யாருமே கோவில் கருவறைக்குள் கால் வைக்க முடியாது, நன்கொடை கொடுக்க முடியும், அனால் கோவிலின் குடமுழுக்கு நடக்கின்ற பொழுது கலசத்தில் புனித நீர் ஊற்றுகின்ற உரிமை ஒரு சாதிக்கு மட்டுமே உண்டு. இங்கு ஒவ்வொரு சாதிக்கும் ஒரு மடம் உண்டு. இந்து மதத்திற்கு இருக்கும் மடங்களிலே ஆதீன கர்த்தாவாக ஆகும் உரிமை ஒரு சாதியிலே பிறந்தவர்களுக்கு மட்டும் தான் உண்டு. சங்கராச்சாரி ஆகும் உரிமை தெலுங்கு பேசும் ஸ்மார்த்த பார்ப்பனர்களுக்கு மட்டுமே உண்டு. மசூதியில் கட்டிப் பிடித்து சலாம் (வணக்கம்) சொல்வார்கள். திருச்சபையில் தலையில் கை வைத்து ஆசீர்வாதம் புரிவார்கள். கோவிலில் மட்டும் தான் நாமம் சொல்லுங்கோ, நட்சத்திரம் சொல்லுங்கோ, கோத்திரம் சொல்லுங்கோ எனக் கேட்பார்கள். இந்த இழிவு 800 ஆண்டு கால இழிவு.

நமக்குள்ள பண்பாடு எல்லாம் திணைநிலைப் பண்பாடு. இந்த திணைநிலைப் பண்பாடு உலகில் எவருக்கும் இல்லை. அந்த திணை நிலை வாழ்க்கையிலே ஐந்து திணை. குறிஞ்சியிலே வாழ்ந்தோம், குறிஞ்சியிலே வாழ்ந்த நமக்குப் பெயர் குறவர்கள், வேடவர்கள், வேட்டுவர்கள், கானவர்கள்.

வேடு என்றால் மறைவது. கிராமங்களிலே இன்றும் இரவு உணவு சாப்பிட்ட பிறகு வேடு கட்டியாச்சா என்று கேட்பார்கள். தஞ்சை திருச்சி மாவட்டங்களில் அது மிகுதி. கொங்கு நாட்டிலே அதற்கு வண்டு கட்டுதல் என்பார்கள். வேடு என்றால் மறைப்பது, உடம்பை வேடு செய்வது வேட்டி. வேட்டி தான் இப்போது வேஷ்டியானது, வேஷ்டியாகி தற்போது "தோத்தி" ஆனது.

அது போல தன்னை மறைத்துக் கொண்டு செய்வது வேட்டை. அவருக்குப் பெயர் வேடுவர். இன்றைக்கு அது ஒரு சாதி. அன்றைக்கு அது ஒரு தொழில், பிரிவு.

அப்பாவினுடைய சாதி மகனுக்கும் என்பது 12 நூற்றாண்டுக்குப் பிறகு வந்தது. அரசினுடைய சட்டத்தின் ஏற்பைப் பெற்றது 12 நூற்றாண்டுக்குப் பின்னால். அதனுடைய கொடுமையின் உச்சம் பெற்றது 14 நூற்றாண்டில். பெயருக்குப் பின்னால் சாதிப் பெயர் போடும் வழக்கம் வந்தது கி.பி. 16 நூற்றாண்டுக்குப் பின்னால். ஒவ்வொன்றுக்கும் ஏராளமான சான்றுகள், தரவுகள் குவிந்து கிடக்கின்றன.

