மாக்கோதையும் வெள்ளியம்பலத்துஞ்சிய பெருவழுதியும்:

 சங்க நூல்களின்படி, வெள்ளியம்பலத்துஞ்சிய பெருவழுதியும் சோழன் குராப்பள்ளித்துஞ்சிய பெருந்திருமாவளவனும் ஒன்றாக இருந்தபோது காவிரிப்பூம்பட்டினத்துக் காரிகண்ணனார் அவர்கள் இருவரையும் புறம் 58இல் வாழத்திப்பாடியுள்ளார். நமது இலக்கியக்கணிப்புப்படி இந்தப் பெருந்திருமா வளவனும், வெள்ளியம்பலத்துஞ்சிய பெருவழுதியும் சம காலத்தவர்களாகி கி.மு. 2ஆம் நூற்றாண்டு ஆகின்றனர். இந்தப் பெருந்திருமாவளவனுக்குப்பின் ஆட்சிக்கு வந்த சோழன் நலங்கிள்ளி கி.மு. 1ஆம் நூற்றாண்டு ஆகிறான். முத்தொள்ளாயிரம் இந்தச் சோழன் நலங்கிள்ளியையும், சேரமான் குட்டுவன் கோதையையும், பாண்டியன் மாறன்வழுதி என்பவனையும் பாடியுள்ளது-(17) ஆதலால் முத்தொள்ளாயிரமும் அதனால் பாடப்பட்ட மூன்று வேந்தர்களும் கி.மு. 1ஆம் நூற்றாண்டு ஆகின்றனர்.

 கி.மு. 1ஆம் நூற்றாண்டு சேரமான் குட்டுவன் கோதைக்கு முன்பு ஆட்சி செய்தவன் சேரமான் கோட்டம்பலத்துஞ்சிய மாக்கோதை என்பதால் அவன் கி.மு. 2ஆம் நூர்றாண்டு ஆகிறான். ஆதலால் 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வெள்ளியம்பலத்துஞ்சிய பெருவழுதியும், அதே காலகட்டச் சேரமான் கோட்டம்பலத்துஞ்சிய மாக்கோதையும் சமகாலத்தவர் ஆகின்றனர். ஆகவே நாணயவியல் ஆய்வாளரான இரா. கிருஷ்ண மூர்த்தி அவர்களின் கருத்துப் படி வெள்ளியம்பலத்துஞ்சிய பெருவழுதியின் காலமான கிமு. 2ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதிதான் சேரமான் மாக்கோதையின் காலமாகும். அதற்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்த சேரமான் குட்டுவன் கோதையின் காலம் கி.மு. 1ஆம் நூற்றாண்டின் துவக்கக் காலம்ஆகும்.

வெள்ளியம்பலத்துஞ்சிய பெருவழுதி வெளியிட்ட நாணயத்தை கி.மு. 2ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி என ஏற்றுக்கொண்ட சில ஆய்வாளர்கள், அதே காலகட்டத்தைச் சேர்ந்த சேரமான் கோட்டம்பலத்துஞ்சிய மாக்கோதையின் காலத்தை, உரோமர்களின் தலைவடிவ நாணயத்தைப் போல் மாக்கோதையின் நாணயம் இருப்பதால் உரோமர்கள் தலைவடிவ நாணயம் வெளியிட்ட காலத்தைக் கொண்டு, அதன் காலத்தை கி.பி. 1ஆம் நூற்றாண்டு என்கின்றனர். உரோமர்கள் நாணயம் வெளியிடுவதை கிரேக்கர்களைப் பார்த்துத்தான் கற்றுக்கொண்டனர்.தமிழர்கள் கி.மு. 3ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே கிரேக்கர்களோடு தொடர்புகொண்டவர்களாக இருந்துள்ளனர் என்பதால் தமிழர்கள் நேரடியாகக் கிரேக்கர்களைப்பார்த்துக் கற்றுக்கொண்டனர் எனலாம். உரோமர்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. உரோமின் முதல் வேந்தன் அகட்டசு என்பவன் காலம், கி.மு. முதல் நூற்றாண்டின் இறுதிப்பகுதிதான். ஆனால் தமிழகத்தில்கிமு 500க்கு முன்பிருந்தே வேந்தர்கள் இருந்து வருகின்றனர். தமிழகத்தில் கி.மு. 6ஆம் நூற்றாண்டிலிருந்தே நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆகவே தமிழர்களைப் பார்த்தும் கிரேக்கர்களோ, உரோமர்களோ கற்றுக் கொண்டிருக்கலாம். ஆகவே நமது இலக்கியக்கணிப்புப்படியும், பொதுக் கண்ணோட்டப்படியும், காரணகாரியஅடிப்படையிலும் மாக்கோதையின் காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதிதான் ஆகும். அதன்பின் வந்த சேரமான் குட்டுவன் கோதையின் காலம் கி.மு. முதல் நூற்றாண்டின் ஆரம்பப்பகுதி ஆகும்.

