புலவர் பெருமக்கள் தம்மையும் தம் நாட்டையும் புகழ்ந்து பாடும் வகையில் பண்பால் ஒழுகுதலே அரச வாழ்க்கையின் நோக்கமாகக் கருதி பண்டைய தமிழ் அரசர்கள் ஆட்சி புரிந்துள்ளனர். புலவர் போற்றும் வகையில் தமிழ் மன்னர்கள் நாட்டை ஆண்ட வரலாற்றுக் குறிப்புகளைச் சங்க இலக்கியங்கள்வழி அறியமுடிகின்றன. பண்டைய மன்னனொருவர் புலவர் புகழ்ந்து பாடாத வகையில் தாம் ஆட்சி செய்ய விரும்பாது வஞ்சின மொழி உரைத்த செய்தியைப் பழம்பாடல் ஒன்று இவ்வாறு சுட்டுகின்றது.
‘ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவ னாக
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைகஎன் நிலவரை’
பாண்டிய நெடுஞ்செழியன், பகை மன்னரோடு புரியும் போரில் தோல்வியுற்றால் ‘மாங்குடி மருதன் என்னும் சான்றோனை முதல்வனாகக் கொண்ட புலவர்கள், தம் நிலப்பகுதியைப் புகழ்ந்து பாடாமல் நிறுத்திக் கொள்ளும் வகையில் நிலைமை கெடுவதாகுக’ என்று வஞ்சினம் உரைத்ததாக அந்தப் பழம்பாடல் தெரிவிக்கிறது.
மன்னர் உரைத்ததாக உள்ள இந்தச் செய்தி, பண்டைக் காலப் புலவர்களின் கவிப் புலமையை வெளிப்படுத்தி நிற்கின்றது. சங்கப் புலமைச் சமூகத்தின் பேராளுமையையும் உணரச் செய்விக்கிறது. மன்னராட்சி முறையில் அரசின் சிறப்பை மக்களிடம் எடுத்துச் சொல்லும் வகையில் ‘புலவர்கள் பெருமக்கள்’ மட்டுமே ஊடமாகச் செயல்பட்டிருப்பதும் இங்குக் கருத்தில் கொள்ளத்தக்கது.
குறுநில மன்னர் அதியன் ஒருநாள் மலைப் பக்கமாய் வலம் வந்துகொண்டிருக்கும் பொழுது மிக அரிய நெல்லிக்கனி ஒன்று அவருக்குக் கிடைக்கப் பெற்றது. கிடைத்தற்கரிய கனியாயிற்றே என்ன செய்யலாம் என்ற சிந்தனையில், அதியன் அருகில் இருந்தவர்களிடம் ஆலோசனை கேட்கிறார். அவர்கள் ‘இக் கனியை உண்பார் நெடுநாள் வாழ்வர்; அதனால் மன்னா நீ உண்ண வேண்டும்!’ என்கின்றனர். அப்பொழுது அதியனுக்கு ஒரு சிந்தனை தோன்றி யிருக்கிறது. ‘கனியைத் தாம் உண்ணுவதைக் காட்டிலும் பெரும்புலமை பெற்ற ஒளவையார் உண்ணுதல் சிறப்பு’ என்பதே அச்சிந்தனை. பின்னர் கனியை உண்ணாமல் மன்னர் அரண்மனைக்குக் கொண்டுவருகிறார். கனியின் சிறப்பை முதலில் சொன்னால் ஒளவையார் உண்ணாமல் மறுப்பார் எனக் கருதிய அதியன் சிறப்பைக் கூறாமல் உண்ணச் செய்கிறார். உண்ட பின்னர் அக்கனியின் சிறப்பை அதியன் ஒளவையிடம் எடுத்துக் கூறுகிறார்.
அறிஞரை மதித்துப் போற்றிய அதியனின் இச்செய்கை ஒளவையை அதிசயிக்க வைத்திருக்கிறது. இந்தச் செய்தியைச் சுட்டும் ஒளவையார் பாட்டு புறநானூற்றில் (91) இடம்பெற்றுள்ளது. நாட்டை ஆளும் மன்னரைக் காட்டிலும் புலமையில் மிகுந்த புலவர்களே திறம் வாய்ந்தவர்கள் என்று பண்டைய அரசர்கள் கருதியுள்ளனர் என்பதை அதியனின் செயலிலிருந்து புரிந்துகொள்ளலாம்.
ஒருநாள் புலவரொருவர் சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனிடம் பரிசில் கேட்டுச் செல்கிறார். புலவர் வறுமையின் உச்சநிலையில் இருக்கிறார். வறுமைதீர உடனடியாகப் பரிசில் வேண்டப்படுகின்றது. மன்னர் பரிசில் கொடுக்க காலம் தாழ்த்துகிறார். மன்னரின் இச்செயலைக் கண்டு புலவர் கோபமுற்று அவருக்கு அறிவுறுத்தும் பொருட்டு
இடுமுள் படப்பை மறி மேய்ந்து ஒழிந்த
குறு நறு முஞ்ஞைக் கொடுங் கண் முற்றடகு
புன் புல வரகின் சொன்றியடு, பெறூஉம்,
சீறூர் மன்னர் ஆயினும் எம் வயின்
பாடு அறிந்து ஒழுகும் பண்பினோரே
(புறம். 197: 10 -14).
