வாசிப்பதும் எழுதுவதும் ஒன்றிரண்டு மொழிகளைப் புதிதாகக் கற்பதும் டிமென்சியா ஆபத்தை 40% குறைக்கிறது. இதன் மூலம் மறதியை தள்ளிப் போட முடியும் அல்லது தடுக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உலகளவில் ஆரோக்கியத்தை அச்சுறுத்தும் குறைபாடுகளில் ஒன்று டிமென்சியா. உலகில் இந்த குறைபாடு உள்ளவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்து 2050ல் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 150 மில்லியனாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
வாசிப்பும் எழுத்தும் புதியன கற்றலும்
மறதி நோய் என்பது ஒவ்வொரு சமூகத்திலும் நாட்டிலும் கண்டத்திலும் வருங்கால ஆரோக்கியம் மற்றும் சமூக நல திட்டங்களை மிகப் பெரிய, அதி வேகமாக பாதிக்கும் அச்சுறுத்தல் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். வாசிப்பது, எழுதுவது, புதிதாக ஒரு மொழியைக் கற்பது போன்ற அறிவுப்பூர்வமான தூண்டுதலை ஏற்படுத்தும் செயல்களில் வாழ்நாள் முழுவதும் ஈடுபட்டால் அல்சைமர்ஸ் (Alzheimer’s) நோயைக் குறைக்க முடியும் என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அறிவுத் திறனைக் குறைக்கும் அல்சைமர்ஸ் மிகப் பொதுவாகக் காணப்படும் டிமென்சியாவின் ஒரு வகையே. “வாழ்வின் பிற்பகுதியில் ஒருவரின் அறிவுத் திறன் அவர் வாழ்நாள் முழுவதும் தொடரும் அறிவுப் பூர்வமான செயல்களைத் தூண்டும் சூழல்களுடன் தொடர்புடையது என்று இந்த ஆய்வு கூறுகிறது. இந்த கண்டுபிடிப்பு ஊக்கமளிக்கிறது. மனதை பலதரப்பட்ட உளவியல் ரீதியான செயல்களில் வாழ்நாள் முழுவதும் ஈடுபட வைப்பது ஒருவரின் அறிவாற்றலில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்று இந்த ஆய்வு எடுத்துக் காட்டுகிறது. நூலகங்கள், கல்வியியல் திட்டங்கள் போன்ற அறிவை வளப்படுத்தும் சூழலை விரிவுபடுத்தும் வகையில் வடிவமைக்கப்படும் திட்டங்கள் ஒருவரின் மனதிற்குள் வாழ்நாள் முழுவதும் கற்க வேண்டும் என்ற தீப்பொறியை உருவாக்குகிறது. இது மறதியைக் குறைக்க உதவும்” என்று சிகாகோ ரஷ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ மையத்தை (Rush University Medical Center) சேர்ந்த ஆய்வாளரும் ஆய்வின் ஆசிரியருமான ஆண்டிரியா சாமிட் (Andrea Zammit) கூறுகிறார்.
ஆய்வின் தொடக்கத்தில் டிமென்சியா பாதிப்பு இல்லாத சராசரி 80 வயதுடைய 1,939 பேர் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர். இவர்கள் சராசரியாக எட்டாண்டுகள் கண்காணிக்கப்பட்டு ஆராயப்பட்டனர். பங்கேற்பாளர்கள் அறிவாற்றல் மற்றும் கற்றல் செயல்பாடுகள் பற்றிய கணக்கெடுப்புகளை மூன்று நிலைகளில் நிறைவு செய்தனர். 18 வயதிற்கு முன்புள்ள (Early enrichment) முதல் நிலையில் புத்தகங்கள் வாசித்துக் காட்டப்படுவது அல்லது வாசிப்பது, செய்தித்தாள்கள், வரைபடங்களை வீட்டில் பெற்றிருப்பது, அந்நிய மொழி ஒன்றை ஐந்தாண்டுகளுக்கும் மேலாக கற்பது போன்ற செயல்களில் பங்கேற்பாளர்களின் ஈடுபாடு ஆராயப்பட்டது.
வாழ்வின் நடுத்தர நிலையில் வருமானம் ஈட்டும் 40 வயதுள்ள இரண்டாவது (Middle-age enrichment) நிலையில் சஞ்சிகைகள், சந்தாக்கள், அகராதிகள், நூலக அட்டைகளை வீட்டில் பெற்றிருப்பது, நூலகங்கள், அருங்காட்சியகங்களுக்கு செல்லுதல் போன்ற பங்கேற்பாளர்களின் விவரங்கள் ஆராயப்பட்டன.
