கி.பழனிச்சாமி என்கிற கோவை ஞானி தமிழக மார்க்சியச் சிந்தனையாளர்களில் ஒருவர். புதிய தலைமுறை, நிகழ், பரிமாணம் முதலான இதழ்களை நடத்தினார்; வானம்பாடி’ இதழுடன் இணைந்து செயல்பட்டார். இப்போது ‘தமிழ்நேயம்’ என்ற இதழை நடத்தி வருகின்றார். நவீன இலக்கியம் முதல் சங்க இலக்கியம் வரையிலானது இவரது விமர்சனச் செயல்பாட்டுப் பரப்பு. மார்க்சியத்தினுள் ஓயாது கேள்விகள் எழுப்பி, புதியன காணும் ஆர்வமுடையவர். அவருடைய கட்டுரைத் தொகைகள் ‘மார்க்சியமும் பெரியாரியமும்’, ‘தமிழியம் தமிழ்த் தேசியம்’, ‘தமிழ்க் கவிதை’, ‘தமிழ் நாவல்’ என்பவை. இவையில்லாமல பல நூல்கள், தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். அவர் ‘உங்கள் நூலகம்’ வாசகர்களுக்காகத் தன் கருத்துகளை இந்நேர்காணலில் பகிர்ந்து கொண்டார்.
- க.காமராசன்
நீங்கள் எவ்வாறு மார்க்சியத்தை வந்தடைந்தீர்கள்?
நான் கிராமத்துச் சூழலில் பிறந்து வளர்ந்தேன். எங்கள் குடும்பம் மத்தியதர வர்க்கத்தின் கீழ்நிலையிலிருந்த குடும்பம். எங்கள் பெற்றோருக்கு நாங்கள் எட்டுப் பேர். நாங்கள் வாழ்ந்த சோமனூரில் மில் அதிபர்களின் ஆதிக்கத்தை எதிர்க்கும் முறையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் வந்து கூட்டங்கள் நடத்தினர். தோழர் ரமணி ஆற்றல்மிக்க பேச்சாளர். கம்யூனிஸ்ட்டுகளைச் சார்ந்திருந்ததால் எங்கள் மனம் கவர்ந்த டாக்டர் பழனிச்சாமி ஊரைவிட்டு விலக்கப்பட்டார். உயர்நிலைக் கல்வி படித்த காலம் முதற்கொண்டும் பின்னர் தமிழாசிரியராகப் பணியாற்றிய போதும் கோவை நகரத்தில் வாழ்ந்தேன். பஞ்சாலைகள் நிறைந்த நகரம் கோவை. மார்க்சிய இயக்கத்தினர் கோவையில் வலுவாக இருந்தனர். இந்தச் சூழலில் மார்க்சியத்தோடு இயல்பாக எனக்கு உறவு ஏற்பட்டது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தலைசிறந்த பேராசிரியர்களிடம் தமிழிலக்கியம் கற்றேன். பல்கலைக் கழகத்திலிருந்த மாபெரும் நூலகத்தில் பலமுறை நூல்கள் எடுத்துப் படித்தேன். தமிழ் நூல்களைக் காட்டிலும் ஆங்கில நூல்களே அதிக எண்ணிக்கையில் கற்றேன். வரலாறு, அறிவியல், மெய்யியல், இலக்கியத் திறனாய்வு என்று பல துறைகள் சார்ந்த நூல்கள் கற்றேன். உயர்நிலைப் பள்ளிக் காலம் முதற்கொண்டே தமிழின் மீது எனக்குப் பேரார்வம் இருந்தது. எனக்கு வாய்த்த தமிழாசிரியர்களிடம் இன்று வரை பெரிய மரியாதை கொண்டிருக்கிறேன். கிராமச் சூழலில் பிறந்து ஒரு பெருங்குடும்பத்தில் வளர்ந்து வாழ்வில் சிறுவயது முதற்கொண்டே நிறைய கேள்விகளோடு, கேள்விக்கான விடைதேடி, ஓயாமல் படித்துப் பலரோடு தொடர்ந்து விவாதித்து வளர்ந்த எனக்குள் மார்க்சியம் ஆழமாகப் பதிந்ததில் வியப்பில்லை. கல்வித் துறையிலும் என் தேர்ச்சி மிகச் சிறப்பாக இருந்தது. கோவையில் மார்க்சியத்தோடு நெருக்கமான உறவு ஏற்பட்ட நிலையில் தமிழிலக்கியத்தை மார்க்சிய நோக்கில் நண்பர்களோ டிணைந்து கற்றேன். இலக்கியத்தை மார்க்சிய நோக்கில் பயில்வதற்கான விதை எனக்குள் தோழர் ஜீவா, தோழர் ரகுநாதன் மூலம் விழுந்தது. எனக்குள் கூர்மையான நோக்கைத் தூண்டியவர் எஸ்.என்.நாகராசனும், எஸ்.வி.இராச துரையும். கிரிஸ்டோபர் கால்டுவெல், ஜே.டி.பெர்னால், டி.டி.கோசாம்பி, டி.பி.முகர்ஜி என்றெல்லாம் மார்க்சிய அறிஞர்களின் நூல்களோடு எங்களுக்கான உறவு வளமானது. மார்க்ஸ், எங்கெல்ஸ் முதலியவர்களின் ஆகச் சிறந்த நூல்களை நாங்கள் ஆழமாகக் கற்றோம். இத்தகைய வாசிப்பு எங்களுக்குள் மார்க்சியம் பற்றிய புரிதலை விரிவாக ஏற்படுத்தியது.
தோழர் எஸ்.என்.நாகராசன், எஸ்.வி.இராசதுரை, புலவர் ஆதி முதலியவர்களோடு இணைந்து சிந்தனை மன்றத்தை உருவாக்கினோம். சிறப்பான விவாதங்கள் வழியே மார்க்சியத்தோடு என் உறவு நெருக்கமாயிற்று.
67-68 காலத்தில் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நக்சல்பாரி இயக்கம் எங்களுக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மாவோ சிந்தனைக்கு வசப் பட்டோம். சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவப் போக்கு அதிகரித்துவருவது பற்றிக் கவலைப்பட்டோம். ‘புதிய தலைமுறை’ என்ற மார்க்சிய தத்துவ இதழ் தொடங்கினோம். காவல்துறையின் கண்காணிப்புக்கும் உள்ளானோம். எஸ்.என்.நாகராசன், எஸ்.வி.இராசதுரை முதலானவர்கள் மார்க்சியம் பற்றிய வாசிப்பில் மிகச் சிறந்தவர்கள். இரஷ்யா, சீன நூல்கள் தவிர மேற்கிலிருந்து வந்த மார்க்சிய நூல்களையும் பல ஆண்டுகள் வெறித் தனமாகப் படித்து எங்களுக்குள் விவாதித்தோம். மார்க்சின் 1844 கையெழுத்துப் படிகளிலிருந்த அந்நியமாதலை எஸ்.என்.நாகராசன் எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். ‘புதிய தலைமுறை’யில் அந்நியமாதல் பற்றி கட்டுரைகளும் கதைகளும் வெளியிட்டோம். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதிலும் எங்களுக்குள் உறுதியான கருத்து இருந்தது. பாரதிதாசனைப் பாராட்டிக் கட்டுரை வெளியிட்டோம். சங்க இலக்கியம் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளும் புதிய தலைமுறையில் வெளியிட்டோம். ‘புதிய தலைமுறை’ இன்று வரை மார்க்சியர் சிலர் நெஞ்சிலாவது தங்கியிருக் கிறது.
மார்க்சிய நோக்கில் இலக்கியம்பற்றி உங்கள் புரிதல் என்ன?
இலக்கியம் குறித்து மார்க்சிய பாட நூல்கள் தரும் விவரம்பற்றி நான் இங்குக் குறிப்பிட விரும்பவில்லை. மாறாக இலக்கியப் படைப்பியக்கம் பற்றி என் கருத்தைச் சொல்ல விரும்புகிறேன்.
முதலில் மார்க்சிடமிருந்து ஒரு மேற்கோள் “Milton Produced Paradise Lost, War the simple reason that a silkworm produces silk, for it has become its own nature.” அதாவது இங்கே மில்டன் சுவர்க்க நீக்கம் என்ற அற்புதமான காப்பியத்தைப் படைத்தற்கு என்ன காரணம் என்பதை மார்க்ஸ் விளக்கு கிறார். பட்டுப்புழு அழகான பட்டை உற்பத்தி செய்கிறது. உடம்பிலிருந்து பட்டை உற்பத்தி செய்வது பட்டுப் புழுவின் இயல்பு. பட்டை உற்பத்தி செய்யாமல் பட்டுப் புழுவுக்கு வாழ்க்கை இல்லை. பட்டை உற்பத்தி செய்யும் பட்டுப்புழுவை, வெந்நீரில் அமிழ்த்திக் கொன்று பட்டைப் பிரித்தெடுக்கின்றனர். பட்டை உற்பத்தி செய்தால் உன் உயிர் போய்விடும் என்று சொன்னால் பட்டுப்புழு கேட்காது. ‘இது என் உயிரியக்கம். சாவு எனக்குப் பெரிதில்லை’ - இப்படிப் பட்டுப்புழு சொல்லக்கூடும்.
