‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்னும் புகழ்பெற்ற நூலைக் கால்டுவெல் எழுதுவதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்னரே, ‘திராவிட மொழிக் குடும்பம்’ என்னும் கருத்துருவாக்கத்தை உணர்ந்து தென்னிந்திய மொழிகள் பிற இந்திய மொழிகளில் இருந்து வேறுபட்டிருப்பதை 1816-ஆம் ஆண்டிலேயே முதன் முதலில் வெளிப்படுத்தியவர் எல்லீசு.

எல்லீசன் என்று தமிழ் ஒலி மரபுக்கேற்பத் தம்மை அழைத்துக் கொண்டவர். சென்னை மாகாணத்தில் பிரிட்டிஷ் அரசின் கீழ் 1810 முதல் 1819 ஆண்டுவரை அதிகாரியாக பணியாற்றினார். கிழக்கிந்திய கம்பெனியில் 1796-ஆம் ஆண்டு எழுத்தராகச் சேர்ந்து, பதவி உயர்வு பெற்று துணைக் கீழ்நிலைச் செயலராகவும், துணைச் செயலராகவும், வருவாய்த்துறைச் செயலராகவும் பணிபுரிந்தார். மேலும், மசூலிப்பட்டிணத்தில் நீதிபதியாக 1806-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். சென்னை மகாணத்தின் நிலச் சுங்க அதிகாரியாகவும், பின்னர் சென்னையின் கலெக்டராகவும் பணியாற்றினார்.

எல்லீசு, சென்னை மாவட்ட கலெக்டராக பணியாற்றியபோது, சென்னை நகரில் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காகக் கிணறுகளைப் பல இடங்களில் வெட்டுவதற்கு ஏற்பாடு செய்தார். அக்கிணறுகளுக்கு அருகில் தமிழில் கல்வெட்டுக்களையும் அமைத்தார். அக்கல்வெட்டுகளில் தமிழ்ப்பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இராயப்பேட்டையில் உள்ள அத்தகைய கல்வெட்டுப் பாடலொன்றில் “இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு”- என்று ஒரு நாட்டின் முக்கிய உறுப்பான நீரைக் குறிப்பிடும் திருக்குறள் மேற்கோளாக இடம் பெற்றுள்ளது.

இவர் தமிழ் மொழியைக் கற்று, தமிழில் கவிதை எழுதும் அளவுக்குப் புலமை பெற்று விளங்கினார். இராமச்சந்திரக் கவிராயரிடம் இவர் முறையாகத் தமிழ்கற்றார்.

சென்னையின் நாணயச் சாலையில் இவர் அதிகாரியாக பொறுப்பு வகித்தபோது, திருவள்ளுவரின் உருவம் பொறித்த இரண்டு நாணயங்களை வெளியிட்டார். கல்வெட்டு ஆராய்ச்சியாளர் ஐராவதம் மகாதேவன், இந்த நாணயங்களை 1994-ஆம் ஆண்டு அடையாளம் கண்டு அவை பற்றி விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

எல்லீசு ‘தமிழ்மொழியைக் கற்று அதனைப் பயன்படுத்தியதோடு, தமிழ்மொழியின் மறுமலர்ச்சிக்கும் பாடுபட்டார்’ – என அயோத்திதாசப் பண்டிதர் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், தமிழ்ச்சங்கம் ஒன்றை நிறுவித் தமக்குக் கிடைத்த சுவடிகளை அச்சிட்டு வெளியிட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளார். ‘திருக்குறள்’, ‘நாலடி நானூறு’ போன்ற நூல்களை அச்சிட்டு வெளியிட்டுள்ளார். மேலும், திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, அதற்கான விரிவுரையும் எழுதியுள்ளார். தமிழின் யாப்பியலைப் பற்றி இவர் எழுதி வெளியாகாதிருந்த ஒரு நூலை ‘தாமசு டிரவுட்மன்’ இங்கிலாந்து நாட்டில் கண்டுபிடித்துள்ளார்.

எல்லீசு, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளின் வேர்ச்சொற்களையும் ஒப்பிட்டு ஆய்வு செய்து, சமஸ்கிருத மொழியிலிருந்து வேறுபட்டுள்ளதை ஆதாரங்களுடன் நிரூபித்தார். மேலும், இந்தியாவில் உள்ள மொழிகளின் வரலாறுகளை மிகுந்த ஆர்வத்துடன் கற்றார். ‘சென்னை இலக்கியச் சங்க’த்தில் உறுப்பினராக இணைந்து செயல்பட்டார். தென்னிந்திய மொழிகள் உள்ளிட்ட இந்திய மொழிகளை ஆங்கிலேய அதிகாரிகளுக்குப் பயிற்றுவிக்கும் நோக்கோடு, சென்னை கல்விச் சங்கம் என அழைக்கப்பட்ட புனித ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியை 1812-ஆம் ஆண்டு இவர் நிறுவினார்.

எல்லிசின் மொழியியல் ஆய்வுகளுக்கு இக்கல்லூரியையே களமாக அமைந்தது. பல நூல்களை இவர் எழுதிய போதும் தமது நாற்பது வயதுக்கு முன்னர் நூல்களை வெளியிடுவதில்லை என்று நினைத்திருந்தாராம், ஆதனால், அவர் தமது நூல்கள் எதையும் வெளியிடவில்லை.

எல்லீசு நிறுவிய கல்லூரி தொடர்பாக, 1814-ஆம் ஆண்டில் சென்னை மாகாண ஆளுநராகப் பதவியேற்ற எலியட்டுக்கும், கல்லூரி நிர்வாகத்திற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மேலும், கல்லூரி மொழியியலில் அதிக அளவு கவனம் செலுத்துவதாகவும், அதிகாரிகள் மொழித்திறன் பெறுவதற்கு உதவவில்லை என்ற கருத்தும் நிலவியது. இதனால் கல்லூரிக்கு அரசாங்கத்தின் ஆதரவு குறைந்தது. கல்லூரியைக் காப்பாற்றுவதற்காக எல்லீசு இங்கிலாந்து நாட்டிற்குச் சென்று அங்கு அதிகாரிகளுடன் பேச எண்ணியிருந்தார், ஆனால் பல காரணங்களால் அவரது பயணம் பலமுறை தடைபட்டது. இக்காலத்தில் இவர் வயிற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். உடல்நலக் குறைவினால் 1818-ஆம் ஆண்டு மூன்று மாதம் பணியிலிருந்து விடுப்பு எடுத்தார். விடுப்பு எடுத்துக்கொண்டு ஆய்வுப் பணிகளுக்காக மதுரைக்கும் பின்னர் அங்கிருந்து இராமநாதபுரத்துக்கும் சென்றார். இராமநாதபுரத்தில், தமது 41-வது வயதில் 10.03.1819-ஆம் நாள் மறைந்தார்.

- பி.தயாளன்

Pin It