...நான் பொதுத் தொண்டையே முக்கியமாகக் கருதுபவன் ஆனதனாலே, நம் மனித சமுதாயம் முன்னேற வேண்டும் என்பவன் ஆனதனாலே, பழைமைகளில் எல்லாம் நம்பிக்கை இல்லாதவன் ஆனதனாலே என் கண் முன்னே நடக்கும் நிகழ்ச்சிகளை வைத்துக் கொண்டு, அதன்படி மனிதன் முன்னேற வேண்டுமென்று நினைப்பவனாவேன்.
புலவர் அவர்கள் நேற்று, சுமார் அய்ந்து ஆண்டுகளுக்கு முன் நம் கண் முன்னிருந்த பாரதிதாசன் அவர்களின் கதையை எடுத்துக் கூறினார்கள். அதைக் கேட்கும்போது எனக்கே மிக ஆச்சரியமாக இருந்தது. அவ்வளவு தெளிவாக உண்மையை எடுத்துக் கூறி இருக்கிறார். நமக்கு என்னென்ன தேவை என்பதை எடுத்து விளக்கி இருக்கிறார். இதையெல்லாம் நம் மக்கள் படித்துத் தெளி வடைய வேண்டும். நம் உண்மை நிலையை உணர வேண்டும், திருந்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
இன்றைக்கு நமக்கு என்ன வேண்டுமென்பது வள்ளுவனுக்கு எப்படித் தெரியும்? இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னே இருந்தவனுக்கு மனிதன் எப்படி ஆவான் என்பது எப்படித் தெரியும்?
அதற்கு முன் பெண்களைப் பார்த்தாலே அவள் அணிந்திருக்கும் நகை - உடைகளை வைத்து, அவள் எந்த ஜாதியைச் சேர்ந்தவள் என்று சொல்ல முடியும். இப்போது யாரைப் பார்த்தாலும் ஒன்றாகவே தோன்றுகிறது. புரிந்து கொள்ள முடிய வில்லை. அவ்வளவு வளர்ச்சியடைந்து விட்டது.
தாலி எதற்காகக் கட்டப்படுகிறது என்பதை நம் பெண்கள் இன்னும் உணரவில்லை. ராஜா மனைவியாக இருந்தாலும், பெரிய ஜமீன்தார் மனைவி - பணக்காரர் மனைவி என யாராக இருந்தாலும், அவன் செத்தவுடன் அறுப்பதற்காகத் தானே அந்தப் பெண்ணை முண்டச்சியாக்கத் தானே பயன்படுகிறது. வேறு எதற்குத் தாலி பயன்படுகிறது?
100-வருடங்களுக்கு முன் வரை உடன் கட்டை ஏறும் வழக்கம் இருந்து வந்தது. அது மதப்படி ஒரு சடங்காகச் செய்யப்பட்டு வந்தது. வெள்ளைக்காரன் வந்து அது கொலைக் குற்றம் என்று ஆக்கியபின் தான் நின்றது. இப்போது என்ன சொல்கிறோம், இப்படி ஒரு காட்டுமிராண்டிக் காலமா இருந்தது? என்று எண்ணுகின்றோம், ஆச்சரியப்படுகின்றோம். அதுபோல் தான் நாளைக்கு வரும் பெண்கள் நினைப்பார்கள். பெண்களுக்குத் தாலி கட்டும் பழக்கம் கூடவா இருந்தது என்று!
நாட்டிலே காட்டு மிராண்டித் தன்மைகள், கொடுமைகள் நிறைந்து விட்டன. பார்ப்பான் வந்தான், அவன் யோசனை சொல்பவனாக ஆகி விட்டான்.
பெண்கள் ஆண்களின் சொத்துகள். அவன் சொல்படி நடந்து கொள்ள வேண்டியவர்கள் என்றும் ஆக்கி விட்டான். நம் இலக்கியம், புராணம் இவற்றில் வரும் பெண்களை அடிமைகளாகவே காட்டி விட்டான். கண்ணகி - அரிச்சந்திரன் - திரவுபதி இந்தக் கதைகள், பெண்கள் அடிமை களாகவே இருக்க வேண்டும், கணவன் சொல்படியே நடந்து கொள்ள வேண்டும், அதுதான் பெண்கள் கற்புடையவர்கள் என்பதற்கு இலக்கணம். இது போன்று நடக்கிற பெண்கள் தான் மோட்சத்திற்குப் போக முடியும் என்று எழுதி வைத்து விட்டான்.
