“டீசன்சி (Decency), சுத்தம், கண்ணுக்கு வெறுப்பில்லாத ரம்மியம் வேண்டாம் என்று நான் சொல்லுவதாக யாரும் கருதக் கூடாது. அது அவசியம் வேண்டும். ஆனால், அது அதிகம் பணம் கொண்ட, மக்கள் கவனத்தை ஈர்க்கத் தகுந்த ‘பேஷன்’ அலங்காரத்தால் அல்ல என்றும், சாதாரண குறைந்த தன்மையில் முடியும் என்றும் உணர வேண்டும்” - பெரியார்.

பெருங்கடல் ஆழமானது; எல்லோருக்குமானது; அப்படி ஒரு பெருங்கடல். பெரியார். எப்படி பெருங்கடலிலிருந்து அவரவருக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொள்ளலாமோ, அப்படி பெரியாரைப் படிக்கும் ஒவ்வொருவரும் அவரவர்களுக்குத் தேவைப்பட்ட ஒரு பெரியாரை எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அந்த பெருங்கடலை பெருங்கடலிடமிருந்தேதான் அறிந்து கொள்ள முடியும். அந்த வகையில் இவர் எனக்குக் கிடைத்த பெரியார்.

periyar 347பெரியாரை எந்த ஒரு சட்டகத்திலும் அடைக்க முடியாது. எப்படி எத்தனை சட்டகங்களை அடைத்து வைத்துக் கட்டினாலும், பெருங்கடலின் ஒற்றை அலையால் அதனை உடைக்க முடியுமோ, அப்படி சமூகத்தின் அழுக்குகளை தன் அதிர்ச்சி மதிப்பீடுகளால் உடைத்து எறிந்தவர் பெரியார். எப்படி ஒரு பெருங்கடல் பாரபட்சம் பார்க்காமல் தாக்குமோ, அப்படி தன்னுடைய போராட்டத்தில் யாரையும் பாரபட்சம் பார்க்காமல் விளாசியவர் பெரியார். குறிப்பாக பெண்ணுரிமைப் போராட்டத்தில் தந்தை பெரியாரின் கைத்தடி எவரையும், எதையும் விட்டு வைக்கவில்லை.

மனித சமூகம் கட்டமைத்திருக்கும் அத்தனை அடிமைத்தனங்களும் பெண்களில் இருந்து தொடங்குகிறது என்பதை ஆராய்ந்து, அதிலிருந்து விவாதங்களைத் துவக்கி இருக்கிறார் பெரியார்.

 “உலகில் மனித வர்க்கத்திற்கு அடிமை தத்துவம் ஒழிய வேண்டுமானால், பெண்ணுலகை அடிமையாகக் கருதி நடத்தும் அகம்பாவமும், கொடுமையும், ஒழிய வேண்டும். இது ஒழிந்த நிலையிலேயே சமத்துவம், சுதந்திரம் என்னும் முளை முளைக்கும் இடம்” என்கிறார்.

பார்ப்பனரல்லாத மக்களின் சமூக நீதி உரிமைக்காக மிக வீரியத்துடன் பெரியார் பணியாற்றி வந்த காலத்தில், பார்ப்பன ஆதிக்கம் கோலோச்சிய சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பார்ப்பனரல்லாத நீதிக்கட்சி பிரதிநிதியான சர். ஏ.பி.பாத்ரோ என்கிற சட்டமன்ற உறுப்பினர் பால்ய விவாஹத்திற்கு எதிரான சட்டத்திற்கு எதிராக 1928இல் பேச, “அவர் பார்ப்பனரல்லாத கட்சியில் இருந்து ராஜிநாமா செய்துவிட்டு, பார்ப்பனர் கட்சிக்குப் போய்விட வேண்டும். அவரை இனி பார்ப்பனரல்லாதார் கட்சியைச் சேர்ந்தவர் என்று சொல்வது பார்ப்பனரல்லாதார் சமூகத்திற்கே அவமானம்” என்று எழுதி யிருக்கிறார்.

