Shaheed minar Roehl

1947 ஆம் ஆண்டில் இந்தியத் துணைக்கண்டத்தில் நடந்த ஆங்கிலேய ஆட்சி அதிகார மாற்றத்தை அடுத்து இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகள் உருவாக்கப்பட்டன. இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையினராக இருந்த நிலப் பகுதிகள் கிழக்கு மற்றும் மேற்குப் பாகிஸ்தான் எனவும் இஸ்லாமியர் பெரும்பான்மையினராக இல்லாத நிலப்பகுதிகள் இந்தியா எனவும் பிரிக்கப்பட்டன.

ஆங்கிலேய ஆட்சிக்கு உட்பட்டிருந்த இந்தியத் துணைக் கண்டப் பகுதிகள் மதத்தை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கப்பட்டதால் பாகிஸ்தான் என்பது மேற்குப் பாகிஸ்தான் எனவும் கிழக்குப் பாகிஸ்தான் (கிழக்கு வங்காளம்) எனவும் இரண்டு தனித்தனி நிலப்பகுதிகளைக் கொண்ட ஒரே நாடாக பிரிக்கப்பட்டது. அப்போது மேற்குப் பாகிஸ்தானில் இருந்த கராச்சி மேற்குப் பாகிஸ்த்தானின் தலைநகரமாக இருந்தது.

டாக்கா கிழக்குப் பாகிஸ்தானின் தலைநகரமாக இருந்தது. மதத்தால் மட்டும் ஒன்றாக இருந்த கிழக்கு மற்றும் மேற்கு பாகிஸ்தான் மக்கள் தாய்மொழியால் வேறுபட்டிருந்தனர். வங்காள மொழி கிழக்குப் பாகிஸ்தான் பகுதியில் வாழ்ந்த பெரும்பான்மை மக்களின் தாய்மொழியாக இருந்தது. உருது மொழி மேற்குப் பாகிஸ்தானில் வாழ்ந்த பெரும்பான்மை மக்களின் தாய்மொழியாக இருந்தது.

ஆங்கிலேயர்களின் ஆட்சி அதிகாரம் விலக்கிக் கொள்ளப்பட்ட பின்னர் பாகிஸ்தானில் முஸ்லீம் லீக் கட்சியின் லியாகத் அலி கான் தலைமையிலான அரசு முதன்முதலாக ஆட்சியில் அமர்ந்தது. 1948 ஆம் ஆண்டில் உருது மொழி பாகிஸ்தானின் ஒரே தேசிய மொழியாகவும், ஆட்சி மொழியாகவும் அறிவிக்கப்பட்டது.

கிழக்குப் பாகிஸ்தான் என அறிவிக்கப்பட்ட கிழக்கு வங்காளத்தில் வாழ்ந்த பெரும்பான்மை மக்கள் வங்காள மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருந்த நிலையில், மேற்குப் பாகிஸ்தானில் வாழ்ந்த பெரும்பான்மை மக்களின் தாய்மொழியான உருது மொழி மட்டுமே பாகிஸ்தானின் ஒரே ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டதை கிழக்கு பாகிஸ்தான் மக்கள் ஏற்கவில்லை.

கிழக்குப் பாகிஸ்தான் மக்கள் தங்களுடைய வங்காள மொழியைக் காக்கவும், தங்களின் தனித்தன்மையைக் காக்கவும் வங்காள மொழி உரிமைப் போராட்டத்தைத் தொடங்கினர்.

1952, பிப்ரவரி 21 ஆம் நாளன்று அன்றைய கிழக்குப் பாகிஸ்தான் தலைநகர் டாக்காவில் வங்காள மொழியைத் தேசிய மொழியாக, ஆட்சிமொழியாக அறிவிக்கக் கோரி டாக்கா பல்கலைக் கழக மாணவர்கள் மிகப்பெரிய போராட்டத்தினை நடத்தினர்.

