விவசாயத் தொழிற்றுறை எனும் போது, அது ஒரு பக்கத்தில் விவசாய உற்பத்திக்கு அடிப்படையான (உள்ளீடுகள், உழவு இயந்திரங்கள், களஞ்சியம் போன்றன) கைத்தொழில்களையும் மறுபக்கத்தில் விவசாய உற்பத்திகளை மூலப்பொருளாகக் கொண்ட கைத்தொழில்களையும் குறிக்கும். இவ் ஆய்வு விவசாய உற்பத்தியை மூலப்பொருளாக கொண்ட கைத்தொழில்கள் பற்றியே ஆராய்கிறது.

வடக்கு, கிழக்கு மாகாணத்தின் பொருளாதாரம் நீண்டகால பாரம்பரியம் மிக்க விவசாயத்தையே அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது. ஆயினும் ஒரு விவசாய தொழிற்றுறை நோக்கிய விரிவாக்கம் இங்கு குறிப்பிடும் படியாக அபிவிருத்தியுறவில்லை எனலாம். அதாவது, விவசாய உற்பத்தி மூலப்பொருளானது அதிக வருமானந்தரத்தக்க விவசாய அடிப்படையிலான கைத்தொழில் துறை நோக்கி இன்றுவரை சரியாகத் திசை திருப்பப்படவில்லை என்பதே இதன் கருத்தாகும். இலங்கையில் நூற்றாண்டிற்கு மேற்பட்ட வளர்ச்சியைக் கண்ட பெருந்தோட்ட விவசாயத்துறை கூட பண்ட உற்பத்திக்  கண்டத்திலிருந்து பதனிடுதல் கட்டத்திற்குக் கூட இங்கு முறையாக அபிவிருத்தி பெறவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.

இப்பிரதேசத்தில் அதிகம் பரந்துள்ள விவசாயக் கைத்தொழில் நெல்லரைக்கும் ஆலைத்தொழிலாகும். பாரம்பரியவகை ஆலை, ஓரளவு நவீனவகை ஆலை, நவீன வகை ஆலை என இவை கிராமம் தொட்டு நகரம் வரை பரந்துள்ளன. மொத்த நெல் ஆலைகளில் 80 வீதமானவை பாரம்பரிய ஆலைகளே. நெல்லை அரிசியாக மாற்றும் ஒரு சிறுபதனிடல் முயற்சியை மேற்கொள்ளும் இப்பாரம்பரிய ஆலைகள் அதிக தீமையையே விளைவிக்கின்றன. அவையாவன:

அரிசி அதிகளவுக்கு உடைக்கப்படுகின்றது.

அரிசியில் அசுத்தங்கள் காணப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

தவிடு சரியாக நீக்கப்படுவதில்லை.

பெருமளவு புழுங்கல் அரிசியை மட்டுமே இவை அரைக்கின்றன.

ஆலையை இயக்கும் வலு நுகர்வில் சிக்கனம் இல்லை.

நவீன வகை ஆலைகள் மேற்படி குறைகளை நிவர்த்திக்கவல்லன. எனவே இங்கு நெல்லரைக்கும் ஆலைகள் நவீனமயப்படுத்துதல் அவசியமாகும். தமிழர் பாரம்பரியப் பிரதேசமாகிய வடகீழ் மாகாணத்தில் நெல் 202977 கெக்டர் பரப்பில் (2007) விளைவிக்கப்படுகின்றது. இது இலங்கையின் மொத்த நெல்விளைபரப்பில் 24.8 வீதமாகும். (மொத்தம் 100 எனில் 68 வீதம் கிழக்கு மாகாணம் 32 வீதம் வடமாகாணம்) இதனால் நெல்லரைக்கும் ஆலைகளை எவ்வகையிலே விரைவாக நவீன மயப்படுத்தலாம் என்பது பற்றி நாம் அதிக கவனமெடுத்தல் வேண்டும்.