எ) மாக்கோதை, குட்டுவன் கோதை நாணயங்கள்:

 சேரமான் கோட்டம்பலத் துஞ்சிய மாக்கோதை, சேரமான் குட்டுவன் கோதை ஆகிய இருவரும் வெளியிட்டத் தலைவடிவ நாணயங்கள், கிரேக்கத் தலைவடிவ நாணயங்களுக்குப் பின் அதை அடிப்படையாக்கொண்டு வெளியிட்டவை எனக் கொண்டு அவைகளின் காலத்தை கி.மு.2ஆம் 1ஆம் நூற்றாண்டு என அகழாய்வு முன்னாள் இயக்குநர் நடன காசிநாதன் அவர்களும் தினமணி ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்களும் கணித்துள்ளனர்-(18). நமது இலக்கியக் கணிப்புகொண்டு ஆய்வு செய்து வெள்ளியம்பலத்துஞ்சிய பெருவழுதியின் சமகாலத்தைச்சேர்ந்த மாக்கோதை வெளியிட்ட தலைவடிவ நாணயங்களின் காலம் கிமு 2ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி எனவும், அதன்பின் ஆட்சிக்கு வந்த குட்டுவன் கோதை வெளியிட்ட நாணயங்களின் காலம் சுமார் கி.மு 1ஆம் நூற்றாண்டு எனவும் கணித்துள்ளோம். இந்த கோட்டம்பலத்துஞ்சிய மாக்கோதை சேரன் செங்குட்டுவனுக்குப்பின் 8ஆவது தலைமுறையைச் சேர்ந்தவன். 8 தலைமுறை என்பது கிட்டத்தட்ட 135 ஆண்டுகள் எனலாம். ஆகவே மாக்கோதை கி.மு. 2ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியை சேர்ந்தவன் எனில் அதற்குக் கிட்டத்தட்ட 135 ஆண்டுகள் முன்பிருந்த சேரன் செங்குட்டுவன் கி.மு. 3ஆம் நூற்றாண்டு ஆகிறான்-.

இறுதிச் சங்ககால வேந்தர்கள்:

 mahavamsaநமது இலக்கியக் கணிப்புப்படியும், பதிற்றுபத்துகணக்குப்படியும், சேரன் செங்குட்டுவனிலிருந்து 10ஆவது தலைமுறையைச் சேர்ந்தவன்தான் சங்க கால இறுதிச்சேர வேந்தனான குட்டுவன்கோதை ஆவான். சேரன் செங்குட்டுவன் 5ஆம் பதிற்றுப்பத்தில் பரணரால் பாடப்பட்டவன். பத்தாவது பதிற்றுப்பத்து யானக்கண்சேய் மாந்தரஞ்சேரல் குறித்தது எனக் கருதப்படுகிறது. அதன்பின் வருபவன் கணைக்கால் இரும்பொறை. அதன் பின்னர் சேரமான் கோதை மார்பன், சேரமான் கோட்டம்பலத்துஞ்சிய மாக்கோதை, சேரமான் குட்டுவன் கோதை ஆகிய மூன்று கோதைகுலச் சேர வேந்தர்கள் வருகிறார்கள். சேரன் செங்குட்டுவன் 5ஆவது சேர வேந்தன் எனில், இறுதிச் சங்ககால வேந்தனான குட்டுவன் கோதை 14ஆவது வேந்தன் ஆகிறான். ஆகவே சேரன் செங்குட்டுவனிலிருந்து பத்து தலைமுறை வேந்தர்கள் சேர நாட்டை ஆண்டதாகச் சங்கஇலக்கியங்களும் பிற சான்றுகளும் உறுதிப்படுத்துகின்றன. பாண்டியர்களிலும் சேரன்செங்குட்டுவன் காலத்திய ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனுக்குப்பின் வெற்றிவேற் செழியன் முதற்கொண்டு பாண்டியன் கூடகாரத்துஞ்சிய மாறன்வழுதி வரை பத்து தலைமுறை வேந்தர்கள் ஆண்டதாகச் சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. சங்க இலக்கியக் கணிப்புப்படி சோழர்களில் சேரன் செங்குட்டுவனுக்குச் சமகாலத்தவனான உருவப்பஃறேர் இளஞ்செட்சென்னிக்குப்பின் ஆறாவது தலைமுறையைச் சேர்ந்த சோழன் நலங்கிள்ளியும் அவனது மகனும்தான் இறுதிச்சங்ககாலச் சோழ வேந்தர்கள் ஆவர். குட்டுவன் கோதை, மாறன் வழுதி, நலங்கிள்ளி ஆகிய மூவரும் கி.மு. 1ஆம் நூர்றாண்டு முத்தொள்ளாயிரத்தால் பாடப்பட்டவர்கள் ஆவர்.