என்று இகழ்ந்து பாடுகிறார். நீ பெரிய வேந்தனாக இருந்தும் என்ன பயன். வறுமையில் வந்து பரிசில் கேட்போருக்குக் காலமறிந்து உதவும் பண்பில்லாத உன்னைவிட ‘வேலியில் படர்ந்த ஆடுமேய்ந்து எஞ்சிய முன்னையடகும் (முஞ்ஞைக் கீரை) நிலத்தில் விளைந்த எளிய வரகுச் சோறுமாகிய உணவைத் தருகின்ற சிற்றூர் வேந்தனே மதிக்கத்தக்கவன், துன்பம் அறிந்து உதவும் பண்பினன்’ என்கிறார் அப்புலவர். அறம் தவறி அரசரை அஞ்சாமல் கடிந்து பாடிய புலவர்களும் பண்டைக் காலத்தில் இருந்துள்ளனர் என்பதை இப்புறநானூற்றுப் பாடல்வழி தெரிந்துகொள்ள முடிகிறது.
சோழ மன்னர்களாகிய நெடுங்கிள்ளிக்கும் நலங் கிள்ளிக்கும் இடையில் போர்கள் பல தொடர்ச்சியாக நிகழ்ந்து வந்துள்ளன. நலங்கிள்ளியின் போர்த்திறம் மிக்க படைபலத்தால் நெடுங்கிள்ளியே ஒவ்வொரு முறையும் தோல்வியுற்று வந்துள்ளார். தோல்விகள் பல கண்டிருந்த நெடுங்கிள்ளி வெற்றிபெறும் நோக்கில் மீண்டும் ஒருமுறை நலங்கிள்ளிமீது படையெடுக்கக் கருதி ஆவூர்க்கு அருகிலிருந்த கோட்டை ஒன்றைக் கைப்பற்றிக் கொண்டு, உள்ளே புகுந்து கதவை அடைத்துக் கொள்கிறார். தன்னூரிலேயே, தன்னருகிலேயே ஓர் ஊரில் அரணுக்குள் அடைந்துகிடக்கும் நெடுங் கிள்ளியை எதிர்த்துப் போரிட வேண்டும் என்று நலங்கிள்ளி முடிவுசெய்து படையுடன் சென்று ஆவூர் கோட்டையை முற்றுகையிட்டுக்கொள்கிறார். அப் பொழுது புலவர் ஒருவரும் அரசருடன் வந்திருக்கிறார்.
படையின் முற்றுகையால் ஆவூரின் இயல்பு
நிலை முற்றாக முடங்கியிருந்தது. மக்கள் பெரிதும் துன்புற்றிருந்தனர். அரசருடன் வந்திருந்த புலவர் உயிர் களெல்லாம் துன்புறுவதைக் காண்கிறார். படையின் முற்றுகையினாலேயே இயல்புநிலை இப்படிப் பாதித் திருக்கிறதே! போர் நடைபெறத் தொடங்கினால் உயிர்களெல்லாம் மேலும் துன்புற நேரிடுமே! என்ற சிந்தனை புலவர்க்கு ஏற்படுகின்றது. உடனே போரினை நிறுத்த எண்ணிப் புலவருக்கே உள்ள உரிமையால் அரணுக்குள் சென்று நெடுங்கிள்ளியைக் கண்டு,
‘அரசே, களிறுகள் பிடிகளோடு கூட்டமாய்ச் சென்று நீர் நிலையில் நீராடவில்லை; நெய் யோடு கலந்து நெற்சோற்றைப் பெருங்கவளமாய்க் கொண்டு உண்ணவும் இல்லை; தம்மைக் கட்டியிருக்கும் பெருந் தூண்கள் தளருமாறு நிலத்தின்மேல் புரளும் கையுடன் நின்றநிலை நிற்கவும் ஆற்றாது சுழலுகின்றன; துன்பத்தை வெளிப்படுத்தும் வகையில் அவை இடி முழக்கம் போல் முழங்கவும் செய்கின்றன. பால் கிடைக் காமல் குழந்தைகள் அழுகின்றன. பெண்கள் பூக்களைச் சூடாமல் வெறுங்கூந்தலை முடிக் கின்றனர். குடிமக்கள் நீர் கிடைக்காத காரணத்தால் பெருங் குரலெடுத்துக் கூப்பிட்டு அழுகின்றனர். இவ்வகைத் துயரங்கள் உன் கண்ணெதிரில் தோன்றவும், உன் முயற்சியில்லாக் குறையாலும் மனத்தளர்ச்சியாலும் மட்டுமே என்பதை அறியாது, கோட்டைக்குள்ளிருத்தல் தகாத செயலாகும். நீ அறமுடையவன் என்றால் மதிலை முற்றியிருக்கும் நலங்கிள்ளியிடம் சென்று ‘இவ்வூர்’ உன்னுடையது எனக் கூறிவிட்டு மதிலைத் திறந்துவிடு; வீரமுடையவன் என்றால் போரின் பொருட்டு மதிலைத் திறந்துவிடு. இவற்றைச் செய்யாமல் அறத்தையும் அழித்து மறத்தையும் மறந்து கோட்டைக்குள் அடங்கி யிருக்கும் உன் செயல் ஆராய்ந்து பார்த்தால் வெட்கப்பட வேண்டிய தன்மையுடையது’
என்று கூறுகிறார்.