இம்மொழிப் போராட்டத்தில் அப்துல் ஜாப்பர், அபுல் பர்கத், ரபிக்தீன் அகமது, முகமது சலாவுதீன், அப்துல் சலாம் ஆகியோர் அரசுப் படைகளால் கொல்லப்பட்டனர். இவ்வங்காள மொழி உரிமைக்கான போராட்டமே 1971 ஆம் அண்டில் வங்காள தேசம் (பங்களாதேஸ்) என்ற புதிய நாடு உருவாக வழி அமைந்தது. அதோடு மட்டுமல்லாமல், உலகத் தாய்மொழி நாள் அறிவிக்கப்படவும் காரணமாக அமைந்தது.

வங்காள தேச அரசும் பல்வேறு அனைத்துலக அமைப்புகளும் வங்காள மொழிக்காக போராடி மாணவர்கள் உயிரீந்ததை உலக மக்கள் அனைவரும் நினைவு கூறும் வகையில் பிப்ரவரி 21 ஆம் நாளை உலகத் தாய்மொழி நாளாக அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தன. 1999, பிப்ரவரி 21 ஆம் நாள் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அவையின் கல்வி, அறிவியல், கலாச்சார அமைப்பின் (UNESCO) பொது மாநாட்டின் 30 ஆவது அமர்வில் இக்கோரிக்கை ஏற்கப்பட்டது.

பல்வேறு வகைப்பட்ட மக்களின் மொழி, பண்பாடு ஆகியவற்றின் தனித்தன்மைகளைப் பேணுவதுடன் அவற்றுக்கிடையிலான ஒற்றுமையை உருவாக்குவதும் அவசியம் என்பதையும் ஐக்கிய நாடுகள் அவையின் கலாச்சார அமைப்பு வலியுறுத்தியது. இதன் மூலம் ஆண்டு தோறும் பிப்ரவரி 21 ஆம் நாள் மொழி உரிமைகளைக் காப்பதற்காக நினைவு கூறப்படும் சிறப்பு நாளாக உலக மக்கள் அனைவராலும் பின்பற்றப்படுகிறது.

மொழி உரிமைகளைக் காப்பதற்க்கான அடையாளமாக உருவாக்கப்பட்டுள்ள உலகத் தாய்மொழி நாளில் தமிழ்ச் சமூகம் அறிந்துகொள்ள வேண்டியவை குறித்தும் எதிர்கொள்ள வேண்டியவை குறித்தும் சற்று ஆழமாகச் சிந்திப்போம்.

1. கிழக்குப் பாகிஸ்தான் மக்களும் மேற்குப் பாகிஸ்தான் மக்களும் மதத்தால் ஒன்றுபட்டவர்களாக இருந்தார்கள். இருப்பினும் வங்காள மொழி கிழக்குப் பாக்கிஸ்தான் மக்களின் தாய்மொழியாக இருந்தது. உருது மொழி மேற்குப் பாகிஸ்தான் மக்களின் தாய் மொழியாக இருந்தது.

இரு நிலப்பகுதி மக்களும் ஒரே மதத்தைப் பின்பற்றியவர்களாக இருந்தாலும் மொழி அடிப்படையில் இருவேறு தேசிய இனத் தனித்தன்மை உடையவர்களாக இருந்தனர். ஒரு தேசிய இனத்தின் மொழி, பண்பாடு, அரசியல் உரிமை என்பது மத எல்லைகளைக் கடந்தது என்பதை 1971 ஆம் அண்டில் நடைபெற்ற கிழக்கு வங்காள (பங்ளாதேஸ்) விடுதலைப் போராட்டத்தின் வெற்றி பறைசாற்றி உள்ளது.

2. ஐரோப்பியக் கண்டத்தில் உள்ள எல்லா தேசத்தவர்களும் மதத்தால் கிறித்துவர்களாக இருப்பினும், மொழியின் அடிப்படையில் இருபதுக்கும் மேற்பட்ட தேசியர்களாக உருவான வரலாற்றையும் நாம் உலகத் தாய் மொழி நாளில் நினைவுகூரக் கடமைப்பட்டுள்ளோம்.

