acacia tree

ஜல்லிக்கட்டு நடத்தி நாட்டுப் பசுக்களை காப்பாற்றிய தன்னார்வலர்கள், தமிழரின் மரபுசார் விளையாட்டில் கலந்துகொண்டு ஆங்காங்கே இறந்துகிடக்கும் இளைஞர்களின் பிணத்தை எந்த சலனமும் இல்லாமல் தாண்டிச் சென்று, இன்று சீமைக்கருவேல மரத்தைப் பிடித்து ஆட்டிக் கொண்டுள்ளனர்.

சீமைக்கருவேல் தண்ணீரை ஏகத்துக்கும் உறிஞ்சி வறட்சியை உண்டாக்குகிறது என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அந்த அளவுக்கு அதை அகற்றும் பணியில் நடைமுறை சிக்கல்கள் குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல் நடைபெற்று வரும் கூத்துகள்.

நீதிமன்றம் உத்தரவிட்டால்தான் தமிழகத்தில் எதுவுமே நடக்கும் என்ற ஒரு புதிய வகையான மக்களாட்சி முறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றாலும், அந்தந்த துறைசார் வல்லுனர்கள், அதிகாரிகள் என்ற இனம் அருகி தன்னார்வலர்களே மருத்துவர்களாக, நீரியல் நிபுணர்களாக, மண்வள வல்லுநர்களாகி விட்டனர்.

இன்றைய தேதியில் தமிழகத்தின் முக்கால்வாசி காட்டன் சைஸிங் ஆலைகள், செங்கல் சூளைகள், அரிசி ஆலைகள், சின்னச்சின்ன தொழில் நிறுவனங்களின் பாய்லர்கள், கரியில் எரியும் தேநீர் அடுப்புகள், இஸ்திரி கடைகள் அனைத்துக்கும் இருக்கும் ஒரே எரிபொருள் சீமைக்கருவேல் மரம்தான். ஒரு கிலோ மூன்று முதல் நாலரை ரூபாய் மட்டுமே என்பதோடு மிகக்குறைந்த காற்று மாசுவை ஏற்படுத்தக்கூடிய எரிபொருள்.

இந்த விலை குறைவான firewood-க்கு மாற்று இல்லாததால் தமிழகத்தின் பல தொழில்கள் மிகப்பெரிய சரிவை சந்திக்கும். அதில் கடுமையாக பாதிக்கப்படப் போவது துணி சைஸிங் தொழிலாகத்தான் இருக்கும். அரிசி ஆலைகளுக்காவது நெல் உமி உண்டு. மின்சாரத்தை நெருப்புக்கு மாற்றாகப் பயன்படுத்த த.நா.மி.வா இருக்கும் நிலையில் தமிழகத்தில் இன்னும் இருபது ஆண்டுகளுக்கு வாய்ப்பேயில்லை என்று தோன்றுகிறது.

ஆயில் மார்க்கெட்டிங் கம்பெனிகளிடம் மிகப்பெரிய அளவில் தேங்கியுள்ள Fuel oil எனப்படும் Furnace oil பெரும் மானியத்துடன் சந்தையில் இறக்கிவிடப்பட்டபோதிலும் சீண்டுவாரில்லாமல் கிடக்கிறது. இருக்கும் எரிபொருள்களிலேயே அதிகபட்ச (கிட்டத்தட்ட 4%) கந்தகத்தை மாசாக வெளியிடக்கூடியது. 25 டிகிரிக்கு குறைவான வெப்பநிலையில் உறைந்துவிடும் என்பதால் குளிர்காலத்தில் தொட்டியிலிருந்து உறிஞ்சுவதற்கு மின்சார வெப்பமூட்டி வேண்டுமென்பதால்தான் பெரிய பெரிய தொழிற்சாலைகள் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியைப் பயன்படுத்தி வருகின்றன. டெல்லியில் 2000 சிசி-க்கும் அதிக சக்தியுடைய டீசல் மகிழ்வுந்துகளைத் தடை செய்த பின்னரும் காற்று மாசு குறையாமல் இருப்பதன் காரணம் தெரியவில்லை; பக்கத்து மாவட்டங்களில் வைக்கோல் எரிக்கப்படுவதுதான் காரணம் என்று முட்டு கொடுக்கப்பட்டபோது தலைநகரத்தில் எத்தனை ஆலைகளில் நாள்தோறும் எத்தனை ஆயிரம் லிட்டர் ஃபர்னேஸ் ஆயில் எரிக்கப்படுகிறது, அதன் மானிய விழுக்காடு குறித்த தகவல்களை CSE-யின் சுனிதா நாராயண் வெளியிட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தியா போன்ற வளரும் நாடுகளின் மாற்று எரிபொருள் தேவைகள் குறித்து பல மேலைநாட்டு தொழில் வர்த்தக சபைகள் அக்கறை காட்டி பேசிவரும் சூழலில் பெட்ரோலிய சுத்திகரிப்பின்போது ஃபர்னேஸ் ஆயிலுக்கு கொஞ்சம் மேலே நிற்கும் பெட் கோக் எனப்படும் petroleum coke-இன் அமெரிக்காவுக்கான இந்திய இறக்குமதி குறித்து சுனிதா நாராயண் ஆரம்பித்து வைத்திருக்கும் சர்ச்சைகள் முக்கியத்துவம் பெறுகிறது. சில நேரங்களில் CSE-யின் உட்டாலக்கடி டேட்டாக்கள் வாட்சப்பில் வருவதைவிட பயங்கர அபாயகரமானது என்பதையும் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். அப்படியெனில் தமிழகத்தின் மலிவான விறகு எரிபொருளை திட்டமிட்டு அழித்து மிக அதிக மாசைப் பரப்பும் ஃபர்னேஸ் ஆயிலை விற்க அமெரிக்க இலுமினாட்டிகள் செய்யும் சதியா என்ற சாதாரண வாட்சப் வாசகனின் கேள்விக்கு இப்போது என்னிடம் பதிலில்லை.

