தமிழ்நாட்டில் ‘திராவிடர்’, ‘பெரியார்’ என்ற சொற்கள் எப்படிப் பார்ப்பனர் களுக்கும், பார்ப்பன அடிமைகளுக்கும் விழுங்க முடியாத நெருப்புத் துண்டுகளாக இருக்கிறதோ, அதே அளவுக்கு அகில இந்திய அளவிலான பார்ப்பனர்களுக்கும், பார்ப்பன அடிமைகளுக்கும் ‘பீமா கோரிகாவ்’ வரலாறு ஒரு நெருங்கமுடியாத நெருப்பாகவே  இருக்கிறது.  

‘பீமா கோரிகாவ்’. புனே மாநகரின் வட கிழக்கே 23 கி.மீ தொலைவில் உள்ள கோரிகாவ் என்ற ஊரில் உள்ள ‘பீமா’ என்ற நதிக்கரை தான் இந்த ஆண்டின் முதல் பரபரப்புச் செய்தி. நாம் அந்த ஊரை ஆங்கில உச்சரிப்பின் அடிப்படையின் ‘கோரிகான்’ என்கிறோம். மராட்டியர்கள் ‘கோரிகாவ்’ என்று அழைக்கிறார்கள்.

beema gorikaan

தமிழ்நாட்டில் முதன்முறையாக காட்டாறு ஏடு 01.01.2018 இல், அந்த வீரஞ்செறிந்த போரின் வீரவணக்கநாளை ஒரு உறுதி ஏற்பு நிகழ்வாக அறிமுகப்படுத்தியது. திருப்பூர், திண்டுக்கல் நகரங்களில் நடந்து முடிந்தது. கோபிச்செட்டி பாளையத்திலும் நடைபெற உள்ளது. திண்டுக்கல்லில் ‘சாதி மதவெறி எதிர்ப்புக் கூட்டமைப்பு’ அந்தப் போர் தொடர்பான இன்றைய சூழலையும் விவாதிக்கும் கருத்தரங்கையும் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்வுகளை நாம் திட்டமிட்டதன் நோக்கம் ஒன்றுதான்.

பார்ப்பனர்கள் நமக்கு அந்நியர்கள். இங்கு இந்தியப் பகுதியில் வாழும் பட்டியலின மக்கள், பிற்படுத்தப்பட்டவர், பழங்குடியினர், இஸ்லாமியர், கிறிஸ்தவர் போன்ற அனைத்து மக்களும் ஒரே இனம்தான் என்பதைப் புரியவைக்க வேண்டும்.

இது நமது நோக்கம் மட்டுமல்ல; தோழர் பெரியார், தோழர் அம்பேத்கர் போன்ற எண்ணற்ற தலைவர் களின் கருத்தும் இதுதான். இந்த நோக்கத்தைத் தெளிவாகக் கூறுவதற்கு வரலாறே நமக்குத் தந்த கொடைதான், பீமா கோரிகாவ் போர் வரலாறு.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, இஸ்லாமிய, கிறிஸ்தவர்கள் ஓர்அணி. பார்ப்பன பேஷ்வாக்கள் எதிர்அணி. இந்து வேத, மனுசாஸ் திரத்திற்கு எதிராக நடந்த முதல் ஆயுதப் போராட்டம். பாரத வர்ஷம் என்ற பகுதி, இந்தியா வாக உருவாகிக் கொண்டிருந்த காலத்தில் நடந்த முதல் விடுதலைப் போராட்டம். ஒருவேளை இப்போராட்டம் தோல்வியைத் தழுவியிருந்தாலும், இப்போரை நாம் கொண்டாடியே ஆக வேண்டும்.  இந்த திராவிடர்  - ஆரியச் சமரை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், மராட்டிய வரலாற்றில் கொஞ்சம் பின்னோக்கிச் சென்று, பிறகு 1818 க்கு வருவது நல்லது.

சிவாஜி பட்டம் ஏற்கத் தடைவிதித்த பார்ப்பனர்கள்

கி.பி.1674 இல் மராட்டியப் பேரரசின் மன்னராக சிவாஜி முடிசூட்டிக்கொண்டார். அதற்கு முன்பு ஏறத்தாழ 370 போர்களில் வென்று தனது வீரத்தைப் புரியவைத்தவர் சிவாஜி. மாபெரும் வீரனாக இருந்தாலும், பார்ப்பனர்களுக்குப் பெரும் அடிமையாகவே இருந்தார்.