மில்டன் ஒரு மாபெரும் கவிஞர் இங்கிலாந்தில் நாடாளுமன்றத்தை உருவாக்க மன்னனுக்கு எதிராகப் போர் நடத்தியவர் கிராம்வெல். இவரோடு சேர்ந்து செயல்பட்டவர் மில்டன். கொடுங்கோலனுக்கு எதிரான மக்களாட்சியை நிறுவச் செயல்பட்ட போராட்டத்தில் தன்னை மில்டன் இணைத்துக் கொண்டார். இறுதிக் காலத்தில் மில்டனுக்குப் பார்வையில்லை. ஆயினும் தன் வாழ்வியல் அனுபவத்தைத் தன் காவியத்தில் பதிவு செய்கிறார். எல்லாம் வல்லவர் என்று திருச்சபை சொல்லும் கர்த்தருக்கு எதிராகச் சாத்தானின் போராட்டத்தை மில்டன் தன் காப்பியத்தில் பதிவு செய்கிறார்.
மில்டன் ஒரு பெருங்கவிஞர் அவரால் எழுதாமல் இருக்க முடியாது. எழுதி எழுதித் தனக்குள் படைப்பியக்கத்தைத் தன் காலம் முழுவதும் வளர்த்துக் கொண்டவர். தனக் குள்ளான படைப்பியக்கத்தில் ஈடுபடுவதன் மூலமே தன் வாழ்வின் நிறைவைக் கண்டவர் மில்டன். படைப்பில் தன் உயிரியக்கத்தைக் கண்டவர் மில்டன். மாபெரும் சமூகப் போராட்டத்தில் தன்னைக் கரைத்துக் கொண்டவர்.
மார்க்சின் இந்த மேற்கோள் எங்கெல்ஸ்க்குப் பிறகு மார்க்ஸ் விட்டுச் சென்ற மூலதனம் பற்றிய குறிப்புகளைத் தொகுத்து கார்ல் காவுட்ஸ்கி என்பவர் வெளியிட்ட ‘கூhநடிசல டிக ளுரசயீடரள ஏயடரந’ என்ற நூலில் காணப்படுகிறது. தொழிலாளி தன் உற்பத்தித் திறன் மூலம் செய்த எந்தப் பொருளுக்கும் விலை மதிப்பை வகுத்துச் சொல்ல முடியும். ஆனால் கலைப்படைப்பின் விலை மதிப்பை இப்படிக் கணக்கிட முடியாது என்பதை விளக்கும் முறையில் மார்க்ஸ் எழுதுகிறார். கலைஞன் தன் உயிரைக் கொடுத்துக் கலைப் படைப்பைத் தருகிறான். உயிருக்கு விலை இல்லை. பேரி லக்கியங்கள் இப்படித்தான் மிகச் சிறந்த கலைஞர்களால் படைக்கப்படுகின்றன. கலைஞனுக்குள் இயங்கும் படைப் பியக்கத்தை இப்படித்தான் புரிந்துகொள்ள முடியும். இரண்டாந்தர, மூன்றாம்தர படைப்புகளுக்கு இந்த விளக்கம் பொருந்தாது. அவை வணிகமுறைப் படைப்புகள், வெற்று எழுத்துக்கள். இவை ஒரு மொழியின் வளர்ச்சிக்கு உதவாது.
கம்பர் தன் காவியத்தை எவ்வாறு படைத்தார் என்பது பற்றி ஒரு தனிப்பாடல் கூறுவதை இங்குக் குறிப்பிடலாம். வெண்ணெய் நல்லூர் சடையன் போட்ட சோற்றுச் செருக்கல்லவா. கம்பன் தன் காவியத்தைப் படைக்கக் காரணமாய் இருந்தது என்று அந்தப் பாடல் சொல்கிறது. சில மார்க்சியரும் கலைப் படைப்பை உருவாக்க ஓய்வு நேரம் தேவை என்று தொடங்கி மேலும் சில விளக்கங்கள் தருகின்றனர். நிழலில் ஒருவரை அமர வைத்து, தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தால் கலைப் படைப்பு உருவாகிவிடுமா என்ன? கம்பன் இப்படியா படைத்திருக்க முடியும். தன்கால வரலாற்று நெருக்கடிகளுக்கிடையில் தனக்குள்ளிருந்து ஒரு எதிர்வினையைப் படைத்துக் கொண்டவன் கம்பன். கம்பனுக்கு அப்படி என்ன நெருக்கடி நேர்ந்தது என்பதற்கு நமக்குச் சரியான விவரங்கள் இல்லை. அம்பிகாபதி காரணமாக குலோத்துங்கச் சோழனால் கம்பன் நாட்டை விட்டு விரட்டப்பட்டான் என்ற தகவல் மட்டும் உண்டு; வேறு விவரங்கள் இல்லை. கம்பன் பெருங்கவிஞன். வரலாற்று இயக்கத்தில் நீந்தியவன். நீந்திக் கரையேறியவன் என்று நம்மால் சொல்ல முடியும். கம்பன் தன் பேரனுபவத்தைத் தன் காப்பியத்தில் பதிவு செய்திருக்கிறார்.
கம்பர் காவியம் பற்றி எத்தனையோ விளக்கங்கள் தரப்படுகின்றன. மார்க்சிய நோக்கில் நாம் ஒரு விளக்கம் தரலாம். இராவணன் கொடுங்கோலன். தன்னைச் சூழ இருக்கிற எல்லாவற்றையும் தன் ஆதிக்கத்திற்குள் கொண்டு வர நினைத்தவன். அடுத்தவன் மனைவி அழகு என்றால் அவள் தனக்கு வேணும் என்பவன். இவனை முறியடிக்க இன்னொரு மன்னனால் - ஆதிக்கவாதியால் முடியாது. அவன் தன் அரச பதவியைத் துறந்து காட்டில் வேடர் களோடு அலைந்து அநாகரிகர் என்று சொல்லப்படும் மக்களோடு உறவு கொண்டு, இப்படியெல்லாம் தன் ஆளுமையைத் திரட்டிக் கொண்டு, அதன் பின்னர்தான் ஒரு கொடுங்கோலனை முறியடிக்க முடியும். கம்பரின் இராமன் இத்தகையவன். பின்னர் அரசு பதவி இவனுக்குக் கிட்டும் பொழுது தன் மனைவியைத் தீக்குளிக்கச் செய்கிறான்; காட்டுக்கு அனுப்புகிறான்.
3/4 நூற்றாண்டுகள் படை நடத்தி நாடுகள் பிடித்து உருவான சோழப் பேரரசு எத்தகையதாக இருந்திருக்க முடியும்? நாட்டில் மன்னன் உட்பட எத்தனையோ இராவணர்கள் இல்லாமல் அரசர் ஆதிக்கம் நிலை
பெறாது. இவர்களுக்கு எதிராக மக்கள் திரண்டு போரிட அக்காலத்தில் முடியாது. ஆகவே கடவுள் மனிதனாக வந்து பலவகையில் அனுபவம் பெற்று அப்புறம் கொடுங் கோலனை முறியடிக்க வேண்டும்.
கம்பர் காவியத்தில் நாம் காணும் வர்க்கப் போராட்டம் என்று இதனைத்தான் சொல்ல முடியும். பேரிலக்கியங்கள் இப்படித்தான் இயங்குகின்றன.
மார்க்சிலிருந்து இன்னொரு மேற்கோள். பயர்பாக் ஆய்வுரைகளில் இடம் பெறுவது இந்த மேற்கோள். மார்க்ஸ் எழுதுகிறார்: “சூழல் மனிதனைப் பாதிக்கிறது என்பது உண்மையில் ஒரு பாதி மட்டும் - இன்னொரு பாதி, சூழலுக்கு எதிராக மனிதன் செயல்பட்டு அதனை மாற்று கிறான்.” வெறும் பிரதிபலிப்பு மட்டும் மனிதனின் சுய ஆளுமையை உருவாக்க முடியாது. சமூக முரண்பாடு களுக்கிடையில் சிக்கித் திணறிப் போராடி அதன் மூலம் தன் ஆளுமையைப் படைத்துக் கொள்பவன் மனிதன். இம்முறையில்தான் படைப்பாளுமை உருவாகிறது. வரலாற்றில் வளர்ச்சி ஏற்படுவதும் இப்படித்தான். ஒரு கலைஞனுக்குள் மட்டுமல்லால் அறிவியலாளன், மெய்யிய லாளன் முதலியவர்களுக்குள்ளும் படைப்பியக்கம் இவ்வாறு தான் செயல்படுகிறது. மார்க்சுக்குள்ளும் படைப்பியக்கத்தை இப்படியே காணலாம்.
இலக்கியம் குறித்து மேலும் ஒன்றைச் சொல்லலாம். தமிழிலக்கியத்தை நம் சமகாலத் தேவைக்கேற்ப மறு வாசிப்பு செய்ய முடியும்; வேண்டும். சான்றாக, சிலப்பதி காரம் பற்றி இங்குச் சொல்வோம்.