புலவர் கூறிய கருத்தைக் கேட்ட நெடுங்கிள்ளி, ஆவூர்க் கோட்டையை விட்டுவிட்டு, நலங்கிள்ளி தொடர்ந்து வருவதற்கு முன்னரே உறையூர் சென்று, அங்குள்ள ஒரு கோட்டைக்குள் புகுந்துகொண்டு முன்போல் அடைத்துக்கொள்கிறார். நலங்கிள்ளி தன் படையோடு ஆவூரைக் கைப்பற்றிக்கொண்ட பிறகு உறையூர் வருகிறார். நெடுங்கிள்ளியின் செய்கையைக் கண்டு கடும் சினம் கொண்டு போரிடக் கருதிக் கோட்டையை முற்றுகையிட்டுக் கொள்கிறார். அரசரின் அருகிலிருந்த புலவர், அரசர் இருவரையும் சமாதானப்படுத்த முற்படுகிறார். முன்போலவே கோட்டைக்குள் சென்று நெடுங்கிள்ளியைக் காண்
கிறார். அவரை நல்வழிப்படுத்திப் போரைத் தவிர்க்கும் நோக்கத்தில் புலவர் இக் கருத்தமைந்த பாடலைப் பாடுகிறார்.
நெடுங்கிள்ளியே, இப்பொழுது உன்னோடு போர் செய்யக் கருதி அரணுக்குப் புறத்தே முற்றுகை செய்திருப்பவன் பனை மாலை சூடும் சேரர் குலத்தவன் இல்லை; வேப்ப மாலை சூடும் பாண்டியர் குடியில் பிறந்தவனும் இல்லை. உன்னுடைய மாலையும் ஆத்திப் பூவால் தொடுக்கப்பட்டது; அவனது மாலையும் ஆத்திப் பூவாலானதுதான். இருவருள் யார் ஒருவர் தோற்றாலும் தோற்பவர் சோழர் குடியினரே யாவர். இருவரும் போரில் வெற்றி பெறுவது என்பது உலக இயல்பும் அன்று. எனவே உன் செயல் உன் சோழர் குடிப்பெருமைக்கு உரிய தன்று; உன் செயல் பகையரசருக்கு மட்டுமே உவகை தரும் தன்மையது. ஒரு குடியில் பிறந்த இருவரும் பகைப்பது அழிவையே தரும். இதனால் போரைத் தவிர்த்து அமைதி காண முயல வேண்டும்.
புலவரின் கருத்தைக் கேட்ட மன்னர்கள் போரைத் தவிர்த்துவிட்டுச் சமாதானம் அடைகின்றனர். இக் கருத்தமைந்த இரு பாடல்களும் புறநானூற்றில் (44, 45) இடம்பெற்றுள்ளன. நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி என்னும் இரு சோழ அரசர்களுக்குள்ளும் நிலவியிருந்த நெடும்பகையை நீக்கிச் சமாதானப்படுத்திச் சோழ நாட்டில் அமைதி காணச்செய்தவர் புலவர் ‘கோவூர் கிழார்’ என்னும் சங்கப் புலவர் ஆவார். இவர் பாடிய பாடல்களாக நற்றிணையில் (393) ஒன்றும், குறுந் தொகையில் (65) ஒன்றும், புறநானூற்றில் பதினைந்தும் காணப்படுகின்றன. திருவள்ளுவ மாலையில் ஒரு பாடலும் இவர் பெயரில் உள்ளது.
