அணுவைக்கூட செயலிழக்க வைத்துவிடலாம். ஆனால் அணுக் கழிவுகளை கையாள்வதற்கான தொழில்நுட்பம் உலகத்தின் எந்த நாட்டிலும் கிடையாது. ஆனால் இந்திய அரசு அமெரிக்கா, பிரான்சு, ஜப்பான் ஆகிய நாடுகளுக்குச் சென்று ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு, எந்தெந்த தொழில்நுட்பங்களை உலக நாடுகளில் சோதனை செய்யவில்லையோ அந்த அணு உலைகளை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான வேலைகளில் இறங்கியுள்ளது.
2000 வருடங்களாக மனிதர்களுக்குள், நாடுகளுக்குள் ஏன் போர் வருகிறது என்றால் அடிப்படையில் அவை எல்லாமே வளங்களுக்கான போர்தான். பெட்ரோலியப் பொருட்களின் தேவைக்காகத்தான் அமெரிக்கா ஈராக் மீது குண்டு வீசியது. கர்நாடகாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் தண்ணீருக்கானப் பிரச்சினை. இந்தியாவுக்கும், வங்க தேசத்துக்கும் கங்கை நதியில் பிரச்சினை. ஆக பல்லாயிரக்கணக்கான வருடங்களாக மக்களுக்கு வளங்கள்தான் சண்டைக்கான காரணமாகவுள்ளது. அது பெட்ரோல், தண்ணீர், தாதுக்கள் என்று எந்த வளமாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதேபோல, புவிசார் அரசியலும் சண்டைக் குரிய காரணியாக மாறும். அதுதான் ஈழத்தில் நடந்தது. அங்கே தமிழர்களின் பகுதியில் திரிகோணமலையில் இருக்கிற வளங்களை சுரண்டத்தான் உலக நாடுகள் மிகப் பெரிய தாக்குதலை நடத்தி தமிழர்களை அழித்தார்கள். இது புவிசார் அரசியல்.
1990, 1991ஆம் ஆண்டுகளில் இந்தியா LPGயை (Liberalized, Privatized, Globalized - தாராளமயம், தனியார்மயம், உலகமயம்) ஏற்றுக் கொள்ளத் தயாரானது. அவர்கள் வெளிநாட் டிலிருந்து தொழில் செய்ய மட்டும்தான் இங்கு வந்தார்கள் என்று கருதக்கூடாது. தமிழ் நாட்டிலும் நிறைய தொழில் முனைவோர்கள் இருந்தார்கள். ஆனால் அவர்கள் எல்லாம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல், அவர்களின் மூலதனத்திற்கு இணையாக மூலதனம் செய்ய இயலாமல் தொழிலை விட்டு வெளியேறினார்கள். நிறுவனங்களை விற்று விட்டார்கள். இன்று நாம் குடிக்கிற தண்ணீர் பாட்டிலிலிருந்து, பார்க்கிற தொலைக்காட்சி வரையிலும் பன்னாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களாகி விட்டன.
இவர்கள் பொருட்களை உற்பத்தி செய்து, விற்கக்கூடிய சந்தையாக மட்டுமே தமிழ் நாட்டைப் பார்க்கவில்லை. சமீபத்தில் நடந்த ஒரு மிகப்பெரிய போராட்டம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானப் போராட்டம். அந்த ஆலைக்குத் தேவையான முக்கிய ஆதாரம் தாமிர தாதுக்கள். இதை ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்கிறார்கள். அங்கிருந்து இறக்குமதி செய்து இங்கே எடுத்து வந்து தயாரிப்பது அதிக லாபம் தரும் தொழில் முறை கிடையாது. இங்கே நெய்வேலியில் நிலக்கரி எடுத்து சுரங்கத்திற்கு அருகிலேயே மின்சாரம் தயாரிக்கிறார்கள். இதுதான் எளிமையான வழி. இதை பிட் ஹெட் (PIT-Head) என்று சொல்லு வார்கள். இதுதான் உலகம் முழுவதும் பின்பற்றும் வழக்கமான முறையாக உள்ளது.