 மகாவம்ச நூலின்படி கயவாகுவின் காலம் கி.பி. 171-193 ஆகும்-(19). இதனைக்கொண்டு கணிக்கும் சேரன் செங்குட்டுவனின் ஆட்சி சுமார் கி.பி 200க்குள் முடிவதாகக் கொள்ளலாம். அதன்பின் குட்டுவன் கோதைவரை உள்ள 9 சேர வேந்தர்களின் ஆட்சிக்காலம் கிட்டத்தட்ட 150 ஆண்டுகள் எனில், சேரன்செங்குட்டுவனுக்குப்பின் சுமார் கி.பி. 350(200+150) வரை சங்ககால இறுதிச்சேர வேந்தர்கள் ஆண்டனர் என ஆகிறது. சங்ககால இறுதி மூவேந்தர்களான குட்டுவன் கோதை, கிள்ளிவளவன், மாறன்வழுதி, ஆகிய மூவரும் மிகவும் வலிமை வாய்ந்தவர்களாக இருந்தனர். இறுதி மூவேந்தர்களில் ஒருவனானசோழன் நலங்கிள்ளி பெரும் கடற்படை கொண்டு இந்தியாவின் கிழக்குக் கடற்கரை முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தான்.

நலங்கிள்ளியின் உச்சயினி படையெடுப்பு:

சோழன் நலங்கிள்ளி அவந்தி நாட்டின் தலைநகர் உஞ்ஞை எனப்படும் உச்சயினி வரை படையெடுத்து வென்றதாக முத்தொள்ளாயிரம் குறிப்பிட்டுள்ளது. முத்தொள்ளாயிரத்தின் 49ஆம் பாடல் நலங்கிள்ளியின் உச்சயினி முதல் ஈழம் வரையான படையெடுப்புகள் குறித்து, ‘உறையூரிலிருந்து கிளம்பிய நலங்கிள்ளியின் யானை முதலில் கச்சி எனப்படும் காஞ்சி நகருக்குச் சென்று அதை ஒரு காலால் மிதித்தது. பின் நீர்நிலைகள் தத்திக்குதிக்கும் குளிர்ச்சியான உஞ்சை எனப்படும் உச்சயினி நகருக்குச் சென்று அதனை இன்னொரு காலால் மிதித்தது. அதன்பின் கடலைக்கடந்து சென்று ஈழத்தையும் ஒரு காலால் மிதித்தது. இப்படி எல்லா நாடுகளையும் மிதித்து வெற்றிகண்ட பின்னர் உறையூர் நகருக்குத் திரும்பியது’ என்கிறது. வடக்கே உச்சயினி முதல்தெற்கே ஈழம் வரை சோழன் கிள்ளி படையெடுத்துச் சென்று சோழப்பேரரசை விரிவுபடுத்தி யிருந்தான் என்கிறார் கவிஞர் தெசிணி அவர்கள்-(20).

டி.டி. கோசாம்பியும், சோழன் நலங்கிள்ளியும்:

 டி.டி. கோசாம்பி அவர்கள் “உச்சயினியைச் சுற்றியிருந்த நிலப்பகுதிகள், சுங்கர்களின் ஆட்சி மையத்திற்குரிய அசைக்கமுடியாத அமைப்புகளாகத்திகழ்ந்து வந்தன. ஆனால் கி.மு. முதல் நூற்றாண்டில், தெற்கிலிருந்து கிளம்பிய சாதவாகனர்கள் இப்பகுதியிலும் கூட ஆக்ரமிப்புகளை நடத்தியுள்ளனர்” என்று கூறியுள்ளார்-(21). சுங்கர்களின் ஆட்சி கி.மு.187-கி.மு.75 ஆகும். அதாவது சுங்கர்களின் ஆட்சி கி.மு. 75இல் முடிவடைந்து விடுகிறது. சாதவாகனர் வம்சத்து சதகர்னியின் ஆட்சி கி.மு. 124வாக்கில் முடிவடைந்து விடுகிறது. அவ்வம்சத்து புலுமாயி என்பவன் கி.மு. 30க்குப்பின் தான் ஆட்சிக்கு வருகிறான். கி.மு. 124 முதல் கி.மு. 30 வரை சாதவாகனர்கள் வலுவுடன் இல்லை. அவர்கள் கி.மு. 75 முதல் கி.மு. 30 வரை மகதத்தை ஆண்ட கன்வர்களின் கீழ் இருந்துதான் ஆட்சி செய்து வருகின்றனர். சாதவாகனர்களின் புலுமாயி(கி.மு. 30-6) கன்வர்களின் இறுதிக் காலத்தில்தான் பாடலிபுத்திரம் வரை படையெடுக்கிறான்-(22). ஆகவே டி.டி. கோசாம்பி குறிப்பிடும் கி.மு. முதல் நூற்றாண்டின் துவக்ககாலத்தில் சாதவாகனர்கள் மிகவும் பலவீனமானவர்களாகவே இருந்து வந்தனர் என்பதால் கி.மு. முதல் நூற்றாண்டின் துவக்ககாலத்தில் சுங்கர்களுக்கு எதிராக அவர்களால் படையெடுத்துச் சென்றிருக்க இயலாது.