சூத்திர மக்களின் உரிமைகளுக்காக தன்னுடன் இணைந்து பயணிக்கும் சகாக்கள் தங்கள் வீட்டுப் பெண்களை நடத்தும் விதம் குறித்து பேசுகையில், ”திராவிட பேரறிஞர்களின் மனைவிகள், தங்கை, தமக்கைகள், பெண்கள், எங்கே எப்படி பிறந்தார்கள்? எப்படி வளர்ந்தார்கள்? எப்படி தகுதி ஆக்கினார்கள்? எப்படி இருக்கிறார்கள்? ஷராப்புக்கடைகள், ஜவுளிக் கடைகள் ஆகியவற்றில் விளம்பரத்திற்கு வைத்திருக்கும் அழகிய பொம்மைகள், உருவகங்கள் போல் அல்லாமல், நாட்டுக்கு, மனித சமுதாயத்திற்கு, பெண்கள் உலகத்திற்கு, இவர்கள் என்ன மாதிரியில் தொண்டாற்ற அல்லது தாங்களாவது புகழோ கீர்த்தியோ பெறத் தக்கபடி வைத்தார்களா? இவர்களே இப்படி இருந்தால் மற்ற பாமர மக்கள் தங்கப் பெட்டியின் உள்ளே வெல்வெட் மெத்தை போட்டு பூட்டி தானே வைப்பார்கள். நம் பெண்கள் - நகைகள் மாட்டும் ‘ஸ்டாண்டா?’ இந்தப் பிரபல ஆண்கள் பிறந்த வயிற்றில்தான் அவர்கள் தங்கை, தமக்கை பிறந்தார்கள்? இவர்கள் தகப்பன்மார்கள் தான் அவர்களுக்கும் தகப்பன்மார்கள். அப்படி இருக்க, இவர்களுக்கு இருக்கும் புத்தி, திறமை அவர்களுக்கு ஏன் இல்லாமல் போகும்? இதை பயன்படுத்தாதது நாட்டிற்கும் சமூகத்திற்கும் நட்டமா இல்லையா?” என்று திராவிடப் பேரறிஞர்களைக் கேள்வி கேட்கிறார்.

ஆரிய, வைதீக எதிர்ப்பிற்கு திருக்குறளைப் பயன்படுத்திய பெரியார் திருக்குறளிலும் சில குறள்களில் பெண்ணடிமைத்தனம் சார்ந்த கருத்துக்கள் இருப்பதை குறிப்பிட்டு, “வள்ளுவனிலிருந்து ஒவ்வொரு பெரிய மனிதனும் பெண்ணை அடிமைப் பொருளாகத்தான் கருதி இருக்கிறானே தவிர, ஆண்களோடு சரிசமானமான உரிமை உடையவர்களாகக் கூறவில்லையே” என்கிறார்.

ஆயிரக்கணக்கான பள்ளிகளை ஏற்படுத்துதல், வகுப்புவாரி உரிமைக்கு சட்டம் இயற்றுதல், மருத்துவப் படிப்பிற்கு சமஸ்கிருதம் அறிந்திருப்பது அவசியம் என்றிருந்ததை ஒழித்தல், இந்து சமய அறநிலையத் துறை அமைத்தல் போன்ற பல்வேறு செயற்கரிய சாதனைகளை செய்த நீதிக் கட்சி ஆட்சியில் 23.3.1930 இல் தேவதாசிச் சட்டம் குறித்து குறிப்பிடும் போது, “இதற்காக - இந்தச் சட்டம் தொடர்பாக சர்க்கார் பொதுமக்களிடம் அபிப்ராயம் கேட்பது கோமாளித்தனம் என்பதே நமது அபிப்ராயம். ஏனெனில், கோவில்களில் கடவுளிகள் பெயரால் பெண்களுக்குப் பொட்டு கட்டி, அவர்களையே பொது மகளிர்களாக்கி, நாட்டில் விபச்சாரித்தனத்திற்கு செல்வாக்கும், மதிப்பும், சமய சமூக முக்கிய ஸ்தானங்களில், தாராளமாய் இடமும் அளித்து வரும் ஒரு கெட்ட வழக்கம், நமது நாட்டில் வெகு காலமாய் இருந்து வருகிறது…. ஒரு நாட்டில், நாகரீகமுள்ள அரசாங்கமாகவாவது அல்லது நாட்டின் சுயமரியாதையையோ பிரஜைகளுடைய ஒழுக்கத்தையோ, நலத்தையோ கோரின அரசாங்கமாவது ஒன்றிருந்தால், இந்த இழிவான கெட்டப் பழக்கம், கடவுள் பெயராலும், மதத்தின் பெயராலும், சமூகத்தின் பெயராலும், தேசிய வழக்கத்தின் பெயராலும் இருந்து வர, ஒரு கண நேரமும் விட்டுக் கொண்டு வந்திருக்காது என்று சொல்லுவோம். அடுத்த சட்டமன்ற கூட்டத்திலாவது இச்சட்டம் நிறைவேறாமல் போகுமேயானால், சர்க்காரின் யோக்கியத்திலும், ஜஸ்டிஸ் கட்சியாரின் சுயமரியாதையிலும் தெருவில் போகிறவனுக்குக் கூட மதிப்பும் நம்பிக்கையும் இருக்காது என்று சொல்லுவோம்” என்று கடுமையாக சாடுகிறார்.