ஆனால் ஆஸ்திரேலியாவில் தாமிரம் எடுத்து வந்து தூத்துக்குடியில் உருக்காலை அமைக்கக் காரணம், இந்த ஆலையை அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். அவர்கள் நிலம், நீர், காற்று முக்கியம் என்று கருதுகிறார்கள். இந்த ஆலையை முதலில் அமைக்கத் திட்டமிட்டது அல்போன்சா மாம்பழங்கள் அதிகளவில் உற்பத்தியாகும் மகாராஷ்டிரா மாநிலத்தின் ரத்தினகிரியில்தான். இந்த மாம்பழங்கள் அதிகமாக ஏற்றுமதிதான் செய்யப்படுகிறது. இதனால் ஆலை அமைந்தால் மாம்பழங்கள் அனுப்ப வேண்டாம் என ஐரோப்பியர்கள் கூறியதையடுத்து உள்ளூர் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர். கையில் கடப்பாரைகளுடன் சென்று ஒரு வருடமாகக் கட்டப்பட்டுக்கொண்டிருந்த ஆலையை இடித்தனர். இதையடுத்து சரத் பவார் தலைமை யிலான அம்மாநில அரசு அங்கு ஸ்டெர்லைட் ஆலை அமைக்கும் திட்டத்தை கைவிட்டது.
அதற்குப் பிறகு அன்றைய ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடிக்கு கொண்டு வந்தது. தமிழ்நாட்டிலும் ஆலைக்கு எதிராக அன்றைக்கே தாமிரம் கொண்டுவரப்பட்ட கப்பல்களை முற்றுகையிட்டு மீனவ மக்கள் போராட்டம் நடத்தினார்கள். மகாராஷ்டிரா வில் போராட்டம் நடந்தபோது, இடித்தபோது யாரும் எதுவும் சொல்லவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் நடக்கும்போது மட்டும் தமிழ்நாட்டுக்கு இனிமேல் தொழிற்சாலைகளே வராது, போராட்ட பூமியாக தமிழ்நாடு மாறிவிட்டது என்று சொல்கிறார்கள்.
உலகத்திலேயே அதிசிறந்த யுரேனியம் இருப்பது ஆஸ்திரேலியாவில் தான். உலகின் ஒட்டுமொத்த யுரேனியத்தில் 27 விழுக்காடு ஆஸ்திரேலியாவில்தான் இருக்கிறது. ஆனால் அங்கு ஒரு மெகா வாட் கூட அணு மின்சாரம் தயாரிப்பதில்லை.
ஏனென்றால் எங்களுக்கு சுற்றுச்சூழல் முக்கியம், நிலம், நீர், காற்று முக்கியம் என்று அந்நாட்டு அரசு கூறுகிறது. ஆனால் அந்த நாட்டிலிருந்து யுரேனியம் இறக்குமதி செய்து நம் நாட்டில் அணு மின்சாரம் தயாரிக்க மோடி அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது. உலகம் முழுவதும் வளங்கள் இருந்தாலும் கூட அந்த வளங்களைக் கொண்டு பொருட்கள் உற்பத்தி செய்ய தமிழ்நாடு போன்ற பகுதிகள் தேவைப்படுகிறது. இங்குதான் சுற்றுச்சூழலைப் பற்றி எந்தக் கவலையும் அரசுக்கு இல்லை.
நான் பள்ளி, கல்லூரி படித்த காலங்களில் குடிக்கிற தண்ணீரை பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிலை வரும் என்று எண்ணியதுகூட இல்லை. எங்காவது பேருந்து நிலையங்களில், பொது இடங்களில் தண்ணீர் தொட்டிகள் வைத்து நீர் வைத்திருந்தால் நாம் குடிக்க மாட்டோம். அந்தத் தண்ணீர் குடிக்க சுத்தமானது இல்லை என்ற எண்ணத்தை நமக்குள் விதைத்துவிட்டார்கள். இப்படி தண்ணீர் ஒரு வணிகப் பொருளாக உருவாக்கப் பட்டது 1990க்குப் பிறகுதான். எங்கே சென்றாலும் கடைகளில் பாட்டில் தண்ணீரை வாங்கித்தான் அனைவரும் பயன்படுத்துகிறோம். வீடுகளிலும் ஆர்.ஓ. சுத்திகரிப்பு இயந்திரங்களை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.