இந்தக் கதை எழுதினவனெல்லாம் முட்டாள் என்று கூடக் கருத முடியவில்லை. மகா அயோக்கி யன்கள் என்று தான் கருத வேண்டி இருக்கிறது! அந்தக் காலத்து முட்டாள் கதை எழுதினான் என்றால், இந்தக் காலத்து முட்டாள் அவற்றுக்குச் சிலை வைக்கிறான்.
இந்த நாடு - காட்டுமிராண்டித் தன்மையி லிருந்து விலகாமல் மக்களைச் சிந்திக்க விடாமல் பாதுகாத்து, முட்டாள்களாக்கவே பாடுபடுகின்றார் கள். அதனால் தான் நம் நாடு இன்னமும் முன்னேற்ற மடையாமல் காட்டுமிராண்டி நிலையிலேயே இருக்கின்றது. தமிழன் பண்பாடு - தமிழின நன்மை - தமிழின வாழ்வு என்று போனால், இன்னும் 2,000 ஆண்டுகளுக்குப் பின் தானே செல்வோம். ஓர் அடி கூட முன்னே செல்ல முடியாதே!
தனக்கு வேண்டிய கணவனைத் தேர்ந் தெடுத்துக் கொள்ளக் கூடிய உரிமை கூட பெண் களுக்கு இல்லை என்றால், இது என்ன சுதந்திரம்? ஆறறிவுள்ள மனிதனுக்கு இதுதானா பயன்? பெரிய குறை - பெண்கள் அடிமையாக இருந்ததற்குக் காரணம் பெண்களுக்குக் கல்வி அறிவு, படிப்பு வாசனை இல்லாமல் செய்ததே யாகும். பெண்கள் படித்தாலே கெட்டு விடுவார்கள் என்று ஒரு தவறான கருத்தே நீண்ட காலமாக மக்களிடமிருந்து வந்தது. எதுவரை இருந்தது என்றால், வெள்ளைக்காரன் வந்து 150-வருடம் வரை நம்மை ஆட்சி செய்தும், பெண்கள் படிக்கவேயில்லை. 30, 40-ஆண்டுகளுக்கு முன்பு நம் உணர்ச்சி கிளம்பிய பிறகுதான் பெண்கள் படிக்கவே ஆரம்பித்தனர்.
பெண்கள் உருப்படியாக வேண்டுமானால், இத்திருமண முறையையே உடன்கட்டை ஏறுதல் போல் சட்டம் கிரிமினல் குற்றமாக்க வேண்டும். அப்போது தான் பெண்கள் சமுதாயம் சுதந்திரம் பெற்று சமுதாயத்திற்குப் பயன்பட முடியும்.
இப்போது அரசாங்கத்தில் பெண்களின் திருமண வயது வரம்பை 21-க்கு உயர்த்திச் சட்டம் கொண்டு வர இருக்கிறார்கள். இதற்கு அரசாங்கம் சொல்லும் காரணம், 21-வயதில் திருமணம் செய்தால் மூன்று குழந்தைகள் குறையும் என்பதாகும். நாம் சொல்வது அது மட்டுமல்ல, பெண்கள் அந்த வயதுக்குள் நல்ல கல்வி கற்று, தாங்களே உத்தியோகம், தொழில் செய்யும் அளவுக்கு அறிவு பெற்று விடுவர். அதன் பின் தனக்குத் தேவையான ஒத்த உரிமையுள்ள, தனக்கு ஏற்ற துணைவனைத் தாங்களே தேர்ந்து எடுத்துக் கொள்ளக் கூடிய தன்மையும் பெற்று விடுவார்கள் என்பதுதான்.