கோவூர் கிழார் இன்னொரு அரிய செயலையும் செய்திருப்பதை சங்கப் பாடலொன்றின் வழி அறிய முடிகின்றது. நெடுங்கிள்ளி உறையூரில் இருந்த காலத்தில் நலங்கிள்ளியிடம் பரிசில் பெற்றுப் பழகிய இளந்தத்தனார் எனும் புலவர் நலங்கிள்ளியைப் போலவே நெடுங்கிள்ளியும் புலவரை ஆதரிப்பர் என்று கருதி அவனிடம் பரிசில் பெறச் சென்றுள்ளார். புலவர் வந்த உண்மைக் கருத்தை உணராது, நெடுங்கிள்ளி அவர் தன் பகைவரிடமிருந்து தன்னிடம் ஒற்றாட வந்த ஒற்றர் என ஐயம்கொண்டு புலவரைக் கொல்லத் துணிகிறார். இந்தச் செய்தியை அறிந்த கோவூர்கிழார் நெடுங் கிள்ளியிடம் சென்று,
Ôஇரவலர், நன்கு பழுத்த பழங்களைக் கொண்ட மரத்தைத் தேர்ந்து செல்லும் பறவை போலக் கொடையாளரைத் தேடிச் செல்வர்; கடந்து செல்வதற்கரிய நீண்டவழி எனக் கருதாது பல வழிகளையும் கடந்து செல்வர்; குற்றமில்லாத தெளிந்த சொற்களால் தமக்கியன்றவாறு பாடல்கள் பாடிப் பரிசில் பெறுவர். பெறும் பரிசிலைத் தாமும் உண்டு சுற்றத்தாருக்கும் கொடுத்து மகிழ்வர். இத்தகைய இயல்புடைய பரிசிலர் உள்ளம் பிறருக்குத் தீமை புரிய அறியாதுÕ
எனும் பொருளமைந்த பாடலைப் பாடுகிறார். பரிசில் பெற்று வாழும் தன்மையுடைய புலவர் பிறருக்குத் தீங்கு செய்யும் எண்ணம் இல்லாதவர் என்ற அறநெறியை, புலவருக்குரிய இயல்பைத் தெரிவித்து, புலவர் இளந்தத்தனாரை நெடுங்கிள்ளி கொல்லா வகையில் பாதுகாத்துள்ளார் கோவூர் கிழார். புறநானூற்றில் உள்ள இப்பாடல்,
வள்ளியோர்ப் படர்ந்து, புள்ளின் போகி,
‘நெடிய’ என்னாது சுரம் பல கடந்து
வடியா நாவின் வல்லாங்குப் பாடி,
பெற்றது மகிழ்ந்து, சுற்றம் அருத்தி,
ஓம்பாது உண்டு, கூம்பாது வீசி,
வரிசைக்கு வருந்தும் இப் பரிசில் வாழ்க்கை
பிறர்க்குத் தீது அறிந்தன்றோ வின்றே! இன்றே;
(புறம். 47)
என வருகின்றது. நலங்கிள்ளி ஆதரித்துப் போற்றிய புலவர் இளந்தத்தனாரை நெடுங்கிள்ளி கொன்றிருப்பார் என்றால் இரு மன்னர்களுக்கு இடையே பகை தோன்றி, போர் நிகழ வாய்ப்பேற்பட்டிருக்கும். கோவூர்கிழார்
தம் புலமைத் திறத்தால் புலவரைக் காத்துப் போர் எழாத சூழலை ஏற்படுத்தியுள்ளார். இவைகள் பண்டைக் காலப் புலவர்களின் அமைதியாக்கச் சிந்தனைகளாக கிடைக்கப்பெறுகின்றன.
கோவூர்கிழார் சோழ மன்னர் கிள்ளிவளவனுடனும் நெருங்கிப்பழகி வந்துள்ளார். கிள்ளிவளவனுக்கும் மலைய மான் எனும் அரசனுக்கும் பெரும் பகை இருந்தது. சிற்றரசனாக இருந்த மலையமானைப் பெரு வேந்தரான சோழமன்னர் கிள்ளிவளவனால் அடக்கியாள முடிய வில்லை. பகை முற்றியிருந்த கிள்ளிவளவன் ஒருநாள் மலையமானின் பிள்ளையைச் சிறை பிடித்துக் கொண்டு வந்து தனது பட்டத்து யானையின் காலில் இட்டுக் கொன்று, பகைவனது மரபின் வளர்ச்சியை அழிக்கக் கருதுகிறார். கோவூர்கிழார் இச்செய்தியை அறிந்து யானையை நடத்திக் குழந்தைகளைக் கொல்லத் திட்டமிட்டிருக்கும் பொது மன்றத்திற்கு விரைந்து வருகிறார். மலையமானின் பிள்ளைபடும் துன்ப நிலையைக் கண்டார்; தம்மை மறந்து, களிற்றின் கால் அருகில் சென்று, குழந்தையை எடுத்துத் தழுவிக் கொள்கிறார். சினமும் பகையும் மிகுந்திருந்த கிள்ளி வளவன் முகத்தோற்றத்தைக் கண்டு இவ்வாறு பாடுகிறார்:
நீயே புறவின் அல்லல் அன்றியும், பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை;
இவரே, புலன் உழுது உண்மார் புன்கண் அஞ்சி,
தமது பகுத்து உண்ணும் தண் நிழல் வாழ்நர்;
களிறு கண்யு அழூஉம் அழாஅல் மறந்த
புன் தலைச் சிறாஅர்; மன்று மருண்டு நோக்கி,
விருந்தின் புன்கணோ உடையர்;
கேட்டனை ஆயின், நீ வேட்டது செய்ம்மே! (புறம். 46)
அதாவது, ‘நீ புறாவின் துன்பம் மட்டுமின்றிப் பிற உயிர்களின் துன்பத்தையும் தீர்த்த சோழப் பரம்பரையில் வந்தவர். இச்சிறுவரோ, அறிவால் வாழும் புலவர்களின் வறுமை போக்கும் அளவில் தம் பொருளைப் பகுத்துண்ணும் மரபில் பிறந்தவர். இவர் கொல்லவரும் களிற்றைக் கண்டு அஞ்சி அழுவதை மறந்து சிரித்து விளையாடும் குழந்தையாவர். பலரும் கூடியுள்ள பொது மன்றத்தைக் கண்டு அச்சத்துடன் பார்த்து வருத்தம் அடையும் தன்மையர். நான் சொல்வதையெல்லாம் கேள், இல்லையானால் நீ விரும்பியதைச் செய்’ என்று அரசனைப் பார்த்துப் பாடுகிறார் புலவர்.