 டி.டி. கோசாம்பி அவர்கள் சுங்கர்களின் ஆட்சியமைப்பிற்குள் உச்சயினி ஒரு அசைக்கமுடியாத அமைப்பாகத்திகழ்ந்தது எனவும் அதனை கி.மு. முதல் நூற்றாண்டில் தெற்கிலிருந்து படையெடுத்து வந்த சாதவாகனர்கள் ஆக்ரமித்து அழித்தனர் எனவும் எழுதியுள்ளார். ஆனால் இதனை நடத்தியவன் தெற்கிலிருந்து வந்த சோழன் நலங்கிள்ளி ஆவான். முத்தொள்ளாயிரப் பாடல்கள் இவனது உச்சயினி வரையிலான படையெடுப்பை உறுதிப்படுத்துகின்றன. நமது சங்ககால இலக்கியக் கணிப்பு இவனது காலத்தை கிட்டத்தட்ட கி.மு. 100-75 என நிர்ணயம் செய்கிறது. இவனது வடநாட்டுப்படையெடுப்பை சுமார் கி.மு. 85-80 என நாம் கணித்துள்ளோம். ஆகவே சுங்கர்களின் இறுதிக்காலத்தில், கி.மு. முதல் நூற்றாண்டின் துவக்கத்தில் தெற்கிலிருந்து வந்து உச்சயினியைத் தாக்கிச் சுங்கர்களின் வலுவான மையமாக இருந்த அதனைத் தகர்த்தவன் சோழன் நலங்கிள்ளி தான் ஆவான். இத்தகவல் நமது சங்ககால இலக்கியக் கணிப்பை மேலும் வலுவானதாக ஆக்குகிறது. இதன்மூலம் நலங்கிள்ளியின் காலம் குறித்த நமது இலக்கியக்கணிப்பு இந்திய வரலாற்றுக் காலக்கணிப்போடு பொருந்திப் போகிறது எனலாம்.

முத்தொள்ளாயிரம்-சங்ககாலம்:

 மொத்தம் 109 முத்தொள்ளாயிரப் பாடல்கள் கிடைத்துள்ளன. இதில் 21, 30, 57 பாடல்கள் முறையே சேர, சோழ, பாண்டிய வேந்தர்களைப்பற்றியன ஆகும். முதல் பாடல் கடவுள் வாழ்த்துப் பாடலாகும். பாடல் எண்: 41இல் ‘நாம நெடுவேல் நலங்கிள்ளி’ என சோழன் நலங்கிள்ளியின் பெயர் வருகிறது-(23). பாண்டிய வேந்தனைப் பற்றி 57 பாடல்கள் உள்ளன. பாடல் எண்: 76இல் ‘மணியானை மாறன் வழுதி’ என பாண்டியன் மாறன் வழுதியின் பெயர் வருகிறது-(24). பாடல் எண்: 19இல் ‘செங்கண் மாக்கோதை’ என சேரன் மாக்கோதையின் பெயர் வருகிறது-(25). ஆக, சேரன் மாக்கோதை, சோழன் நலங்கிள்ளி, பாண்டியன் மாறன் வழுதி ஆகிய மூவரின் பெயர்களும் முத்தொள்ளாயிரத்தில் இடம்பெற்றுள்ளன.

 புறத்திரட்டில் கிடைத்த 109 பாடல்களில், ஒரு கடவுள் வாழ்த்துப்பாடல்போக மீதியுள்ள 108 பாடல்கள், உரை மேற்கோள்களாக வந்துள்ள 22 பாடல்கள் ஆகியவைகளைச் சேர்த்து மொத்தம் 130 பாடல்களை முத்தொள்ளாயிரப் பாடல்களாக அறிஞர் சேதுரகுமான் அவர்கள் பதிப்பித்துள்ளார் என்கிறார் முனைவர் சு. குலசேகரன் அவர்கள்-(26). “நச்சிலைவேல் கோக்கோதை நாடு” என உரை மேற்கோள் பாடல் ஒன்றில் கோக்கோதை என்கிற முதல் கோதை வேந்தனான, கோதைமார்பனின் பெயரும் வருகிறது-(27). ஆக குட்டுவன் கோதைக்கு முன்பிருந்த இரு கோதைகுலப் பெயர்களும் வருவதால் மாறன்வழுதி, நலங்கிள்ளி ஆகியவர்களின் சமகாலச் சேர வேந்தன் குட்டுவன் கோதையின் பெயர் தொலைந்து போன பாடல்களில் இருந்திருக்க வேண்டும் எனக்கொண்டு கோதை என்பது குட்டுவன் கோதையைக் குறிக்கிறது எனலாம். இந்நூலில் சோழ, பாண்டிய அரசர்களின் பிறந்த நாள் விழா குறித்தத் தரவுகள் உள்ளன. சேர அரசனின் பிறந்த நாள் குறித்தத் தகவல் இல்லை. பல அரச பெயர்கள் இருந்தாலும், பிறந்த நாள் தரவுகள் இந்நூல் ஒரு குறிப்பிட்ட அரசனையே பாடுகிறது என்பதை உறுதிசெய்கிறது-(28).