டெல்லியில் காற்று மாசு பெருமளவிற்கு அதிகரித்திருக்கிறதை செய்திகளில் பார்க்கிறோம். டெல்லியைப் போலவே சென்னையிலும் அதே அளவு காற்று மாசு இருக்கிறது. ஆனால் டெல்லியைப்போல ஏன் சென்னையில் பாதிப்பு இல்லையென்றால், அதற்கு முக்கியமான காரணம் சென்னையில் கடல் இருக்கிறது. காற்றில் கலந்திருக்கிற கார்பனில் 30 விழுக்காடு அளவுக்குக் கடல் உள்வாங்கிக்கொள்ளும். இதே காரணம்தான் மும்பைக்கும், கொல்கத்தாவுக்கும். ஆனால் டெல்லியிலும், பெங்களூரிலும் கடல் இல்லை. அதனால்தான் காற்று மாசுபாட்டால் தத்தளிக்கின்றன.
இன்றைக்கு கோபாலபுரத்தில் ஆக்சிஜன் பார்லர் வந்துவிட்டது. 5 வருடம் கழித்து உடல் நிலை சரி இல்லை என்று மருத்துவமனைக்கு சென்றால் மருந்து மாத்திரைகள் மட்டுமின்றி ஆக்சிஜன் பார்லருக்கு சென்று 1 மணி நேரம் சுத்தமான ஆக்சிஜனை சுவாசிக்க வேண்டு மென்றும் சொல்லுவார்கள். டெல்லியில் எல்லா வீடுகளிலேயும் காற்று சுத்திகரிப்பான் (Air Purifier) வைக்க ஆரம்பித்துவிட்டார்கள். தண்ணீரும், காற்றும் அடிப்படை வளம். இவற்றை நமக்கே தெரியாமல் வணிகப் பொருளாக்கி நம்மீது திணிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
அவ்வளவு சேட்டிலைட் வசதிகளை வைத்திருக்கிற அமெரிக்கா ஏன் திருப்பூரி லிருந்து ஆடைகள் இறக்குமதி செய்கிறது? ஆடி, பென்சு என விதவிதமான கார்களையும், பொறியியல் இயந்திரங்களையும் உற்பத்தி செய்கிற ஜெர்மனி, இத்தாலி நாடுகள் ஏன் காலணிகளை ஆம்பூர், வாணியம்பாடியிலிருந்து வாங்குகிறார்கள் என்று நாம் யோசித்திருக் கிறோமா? இன்றைக்கு ஹுண்டாய், ஃபோர்டு கார் நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்ய வருகின்றன. இந்நிறுவனங்கள் உற்பத்தி செய்வதில் சுமார் 20 விழுக்காடு கார்களை மட்டும்தான் இங்கு விற்கின்றன. 80 விழுக்காடு வரை ஏற்றுமதிதான் செய்கின்றன.
இதற்காகவே சென்னை துறைமுகத்தை கார் ஏற்றுமதிக்கு மட்டுமானதாகவே மாற்றி விட்டார்கள். முன்பெல்லாம் நிலக்கரி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இந்தத் துறைமுகத்தில் கையாளப்பட்டது. இவை யெல்லாம் என்ன காட்டுகிறது என்றால் இவற்றைத் தயாரிக்க தண்ணீர் தேவைப்படு கிறது. ஒரு கார் தயாரிக்க 4 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவை. உள்ளாடை தயாரிக்க 2,700 லிட்டர் தண்ணீர் தேவை. ஒரு ஜோடி செருப்பும், ஷூவும் தயாரிக்க 16,000 லிட்டர் தண்ணீர் வேண்டும். இதனால்தான் தங்கள் மக்களுக்குத் தேவையான வளங்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு அமெரிக்காவும், ஜெர்மனி யும், இத்தாலியும் இங்கிருந்து இவற்றை வாங்கிக் கொள்கின்றன.
உலகத்திலேயே மாசடைந்த நதிகளில் ஒன்று பாலாறு. ஆம்பூர், வாணியம்பாடி தோல் கழிவுகள் இந்த ஆற்றில்தான் கலக்கிறது. உலகம் முழுக்க அணையைத் திறக்க சொல்லி விவசாயிகள் போராடி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அணையைத் திறக்கக்கூடது என்று விவசாயிகள் போராடி கேள்விப்பட்டதுண்டா? திருப்பூர் ஒரத்துப்பளையம் விவசாயிகள் இப்படிப் போராடினார்கள். இந்த அணை நொய்யல் ஆற்றில் கட்டப்பட்டது. திருப்பூர் பனியன் கம்பெனிகளின் கழிவுகள் கலந்து நொய்யல் ஆற்றுத் தண்ணீர் மாசடைந் துள்ளதால்தான் விவசாயிகள் ஒரத்துப் பாளையம் அணையைத் திறக்க வேண்டாம் என்கின்றனர். இந்தப் பகுதிகளில் புற்றுநோயும் மிக அதிகமாக இருக்கிறது.
