சங்ககாலத் தமிழர்கள், நடைமுறை வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள், நல்லது-கெட்டது என்ற முரணில் ஒழுங்குகளை வலியுறுத்தின. இத்தகைய ஒழுங்குகள், ஒருநிலையில் அறங்கள் எனப்பட்டன. அதேவேளையில் ஒழுங்கின்மை என்பது, ஒட்டுமொத்தச் சமூகத்திற்கு எதிரானது என்ற கருத்து, வலியுறுத்தப்பட்டது. அறம் என்ற பெயரிலான ஒழுங்குகள், எல்லோருக்கும் பொதுவானவை என்ற பார்வை, மேலோட்டமான நிலையில் பொதுப்புத்தியில் இன்றுவரை நிலவுகிறது. நடப்பில் சமூக உற்பத்தி சார்ந்த ஆதிக்க உறவுகளை ஒழுங்குகள் ஒருவகையில் நியாயப்படுத்துகின்றன.

ஆதிக்க சக்திகள் அல்லது ஆள்வோரின் நலன்களே ஒட்டுமொத்தச் சமூகத்தினருக் கானவை என்ற புனைவைக் கட்டமைக்க ஒழுங்குகள் உதவுகின்றன. ஒழுங்கானது, அறம் எனப் புனிதப் படுத்தப்படுவதில் நுண்ணரசியல் பொதிந்துள்ளது. அறம் புனிதமானது; என்றும் மாறாதது; காலந்தோறும் நிலைத்திருப்பது; ஒருபோதும் மாறாதது போன்ற கூற்றுகளின் மூலம் நிலவும் சமூக ஒழுங்குகள் தக்க வைக்கப்படுகின்றன. உடல் மீதான நேரடியான வன்முறையைவிட, மக்கள் மனதில் உருவாக்கப்படுகிற ஒழுங்குகள் வலிமையானவை.

இதனால் ஆள்வோரின் அதிகாரம், நுட்பமான முறையில் பரந்துபட்ட மக்கள்மீது ஆழமாக வினையாற்றுகிறது. நடப்புச் சமூகச் சூழலுடன் மாறுபட்டு எதிர்த்துக் கேள்விகள் கேட்பது, ஒழுங்கின்மை எனக் குற்ற உணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பொதுவாகச் சமூகத்தில் பொருளியல்ரீதியில் ஆதிக்கம் செலுத்துகிறவர்களின் நலன்களுக்குச் சார்பான ஒழுங்கு களையும், ஒழுங்கின்மைகளையும் வலியுறுத்திட விதிகளும் விலக்குகளும் பெரிதும் பயன்படுகின்றன. வாய்மொழியாகக் கட்டமைக்கப்படுவதைவிட, இலக்கியப் படைப்புகள் மூலம் பதிவாக்குகிற ஒழுங்குகளும் ஒழுங்கின்மைகளும் ஒருநிலையில் சமூக ஆவணமாக மாறுகின்றன. ஒழுங்கு அவசியம் என்ற சூழலில், ஒழுங்கை மீறுதல் குற்றமாகக் கருதப்பட்டுக் கொல்லுதல் உள்ளிட்ட தண்டனைகள் வழங்கப்பட்டன.

பொதுவாக எதிரிணைகள் (Binary) மூலம் எல்லாவற்றையும் மதிப்பிடுகிற போக்கு, வழக்கில் இருக்கும் நிலையில், ஒழுங்கு-ஒழுங்கின்மை குறித்த மதிப்பீடுகள் அடிப்படை யானவை. சங்க இலக்கியப் பிரதிகளை ஒழுங்கும் ஒழுங் கின்மையும் என்ற அடிப்படையில் அணுகிடும்போது, வரலாற்றின் பன்முகங்கள் அழுத்தமாக வெளிப்படு கின்றன.

அறம் வெல்லும் மறம் வீழும் என்பது வெறுமனே நம்பிக்கை சார்ந்தது. அதியற்புத ஆற்றலுடன் தொடர் புடைய விதித் தத்துவம், விண்ணுலகு பற்றிய புனைவைக் கட்டமைத்தது. மக்களை பிறப்பு, பால்ரீதியில் பிரித்து ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்துகிற மதங்கள், நிலவுகிற சமூகச் சூழலை ஏற்றுக்கொள்வதற்கான அடிமை உடல்களைத் தயாரிக்கிற பணியைச் செய் கின்றன. ஆள்கிறவர்களின் அதிகாரத்தையும் நலன் களையும் காப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒழுங்குகள், காலந்தோறும் விதிகள் என்ற பெயரில் செல்வாக்குடன் விளங்குகின்றன. ஒழுங்கு என ஒன்றை வலியுறுத்தும் போது, தானாகவே ஒழுங்கின்மையும் ஆளுகை செலுத்துகிறது. எவற்றைக் கறாராகப் பின்பற்ற வேண்டும் என ஒழுங்குகளை வகுக்கும்போது, எவற்றை விலக்க வேண்டும் என்பது ஒழுங்கின்மையாக வரை யறுக்கப்படுகிறது.

தமிழரின் அடையாளமாகக் கருதப்படுகிற சங்கப் பாடல்களில், தொகுப்பாளர்களின் நோக்கங்கள் காரணமாகக் குடிகளாக வாழ்ந்த மக்களின் குரல்கள், புறக்கணிக்கப்பட்டிருக்க வாய்ப்புண்டு. இனக்குழு வாழ்க்கைமுறை சிதைவடையும் நிலையில், இயற்கை யோடு இயைந்து, திணை சார்ந்திட்ட மக்களின் இருப்புக் கேள்விக்குள்ளானது. மரபு வழிப்பட்ட நிலையில் வேட்டையாடி உணவு ஈட்டிய குறவர், ஆநிரை கவர்தல், வழிப்பறி மூலம் பொருள் தேடிய எயினர், மீன் பிடித்து வாழ்ந்து வந்த பரதவர் போன்றோரின் வாழ்க்கை முறைகள் சிதைவடையத் தொடங்கின. வளமான மருத நிலங்கள் மூலம் வேளாண்மை செய்து ஆதாயம் பெற்றவர்களின் கை மேலோங்கியது. சங்க காலத்தில் கூத்தர், மழவர், உமணர், கொல்லர், தச்சர், குயவர், புலையர், புலவர் எனத் தொழில் அடிப்படையில் அழைக்கப்பட்ட பல்வேறு பிரிவினரும் ஒத்திசைந்து வாழ்ந்து வந்தனர்.