 முத்தொள்ளாயிரம் சங்ககாலத்ததுதான் ஆகும். பாண்டியநாட்டுச் செவ்வூர் சிற்றம்பலக்கவிராயர் வீட்டில் கிடைத்த சிலப்பதிகாரப்பிரதியில் முச்சங்க வரலாறு கூறும் தனிப்பாடலில் கடைச்சங்கநூல் பட்டியலில் முத்தொள்ளாயிரமே முதலிடம் வகிக்கிறது. அவிநயம் நூல், முத்தொள்ளாயிரத்தை உதாரணம் காட்டியிருப்பதால் முத்தொள்ளாயிரம் காட்டும் மூவேந்தராட்சி சங்ககாலத்தைச் சேர்ந்ததுதான் ஆகும்-(29). நமது கணிப்புப்படி முத்தொள்ளாயிரம் சங்ககாலத்தின் இறுதிக்காலம் ஆகிறது.

மேலும் அவன் வட இந்தியாவிற்கு படையெடுத்துச்சென்று அவந்தி நாட்டின் தலைநகர் உச்சயினியைக் கைப்பற்றினான் எனவும் அதன்பின் ஈழத்தையும் கைப்பற்றிக்கொண்டான் எனவும் முத்தொள்ளாயிரம் குறிப்பிடுகிறது.சோழன் நலங்கிள்ளியின் உச்சயினி படையெடுப்பு டி.டி. கோசாம்பி தந்த தரவுகளாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கி.பி. 350 வாக்கில் இவ்வளவு வலிமை வாய்ந்த வேந்தர்கள் ஆண்ட போது களப்பிரர்கள் கி.பி. 250 வாக்கில் தமிழகத்தை எப்படி கைப்பற்றி இருக்கமுடியும் என்கிற கேள்வி எழுகிறது. மேலும் இந்தச் சங்ககால இறுதி வேந்தர்களுக்குப் பின்னரும் பலர் ஆண்டனர். ஆதலால் இலங்கைக் கயவாகுவின் காலத்தை வைத்து சேரன் செங்குட்டுவன் ஆட்சியைக் கணிப்பது என்பது எவ்விதத்திலும் பொருந்தாது.

சேரன் செங்குட்டுவனின் காலம்:

 அசோகன் கல்வெட்டு; சம்பை கல்வெட்டு; புகளூர் கல்வெட்டு; மாமூலனாரின் நந்தர்கள், மௌரியர்கள், சேர, சோழ வேந்தர்கள் குறித்தப் பாடல்கள்; அதியமான், சேரன் செங்குட்டுவன் குறித்தப் பரணரின் பாடல்கள்; பாலைபாடிய பெருங்கடுங்கோ, மாமூலனார் ஆகியவர்களின் நன்னன் குறித்தப் பாடல்கள்; தலைவடிவப் பெருவழுதி நாணயங்கள்; மாக்கோதை, குட்டுவன் கோதை நாணயங்கள்; ஆகியவைகளைக் கொண்டு செங்குட்டுவனின் காலம் கி. மு. 3ஆம் நூற்றாண்டு என்பது பல விதங்களில் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.

மகாவம்சம் குறிப்பிடும் முதலாம் கயவாகுவின் காலம், இலங்கை மன்னன் கயவாகு கண்ணகி விழாவில் கலந்து கொண்டான் என்கிற சிலப்பதிகாரக் காப்பியத்தின் பதிகத்தில் வரும் குறிப்பு ஆகியவைகளைக் கொண்டு, அந்தக் கயவாகுதான் முதலாம் கயவாகு எனவும், அவன் காலமான கி.பி. 2ஆம் நூற்றாண்டுதான் சேரன் செங்குட்டுவனின் காலம் எனவும் நிர்ணயிக்கப்பட்டு அதன் அடிப்படையில் சங்ககாலத் தமிழக அரசுகளின் காலம் இதுவரை கணிக்கப்பட்டு வருகிறது. இக்காலம் அடிப்படை வரலாற்று ஆதாரங்கள் இல்லாதது எனப்பல வரலாற்று அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதன் காலம் ஆதாரபூர்வமான உலக வரலாற்றுக் காலத்தோடு இணைக்கப்படாதது. எனினும், வேறு பல காரணங்களைக் கொண்டு இக்காலக்கணிப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்துள்ளது. கல்வெட்டுச் சான்றுகள், சங்க இலக்கியச் சான்றுகள், நாணயங்களின் காலம் ஆகியவைகளைக் கொண்டு சேரன் செங்குட்டுவனின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு என மேலே உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கி.பி. 2ஆம் நூற்றாண்டுக்குச் சொல்லப்பட்ட வேறு பல காரணங்கள், இந்தக் கி.மு. 3ஆம் நூற்றாண்டுக்கும் பொருந்திப் போகிறது.

