உண்மையான தத்துவம் தம் தாய்மார்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பெண்களை ஆண்களுக்கு அடிமையாக்கப் பலவிதச் சடங்குகளைச் செய்கின்றனர். அவற்றில் ஒன்று தான் இந்தக் காது குத்துவதுமாகும். இந்த நகைகள் - ஓட்டைகள் எல்லாம் எதற்காக என்றால், கொஞ்சம் வலுவான பெண்கள் ஆண்கள் (தங்கள் கணவன்) அடிக்கும் போது எங்கே திருப்பி அடித்து விடுவார்களோ என்று, ஆண்கள் அவர்கள் திரும்ப அடிக்காமல் முதுகைக் காட்டும்படிச் செய்வதற்காகவே இவை யாவும், காதிலும், மூக்கிலும் ஓட்டையைப் போட்டு நகையை மாட்டினால் ஆண் அடிக்கப் போனால் பெண் தன் முகத்தையும், காதையும் பொத்திக் கொண்டு முதுகைக் காட்டுவாள். அதற்குத் தான் இந்த நகைகள் பயன்படுகின்றன. ரொம்ப பேர் எங்கள் பக்கங்களில் சம்மதிப்பது கிடையாது.
சாமி, குளம் இதெல்லாம் எதற்காக என்றால், நாம் கீழ்ஜாதி என்பதை உறுதிப்படுத்துவதேயாகும்.
நம் மக்கள் சமுதாயத்தில் ஒற்றுமையில்லாமல் பிரிந்து, பல ஜாதி, பல இனம், பல சமுதாயம், இனப்பற்று அற்று ஒருவருக்கொருவர் காட்டிக் கொடுக்கும் தன்மையில் இருப்பதால் இவற்றையெல்லாம் கண்டு நாம் சும்மா திரிகிறோமே, இந்தத் துறையில் பணியாற்றலாம் என்று கருதி, இதில் இறங்கினேன். எனது தொண்டு ஒன்றும் பயனற்றுப் போகவில்லை. ஓரளவு மக்களையாவது நம் பக்கம் திருப்பி இருக்கிறது. சமுதாயத்துறையிலும் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
தாய்மார்கள் பிள்ளைகளை நல்லா படிக்க வைக்க வேண்டும். நல்லவர்களோடு பழக விட வேண்டும். முன்பு உறை போட்டுக் கொண்டிருந்த துலுக்கப் பெண்கள் இப்போது பனியன்கள் போட்டு குஸ்திச் சண்டைக்கு வருகின்றார்கள். வெள்ளைக்காரப் பெண்களும் சமமாகப் பழகுகின்றனர். அதுபோல நம் பெண்களும் ஆண்களோடு எல்லா காரியங்களிலும் சரிநிகராகப் போட்டிப் போட வேண்டும். சமுதாயத்தில் பாதி அளவு இருக்கும் பெண்கள் தங்கள் அடிமைத் தன்மையால் சமுகத்திற்குப் பயன்படாமல் போய் விடுகின்றார்கள். அவர்கள் விடுதலை பெற்றால் தான் நம்நாடு முன்னேற்றமடைய முடியும். சமுதாயம் முன்னேற்றமடைய முடியும் என்பதால், நாங்கள் சமுதாயச் சீர்திருத்தம் செய்யக் கூடியவர்களானதால் இதையெல்லாம் எடுத்துச் சொல்லி மக்கள் திருந்த வேண்டுமென்று பாடுபடுகின்றோம்.
------------------------ 16.06.1968 அன்று அன்பரசி காதணி விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை- "விடுதலை" 07.07.1968
அனுப்பி உதவியவர்: - தமிழ் ஓவியா