அரிசியை எவ்வாறு அதிகலாபம் தரும் கைத்தொழிலாக மாற்றலாம் என்பதற்கு “நெசில்ஸ்” உற்பத்திகளாக வரும் நெஸ்டம்; (Nestum) பாளின்;(Forline) ஆகிய குழந்தை உணவுப்பொருட்களே தகுந்த எடுத்துக்காட்டுகளாகும். மேற்படி உணவுப்பொருட்களில் இருகைப்பிடியளவான அரிசியோ, கோதுமையோ தான் மூலப்பொருளாக உள்ளது. அத்துடன் சில ஊட்டச்சத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால் அதனைப் பெறுவதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளது. இவ் அதிக மதிப்பை அப் பொருள் பெறுவதற்கு அது கைத்தொழில் மயப்படுத்தப்பட்டு பொதியிலடைக்கப்பட்டு சந்தைக்கு வருவதே காரணமாக அமைகின்றது. எனவே விவசாய உற்பத்திகளை கைத்தொழில் மயப்படுத்தும்போது நாம் அதிக வருமானம் பெறமுடியும்.

தெங்குத் தொழில் ஒப்பீட்டளவில் கைத்தொழில் மயமாக்கப்பட்டுள்ளதெனலாம். தேங்காய்த் துருவல், தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெய், சவர்க்காரம், மாஜரீன், வினாகிரி போன்ற உற்பத்திகளும், தும்புத் தொழில் பேன்ற தொழில் மயமாக்கப்பட்ட உற்பத்திகளும் தேசிய மட்டத்திலே ஓரளவு அபிவிருத்தியை எய்தியுள்ளன. ஆனால் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் இவை குறிப்பிடும்படியான அபிவிருத்தியை இன்னும் எட்டவில்லை. தெங்குத்தொழில் அபிவிருத்தியானது கிராம மட்டங்களிலே இடம்பெறுவதால் அதிக பயனை விளைவிக்கத்தக்கவை. முக்கியமாக கிராம மட்டத்தில் பலருக்கு வேலை வாய்ப்புகளை அளிக்க முடியும். தெங்கு உற்பத்தியினைத் தொழில் மயப்படுத்துவதோடு அதனை நவீனமுறைக் கைத்தொழில் உற்பத்திகளாக மாற்றுதலும் அவசியமாகும்.

இப்பிரதேசத்தில் உற்பத்தி செய்யத்தக்க இன்னோர் முக்கிய விவசாய அடிப்படையிலான தொழிற்றுறை சீனி உற்பத்தியாகும். கரும்பு, சில கிழங்கு வகைகள், பனை ஆகிய வளங்களிலிருந்து சீனி உற்பத்தி செய்யப்படலாம். இப்பிரதேசத்தில் காணப்படும் கந்தளாய், கல்லோயா கரும்புச்சீனி உற்பத்தியாலைகளை புனருத்தாரணம் செய்து உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. தேசிய மட்டத்தில் இறக்குமதியாகும் சீனியை இவ் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் குறைக்க முடியும். பொதுவாக வறண்ட வலயத்தில் கரும்புச் செய்கையினை நல்லமுறையில் மேற்கொள்ளக்கூடிய வசதிகள் உள்ளன. இப்பிரதேசங்களில் பாசன வசதிகள் அமைக்கப்பெற்றால் வருடம் முழுவதும் கரும்பு பயிரிடப்படலாம். அத்துடன் இப்பிரதேசத்தில் சீனி உற்பத்திக்கான பொருத்தமான கிழங்கு வகைகள் எவையென ஆராய்ந்து அறிந்து அவற்றினைப் பயிரிட்டு சீனி உற்பத்தியை அதிகரிக்க முடியும். மேலும் இப்பிரதேசத்தின் முக்கிய பாரம்பரிய வளமான பனை வளத்தைச் சீனி உற்பத்திக்கு பயன்படுத்துவோமாயின் அதிக வருமானமும் வேலை வாய்ப்பும் ஏற்படுமென கருதுகின்றனர்.