அவர்களிடையே ஒரு குறிப்பிட்ட பிரிவினரை இழந்தவர் களாகவோ, அசுத்தமானவர்களாகவோ கருதப்படாத நிலை நிலவியது. குடிகளாக வாழ்ந்த தமிழர்களிடையே காலப்போக்கில் முரண்பாடுகள் தோன்றின. சங்கப் படைப்புகளில், காலத்தினால் பிந்தைய கலித் தொகையில் புலையன் என்ற சொல், இழிவான பொருளில் கையாளப்பட்டுள்ளது. பரத்தையிடமிருந்து தனது கணவனுக்குத் தூதுவனாக வந்த பாணனைப் புலையர் எனக் கேவலமான தொனியில் ஒரு பெண் திட்டுகிறாள். (கலித்தொகை 68).

மொழியானது நிலத்துடன் பிணைக்கப்படும்போது, அம்மொழி புழங்கும் நாடு என்ற கருத்தியல் உருவாகிறது. அரசு, அதிகாரம், போர், வீரம் போன்றன மேலாதிக்கம் பெறும் சூழலில், சிறிய நிலப்பரப்புகள் சிதைக்கப்பட்டு, பெருநிலப்பரப்பு உருவாக்கப்படுகிறது. இனக்குழுவினராக வாழ்ந்துவந்த நிலைமை மாற்ற மடைந்து, குறுநில மன்னர்கள் வலுவடைந்தனர். மூவேந்தர் என்ற அரசியல் நோக்கிய செயல்பாட்டினை ஊக்குவிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது. வேந்தர்களின் ஆளுகையின்கீழ் அரசியலதிகாரம், தமிழ் நிலப்பரப்பில் வீச்சாகப் பரவியது. தமிழ் நிலவெளியில் பாடல்களைப் பாடித் திரிந்த பாணர்களினால் கருத்தியல்ரீதியாகத் தமிழ்ச்சமூக அரச உருவாக்கம் நடந்தேறியது. மன்னர்களுக்கிடையிலான போர்களை நியாயப்படுத்தும் வகையில், வீரத்தை முன்னிறுத்திப் புலவர்கள் உருவாக்கிய பேச்சுகள், மக்களிடையே போருக்குச் சார்பான மனநிலையை ஏற்படுத்தின.

பல்வேறு குறுநிலப் பரப்புகளாகத் துண்டுபட்டுக் கிடந்த நிலையை மாற்றிப் பெருநிலம் பற்றிய புனைவுக்கு வித்திட்ட பாணர்களின் செயல்பாடுகள், முக்கிய மானவை. வேடர், ஆயர், குறவர், எயினர், உமணர், பரவர், பாணர், துடியர், கூத்தர், பொருநர், பறையர், கடம்பர், கிணைவர் போன்ற புராதன இனக்குழுக் குடிகளையும் அவர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த மலை, காடு, கடற்கரை, புறவு போன்ற இடங்களையும் மாற்றியமைத்து, வேந்தர் ஆட்சியதிகாரம் சார்ந்து உருவாக்கியதில் புலவர்களின் செயல்கள் தனித்துவ மானவை.

எட்டுத்தொகை நூலான புறநானூற்றில் வேந்தன், மன்னன், இறை, காவலன் போன்ற சொற்கள் ஆட்சித் தலைவரைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளன. வேந்தன் என்பது மூவேந்தர்களையும், மன்னன் என்பது குறுநில மன்னர்களையும், இறை மற்றும் காவலன் இனக்குழுத்தலைவர்களையும் குறித்தன. வேந்தர்களைப் பற்றிய தகவல்களை ஒதுக்கிவிட்டு ஆராய்ந்தால், புராதன இனக்குழுச் சமுதாயங்களின் வளர்ச்சி நிலை, எச்சங்கள், உருமாற்றம் போன்றவற்றைக் கண்டறியலாம். பெரும்பாலான குறுநில மன்னர்கள்கூட ஓரளவு வளர்ச்சி பெற்ற இனக்குழுத் தலைவர்களே ஆவர். இனக்குழுச் சமூகத்திற்கே உரிய குழு மனப்பான்மையும், ஒன்றிணைந்த செயல்பாடுகளும், சங்கப்பாடல்களில் காணப்பெறுகின்றன.

