குழந்தைப் பிறப்பிற்கும் மலட்டுத்தன்மைக்கும் ஆணும் முக்கியக் காரணம் என்று புதிய ஆய்வுகள் கூறுகின்றன. செயற்கைக் கருத்தரிப்பு முறையில் குழந்தை பெறும் பெற்றோரிடம் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன.
செயற்கைக் கருத்தரிப்பு முறையில் குழந்தை பெற விரும்பும் பெற்றோரிடம் குழந்தைப் பிறப்பின் வெற்றியைப் பெண்ணின் வயதே தீர்மானிக்கிறது என்று நம்பப்பட்டது. ஆனால், ஆணிற்கும் இதில் முக்கியப் பங்கு உண்டு என்று இப்போது தெரிய வந்துள்ளது.
19,000 கருத்தரிப்புச் சுழற்சிகளை ஆராய்ந்தபோது, பெற்றோர் இருவரின் வயதும் பிரசவத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. பெண் 35 அல்லது 40 வயதிற்கும் கூடுதலாக இருக்கும்போது அவளுடைய ஆண் இணையின் வயது பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. ஆனால், 35 வயதிற்கும் 40 வயதிற்கும் இடையில் இருக்கும் பெண்களிடம் ஆணின் வயது 40 அல்லது அதற்கும் அதிகமாக இருந்தால் இது பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இதுநாள் வரை திருமண வயது கருத்தரிப்பில் முக்கியக் காரணமாக அமைகிறது என்பதை இந்த ஆய்வு முடிவுகள் கேள்விக்குறியாக்குகின்றன. மேலும், இந்த முடிவுகள் குழந்தைப் பிறப்பிற்கும் ஆணிற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை நிரூபித்துள்ளன என்று யு.கே. குழந்தைப் பிறப்பிற்கான வலையமைப்பின் (UK Fertility Network) செயல்பாட்டு மேலாளர் கேட் ப்ரெயின் (Kate Brian) கூறுகிறார்.
இது பள்ளி மற்றும் கல்லூரி அளவில் ஆண், பெண் வேறுபாடின்றி அனைவருக்கும் இது பற்றிய கல்வி அளிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. இதுவரை குழந்தைப் பிறப்பிற்கான வாய்ப்புகள் குறித்த சுமை முழுவதும் பெண்கள் மீதே விழுந்திருந்தது. நீண்டகாலமாகத் தந்தையின் வயதிற்கும் குழந்தைப் பிறப்பிற்கும் இடையில் உள்ள கருத்தரிப்புச் சாத்தியக்கூறுகளுக்கு ஆணின் பங்கு புறக்கணிக்கப்பட்டு வந்தது.
இதனால் திருமணத்திற்குப் பெண்ணின் வயதே முக்கியம் என்றும், ஆணிற்கு வயது ஆனாலும் குழந்தை பிறக்கும் என்றும் தவறாகக் கருதப்பட்டது என்று இந்த ஆய்வுக்கட்டுரையின் நான்கு ஆசிரியர்களில் ஒருவரும், தெற்கு லண்டன் டூடிங் (Tooting) செயிண்ட் ஜார்ஜ் மருத்துவமனை மருத்துவப்பிரிவு இயக்குநரும், மகப்பேறு மருத்துவ நிபுணருமான பேராசிரியர் ஜீட்டா நார்கன்ட் (Prof Geeta Nargund) கூறுகிறார்.
அதனால் திருமணம் பற்றிச் சிந்திக்கும்போது ஆணின் வயதையும் முக்கியமாகக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
யு.கே. கருத்தரிப்பு ஆணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டே இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன. இந்தத் தரவுகள் தாய் மற்றும் தந்தையின் வயது பற்றிய விவரங்கள் அடங்கியவை. 18,820 பேரின் விவரங்கள் இதற்காகப் பயன்படுத்தப்பட்டன.
செயற்கைக் கருத்தரிப்பு முறை
செயற்கைக் கருத்தரிப்பு முறையில் ஆணின் விந்தணு, பெண்ணின் அண்ட முட்டையுடன் நேரடி ஊசி மூலம் இணைக்கப்பட்டு கரு உருவாக்கப்படுகிறது. 35 வயதிற்குள் இருக்கும் இளம் பெண்களின் முட்டை, வயதான ஆணின் விந்தணுவில் இருக்கும் டி.என்.ஏ. (DNA) பழுதுகளைச் சரிசெய்கிறது. ஆனால், பெண் 40 வயதிற்கும் மேற்பட்டவராக இருந்தால் முட்டையின் தரம் குறைகிறது. இதனால் வயதான ஆணின் விந்தணுவில் இருக்கும் டி.என்.ஏ. பழுதுகளை அகற்றும் திறன் முட்டைக்கு இல்லாமல் போகிறது.
ப்பெண்ணின் வயது 35 முதல் 40 வரை இருக்கும்போது ஆணின் வயது முக்கியத்துவம் பெறுகிறது. 35 வயதிற்குள் இருக்கும் தந்தையின் கருத்தரிப்புத் திறன் 32.8%. இதே ஆணின் வயது 40 முதல் 44 வரை இருக்கும்போது இத்திறன் 27.9 சதவிகிதமாகக் குறைகிறது. இந்நிலையில் குழந்தை பிறக்கும் சாத்தியக்கூறு 25 சதவிகிதம் மட்டுமே.
வயதான ஆண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மனநலக் கோளாறுகளுடன் பிறக்கின்றன. பிரசவத்தில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. வயது முதிர்ந்த விந்தணுவும் முட்டையும் ஒன்றுசேரும்போது கரு உருவாவதில் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. முதுமையினால் உருவாகும் இந்நிலை பற்றிய புரிதல் சமூகத்தில் கூடுதலாகத் தேவை.
ஆணாதிக்க உலகில் மலட்டுத் தன்மைக்கும் குழந்தைப் பிறப்பிற்கும் பெண்களே காரணமாக இருக்கின்றனர் என்ற மூடநம்பிக்கையை இந்த ஆய்வு முடிவுகள் தகர்த்தெறிந்துள்ளன என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்