போர்வீரனாகவே வாழ்ந்து வந்த சிவாஜி, தனது ஆட்சியைத் தனது பார்ப்பன குரு இராம தாசுக்குச் சமர்ப்பணம் செய்துவிட்டு, அடுத்தடுத்த போர்க்களங்களை நோக்கிச்சென்று கொண்டிருந் தார்.  அவரது போராட்டக் காலங்களில், மராட்டிய அரச நிர்வாகம் முழுக்க முழுக்கப் பார்ப்பனர்கள் ஆதிக்கத்தில் இருந்தது. போராடிக் கொண்டிருந்த சிவாஜி, கொஞ்சம் நிதானித்து, தான் மன்னராகப் பட்டம் ஏற்க வேண்டும் என நினைத்தார். அதுவரை தலைமை நிர்வாகிகளாக இருந்த அவரது குரு இராமதாஸ் உட்பட அனைத்துப் பார்ப்பனர்களும் அதைக் கடுமையாக எதிர்த்தனர்.

இந்து மத வேதங்களின் படியும், சாஸ்திரங் களின் படியும் சூத்திரனான சிவாஜிக்கு மன்னராக முடிசூட்டிக் கொள்ளத் தகுதி இல்லை என்று மறுத்தனர். அவர்களின் எதிர்ப்பை மீறி உத்திரப் பிரதேசம் பகுதியிலிருந்து காகப்பட்டர் என்ற பார்ப்பனரை அழைத்து, பட்டமேற்க முடிவு செய்தார் சிவாஜி. காகப்பட்டரும் மனுசாஸ்திரப்படி சிவாஜி பட்டம் ஏற்க முடியாது என்றே கூறினார். ஆனால், அதற்குப் பிராயச்சித்தமாக 50 ஆயிரம் பார்ப்பனக் குடும்பங்களுக்கு பொன்னையும், பொருளையும், நிலத்தையும் கொடுக்க வேண்டும் என்று ஒரு மாற்றுவழி கூறினார். சிவாஜி அதை ஏற்றுக் கொண்டு காகப்பட்டர் கூறியதைச் செய்து கொடுத்தார். அந்தக் காலத்தில் அதற்காக அவர் செலவழித்த தொகை 7 கோடி ரூபாய்களாகும். 1674 இல் 7 கோடி ரூபாய் என்றால் 2018 ல் கணக்குப் போட்டுப் பாருங்கள்.

370 கோட்டைகளை வென்ற மாபெரும் வீரராக இருந்தாலும்-பெரும் நிலப்பரப்பை ஆள்பவராக இருந்தாலும் முடிசூட்டிக்கொள்வது என்ற சடங்கிற்காக அரசாங்கத்தின் ஒட்டுமொத்தக் கருவூலத்தையும் பார்ப்பனர்களுக்குக் கொட்டிக் கொடுத்து - பார்ப்பனர்களின் அங்கீகாரத்தைப் பெறத் துடித்தார். அதுதான் அன்றைய சமுதாய நிலை. ஆனால், அப்படி மன்னராகப் பதவியேற்றதில் பார்ப்பனர்கள் நடந்துகொண்ட மனுசாஸ்திர அணுகுமுறை மன்னர் சிவாஜியைப் பார்ப்பன எதிர்ப்பாளராக மாற்றியது.

மனுசாஸ்திர எதிர்ப்பாளர் சிவாஜி

பார்ப்பனக் கொடுமைகளைக் கடந்து, கருவூலத்தையே காலியாக்கி, பட்டமேற்ற பின்னர் இரண்டு மாதங்களிலேயே மற்றும் ஒரு பட்டம் ஏற்பு விழாவை நடத்தினார் சிவாஜி. அது புத்த மத முறைப் படியான பட்டமேற்பு விழா ஆகும். ‘சாக்கியபந்த்’ என்று கூறப்படும் அந்த புத்த முறைப்படி, மன்னராக முடிசூடுபவர் ஒரு தலித் பெண்ணின் கணவராக இருக்கவேண்டும். அதனால், சிவாஜி ஒரு தலித் பெண்ணைத் திருமணம் செய்து, அதன் பின்னர் புத்தமுறைப்படி மகுடம் சூடிக்கொண்டார். இந்த ‘சாக்கியபந்த்’ தின் படி அவர் ஒரு இந்து அல்ல. புத்த மதத்தவர்.