கோவலன் பாண்டிய நாட்டிற்குத் தொழில் செய்ய வந்து சேர்கிறான். கோவலன் அந்நியன், வெளியிலிருந்து வந்தவன். கோப்பெருந்தேவியின் சிலம்பைப் பழுதுபார்க்க வந்த பொற்கொல்லன் அதை மறைத்துவிட்டு, களவு போயிற்று என்றான். தண்டனைக்கு அஞ்சியிருந்தவன் முன் கோவலன் சிலம்போடு வந்து நிற்கிறான். கோப் பெருந்தேவியின் ஊடல் தீர்க்க மனக் கலவரத்தோடு இருந்த பாண்டியன் பொற்கொல்லனை நம்பி காவலர் இருவரை அனுப்புகிறான். கோவலன் முகத்தைப் பார்த்த ஒரு காவலன் அவன் நல்லவனாகத் தென்படுகிறானே என்றான். மற்றவனோ அவன் கையில் சிலம்பு இருக்கிறது அவன் கள்வன். அவனைக் கொல்வது நமக்கு அரசனிட்ட ஆணை என்று அவனைக் கொன்றான். கையில் சிலம்போடு மதுரைத் தெருக்களில் கண்ணகி கதறினாள். நீதி தவறிய இந்த நகரில் தெய்வம் இருக்க முடியுமா? சான்றோர் இருக்க முடியுமா? கற்புடைய மகளிர் இருக்க முடியுமா? என்று கதறினாள். கண்ணகி வழக்குரைத்தாள். பாண்டியன் தன் தவறுணர்ந்து செத்தான். அவனோடு அவன் மனைவியும் செத்தாள். அநீதி நடைபெறுவதைத் தெய்வம் தடுத்திருக்க வேண்டும். சான்றோர் தலையிட்டிருக்க வேண்டும். நீதி தவறியது இந்த நகரம். இந்த நகரம் தீயில் எரிவதற்குத் தகுதி யுடையது. கண்ணகி மதுரையை எரித்தாள். இது கலைஞனின் நீதி.
சிலப்பதிகாரத்தை இன்னும் நம் காலத்திற்கு ஏற்ற முறையில், நம் அனுபவத்திற்கு ஒத்த முறையில் மறுவாசிப்பு செய்ய முடியும். இதே போல மணிமேகலையையும் மறு வாசிப்பிற்கு உட்படுத்தலாம். இப்படிச் செய்யும் பொழுது தமிழிலக்கியம் முழுவதும் நமக்கு நெருக்கமாக வரும். தமிழிலக்கியத்தையும் மறுவாசிப்பு செய்வதற்கு இடம் உண்டு. மார்க்சியர்தான் இதைச் செய்ய முடியும். உலக மயமாதல் என்ற நெருக்கடிச் சூழல் நம்மைத் தொடர்ந்து அழுத்தும் நிலையில் தமிழிலக்கியத்திலிருந்து நமக்கான ஆற்றலைப் பெற முடியும். மார்க்சியம் பற்றிய சரியான புரிதல் இதற்கு உதவும்.
தமிழில் மார்க்சிய நோக்கிலான இலக்கியத் திறனாய்வு எவ்வாறு நடைபெறுகின்றது?
பெரும்பாலான மார்க்சியத் திறனாய்வாளர்கள் இலக் கியத்தில் அரசியலுக்கு, குறிப்பாகக் கட்சி அரசியலுக்கு முதன்மை தரும் நோக்கில் திறனாய்வு செய்துவந்தனர். இன்றைக்கும் இப்போக்குத் தொடர்கிறது. இலக்கியத்தின் கலையியல் / அழகியல் அம்சத்தை ஒரத்துக்கு ஒதுக்கிவிட்டு அரசியலுக்கு அழுத்தம் தரும் போக்கு ஸ்டாலின் காலத்தில் முன்நிலைக்கு வந்தது. ஸ்டாலின் அவர்களின் கலாசாரத் துறை அமைச்சர் ஸ்டானோ பெயரால் இப்போக்கு ஸ்டானோவியம் என்று அழைக்கப்பட்டது. இத்தகைய போக்கு தமிழிலக்கியச் சூழலுக்குள்ளும் வந்தது. க.நா.சு. மௌனி முதலிய படைப்பாளிகளை மார்க்சியர் அக் காலத்தில் சாடினார். கலை மக்களுக்காக என்ற கூற்றுக்கு அழுத்தம் தந்து இலக்கியம் பிரச்சாரம் செய்யலாம் என்று கூறியதோடு, பிரச்சாரம் செய்யாத இலக்கியம் என்று எதையாவது கூறமுடியுமா? என்றும் கேள்வி எழுப்பினர். தட்டில் வைத்து வழங்கலாமா, கூடாதா? என்றெல்லாம் கேள்வி எழுப்பினர். பிரச்சாரம் மறைமுகமாக இருக்கலாம் என்றனர். கலையம்சத்திற்கு முதன்மை தருபவர்களை முதலாளியக் கூலிகள் என்றும் சாடினர். இலக்கியத்தை அதன் அழகியலோடு சேர்ந்து பயில வேண்டும் என்பதை மார்க்சியர் அவ்வளவாக ஏற்கவில்லை. இன்று பார்க்கும் பொழுது மார்க்சியருக்கு இவையெல்லாம் கசப்பான அனுபவங்கள். இத்தகைய போக்கு மார்க்சியத்தின், மார்க்சிய இலக்கியத் திறனாய்வின் இன்றியமையாத கூறாக மார்க்சிய மூலவர்களிடம் இருந்ததில்லை என்பதைத் தொடக்ககாலத் தமிழ் மார்க்சியர் பெரும்பாலும் அறிந்துகொள்வதில்லை.
ஷேக்ஸ்பியரை மார்க்ஸ் கொண்டாடினார். பால்சாக்கை எங்கெல்ஸ் போற்றினார். நல்ல வேளை டால்ஸ்டாயை லெனின் பாராட்டவில்லையென்றால் டால்ஸ்டாய் நம்மைப் பொறுத்தவரை கிறித்துவ சந்நியாசியாக நாம் ஒதுக்கியிருப்போம். லெனின் தன் இறுதிக் காலத்தில் ஜெர்மானிய இசைப் பேரறிஞர் பீத்தோவின் இசையைக் கேட்க மாஸ்கோ தியேட்டருக்கு குரூப்ஸ்கயா அழைத்துச் சென்றபோது அந்த இசை லெனினுக்குள் மெல்ல மெல்ல நுழைந்து முழுமையாக அவரை ஆக்கிரமித்துக்கொண்ட நிலையில் திடீரென எழுந்து மண்டபத்தைவிட்டு வெளியேறினாராம். இசைக்கு முற்றாகத் தான்வயப்படுவதை லெனின் விரும்பவில்லை. தன் அரசியல் பொறுப்பு கெடும் என்பது அவரது கருத்து. உண்மைதான். லெனின் போன்ற நுண் உணர்வாளர்தான் தன்னிகரற்ற அந்த இசைக் கலையை முழுமையாக உணர முடியும். மாயகோவ்ஸ்கியின் புதுக்கவிதையை லெனின் தொடக்கத்தில் மறுத்த போதிலும் பள்ளி மாணவர் மாய கோவ்ஸ்கியின் கவிதைகளை விரும்பிப் பாடிய பொழுது லெனின் மனம் கசிந்து மயாகோவ்ஸ்கியின் கவிதை நூல்கள் எல்லா நூலகங்களிலும் இடம்பெற ஏற்பாடு செய்தாராம்.
இத்தகைய பேரனுபவங்கள் முன்பே நமக்குத் தெரிந்திருந்தபோதிலும் தமிழக / இந்தியச் சூழ்நிலையில் அரசியல் மாற்றத்திற்கே அழுத்தம் தந்து கலையுணர்வை நம்மவர் புறக்கணித்தனர். வானம்பாடிக் கவிதைகளுக்குத் தொடக்கத்தில் மார்க்சியக் கட்சி வட்டாரத்திடம் எத்தனை கடுமையான எதிர்ப்பு நிலவியது என்பது நம் அனுபவம். பேரா.சிவத்தம்பி அவர்கள் எண்பதுகளின் இறுதியில் சென்னையில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில், தொடக்க காலத்தில் அரசியலுக்கு அழுத்தம் தந்த நிலையில் மௌனி போன்றவர்களின் இலக்கிய ஆளுமையை நாங்கள் கண்டு கொள்ளவில்லை என்றார். சோவியத்தின் ஒன்றியம் தகர்ந்த நிலையில் அவர்களின் இலக்கியக் கொள்கை அப்படியே ஏற்றுக்கொண்டதன் மூலம் நாங்கள் தவறு செய்தோ மென்று தொ.மு.சி. ரகுநாதன் அவர்கள் எழுதினார். சிதம்பர சுப்பிரமணியனின் இதயநாதம் என்ற நாவலில், இசையில் தன்னை மூழ்கடித்துக் கொண்ட கலைஞர் ஒருவர் தன் வாழ்வின் ஒரு கட்டத்தில், குரல் உடைந்த பின்னர் தன் மனத்திற்குள்ளேயே ஓயாமல் இசை எழுப்பிக் கொண்டு தனக்குத்தானே பரவசப்பட்டுக் கொண்டது பற்றி கலாநிதி கைலாசபதி அவர்கள் எழுதும்பொழுது, இந்த இசைக் கலைஞரோட அனுபவம் நம்மைப் பாதிக்கிறது என்றாலும், ஏன் என்பது புரியவில்லை என்று எழுதினார்.
தோழர்.பொன்னீலன் அவர்களின் ‘புதிய தரிசனம்’ நூல் வெளிவந்தபோது கட்சி மார்க்சியரில் ஓரிருவர் தவிர பெரும்பாலானவர்கள் அந்த நாவலைச் சாடினர். அற்புத மான கலைப் படைப்பு என்ற போதிலும் அந்த நாவலில் சோவியத் ரஷ்யாவை, இந்திராகாந்தியின் நெருக்கடிகால பிரகடனத்தை, இதை இந்தியப் பொதுவுடைமைக் கட்சி ஏற்றுக்கொண்டதைப் பொன்னீலன் விமர்சனம் செய்தது கட்சி வட்டாரத்திற்குப் பிடிக்கவில்லை. பொன்னீலன் அவர்கள் ‘கொள்ளைக்காரர்’ நாவலில் புரட்சியாளர் களோடு தன்னை இணைத்துக் கொண்ட புஷ்பபாய், சிலுவையில் அறையப்பட்ட இயேசு நாதர் படத்தைப் பார்த்து மனம் நெகிழ்ந்து இயேசுவும் ஒரு புரட்சிக்காரர், அவர் பாதையில்தான் நானும் செல்கிறேன் என்று தன்னை உணர்ந்து குறிப்பிட்டதை நாவலுக்கு முன்னுரை எழுதிய பேரா.வானமாமலை கண்டுகொள்ளவே இல்லை.
