amazon forestஎங்களுடைய நிலத்தை வாங்க விரும்புவதாகக் குடியரசுத் தலைவர் வாஷிங்டனிலிருந்து செய்தி அனுப்புகிறார். ஆனால், வானத்தை எப்படி வாங்க முடியும்? எப்படி விற்க முடியும்? நிலத்தை எப்படி வாங்கவும் விற்கவும் முடியும்? விற்பது - வாங்குவது என்ற எண்ணமே எங்களுக்கு விந்தையாக உள்ளது! காற்றின் புதிய வாசம், தெறித்துவிழும் நீர்த்துளி இவை உங்களுடையதா? அல்லவே! உங்களுக்குச் சொந்தமில்லாத ஒன்றை நீங்கள் எப்படி விற்க முடியும்? இப்பூமியின் ஒவ்வொரு பகுதியும் எங்கள் மக்களுக்குப் புனிதமானது! ஒளிரும் ஒவ்வொரு பைன்மர ஊசி இலைகளும், ரீங்காரமிடும் ஒவ்வொரு வண்டின் இசையும் எங்கள் மக்களின் நினைவுகளிலும் அனுபவங்களிலும் புனிதமானவை!

இரத்த நாளங்களில் பாயும் நம்முடைய இரத்தம் போன்றதுதான் மரங்களினூடே சென்று மரங்களுக்கு உணவளிக்கும் இளஞ்செடிச் சாறுகள் என்பதனை நாங்கள் அறிவோம்! நாங்கள் இந்தப் பூமியின் ஓர் அங்கம்! எங்களில் ஒரு பகுதி பூமி! மணம் வீசும் மலர்கள் எங்களின் சகோதரிகள்! கரடி, மான், பெருமைமிகு கழுகு ஆகிய இவையனைத்தும் எங்கள் சகோதரர்கள்! பாறைகளால் ஆன மலையுச்சிகள், பச்சைப் புல்வெளி யின் இலைச்சாறுகள், போனி (என்னும் சிறுகுதிரையின்) யின் வெப்பமான உடல், இவர்களுடன் மனிதர்கள் என அனைத்தும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவையே!

ஆறுகளிலும் ஓடைகளிலும் ஒளிவீசிப் பாயும் தண்ணீர் வெறும் தண்ணீரல்ல! எங்கள் முன்னோர் களின் இரத்தம். எங்கள் நிலத்தை நாங்கள் விற்றால் அந்த நிலம் எங்களுக்குப் புனிதமானது என்பதனை நீங்கள் உணரவேண்டும். ஏரிகளில் இருந்து பேரிரைச் சலோடு வெளிப்படும் தெளிந்த நீர் எங்கள் மக்களின் வாழ்வில் நிகழ்ந்த பல்வேறு செயல்களையும் அதன் நினைவுகளையும் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கின்றன.

என்னுடைய பாட்டனாரின் குரலை இந்தத் தண்ணீர் முணுமுணுத்துக் கொண்டே இருக்கின்றது. ஆறுகள் எங்களின் சகோதரர்கள்! எங்களின் தாகத்தை அவை தணிக்கின்றன. எங்களின் சிறு பரிசில்களை அவை சுமந்து செல்கின்றன. எங்கள் குழந்தைகளுக்கு அவை உணவளிக்கின்றன. அதனால், ஒரு சகோத ரனிடம் செலுத்தும் அதே அன்பை இந்த ஆற்றினிடமும் நீங்கள் செலுத்த வேண்டும்.

நாங்கள் இந்த நிலத்தை உங்களுக்கு விற்பது என்றால் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டியது ஒன்றுண்டு. இந்தக் காற்று எங்களின் அரிய செல்வம். இவ்வுலகில் உள்ள எல்லா உயிரினங்களைத் தாங்கி நிற்கும் காற்று அவ்வுயிரினங்களின் உணர்வுகளில் கலந்திருக்கிறது. என்னுடைய பாட்டன் குழந்தையாய்ப் பிறந்த போது அவருக்கு முதல் மூச்சை அளித்து உயிர்ப்பித்த அதே காற்றுதான் அவருடைய இறுதி மூச்சையும் எடுத்துக் கொண்டிருக்கிறது.