இனக்குழுச் சமூகத்தின் அடிப்படையான அம்சம் ‘உணவுப் பங்கீடு’. பகிர்ந்துண்ணும் வழக்கமுள்ள வேடர், குறவர் போன்றோர் குழுவாகச் சேர்ந்து வேட்டையாடிக் கொண்டு வருவதைத் தங்களுக்குள் பகிர்ந்து உண்ணும் இயல்புடையவர்கள். வேட்டை, ஆநிரை கவர்தல், ஆறலைக்களவுமூலம் உணவு சேகரித்த வேடர்கள், காலப்போக்கில், வேந்தர்களுக்காகப் போரிடுகிறவர் களாக மாறினர். சீறூர் மன்னர்களாக மாறிய குறுநில மன்னர்கள் இனக்குழுவினரின் நலனை முன்னிலைப் படுத்தினர். மலைநாட்டுப் பகுதிகளில் வாழ்ந்துவந்த வேட்டைச் சமூகத்தினரும் காட்டில் தினை, வரகு விதைத்த அரை வேட்டைச் சமூகத்தினரும் மலை நாட்டரசர் உருவாகப் பின்புலமாக விளங்கினர். மலைச்சாரலில், குறிப்பிட்ட பகுதியில் எரியூட்டிக் கைப்பற்றப்பட்ட நிலத்தில், அருவி அல்லது ஊற்று நீரால் தினை விளைவித்த கானக்குறவர்கள் இடம்விட்டு இடம்பெயர்ந்து செய்த விவசாயத்துடன், வேட்டை யாடினர். இத்தகைய மலைநாட்டுக் குடிகளுக்குத் தலைவனாக உருவானவர்கள், தன்னாட்சியுடன் அரசினை நடத்தினர்.

நீர்ப்பாசன வசதியைப் பயன்படுத்தி, வேளாண் மையை விரிவுபடுத்தி உற்பத்தியைப் பெருக்கியநிலை, மருதநிலப் பகுதிகளில் துரிதமானது. வேளாண்மையை மேற்கொண்டவர்களின் நலனைப் பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அரசானது, ‘வேந்தர்’ தலைமையின் கீழ் வலுவானது. இத்தகைய வேளாண்மை வர்க்கத்தாரின் நலன்களைப் பாதுகாப்பதற்காக வேந்தர்கள், ஏற்கனவே பாரம்பரியமானமுறையில் அரசாண்ட குறுநில மன்னர்கள், இனக்குழுத்தலைவர்கள் போன்றோரைப் போர்களின் மூலம் வென்று, தங்களுடைய ஆளுகை நிலப்பகுதியை விரிவுபடுத்தினர். நீர் ஆதாரங்களை மேம்படுத்தி நிலத்தில் விளைச்சலைப் பெருக்கி, வளமான வாழ்க்கை வாழ வேண்டுமெனப் புலவர்கள் பாடிய பாடல்கள், சமூக வளர்ச்சியைத் துரிதப்படுத்தின.

சங்கத்திணைசார் வாழ்க்கையில் தொன்மையான பழங்குடியினருள் பாணர்கள் இடம் பெயரும் இயல்புடையவர்கள். புலம் பெயர்ந்து அலைந்து கொண்டிருந்த பாணர்கள், மந்திரம், குறி சொல்லுதல், நிமித்தம், மருத்துவம் போன்றவற்றில் வல்லமையான வர்கள். அவர்கள் யாழ் என்றும் இசைக்கருவியை மீட்டியவாறு இசைப்பாடல்களைப் பாடினர். எப்பொழுதும் கூடி வாழும் இயல்புடைய பாணர்கள், கூத்தர்கள், விறலியர், பொருநர், பாடினியர் என அழைக்கப்பட்டனர். ‘வல்லாண் முல்லை’ சார்ந்த பாடல்களைப் பாடிய வாய்மொழி மரபினரான பாணர்களுக்கும் இனக்குழுத் தலைவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. ‘முதுவாய்ப் பாணர்’ என அழைக்கப்பெற்ற பாணர் மரபினர், பழங்குடி மக்களின் இனவரைவியல் வாழ்க்கையில் முக்கிய இடம் வகித்தனர்.

பாணர் மரபிலிருந்து வளர்ச்சியடைந்த நிலையில் புலவர் மரபு தோன்றியிருக்க வேண்டும். பாணர்களுடன் ஒப்பிடும்போது, புலவர்கள் வேந்தர்களுடன் நெருக்கமான உறவு கொண்டிருந்தனர். எப்பொழுதும் அலைந்து திரிந்து புலம் பெயரும் இயல்புடைய பாணர்களின் வாய்மொழி மரபு, சமூக அரசியல் மாற்றத்தினால் மதிப்பிழந்தது. பாணர்கள், ஆதரிப்பார் யாருமின்றி அடுத்தவேளை உணவுக்காக வாடிய நிலையினால், வறுமைக்குள்ளாயினர். புலவர்கள், வேந்தர்களைச் சார்ந்து வாழும் சூழல் நிலவியபோது, பாணர் மரபு மட்டும் அழிவுக்குள்ளானது ஆய்விற் குரியது.

வைதிக சமயத்தின் காரணமாகப் பார்ப்பனர்கள் சடங்குரீதியில் வேந்தர்களிடம் ஆதிக்கம் பெற்றமை யினால், ‘முதுவாய்ப் பாணர்கள்’ புறக்கணிக்கப்பட்டனர். பாணர்களில் பார்ப்பனர் யாரும் இல்லாத சூழலில், பார்ப்பனர்கள் புலவர்களாகப் பாடல்கள் பாடியிருப்பது கவனத்திற்குரியது. வேந்தர்களிடம் வைதிக நெறி பெற்ற செல்வாக்குக் காரணமாகப் பாணர் மரபு வீழ்ச்சி யடைந்தது. பாணர், பறையர், பொருநர், துடியர் போன்ற விளிம்புநிலைக் கலைஞர்கள், பரந்த நிலப் பரப்பினை ஆள்கிற வேந்தனின் ஆட்சிக்குத் தேவை யற்றவர்களாயினர்.

