கீழடி குறித்த ஆய்வு முடிவுகள் வந்தவுடன் இங்கு பலர் 'தமிழனின் பெருமை' என எழுதித் தள்ளுகிறார்கள். முகநூல் பக்கங்கள் முழுவதுமாக கீழடி பெருமையில் மூழ்கிக் கிடக்கிறது.

ஒன்று மட்டும் எனக்குப் புரியவில்லை, வரலாற்றைப் பற்றி பெருமைப்பட என்ன இருக்கிறது? கீழடியில், நமது பழந்தமிழ் முன்னோர்கள் சிறந்த நாகரிகத்துடன் இருந்தார்கள் என்று நாம் பெருமைப்பட்டால், அதன் பின் சூத்திரப் பட்டம் சுமந்த நமது சமீபத்திய முன்னோர்களின் முட்டாள்தனத்துக்காகத் தலை குனியவும் வேண்டுமல்லவா?

keezhadi 600கீழடியில் வழிபாட்டுச் சிலைகள் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை, இதனால் தமிழன் பகுத்தறிவோடு வாழ்ந்தான் என் பெருமைப்பட்டால்... மலம் சுமக்கும் சாமியார்களின் காலை கழுவிக் குடிக்கும் இன்றைய தமிழனின் நிலை குறித்து வெட்கப்பட வேண்டுமல்லவா?

கீழடி காட்டும் மற்றும் ஒரு அற்புதம், வரலாற்றுக்கும் தமிழ் இலக்கியத்திற்குமான தொடர்பு. மற்ற மொழிகளில் பெரும்பாலும் இலக்கியங்கள் முழுக்க கற்பனையாகவே இருக்கும். ஆனால், சங்க இலக்கியம் சொல்லும் வரலாறு இன்றைய கீழடியோடு பொருந்திப் போவதை ஆய்வாளர்கள் கண்டு வியக்கின்றனர்.

யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே

இது சங்க நூலாம் குறுந்தொகைப் பாட்டு. தலைவன் தலைவியைப் பார்த்து, "என் தாயும், உன் தாயும் உறவினர் அல்லர்; என் தந்தையும் உன் தந்தையும் உறவினர் அல்லர்; இதற்கு முன் நாம் ஒருவரை ஒருவர் சந்தித்ததும் இல்லை. ஆனால் நம் நெஞ்சங்கள் அன்பினால் செம்புலப் பெயல் நீர்போல ஒன்று கலந்துவிட்டன." என்று பாடுகிறான்.

அன்றைய திருமணம் சாதி பார்க்கவில்லை என்பதை இந்தப் பாடல் நமக்கு நிரூபிக்கிறது. இதை நினைத்து அன்று சாதியற்று இருந்தோம் என்று பெருமைப்படுவதா? அல்லது, இன்றும் சாதியின் பெயரால் நடக்கும் ஆணவக் கொலைகளை நினைத்து வெட்கப்படுவதா..?

இப்படி பட்டியல் இட்டால் அது நீண்டு கொண்டே போகும்....

உண்மையில் அறிவுள்ள சமூகம் வரலாற்றைக் கொண்டு பெருமைப்படவோ, சிறுமைப் படவோ செய்யாது. மாறாக, நேற்றோடு இன்றை ஒப்பிட்டு ஆய்வு செய்து நாளை குறித்துத் திட்டமிடும். நேர்மையாக கீழடி சொல்கின்ற நேற்றை, இன்றோடு ஒப்பிட்டு ஆய்வு செய்தால், நாம் இன்று இருக்கும் இழிநிலையும், அதிலிருந்து நாளை நாம் கடந்து செல்ல வேண்டிய வெகு தொலைவும் புலப்படும்.

பொதுவாக வரலாற்று ஆய்வுகள் நேற்றை விட நாம் இன்று எந்த அளவு வாழ்க்கைத் தரத்தில், பண்பாட்டுத் தளத்தில் உயர்ந்துள்ளோம் என்பதாகத் தான் அமையும். ஆனால், நம்முடைய தமிழர் வரலாற்று ஆய்வு மட்டும் நேற்றைவிட இன்று நாம் எவ்வளவு கீழ் நிலையில் உள்ளோம் என்று ஆய்வதாகவே இருக்கிறது.

கீழடியில் கிடைக்கின்ற பானை எழுத்துக்கள் அன்றைய தமிழனின் கல்வி அறிவை விளக்குகிறது. அதே தமிழன் தான் பின்னாளில் முற்றுமாகக் கல்வியிலிருந்து அப்புறப்படுத்தப் பட்டிருக்கிறான். இன்று பல போராட்டங்களுக்குப் பிறகு படிக்கத் தொடங்கி இருக்கிறான்.

இந்த மாறுபட்ட நிலைகளை உள்வாங்கி, இடையில் நாம் கல்வியற்றவர்களாக இருந்ததற்கு என்ன காரணம்? அந்த நிலை ஏற்படுத்திய நம் பகைவர்கள் யார்? என்று உணர்ந்தால் தான் இன்று இருக்கும் நிலையை நாம் தக்க வைத்துக் கொள்ளவும், இதிலிருந்து நாம் முன்னேறிச் செல்லவும் முடியும்.

- சே.ச.அனீஃப் முஸ்லிமின்

Pin It