அதுபோல, “சாரதா சட்டம் (குழந்தை மணத் தடுப்புச் சட்டம்) என்கிற ஒரு சட்டம் பிரிட்டிஷ் சர்க்கார் தயவினால் ‘பாசா’கியும், இந்திய தேசியவாதிகளாலும், 'பூரண சுயேச்சைவாதி'களின் முயற்சியாலும் அது சரியானபடி அமுலுக்கு வரமுடியாமல் முட்டுக் கட்டை போடப்பட்டு வருவதும், அச்சட்டம் கூடாதென்று வாதாடி ஒழிப்பதாகத் தெரியப் படுத்தினவர்களை ராஜாங்க சபைக்கும், மாகாண சபைக்கும் நமது பிரதிநிதிகளாக அனுப்பியது நம்மவர்களுக்கு மிக மிக மானக்கேடான காரியமாகும்” என்று எழுதுகிறார்.

இப்படி கொள்கையில் சமரசமின்மை, குறிப்பாக பெண் விடுதலை குறித்தான அவரது பார்வை தன் சொந்த சகாக்களையே எதிர்க்கும் நிலைக்கு அவரை அழைத்துச் சென்றது. பார்ப்பனரல்லாத கட்சித் தலைவர்கள், நீதிக்கட்சி தலைவர்கள், ஏன் திருக்குறளையும்கூட விட்டு வைக்காமல் விமர்சிக்கிறார்.

இன்றைக்கு 21 ஆம் நூற்றாண்டிலும் மறுமணம் பரவலாகாத நிலையில், “இந்த நாட்டின் ஆளுகை உரிமை இந்தியருக்கே கிடைக்க வேண்டுமென அரசியல் சீர்திருத்தக்காரர்களும், இந்திய மக்களுக்குள் இருக்கும் வகுப்பு பிரிவினையும், சாதி வேற்றுமையும் தொலைய வேண்டும் என்பதாக சமூக தீர்திருத்தக்காரர்களும் போராடுகிறார்களேயன்றி பெண் மக்களுள் ஒரு பகுதியினர் அழிந்து வருவதை பாராமுகமாகவே பார்த்து வருகின்றனர்” என்று விதவை மறுமணம் பற்றி 1926லேயே பேசுகிறார் தந்தை பெரியார். 1900களிலேயே தன்னுடைய தங்கை மகளுக்கு மறுமணம் செய்து வைத்தவரல்லவா அவர்!

பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராகப் பல்வேறு தரப்பினர் மீது தனது சாட்டையைச் சுழற்றிய பெரியார், பெண்களின் கால் விலங்கை உடைக்கும் கருவியாக கல்வியை முன் வைத்தார். அதுபற்றி, “பெண்களை வெளியில் செல்ல விடுவதில்லை; பிறருடன் தாராளமாகப் பழக அனுமதிப்பதில்லை. ‘சன்னலின் அருகே நிற்காதே, ‘வாசலில் யார் போகிறார்கள் என்று எட்டிப் பாராதே!’ ‘ஆண்கள் வந்தால் அடுப்பாங்கரைப் பக்கம் ஓடிவிடு’ என்றெல்லாம் கூறி அவர்களை ஒன்றும் தெரியாத முட்டாள்களாக்குகிறோம். இவை மாய்ந்துபோய், பெண்களுக்கு உண்மையான விடுதலை வர வேண்டும். ஆணுக்கும் பெண்ணுக்கும் எந்த விதத்திலும் வேற்றுமை இருக்கக்கூடாது. பெண்கள் வெறும் மிருக இனம்போல் நடத்தப்படும் இந்நிலை ஒழிந்தேயாக வேண்டும்; தாமாக ஒழித்துக் கொள்ள முயற்சிக்க மாட்டார்கள்; முன்வர மாட்டார்கள். ஆண்கள் தான் முன்வந்து, விட்டுக் கொடுத்து, பெண்களைச் சமநிலைக்குக் கொண்டு வர வேண்டும். தாய், தந்தையர் ஆண்களைவிட மேலாகப் பெண்களுக்குத்தான் அதிகப் படிப்புச் சொல்லிக் கொடுக்க வேண்டும்” என்று 1948இல் சென்னை விக்டோரியா மண்டபத்தில் பேசியவர், அதற்கு 10 ஆண்டுகள் முன்பே, “இப்போது பெண்கள் படித்து முன்சீப், கலெக்டர், மந்திரியாக வேலை பார்க்கிறார்கள். ஆகவே அவர்களுக்கும் சம உரிமை கொடுத்தால் ஆண்களைவிட நன்றாக வேலை செய்வார்கள். 4 ஆண்களும் 1 பெண்ணும் குடும்பத்தில் இருந்தால் முதலில் அந்தப் பெண்ணைத் தான் படிக்க வைக்க வேண்டும். அப்படி படிக்க வைத்தோமேயானால் நம்மை யெல்லாம் வண்டியில் வைத்து ஓட்டுவார்கள்” என்பதாக வாழ்க்கை துணைநலம் என்ற நூலில் தன்னுடைய அவாவை வெளிப்படுத்துகிறார்.

வெறுமனே படிக்க வைத்தால் மட்டும் போதுமா? இன்றைக்கும் பெரிய பெரிய படிப்பை எல்லாம் படிக்க வைத்து விட்டு, ‘படிப்பையும்’ நகை பணம் போல வரதட்சணையின் ஒரு பகுதியாக இணைத்து மாடுகளைப் போல பேரம் பேசி விற்றுக் கொண்டிருக்கிறார்களே? பெண்கள் பெரிய படிப்புகளைப் படித்துவிட்டு கரண்டியைத் தானே பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்? கல்வியறிவு பெற்ற பெண்ணாகவே இருந்தாலும் பெண்களின் கல்வியறிவு குடும்ப சுமையின் காரணமாக பயன்படாமல் போவது குறித்து கூறும் பொழுது,

“ஒரு பெண்ணை தாய் தகப்பன் பி.ஏ படிக்க வைத்து, ஒருவன் கையில் பிடித்துக் கொடுத்து, அந்தப் பெண் சமையல் செய்யவும், குழந்தை வளர்க்கவும், நகை, துணி அலங்காரங்களுடன் மக்கள் கவனத்தை ஈர்க்கவும் செய்தால், பி.ஏ படிக்க வைத்தப் பணம் வீண் என்பதோடு, அதற்காக சர்க்கார் செலவளித்த வரிப்பணமும் வீண் தானே? இது தேசிய குற்றமாகாதா?” என்று பெண்களின் அறிவு சமூகத்திற்குப் பயன்படாமல் போவதை தேசியக் குற்றம் என்கிறார்.