கி.மு. 6-ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்ட வைதிக சமயமும் அவைதிக சமயங்களான ஜைனமும் பௌத்தமும் சங்க காலத்தில் தமிழக நிலப்பரப்பில் நுழைந்தன. வேட்டைச் சமூகமும் இனக்குழு வாழ்க்கையும் சிதைவடைந்து, பெரு நிலப் பரப்பில் வேந்தனின் ஆட்சியதிகாரம் பரவலாகிய சூழலில், இருவகை சமய மரபுகளும் தமிழகத்தில் செல்வாக்குப் பெற்றன. வேள்வித் தீயை வளர்த்து யாகம் செய்த சமஸ்கிருதம் பேசும் பார்ப்பனர்களுக்கு மன்னர் களிடம் வரவேற்பு இருந்தது. புதிதாக உருவாகியிருந்த வணிகர்கள் ஜைன, பௌத்தத் துறவியரின் கருத்துகளை ஆர்வத்துடன் ஏற்றுக் கொண்டனர். பார்ப்பனர்களின் பழக்கவழக்கம், பண்பாட்டுக் கட்டமைப்பிலான சாதிய அமைப்பு போன்றன சங்க காலத்தில் தமிழகத்தில் மெல்ல ஊடுருவின.

வேதமும் யாகமும் பார்ப்பனர்களின் ஆயுதங்களாக உருமாறின. தருமம் அல்லது ஒழுங்குகள் என்ற பெயரில் எதைச் செய்ய வேண்டும் எதைச் செய்யக் கூடாது ஆகியன வலியுறுத்தப்பட்டன. வைதிக நோக்கில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட சடங்குகள் பரவலாயின. நால்வருணக் கோட்பாடு பெரிய அளவில் முக்கியத்துவம் பெறவில்லை. எனினும் யாகத்தின் மூலம் தீயினை வளர்த்துப் பார்ப்பனர்கள் செய்யும் சடங்குகள் புனிதமானவை என்ற நம்பிக்கை உருவாக்கப்பட்டது. பார்ப்பனருக்குக் கேடு செய்வது மாபெரும் பாவம் என்ற கருத்து, மன்னர், புலவரிடையே பரப்பப்பட்டது. அது பின்னர் காலப்போக்கில் மக்கள் பின்பற்ற வேண்டிய ஒழுங்காக வலியுறுத்தப்பட்டது. பார்ப்பனர்கள் சமூகத்தில் மேலாதிக்கம் பெற்றிடுவதைத் தங்களுடைய பாடல்களில் புலவர்கள் வலியுறுத்தியது, புதிய வகைப்பட்ட ஒழுங்குகளுக்கு வழி வகுத்தது.

பாணர்கள் ஆடல், பாடல், இசைக்கருவி மீட்டுதல் என நுண்கலைகளுடன் தொடர்புடையவராகச் செயல்பட்டபோது, புலவர்கள் அறிவு சார்ந்த நிலையில் வேந்தர்களுடன் நெருக்கமானவர்களாக விளங்கினர். வேந்தனின் அவையில் நிலையான இடம், வேந்தனுடன் நட்பு, பெருமித உணர்வு வெளிப்பாடு எனப் புலவர் களின் இயல்பு அமைந்திருந்தது. ஒருநிலையில் புலவர்கள் வேந்தனுக்கு ஆலோசனை வழங்கினர். சங்க இலக்கியப் படைப்புகளில் பாணர் என்ற சொல் 130 இடங்களிலும், புலவர் என்ற சொல் 43 இடங்களிலும் இடம் பெற்றுள்ளன. பாணர், இனக்குழுச் சமுதாயத் துடனும் புலவர், நிலவுடமைச் சமுதாயத்துடனும் தொடர்புடையவர்கள் எனக் குறிப்பிட முடியும். புலவர்கள் அதிகாரத்தில் இருந்த சீறூர் மன்னர், குறுநில மன்னர், வேந்தர் ஆகியோரைச் சார்ந்து பாடல்கள் பாடி வாழ்ந்து வந்தனர். வேந்தருடன் குறுநில மன்னன், சீறூர் மன்னன் போன்றோரை இணைத்திடும் அரசியல் பணியையும் புலவர்கள் செய்துள்ளனர். பெரும்பாலான புறநானூற்றுப் பாடல்களும், ஆற்றுப்படை நூல்களும் எழுதப்படுவதற்கான அடிப்படைக் காரணமாக அன்றைய பாணர்-புலவர் மரபு விளங்கியது.

பாணர்கள் தாம் பெற்ற கலைத்திறனைச் செல்லுமிடம் எல்லாம் வாரி வழங்கியவர்கள். யாழ் என்ற இசைக்கருவியை மீட்டிப் பாடிய பாணர் பாடிய பாடல்கள், இனக்குழுச் சமூகத்தில் கொண்டாட்டம், குறிக்கோளுடன் வாழ்ந்த பாணர்களைப் பற்றிய குறிப்புகள் பின்வருமாறு: கோள்வல் பாண்மகன் (பெரும்பாணாற்றுப்படை:284) எனப்பட்டது. துறைபல முற்றிய பைதீர் பாணன் (மலைபடுகடாம்:40), நன்மை நிறைந்த நயவரு பாணன் (புறநானுறு:308), தொல்லிசை நிறீஇய உரைசால் பாண்மகன் (அகநானூறு:352). பாணர்கள் வாய்மொழிப் பாடல்கள் பாடவும் இசைக்கருவிகளை மீட்டுவதுடன், தங்கள் சுற்றத்தாருடன் சேர்ந்து புலம் பெயர்ந்து தமிழக நிலவெளியில் இடைவிடாது அலைந்துகொண்டிருந்தனர். புரவலரைப் போற்றிப் பாடிப் பரிசில் பெற்று, தங்கள் கூட்டத்தாரின் பசியையும் வறுமையையும் போக்கினர். இத்தகைய பாணர்களுடன் தொடர்புடைய ஒழுங்கு களும், ஒழுங்கின்மைகளும் பதிவாகியுள்ள பாடல்கள் கவனத்திற்குரியன.

கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியுள்ள பாடல்(புறநானூறு:197) இனக்குழுத்தலைவனின் சிறப்பைப் புலப்படுத்தியுள்ளது. பாணர்களாகிய நாங்கள் யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, காலாட்படையுடன் போரிட்டு வெற்றிகள் பெற்ற வேந்தர்களின் செல்வத்தைப் போற்றுகின்றவர்கள் அல்லர். முள்வேலியுடைய தோட்டத்தில், ஆட்டுக் குட்டிகள் தின்று போட்ட முன்னைக் கீரையை வரகு அரிசிச் சோற்றுடன் உண்ணும் சிற்றூர் மன்னராயினும், புலமைத்தகுதி அறிந்து பழகுகிறவர்களின் பண்பைப் பெரிதாக நினைக்கிறோம் என்ற கருத்து, முக்கியமானது. அன்பற்றவர்களின் செல்வத்தைப் பெறுவதைவிட, நல்லறிவு மிக்கவர்களின் வறுமையைப் பெரிதாக நினைக் கிறோம் என்ற பாணரின் மதிப்பீடு, வேந்தனுக்கும் இனக்குழுத்தலைவனுக்கும் இடையிலான வேறு பாட்டைப் பதிவாக்கியுள்ளது. ஒப்பீட்டளவில் வேந்தனை விட இனக்குழுத்தலைவன் சிறப்புடையவன் என்ற பாணர்களின் கருத்து, வேந்தனைப் பொருத்தவரையில் ஒழுங்கின்மையாகும்.

எளிய வாழ்க்கை வாழும் இனக்குழுத் தலைவன் பற்றி மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார் பாடிய பாடல்:

கள்ளின் வாழ்த்திக் கள்ளின் வாழ்த்திக்

காட்டொடு மிடைந்த சீயா முன்றில்

நாட்செருக்கு அனந்தர்த் துஞ்சு வோனே

அன் எம் இறைவன் யாம் அவன் பாணர்

பெருதை வந்த விருந்திற்கு மறுத்தனன்

இரும்புடைப் புழவாள் வைத்தனன் இன்றுஇக்

கருங்கோட்டுச் சீறியாழ் பணையம் இது கொண்டு

ஈவது இலாளன் என்னாது நீயும்

வள்ளி மருங்குல் வயங்கிழை அணியக்

கள்ளுடைக் கலத்தேம் யாழ்மகிழ் தூங்கச்

சென்றுவாய் சிவந்துமேல் வருக

சிறுகண் யானை வேந்தவிழு முறவே (புறநானூறு.316)

‘பகை மன்னன் போரில் மடிந்தவுடன் கள்ளைக் குடித்துவிட்டு, சுத்தப்படுத்தப்படாத வீட்டு முற்றத்தில் விடியற்காலை வேளையில் உறங்குகிறவன்தான் எங்கள் தலைவன், நாங்கள் அவன் புகழ்பாடும் பாணர்கள்’ என்று இனக்குழுத்தலைவன் போற்றப்படுகிறான். நேற்று தலைவன், தனது உடைவாளை ஈடு வைத்துப் பெற்ற பொருளை மகிழ்ச்சியுடன் பாணர்களுக்கு வழங்கினான். வீரமான தலைவனின் உறங்கும் இடம் வளமற்றது: கையில் பொருளைச் சேர்த்து வைக்காத இயல் புடையவன். வீரம், எளிமை, உதவும் பண்புடைய தலைவன் பற்றிய பாணரின் விவரிப்பில், அதிகாரம் வாய்ந்த வேந்தனுக்கு எதிரான குரல் பொதிந்துள்ளது. பாணருடைய மொழியிலான இப்பாடல், வேந்தனுக்கு ஒழுங்கின்மையாகவும், இனக்குழுத் தலைவனுக்கு ஒழுங்காகவும் விளங்குகிறது; வேந்தனின் அதிகாரத்திற் கெதிரான பாணரின் குரலாகவும் பாடல் வெளிப் பட்டுள்ளது.

வீரம் போற்றப்பட்ட வீரயுகக் காலகட்டத்தில் ஊண் உணவு, மதுவுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. வேட்டையாடுவதுடன் முல்லை நிலத்தில் பசுக் கூட்டத்தைக் கவர்ந்து வருதல் வீரமெனக் கருதப் பட்டது. ஆநிரையைக் கைப்பற்றி, அதற்கு மாற்றாகக் கள்ளுக்கடையில் சுவையான கள்ளைக் குடித்த வீரன், ஊன் உணவைத் தின்றுவிட்டு, மீண்டும் பசுக்கூட்டம் தேடிப் போய்விட்டான். அவன் மீண்டும் பசுக் கூட்டத் துடன் வரும்போது, கள் குடிக்க விரும்பினால், இல்லையென்று சொன்னால் கோபப்படுவான் எனக் கடை உரிமையாளரை நோக்கிச் சொல்வதாக அமைந் துள்ள புறப்பாடல் (புறநானூறு:258) தலைவனின் இயல்பைச் சுட்டுகிறது. இப்பாடலைப் பாடியவன் பாணனாக இருக்க வாய்ப்புண்டு.

தலைவனுடன் சேர்ந்துகள் அருந்திய பாணன், போதையில் பேசிய பேச்சில் அன்றைய சமூகச் சூழல் பதிவாகியுள்ளது. இனக்குழுச் சமூக வாழ்க்கையில், இத்தகைய வீரன் போற்றப்பட்டதில் வியப்பு எதுவுமில்லை. ஆநிரை கவர்தல் என்பது முல்லை வாழ்க்கையில் ஒழுங்காகக் கருதிப் பாணரால் பாடப்பெற்றுள்ளது. போர், வேட்டை, இறைச்சி உண்ணுதல், மது அருந்துதல், காமத் துய்ப்பு போன்றனவற்றால் புலன் இன்பங்களைத் துய்ப்பது இனக்குழு வாழ்க்கையில், இயல்பானதாகக் கருதப்பட்டது. புலன்களை அடக்கியடுக்குவதை முதன்மை அறமாக வலியுறுத்துவதுடன், விண்ணுலகில் இருப்பதாக மதங்கள் புனைகிற சொர்க்கம் பற்றி சங்கத் தமிழர் அக்கறை கொண்டிருக்கவில்லை என்ற கருத்தியல், பாணர்களிடம் நிலவிய முதன்மை ஒழுங்கு ஆகும்.