சங்க இலக்கியம் தொடங்கி, தமிழிலக்கியத்தின் தொன்மையை மார்க்சியர் மறுத்தே வந்திருக்கின்றனர். கலை முதலிய உணர்வுகள் மேல் கட்டுமானத்தைச் சார்ந்தவை என்றே கருதினர். பண்பாட்டுத் தளமும் இத்தகையது என்றனர். கலை உணர்விலிருந்து மனிதனைப் பிரித்துப் பார்க்கவே முடியாது. கலை உணர்வு மனிதனின் ஒரு உள்ளுறுப்பு. மேல் பூச்சன்று. கதையில்லாமல், கலை இல்லாமல், இசை இல்லாமல், இலக்கியமில்லாமல் மனிதனில்லை.
தமிழ் மார்க்சியம் என்று நீங்கள் பேசிவருவதைச் சற்று விளக்கமாகக் கூறமுடியுமா?
சங்க காலத்திற்கு முன்னர் நிலவியது ஆதிப் பொதுமைச் சமூகம் - இனக்குழுச் சமூகம் என்பது மார்க்சியர் பலருக்கும் ஒத்த கருத்து. இனக்குழுச் சமூகத்தில் ஆண்டான் அடிமை யில்லை. ஏற்றத்தாழ்வு இல்லை. கிடைப்பதை எல்லோரும் பகிர்ந்து கொள்கின்றனர். முதியவர்களுக்கும், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் அப்புறம் கலைஞர்களுக்கும் முதற்பங்கு.
அடுத்து இருப்பதை அனைவரும் பகிர்ந்து கொள் கின்றனர். அடுத்து வந்த காலத்தில் தனியுடைமையும் அரசதிகாரமும் ஏற்பட்ட சூழலில் முந்திய காலத்துப் போக்கு மறையத் தொடங்குகிறது. படைவலிமையோடு வரும் வேந்தர்கள் பாரி முதலிய வேளிர்களை ஒழிக்கின்றனர். புலவர்களுக்கும் வறியவர்களுக்கும் செல்வத்தைப் பகிர்ந்து கொடுக்கும் கோப்பெருஞ்சோழன், தன் மக்கள் எதிர்ப்புக் காரணமாகப் புலவர்களோடு வடக்கிருந்து சாகிறான். அரசன் தோட்டத்து மாம்பழத்தைத் தின்ற பெண்ணை நன்னன் கொலை புரிகிறான். இளங்குமணன் தன் அண்ணன் குமணனைக் காட்டுக்குத் துரத்துகிறான்.
ஒரு தலைவனும் தலைவியும் இயல்பாகச் சந்தித்துக் காதல் கொண்டு களவு மணம் புரிவதைக், குலமும் செல்வமும் கருதிப் பெற்றோர் தடை செய்ய, காதலர் ஊரை விட்டு ஓடுகின்றனர். சமூகம் மாறிவிட்டது. தனியுடைமை உள்ளே வந்து சமூகத்தைப் பிளவுபடுத்துகிறது. அரசாதிக்கம் உறவுகளை, குணங்களை அழிக்கிறது. நாகரிகம் இப்படி கோரமாக உள்ளே வருகிறது.
ஆதிப்பொதுமைச் சமூகத்தின் பொதுமைப் பண் பாட்டை இன்னும் பற்றிக் கொண்டு வாழ விரும்புகிற தமிழ்ச் சான்றோர் பதறுகின்றனர். ஒரு தெருவில் ஒரே சமயத்தில் ஒரு வீட்டில் மணப்பறையும் இன்னொரு வீட்டில் சாப்பறையும் முழங்கும் முறையிலான சமூகப் பிளவு இவர்களுக்கு உடன்பாடில்லை. எனினும் பொதுமைப் பண்பாட்டைத் தொடர்ந்து தமிழ்ச் சான்றோர் சமூகத்தில் காத்து நிற்கின்றனர். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்கின்றனர். ‘செல்வத்துப் பயன் ஈதல்’ இல்லையென்றால் தவறுகள் நேரும் என்கின்றனர். இப்படித் தமிழ்ச் சான்றோர் கதறுகின்றனர், மன உறுதியோடு மன்னரோடு உரையாடுகின்றனர்.
உடைமையும் அரசதிகாரமும் உள்ளே வந்து சமூகம் பிளவுபட்ட நிலையிலும், அப்பிளவை ஒப்புக்கொள்ளாமல், பண்பாட்டைத் தமக்குள் தாங்கி, சமூக நீரோட்டத்தில் தக்க வைக்கும் முறையில் கவிதை எழுதுகின்றனர். அறம் உரைக் கின்றனர். இலக்கியம் படைக்கின்றனர். வள்ளுவரும் இளங் கோவும் இந்த அறத்தை உறுதியாகப் பற்றி நிற்கின்றனர். தமிழிலக்கியம் முழுவதும் நிலத்தடி நீர் போல இந்தப் பொதுமைப் பண்பாடு, தமிழறம் நிலவுகிறது. சித்தர் முதலியவர்கள் இந்தப் பண்பாட்டின் விளைச்சல். இந்தப் பண்பாட்டிற்கு இப்பொழுது நாம் வைத்துள்ள பெயர் சமதர்மம்.
தமிழ்ச் சான்றோர்களுக்குள் மட்டுமல்லாமல் காலம் முழுவதும் உழவர்களுக்குள்ளும் நம் தாய்மார்களுக் குள்ளும் நமக்குள்ளும் இந்தப் பண்பாட்டையே நாம் பேணி வருகிறோம். பகிர்ந்துண்ண விரும்புகிறோம். செல்வச் செருக்கைச் சாடுகிறோம். வரலாற்றில் எத்தகைய மாற்றங்கள் நேர்ந்த போதிலும் பண்பாடு என்ற சாரம் வரலாற்றுக்குள் தொடர்கிறது. இத்தகைய சாரத்திலிருந்து தான் மார்க்சியம் தழைக்கிறது. இந்தப் பேருணர்விற்கு, பண்பாட்டு மேன்மைக்கு, கம்பர் அந்நியமாக முடியாது. காலம் முழுவதும் நமக்குள் கனவாக, கற்பனையாக, பேராசையாகத் தொடர்ந்துவரும் இந்தப் பொதுமைப் பண்புதான் கம்பர் காவியத்தினுள்ளும் இடம் பெறுகிறது. மார்க்ஸ் கூறும் சமூக மாற்றத்தை நாம் ஏற்கிறோம். அடிமைச் சமூகம், ஆதிக்க சமூகம் என்றெல்லாம் மாற்றம் நேரும் பொழுது ஆதிக்கவாதிகளுக்குப் பண்பாடு, பொதுமைப் பண்பாடு தேவையில்லை. ஆனால் உழைக்கும் மக்கள் இந்தப் பண்பாடில்லாமல் வாழ முடியாது. உழைக்கும் மக்கள், தாம் பகிர்ந்து கொள்கின்றனர். இதைத்தான் தமிழ்ச் சான்றோரும் உழைக்கும் மக்களும் போற்றுகிற தமிழறம் என்று நான் குறிப்பிடுகிறேன். தமிழ் மார்க்சியம் என்று நான் குறிப்பிடுவதும் இதைக் கருதித்தான்.
லெனின் கூற்றில் ஒன்று ‘முன்னைய பண்பாட்டு மரபோடு மார்க்சியம் இணங்கிச் செல்ல வேண்டும். அதாவது முன்னைய மரபிலிருந்து மார்க்சியத்தை வளர்த்தெடுக்க வேண்டும்’ என்பது. தமிழ்ச் சூழலில் மார்க்சியத்தைப் பயிரிடுவதற்குத் தமிழ்மண் இடந்தருகிறது. தமிழ் மரபோடு இணைந்து செல்லும் மார்க்சியமே வளமாக, வளமை உள்ளதாக அமைய முடியும். மாவோ தன் தொன்மைச் சீன மரபோடு மார்க்சியத்தை இணைத்தார் என்று கூறுகிறோம். தமிழ் மரபும் இத்தகைய முறையில் மார்க்சியத்தைத் தனக்குள் வைத்து வளர்க்கும். தமிழ் மரபு அறியாதவர்கள், தமிழ் மரபை ஒதுக்கும்பொழுது, அவர்கள் முன்வைக்கும் மார்க்சியம் தமிழ்மக்கள் நெஞ்சில் பதிவதில்லை. மார்க்சியத் திறனாய்வாளர் பலரிடம் இந்தக் குறைபாட்டைக் காணமுடியும்.
மார்க்சியத்தை நீங்கள் இந்துத்துவத்தோடு இணைத்துப் பேசுவதாகக் கூறப்படுகிறது. இதற்கு உங்கள் பதில் என்ன?