பனஞ்சீனி உற்பத்தியானது அதிக உற்பத்திச் செலவை வேண்டுகின்றது. முக்கியமாக எரிபொருட் செலவே அதிகமாக உள்ளது. சூரிய சக்தியை பயன்படுத்துவதன் மூலம் இச்செலவைக் குறைக்கமுடியுமாயின் உற்பத்திச் செலவு குறைத்து பனை வளத்திலிருந்து இலாபகரமான முறையில் சீனியை உற்பத்தி செய்தல் சாத்தியமே. சீனி உற்பத்தியுடன் இணைவாக மதுபான உற்பத்தியும் அதிகரிக்கப்படலாம், குறிப்பாக ஏற்றுமதிக்கேற்ற தரத்தில் சாராய உற்பத்தியை அதிகரிக்கலாம்;. பனைவள அபிவிருத்திச் சபை போன்ற அமைப்புகளும், சமூக நலன் விரும்பிகள் சிலரும் பனைவள உற்பத்திகளை அபிவிருத்தி செய்வதற்கு அண்மைக்காலங்களில் அதிக முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி கண்டு வருகின்றனர். பனைவளத்திலிருந்து பல வகையான அழகுப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. வளர்ந்து வரும் சுற்றுலா தொழில் வளரும் போது இவ்வாறான உற்பத்திகள் அதிக வருமானத்தை ஈட்டித் தருமென நம்பலாம்.

எமது பிரதேசத்தில் அதிகளவு அபிவிருத்தி வாய்ப்பைக் கொண்ட இன்னோர் தொழிற்றுறை விலங்கு வேளாண்மையாகும். வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் நல்ல முறையில் திட்டமிட்டு இவை மேற்கொள்ளப்படலாம். புல்லினங்களை வளர்த்து அதனை விலங்குகளுக்கு கொடுத்து பாலாக, இறைச்சியாகப் பெறுவதில் அதிக வருமானம் உண்டு. திணை வகைகளை கோழிகளுக்குக் கொடுத்து முட்டையாக, இறைச்சியாக நுகர்வதில் அதிக பயன் உண்டு. புல்லும் திணை வகைகளுமே மேற்படி உற்பத்திகளின் விவசாய மூலவளங்களாகும். ஆடு, எருமை,பன்றி,முயல், இறைச்சிக்கான மாடு போன்றனவும் நல்ல முறையிலே எமது பிரதேசங்களில் விரிவாக்கம் செய்யப்படலாம். கிராமம் ஒன்றில் மந்தை வளர்ப்பில் ஈடுபடும் ஒரு நவீன விவசாயி அதன்மூலம் பல நன்மைகளைப் பெறலாம். அவர் தனது வீட்டுத் தேவைக்கான உயிர் வாயுவை (Biogas) உற்பத்தி செய்யலாம். பயிர்களுக்கு உரம் பெறலாம், பால், இறைச்சி பெறலாம். இப்படி ஒன்றுடன் ஒன்று இணைவாக அபிவிருத்தியுறத்தக்க வகையில் ஒருங்கிணைக்கப்பட்ட கிராமப் பண்ணைத்திட்ட விருத்தியின் மூலம் அதிக பயன்பெற முடியும்.