இயற்கை சூழ்ந்த வனப்பகுதியில் இனக்குழுத் தலைவனைத் தற்செயலாகச் சந்தித்த பாணர் கூட்டத்தின் செயல்பாடுகளை விளக்கும் பாடல், பாணர்களின் இயல்பைச் சித்திரிக்கிறது. வில்லினை எய்வதில் திறமைமிக்க வீரனைப் பார்த்து வியப்படையும் பாணர்களின் தலைவன் கூறுகிறான்:

பாடுவல் விறலிஓர் வண்ணம் நீரும்

மண்முழா அமைமின் பணயாழ் நிறுமின்

கண்விடு தூம்பின் களிற்றுவுயிர் தொடுமின்

எல்லரி தொடுமின் ஆகுளி தொடுமின்

பதலை ஒருகண் பையென வியக்குமின்

மதலை மாக்கோல் கைவலம் தமின் என்று

இறைவன் ஆதலின் சொல்லுபு குறுகி

மூவேழ் துறையும் முறையுளிக் கழிப்பிக்

கோ எனப் பெயரிய காலை ஆங்கது

தன்பெயர் ஆதலின் நாணி மற்று யாம் (புறநானூறு:152)

‘நான் பாடுகிறேன், நீங்கள் இசைக் கருவியை இசையுங்கள், யாழினை மீட்டிச் சுதி சேருங்கள், பெருவாத்தியத்தை முழங்குங்கள், பறை கொட்டுங்கள்’ எனக் கூறிய பாணர் தலைவன் இருபத்தோரு பாடல் வகைகளையும் முறையாகப் பாடி முடித்து, வேடனைப் பார்த்து ’வேந்தே’ என்று போற்றுகிறான். அச்சொல்லைக் கேட்டவுடன் நாணமடைந்தவன், மான் இறைச்சியுடன் மதுவையும் வழங்கியதுடன் பொன்னும் மணியும் தந்துவிட்டுக் காட்டுப் பாதையில் சென்று மறைகிறான். வீரத்தையும் வேட்டைத்திறனையும் உயர்வாகக் கருதுகின்ற இனக்குழுச் சமூகத்தில் பாணர்கள் பாடல், இசையின் மூலம் இனக்குழுத்தலைவனைப் போற்றுவது, சமூக மரபாகும்.

சாத்தன் என்ற குறுநில மன்னன் மாண்டபோது, குடவாயில் கீரத்தனார் முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே(புறநானூறு:242) என இழப்பின் வலியைப் பதிவாக்கியுள்ள பாடல், சோகத்தின் உச்சம். அந்தப் பாடலில் இடம் பெற்றுள்ள பாணன் சூடான், பாடினி அணியாள் என்ற வரியானது, கீரத்தனாரின் தன்னுணர்ச்சியின் வெளிப்பாடாகும். பாணருக்கும் குறுநில மன்னனுக்குமான நெருங்கிய உறவானது, இருவருக்குமிடையில் நிலவிய நெருக்கத்தின் வெளிப் பாடாகும்.

தமிழ் அடையாளத்துடன் விரிந்திடும் நிலவெளியைக் கட்டமைத்திட்ட வேந்தர்கள் பெற்றிருந்த வளமான வாழ்க்கையுடன் புலவர்கள் நெருங்கிய தொடர்புடை யவர்கள். வளமான நிலத்தை முன்வைத்து நடைபெற்ற வேளாண்மையினால் உருவான வேந்தர்கள், தொடர்ந்து செய்த போர்களுக்கான கருத்தியல் பின்புலத்தைப் பாடல்களின் வழியாக உருவாக்கியது, புலவர்களின் சமூக ஒழுங்காகும். வேந்தனின் அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாகிடும்போது புலவர்கள், ஒழுங்கின்மைப் போக்கினைச் சுட்டியுள்ளனர்.

யாழ் மீட்டி உன்னையும் உன் நாட்டையும் பாடும்போது, உன்னுடைய துணைவியின் அழுகைக் குரலைக் கேட்டோம். அவளுடைய துயரைப் போக்கிட, குதிரை பூட்டிய தேரில் உடன் புறப்படு. அதுவே எங்களுக்கு வேண்டும் பரிசு எனக் கண்ணகிக்காகப் பேகனிடம் வேண்டுகிறார்கள் புலவர்கள். கணவன் -மனைவி ஆகிய இருவருக்குமிடையில் நிலவ வேண்டிய உறவு சிதைவடைந்திடும்போது, ஒழுங்கை நிலைநாட்டு வதாகப் புலவர்களின் பாடல்கள் (புறநானூறு:143-147) அமைந்துள்ளன. வெறுமனே பரிசில் வேண்டுவது என்ற நிலையில் இருந்து விலகிக் குடும்பத்தில் பெண் அடைந் துள்ள துயரைப் போக்கிடப் புலவர்கள் பாடியிருப்பது, மன்னரின் ஒழுங்கின்மைக்கு எதிரான செயல்பாடு ஆகும்.

குறுநில மன்னரான வையாவிக்கோ பெரும் பேகன் தனது மனைவியை விட்டுப் பிரிந்து வாழ்ந்தபோது, புலவர் பெருங்குன்றூர்க் கிழார் பாடிய பாடல், புலவர்-மன்னர் இருவருக்குமிடையில் நிலவிய உறவினுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு.             