1978ஆம் ஆண்டில் அமெரிக்காவில் ஒரு அணு உலை விபத்துக்குள்ளானது. அதற்குப்பின் இன்றுவரையில் அமெரிக்காவில் புதிதாக ஒரு அணு உலை கூட அமைக்கவில்லை. ஆனால் இந்தியாவில் அமைக்கிறார்கள். இந்தியாவிலும் கூட எங்கு அமைக்கிறார்கள் என்பதை வேறு படுத்திப் பார்க்க வேண்டியுள்ளது. மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் இந்திய அமெரிக்க ஒப்பந்தத்தின்படி நிக்தி விருதியில் ஒரு அணு உலையை அமைக்கத் திட்ட மிட்டார்கள். ஆனால் இந்த அணு உலைக்கு அம்மாநில மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி, மே மாதம் சட்ட மன்றத்தில் ‘புகுஷிமாவிற்கு பிறகு அணு உலை அமைக்க மக்கள் பெரும் எதிர்ப்பு தெரிவிப்பதால் இப்போது மட்டுமல்ல, இனி எப்போதுமே நாங்கள் அணு உலைக்க மாட்டோம்’ என்றார். ஆனால் கூடங்குளத்தில் எதிர்ப்பு தெரிவித்தால் 1, 2 என 6 யூனிட்டுகள் வரை அமைப்போம் என்று மக்களைக் கண்டுகொள்ளாமல் செயல்படுகின்றனர்.
நெடுவாசலிலிருந்து ஜெம் லேபரட்டீஸ் நிறுவனத்தை வெளியேற்றி இருக்கிறோம். ஆனால் அவன் நாளை வேறு பெயரில் வருவான். ஸ்டெர்லைட்டை இப்போது மூட வைத்திருக் கிறோம். நீதிமன்றத்தில் அனுமதி பெற்று மீண்டும் ஆலையைத் திறப்பான்; விரிவுபடுத்து வான். தமிழகத்துக்கு மட்டும்தான் இதுபோன்ற முடிவுகள் எல்லாம் திணிக்கப்படுகிறது. தமிழ்நாட்டை ஒரு உற்பத்தி கேந்திரமாக மாற்றுவதற்குத்தான் உலக நாடுகளும் விரும்புகின்றன. பாதுகாப்பு கேந்திரங்கள் எங்கெல்லாம் இருக்கிறது என்று இந்த ஆண்டு பட்ஜெட்டில் இந்திய அரசு அறிவித்தது. அதில் ஒசூர், கோயம்புத்துர், திருச்சி, ஆவடி, காட்டுப்பள்ளி, கல்பாக்கம் ஆகிய 6 இடங்கள் தமிழ்நாட்டில் இடம்பெற்றது. இதில் கல்பாக்கம் எங்கிருந்து வந்தது? இதற்கும் பாதுகாப்புத் துறைக்கும் என்ன தொடர்பு? கல்பாக்கத்தில் இருப்பது மின்சாரம் தயாரிக்கும் ஈணுலை மட்டும்தானே? அப்படியானால் இந்தியா வைத்திருக்கிற 110 அணு குண்டுகளில் இங்கிருந்தும் அணுக்கழிவை எடுத்து குண்டு தயாரித்திருக்கிறார்கள் என்று நமக்கு இதன்மூலம் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.
அமெரிக்காவைப் போன்று இந்தியாவும் ஒரு வல்லாதிக்க அரசுதான். வேலை உருவாக்கம் என்றுகூறி நம்மை ஏமாற்றி தமிழகத்தின் வளங்களை சுரண்டுவதற்கு மற்றொரு காரணம், சீனாவிலிருந்தும், பாகிஸ்தானிலிருந்தும் அதிகத் தொலைவில் தமிழகம் இருப்பது. சீனாவின் ஏவுகணை இலக்குக்கு அப்பால் தமிழகம் இருப்பதாக இந்தியா கருதுகிறது. ஆனால் இங்கிருந்து மிக அருகில் இருக்கிற இலங்கையின் ஹம்பந்தோட்டா துறைமுகத்துக்கு சீனா வந்துவிட்டது என்பது இவர்களுக்குப் புரியவில்லை.