இதற்கு சிறந்த உதாரணமாக மன்னார் வவுனியா போன்ற பிரதேசங்களில் அமைந்துள்ள தனி நபர் விவசாய பண்ணைகள் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். இவை ஒருங்கிணைக்கப்பட்ட விவசாய பண்ணைகளாக இயங்கிவருகின்றன. மேற்படி ஒருங்கிணைப்புப் பண்ணை அபிவிருத்தியானது பலருக்கு வழிகாட்ட வல்லது. விலங்கு வேளாண்மை எமது பிரதேசத்தில் இன்று வரை மிகவும் குறைந்த கவனிப்பையே பெற்றுள்ளது. இதனை ஒவ்வொரு கிராமமட்டத்திலும் அபிவிருத்தி செய்ய உழைத்தல் வேண்டும். வீட்டுக்கு ஒரு மாடு, சிறு கோழிப்பண்ணை, ஆடு என்பன வளர்க்க ஊக்கமளிக்கப்படுதல் வேண்டும்.  நல்ல தரமான இனங்களை அறிமுகம் செய்தல் வேண்டும். எமது கிராமங்களில் உள்ள வேலிகளை மதில்களாக மாற்றுவதை விடுத்து குழைதரக்கூடிய மரங்களை வேலிகளில் நாட்டி அதன்மூலம் விலங்கு வேளாண்மையை அதிகரிக்கச் செய்ய வேண்டும். ஒவ்வொரு கிராமங்களிலும் சுயநிறைவுப் பொருளாதார வளமுள்ள கிராமக் குடும்ப அலகுகளை ஏற்படுத்துவதற்கு இவை பெரிதும் உதவும்.

பால் உற்பத்தியை இன்னும் நவீன தொழிற்றுறை உற்பத்தியாக மாற்ற வேண்டுமாயின் அதனைப் புட்டிப்பால், பால்மா, பட்டர், சீஸ், ஜஸ்கிறீம், யோக்கட், போன்றனவாக மாற்றி உற்பத்தி செய்யலாம். இவை அதிக வருமானத்தை அளிக்கவல்ல உற்பத்திகளாகும். புல் வளர்ப்பில் இருந்து ஆரம்பமாகும் இத் தொழிற்றுறையின் விரிவாக்கமானது சந்தையின் விரிவுக்கேற்ப அதிக வருமானம் தரும் உற்பத்திகளாக வளர்ச்சி பெறத் தக்கவையாகும்.

வடகீழ் மாகாணத்திலே 6.1 வீத நிலப்பரப்பைக் கொண்டதும், அப்பிரதேச மொத்தக்குடித்தொகையில் 36 வீதத்தை உள்ளடக்கியதுமான யாழ்ப்பாணக்குடாநாட்டுப் பகுதியே தோட்டச் செய்கை நன்கு வளர்ச்சியடைந்துள்ள பகுதியாக அமைந்துள்ளது. இப்பகுதியில் இலங்கையில் வேறு எப்பாகத்திலும் இல்லாதவாறு செறிந்தமுறைப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. இங்குள்ளோர் நவீன விவசாயிகள் என கூறத்தக்கவர்கள். யாழ்ப்பாணக்குடாநாட்டு விவசாயிகளைப்போல் நாட்டின் வேறு எங்கும் மிக விரைவாக நவீன அம்சங்களை பின்பற்றும் விவசாயிகளைக் காண்பதரிது. பாரம்பரிய முறையை உடனடியாக விட்டு நவீனமுறையை பின்பற்றக் கூடிய மனப்பாங்கு இங்குள்ள பெரும்பாலான விவசாயிகளிடம் காணப்படுகின்றது. இதனால் நவீனத்துவ முறைகள் இங்கு புகுத்துதல் எளிதாகும்.

யாழ்ப்பாணக் குடாநாட்டிலே உள்ள தோட்டங்களில் புகையிலை, மிளகாய், வெங்காயம், உருளைக்கிழங்கு, காய்கறிகள், பழங்கள், திணை வகைகள் என்பன பெருமளவில் விளைவிக்கப்படுகின்றன. இலங்கையின் உப உணவு உற்பத்தியில் கணிசமான பங்கினை யாழ் குடாநாட்டு விவசாயிகளே உற்பத்தி செய்கின்றனர். எடுத்துக்காட்டாக இலங்கையில் வெங்காயச் செய்கைக்கு உட்பட்ட பரப்பளவில் 38 வீதமும், மிளகாய்ச் செய்கைப் பரப்பளவில் 15 வீதமும் யாழ் குடாநாட்டிற்குள் அடங்குகின்றது. எனவே இவ் உற்பத்திகளை விவசாய அடிப்படையிலான கைத்தொழில் உற்பத்திகளாக விரிவாக்கம் செய்வது பற்றி நன்கு சிந்தித்து திட்டமிடதல் இம் மண்ணை நேசிக்கும் அனைவரினதும் கடமையாகும். எடுத்துக்காட்டாக புகையிலை மூலவளத்தைக் கொண்டு சுருட்டுக் கைத்தொழில் விரிவாக்கத்துடன் மாத்திரம் நின்றுவிடாது, அதனை நவீன முறையிலே சிகரெட் உற்பத்தியாக மாற்றி ஏற்றுமதி செய்ய முடியும். இதற்கான நவீன இயந்திரங்களைத் தருவித்து, சிகரெட், புகையிலை உற்பத்தியையும் ஊக்குவித்து விவசாய தொழிற்றுறை விரிவாக்கம் செய்யப்படலாம்.