பதவிஏற்புக்கு முன்னரேகூட, சில இந்துச் சட்டங்களை அவர் எதிர்த்திருக்கிறார். அந்தக் காலத்தில் கணவன் இறந்த உடன் உயிரோடு இருக்கும் மனைவியையும் அந்தத் தீயிலேயே போட்டு எரிக்கும் இந்துமதப் பண்பாடான ‘உடன்கட்டை ஏறுதல்’ மிக மிகக் கட்டாயமாக இருந்தது. ஆனால், சிவாஜியின் தந்தை சாகாஜி இறந்தபோது, சிவாஜி தனது தாயார் ஜிஜாபாயை உடன்கட்டை ஏற அனுமதிக்கவில்லை.

பதவி ஏற்ற பிறகு மக்கள் ஒடுக்கப்படுவதற்குக் காரணமான இந்து மதத்தின் மீதும், இந்து வேத சாஸ்திரச் சட்டங்களின் மீதும் பல நேரங்களில் எதிர்வினை ஆற்றினார். பார்ப்பனர்களுக்கு இணையாக, இஸ்லாமியர்களுக்கும், பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் நிர்வாகங்களில் இடம் கொடுக்கத் தொடங்கினார்.

ஆயுதம் தாங்கும் உரிமையைச் சத்திரியர்களுக் குத்தான் கொடுத்துள்ளது மனுசாஸ்திரம். சூத்திரர்கள் மற்ற அனைத்து ஜாதிகளுக்கும் அடிமைச் சாதிகள். அவர்களது கடமை, பார்ப்பனர் களுக்கும், சத்திரியர்களுக்கும், வைசியர்களுக்கும் அடிமை வேலைகள் செய்வது மட்டும்தான் என்கிறது மனுசாஸ்திரம். அந்த அடிப்படையில் தான் சூத்திரன் சிவாஜிக்கு பட்டம் மறுக்கப்பட்டது. பதவி ஏற்ற உடன் தனது மராட்டியப் படையில் தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மை இஸ்லாமியர் என அனைத்துப் பிரிவினரையும் இணைத்தார்.

கடல்கடந்து போரிடச் செல்லும்போது தவம் செய்து, யாகங்களை நடத்தி, பரிகாரங்களைச் செய்து, பார்ப்பனர்களுக்கு பொன்னையும், பொருளையும் கொடுக்க வேண்டும். ஆனால், பதவி ஏற்புக்குப் பிறகு சிவாஜி எந்தத் தவத்தையும், யாகத்தையும், பரிகாரங்களையும் மேற்கொள்ள வில்லை.

சூத்திரனுக்கு எதைக்கொடுத்தாலும் கல்வி யைக் கொடுக்கக்கூடாது, சூத்திரன் வேதங்களைக் காதால் கூடக் கேட்டுவிடக்கூடாது, கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்றது மனுசாஸ்திரம். சிவாஜியோ தனது மகன் சாம்பா ஜிக்கு சமஸ்கிருதத்தைக் கற்றுக் கொடுத்தார். அந்த மொழியில் அவரது மகன் சாம்பாஜி பெரும் புலமை பெற்றார். அதன் வழியே பார்ப்பனர்களின் பித்தலாட்டங்களைப் புரிந்து கொண்டார்.