தாய்மார்கள் தங்கள் பெண்களை நிறையப் படிக்க வைக்க வேண்டும். அதோடு ஒரு தொழிலையும் கூடக் கற்றுக் கொடுக்க வேண்டும். அவர்கள் தாங்களாகவே தங்கள் வாழ்வை நடத்தக் கூடிய வருவாய் கிடைக்கும்படியான நிலைமை பெற வேண்டும். பெண்கள் கெட்டுப் போவார்கள் என்ற எண்ணமே பெற்றோர்களுக்கு இருக்கக் கூடாது.
பெண்கள் இனி சமையல் செய்யக் கூடாது. பின் எப்படி என்றால், ஹோட்டலுக்கு, ரெஸ்டா ரென்ட்டுக்குப் போய் தங்கள் உணவை முடித்துக் கொள்ள வேண்டும். அப்படி ஆரம்பித்தால் நல்ல ரெஸ்டாரன்ட்டுகளும் ஏற்பட்டு விடும். வெளி நாடுகளில் எல்லாம் அப்படித்தான்! ஆணும், பெண்ணும் தங்கள் தங்கள் வேலைக்குச் சென்று விடுவார்கள். தங்குவதற்கு ஒரு அறையையே வாடகைக்கு எடுத்துக் கொள்வார்கள். அதற்குள் ஒரு பீரோ, கட்டில், இரண்டு நாற்காலிகள் இவை தான் இருக்கும். பொதுவான குளியலறையும் - கக்கூசும் இருக்கும். இரவு தூங்குவார்கள். தேவைக்குப் பொது குளியலறை கக்கூசைப் பயன்படுத்திக் கொள்வார்கள். இதனால் ருசியான உணவு கிடைக்கிறது; வீட்டு வாடகை குறைகிறது; நேரம் மிச்சமாகிறது; உணவிற்காகச் செலவிடும் பணமும் குறைகிறது.
இன்னும் கொஞ்ச நாள் போனால், பொது உணவு விடுதிகளில் உண்ணும் முறை தான் இங்கு வரும். இதுதான் சுலபமானதாகும்.
நாம் உடை - நகை இவற்றுக்கு நிறைய செலவிடுகின்றோம். பெண்களுக்கு எவ்வளவுக் கெவ்வளவு நகை - உடை ஆசை ஏற்படுகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு அடிமை உணர்ச்சி தான் ஏற்படுமே ஒழிய, சுதந்திர உணர்ச்சி ஏற்படுவது கிடையாது.
...இறுதியாகக் குழந்தைகள் அதிகம் பெறுவது பெரும் கேடாகும். இரண்டு குழந்தைகளோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். இன்றைக்கு அரசாங்கமே இதனை உணர்ந்து, பல திட்டங்களைப் போட்டு அதிகக் குழந்தைகள் பெறாமல் தடுக்க மருத்துவ வசதிகள் செய்திருக்கின்றது. அதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதிகக் குழந்தைகள் பெறுவதுதான் அவன் தன்னையும் தியாகம் செய்து, தனது மனைவியையும் தியாகம் செய்து ஒழுக்கக் கேடான காரியங்களிலும் ஈடுபடச் செய்கிறது. ஓரளவாவது சுதந்திரத்தோடு, பிறர் கையை எதிர்பார்க்காமல், கவலையற்று வாழ வேண்டுமானால் அதிகமான குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடாது.
மேலும் மணமக்கள் மூட நம்பிக்கையான கோயில் - குளம் - பண்டிகை - உற்சவம் இவற்றுக்குச் செல்லக் கூடாது. மிருக உணர்ச்சியைத் தூண்டும் சினிமாவிற்குச் செல்லக் கூடாது. வேண்டுமானால், கண்காட்சிகளுக்குச் சென்று பெரிய பெரிய இயந்திரங்கள் வேலை செய்யும் நெய்வேலி போன்ற நகரங்களுக்குச் சென்று அவை எப்படி வேலை செய்கின்றன என்பதையெல்லாம் பார்த்துத் தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
தோழர் பெரியார், விடுதலை, 20.02.1968