இந்துத்துவத்தோடு, அது முன்வைக்கும் வருண முறையோடு மார்க்சியத்தை எவராலும் இணைத்துப் பேச முடியாது. சமயத்தையும் மார்க்சியத்தையும் ஓரளவிற்குச் சில அம்சங்களில் நான் நெருக்கமாக வைத்துப் பேசுகிறேன். இதன் காரணமாக நான் இந்துத்துவத்தை ஏற்கிறேன் என்று சிலர் கருதுவதுண்டு. இது பற்றிப் பிறகு பேசலாம். அதற்கு முன் சில விசயங்கள்.
சமயம் பற்றி மார்க்ஸ் முதலியவர்களின் கருத்தை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஒடுக்கப்பட்டவர் களின் ஏக்கப் பெருமூச்சு மதம் என்றும், ஒடுக்கப்பட்ட சூழலுக்கு எதிரான கலகக்குரல் மதம் என்றும் மார்க்ஸ் எழுதினார். இதயமற்ற உலகின் இதயம் என்றும், ஆன்மா அற்ற உலகின் ஆன்மா என்றும் மார்க்ஸ் தொடர்ந்து எழுதினார். எதார்த்தத்தைத் தலைகீழாக்கிப் பார்க்கிறது மதம் என்றார். இவற்றைத் தொகுத்துச் சொல்லும்போது மதம் மக்களுக்கு அபின் என்றார்.
சுரண்டலும் ஒடுக்குமுறையும் இவற்றின் காரணமாக வறுமையும் நோய் நொடிகளும் பிற துயரங்களும் மனிதர்களை நொறுக்கும்போது, அவர்கள் தம் உயிரைத் தக்கவைத்துக் கொண்டு குறைந்த அளவுக்கேனும் மூச்சு விட்டுக்கொள்ள வேண்டும். இந்தப் பணியைத்தான் மதம் செய்கிறது. கடவுள் கருணை மிக்கவர். இன்று இல்லா விட்டால் என்றேனும் ஒரு நாள் நல்வாழ்வு கிட்டும் என்று மதவாதி சொல்கிறான்; மக்கள் நம்புகின்றனர். ஒடுக்கப் பட்ட மக்கள் கடவுளே உனக்குக் கண்ணில்லையா என்று கடவுளைச் சாடும் பொழுது இது கடவுளை நோக்கிய கலகக்குரல் ஆகிறது. உலகிற்கு இதயமில்லை. இந்நிலையில் மக்களுக்கு இதயமாக, ஆன்மாவாக மதம் அமைகிறது. மதம் மக்களுக்கு அபின் என்பதும் உண்மைதான். அபின் போதையும் தருகிறது. தீக்காயம் பட்ட நிலையில் அந்தத் துன்பத்தை மறக்கடிக்கும் நிலையில் மார்பினாகவும் மதம் பயன்படுகிறது. இப்படி மார்க்ஸ் குறிப்பிடும்போது மதம் பற்றி நமக்கு ஓரளவுக்கேனும் தெளிவு ஏற்பட வேண்டும். விண்ணுலகில் தெய்வங்களுக்கிடையில் நடைபெறும் சாடல்கள், சண்டைகள், மண்ணுலகத்தில் மனிதர்களுக் கிடையே நடைபெறும் சச்சரவுகளின் பிரதிபலிப்புதான் என்றார் மார்க்ஸ். மதம் காட்டுவது தலைகீழான உலகம் என்பதும் மார்க்சின் கூற்று.
எங்கெல்ஸ் கூற்றின்படி மதத்தினுள்ளும் நடை பெறுவது வர்க்கப் போராட்டம். ஜான்லெவிஸ் என்ற பிரிட்டிஷ் மார்க்சிய அறிஞர் மதம் பற்றிய தெளிவுக்கு நமக்கு ஒரு திறவுகோல் தந்திருக்கிறார். மதத்தின் மேலடுக்கு புரோகிதம் என்கிறார். விக்கிரகம், கோவில், திருவிழா, சடங்கு, சாத்திரங்கள், புராணங்கள் முதலியவை மேலடுக்குப் புரோகிதருக்கு இவை தேவை. ஆனால் மதத்தின் உள்ளடுக்கு / உள்ளீடு வேறு என்கிறார். இறைவன் அன்பு மயமானவன். எங்கும் இருக்கிறார். எல்லோருக்குள்ளும் இருக்கிறார். எல்லோருக்கும் படைத்த உலகம் எல்லோருக்கும் உரியது. எல்லோருக்கும் நல்வாழ்வு தருபவன் இறைவன். தீமைகள் ஒருநாள் ஒழியும். இறைவனின் தேவ அரசு எல்லோருக்கும் உரியது. இறைவன் முன்பு எல்லோரும் சமம். இது சமயத்தின் உள்ளீடு. இனக்குழுச் சமூகத்தில் நிலவிய ஆதிப்பொதுமைப் பற்றி நாம் அறிவோம். இந்தப் பொதுமைப் பண்பே மதங்களின் உள்ளீடாக அமைகிறது. இயேசு, புத்தர் என்று எவரை எடுத்துக் கொண்டாலும் இந்த உள்ளீடு பற்றியே கவனம் குவிக்கின்றனர். இவர்கள் அனைவரும் புரோ கிதத்தைச் சாடுகின்றனர். மதத்தின் இந்த இரண்டடுக்கு களுக்கிடையில் கலவரங்கள் ஓய்வதில்லை. ஆகவே தான் வெவ்வேறு மதங்கள் தோன்றுகின்றன. இத்தகைய மதத்தின் உள்ளீடுதான் நெருக்கடிகளுக்கிடையில் மக்களுக்கு ஆறுதல் தருகிறது. இதயமற்ற உலகின் இதயம் என்பது இதுதான். புரோகிதர்களுக்கு முதலாளிகள் ஆளும் வர்க்கத்தின் ஆதரவு வேண்டும். மக்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவர்களோடு புரோகிதர் / மதவாதிகள், மதபீடங்கள் எப்போதும் ஒத்துழைக்கின்றனர். விக்கிர கங்கள், வழிபாடுகள், புராணங்கள் சொல்லி மக்களை மயக்கி ஆதிக்கத்திற்கு இவர்கள் மக்களை அடிபணிய வைக்கின்றனர். இவர்கள் முன்வைப்பது தலைகீழான உலகம். மேலுலகில் நீங்கள் இன்பமாக வாழ முடியும். இப்பொழுது துயரங்களைச் சகித்துக் கொள்ளுங்கள் என்பவர்கள் இவர்கள்.
சுரண்டலும் ஒடுக்குமுறையும் நிலவும் காலம் முழுவதும் மதங்கள் நிலவும். புதிய மதங்களும் உற்பத்தி யாகும் நவீன மதங்களும் உற்பத்தியாகும். மார்க்ஸ் சரியாகவே சொன்னார். அரசு இருக்கும் வரை மதமும் இருக்கும்.
அப்படியானால் மதத்தின் ஆதிக்கத்தை ஒழிக்க என்ன வழி. பகுத்தறிவு பிரச்சாரம் செய்து ஆதிக்கத்தைத் தகர்க்க முடியாது. மாறாக 1949க்குப் பிறகு சீனாவில் செய்தது போலச் சிலவற்றைச் செய்யலாம். கிறித்தவ பாதிரிமார்களை ஓரிடத்தில் கூட்டி வைத்து, சீனமக்கள் உங்களை, உங்கள் கோவில்களைத் தாங்குவார்கள், அந்நியரிடம் உதவி கேட்க வேண்டாம் என்றனர். சில ஆண்டுகள் கழித்துக் கோவில்களுக்கு இருக்கும் நிலச் சொத்துகள் உழைக்கும் மக்களுக்குத் தேவை என்றனர். கோவில் வழிபாடு முதலியவற்றிற்கான செலவை மக்கள் தருவர் என்றனர். நிலவுடைமை மக்களுக்கு மாறியது. இந்நிலையில் கோவிலுக்குச் செல்லும் மக்கள் தொகை குறைந்தது.
என் கருத்துப்படி சமயத்தின் உள்ளீடாக சமத்துவம் இருக்கிறது, சமதர்மம் இருக்கிறது. விவேகானந்தர் அத் வைதவாதி. அனைத்தும் பிரம்மம் என்றால் வெள்ளையர் ஏன் இந்தியரை ஆள வேண்டும்? பிராமணன் எவ்வகையில் உயர்ந்தவன்? இப்படிக் கேள்விகள் கேட்டுத் தேசமும் அனைத்துச் சொத்துக்களும் எல்லோருக்கும் உரியவை, சமதர்மமே மனிதப் பண்பாடு என்றார். தென்அமெரிக் காவில் தோன்றிய விடுதலை இறையியல் இயேசுவைப் புரட்சியாளராகக் கண்டது. அரசு ஆதிக்கம், மதபீடங்கள் முதலியவற்றின் ஆதிக்கத்திலிருந்து இயேசு மக்களை விடுதலை செய்ய முயன்றது போல நாமும் செய்ய வேண்டும். இது விடுதலை இறையியல். இத்தகைய போக்கு எல்லா மதங்களுக்குள்ளும் உண்டு.
புரோகிதம் நமக்கு எதிரானது. மதங்களின் உள்ளீடு நமக்கு அனுசரனையானது. மார்க்சியரால் இதைப் புரிந்து கொள்ள முடியும். மதத்தைச் சாடிப் பயனில்லை. மக்களை நெருங்கிச் செல்வதற்கு மதம் பற்றிய புரிதல் மார்க்சி யருக்குப் பெரிதும் பயன்படும். இந்துத்துவத்திற்கு ஆதிக்கம் தேவை; பிராமணர் தேவை; முதலாளிகள், இராணுவம், அணுகுண்டு முதலிய அனைத்தும் தேவை. ஆதிக்கங்களி லிருந்து மக்களுக்கான விடுதலை மட்டுமே மார்க்சியனுக்கு தேவை.