மகாவம்ச நூலும் செங்குட்டுவனின் காலமும்:

 வில்கெம் கெய்கர் அவர்களின் மகாவம்ச நூலின்படி புத்தர் இறந்தபின் 218ஆண்டு கழித்து அசோகர் முடிசூட்டிக்கொண்டார்(30) கி.மு. 268இல் அசோகர் முடிசூட்டிக்கொண்டார் என்பதால், மகாவம்ச நூலின்படி புத்தர் இறந்த ஆண்டு என்பது கி.மு. 486(218+268) ஆகும். மகாவம்ச நூலின் ஆண்டுப்பட்டியல் கி.மு. 483இல் இருந்து தொடங்குகிறது. ஆனால் கி.மு. 483 என்பது எந்தவிதத்தில் இந்திய அல்லது உலக வரலாற்றுக் காலவரையரையோடு இணைக்கப்பட்டது என்பதற்கான அடிப்படைச் சான்றுகள் எதுவும் அந்த நூலில் தரப்படவில்லை. அந்த நூல் தந்துள்ள மன்னர்களுடைய ஆட்சி ஆண்டுகளை அடிப்படையாகக் கொண்டுதான் கயவாகுவின் காலம் சொல்லப்பட்டுள்ளது. கி.மு. 483இல் தொடங்கும் பட்டியல் கி.பி. 352இல் முடிகிறது. அநுராதபுரத்தில் கிட்டத்தட்ட சுமார் 835 ஆண்டுகள் ஆட்சி செய்த 61 மன்னர்களை அது குறிப்பிடுகிறது. இந்த ஆண்டுகள் ஆரம்பம் முதல் இடையில் கூட உலக, இந்திய காலவரையரைகளோடு இணைக்கப்படவில்லை-(31).

 n chokkanபுகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் வின்சுடன் சுமித் அவர்கள் கி.மு. 483 முதல் கி.பி. 124 வரையான, 607(483+124) வருடகால, ‘வசபா’ என்கிற மன்னனின் ஆட்சிகாலத்துக்கு முந்தைய மகாவம்ச நூலின் வரலாற்றை, அதன் ஆண்டுகளை முழுமையாக நிராகரித்துள்ளார். தேவநாம்பியதீச என்கிற மன்னன் சார்ந்த 10 அத்தியாயங்களை “அபத்தங்களால் முடையப்பட்ட வேலைப்பாடு” என்கிறார் அவர்-(32). அதனால்தான் புகழ் பெற்ற வரலாற்று அறிஞர் கூல்ட்ச்(Hultzsch) அவர்கள் சேரன் செங்குட்டுவன், கயவாகுவின் காலத்தைச் சேர்ந்தவன் என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நூல், எந்த வெளிநாடும் செல்லாத புத்தர் மூன்றுமுறை இலங்கை வந்ததாகக் கதை சொல்லுகிறது. தனது 99 சகோதரர்களைக்கொன்றபின் அசோகர் ஆட்சிக்கு வந்தார் என்கிறது-(33). புத்தசமயத்துக்கு மாறுவதற்கு முன் அசோகர் தீயவராக, கொடூரமானவராக இருந்தார் என அந்நூல் சொல்வதற்கு வரலாற்றுச் சான்றுகள் எதுவும் இல்லை என்கிறார் வின்சுடன் சுமித் அவர்கள்-(34).