அணு உலையைக் கூட 50 வருடத்தில் மூடிவிடலாம். ஆனால் அணுக் கழிவுகளை குறைந்தது 1 இலட்சம் வருடங்களுக்குப் பாதுகாக்க வேண்டும்.
உலகின் எந்த நாட்டிலும் அணுக் கழிவுகளை கையாள்வதற்கானத் தொழில் நுட்பமே கிடையாது. இதற்காக ஆழ்நிலைக் கருவூலம் ஒன்றை அமைக்க உலக நாடுகள் முயன்று வருகிறது. அதாவது பூமிக்குள் 2.50 கிலோ மீட்டருக்கு போய் அணுக் கழிவுகளை பாதுகாப்பதற்கான ஒரு கட்டடத்தை அமைப்பது.
இந்த முயற்சி இப்போது ஐரோப்பாவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஐரோப்பாவில் உள்ள மொத்த அணுக் கழிவுகளையும் இங்கே கொட்டத் திட்டமிட்டிருக்கிறார்கள். 1 இலட்சம் வருடத்திற்குப் பிறகு பூமியில் மனிதன் இருப்பானா எனத் தெரியாது. எனவே அப்போது இருக்கப்போகிற உயிரினங்களுக்குப் புரியும் வகையில் அபாயம் என்ற சொல்லைக் குறிக்கிற அடையாளத்தை உலகில் உள்ள எல்லா மொழியிலும் இந்தக் கட்டடத்தின் மேல் ஒட்டி வைக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். எனவே கூடங்குளத்தில் வெளியாகவுள்ள இவ்வளவு ஆபத்தான அணுக் கழிவுகளை என்ன செய்யவுள்ளீர்கள் என்ற கேள்வியை முன்வைத்தோம். அதற்கு உச்ச நீதிமன்றத்தில் பதிலளித்த அரசு தலைமை வழக்குரைஞர் கோலார் சுரங்கத்தில் கொட்டவுள்ளோம் என்று தெரிவித்தார்.
கோலார் பகுதி மக்கள் இதற்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். இங்கு அணு உலையை ஆதரித்த பாஜக உள்ளிட்ட கட்சிகள் எல்லாம் கோலாரில் அணுக் கழிவுகளை கொட்ட விடமாட்டோம் என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இரண்டே நாளில் அதே தலைமை வழக்குரைஞர் கோலாரில் மட்டுமல்ல கர்நாடகாவில் எங்குமே அணுக் கழிவுகளை வைக்க மாட்டோம். கூடங்குளத்தில் உற்பத்தி யாகும் அணுக் கழிவுகள் கூடங்குளத்திலேயே வைக்கப்படும் என்றார். அணுக் கழிவு மேலாண்மைத் திட்டத்துக்கான தொழில் நுட்பத்தை 5 ஆண்டுகளுக்குள் அமைக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி யது. இது நடந்தது 2013ஆம் ஆண்டில்.
இப்போது 5 ஆண்டுகள் முடிந்துவிட்டது. இந்நிலையில் தேசிய அணுமின் கழகம் மீண்டும் உச்ச நீதிமன்றத்துக்கு வந்துள்ளது. ’எங்களிடம் அணுக் கழிவுகளை கையாளும் தொழில்நுட்பம் இல்லை. இதற்கு முன்பு நாங்கள் அணுக் கழிவுகளை கையாண்டதில்லை. இது ஒரு சவால் நிறைந்த பணியாக இருக்கிறது. எனவே எங்களுக்கு மேலும் 5 ஆண்டுகள் காலம் வேண்டும்’ என்று தேசிய அணுமின் கழகம் கேட்டிருக்கிறது. அணுக் கழிவுகள் எந்த அளவுக்குப் பாதிப்பை உண்டாக்கும் என்பதை புகுஷிமா சென்று நேரில் பார்த்திருக்கிறேன்.
