தி.மு.க. பிறந்த பிறகு பெரியாருடன் ஒரே சிறையிலிருந்த உணர்வுகளை நெகிழ்ச்சியோடு வெளிப்படுத்தி அண்ணா எழுதினார்.

திருச்சியில் எனக்குக் கிடைத்த வாய்ப்பு எப்படிப்பட்டது தெரியுமா தம்பி! பெரியாரும் அதே நாளில் அதே விதமான தண்டனை பெற்ற அதே சிறைக்கு வந்தார்.

‘ஆரிய மாயை’ என்னும் ஏடு தீட்டியதற்காக எனக்குச் சிறை.

‘பொன்மொழிகள்’ தீட்டியதற்காகப் பெரியாருக்குச் சிறை.

திருச்சி கோர்ட்டாருக்கு இப்படியொரு காட்சியைக் காண வேண்டுமென்று ஆசை போலும்! இரண்டும் தனித் தனி வழக்குகள்; தனித் தனியாகத்தான் விசாரணைகள்; எனினும் தீர்ப்பு மட்டும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் அளிக்கப்பட்டது. பிரிந்து நெடுந்தூரம் வந்துவிட்ட என்னை, அன்று அந்தக் கோர்ட்டில் பெரியாருக்குப் பக்கத்திலே நிற்கச் செய்து, வேடிக்கை பார்த்தது வழக்கு மன்றம். போலீஸ் அதிகாரிகள் அதைத் தொடர்ந்து ஒரே வேனில் ஏற்றிச் சென்றனர்.அதைத் தொடர்ந்து திருச்சி மத்தியச் சிறையிலே இருந்த அதிகாரி, பெரியார் கொண்டு வந்திருந்த சாமான்களைக் கணக்குப் பார்த்துச் சரியாக இருக்கிறதா என்று கூறும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார். என் வாழ்க்கையில் நான் மறக்க முடியாத சம்பவம். எனக்கு உள்ளூர பயம். கேள்விக் கணையுடன் நிறுத்திக் கொள்ளாமல் அன்புக் கணையையும் ஏவினால் என்னால் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும் என்றெல்லாம் அச்சப்பட்டேன்.

பக்கத்துப் பக்கத்து அறை; பகலெல்லாம் திறந்துதான் இருக்கும்; பலர் வருவார்கள்; இங்கு சிறிது நேரம்; அங்கு சிறிது நேரம்; இன்னும் சிலர் கூர்ந்து கவனித்தபடி இருப்பார்கள், நாங்கள் இருவரும் பேசிக் கொள்கிறோமோ என்று. அவர் அறைக்கு உள்ளே இருக்கும்போது நான் வெளியே மரத்தடியில்! அவர் வெளியே வர முயற்சிக்கிறார் என்று தெரிந்ததும் நான் அறைக்கு உள்ளே சென்று விடுவேன்.

இப்படிப் பத்து நாட்கள்.

நாளைய தினம் எங்களை விடுவிக்கிறார்கள் - முன் தினம் நடுப்பகலுக்கு மேல் ஓர் உருசிகரமான சம்பவம் நடைபெற்றது. பெரியாருக்கு வேலைகள் செய்து வந்த ‘கைதி’ என் அறைக்குள் நுழைந்து, ‘அய்யா தரச் சொன்னார்’ என்று சொல்லி, என்னிடம் ஆறு பிஸ்கட்டுகள் கொடுத்தான். கையில் வாங்கியதும் என் நினைவு பல ஆண்டுகள் அவருடன் இருந்தபோது கண்ட காட்சிகளின் மீது சென்றது.

மறுநாள் திடீரென்று விடுதலை கிடைத்தது. அந்த வேடிக்கையும் கேள், தம்பி! எங்களை விடுதலை செய்யப் போகிறார்கள் என்ற செய்தி உள்ளே எங்களுக்குத் தெரிவதற்கு முன்பே வெளியே தெரிந்து விட்டிருக்கிறது. எனவே, எங்களை அழைத்துச் செல்ல நண்பர்கள் வெளியே ஏற்பாடுகள் செய்யத் தொடங்கிவிட்டிருந்தனர். நமது (தி.மு.) கழகத்தார் ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டு நேரத்தை மறந்து விட்டனர்; எனவே சிறைக் கதவு திறக்கப்பட்டு எங்களை வெளியே அனுப்பியதும் வாசற்படியருகே பெரியாரை அழைத்துச் செல்ல வந்தவர்கள் கொண்டு வந்த மோட்டார்தான் இருந்தது. அதற்கு என்னையும் அழைத்துச் சென்றனர். இது போதாதென்று போட்டோ எடுப்பவர் ஒருவர் ஓடி வந்தார். ‘இருவரும் அப்படியே நெருக்கமாக நில்லுங்கள்’ என்று போட்டோ எடுத்துவிட்டார். அது வெளியிடப் படவில்லை... வேதாசலம் அவர்கள் வீடு வரையில் சென்று அவர் இறங்கிக் கொண்டார். நான் அதே மோட்டாரில் சாம்பு இல்லம் சென்றேன்.

கவனித்தாயா தம்பி, எனக்கு ஏற்பட்ட இந்த அனுபவத்தை திராவிட முன்னேற்றக் கழகம் என்ற ஒரு தனி அமைப்புக்குப் பெரியதோர் ஆபத்து இந்தப் பத்து நாட்கள் என்று நண்பர் ஒருவர் கூறினார். உண்மைதான். நான் அவ்வளவு சுலபத்தில் மனதைக் கரைய விட்டு விடுபவன்தான். ஆனால், பத்து நாட்கள் அவருடன் பேசி மீண்டும் பழைய நட்பைப் பெறுவதற்கான வாய்ப்பு என்னைத் தட்டித் தட்டி அழைத்தபோதும் நான் அந்த எண்ணத்திற்கு இடங் கொடுக்காதிருந்தேன். காரணம் கொடியவன் என்பதல்ல. நான் ஒரு அமைப்புக்குப் பொறுப்பாளியாக்கப்பட்டு விட்டதால், நான் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கையும் அந்த அமைப்பை உருக் குலைக்கக் கூடியதாக இருக்கக் கூடாது என்ற நேர்மையான எண்ணத்தினால்தான்.

நூல்: ‘பேரறிஞர் அண்ணாவின் பெருவாழ்வு’

ஆசிரியர்: கவிஞர் மறைமலையான்

(பக்.230-232)

Pin It