ஐந்து திணையில் குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்தவன் குறவன். நாம் அத்தனை பெரும் குறவர்களாக இருந்தவர்கள் தான். அப்பொழுது தான் நாம் சாதுவான விலங்கு எது, கொடுமையான விலங்கு எது என்று இனம் பிரித்துக் கண்டோம்., சாதுவான விலங்குகளை மட்டும் ஓட்டிக் கொண்டு கீழே வந்தோம். அது தான் காட்டுப் பகுதி முல்லை. முன்னே நடந்தது வேட்டை வாழ்வு. அடுத்து முல்லையில் மேய்ச்சல் வாழ்வு. அங்கு ஆடு மாடுகளை பார்த்துக் கொண்டிருந்ததால் நமக்குப் பெயர் கோனார். நாம் அத்தனை பேரும் கோனார் தான், கோன் தான், இடையர் தான். கீழே பார்த்தால் சமவெளி. மேலே பார்த்தால் மலை. இடையிலே காட்டிலே வாழ்கின்ற நமக்கு இடையர்கள் என்று பெயர். ஏராளாமான இடையார்பாளையங்களைப் பார்க்கலாம். இடையர் என்று சேர்ந்த ஏராளாமான ஊர்களை இடங்களை இன்றும் பார்க்கலாம். அவற்றிற்கு இருக்கும் வரலாறு இது தான். அப்படி ஆடு மாடுகளை நாம் மேய்க்கச் சென்ற பொழுது அங்கே நமக்கு அறிமுகமானது தான் விளைச்சல்.

ஏதேனும் ஒன்றை வாயிலே வைத்து உருவி விட்ட பிறகு அது கசப்பு என்றால் தூர எறிந்து விடுவோம். சுவையாக இருந்தால் மறுபடியும் ஒன்றை எடுத்து வைத்துக் கொள்வோம். அதில் உபரியாக இருப்பதை வீசிவிட்டுச் செல்வோம். இரண்டு மூன்று மாதங்களுக்குப் பின் வந்து பார்த்தால் அங்கே வீசியவை கைப்பிடி அளவாக இருக்கும். ஆனால் கிடைப்பதோ மூட்டை மூட்டையாக இருக்கும்.

வேளாண்மை நமக்கு அறிமுகமாகிவிட்டது. காடு இதற்குப் பயன்படாது. மலை இதற்குப் பயன்படாது. சமவெளி தேவை, அதனால் நாம் மருத நிலத்திற்கு வந்தோம். மருத நிலம் தான் வேளாண் வாழ்வு. அங்கே தான் நாகரிகமான வாழ்வு தொடங்கியது. முல்லை நிலத்திலேயே அரசு வந்து விட்டது. ஆனால் முல்லை நிலத்திலே தான் வேலைப் பிரிவினை ஏற்பட்டது. அப்படி வேலைப் பிரிவினை ஏற்படுகின்ற பொழுது தான் ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு தொழில் என பிரிக்கப்பட்டது.

இந்த ஐந்து நிலங்களும் இயற்கை நிலங்கள், செயற்கையாய் உழைப்பால் உருவான திணை மருதத் திணை மட்டுமே. அங்கே மேட்டில் வீட்டை கட்டிக் கொண்டு பள்ளத்தில் வேலை செய்தோம். பள்ளத்தில் வேலை செய்த நமக்கெல்லாம் பெயர் பள்ளர்கள். நாம் அத்தனை பெரும் பள்ளர்கள் தான். பள்ளம் வயலாகும், இலக்கியங்களிலே முக்கூடற்பள்ளு. பள்ளு என்றால் உழவு. பள்ளர் என்றால் உழவர்.

இதனால் எல்லோருக்கும் சொல்லும் செய்தி என்னவென்றால் எனச் சொல்பவர் பறையர். இன்றைக்கு அவர்களின் பெயர் media person. அன்றைக்கு அவர்களின் பெயர் பறையர். இரண்டு பேரும் ஒன்று தான் என்று சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா?

சங்க காலத்தில் இருந்து எட்டாம் நூறாண்டு வரை எந்த சாதியும் மேலும் இல்லை, கீழும் இல்லை, எட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு தான் தீண்டாமை அறிமுகமானது. சாதி ஏற்றத்தாழ்வு அறிமுகமானது. 12 வது நூற்றாண்டில் அரசினுடைய ஏற்பைப் பெற்றது. 16 நூற்றாண்டில் பெயருக்குப் பின்னால் சாதி போடும் வழக்கம் தொடங்கிற்று.