ஏபி 1000 என்னும் அணு உலை உலகில் எங்கேயும் கிடையாது, ஆனால் இந்தியாவுக்கு வரப்போகிறது. வரப்போகிறதோ இல்லையோ ஆனால் தொழில்நுட்பத்தில் கையெழுத்திட் டுள்ளனர். இபிஆர் என்னும் பிரான்சு நிறுவனத்தின் அணு உலை, அந்நாட்டில் கூட கிடையாது, இந்தியாவுக்கு வரப்போகிறது. உலகில் சோதனை செய்யப்படாத தொழில் நுட்பங்களின் சோதனைச் சாலையாக இந்தியாவை மாற்றிக் கொண்டுள்ளனர்.
நாம் மின்சாரத்திற்கு எதிரானவர்கள் கிடையாது. மின்சாரம் இல்லையெனில் நான் எப்படி இப்போது மைக்கில் பேச முடியும். மின்சாரம் வேண்டாம் என்றோ அல்லது வளர்ச்சி வேண்டாம் என்றோ நாங்கள் கூறவில்லை. எது வளர்ச்சி என்ற கேள்வியை நாங்கள் முக்கியமாக முன்வைக்கிறோம். நாம் அமெரிக்காவிற்கெல்லாம் செல்ல வேண்டாம், சென்னை வேளச்சேரியில் ஆசியாவிலேயே மிகப்பெரிய மாலான பீனிக்ஸ் மால் உள்ளது. அங்கு ஒரு மணி நேரத்திற்கு 12,000 யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. அந்த மாலிலிருந்து 25 கி.மீ தள்ளியிருக்கக் கூடிய திருக்கழுக்குன்றம் கிராமத்தில் ஒரு நாளுக்கு 1000 யூனிட் மின்சாரம் செல்கிறது. ஒரு கிராமத்திற்கு 12 நாட்களுக்குத் தேவையான மின்சாரத்தை அந்த மால் ஒரு மணி நேரத்தில் பயன்படுத்து கிறது. இது எப்படி சரியானதாக இருக்க முடியும். இதைத்தான் நாங்கள் கேள்வி கேட்கிறோம்.
உலகமயமாக்கம் என்ன செய்துவிட்டது என்றால் மால், பாஸ்ட் ஃபுட் கலாச்சாரத்தை இறக்குமதி செய்துள்ளது. நாம் வெறும் தொழில்நுட்பத்தை மட்டும் இறக்குமதி செய்யவில்லை. நம்முடைய பழக்கவழக்கங்கள், உணவு முறை ஆகியவற்றையும் இறக்குமதி செய்வதுபோல ஆகிவிட்டது. அமெரிக்கா விலேயே அந்த உணவுகளுக்கு தரமே கடின (குப்பை உணவுகள்) என்று பெயர் வைத்து தூக்கிப் போடுகின்றனர். ஆனால் நம் குழந்தை களுக்கு பீட்சாவும், நூடுல்சும், ஹாம்பர்கும்தான் காலை உணவாக மாறியுள்ளது. நாம் தொழில் நுட்பத்தை மட்டும் கொண்டுவரவில்லை, நம்மை நுகர்வுத் தன்மை கொண்ட சமூகமாக இந்த உலகமயமாக்கம் மாற்றி விட்டது.
மின்சாரம் நமக்காகத் தயாரிக்கப்படு கிறதா என்றால் அதுவும் இல்லை. 1991ஆம் ஆண்டு இந்தியாவின் மின்சார உற்பத்தித் திறன் 89ஆயிரம் மெகா வாட்டாக இருந்தது. அப்போது இந்தியாவின் 40 விழுக்காடு மக்களுக்கு மின்சாரம் கிடைக்காமல் இருந்தது. இன்று இந்தியாவின் மின் உற்பத்தித் திறன் 3.15 லட்சம் மெகா வாட். கிட்டத்தட்ட 4 மடங்கு கூடியுள்ளது. ஆனால் இன்றும் இந்தியாவில் 30 கோடி மக்களுக்கு மின்சாரம் கிடைக்கவில்லை. அப்படியென்றால் மின்சாரம் எங்கே சென்றிருக் கிறது, ஃபோர்டு, ஹுண்டாய், பெப்சி, கோக கோலா உள்ளிட்ட அனைத்துப் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கும் சென்றுள்ளது. ஆனால் இன்றைக்கும் நம்முடைய விவசாயிகளுக்கு சரியாக மின்சாரம் கிடைக்கவில்லை. தமிழகத்தின் மின்சார உற்பத்தித் திறன் 15 ஆயிரம் மெகா வாட். கூடங்குளம் போராட்டம் நடந்தபோது அரசுக்கு ஒரு அறிக்கையே தயாரித்துக் கொடுத்தோம். அதில், ’கூடங்குளத்தில் ஆயிரம் மெகா வாட் மின்சாரம் தயாரிக்கப் போகிறோம் என்று கூறுகிறீர்கள், ஆனால் ஆயிரம் மெகா வாட் மின்சாரம் கிடைக்காது’ என்று குறிப்பிட் டிருந்தோம். அது தற்போது நிரூபணமாகி யுள்ளது.