இக்காற்று தான் எங்கள் குழந்தைகளின் உயிர்மூச்சைத் தாங்கி நிற்கிறது. எனவே, உங்களுக்கு எங்கள் நிலங்களை நாங்கள் விற்பது என்றால் அந்த நிலங்களை நீங்கள் உங்களிடமிருந்து பிரித்துத் தனியாகவும் புனிதமான தாகவும் வைத்திருக்க வேண்டும். பசுமையான புல் வெளிகளில் பூத்த பூக்களின் வாசத்தால் இனிமையான இக்காற்றினை மனிதர்கள் சென்று உரணக்கூடியதாக அந்த இடம் இருக்க வேண்டும்.

இந்தப் பூமி நம்முடைய தாய் என்று நாங்கள் எங்கள் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுத்ததுபோல், உங்கள் குழந்தைகளுக்கும் நீங்கள் கற்றுத் தருவீர்களா? பூமியின் மீது ஏற்படுத்தும் அழிவு அப்பூமித் தாயின் மைந்தர்களின் மீது ஏற்படுத்தும் அழிவு எனக் கற்றுத் தருவீர்களா? நாங்கள் இதனை அறிவோம். இப்பூமி மனிதர்களுக்குச் சொந்தமானதன்று. மாறாக மனிதர்கள்தாம் பூமிக்குச் சொந்தமானவர்கள்.

இரத்தம் எவ்வாறு மனிதர்களை ஒன்றிணைக்கிறதோ, அதே போன்று உலகிலுள்ள எல்லாப் பொருள்களும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டிருக்கின்றன. வாழ்க்கை வலை யினை மனிதர்கள் நெய்வதில்லை. அவர்கள் அந்த வலையில் உள்ள இழையைப் போன்றவர்கள். அந்த வலைகளுக்கு இழையாக உள்ள மனிதன் ஏதாவது செய்தால், அது அவன் தனக்குத்தானே ஏதோ செய்து கொள்வதைப் போன்றது.

ஒன்றுமட்டும் நாங்கள் அறிவோம். எங்களின் கடவுள்தான் உங்களின் கடவுளும்! இப்பூமி அவரின் மிகச்சிறந்த பொக்கிஷம். இப்பூமிக்கு ஏற்படுத்தும் கேடு அப்பூமியைத் தோற்றுவித்தவரின்மீது கொட்டும் பெறுப் பாகும். உங்களின் முடிவான இலக்கு என்ன என்பது எங்களுக்குப் புதிராகவே உள்ளது. உலகில் உள்ள எல்லா எருமை மாடுகளும் வெட்டப்பட்டுவிட்டால் அதன்பின் என்ன நடக்கும்? எல்லாக் காட்டுக் குதிரைகளும் அடக்கப்பட்டு வீட்டு விலங்குகளானால் என்ன நேரிடும்?.

காட்டின் இரகசிய இருண்ட பகுதிகள் அனைத்தும் மனித வாடையால் நிரப்பப்பட்டு விட்டால் அதன் விளைவுகள் என்னவாகும்? முதிர்ந்த பழமை யான மலைக்குன்றுகள் எல்லாம் பேசும் மின்கம்பிகளால் இணைக்கப்பட்டுவிட்டால் என்ன நடக்கும்? மரம், செடி, புதர்கள் என்னவாகும்? அவை இல்லாமல் போய்விடும். கழுகுகள் எல்லாம் காணாமல் போய் விடும். துள்ளிக்குதிக்கும் சிறு குதிரையை எங்கு தேடி, எப்படி விடை கொடுப்பீர்கள்? வாழ்தல் என்பது அத்துடன் முற்றுப்பெற்றுவிடும். அதன்பின் வாழ்வதற்கான போராட்டத்தைத் துவங்க வேண்டியிருக்கும்.