பெயருக்குப் பின்னால் இருக்கும் சாதி வாலை அறுத்தெடுத்த பெருமை தமிழ் நாட்டிற்கு மட்டுமே உண்டு. நீட் என்ற தேர்வுக்கு வருகிற மாணவர்களுடைய பெயர்ப் பட்டியலை பார்த்தால் பெயருக்கு பின்னால் இருப்பதெல்லாம் மேத்தா, பட்டேல், ராவ், தேசாய் என்ற சாதி வால். அந்த சாதி வால் அவர்களை யார் என்று காட்டிக் கொடுத்து விடும். அவர்களுக்கு சாதி வால் பெயரோடு சேர்த்து இருக்கும். நமக்கோ பெயர் மட்டுமே இருக்கும். நம்முடைய இலக்கியத்தில் எவருடைய பெயரின் பின்னும் சாதி வால் கிடையாது. பெயருக்கு முன்னால் இருப்பது தான் சிறப்பு, பெயருக்குப் பின்னால் இருப்பது எல்லாம் இழிவு என்பது தான் நமது இலக்கண மரபு.

எல்லா சாதியும் தொழிலால் வந்தது. எந்த சாதியும் மேலும் இல்லை, எந்த சாதியும் கீழும் இல்லை, எந்த‌ சாதியும் இழிவு இல்லை. ஒவ்வொரு சாதிக்கும் இருக்கும் காரணம் உயர்வான காரணம்.

மருதத்திலே இருந்தபோது வந்தது தான் நிலவழி வணிகம். நெய்தல் நிலத்தில் நீர் வழி வணிகம். கடலுக்குப் பெயர் பறவை. அதில் இருந்தவர்களின் பெயர்கள் தான் பரதவர், அவர்கள் தான் மீனவர். இப்படித்தான் தமிழர்கள் அமைத்துக் கொண்டனர். இவர்கள் தான் நிலைக்குடி. ஒரு இடத்தில் வாழாமல், நாடோடிகளாக வாழ்பவர்கள் அலைக்கொடி. அப்படி இருந்தவர்கள் தான் பாணர்கள். பாணர்கள் வேறு, புலவர்கள் வேறு. இருவரும் சேர்ந்து எழுதிய இலக்கியம் தான் சங்க இலக்கியம். அந்தப் பாணர்களில் இசை பாடியவர்கள் இசைப்பாணர். யாழ் வைத்துப் பாடியவர் யாழ்ப்பாணர். மண்டை போன்ற ஒரு பானையை பின் பக்கம் வைத்து தோலை இழுத்துக் கட்டி பாடியவர் மண்டைப் பாணர். இப்படி பாணர்களுக்குள்ளும் பல வகை. அவர்களெல்லாம் அலைக்கொடி. பார்ப்பனர்கள் என்பவர்கள் அன்று எல்லா சாதிக்குள்ளும் இருக்கின்ற சுற்றுவட்டத்திலே ஒரு இடத்தில் அமர வைக்கப்பட்டவர்கள், அவ்வளவு தான். பார்ப்பனர்களை மையப்படுத்தி எல்லாம் நடந்தது என்பது 12 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னால். மக்களுக்காக உருவாக்கிய கோவில்களில் தங்கள் ஆதிக்கத்தை உருவாக்கிக் கொண்டார்கள் பார்ப்பனர்கள். தமிழ் அப்புறப்படுத்தப்பட்டு சமசுகிருதம் தேவ பாஷை, தெய்வ மொழி என மக்களுக்கு நம்ப வைக்கப்பட்டு, அதன் மூலம் இந்த நடைமுறை வந்தது.