இப் பிரதேச விவசாய உற்பத்தியில் குறிப்பாக யாழ்குடாநாட்டு உற்பத்தியில் உணவு பதனிடுதல் தொழிற்றுறை நல்ல பயனை நல்குமெனலாம். இவற்றில் முக்கியமாக பழங்கள் காய்கறிகளை பதனிடல், தகரத்திலடைத்தல், பொதிசெய்தல்; என்பனவற்றின் விரிவாக்கம் பற்றி அதிகம் சிந்திக்கலாம். சில பருவ காலங்களிலேயே சில பழங்களும், காய்கறிகளும் அதிகம் விளைகின்றன. அக்காலத்தில் இவற்றின் உற்பத்திகள் அதிக நிரம்பலை ஏற்படுத்துகின்றன. இதனால் அவற்றின் கேள்வி குறைந்து பழங்கள், காய்கறிகள் பெருமளவு பழுதடையும் நிலையும் தோன்றுகின்றது. எனவே பழங்களையும் காய்கறிகளையும் பாதுகாப்பாக வைப்பதற்கும், நீண்ட நாட்களுக்கு இன்னோர் வழியில் காப்புச்செய்து வைத்து பயன்படுத்துவதற்கும் சிறப்பான சில தொழில்நுட்ப உத்திகள் பயன்படுத்தப்படலாம். அவற்றுள் சில பின்வருமாறு.

01. பாதுகாப்பாக நீண்டகாலம் வைத்திருக்கக் கூடிய களஞ்சியங்களை உருவாக்குதல்.   (மெழுகு பூசுதல் போன்ற நுட்பங்கள் மூலம் பாதுகாப்பளித்தல்)

02. உறையச் செய்வது அல்லது இரசாயனப் பாதுகாப்புச் செய்வது.(உ- ம்: பழங்கள், பழச்சாறு, பழக்கூழ் வடிவிலோ, பல்வேறு வகைப் பழம் பானங்களாக உருமாற்றியோ பாதுகாக்கலாம்)

03. ஊறவைக்கும் பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்துதல்.(ஊறுகாய்)

04. உலர்த்துவதன் மூலம் பாதுகாத்தல்.(வற்றல் போடுதல்)

மேற்படி பாதுகாப்புமுறைத் தொழில்நுட்பங்கள் பல்வேறு நாடுகளில் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளன. அவற்றினைப் பின்பற்றி எமது பிரதேசத்திற்கு ஏற்றதான பொருத்தமான தொழில்நுட்ப முறைகளைப் பின்பற்றி உணவுபதனிடுதல் தொழிற்றுறையை விரிவாக்குதல் வேண்டும். எமது பிரதேசத்தில் பேணிப்பாதுகாத்து சந்தைப்படுத்தக்கூடிய பழங்களென மாம்பழம்,பலாப்பழம், தக்காளி, பப்பாசி, எலுமிச்சை, தோடை, முந்திரிகை, விளாம்பழம், வாழைப்பழம், அன்னாசி, பனம்பழம் என்பனவற்றை குறிப்பிடலாம். இவற்றை எவ்வழிகளில் பாதுகாத்தல் லாபகரமானது என்பதற்கு ஆய்வுகள் அவசியம். ஒவ்வொரு பழவகையின் பாதுகாப்புப் பற்றியும் தனித்தனி ஆய்வுகள் நிகழ்த்தப்படவேண்டும். பாதுகாத்து பயன்படுத்துவது லாபம் தரத்தக்கது என்பதை நிச்சயித்த பின்னரே இம் முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