சரி, தமிழகத்தில் சீமைக்கருவேல் அனைத்தும் வேரோடு பிடுங்கி எரியப்பட்டுவிட்டதாக வைத்துக்கொள்வோம். அதன் உடனடி விளைவு வரும் மழைக்காலத்தில் என்னவாக இருக்கும்? வேரும், மரமும் விறகுக்காக எடுத்துச் செல்லப்பட்டபின் அதன் நுனிக்கிளைகள் அனைத்தும் அப்படியேதான் வீசப்பட்டிருக்கின்றன.

acacia tree 1

ஓர் உயிர்சூழலில் ஒரு மரத்தினை முற்றிலுமாக அகற்றும்போது அடுத்த வலுவான தாவர இனம் அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொள்ளும் என்பது இயல்பு. ஆனால் கோடை ஆரம்பிக்கும் தருவாயில் அவற்றை அப்புறப்படுத்துகையில் கோடை முடிந்து அடுத்த மழை வரும்வரை அந்த இடம் கட்டாந்தரையாகவே கிடக்கும் என்பது தன்னார்வலர்களுக்கும் தெரியும். கன மழை வரும்போது மாற்று மரங்களோ, செடிகொடிகளோ இல்லாத நிலையில் ஏற்படப்போகும் கடுமையான மண் அரிப்பு, அதனால் மேல் மண்ணில் ஏற்படும் சத்துக்கள் இழப்பு, வெட்டி வீசப்பட்ட நுனிக்கிளைகள் நீர்வழிப்பாதைகளில் சென்று வாய்க்கால்களை, மதகுகளை அடைத்து அதனால் உண்டாகப் போகும் கரை உடைப்புகள், அதன் மேற்படி சேதம் எல்லாம் மனித திட்டமிடலில் உள்ள தவறால் நிகழக்கூடியவை.

நம் முன்னோர்கள் குளங்களை கோடையில் குடிமராமத்து செய்து அந்தந்த ஊர் மக்களே பாதுகாத்தனர் என்ற தகவலை வாட்சப் மூலம் அறிந்துகொண்ட தன்னார்வத் தமிழர்கள் குளங்களைப் பாதுகாக்க ஜேசிபி-யை வாடகைக்கு எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டனர். புற்கள், புதர்கள், செடிகொடிகள், சிறு மரங்கள், பெரிய மரங்கள், காய்ந்த சருகுகள் என அனைத்தும் சேர்ந்துதான் உயிர்ச்சூழல். ஏரி, குளம் என்றாலே அபார்ட்மென்ட்வாழ் தமிழர்கள் பொச்சு கழுவ ஊருக்கு நடுவில் தண்ணீரைத் தேக்கிவைக்கும் பெரிய மண்ணாலான தொட்டி என்ற புரிதலோடு ஜேசிபி-யுடன் நின்று போஸ் கொடுக்கும் குரூர மனங்கொண்ட சகமனிதர்களுடன் வாழப் பழகிவிட்டிருக்கிறோம். கடும் மழைக்காலத்தையும், கோடை காலத்தையும் தாங்கித்தான் தேரை, நத்தை முதல் யானைவரை வாழ்கின்றன. ஒரு நிலத்தை அறுத்து எடு்த்துவிட்டு எதை பாதுகாக்கப் போகிறோம் என்ற குற்ற உணர்வே இல்லாமல் வாழ வேண்டியிருக்கிறது. பலவருட வண்டலை, குளங்களில் முற்றிலும் மண்தெரிய ஒரே ஆண்டில் தோண்டுவதுதான் தூர்வாருதல் என்றால் களைக்கொல்லிகளைத் தெளித்துவிட்டு இரண்டு வாரங்கள் கழித்து தீ வைத்துவிடலாம. இரண்டும் ஒரேமாதிரியான விளைவுகளைத்தான் உண்டாக்கும் என்றாலும் பின்னது மிகவும் செலவு குறைவான ஒன்று. உயிரிச்சூழலாவது, வெங்காயமாவது.

திராவிட ஆட்சிகள்தான் தமிழகத்தின் இயற்கை வளங்களை சூறையாடிவிட்டன என்று இராஜஸ்தான் மார்பில்ஸ் பதிக்கப்பட்ட கக்கூஸில் அமர்ந்துகொண்டு பலர் தொடர்ந்து பதிவு எழுதி ஒருவகையான மனப்பிறழ்வுக்கு ஆளாகி வருவதையும் குறிப்பிட்டாக வேண்டும். திராவிடக் கட்சிகள் இல்லாத மாநிலங்களில் மார்பில்ஸ் என்பது ஜீரோ பட்ஜெட் விவசாயத்தில் மரத்தில் காய்க்கிறது, டைல்ஸ் எல்லாம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் நாட்டுக் கோமாதாவின் பாலிலிருந்து நெய் எடுப்பதுபோல லேசாக ஆப்பையை விட்டு கிளறி எடுக்கப்படுகிறது என்று எண்ணுகிறார்கள் போலும்...!

- ஆர்.எஸ்.பிரபு

Pin It