1946 ஆம் ஆண்டு திருப்பத்தூரில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவில் பெரியார் வெளிப்படுத்தும் ஆதங்கம் குறிப்பாக இந்தக் காலத்திற்கு அதிகம் பொருந்திப் போவது, “இங்கு படித்த பெண், படியாத பெண் எல்லோரும் பொம்மைகளாகவே இருக்கிறார்கள். பெற்றோர்களும், கணவன்மார்களும் அவரவர்களது பெண்களை அழகிய பொம்மைத் தன்மையை உடையவர்களாக ஆக்கி அதைக் கொண்டே திருப்தி அடைகிறார்கள்; பெருமை அடைகிறார்கள்.……நான் சில படித்த பெண்களைப் பார்க்கிறேன். வயிற்றில் ஒரு குழந்தை; கட்கத்தில் ஒரு குழந்தை; கையில் பிடித்துக் கொண்டு ஒரு குழந்தை; இவ்வளவோடு சிலருக்கு முன்னால் ஓடும்படி ஒரு குழந்தையை விட்டு - இப்படியாகப் படைகளோடு நல்ல நிகழ்ச்சிகள் நடக்கும் கூட்டங்களுக்கு வந்து நடுவிலிருந்து கொண்டு, நிகழ்ச்சிகளுக்கு இடையூறும் தொல்லையும் கொடுப்பதைப் பார்க்கிறேன். நகைக்கும் துணிக்கும் போடும் பணத்தைப் பாங்கியில் போட்டு குறைந்த வட்டியாவது வாங்கி, குழந்தை பிறந்தவுடன் அதை எடுக்க அந்த வட்டியில், ஓர் ஆள் வைத்தாவது அதைப் பார்த்துக் கொள்ளச் செய்தால், அன்பு குறைந்து விடுமா? பெற்ற தகப்பன் குழந்தையைத் தன்னுடன் கூடவே வைத்துத்தானா அழகு பார்க்கிறான்? அன்பு காட்டுகின்றான்? கொஞ்சி விளையாடுகின்றான்? ஆகையால், குழந்தையை ஆட்கள் மூலம் வளர்க்க வேண்டும். சமையல் - ஆட்கள் மூலம் செய்விக்க வேண்டும். பெண்கள் ஆண்களைப் போல் உயர்வேலை பார்க்க வேண்டும்; பொம்மைகளாக - நகை மாட்டும் ஸ்டாண்டுகளாகக் கூடாது என்கிறேன்” என்கிறார்.

பெண் விடுதலைக்கான போராட்டக் களத்தில் பெரியார் நிறைய அதிர்ச்சி வைத்தியங்களைக் கொடுத்தார். மரித்துப் போன சமூகம், மீண்டும் உயிர் பிழைக்க இந்த மாதிரியான அதிர்ச்சி வைத்தியங்கள் அவசியமாகத்தான் இருந்தது. ஆனால், பெரியார் வெறும் அதிர்ச்சி மதிப்பீடுகளைக் கொடுத்த அவசர கால மருத்துவர் மட்டுமே கிடையாது, தவறுகளை ஆராய்ந்து அவற்றை நீக்க வழிகளை யோசித்த சமூக விஞ்ஞானி.

"நம் பெண்கள், நாட்டுக்கும் சமூகத்துக்கும் பயன்படாமல் அலங்காரப் பொம்மைகளாக ஆனதற்கு, ஆண்களின் கண்களுக்கு விருந்தானதற்குக் காரணம், இந்தப் பாழாய்ப் போன - ஒழுக்கமற்ற சினிமாப் படங்களேயாகும். சினிமாப் பெண்களின் தன்மை என்ன? ஒழுக்கம் என்ன? வாழ்க்கை என்ன? இலட்சியம் என்ன? இவை எல்லாவற்றையும் நம் பெண்கள் கருதாமல் - புகழ், வீரம், பொதுநலத் தொண்டு முதலியவற்றில் கீர்த்தி பெற்ற ஆண்களைப் போல் தாங்களும் ஆக வேண்டுமே என்றில்லாமல் - இப்படி அலங்கரித்துக் கொண்டு திரிவது பெண்கள் சமுதாயத்தின் கீழ்ப்போக்குக்குத்தான் பயன்படும் என்றும் வருந்துகிறேன்” என்கிற பெரியாரின் கோபம், இன்றைய அலங்காரங்கள் சூழ்ந்த பெண்களின் அங்கங்கள், பண்டமாக மாற்றப்பட்ட முதலாளித்துவ உலகில் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. வீட்டைவிட்டு வெளியே வந்து சரிசமமாக வேலை செய்ய வேண்டும் என்கிறார். ஆனால், அலங்காரமும் கூடாது என்கிறார். பின்னர் எப்படி வெளியில் சென்று எல்லோரும் மதிக்கும்படி வேலை பார்ப்பது?