நெருநல் ஒரு சிறைப் புலம்புகொண்டு உறையும்

அரிமதர் மழைக்கண், அம்மா அரிவை

நெய்யடு துறந்த மைஇரும் கூந்தல்

மண்ணுறு மணியின் மாசற மண்ணிப்

புதுமலர் கஞல் இன்று பெயரின்

அதுமன்எம் பரிசில் ஆவ்வியர் கோவே (புறநானூறு:147)

கார் காலத்தில் பொழிகிற மழையின் ஓசையைக் கேட்டவாறு, தனிமையில் மனம் வருந்தியிருக்கிற உன்னுடைய தலைவி, கூந்தலுக்கு நெய் தடவாமல், துயரத்தில் தவிக்கிறாள். அவளுடைய வறண்ட கூந்தல் நீலமணி போல ஒளிந்திடவும், புதிய மலர் சூடி மகிழ்ந் திடவும் நீ அவளிடம் சென்று சேர்ந்தால், அதுவே எமக்கு அளிக்கும் சிறந்த பரிசாகும் என்று மன்னனை ஆற்றுப்படுத்துகிற புலவரின் மனம் ஒப்பீடு அற்றது. குடும்ப நிறுவனத்தின் ஒழுங்கு சிதைந்திடும் நிலையில், அதைச் சீராக்கிட முயலுகிற புலவரின் முயற்சி, மன்னனின் ஒழுங்கின்மைப் போக்கினுக்கு எதிரானதாகும்.

புலவர் மரபு என்பது வெறுமனே வேந்தருக்குச் சார்பாகப் போற்றிப் பாடல்களைப் பாடிப் பரிசில் பெறுவது மட்டுமல்ல. மாற்றாக, வேந்தனின் ஒழுங் கினையும் ஒழுங்கின்மையையும் குறித்து விமர்சிப் பதையும் உள்ளடங்கியதாகும். சோழன் நலங் கிள்ளியிடம் இருந்து உறையூர்க்குச் சென்ற இளந்தத்தன் என்ற புலவரை ஒற்றறிய வந்தவர் எனத் தவறாகக்

கருதிய காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி கொல்ல நினைத்தான். அப்பொழுது கோவூர்க்கிழார் என்ற புலவர், வரிசைக்கு வருந்துமிப் பரிசில் வாழ்க்கை (புறம்:47) எனப் புலவரின் நிலையை எடுத்துரைத்துக் காப்பாற்றுகிறார். வேந்தனின் தவறான புரிதலைத் தடுத்து அவனுடைய செயல் ஒழுங்கின்மையானது எனச் சுட்டிக்காட்டிய புலவரின் செயல் துணிகரமானது.

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், தன் பகைவனான மலையமானின் குழந்தைகளைக் கொண்டுவந்து, யானையின் காலின்கீழாகக் கிடத்திக் கொல்ல முயன்றான். அப்பொழுது கோவூர்க்கிழார் அக்குழந்தைகளை உயிருடன் விடுமாறு வேண்டிப் பாடல் பாடினார்

களிறுகண்டு அழூஉம் அழாஅல் மறந்த

புன்தலைச் சிறாஅர் மன்று மருண்டு நோக்கி

விருந்தின் புன்கண்நோ வுடையார்

கேட்டனை யாயின்நீ வேட்டது செய்ம்மே (புறநானூறு:46)

யாரும் எதிர்த்துக் கேள்வி எதுவும் கேட்கவியலாத அதிகாரம் மிக்க வேந்தனான கிள்ளிவளவனின் செயல் கொடுமையானது எனக் கருதுகிற புலவர் கோவூர்க் கிழார், அதற்கெதிராகத் தனது கருத்தைப் பதிவாக்கி யுள்ளார். நான் சொல்வதைச் சொல்லி விட்டேன். இனி நீ உன் விருப்பப்படி செய்க என்ற புலவரின் குரல் பலவீன மானதெனினும், அது வேந்தனின் ஒழுங்கின்மையான செயலுக்கு எதிரான காத்திரமான பதிவாகும்.

சோழர் குடியில் பிறந்த வேந்தர்களான நலங் கிள்ளியும் நெடுங்கிள்ளியும் ஒருவருக்கொருவர் எதிராகப் போரிட ஆயத்தமாயினர். அப்பொழுது கோவூர்க்கிழார் இருவரையும் அமைதிப்படுத்துவதற்காகப் பாடிய பாடல் வரிகள், குறிப்பிடத்தக்கன.

இருவீர் வேறல் இயற்கையும் அன்றே அதனால்

குடிப்பொருள் அன்று நும்செய்தி கொடித்தேர்

நம்மோர் அன்ன வேந்தர்க்கு

மெய்ம்மலி உவகை செய்யும்இவ் இகலே. (புறநானூறு:45)

ஒரே குடியினரான வேந்தர்கள் தங்களுக்குள் மாறுபட்டுப் போருக்குத் தயாரான நிலையில், அந்தப் போரின் விளைவுகளைக் குறிப்பிட்டுப் போர் வேண்டாம் என்ற கோவூர்க்கிழாரின் கருத்து, ஒழுங்கின்மைக்கு எதிரானதாகும். வேந்தனின் விண்ணை முட்டுகிற அதிகாரத்தைப் பொருட்படுத்தாமல், எது ஒழுங்கானதோ அதை வலியுறுத்துகிற கிழாரின் பாடல் வரிகள் குறிப்பிடத்தக்கன.