 பல அறிஞர்களின் கருத்துப்படி அசோகர் இலங்கை பற்றித் தனது கல்வெட்டில் எதுவும் சொல்லவில்லை. அசோகருக்கு மகிந்த, சங்கமித்ர என்கிற மகனோ, மகளோ இருக்கவில்லை. அவர்கள் இலங்கை போகவும் இல்லை. மகிந்த அவருடைய தம்பி ஆவார். அவர்தான் தமிழகம் வந்தார். இலங்கை போனார். தமிழ்நாட்டில் இருந்துதான் புத்தமத நிறுவனங்கள் இலங்கைக்குப் பரவின. இவை வின்சுடன் சுமித் அவர்கள் தனது அசோகர் என்கிற நூலில் தரும் தரவுகளாகும்-(35). மகாவம்ச நூல் என்பது பௌத்தமத நம்பிக்கையாளர்கள் ஓதுவதற்கும், நினைவில் வைத்துக் கொள்ளவும், அவர்களுக்கு இன்பமும், பரவசமும் ஊட்டவும் எழுதப்பட்டது என்கிறார் அதனை கி.பி. 6ஆம் நூற்றாண்டு வாக்கில் எழுதிய ‘மகாநாம’ என்கிற புத்த பிக்கு. அந்நூல் புத்த மடாலங்களின் அத்தகதா கதைகளையும், புத்தமத மடாலயங்களுக்கு உதவிய மன்னர்கள், அவர்களின் உதவிகள் பற்றிய தரவுகள் முதலியனவற்றையும் கொண்ட கி.பி. 3ஆம் நூற்றாண்டு தீபவம்ச நூலைப் புதுப்பித்து எழுதப்பட்டதாகும்-(36). இந்நூலில் துட்டகாமினி குறித்து எழுதப்பட்ட 197-237 வரையான பக்கங்கள், சிங்களவர்களிடம், தமிழர்களைக் கொன்றழிப்பதன் மூலமே பௌத்தத்தைக் காப்பாற்ற முடியும் எனவும் அதுவே நாட்டுப்பற்று எனவும் போதிக்கிறது. தமிழர் விரோதப்போக்கு என்பது 1500 ஆண்டுகளாக இந்நூலில் ஆழமாக விதைக்கப்பட்டுள்ளது. இது ஒரு வரலாற்று நூல் அல்ல. இந்நூல் சிங்களர்களின் பௌத்த வேதநூல் (அ) புராண நூல் என்பதே பொருத்தமாகும்.

 ஆகவே எந்தவித அடிப்படைச் சான்றுகளும் இல்லாத, கி.பி. 6ஆம் நூற்றாண்டு வாக்கில், மதக் காரணங்களுக்காக எழுதப்பட்ட, இலங்கையின் நூலான மகாவம்சம், இடைச் செருகல்கள் நிறைந்த சிலப்பதிகாரக் காப்பியப் பதிகம் ஆகியவைகளைக் கொண்டு நிர்ணயிக்கப்பட்ட, சேரன் செங்குட்டுவனின் காலம் நிராகரிக்கப்படவேண்டும். சங்க இலக்கியங்கள் தரும் அடிப்படைச் சான்றுகளைக் கொண்டும்,உலக வரலாற்றுக்காலத்தோடு இணைக்கப்பட்ட, அசோகன் கல்வெட்டு, புகளூர் கல்வெட்டு, சம்பைக் கல்வெட்டு, தலைவடிவப்பெருவழுதி நாணயங்கள், மாக்கோதை, குட்டுவன் கோதை நாணயங்கள் போன்றவைகளின் காலத்தைக் கொண்டும் கணிக்கப்பட்ட காலமானகி.மு. 3ஆம் நூற்றாண்டு என்பதுதான் சேரன் செங்குட்டுவனின் உண்மையான காலமாகும். சங்க இலக்கியம் இயற்கையானது, நம்பத்தகுந்தது என்பதைப் பலதரப்பட்ட அறிஞர்களும் அங்கீகரித்துள்ளனர். பதிற்றுப்பத்து கூறும் சேர வேந்தர்களும், பிற சங்க இலக்கியங்கள் கூறும் பல தமிழக வேந்தர்களும் வரலாற்றில் இருந்தவர்கள் என்பதை அகழாய்வுகளும், கல்வெட்டுகளும், நாணயங்களும் இன்ன பிற தரவுகளும் உறுதி செய்துள்ளன. ஆகவே இந்தச் சங்க இலக்கியங்கள் தரும் தரவுகளின் அடிப்படையிலும், கல்வெட்டுச் சான்றுகளின் அடிப்படையிலும், சங்ககால இறுதி வேந்தர்கள் வெளியிட்ட நாணயங்களின் காலத்தைக்கொண்டும் கணிக்கப்பட்ட கி.மு. 3ஆம் நூற்றாண்டு என்கிற சேரன் செங்குட்டுவனின் காலம் புறக்கணிக்கப்பட முடியாதது ஆகும்.

  ஆகவே பல்வேறு சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்பட்டுள்ள, சேரன் செங்குட்டுவனின் காலம் கி மு. 3ஆம் நூற்றாண்டு என்பது, தமிழக வரலாற்றுக் காலத்தை உலக வரலாற்றுக் காலத்தோடு இணைத்து, தமிழக வரலாற்றை முறைப்படுத்தி ஒழுங்குபடுத்தும். மகத அரசில் ஏற்பட்ட நந்தர்-மௌரியர் ஆட்சி மாற்றமும், மௌரியர்களின் தமிழகப்படையெடுப்பும், அசோகன் கல்வெட்டும், மெகத்தனிசு, சாணக்கியன் போன்றவர்களின் குறிப்புகளும், காரவேலனின் கல்வெட்டும், சுகாப், கென்னடி, வின்சென்ட் சுமித் போன்ற வரலாற்று அறிஞர்களின் தமிழக வணிகம் குறித்தக் குறிப்புகளும் இந்தக் காலக் கணிப்புக்கு சான்றுகளாக இருக்கின்றன.