எனவே மத அடையாளங்களைக் கடந்து மொழி அடையாளங்களே மனித சமூக வரலாற்றில் தேசங்களின் உருவாக்கத்தில் முதன்மைப் பங்கற்றியுள்ளதை மதவாதிகளுக்கு உணரவைக்கும் நாளாக உலகத் தாய்மொழி நாளை முன்னிறுத்துவோம்.

3. 1965 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் இந்தி மொழித் திணிப்புக்கு எதிரான பெரிய போராட்டம் நடைபெற்றது. இப் போராட்டத்திலும் சிலர் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். இந்தப் போராட்ட உயிர்த் தியாகங்கள் இந்தி மொழித் திணிப்பு எதிர்ப்புணர்விற்கான உரமாக இன்று வரை தமிழ் மண்ணில் கலந்துள்ளன.

ஆனாலும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கான உரமாக இந்தி எதிர்ப்புப் போராட்ட உணர்வு பயன்படவில்லை என்பதே கசப்பான உண்மை. இந்தித் திணிப்பு எதிர்ப்பு உணர்வு என்பது அரசியல் அதிகார நலன்களுக்கு மட்டும் அன்று முதல் இன்று வரை பயன்படுத்தப்படுவதை மறுக்க முடியாது. இதற்கான காரணங்கள் பல உள்ளன. இந்தி ஆதரவு அரசியல், இந்தி எதிர்ப்பு அரசியல் இரண்டையும் கடந்து தமிழ் மொழி வளர்ச்சிக்கான அரசியல் வலிமை பெற வேண்டியுள்ளது.

4. இன்றைக்குக் கிராமப்புற அரசுத் தொடக்கப் பள்ளிகள் மற்றும் மழலையர் கல்வி வரை ஆங்கில வழிக் கல்வி விரிவாக்கப் பட்டுள்ளதைப் பார்க்கிறோம். அனைத்துத் தனியார் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி மட்டுமல்லாமல் இந்தி மொழியும் புறக்கடை வழியாகத் தடையின்றி நுழைந்துள்ளதையும் பார்க்கிறோம்.

தமிழை ஒரு மொழிப்பாடமாகக் கூட கற்பிக்காத ஆயிரக்கணக்கான தனியார் பள்ளிகளுக்கும் தமிழகத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ் வழியில் படிப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு குறைந்து வருகிறது. ஆங்கில வழியில் படிப்பவர்களின் எண்ணிக்கை கடந்த இருபதாண்டுகளில் பல மடங்கு அதிகரித்துள்ளது. தமிழ் வளரவில்லை என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.

5. ஆங்கில மொழி விரிவாக்கத்தின் மூலம் தாய்மொழி இலக்கியம் சார்ந்த படைப்பாக்கத்திறன் ஏதுமற்ற இளைய தமிழ்ச் சமூகம் உருவாகி வருகிறது. இதனால், ஏற்கனவே உள்ள தமிழ் இலக்கியங்களும் அறிவு நூல்களும் வாசிப்பாரின்றி அழியும் நிலை ஏற்படும்.

தமிழ் மொழியைப் பிழையின்றி பேசவும் படிக்கவும் எழுதவும் கற்காத தலைமுறைகள் உருவாகி விட்ட நிலையில் தமிழ் யாரால் வளரும்? தமிழ் யாரால் வாழும்? அரசாங்க அலுவலக முகப்புகளில் “தமிழ் வாழ்க” என்று விளம்பரப் பலகை வைத்து என்ன பயன்? தமிழ் நாட்டுப் பள்ளிகளில் உள்ள கரும்பலகைகளில் தமிழ் இல்லாமல் போய்விட்டதே?

6. உலகமயப் பொருளாதாரமும் அது சார்ந்த பன்னாட்டுத் தொழில்களும் அனைவரையும் ஆட்டிப்படைக்கும் இன்றைய சூழலில் ஆங்கிலமயமாதலுக்கு அனைவரும் எந்த சிறு எதிர்வினையுமின்றி பலியாகி வருகிறோம். எல்லாவற்றிலும் ஆங்கில மொழியின் விரிவாக்கம் அனைத்து மொழிகளின் பயன்பாட்டையும் அவசியமற்றதாக்கி விட்டது.