"ஒரு ‘ருக்குமணி’, ஒரு ‘விஜயலட்சுமி’ என்கின்ற பார்ப்பனப் பெண் தானா பொது வாழ்வில் ஈடுபடத் தக்கவர்களாக, மந்திரிகளாக ஆக வேண்டும்? ஏன் நம்மவர்கள் ஏராளமாக வெளியில் வரக்கூடாது? இவர்களைத் தடுப்பது சீலை, நகை, துணி அலங்காரவேஷம் அல்லாமல் வேறு என்ன?” என்று அதற்கும் பதில் சொல்கிறார்.

பெண்கள் விட்டொழிக்க வேண்டியது பற்றி கூறியவர், அறிவு பெற கல்வியும், ஆண்களை சார்ந்திருக்காத பொருளாதார விடுதலையும் பெண்களுக்கு அவசியமென முன் வைக்கிறார். “பெண்களுக்கு படிப்பு தொழில் ஆகிய இவை இரண்டும் பெற்றோர்களால் கற்பிக்கப்பட்டு விட்டால், சொத்து சம்பாதிக்கும் சக்தி வந்து விடும். பிறகு தங்கள் கண்வன்மார்களை தாங்களே தேர்ந்தெடுக்கவும், அல்லது பெற்றோர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், கணவனோடு சுதந்திரமாய் வாழ்க்கை நடத்தவும் கூடிய தன்மை உண்டாகி விடும்” என்றும் பெண் ஏன் அடிமையானாள் புத்தகத்தில் தந்தைவழிச் சமூகத்தில் பெண்களுக்கு மறுக்கப்படும் சொத்துரிமை, பெண் விடுதலையில் ஒரு முக்கியப் புள்ளி என்பதை உணர்ந்து குறிப்பாக பொருளாதாரரீதியாக சுயாதீனமாக இருக்க வேண்டும் என்கிறார்.

“தனியுரிமை உலகில் பெண்கள் சுதந்திரம் வேண்டுமென்பவர்கள், பெண்களை நன்றாய் படிக்க வைக்க வேண்டும். தங்கள் ஆண் பிள்ளைகளை இலட்சியம் செய்யாமல், பெண்களுக்கே செலவு செய்து படிக்க வைக்க வேண்டும். அவர்களுக்கு வாழ்க்கைக்கு ஏதாவது ஒரு தொழில் கற்றுக் கொடுக்க வேண்டும். தாய் தகப்பன்மார் பார்த்து ஒருவனுக்குப் பிடித்துக் கொடுப்பது என்று இல்லாமல், அதுவாக (பெண்ணாகவே பார்த்து) – தகுந்த வயதும் தொழிலும் ஏற்பட்ட பிறகு ஒருவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி செய்ய வேண்டும்” என்று 1936லேயே பெண்கள் சுயாதீனமாக வாழ வேண்டும் என்று பேசியிருக்கிறார்.

1959இல் புத்திரக்கவுண்டன் பாளையம் என்ற சாதியக் கட்டுப்பாடு இறுகிய ஊரில் “பணக்காரர்களாக அல்லது உயர்சாதி என்று கருதிக் கொண்டிருப்பவர்களிடம்தான் ‘பெண் வெளியில் போகக் கூடாது; அக்கம் பக்கம் பார்க்கக் கூடாது’ என இந்தக் காரியத்தில் அதிகக் கவலை கொண்டும், கட்டுப்பாடு உள்ளது. சாதாரண பாட்டாளி மக்கள், ஏழைகள், அன்றாடக் கூலி மக்களாக வாழ்பவர்களிடத்தில் இவ்வளவு கடுமையான கட்டுப்பாட்டைக் காண முடியவில்லை.” என்று பேசியிருக்கிறார்.