குறுநில மன்னரான நன்னனின் காவல்மரம் மாமரம் ஆகும். அந்த மரத்திலிருந்து விழுந்த மாம்பழம் ஆற்றுநீரில் மிதந்து வந்தது. அப்பொழுது அங்கே நீராடு வதற்காகச் சென்றிருந்த கோசர் குடியைச் சார்ந்த பெண் ணொருத்தி, மாம்பழம் எங்கிருந்து வந்தது என்பதை அறியாமல் எடுத்துத் தின்றுவிட்டாள். காவல் மரத்தின் பழத்தை எடுத்து உண்ணக்கூடாது என்ற விதியை மீறியதற்காக மன்னரான நன்னன் அவளுக்குக் கொலை தண்டனை விதித்தான். அவளுடைய உறவினர்கள், குற்றத்துக்குத் தண்டமாக அவளது எடைக்கு எடை தங்கமும், 81 யானைகளும் தருவதாகவும், அவற்றைப் பெற்றுக்கொண்டு அவளை விடுதலை செய்யுமாறும் வேண்டினர். அரசாண்ட நன்னன் ஏற்றுக்கொள்ள வில்லை. பெண்ணுக்கு அளித்த கொலைத் தண்டனையை இரக்கமில்லாமல் நிறைவேற்றிவிட்டான். இத்தகைய கொடூரமனம் படைத்த மன்னன், பெண் கொலை புரிந்த நன்னன் என்று புலவரால் அழைக்கப்பட்டான். (குறுந்தொகை:292). புலவர் பரணர் பாடியுள்ள பாடலில், குறுநில மன்னனின் தன்னிச்சையான அதிகாரத்தை எதிர்த்த குரல் பதிவாகியுள்ளது. அரச நீதி, நியதி என விதிக்கப்பட்டிருந்த ஒழுங்கினைத் தற்செயலாக மீறிய பெண்ணுக்கு அளிக்கப்பட்ட கொலைத்தண்டனையை எதிர்த்த பரணரின் பாடல், அன்றைய காலகட்டத்தில் ஒழுங்கின்மையாகும்.

சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும் பொறையைக் காண்பதற்காக வந்த புலவர் மோசி கீரனார், அவனுடைய அரண்மனை வாயிலில் இருந்த முரசுக் கட்டிலில் படுத்து உறங்கி விட்டார். கருமரத்தால் அழகிய வேலைப்பாடுகளுடன் அமைந்த வீர முரசு, மங்கல நீராட எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என்பதை அறியாமல் மோசிகீரனார் தூங்கிய செயல், வெட்டிக் கொல்வதற்குரிய தண்டனைக்குரியது. எனினும் மன்னன், புலவர்மீது குளிர்ந்த காற்றுப் படுமாறு கவரி வீசினான். (புறநானூறு:50). புலவரின் சமூக மதிப்பீடும், பாடும் திறனும் அவரைச் சராசரி குடிமகன்களில் இருந்து வேறுபடுத்திப் பார்க்கிற பார்வையை மன்னனுக்கு வழங்கியுள்ளதைப் பாடல் வரிகள் உணர்த்துகின்றன. அரசனின் பொது ஒழுங்கானது, கற்றறிந்த புலவர் என்பதற்காக மீறப்பட்டிருப்பதை மோசிகீரனாருக்கு நடைபெற்ற சம்பவம், பதிவாக்கியுள்ளது,

பாணர், புலவர் மரபுகளில் வெளிப்பட்டுள்ள ஒழுங்குகளும் ஒழுங்கின்மைகளும் பற்றிய பேச்சுகள், அன்றைய சங்ககாலச் சமூகத்தை மறுவாசிப்புச் செய்திடும் வகையில் பன்முகத்தன்மையுடையனவாக விரிந்துள்ளன. அவை பண்பாட்டுத்தளத்தில் முக்கிய மானவையாக விளங்குகின்றன. சங்க காலம் என்றொரு காலத்தை வரையறுத்து, அந்தக் காலகட்டத்தில் நிலவிய சமூகப் பண்பாட்டுச் சூழலைக் கண்டறிவதற்கான முயற்சிகளில் நுண்ணரசியல் பொதிந்துள்ளது. திணைசார்ந்த வாழிடம் பற்றிய புரிதலுடன் அரசியலதிகாரத்தின் பல்வேறு அம்சங்கள் சங்கப் பிரதிகளில் ஊடாடியுள்ளன. மேலும் குடும்ப நிறுவனம் என்ற அமைப்பு வலுவாக்கப் பட்டதுடன், மக்களை அதிகாரம் செய்கிற அமைப்பு களுக்கான உடல்களை உருவாக்குகிற பணிகளும் நடைபெற்றன. இத்தகு சூழலில் சமூக இயக்கத்திற்குச் சார்பான ஒழுங்குகளும் ஒழுங்கின்மைகளும் சங்கப் பாடல்களில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுள்ளன. சங்கப் பாடல்கள்மூலம் பாணர்கள், புலவர்கள் மரபினை முன்வைத்து அன்றைய சமூகப் பின்புலத்தில் சொல்லப் பட்டுள்ள ஒழுங்குகளும் ஒழுங்கின்மைகளும் ஒரு நிலையில் அறிவுசார்ந்த சொல்லாடல்களுக்கு வழி வகுத்துள்ளன.

சான்றாதாரம்

1)பாலசுப்பிரமணியன், வெ. பிறர் (உ-ஆ). புறநானூறு-தொ.மி&மிமி. சென்னை: என்.சி.பி.ஹெச், 2011.

2)இளங்குமரன், இரா. பாணர். சிதம்பரம்: மணிவாசகர் பதிப்பகம், 1987.

3)ராஜ்கௌதமன். பாட்டும் தொகையும்: தொல்காப்பியமும் தமிழ்ச் சமூக உருவாக்கமும். சென்னை: தமிழினி பதிப்பகம், 2006.

4)முருகேசபாண்டியன், ந. மறுவாசிப்பில் செவ்வியல் இலக்கியப் படைப்புகள். சென்னை: என்.சி.பி.ஹெச், 2016.

Pin It