40 விழுக்காடு இயக்கு திறனில்தான் இயங்கும் என்று கூறியுள்ளனர். அப்படி யென்றால் 400 மெகா வாட் மின்சாரம் மட்டுமே தயாரிக்க முடியும். 400இல் 200 மெகா வாட் மின்சாரம் மட்டுமே தமிழகத்துக்கு வரும். அதிலும் மின்சாரத்தைக் கொண்டு சேர்க்கும் வரை 20 விழுக்காடு வரை இழப்பாகிவிடும் என்பதால் 150 மெகா வாட் மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளது. இதற்காகத்தான் இவ்வளவு பெரிய ஆபத்தான முயற்சி எடுத்து அணு உலைகளை அரசுகள் கொண்டுவருகின்றன. கூடங்குளம் அணு மின் நிலையத்தைவிட கல்பாக்கம் இன்னொரு பெரிய பிரச்சினை. உலகில் எங்கும் ஓடாத அமெரிக்கா, ஜப்பான், பிரான்சு, ஜெர்மனி ஆகிய நாடுகளால் கையாள முடியாது என்று மூடப்பட்ட அதிவேக ஈணுலைகளை கல்பாக்கத்தில் பொருத்தி யுள்ளனர். ஒன்றல்ல மூன்றைப் பொருத்தி யுள்ளனர். நான் இங்கு வைக்க வேண்டிய கேள்வி யாருக்காக இதை செய்கின்றீர்கள் என்பது தான்.
இன்று தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு பிரச்சினையைக் கூற முடியும். கன்னியாகுமரியில் துறைமுகம், தாதுமணல் பிரச்சினை, திருநெல்வேலியில் கூடங்குளம் பிரச்சினை, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட், விவி மினரல்ஸ், தாரங்கதாரா கெமிக்கல்ஸ், ஸ்பிக், டேக் உள்ளிட்ட பிரச்சினைகள், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மீத்தேன் பிரச்சினை, மதுரைக்கு காமராஜர் பல்கலைக் கழகம் எதிரேயுள்ள அணுக்கழிவு ஆய்வு மையம், தேனிக்கு நியூட்ரினோ, மேற்கு மண்டலத்திலுள்ள 7 மாவட்டங்களுக்கு கெயில் குழாய் பிரச்சினை, சேலத்தில் கஞ்சமலை பிரச்சினை, திண்டுக்கல்லுக்கு கொடைக்கானல் பாதரச தொழிற்சாலை பிரச்சினை, வேலூருக்கு ஆம்பூர் வாணியம்பாடியில் இருக்கக் கூடிய தோல் தொழிற்சாலைகள் பிரச்சினை, திருவண்ணாமலைக்கு எட்டுவழிச் சாலை, கவுத்தி மலைப் பிரச்சினை, கடலூர் வாழும் போபால் என்றே சொல்லலாம், அங்குள்ள மாசுகளால் மக்கள் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.
டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மீத்தேன், ஹைட்ரோ கார்பன் பிரச்சினை, இதனைத் தவிர டெல்டாவில் 12 அனல் மின் நிலையங்கள் அமைக்கப் போகிறார்கள், காஞ்சிபுரம் சென்றால் கல்பாக்கம் அணுமின் நிலைய பிரச்சினை, திரூவள்ளூர் மாவட்டத்திற்கு சென்றால் வட சென்னையிலுள்ள ரசாயனத் தொழிற்சாலைகள், அனல் மின் நிலையப் பிரச்சினை, இதைத் தவிர 34 நதிகளில் மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளைகள் நடைபெறுகிறது. அரியலூர், பெரம்பலூருக்கு சிமெண்ட் தொழிற்சாலை பிரச்சினை. இப்படி பிரச்சினை இல்லா மாவட்டம் என்று எதைச் சொல்ல முடியும் நம்மால். இதில் நடைபெறக் கூடிய விஷயங்களில் கிட்டத்தட்ட 50-60 விழுக்காடு ஏற்றுமதி சம்பந்தப்பட்டதுதான். உள்ளாடை, தோல் பொருட்கள், கார் உள்ளிட்டவை ஏற்றுமதியாகின்றது. அப்படி யென்றால் நமக்குரிய வளத்தை நமக்குக் கொடுக்காமல் மாசுபடுத்திவிட்டு, அதிலிருந்து வரக்கூடிய பொருட்களைக் கூட பன்னாட்டு நிறுவனங்கள் அவர்களுடைய நாடுகளுக்கு இறக்குமதி செய்து கொள்கின்றன நதிகளை இணைக்க வேண்டும் என்று இப்போது பேசுகிறார்கள்.
சூழலியல் பார்வையில் கூறுகிறேன், நதிகளை இணைக்க அது ஒன்றும் பைப் கிடையாது. அதற்கென்று சில சூழலியல் சேவைகள் உள்ளன. நதி என்பது கடலில் சென்று கலக்க வேண்டும். அப்போதுதான் கடலில் இருக்கக்கூடிய உப்புத் தன்மை சீராகி, அதிலிருந்து ஆவியாகி, மேகமாகி நமக்கு மழை பெய்யும். உப்புத் தன்மை மாறியதென்றால் மழை பொழிவில் சிக்கல் வந்துவிடும். நன்னீர் கடலில் கலக்கின்ற பகுதிகளை நாம் கழிமுகங்கள் என்று கூறுகின்றோம். இவைதான் மீன் வளத்திற்காக முக்கியமான ஆதாரம். மழை பெய்வதனால் நமக்குத் தண்ணீர் கிடைக்கிறது, நாம் சுவாசிக்கக் கூடிய ஆக்சிஜனை யார் தயாரிப்பது தெரியுமா கடல் பாசி. நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனை 75 விழுக்காடு தயாரிப்பது கடல். கடலென்றால் உள்ளே யாரும் தொழிற்சாலை வைத்திருக்க வில்லை. அங்குள்ள கண்ணுக்கு புலப்படாத சின்னச் சின்ன உயிரினங்கள்தான் தங்களுடைய உணவு தயாரிப்பின் மூலம் ஆக்சிஜனை வெளியிடுகின்றன.
ஆற்றிலிருந்து செல்லக்கூடிய நன்னீர் கொண்டு சேர்க்கும் கனிமங்கள்தான் சின்ன உயிரிகளுக்கு உணவு. சின்ன உயிரினங்கள்தான் சின்ன மீன்களுக்கு சாப்பாடு, சின்ன மீன்கள் தான் பெரிய மீன்களுக்கு சாப்பாடு, பெரிய மீன்கள்தான் நமக்கு சாப்பாடு. அப்போது நதி கடலில் கலப்பது என்பது தேவையான விஷயம். இதையெல்லாம் மறைத்துவிட்டு நதிநீர் இணைப்புக்கான 20 இலட்சம் கோடிக்கான ஒப்பந்தத்தை அதானியுடைய கட்டுமான நிறுவனத்திற்கு தரப் போவதாக சொல் கிறார்கள். ஆனால் தமிழகத்திற்கு ஒருபோதும் தண்ணீர் கொண்டுவர மாட்டார்கள். எங்களைப் பொறுத்தவரையில் தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்பது எங்களுக்குப் பிரதான மானது. சுற்றுச் சூழலை பாதுகாத்து, தண்ணீரைக் குடித்தால்தான் வேறு எதனை செய்வதற்கான தேவையும் இங்கு இருக்கும்.
(ஜூன் 24, 2018 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய ஏற்காடு பயிற்சி முகாமில் நிகழ்த்திய உரையின் சுருக்கம்.
கட்டுரையாளர் சுற்றுச் சூழல் போராளி)
தொகுப்பு : ர. பிரகாஷ்