புலவர் சொல்வதைக் கேட்ட கிள்ளிவளவன் சிறுவரை விடுதலை செய்து அவரிடம் ஒப்படைத் திருக்கிறார். புலவரும் அச்சிறுவரை அழைத்துப் போய் மலையமானிடம் சேர்த்திருக்கிறார். மலையமானின் பிள்ளையைக் கிள்ளிவளவன் கொன்றிருப்பாரே
யானால் இருவருக்கும் தீராப் பகை ஏற்பட்டுப் போரும் நடைபெற வாய்ப்பேற்பட்டிருக்கும். தம் புலமைத் திறத்தால் பகையை நீக்கி போரைத் தவிர்த்துள்ளார் கோவூர்கிழார். எல்லை கடந்து பகை நாட்டிற்குள் புகுந்த ஓர் அரசரைப் புலமைத் திறத்தால் காத்திருக் கிறார் மற்றொரு பண்டைப் புலவரான உறையூர் ஏணிசேரி முடமோசியார்.
உறையூரை ஆண்டுகொண்டிருந்த மன்னர் கோப்பெருநற்கிள்ளி ஒருநாள் யானை மேலமர்ந்து, நாட்டைச் சுற்றிப் பார்த்துக்கொண்டு வருகிறார். தன் நாட்டு எல்லைப் பகுதியை அவர் சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்தபோது, அவர் ஏறிவந்த யானை மதம் பிடித்து வேகமாக ஓடத் தொடங்கியது. இதனைக் கண்ட சோழப் படைவீரர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து, யானையை நிறுத்துவதற்காக ஓடுகின்றனர். ஆனால், யானையோ மேலும் மிரண்டு எல்லைப் பகுதியைத்தாண்டி ஓடுகிறது. சோழ நாட்டின் எல்லையைக் கடந்த யானை, சேர நாட்டெல்லைக்குள் பிளிறியபடியே ஓடியது. சோழப் படைவீரர்கள் யானை மீது அம்பு எறிந்தாவது, யானையை நிறுத்திவிட எண்ணி அம்பு, வில், வாள் கொண்டு யானையைப் பின்தொடர் கின்றனர். யானையானது, பகை அரசர் சேரமான் அந்துவஞ்சேரலின் நாட்டிற்குள் நுழைந்து அரண் மனையை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது.
அரண்மனை மாடத்தில் அந்துவன்சேரல் இரும் பொறை முடமோசியாருடன் பாடல் பாடக்கேட்டு மகிழ்ந்து உரையாடிக்கொண்டிருக்கிறார். புலவரின் கண்ணெதிரே இருந்த பெருந்தெருவில் மதம் கொண்ட யானையின்மீது சோழன் முடித்தலைக் கோப்பெரு நற்கிள்ளி விரைந்து வந்துகொண்டிருந்தார். அவரை மாடத்திலிருந்த முடமோசியார் காண்கிறார். சேர மன்னரும் காண்கிறார். புலவருக்குத் தன் நண்பனாகிய சோழ மன்னன் பகை நாட்டில் புகுந்தமையால் ஆபத்தின்றித் திரும்ப வேண்டுமே என்ற எண்ணம் தோன்றுகிறது. சேரனுக்கோ, ‘நம் பகைவனாகிய இவன் இங்கு எப்படி வந்தான்? முன்னறிவிப்பின்றி நம்மீது படையெடுத்து வருகின்றானோ? என்ற எண்ணம் தோன்றுகிறது. சேரனின் உள்ளத்தில் தோன்றிய எண்ணத்தை முகக் குறிப்பால் கண்டுகொண்ட முடமோசியார் இப் பாடலைப் பாடுகிறார்.
'இவன் யார்?' என்குவை ஆயின், இவனே
புலி நிறக் கவசம் பூம் பொறி சிதைய,
எய் கணை கிழித்த பகட்டு எழில் மார்பின்,
மறலி அன்ன களிற்று மிசையோனே;
களிறே, முந்நீர் வழங்கு நாவாய் போலவும்,
பல் மீன் நாப்பண் திங்கள் போலவும்,
சுறவினத்து அன்ன வாளோர் மொய்ப்ப,
மரீஇயோர் அறியாது, மைந்து பட்டன்றே;
நோய் இலன் ஆகிப் பெயர்கதில் அம்ம!