80 வயதில் தொடங்கும் வாழ்வின் பிற்பகுதி நிலையில் (Later-life enrichment) பங்கேற்பாளர்களின் வாசிப்பு, எழுதுவது அல்லது விளையாட்டில் ஈடுபடும் செயல்களின் எண்ணிக்கை, சமூகப் பாதுகாப்பிற்கான மொத்த வருமானம், ஓய்வு மற்றும் இதர வசதிக்கான மூலங்கள் ஆராயப்பட்டன. ஆய்வின்போது 551 பேர் அல்சைமர்ஸால் பாதிக்கப்பட்டனர். 719 பேர் லேசான அறிவுத் திறன் பாதிப்பிற்கு (mild cognitive impairment (MCI) ஆளாயினர்.
இது பற்றிய ஆய்வுக் கட்டுரை நரம்பியல் (Neurology) என்ற நரம்பியல் தொடர்பான அமெரிக்க அகாடமியின் மருத்துவ இதழில் (the medical journal of the American Academy of Neurology) வெளிவந்துள்ளது. இந்த முடிவுகளை ஆய்வாளர்கள் பட்டியலில் 10% உயர் நிலையில் இருந்தவர்கள் மற்றும் 10% கீழ் நிலையில் இருந்தவர்களின் அறிவாற்றலின் செழுமையை ஒப்பிட்டு ஆராய்ந்தனர்.
பட்டியலில் உயர்ந்த நிலைஇல் இருந்த 21% பேர்களும் தாழ்வான நிலையில் இருந்த 34% பேர்களும் அல்சைமர்ஸால் பாதிக்கப்பட்டனர். வயது, பாலினம் மற்றும் கல்வி நிலை போன்ற மற்ற அம்சங்களைக் கணக்கிட்டு முடிவுகளை திருத்தியபோது ஆய்வில் வாழ்நாள் முழுவதும் உயர் அறிவுத்திறன் செயல்பாடுகளுடன் இருந்தவர்கள் அல்சைமர்ஸால் 38% குறைவாகவும், லேசான அறிவுத் திறன் குறைபாடு 36% குறைவாகவும் பாதிக்கப்பட்டனர்.
இவர்களுக்கு சராசரியாக 94 வயதில் அல்சைமர்ஸ் நோய் ஏற்பட்டது. தாழ் நிலையில் இருந்தவர்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு முன்பே 88 வயதில் இந்த பாதிப்பு உண்டானது. லேசான அறிவாற்றல் குறைபாடு உயர் நிலையில் இருந்தவர்களுக்கு 85 வயதிலும் கீழ் நிலையில் இருந்தவர்களுக்கு ஏழாண்டுகள் முன் கூட்டியே 78 வயதிலும் ஏற்பட்டது. ஆய்வு காலத்தில் மரணமடைந்தவர்களின் உடற்கூறு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மறதி என்பது முதுமையின் ஓர் அங்கம் இல்லை
வாழ்நாளில் அறிவாற்றல் செயல்பாடுகள் அதிகமாக இருந்தவர்களிடம் உயிரிழப்பதற்கு முன் நினைவாற்றல் மற்றும் சிந்திக்கும் திறன் அதிகமாக இருந்தது. வாழ்நாளின் பிற்பகுதியில் ஆராயப்பட்டவர்கள் தங்கள் ஆரம்ப மற்றும் நடுத்தர வயது அனுபவங்களை நினைவுபடுத்தியே கூறினர். அதனால் அவர்கள் எல்லாவற்றையும் துல்லியமாக ஞாபகத்தில் வைத்து சொல்லியிருக்க முடியாது என்பதால் இது ஒரு குறைபாடு.
மேலும் இந்த ஆய்வு வாழ்நாள் முழுவதுமான கற்றல் டிமென்சியாவைக் குறைக்க உதவுகிறது என்பதை நிரூபிக்கவில்லை. அறிவுத் திறன் செயல்பாடுகளுடன் டிமென்சியாவிற்கு உள்ள தொடர்பை மட்டுமே இந்த ஆய்வு எடுத்துக் கூறுகிறது. “டிமென்சியா முதுமையில் தவிர்க்க முடியாத ஒன்று இல்லை என்பதை இந்த ஆய்வு காட்டுகிறது. வாழ்நாள் முழுவதும் மனதளவில் சுறுசுறுப்புடன் செயல்பட்டால் அல்சைமர்ஸ் நோய் 40% குறையும் என்பதை இது காட்டுகிறது. டிமென்சியா ஏற்படும் ஆபத்தை குறைக்க உதவும் வழிமுறைகளை இந்த ஆய்வு விவரிக்கிறது” என்று அமெரிக்க அல்சைமர்ஸ் கோட்பாடு (Alzheimer’s Research UK) அமைப்பின் மூத்த கொள்கை மேலாளர் டாக்டர் ஐசோல் ராட்ஃபோர்டு (Dr Isolde Radford) கூறுகிறார்.
மறதி என்ற மாபெரும் ஆபத்தில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வாசிப்பும் எழுத்தும் புதியன கற்றலும் உதவுவதை இந்த ஆய்வு சான்றுகளுடன் நிரூபிக்கிறது.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்