‘மார்க்சிய மெய்யியல்’ என்று பேசி வருகின்றீர்களே, அதைப் பற்றிச் சொல்லுங்கள்...?
இதுவரையிலான தத்துவங்கள் உலகை விளக்கின. ‘இனி நாம் செய்ய வேண்டியது இந்த உலகை மாற்றுவது தான்’ என்று உறுதியாக மார்க்ஸ் எழுதினார். உயிரியல் விஞ்ஞானம் முழு வளர்ச்சி பெற்ற பிறகு தத்துவத்திற்கு இடமில்லை என்பதாக எங்கெல்ஸ் கூறினார். லெனின், மாவோ முதலியவர்களும் மேலும் சில / பல விளக்கங்கள் கூறினர். இயங்கியல்தான் மார்க்சியத்தின் தத்துவம் என்ற கூற்றும் உண்டு.
இவ்வகைக் கூற்றுகளை நாம் மறுப்பதில்லை. காரணம் மார்க்சிய மூலவர்களை நாம் மறுக்க முடியாது என்பதால்தான். இவை பற்றிய ஆய்வுக்கு விரிவான இடமுண்டு.
1844 கையெழுத்துப் படிகளில் மார்க்ஸ் தந்த ஒரு விளக்கத்திலிருந்து தொடங்கலாம். இயற்கையிலிருந்தும் சமூகத்திலிருந்தும் தன்னிலிருந்தும் அந்நியப்பட்ட மனிதன், பின்னர் வரலாற்றின் இன்னொரு கட்டத்தில் மீண்டும் இயற்கையோடும் சமூகத்தோடும் தன்னோடும் ஒன்றுபடுவான். அந்நிலையில் மனிதன் அந்நியமாதலி லிருந்து விடுபடுவான். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் - அதாவது ஆதிப் பொதுமைச் சமூகத்தில் மனிதன் இயற்கை யோடு ஒன்றியிருந்தான். அவனை உள்ளடக்கிய சமூகத்தில் பிளவு இல்லை. அவன் தனக்குள்ளும் பிளவுபடவில்லை.
வரலாறு என்று அறியப்படுகிற காலச்சூழலில் சமூகத் திற்குள் தனியுடைமை, அதிகாரம் முதலியவை தோன்றின. மனிதர் அனைவருக்கும் பொதுவாக இருந்த இயற்கை இப்பொழுது சிலருக்கு வசப்பட்ட நிலையில் இயற்கையி லிருந்து பலர் பிரிந்தனர் / விலகினர் / விலக்கப்பட்டனர். சமூகத்தினுள்ளும் உடைமையாளன் / உடைமையற்றவன் என்ற பிளவு ஏற்பட்டது. உடைமையற்றவன் உழைப்பாளி. உடைமைக்காரனுக்காக உழைக்க வேண்டும். நிலத்தின் மீது, இயற்கையின் மீது அவனுக்கு உரிமையில்லை. முன்பு ஒன்றாக இருந்த சமூகம் இப்பொழுது தனக்குள் பிளவு படுகிறது. நாளடைவில் பிளவுகள் அதிகரிக்கின்றன. இத்தகைய சூழலில்தான் உடைமையற்றவன், உடைமை யாளனுக்காக உழைக்க நேர்ந்த பிறகு துன்பங்கள், துயரங்கள் அதிகரிக்கின்றன. முன்பு தனக்குள் ஒன்றியிருந்தவன் இப் பொழுது தனக்குள் பிளவுபடுகிறான். எப்படி இது நேர்ந்தது என்பது அவனுக்குப் புரியவில்லை. தனக்குள் கேள்விகள் எழுகின்றன. இந்நிலைக்கு என்ன காரணம்? யார் காரணம்? இந்த நிலை என்று மாறும்? எப்பொழுது மாறும்?
சுரண்டலும் ஒடுக்குமுறையும் பல மடங்கு அதிகரிக்கும் பொழுது பேரவலங்களுக்கு உள்ளான நிலையில் மத வாதிகள், கடவுள், ஆன்மா, வழிபாடு, சடங்கு, பாவம், புண்ணியம் என்றெல்லாம் பேசும் நிலையில், நான் யார்? என் வாழ்வுக்கு அர்த்தம் என்ன? நான் எங்கிருந்து வந்தேன்? எங்கே நான் போக வேண்டும்? எதைச் செய்தால் என் கடமை தீரும்? யாரை நான் நம்ப வேண்டும்? இறைவன், ஆன்மா என்றெல்லாம் சொல்வதன் உண்மை என்ன? இத்துயரம் என்றாவது தீருமா? வேறு வழியில்லையா? என்றெல்லாம் மனிதன் தனக்குள் கேட்டுக் கொள்கிறான். மதவாதிகள் இம்மனிதனுக்குச் சாதகமாகவும் பாதக மாகவும் ஏதேதோ கூறுகின்றனர்.
10/20 ஆயிரம் ஆண்டுக் காலத்தில் குறிப்பாக வரலாற்றுக் காலம் என்று அறியப்பட்ட 2000/3000 ஆண்டுக் காலத்தில் மனிதன் இப்படித்தான் தன்னிலிருந்தும் அந்நியப்பட்டு, தனக்குள் நொந்து ஓயாமல் கேள்விகள் எழுப்பி, ஒன்றுக்கு ஒன்று மாறுபட்ட விடைகள் கண்டு பின்னர் சிக்கல் அதிகரிக்கும்பொழுது மேலும் நொந்து புதிய கேள்விகள் எழுப்பி, கிட்டும் விடைகள் நிறைவு தராமல், மதங் களுக்குள் மயங்கி, பின்னர் வெளியேறி, இறைவன் உண்டு எனக் கண்டு பிறகு மறுத்து, மகான்கள் என்று சிலரை நம்பி, பிறகு அவர்களிடமிருந்து விலகி இப்படியே பல நூற்றாண்டுகள் கழிந்தது.
இடைப்பட்ட காலத்தில் எத்தனையோ, கொள் கைகள், கோட்பாடுகள், அரைகுறை விடைகள் இப்படியே கிடைத்து வந்த நிலையில் இறுதியாக மார்க்சியத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறோம். வரலாற்றுக் காலத்தில் அங் கங்கே சில வெளிச்சங்கள் தென்பட்டன. இவற்றை நாம் மறுக்கவில்லை. இன்னும் நமக்குக் கேள்விகள் இருக் கின்றன. இறுதி விடைகள் உண்டா என்பதும் இவை எப்பொழுது கிட்டும் என்பதிலும் நமக்கு உறுதி சொல்ல முடியவுமில்லை. மனித துயரங்களுக்குக் காரணம் வரலாற்றுக் காலத்தில் தோன்றி வளர்ந்த தனியுடைமை, அரசதிகாரம், மதஆதிக்கம் இந்தியச் சூழலில் சாதி முதலியவை. இவற்றின் வழியே சுரண்டலும் ஒடுக்கு முறையும் வரலாற்றுச் சூழலில் ஏற்பட்ட அந்நியமாதலி லிருந்து மனிதன் விடுபட வேண்டுமென்றால் அரசு, தனி யுடைமை, மதஆதிக்கம் முதலியவை ஒழிந்தாகவேணும். இவற்றை ஒழிக்கும் முறையில் மக்கள் திரண்டு போராட வேண்டும். அண்மைக் காலத்தில் உலகமயமாதல் என்னும் பெயரில் நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன.
மனித வாழ்வுக்கு அர்த்தம் என்ன என்பது மெய் யியலின் முதன்மையான கேள்வி. பிரபஞ்சம் ஏதேனும் அர்த்தத்தோடு இயங்குகிறதா? என்றெல்லாம் கேள்விகள் உண்டு. பரிணாமம் என்ற முறையிலான மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் அர்த்தம் உண்டா? என்றும் கேள்வி உண்டு. மனிதத் துயரம் என்றேனும் முற்றாகத் தீருமா? என்றும் கேட்டுக் கொள்ளலாம். மார்க்சியம் என்றேனும் இல்லாத காலம் வருமா? என்றும் கேட்கலாம்.