பழன மஞ்ஞை உகுத்த பீலி
கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும்,
கொழு மீன், விளைந்த கள்ளின்,
விழு நீர் வேலி நாடு கிழவோனே (புறம். 13)
‘இவன் யார் என்று கேட்டால்? மிகச்சிறந்த வளங்கள் நிறைந்த சோழ நாட்டைச் சேர்ந்தவன். கொழுத்த மீன்கள் வாழும் நீர்நிலைகளையும், நெற் கதிர்களையுடைய வயல்வெளிகளையும் உடைய நாட்டை ஆள்கின்ற சோழ மன்னன் இவன்தான். நாட்டு வளம் போலவே படை வளமும் மிக்கவன். பகைவர் எய்தும் அம்பினை தன் மார்பில் தாங்கும் வலிமை மிக்கவன். இப்போது இவன் இங்குப் போரிட வர வில்லை, இவன் ஏறியுள்ள யானை மதம் பிடித்து ஓடி வருகின்றது. தன் பாகரும் அறியாதபடி மதங்கொண்ட இந்த யானையின் மீதுள்ள மன்னனைக் காப்பாற்றவே, இவனது படைவீரர்கள் பின்னால் ஓடி வருகின்றனர். உன்னோடு போரிட இங்கு வரவில்லை. யாருக்கும் தீங்கிழைக்கவும் வரவில்லை. மதம் பிடித்த யானையே அவனை இங்குக் கொண்டு வந்திருக்கிறது. எனவே, மிகச்சிறந்த வீரனான இச்சோழன் எத்தகைய துன்பமும் இல்லாமல் இங்கிருந்து செல்ல அனுமதிப்பாயாக’
புலவரின் அன்பைக் கண்ட சேர மன்னன் வியப்புற்றுச் சோழ மன்னரைச் சிறை பிடிக்கும் எண்ணத்தை கைவிடுகிறார். சோழ மன்னரும் துன்பம் ஏதுமின்றித் தன் நாட்டிற்குத் திரும்பிச் சென்று சேருகிறார். மன்னன் உடனிருந்தும் எதிரிநாட்டு மன்னனை வாழ்த்திப் பகை ஏற்படாத வகையில் நல்ல சூழலை ஏற்படுத்திய புலவரின் புலமைத் திறத்தைப் புறநானூற்றுப் பாடல்வழி அறிந்துகொள்ள முடிகின்றது.
குமண நாட்டை ஆண்டுவந்த ‘குமணன்’ எனும் மன்னரைத் தன் தம்பியாகிய இளங்குமணன் நாட்டை விட்டு விரட்டியடித்துவிட்டு ஆட்சி புரிந்து வருகிறார். நாட்டைவிட்டு விரட்டப்பட்ட குமணன் காட்டில் வாழ்ந்து வருகிறார். இளங்குமணன் அண்ணனாகிய குமணனின் தலையை வெட்டிக் கொண்டுவருபவருக்கு ஆயிரம் பொற்காசுகள் தருவதாக அறிவித்திருந்தார்.
இந்த நேரத்தில் குமணனின் கொடைச் சிறப்பை அறிந்திருந்த பெருந்தலைச் சாத்தனார் எனும் புலவர் பரிசில்பெரும் நோக்கத்துடன் காட்டில் சென்று குமணனைச் சந்திக்கிறார். குமணனிருந்த நிலையை அறிந்தும் தாம் வந்த செய்தியைப் புலவர் இவ்வாறு பாடுகிறார்:
ஆடு நனி மறந்த கோடு உயர் அடுப்பின்
ஆம்பி பூப்ப, தேம்பு பசி உழவா,
பாஅல் இன்மையின் தோலொடு திரங்கி,
இல்லி தூர்த்த பொல்லா வறு முலை
சுவைத் தொறு அழூஉம் தன் மகத்து முகம் நோக்கி,
நீரொடு நிறைந்த ஈர்இதழ் மழைக்கண் என்
மனையோள் எவ்வம் நோக்கி, நினைஇ,
நிற் படர்ந்திசினே - நல் போர்க் குமண! -
என் நிலை அறிந்தனை ஆயின், இந்நிலைத்
தொடுத்தும் கொள்ளாது அமையலென் - அடுக்கிய
பண் அமை நரம்பின் பச்சை நல் யாழ்,
மண் அமை முழவின், வயிரியர்
இன்மை தீர்க்கும் குடிப் பிறந்தோயே (புறம். 164)
‘உணவு சமைக்கும் அடுப்பில் காளான் பூத்துள்ளது. பசியால் வருந்தி வாடும் மனைவியிடம் தாய்ப்பால் இல்லாததால் குழந்தை பசியால் அழுகிறது. குழந்தையின் முகத்தைப் பார்த்து என் மனைவி அழுகின்றாள். என் மனைவியின் வருத்தத்தைப் பார்த்துக் கொண்டு என்னால் நிம்மதியாக இருக்கமுடியவில்லை. என் குடும்ப வருத்தத்தைத் தீர்க்கக்கூடிய அளவில் உதவிபுரியத்தக்க வள்ளல் நீயென நினைத்து உன்னிடம் வந்தேன். நீ, பாணரது வறுமையைப் போக்கும் வள்ளல் தன்மையைக் கொண்ட குடியில் பிறந்தவன். இப்பொழுது உதவி செய்யும் நிலையில் நீ இல்லை என்பதை நான் அறிவேன். ஆனால் உன்னை வளைத்து வலிந்தேனும் பரிசில் பெறாமல் செல்ல மாட்டேன்’ என்கிறார் புலவர்.