1930 ஆம் ஆண்டு ‘குடிஅரசு’ தலையங்கம் ஒன்றில், “உலகில் பொருளியல் சமத்துவம் ஏற்படுகின்றவரை திருட்டு என்னும் குணமானது குற்றமாகத்தான் பாவிக்கப்படும். இன்று உலகத்தில், சிறப்பாக நமது நாட்டில் இருந்து வரும் கட்டுப்பாடு, ஒழுக்கம் முதலியவைகள் எல்லாம் பெரிதும் இயற்கைக்கு எதிராகவும் - அடிமைத்தனத்திற்கு ஆதரவாகவும் - தனிப்பட்டவர்கள் சுயநலத்திற்கேற்ற சூழ்ச்சிகளுமாகவே இருக்கின்றன.” என்கிறார்.

“தனியுடமை இல்லாத ரஷ்யா போன்ற நாடுகளில் பெண்கள் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்திருப்பதை நாம் பார்க்கலாம். தனியுடமை இல்லாத நாட்டில் திருமண முறை இருக்காது. வாழ்க்கை ஒப்பந்தம் தான் இருக்கும்” என்று 1948இல் தனியுடமை எப்படி பெண்களை ஒரு பண்டமாக்குகிறது என்பதைக் குறிப்பிட்டு பேசுகிறார்.

உண்மையில் பெரியார் எளியவர். நடைமுறைக்கானவர். சமூகத்தின் மதிப்பீடுகளால் வரையறுக்கப்பட்ட, நடைமுறைக்கு ஒவ்வாத, அறிவுக்கு எட்டாத அனைத்தையும் தூக்கி எறிந்தவர். அதில் மிக முக்கியமானது, காதல். காதல் என்றால் உண்மையாக இருக்க வேண்டும், காதல் என்கிற உணர்வு தெய்வீகமானது என்றெல்லாம் பேசியவர்களுக்கு, “தனித்தமிழ் மொழியில் பார்த்தாலும், ஆண் - பெண் கூட்டு சேர்க்கை முதலியன சம்பந்தமான விஷயங்களுக்கும் அன்பு, ஆசை, நட்பு, நேசம் என்பவைகளைத் தவிர வேறு தமிழ் மொழியும் இல்லை. இவைகளுடன் காதல் என்பதைச் சேர்த்துக் கொண்டால், இக்கருத்துக்களையே தான் மாற்றி, மாற்றி ஒன்றுக்கு மற்றொன்று கூறப்படுகின்றதே தவிர காதலுக்கு என்று வேறு பொருளில்லை. ஆதலால், இவைகளின்றிக் காதல் என்பதற்கு வேறு தனி அர்த்தம் சொல்லுகின்றவர்கள் அதை எதிலிருந்து கண்டு பிடித்தார்கள் என்று தெரியவில்லை” என்று காதலைச் சுற்றியுள்ள புனிதங்களை உடைத்தும், “காதல் கொள்ளும்போது காதலர்கள் நிலைமை, மனப்பான்மை, பக்குவம், இலட்சியம் ஆகியவைகள் ஒரு மாதிரியாக இருக்கலாம். பிறகு கொஞ்ச காலம் கழிந்தபின் இயற்கையாகவே பக்குவம், நிலைமை, இலட்சியம் மாறலாம். இந்த மாதிரிச் சந்தப்பங்களிலும் காதலுக்காக ஒருவருக் கொருவர் விட்டுக் கொடுத்துக் கொண்டு சதா அதிருப்தியில் துன்பத்தில் அழுந்த வேண்டியது தானா என்று பார்த்தால் அப்போதும் காதலுக்கு வலுவில்லாததையும் அது பயன்படாததையும் காணலாம்” என்று 1931லேயே பரஸ்பரமாக பிரிந்து செல்லுதல் குறித்து எழுதுகிறார்.