பழச்சாற்றினை அடிப்படையாகக் கொண்ட விவசாயத்தொழிற்றுறை உற்பத்திகளில் பானங்கள், தகரத்தில் அடைக்கப்பட்ட பழச்சாறுகள், நெக்டர் போன்றன உடனடியாகப் புருகத்தக்கவையாகும். பழக்கூழினை அடிப்படையாகக் கொண்டவற்றில் ஜாம், ஜெலி, சட்னி, பழக்குழம்பு என்பனவும் முழுதாக அல்லது வெட்டப்பட்ட பழங்களை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திகளில் தகரத்தில் அடைக்கப்பட்ட பழவகைககள், ஊறுகாய் வகைகள் என்பனவும் அடங்கும். எமது பிரதேசத்திலுள்ள பல கிராமங்களிலே சில பருவங்களின் போது பழங்கள், காய்கறிகள் பெருமளவில் உற்பத்தியாகின்றன. தேவைக்கதிகமான இப்பருவகால உற்பத்திகளின் பெரும் பங்கின வீணடிக்கப்படுகின்றன. பருவகாலமற்ற காலங்களில் இவை அருமையாகவுள்ளதால் அதிக விலையாக உள்ளன. எனவே மேற்படி உற்பத்திகளின் நிரம்பலை ஒழுங்குபடுத்துவதற்கு, பாதுகாப்பு முறைகளை பயன்படுத்துவது இன்றியமையாததாகும். இதற்குப் பொருத்தமான, மலிவான பாதுகாப்புத் தொழில்நுட்ப முறைகளை விருத்தி செய்தல் அவசியம். இதற்கான பல ஆய்வுகளும், செய்திட்டங்களும் விரைவில் மேற்கொள்ளப்படுதல் நற்பலனை விளைவிக்கும் எனலாம்.

பொதுவாக எமது பிரதேச விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் அதே நேரத்தில், அவ் உற்பத்திகளை அதிக வருமானம் தரத்தக்கவையாக நவீனத்துவம் கொண்டவையாக மாற்றுவதற்கு விவசாய தொழிற்றுறை விரிவாக்கம் பற்றி நாம் அதிகம் சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம். ஒரு நாடோ ஒரு பிரதேசமோ ஒரு கிராமமோ அபிவிருத்தியுறுவதற்கு மேற்படி அபிவிருத்திக்குரிய வழிமுறை சுருக்கமான தந்திரோபமாயமாகும். ஒரு விவசாய உற்பத்தியை சில செயன்முறைக்கு உட்படுத்தி வேறோர் உற்பத்தியாக அல்லது பலவாக மாற்றுதல், அவ் உற்பத்திகளை இன்னமும் சில செயன்முறைக்கு உட்படுத்தி இன்னும் பலவாக மாற்றுதல் போன்ற தொழில்நுட்ப நடவடிக்கைகளே விவசாயத் தொழிற்றுறை விரிவாக்கத்தின் பரிணாமமாகும். இதன் விளைவாக அதிக வருமானம் லாபம் கிடைப்பதோடு வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும். எனவே விவசாயப் பொருளாதார அடிப்படையை கொண்ட நம் பிரதேசமும் நாடும் எம் போன்ற நாடுகளும் விருத்தியுற மேற்படி அபிவிருத்தித் திறமுறையின்பால் அதிக அக்கறையும், ஆர்வமும் காட்டவேண்டும்.

- பேராசிரியர் இரா.சிவசந்திரன் (புவியியற் பேராசிரியர்)

Pin It