வறுமையில் வாடுபவர்களுக்கு உதவி செய்து பழகிய குமணன், இளங்குமணன் அறிவித்த செய்தியைப் புலவரிடம் எடுத்துக்கூறி, தன் தலையைக் கொண்டு போய் அவனிடம் கொடுத்து ஆயிரம்பொன் பெருமாறு சொல்லி வாளினைப் புலவர் கையில் கொடுக்கிறார். குமணன் செய்த செயலைக் கண்ட பெருந்தலைச் சாத்தனார் தம் வறுமையை மறந்து அவரைக் காப்பாற்ற என்ன செய்யலாம் என்ற சிந்தனையில் ஆழ்ந்து போகிறார். சிறிது நேரத்தில் ‘அரசே! எனக்குப் பரிசிலாகக் கொடுத்த உனது தலையை நான் திரும்பி வரும்வரை காப்பாற்றியிருக்க வேண்டும், என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டுச் சென்றுவிடுகிறார்.
குமணனிடமிருந்து விடைபெற்றுச் சென்ற புலவர், அருகிலிருந்த மாந்தை எனும் ஊரில் வாழ்ந்த சிற்பியைக் கண்டு, தம் கருத்தைத் தெரிவித்துக் குமணன் தலைபோல ஒன்றைச் செய்யச் சொல்லி, அதைப் பெற்றுக் கொண்டு இளங்குமணனைச் சந்திக்கச் செல்கிறார். குமணன் தலையை ஒருவர் கொண்டுவந்திருக்கிறார் என்ற செய்தி இளங்குமணனுக்குத் தெரிவிக்கப்பட்டது. தலையைப் பார்ப்பதற்கு ஆவலோடு வருகிறார் மன்னர். புலவர் கொண்டுவந்த பொய்த்தலையைப் பார்த்துச் சகோதர பாசத்தால் அழுது புலம்புகிறார் மன்னர். மன்னர் தன் தவறை மறந்து மனம் திருந்திய பின்னர் இந்தப் பாடலைப் பாடுகிறார் சாத்தனார்.
மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே!
துன் அருஞ் சிறப்பின் உயர்ந்த செல்வர்,
இன்மையின் இரப்போர்க்கு ஈஇயாமையின்,
தொன்மை மாக்களின் தொடர்பு அறியளரே;
தாள் தாழ் படு மணி இரட்டும், பூ நுதல்,
ஆடு இயல் யானை பாடுநர்க்கு அருகாக்
கேடு இல் நல் இசை வய மான் தோன்றலைப்
பாடி நின்றெனனாகக் கொன்னே
பாடு பெறு பரிசிலன் வாடினன் பெயர்தல் என்
நாடு இழந்ததனினும் நனி இன்னாது என,
வாள் தந்தனனே, தலை எனக்கு ஈய,
தன்னின் சிறந்தது ரிது ஒன்று இன்மையின்;
ஆடு மலி உவகையடு வருவல்,
ஓடாப் பூட்கை நின் கிழமையோற் கண்டே (புறம். 165)
Ôநிலையற்ற வாழ்க்கையில் தாம் நிலைக்க வேண்டும் என்று கருதியவர்கள் வறியவர்களுக்கு உதவும் அறச் செயல்கள் செய்து தம் புகழை உலகத்தில் நிலைநிறுத்தித் தன் உயிரைத் துறந்துள்ளனர். எளிதில் அணுகிப் பொருள் பெறாத வகையில் வாழ்ந்த செல்வர்கள் தம் புகழை உலகில் நிறுத்தாமல் மறைந்து போயுள்ளனர். தாளின்கண் தாழ்ந்த ஓசையையுடைய மணிகள் ஒன்றுக்கொன்று மாறி ஒலிக்கும், புள்ளியமைந்த நெற்றியையுடைய யானைகளைப் புலவர்களுக்குக் கொடுக்கும் அழிவற்ற நல்ல குணம் படைத்த தலைவனைப் பாடி நின்றேன். ‘சிறப்புடைய ஒரு புலவன் பரிசில் கேட்டுவந்து பரிசில் கிடைக்காமல் வாடிச் செல்லுதல் என் நாட்டை இழப்பதைக் காட்டிலும் மிகவும் துன்பம் தருவதாகும்’ என என்னிடம் கூறி, காட்டில் தருவதற்கு என்னிடம் என்னைத் தவிர வேறு பொருளில்லை என்பதால் தலையைப் பரிசாகத் தருவதற்கு என்னிடம் வாளைத் தந்தான். ஆண்மை சிறந்த உன் தமையனைக் கண்டு அவன் செய்த செயலை மகிழ்ந்து உன்னிடம் வந்தேன்.’