பன்னாட்டு நிறுவனங்களின் எதேச்சதிகாரத்தின் முன் தற்சார்பு என்பது செல்லாக் காசகிவிட்டது. உலகம் என்பது ஒரு வணிகச் சந்தை என்ற அளவில் மாறிவிட்டது.

பணப் பரிவர்த்தனை உறவைத் தவிர அன்பு சார்ந்த மனிதம் சார்ந்த அவரவர் தாய்மொழி மூலமான உறவுகள் காலாவதியாகி வருகின்றன. காலையில் சந்திக்கும் போது சொல்லும் “GOOD MORNING” முதல் இரவு உறங்கச் செல்லும் போது சொல்லும் “GOOD NIGHT” வரை ஆங்கிலச் சொற்களே நமக்கு அதிகமாகப் பழகிவிட்டது. இப்படி தமிழைக் கொல்லும் செயல்களை எல்லோரும் தயக்கமின்றி செய்கிறோம்.

7. இலாப நோக்கை மட்டும் கொண்ட பன்னாட்டுப் பெரு நிறுவன வணிக நோக்கங்களை நிறைவேற்றும் வேலைகளை ஊடகங்கள் தடையின்றி செய்துகொண்டுள்ளன. மனிதர்களின் நுகர்வு வெறியை எல்லையின்றி பெருக்கும் பணியை பெரு நிறுவன ஊடகங்கள் விளம்பரங்கள் வாயிலாக நொடிப்பொழுதும் செய்கின்றன.

தலைமுடி நரைத்துப் போவது கூட நமக்குப் பெரிய தாழ்வு மனப்பான்மையை உருவாக்குகிறது. தலைமுடிச் சாயங்கள் கூட இனி அதி தேவைப் பண்டமாக மாறும். வெள்ளை முடிக்காரர்களின் ஆங்கில மொழிக்கு மட்டுமல்ல கருப்பு நிற தலைமுடிச் சாயங்களுக்கும் நாம் வாடிக்கையாளர் ஆகப் போகின்றோம்.

வாடிக்கையாளர் என்பதன் நாகரீக வார்த்தை தான் நுகர்வோர். ஆனால் வாடிக்கையாளர் என்றாலும் நுகர்வோர் என்றாலும் அடிமை என்று தான் பொருள் கொள்ளவேண்டும்.

உலகத் தாய் மொழி நாளில் நாம் அறிந்துகொள்ள வேண்டியவையும் எதிர்கொள்ள வேண்டியவையும் குறித்துப் பேசவேண்டியவை இன்னும் நிறைய உள்ளன. அரைகுறையாகக் கட்டமைக்கப் பட்டிருக்கும் இந்தியக் கூட்டாட்சி முறைக்கும் தற்போது பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது.

ஒற்றை அதிகார அரசியலை நிறுவ இந்தித் திணிப்பும் ஒற்றைக் கலாச்சார ஆதிக்கத்தை நிறுவ சமக்கிருதத் திணிப்பும் வேகத்தோடும் வெறியோடும் நடந்து வருகின்றன.

தகுதியுள்ளவை தப்பிப் பிழைக்கும் என்ற பரிணாமக் கோட்பாட்டைக் கூட நாம் இனி மாற்றிச் சொல்லவேண்டும். அறிவு, விழிப்பு, எதிர்ப்பு, தற்சார்பு இவை நான்கும் உள்ளவையே இனி தப்பிப் பிழைக்கும். தமிழர் அதிகாரத்தின் அழிவும் மொழியின் அழிவும் இனத்தின் அழிவும் வேறுவேறல்ல.

அதிகாரத்தின் அழிவே மொழியின் அழிவு. மொழியின் அழிவே இனத்தின் அழிவு. மொழியும் அதிகாரமும் இல்லாத இனம் அடிமை இனமாகும். இது தமிழ் பேசும் மக்களுக்கு மட்டுமல்ல. எல்லா மொழி பேசும் மக்களுக்கும் பொருந்தும்.

சு.மூர்த்தி,

ஒருங்கிணைப்பாளர்,

கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு.

(பிப் 21, உலகத் தாய்மொழி நாள் கட்டுரை)

Pin It