பார்வை:

17.முத்தொள்ளாயிரம், என். சொக்கன், 2010, கிழக்குப்பதிப்பகம் & கவிஞர் தெசிணி, கலித்தொகையும், முத்தொள்ளாயிரமும், டிசம்பர் 2004. & முனைவர் சு. குலசேகரன், இலக்கிய வரலாறு-1, தமிழ்ச் சங்ககாலம், கி.மு.600-கி.பி.450, பக்:67-75.

18.1.paper on Makkothai coins presented at the first oriented numismatic conference, held at Nagpur, date: 29.10.1990. 2. Makkotai coins. Studies in south Indian coins vol-2, pp. 89-93. 3.Natana Kasinathanan-Tamils Heritage page: 45.

19.மகாவம்ச-சிங்களர்கதை, வில்கெம் கெய்கர், தமிழில் எசு.பொ. அவர்கள், அக்டோபர்-2009 பின்னிணைப்பு-அ.

20.முத்தொள்ளாயிரம், என். சொக்கன், 2010, கிழக்குப்பதிப்பகம் & கவிஞர் தெசிணி, கலித்தொகையும், முத்தொள்ளாயிரமும், டிசம்பர் 2004, பக்; 180.

21.டி.டி. கோசாம்பி, பண்டைய இந்தியா, தமிழில் ஆர். எசு. நாராயணன், செப்டம்பர்-2006, பக்: 388.

22. பண்டையக்கால இந்தியா, டி.என். ஜா, தமிழில் அசோகன் முத்துசாமி, NCBH வெளியீடு, டிசம்பர்-2011 & தென் இந்திய வரலாறு, டாக்டர் கே.கே. பிள்ளை, எட்டாம் பதிப்பு-2011 & சாதவாகனர்கள், குசானர்கள், சாகர்கள், மகத அரச வம்சங்கள், இந்தோ கிரேக்கர்கள் முதலியன பற்றிய விக்கிபீடியா, பிற இணைய தளங்களின் தரவுகள்

23, 24, 25. தெசிணி, கலித்தொகையும், முத்தொள்ளாயிரமும், டிசம்பர் 2004, பக்: 164; பக்: 171; பக்: 160.

26.அறிஞர் சேதுரகுமான், முத்தொள்ளாயிரம், ஏப்ரல் 1946, மார்ச் 1952, கழகம். & முனைவர் சு. குலசேகரன், இலக்கிய வரலாறு-1, தமிழ்ச் சங்ககாலம், கி.மு.600-கி.பி.450, பக்:67.

27.முனைவர் சு. குலசேகரன், இலக்கிய வரலாறு-1, தமிழ்ச் சங்ககாலம், கி.மு.600-கி.பி.450, பக்:72, 73. & தொல்.பொருள், நச்சினார்க்கினியர், சூ. 91 உரை ஒன்றில் கோக்கோதை என்கிற முதல் கோதை வேந்தனான, கோதைமார்பனின் பெயரும் வருகிறது.

28. முனைவர் சு. குலசேகரன், இலக்கிய வரலாறு-1, தமிழ்ச் சங்ககாலம், கி.மு.600-கி.பி.450, பக்:68-70.

29. “ “ பக்: 71.

30.மகாவம்ச-சிங்களர்கதை, வில்கெம் கெய்கர், தமிழில் எசு.பொ. அவர்கள், அக்டோபர்-2009, பக்:36.

31.மகாவம்ச-சிங்களர்கதை, வில்கெம் கெய்கர், தமிழில் எசு.பொ. அவர்கள், அக்டோபர்-2009 பின்னிணைப்பு-அ.

32.மகாவம்ச-சிங்களர்கதை, வில்கெம் கெய்கர், தமிழில் எசு.பொ. அவர்கள், முன்னுரைப்பக்:28, அக்டோபர்-2009.

33. “ “ பக்:36.

34.வின்சுடன் சுமித், அசோகர், இந்தியாவின் பௌத்தப்பேரரசர், 2009, பக்:21.

35. “ “ பக்; 38-40.    

36.மகாவம்ச-சிங்களர்கதை, வில்கெம் கெய்கர், தமிழில் எசு.பொ. அவர்கள், பக்:1; & முன்னுரைப்பக்: 20, 21, அக்டோபர்-2009.

- கணியன் பாலன், ஈரோடு

 

Pin It