சிலர் தாங்கள் இருக்கும் அறையை விட்டு வெளியேறியவுடன் விளக்குகளை அணைத்துவிட்டுச் செல்வர். வேறு சிலர் விளக்கை நிறுத்துவது பற்றி பல முறை யோசிப்பர். வருமானம் மற்றும் ஆற்றல் சேமிப்பு பற்றிய அறிவை விட அவர்களின் மனப்பான்மை மற்றும் தார்மீக உணர்வுகளே வீட்டில் ஆற்றல் சேமிப்பிற்கான முடிவுகளை ஒருவரைத் தீர்மானிக்க வைக்கிறது என்று இது பற்றி முதல்முறையாக விரிவாக நடந்த ஆய்வு கூறுகிறது.
யு எஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் அனைத்து வகையான ஆற்றல் பயன்பாட்டிலும் வீடுகளில் பயன்படுத்தப்படும் ஆற்றலின் அளவு சுமார் ஐந்து பங்கு உள்ளது.
“மக்களின் ஆற்றல் நுகர்வு பற்றிய முடிவுகளை எது தீர்மானிக்கிறது என்பது பற்றிய புரிதல் அது தொடர்பான ஆற்றல் நுகர்வில் பெருமளவு உமிழ்வைக் குறைக்க உதவுகிறது. இது பற்றிய ஆழமான உளவியல் அம்சங்களை ஆராய முற்பட்டால் ஆற்றலை சேமிக்க பலர் இந்த வழிமுறைகளையே பின்பற்றுகின்றனர் என்பது தெரியும்” என்று ஆய்வின் முதல் ஆசிரியரும் யு எஸ் வடக்கு நியூ மெக்சிகோ கல்லூரியின் ஆய்வாளருமான ஸ்டெஃப் ஸவாட்ஸ்கி (Steph Zawadzki) கூறுகிறார்.
இது பற்றி விரிவாக ஆராய விஞ்ஞானிகள் உளவியல், சமூகவியல், பொருளாதாரம், பொறியியல் தொடர்பான முந்தைய நூறு ஆய்வுகளைப் பகுப்பாய்வு செய்தனற். இதில் 42 நாடுகளைச் சேர்ந்த 430,000 பங்கேற்பாளர்களின் பல்வேறு நடத்தை விவரங்கள் ஆராயப்பட்டன. ஆய்வுக் குழுவினரால் 26 உளவியல், சமூக மற்றும் புவியியல் சார்ந்த அம்சங்கள் பரிசோதிக்கப்பட்டது.
இந்த அம்சங்கள் ஒவ்வொன்றும் ஆற்றல் சேமிப்புக்கு உதவும் செயல்பாடுகளை மேற்கொள்ள வைப்பது பற்றி ஆராயப்பட்டது.
சேமிப்பு பற்றி நேர்மறை மனப்பான்மை இருப்பவர்கள் மின்சாரத்தை சுயமாகவே முன்வந்து சேமிக்கின்றனர். சிலரை இது மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. சூழல் பாதுகாப்பிற்காக பலர் மின்சாரத்தை சேமிக்கின்றனர்.
வயது, கல்வி நிலை போன்ற சமூக, புவியியல் அம்சங்கள் ஒருவரின் வீட்டு மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்க உதவுவதில்லை. மற்றவர்கள் என்ன கருதுகின்றனர் என்பதற்கும் சிலர் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஏற்கனவே மறுசுழற்சி, பொது போக்குவரத்தைப் பயன்படுத்துதல் போன்ற சூழலுக்கு நட்புடைய செயல்களை செய்பவர்கள், வீடுகளில் ஆற்றல் சேமிப்பில் அதிகமாக ஈடுபடுகின்றனர்.
சூழலுக்கு நட்பான செயல்களைச் செய்பவர்கள் மற்றவர்களையும் மின் சேமிப்பில் ஈடுபட தூண்டுதலாக அமைகின்றனர். ஒருவரின் பொருளாதார, சமூக, கல்வி நிலை ஆற்றல் சேமிப்பில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. என்ன செய்யவேண்டும் என்பது மட்டும் ஒருவரின் நடத்தையை மாற்ற உதவுவதில்லை.
ஆழமான மனப்பான்மை, முன்னுரிமைகள், விருப்பங்களே இந்த செயல்களில் ஈடுபட மக்களுக்குத் தூண்டுதலாக அமைகிறது. இது பற்றிய ஆய்வுக் கட்டுரை நீடித்த நிலையான வளர்ச்சி குறித்த செல் அறிக்கைகள் (Cell Reports Sustainability) என்ற இதழில் வெளிவந்துள்ளது. வீடுகளில் ஆற்றல் சேமிப்பு பற்றிய கொள்கைகளை வகுக்க இந்த ஆய்வு உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். ஆற்றல் சேமிப்பை நல்லது என்று நினைப்பவர்களின் திறனை அதிகரிக்க இது பயன்படும்.
“இதயங்களையும் மனங்களையும் மாற்ற நாங்கள் முயலவில்லை. மாறாக ஆற்றல் சேமிப்பு பற்றிய எண்ணங்களைத் தூண்டவே நாங்கள் விரும்புகிறோம். காலநிலை மாற்றம் மோசமாகி வரும் நிலையில் இந்த உளவியல் ரீதியான கண்டுபிடிப்பு அதை சமாளிக்க உதவும் என்று ஸவாட்ஸ்கி கூறுகிறார். வீடுகளில் ஆற்றல் சேமிப்பு பற்றிய இந்த உளவியல் ஆய்வு மக்களின் மனப்போக்கை மாற்ற உதவும் என்று நம்பப்படுகிறது.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்