சிவாஜியின் படையில் முஸ்லீம் தளபதிகள்

  • சிவாஜியின் இராணுவத்தில் குறிப்பிடத்தக்க அளவில் முஸ்லீம்கள் இடம் பெற்றிருந்தார்கள். ஏறத்தாழ 34 சதவீதம் படைவீரர்கள் இஸ்லா மியர்களாக இருந்தனர். சிவாஜியின் அனைத்து படையெடுப்புகளிலும் இருந்த மிகுந்த நம்பிக்கை வாய்ந்த தளபதிகளில் ஒருவர் ஹைதர் அலி கோஹரி ஆவார். காலாட்படைத் தளபதியாக நூர்கான் பெக் இருந்தார். கப்பற்படைத் தளபதிகளாக இப்ராஹிம் கானும், தெளலத்கானும் இருந்தார்கள். பீரங்கிப் படைக்கு சிட்டி இப்ராஹிம் தலைவராக இருந்திருக்கிறார். சிவாஜியின் மெய்க்காப்பாளர் ரஷ்டம் இ ஷமான் ஒரு இஸ்லாமியர்தான். சிவாஜியின் வாழ்க்கையில் இவர் மிக முக்கியமானவராகக் குறிப்பிடப்பட்டுள்ளார்.
  • 1659 நவம்பர் 10 ஆம் நாளில் பிஜப்பூர் சுல்தானின் படைகளுக்கும் சிவாஜியின் படைகளுக்கும் கடும் போர் மூண்டது. போருக்கு முன்பு, பிஜப்பூர் சுல்தானின் தளபதி அப்சல்கான் சிவாஜியைத் தனிமையில் சந்திக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்தத் தனிப்பட்ட சந்திப்பைத் திட்டமிட்டு, அதற்கு சிவாஜியிடம் ஒப்புதலைப் பெற்றவர் யார் தெரியுமா? அப்சல் கானின் ஆலோசகராக இருந்த கிருஷ்ணாஜி பாஸ்கர் குல்கர்னி என்ற பார்ப்பனர் ஆவார்.
  • தனிப்பட்ட சந்திப்புக்கு பார்ப்பனர் ஏற்பாடு செய்கிறார் என்றவுடன், சிவாஜியின் மெய்காப்பாள ரான ‘ரஷ்டம் இ ஷமான்’ என்ற இஸ்லாமியர், சிவாஜியை எச்சரிக்கிறார். யாருக்கும் தெரியாமல் விரல் நகங்களில் கூரிய ஆயுதங்களைக் கொண்டு செல்லுங்கள் என ஆலோசனை தருகிறார். அதன் படி, வெளிப்படையான குறுவாளோடு, மறைமுக மாக விரல் நகத்திலும் ஆயுதத்தை மறைத்து எடுத்துச் சென்றார் சிவாஜி.
  • எதிர்பார்த்தபடியே, அப்சல்கான் சிவாஜி யைக் கட்டிப்பிடிப்பது போல இறுக அணைத்துக் கொலைசெய்ய முயற்சி செய்தான். வெளிப்படை யாக சிவாஜியின் இடுப்பில் இருந்த குறுவாளை அப்சல்கானின் ஆலோசகரான பார்ப்பனர் பிடுங்கிக் கொண்டு, சிவாஜியைக் குத்தினான். இருவரின் தாக்குதலில் இருந்தும் சிவாஜி தப்பினார். இஸ் லாமிய மெய்க்காப்பாளரும், சிவாஜியும் இணைந்து அப்சல்கானைக் கொன்றனர். பார்ப்பன குல்கர் னியை சிவாஜியே தலையை வெட்டிக் கொன்றார். அதன்பிறகு போர் தொடங்கியது. போரில் சிவாஜியின் படைகள் வென்றன.
  • அந்தக் காலத்தில் பார்ப்பனர்கள் எவ்வளவு பெரிய குற்றம் செய்தாலும், அவர்களுக்கு மரண தண்டனை என்பது கிடையவே கிடையாது. மனுசாஸ்திரம் அந்தச் சட்டப் பாதுகாப்பை அவர்களுக்கு வழங்கி இருந்தது. அந்தத் துணிச்சலில் தான் பார்ப்பனர்கள் அனைத்து வகைத் துரோகங்களிலும் ஈடுபட்டனர். மனுசாஸ்திரப்படி நடந்திருக்க வேண்டிய சிவாஜி அதைப்பற்றிக் கவலைப்படாமல், கிருஷ்ணாஜி பாஸ்கரக் குல்கர்னியைப் படுகொலை செய்தார்.
  • கல்யாண் என்ற பகுதியில் இருந்த இஸ்லாமியர்களின் சமஸ்தானத்துக்கு எதிராக நடந்த போரில், கல்யாண்கோட்டையைக் கைப் பற்றிய மராட்டிய வீரர்கள், அந்நாட்டின் இளவரசி யைத் தூக்கிவந்து சிவாஜியிடம் ஒப்படைத்தனர். வீரர்களின் அச்செயலைக் கடுமையாகக் கண்டித்த சிவாஜி இளவரசியைப் பாதுகாப்புடன் மீண்டும் அவரது நாட்டுக்கே அனுப்பி வைத்தார். தனது பதவிக்காலத்தில், இந்து, முஸ்லீம் என அனைத்து மதக் கோவில்களுக்கும் ஏராளமான நிதி உதவி களைச் செய்தார். மசூதிகளைப் புதுப்பித்தார்.
  • இப்படித் தொடர்ச்சியாக, பார்ப்பனர்களுக்கும், இந்து மதச் சம்பிரதாயங்களுக்கும் எதிராக நடந்துகொண்டார். அதன் விளைவாக, சிவாஜியை வளர்த்தவர், ஆளாக்கியவர் என்று பார்ப் பனர்களால் கூறப்படும் குரு இராமதாஸே சிவாஜிக்கு விஷம் வைத்துக் கொன்றார். 1680 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் நாளில், மன்னர் சிவாஜியைக் கொன்ற இந்தப் பார்ப்பன இராமதாஸ் முகலாய மன்னர் ஒளரங்கசீப்பின் உளவாளியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சத்ரபதி சாம்பாஜி