கடைசிச் செவ்விந்தியன் காலவெள்ளத்தில் கரைந்து போனபின், அவனுடைய நினைவுகள் சமவெளிகளில் பரவும் மேகங்களைப் போல நிழல்களாக மறைந்து போனபின், இந்தக் கடற்கரைகளும் காடுகளும் இதே நிலையிலேயே இங்கேயே இருக்குமா? இல்லாமல் போய்விட்ட எம்மக்களின் உணர்வுகள் இங்கு உணரப் படுமா?

புதிதாகப் பிறந்த குழந்தை எப்படி தாயின் இதயத் துடிப்பை நேசிக்குமோ அப்படி நாங்கள் இந்த மண்ணை நேசிக்கிறோம். எங்கள் நிலங்களை உங்களுக்கு விற்றால் நாங்கள் எப்படி இந்த நிலங்களை நேசித்தோமோ அதேபோல நீங்களும் நேசியுங்கள்.

***

“நிலம் எங்கள் தாய்” என்று தமிழகமெங்கும் வீறுகொண்டெழுந்து, வேளாண் பெருமக்கள் நிலத்தைக் காப்பதற்காகவும் வேளாண்மையைப் பாதுகாப்பதற்காகவும் வீரம் செறிந்த போராட்டங்களை நடத்திவரும் இன்றைய சூழல் மிக முக்கியமான வரலாற்று நிகழ் வாக மாறிக் கொண்டிருக்கிறது.

இந்தியாவின் ஆன்மா “கிராமங்களில்தான் வாழ்கிறது” என்று கூறிக்கொண்டே இன்றைய ஆட்சியாளர்கள் கிராமங்களைச் சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள். வளர்ச்சியின் பெயரால் ஏழைகளின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்படுகின்றன.

விளை நிலங்கள், அவற்றிற்கான நீர்நிலைகள் வற்றி உலர வைக்கப்பட்டு எண்ணெய் வயல்களாக மாற்றுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பன்னாட்டு நிறுவனங்கள் இந்நாட்டுக் கார்ப்பரேட்டுகள் நிலங்களை விழுங்கக் காத்திருக்கின்றனர்.

நெடுவாசல், கதிராமங்கலம் மக்களில் துவங்கி எட்டுவழிச் சாலைக்கெதிரான போராட்டங்களை முன்னின்று நடத்தும் உழைக்கும் வேளாண் பெருங்குடி மக்களுடன் இணைந்து செயலாற்ற வேண்டிய கடப்பாடு அனைத்துப் பிரிவினருக்கும் உள்ளது.

இன்றைய சூழலில் நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் அன்றைய அமெரிக்க அரசாங்கத்தை எதிர்த்துச் செவ்விந்தியப் பழங்குடியினத் தலைவர்களில் ஒருவரான சியாட்டில் எழுதிய ‘திறந்த மடல்’ எவ்வளவு பொருத்தமாக விளங்குகிறது என்பது வியப்பாக உள்ளது.

இயற்கை வளங்களை, நீர் ஆதாரங்களை, வேளாண் தொழிலை, பூர்வக்குடியினரின் உரிமைகளை நசுக்கும் முயற்சிகளை இயல்பாக எதிர்கொண்டு உலக சமத்துவம், சகோதரத்துவம் முன்னிறுத்தும் சியாட்டிலின் திறந்த வெளி மடல், தங்கள் நிலத்தை, நீரை, வாழ்வாதாரங்களை இழந்து விடக்கூடாது என்று போராடுவோர்களின் உந்துசக்தியாக இன்றும் திகழ்கிறது. 1852-இல் எழுதியதாகக் கூறப்படும் இக்கடித்தில் எழுப்பிய பிரச்சினைகள் இன்றளவும் தீர்க்கப்படவில்லை என்பது மட்டுமல்ல, முன்னிலும் வேகமாக அவ்வளங்கள் சூறையாடப் படுகின்றன என்பது வெளிப்படையான உண்மை.

சியாட்டிலின் அக்கடிதத்தை “எங்கள் காற்று, எங்கள் நீர், எங்கள் நிலம்” என்ற தலைப்பில் மொழிபெயர்த்து அனைவரின் பார்வைக்கும் வைத்துள்ளேன்.

கொரோனாப் பேரிடரை இத்துடன் பொருத்திப் பார்க்க வேண்டும்.

- சா. குப்பன்