பெண்கள் திருமண பந்தத்திற்கு செல்லாமல், ஒப்பந்த முறையில் ஆணுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்னும் அவாவை வெளிப்படுத்துபவர், சட்டகங்களைக் கடந்தவர், ஏன் சுயமரியாதைத் திருமணம் என்ற சட்டகத்தை காட்டுகிறார்? ஒருபுறம் அதிர்ச்சி மதிப்பீடுகளையும், எதிர்கால அவாவை வெளிப்படுத்தினாலும், மக்களிடமிருந்து விலகிச் செல்லாமல் தற்போதைக்கான எளிமையான நடை முறைக்கான தீர்வுகளைச் சொல்கிறார்.

1934இல் சென்னை சவுக்கார்பேட்டையில், எப்படி வைதீக முறைப்படி நடைபெறும் திருமணம் நடைமுறைக்கு ஒவ்வாமலிருக்கிறது என்றும், சுயமரியாதைத் திருமணம் எப்படி மிகவும் எளிமையாக, செலவுகளையும் சிரமங்களையும் குறைத்து, பரஸ்பர அன்புடனும் மரியாதையோடும் இருக்க முடியும் என்று மிகவும் எளிமையாகப் பேசுகிறார். புனித தலங்களுக்கு நடந்து செல்வதை நிறுத்தி, வாகனங்களிலும் விமானங்களிலும் செல்வது சமூகத்தில் ஏற்பட்ட சீர்திருத்தத்தினால்தான் என்றும், இவை அனைத்தும் வசதிக்கேற்றார் போல் மாற்றப்படும் போது, திருமணம் மட்டும் ஏன் இவ்வளவு பேருக்கு சிரமம் தந்து நடைமுறைக்கொவ்வாமல் நடைபெற வேண்டும் என்று அதே வருடமே கோவையில் பேசும் போது மீண்டும் கேள்வி எழுப்புகிறார்.

ஆரிய முறை என்றுதான் திருமண முறையை எதிர்க்கிறோமா என்றால், “அறிவு, அனுபவம், ஆராய்ச்சி ஆகியவற்றின்மீது ஏற்பட்ட மணமுறைகளுக்கே இங்கு வேலை உண்டு. அவை பழையவையானாலும், புதியவையானாலும், தமிழனுடையதானாலும், ஆரியனுடையதானாலும், அய்ரோப்பியனுடைய தானாலும் இருந்து போகட்டும்” என்கிறார்.

அதே வேளை, “திராவிடர் திருமணம் என்றாலும் நான் இதை 1946-ம் வருசத்திய (தற்கால நிலைக்கேற்ற) திருமணம் என்றும், இதுவே இன்று உலக மக்கள் திருமணமாக இருக்க வேண்டும் என்றும் சொல்லுகிறேன். ஆனால், இது மாறாமல் இப்படியே இருக்க வேண்டும் என்று நான் சொல்லுவதில்லை. 1946 ஆம் வருஷத்தியது என்று நான் சொன்னதால் 1956-க்கும் இப்படியே இருக்க வேண்டும் என்பது கருத்தல்ல” என்று பேசுகிறார்.

பெரியாரின் தர்க்கத்தை எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், அவர் எல்லா வகையான சமூகத்தின் ஒடுக்குமுறை அமைப்புகளையும் நிராகரித்தவர். பகுத்தறிவுக்கு ஒவ்வாத எவற்றையும் தூக்கி வீசச் சொல்பவர்; அது அவருடைய கருத்தானாலும் சரி, அந்த அளவுக்கு ஜனநாயகவாதியான அவர், தான் ஒரு பிற்போக்குவாதி என்று வருங்காலத்தில் அழைக்கப்பட வேண்டும் என்று ஆழமாக விரும்பிய கலகக்கார அராஜகவாதி. இந்த பெரியார்தான் எனக்குக் கிடைத்த பெரியார்.

(தஞ்சை ஆய்வரங்கில் நிகழ்த்திய உரை. கட்டுரையாளர் : சட்டக் கல்லூரி மாணவி)

Pin It