சத்ரபதி சிவாஜிக்குப் பிறகு, அவரது மகன் சாம்பாஜி கி.பி.1680 இல் மன்னராகிறார். பார்ப்பன எதிர்ப்பில் தந்தை சிவாஜி காலங்கடந்து அறிவு பெற்றதைப் போல அல்லாமல், மன்னராகும் முன்பிருந்தே பார்ப்பன எதிர்ப்போடு வளர்ந்தார். சிவாஜியை விஞ்சிய வீரர். பார்ப்பனர்களை அஞ்சி நடுங்கச் செய்த சமூகநீதியாளர். நல்ல இலக்கியவாதி. மராட்டிய மொழியில், ‘புத்தபூஷண்’ என்ற புத்தமத விளக்க நூலை எழுதியவர். புத்த நெறியாளர்.

தனது தந்தையை விட ஒருபடி மேலேசென்று தனது ஆட்சி, அதிகாரங்களிலும், நிர்வாகங்களிலும் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் சம உரிமை, சம வாய்ப்பை அளித்தார். தந்தை சிவாஜியின் மர™த் துக்குப் பழிவாங்கும் விதமாக, 500 பார்ப்பனர் களைப் பிடித்து, அவர்களின் இரண்டு கைகளையும், யானையைக் கொண்டு மிதித்து உடைத்து, நசுக்கி எறிந்தார்.

பார்ப்பனர்களுக்குக் கடும் எதிரியாகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உற்ற தோழனாகவும் ஆளத் தொடங்கியதால், சத்ரபதி சாம்பாஜி மராட்டிய பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களிடம் சிவாஜியைவிட மிக அதிகமான நம்பிக் கையைப் பெற்றார். சாம்பாஜியைக் கருவறுக்கத் திட்டமிட்டுக் காத்திருந்த பார்ப்பனர்கள் ஒளரங்க சீப்பைப் பயன்படுத்திக் கொண்டனர்.