வரலாற்றில்தான் நாம் மனிதர் ஆனோம். நமக்குள்ள ஆளுமையை வரலாறு மற்றும் சமூகத்திலிருந்து பெற்றோம். வரலாற்றியக்கம் நமக்குள்ளும் இருக்கிறது. நமக்கான அறிவு, கலைத்திறன் முதலியவை வரலாற்றிலிருந்து பெற் றோம். மாபெரும் இயற்கையோடு ஒத்தும் முரண்பட்டும் தான் நம் வாழ்வுக்கான வளத்தைப் பெறுகிறோம். இயற்கை யன்றி நமக்கு வாழ்வில்லை. பிரபஞ்சம் என்ற பேரியக்கத் தினுள் நாமும் இருக்கிறோம். இயற்கையின் படைப்புத் திறன் நமக்குள்ளும் உண்டு. புதியவை படைக்கும் பொழுதே நம்மையும் புதுப்பித்துக் கொள்கிறோம். பேரின்பம் அடைகிறோம். புரட்சி என்பதும் போராட்டம் என்பதும் மனிதனுக்குள் புதிய ஆற்றலை, புதிய ஆளுமையை, புதிய பேரழகு முதலியவற்றைத் தோற்றுவிக்கிறது. உலகையும் இப்படித்தான் புதிதாகப் படைக்கிறோம். பழைய உலகத்திலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ளும் பொழுது புதிய வெளிச்சத்தைப் பெறுகிறோம். முன்னைய மரபு களை நமக்குள் புதிய சூழலுக்கு ஏற்ப மாற்றிக் கொள்கி றோம். இயற்கையை, பேரண்டத்தை, மாபெரும் வரலாற்றை எந்த அளவிற்கு, எத்தகைய முன்னைய ஆய்வுகள் செயல் பாடுகள் முதலியவற்றின் மூலம் புரிந்துகொள்கிறோமோ அந்த அளவிற்கு நமக்குள் விரிவடைகிறோம் நமக்கான வாழ்வும் விரிவடைகிறது. நமக்கான உலகமும் விரி வடைகிறது. நாம் தனிமனிதரில்லை. நமக்குள் நெடுங்கால வரலாறு உண்டு. நமக்குள் உற்றுப் பார்த்தால் கோடிக் கணக்கான மனிதர்களின் சாதனைகள் நம் வாழ்வுக்கான ஆதாரம் என்பது புரியும். இயற்கைக்கு மரணமில்லை. என்றாலும் உலகளவில் பெருகிவரும் ஆதிக்கம் இன்று மாபெரும் இயற்கையை அழிக்க முயற்சி செய்யும் பொழுதே மனிதவரலாறும் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. நமக்கான உலகம் வேண்டுமென்றால் நமக்குள்ளும் வெளியிலும் இருக்கின்ற ஆதிக்கங்களை அறவே ஒழித்ததாக வேண்டும்.
அந்நியமாதல் என்ற கருத்திலிருந்தே மார்க்சிய மெய்யியலுக்கு நாம் வந்து சேருகிறோம். இயற்கை முதலியவற்றிலிருந்து அந்நியப்பட்ட நிலையில்தான் மனிதனுக்குள் பிளவும் துயரங்களும். பின்னர் எதற்கு இந்த வாழ்வு? வாழ்வுக்கு என்ன அர்த்தம்? என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன. மனிதன் தனக்குள்ளும் வெளியிலும் தேடுகிறான். தேடல் வரலாற்றின் வழியே தொடர்கிறது. பிரபஞ்சம் உள்ளடக்கிக் கேள்விகள் கேட்கிறான். தாறுமாறான விடைகள் தவறான விடைகள் கிடைக்கின்றன. பொய்யான விடைகளும் பிரம்மைகளும் கூட வந்து சேருகின்றன. வரலாற்றுக் காலம் முழுவதும் தேடி அலைகிறான். சாக்ரடீஸ், புத்தர், இயேசு, சங்கரர், கன்பூசியஸ் என்று பலரும் தேடுகின்றனர்.
இறுதியாக மார்க்சு வருகிறார். மார்க்சும் தனக் குள்ளும் வெளியிலும் தேடுகிறார். உலகத்தை முற்றிலும் மாற்றுவதற்கான சாவி தனக்குக் கிடைத்திருக்கிறது என்று நம்பினார். வர்க்கப் போராட்டத்தின் மூலம் மனித வரலாற்றை மாற்றியமைக்க முடியும் என நம்பினார். இனி புதிய தத்துவங்கள் தேவையில்லை என நம்பினார் மார்க்சு நினைத்த மாதிரி உலகம் மாற்றம் பெறவில்லை. லெனின் போராடினார். மாவோ போராடினார். இன்னும் எத்தனை யோ மார்க்சிய இயக்கத்தினர் போராடினர்; போராடு கின்றனர்.
இடையில் வந்து சேர்ந்தது உலகமயமாதல். சோவியத் ஒன்றியம் தகர்ந்தது. சோசலிசம் கேள்விக்குள்ளாயிற்று. மாவோவின் சீனமும் இப்போது மாறிவிட்டது. முன்னைய மார்க்சியம் தன்னை இன்றைய உலகச் சூழலியலுக்கேற்ப புதிய மாற்றங்கள் பெற்றாக வேண்டும். வர்க்கப் போராட்டம் தொடரத்தான் செய்யும். ஆதிக்கம் எந்த வகையிலும் மனிதர் மத்தியில் சமத்துவத்தை ஏற்படுத்த உதவாது. சமதர்மச் சூழலில் அரசு தேவையில்லை. சாதி முதலியவையும் தேவை யில்லை. இவற்றைக் கட்டிக் காக்கும் சக்திகள் வரலாற்றில் இருக்கும் வரை சமதர்மத்திற்கும் வாய்ப்பில்லை.
அந்நியமயமாதல் சிலர் கருதியது போல முதலாளிய கோட்பாடில்லை; மார்க்ஸ் இதைக் கைவிடவுமில்லை. மார்க்ஸ் கால உலகம் இன்று இல்லை. நம் காலத்திற்கு ஏற்ற வகையில் மார்க்சியத்திற்கும் மெய்யியலுக்கும் புதிய பொருள் காண வேண்டும். உலகை மாற்றுவதென்பது இடையறாத நிகழ்வு. உயிரியல் முதலிய ஆய்வுகள் இன்றைக்கும் தொடர்கின்றன.
மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் காலத்தைவிட வரலாறு, இயற்கை, பிரபஞ்சம் முதலியவற்றை உள்ளடக்கி அனைத்து வகை ஆய்வுகளும் விரிவும் நுட்பமும் பெற்று வருகின்றன. இவற்றில் மார்க்சியம் அழிந்துவிடாது. இத்தகைய புதிய வகை ஆய்வுகளையும் விடைகளையும் உள்ளடக்கி மார்க்சியம் விரிவு பெற வேண்டும். மார்க்சி யத்திற்கு இத்தகைய உள்ளாற்றல் உண்டு. மாவோ கருதியது போல மார்க்சியமும் பழையது என்ற நிலைப்பாடு வருவதையும் தவிர்க்க இயலாது. மனித வாழ்க்கையில் அர்த்தம் தேடுகிற ஆய்வும் செயல்பாடுகளும் தொடரவே செய்யும். வாழ்வுக்குப் புதிய அழகையும் ஆற்றலையும் சேர்ப்பவை இந்தத் தேடல். சமயத்தினுள்ளும் நெடுங் காலமாக நிலவிய கேள்விகளுக்கு மார்க்சியத்தின் மூலமே விடை காண முடியும்.
இயங்கியல் என்ற ஆய்வுநெறி என்றும் தொடரும். பொருள்முதல்வாதமும் கருத்துமுதல்வாதமும் ஒன்றை முற்றாக மற்றது மறுக்கவில்லை. வரலாறு மற்றும் பொருளியல் சூழலில் வைத்தே எவ்வகை ஆய்வையும் நிகழ்த்த வேண்டும். செயல்பாட்டின் மூலமே எதுவும் மாறும். எவ்வகை அரசியலுக்கும் மெய்யியல்தான் ஆதார மாக இருக்க முடியும்.
தமிழ்த் தேசியம் என்ற கருத்துநிலையை எவ்வாறு நோக்குகின்றீர்கள்?
தமிழ்த் தேசியம் என்பதை மார்க்சியத்திற்கு முரண் பட்டது என்று நான் கருதவில்லை. தேசியம் என்பதையே முதலாளியம் என்று மார்க்சியர் சிலரேனும் கூறி வருவதை நான் அறிவேன். தேசியம் என்பதற்கு ஸ்டாலின் கூறிய வரையறை ‘முதலாளியத்தை உள்ளடக்கிய வரையறை. இன்று அந்த வரையறையை நமக்கு ஒத்த முறையில் மாற்றிக் கொள்வதில் தவறில்லை. மேற்கத்திய சூழலில் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராக முதலாளியம் வளர்ச்சி பெற்ற நிலையில், மொழி அடிப்படையில் தேசிய இனம் என்ற கருத்து ஏற்பட்ட போது ஒரு தேசிய இனத்திற்கு ஒரு தேசம் என்ற போக்கும் ஏற்பட்டது. ஒரு தேசத்திற்கு ஒரு தனிமொழி, தொடர்ச்சியான வரலாறு ஒரு பண்பாடு, தொடர்ச்சியான நிலஅமைப்பு, பொருளியலுக்கான வாய்ப்பு என்றெல்லாம் ஒரு தேசம் என்பதற்கான வரை யறைகளாக இருந்தன. முதலாளிய சூழலில் தேசம் என்பதனுள் முதலாளியத்திற்கு ஒத்த மொழி, முதலாளி யத்தின் கருத்திற்கு ஒத்த முறையில் வரலாறு, பண்பாடு, பொருளியல் என்பதற்கான விளக்கம் அமைந்திருந்தன. மேற்கத்திய சூழலில் தேசியம் என்ற கருத்தியலை நாமும் இப்பொழுது ஒப்புக்கொண்டால், தமிழ்த் தேசியமும் முதலாளியத்திற்கும் ஒத்த கருத்தியலாகவே இருக்க முடியும். முதலாளியத்திற்கு முதன்மையாக ஆங்கிலம் தேவை. தமிழ் ஓரளவுக்கே தேவை. முதலாளியத்திற்குப் பொருளியல் ஆதிக்கம் இல்லாமல் முடியாது. முதலாளியச் சுரண்டலைத் தமிழ்த் தேசத்திற்குள் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். முதலாளிய அரசதிகாரத்தை நாம் மறுக்க முடியாது. தமிழ் முதலாளிகள் தமிழ் நிலத்திற்கு வெளியில் உள்ள முதலாளியத்திற்குச் சேவை செய்வதை நாம் மறுக்க முடியாது. தமிழ் நிலத்தை முதலாளிகள் கொள்ளையடிக் கலாம். தமிழ்நாட்டு இயற்கையை நாசம் செய்யலாம். முதலாளிய பண்பாடு, நாகரிகம், நுகர்வியல் முதலியவற்றை நாம் மறுக்க முடியாது. தமிழ் முதலாளிகளுக்குத் தமிழ் வரலாற்றுத் தொன்மையோ பெருமிதமோ தேவையில்லை. தமிழின் பெயர் சொல்லித் தமிழ்மொழியை அழிக்கலாம். தமிழ் மக்கள் மீது ஆதிக்கத்தைப் பெறலாம். இத்தகைய முதலாளியத்தை நாம் ஏற்பதற்கில்லை.