பெருந்தலைச் சாத்தனார் பாடக் கேட்ட இளங்குமணன் பகை மறந்து அண்ணன் குமணனைக் காட்டிலிருந்து அழைத்து வந்து முடிசூட்டி நாடாளச் செய்துள்ளார். உடன்பிறந்தார் இருவருக்கும் உள்ளிருந்த பகையைப் போக்கி ஒற்றுமை ஏற்படுத்தும் வகையில் புலவர் பாடிய புறநானூற்றுப் பாடல் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக உள்ளது. ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் உடன் பிறந்தார் இருவரும் போரிட்டுக் கொண்டால் நாடு அமைதியான நிலையில் இருக்காது; மக்களும் துன்பம் அடைவார்கள் என்பதைப் புலவர் உணர்ந்து, நாட்டின் அமைதிக்காகப் புலவர் மேற் கொண்ட முயற்சி காலத்திற்கும் வேண்டப்படும் ஒன்றாகும்.
கோவூர்கிழார் என்னும் பண்டைப் புலவர், ஓர் அரசர் குலத்திற்குள் (நெடுங்கிள்ளி - நலங்கிள்ளி) நிலவிய பகையை நீக்கிப் போர் நிகழாத வகையில் அமைதிச் சூழலை உருவாக்கியுள்ளார். பண்டைப் புலவரின் இந்த அமைதியாக்கச் சிந்தனை சமகாலச் சூழலுக்கு மிகவும் வேண்டப்படுவதாகும்.
பேரரசுக்கும் (சோழன் கிள்ளி வளவன்) சிற்றரசுக்கும் (மலையமான்) இடையில் நிலவிய பகையைப் போக்கிய அளவிலும் அமைதியாக்கச் சிந்தனையை அளித்துச் சென்றுள்ளார் கோவூர்கிழார் எனும் பண்டைப் புலவர்.
வேற்றுகுலத்து அரசர் ஒருவர் பகை நாட்டிற்குள் எல்லை தாண்டிச் சென்றால் போர் நிகழவே வாய்ப் புள்ளது. சங்கப் புலவர் உறையூர் ஏணிசேரி முடமோசியார், எல்லை தாண்டிப் பகை நாட்டிற்குள் சென்ற அரசரையும் (சோழன் முடித்தலைக் கோப்பெரு நற்கிள்ளி) தம் புலமைத் திறத்தால் பத்திரமாக மீட்டனுப்பி பகை மன்னரையும் (சேரமான் அஞ்சுவள் சேறல் இரும் பொறை) மனங்கொள்ளச் செய்துள்ளார் என்பது புறநானூற்றுப் பாடலால் அறியவருகின்றது.
பெருந்தலைச் சாத்தனார் என்னும் சங்கப் புலவர் குமணன் - இளங்குமணன் ஆகிய சகோதரர்கள் இருவருக்கும் ஆட்சி உரிமையில் இருந்த பகையை நீக்கி நாட்டில் அமைதிச் சூழலை உருவாக்கியுள்ளார். உறவுகளுக்குள் நிலவிய பகையைப் போக்கிய அளவிலும் பண்டைக் கவிஞர்களின் அமைதியாக்கச் சிந்தனைகளைக் காணமுடிகின்றன. பரிசில் தர காலம் கடத்திய மன்னரை, மன்னரென்றும் கருதாமல் கண்டித்துப் பாடியதும், அரசர்களுக்குள் ஏற்பட்டிருந்த பகையை நீக்கிப் பாடியதும் பண்டைப் புலவர்களின் தனித்து நோக்கும் சிந்தனைகளாக உள்ளன. பண்டைக் காலப் புலவர்களின் இவ்வகைச் சிந்தனைகள் நம் காலத்துப் படைப்பாளர்களுக்கு மிகவும் தேவைப்படுவனவாகும் என்பதைப் படைப்புச்சூழல் உணரச்செய்கிறது.
துணைநின்ற நூல்கள்
1. சாமிநாதையர் உ.வே. (ப.ஆ.). 1894. புறநானூறு மூலமும் பழைய உரையும், சென்னை: ஜூபிலி அச்சுக்கூடம்.
2. பரிமணம், அ.ம. & பாலசுப்பிரமணியன், கு. வெ. (ப. ஆ.); செயபால் (உ.ஆ.). 2011 (4ஆம் பதிப்பு). புறநானூறு மூலமும் உரையும் (தொகுதி1, 2) சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.