இன்றைக்கும் பார்ப்பனரை சாமி என சொல்லும் வழக்கம் இருக்கிறது. வீட்டுச் சடங்குகளுக்கு அழைக்கும் வழக்கம் இருக்கிறது என்றால் இடையிலே ஏற்பட்டது. எல்லா வகையான அடிமைத்தனங்களுக்கும் தங்களுடைய வல்லாண்மைக்கும் அவர்கள் கொண்டு சென்று விட்டார்கள்.

அதை அடிப்படையாக இரண்டாகப் பிரித்தால் ஒன்று அரசதிகாரம், மற்றொன்று பண்பாட்டு அதிகாரம், அதாவது சமூக அதிகாரம். அரசதிகாரத்தை வழங்குபவை படிப்பும், பதவியும். படிப்பும் பதவியும் தமிழர்களுக்கு மறுக்கப்பட்டது. கடந்த நூறாண்டு காலத்தில் மட்டும் நாம் படிப்பையும் பதவியையும் பெற்றுவிட்டோம். ஆனால் சமூக அதிகாரத்தை நாம் இன்னும் பெறவில்லை. 800 ஆண்டு காலத்திற்கு முன் அரசர் காலத்தில் தொடங்கிய அந்த சாதிப் படிநிலை சமத்துவமின்மை இப்போதும் தொடர்கிறது. சமூக அதிகாரம் ஒரு சாதியின் கையில் இருப்பதென்பது மிகவும் இழிவான ஒரு உண்மை. 

தெய்வாதீனம் ஜகத் சர்வம்
மந்த்ராதீனம் து தெய்வதம்
தன் மந்த்ரம் பிரம்மணாதீனம்
தஸ்மத் பிரம்மணப் பிரபு ஜெயத்
என்பது ரிக் வேதத்தின் 62ஆம் பிரிவு 10ஆம் சுலோகம்.

உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது. கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டது. மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப் பட்டவை. எனவே பிராமணர்களே நமது கடவுள் - அவர்களைத் தொழ வேண்டும்.

பார்ப்பன பாக்களில் வேள்வி செய்த பார்ப்பனர், வேள்வி செய்யாத பார்ப்பனர் என்று உண்டு. வேள்வி செய்யா பார்ப்பனருக்கு பெயர் வேளா பார்ப்பனர்.

தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் புறத்திணை:

“அறுவகைப் பட்ட பார்ப்பனர் பக்கமும்
ஐவகை மரபின் அரசர் பக்கமும்
இரு மூன்று மரபின் ஏனோர் பக்கமும் ” (74ம் சூத்திரம்)

அறுவகைபட்ட பார்ப்பனர் வேலை என்ன? ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல்.

கபிலர் தன்னையே ஒரு அந்தணர் என சொல்லிக் கொள்வார். ஆனால் சங்க இலக்கியத்திலே கபிலர் சாப்பிட்டது புலால் (இறைச்சி) உணவு.

ஒரு பிரிவினர் மட்டும் தான் வேள்வி செய்தவர்களாக, எல்லோரையும் போல இணையாளர்களாக கருதப்பட்டவர்களே தவிர வருண முறை என்பது தமிழ்நாட்டில் இல்லை.

நமது நாட்டில் வைசிய மரபும், சத்திரிய மரபும் இல்லை.

தமிழினத்தில் இரண்டே பிரிவு தான், பிராமணர்கள் மற்றும் பிராமணர்கள் அல்லாத அத்தனை பேரும் சூத்திரர்கள். இந்த இரண்டு வருணமும் தான் இருந்தது. நான்கு வருண முறை இங்கு இல்லை.

பழைய வரலாறு தெரிந்தால் நாம் நம்மை விடுவித்துக் கொள்ளலாம். பின்னோக்கிப் பார்த்தால் தான் முன்னோக்கிப் பாய முடியும்.

- புலவர் செந்தலை ந.கவுதமன், சூலூர் - பாவேந்தர் பேரவை, கோவை

(உலகத்தமிழாய்வு மாநாடு 2019இல் புலவர் செந்தலை ந.கவுதமன் பேசிய பேச்சின் கட்டுரை வடிவம்)

Pin It