தமிழ்த் தேசியம் என்ற கருத்தியலை நாம் முன் வைப்பதற்குப் போதிய முகாந்தரங்கள் உள்ளன. தமிழனுக்கு 5000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றுத் தொன்மை உண்டு. தமிழ் மொழிக்கும் தமிழிலக்கியத்திற்கும் தனித் தன்மைகள் உண்டு. தமிழ்மொழி வேறு எந்த மொழிக்கும் கடன்படவில்லை. தமிழ்மொழி வேறு பல மொழிகளின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் ஆதாரமாக அமைந் துள்ளது. தமிழன் ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் ஆளுமை செலுத்தினான். தமிழன் தன் நாகரிகத்தை உலகளவில் விரிவுபடுத்தினான். கிரேக்கத்தோடும் சீனத் தோடும் தமிழன் தொன்மைக் காலத்தில் உறவுகொண் டிருந்தான். கடல் வணிகத்தில் தமிழன் தன்னிகரற்றவனாக இருந்தான். தமிழனுக்குத் தொன்மைக் காலத்திலிருந்தே ஆட்சி முறை உண்டு. தமிழிசையும் தமிழ் மருத்துவமும் தமிழனுக்கு உரியவை. தமிழனுக்கு அறிவியல் உண்டு; பொருளியல் உண்டு; சிறப்பான மெய்யியல் உண்டு. கல்வியிலும் பண்பாட்டிலும் தமிழன் மேன்மை பெற்றிருந்தான்.
இத்தகைய தொன்மையும் வரலாற்றுப் பெருமையும் தனித்தன்மையும் உலக வரலாற்றுக்கு இவன் தந்த பங்களிப்பும் தமிழன் நெஞ்சில் என்றைக்கும் தங்கி யிருக்கிறது. தனக்கென தனியான பொருளியலை, பண் பாட்டை மேற்கொள்ளும் தகுதி இவனுக்குண்டு. தன் ஆதிக்கத்தை இவன் வேறு எவர் மீதும் திணிக்க வேண்டிய தில்லை. ஐந்திணை நிலங்கள் இவனுக்கு உண்டு. ஆற்று வளம், நீர் வளம், கடல் வளம் இவனுக்கு உண்டு. இவற்றை இவன் யாருக்கும் விட்டுக் கொடுக்கமுடியாது. வேறு எவர் ஆதிக்கத்தையும் இவன் ஏற்பதற்கில்லை. வெளியிலிருந்து தமிழகத்திற்கு வந்து சேர்ந்த வேறு பல பண்பாடுகளைக் கொண்ட மக்களோடும் இவன் இணங்கி வாழ முடியும். ஏழுகோடி பேர் தமிழ் நிலத்தில் வாழ்கின்றனர். உலகில் ஒரு தனித்தேசமாக வாழ்வதற்கு இவனுக்கு எல்லா நியாயங் களும் உண்டு. நிலக்கிழமை, முதலாளியம், அந்நிய ஆதிக்கம் முதலியவை பல்வேறு காலங்களில் இவன் மீது திணித்த கறைகளை இவனால் துடைத்துக் கொள்ள முடியும். வர்ணாசிரம முறை இவனுக்குத் தேவையில்லை. சாதிகள் தமிழனுக்குத் தேவையில்லை. உலகில் ஒரு தேசிய இனம் என்ற முறையில் இவர் போரின்றி, பூசலின்றி வாழ முடியும். தனக்குள்ளிருந்து சாதி ஆதிக்கம், வர்க்க ஆதிக்கம் முதலியவற்றைக் களைந்துகொள்ள முடியும். இதற்கான கருத்தியல் / மெய்யியல் / பண்பாடு இவனுக்கு உண்டு. சிந்தனைத் திறன் உண்டு.
இத்தகைய முகாந்தரங்களின் அடிப்படையில்தான் தமிழ்த்தேசியம்பற்றிப் பேசுகிறோம். மார்க்சியத்திற்கு ஒத்த வரையறைகள் இவை. எனினும் வரலாற்றுச் சூழலில் இந்தியா என்ற துணைக் கண்டத்தினுள் நாம் வாழ நேர்ந்திருக்கிறது. இந்தியா என்ற துணைக் கண்டத்திலிருந்து தற்காலச் சூழலில் வெட்டிக் கொள்ள நாம் விரும்பவில்லை.
தேசிய இனங்களின் இறையாண்மையை முழு அளவில் ஒப்புக்கொள்கிற ஒரு கூட்டாட்சியில் நாம் இணைந்தே வாழ விரும்புகிறோம். இந்தியாவில் இன்று நடைபெறுவது இத்தகைய கூட்டாட்சியாக இல்லை. இந்தியாவில் இருப்பது ஒரு அரசு. டெல்லியிலுள்ள மைய அரசின் உறுப்புகளாக மாநில அரசுகள் உள்ளன. மைய அரசு பெரும்பாலான அதிகாரங்களைத் தனக்கென வைத்துக் கொண்டுள்ளது. மைய அரசு இத்தகைய அதிகாரத்தைத் தனக்கெனக் கொண்டுள்ளதால் மேற்கத்தியரின் ஊடுரு வலை, இதன் வழியே மேற்கத்தியரின் அரசியலாதிக் கத்தைத் தமிழ்நாடு உட்பட எல்லா மாநிலங்களும் ஏற்க வேண்டியிருக்கிறது. மைய அரசு இந்தியை மாநிலங்கள் மீது திணிக்கிறது. மைய அரசு இந்துத்துவத்திற்கு ஆதர வாகவே செயல்படுகிறது. தேசிய இனங்கள் தம் உரிமை களுக்காகவோ விடுதலைக்காகவோ போராடும் பொழுது பயங்கரவாதம் என்று சொல்லிப் போராட்டங்களை ஒடுக்குகிறது. மைய அரசின் ஆதிக்கத்தை ஒப்புக்கொண்டு தமிழ்நாட்டில் முன்பு இருந்த அரசுகள் தமிழ் நிலத்தின் எல்லைப் பகுதியை மற்றவர்களுக்கு விட்டுக்கொடுத்ததால், இன்று நதிநீர் பிரச்சினை என்பது தமிழ் மக்களுக்குக் கடுமையான சிக்கலாக உள்ளது. மைய அரசின் ஆதிக்கத்தில் தமிழக அரசு இருப்பதனால் ஈழமக்களுக்குத் தமிழ் மக்கள் எதையும் செய்ய முடியவில்லை. முதலாளியமோ, மேற்கத்திய ஊடுருவலோ தமிழ்நாட்டின் இயற்கை வளத்தை, தமிழ்மொழியை, தமிழ்ப் பண்பாட்டைத் தொடர்ந்து நாசமாக்கும் என்பதில் ஐயமில்லை. தனக்கென இறையாண்மையோடு தன்னுரிமையோடு தமிழன் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்றால் தமிழ்த் தேசியம் உருவாக வேண்டும். சோவியத் ஒன்றியம் பல தேசிய இனங்களாகப் பிரிந்தது நமக்கு ஒரு முன்னுதாரணம். இதே போல் எத்தனையோ புதிய தேசங்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. மேற்கத்தியரின் வல்லரசு இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து தமிழ் நிலம் விடுபடுவதற்கு உடன் பாடாக இருக்காது. என்பது நமக்குத் தெரியும். இந்தியாவில் ஒரு சரியான குடியாட்சியை நிறுவுவதற்கு இந்தியாவில் உள்ள பல தேசிய இனங்களும் இணைந்து போராட வேண்டும். ஏற்கெனவே காஷ்மீர் முதலிய சில மாநிலங்களில் தேசிய இனவிடுதலைக்கான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இவற்றை ஒடுக்க முடியாமல் இந்திய அரசு திணறுவது நமக்குத் தெரியும். மேற்கத்தியரின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தினாலன்றி இந்திய மக்களுக்கு வாழ்வில்லை. தேசிய இனங்களின் விடுதலையென்பது இந்தியத் துணைக் கண்டத்தில் வளத்தையும் வலிமை யையும் பெருக்கும் என்பதில் ஐயமில்லை. இப்படிக் கூறுவது மார்க்சிய நோக்கினாலேயே அன்றி வேறில்லை.
தமிழ்த் தேசியம் என்று இன்று பேசும் இயக்கங்கள் பலவற்றிற்கும் இத்தகைய முறையிலான மார்க்சிய புரிதல் இல்லை. தமிழ்த் தேசியம் என்று பேசும் சில இயக்கங்கள், பெரியாரியம் என்று பேசும் சில இயக்கங்கள் பெரியாரியம் என்ற கருத்தியலையே முழுமையாகச் சார்ந்துள்ளன. பெரியாரியமும் மார்க்சியமும் இணைந்து செயல் படுவதற்கும் தேவையிருக்கிறது.
(இந்நேர்காணலைப் பெற்றுக் கொள்வதற்குப் பல வகைகளில் உதவிய பா.பிரசன்னாவுக்கு நன்றிகள்)