1689 இல் ஒளரங்கசீப்புக்கும் சாம்பாஜிக்கும் இடையே கடும் போர் மூண்டது. பிப்ரவரி 1 இல் தொடங்கிய போர் மார்ச் 11 இல் தான் முடிந்தது. போரில் சத்ரபதி சாம்பாஜி கைது செய்யப்பட்டார். உலகில் எந்த மனிதனுக்கும் நடந்திராத கடுமையான சித்ரவதைகள் அவர்மீது நடந்தன. முகலாயப் படைகளை முன்னிறுத்திக் கொடுமைகளை நடத்தியவர்கள் பார்ப்பனர்கள். சாம்பாஜியின் கண்கள் குருடாக்கப்பட்டன. கொஞ்சம் கொஞ்சமாக, சிறிது சிறிதாக சாம்பாஜியின் உடலை வெட்டிக் கூறு போட்டனர். சிதறிக் கிடந்த உடல் பாகங்களை ‘வாது’ என்ற ஊரில், பீமா நதிக்கரையில் வீசினர். உடலின் பாகங்களை தேடி எடுத்து எவரும் இறுதிச் சடங்குகள் செய்யக்கூடாது என்றும் உத்தர விட்டனர். சாம்பாஜியின் படுகொலைக்குக் காரண மானவர் அவரது நண்பராக நடித்து ஒளரங்க சீப்புக்குத் துணைபோன ‘கலுஷா காப்ஜி’ என்ற பார்ப்பனர் ஆவார்.

சாம்பாஜியின் உறவினர்களே - சொந்த ஜாதியினரே இறுதிநிகழ்வுகளைச் செய்யப் பயந்து ஒதுங்கினர். வரலாற்றில் மிகப்பெரும் பேரரசன், பார்ப்பனர்களை எதிர்த்ததால் அனாதையாக - உடலே கிடைக்காத அளவுக்கு மிகக்கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுக்கிடந்தார். தாழ்த்தப் பட்ட மகர் இனத்தைச் சேர்ந்த ‘கோவிந்த் கோபால் கெய்க்வாட்’ தனது உயிரைத் துச்சமாக எண்ணி, சாம்பாஜி மன்னரின் உடலின் பாகங்களைத் தேடி எடுத்து, அடக்கம் செய்து, இறுதி மரியாதை செலுத்தினார். சாம்பாஜியின் நினைவிடத்திலேயே  கோவிந்த் கோபாலுக்கும் ஒரு நினைவுச்சின்னம் அமைக்கப் பட்டுள்ளது.

நாடே எதிர்த்த நிலையிலும், சாம்பாஜியை நல்லடக்கம் செய்ய ஒரு தலித் துணிந்துள்ளார் என்ற வரலாறு, கோவிந்த கோபாலின் துணிச்சலைப் பதிவுசெய்வதோடு - சாம்பாஜி மன்னர் ஒடுக்கப் பட்ட மக்களுடன் எந்த அளவுக்குத் தோழமையாக ஆட்சி செய்துள்ளார் என்பதையும் உணர வைக்கிறது.  

சாம்பாஜி வீரமரணத்துக்குப் பின் பார்ப்பன பேஷ்வாக்களின் ஆட்சி

சத்ரபதி சாம்பாஜியின் மறைவிற்குப் பிறகு, சாம்பாஜியின் சகோதரர் இராஜாராம் மராட்டிய அரசராகப் பதவி ஏற்றார். இவர் ஆரம்பக் காலத் திலிருந்தே பார்ப்பனர்களின் செல்லப்பிள்ளை யாகவே வளர்ந்தவர். சாம்பாஜியின் மனைவியும் மகனும் ஒளரங்கசீப்பால் கைது செய்யப்பட்டு, டில்லியில் சிறை வைக்கப்பட்டனர். இராஜாராமின் மறைவிற்குப் பிறகு 1700 இல் அவரது மூத்த மனைவி தாராபாய் பதவி ஏற்றார். எட்டு ஆண்டுகள் கழித்து டில்லி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட சாம்பாஜி யின் மகன் சாகுஜி கி.பி.1708 இல் மராட்டிய  அரசானார்.  

இந்த சாகுஜியின் ஆட்சியில் தான் பாலாஜி விஸ்வநாத் பாஜிராவ் என்ற பார்ப்பனர் 1713 இல் ‘பேஷ்வா’வாக, அதாவது பிரதமராக அறிவிக்கப் படுகிறார். இவர் மராட்டிய சித்பவன் பார்ப்பனர் ஆவார். இந்த சித்பவன் பார்ப்பனர்கள் தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தொடங்கிய காலம் முதல் இன்று வரை தேசியத் தலைவர்களாக பதவி வகிக்கின்றனர். காந்தியைப் படுகொலை செய்த நாதுரம் கோட்சேயும் சித்பவன் பார்ப்பனர்தான்.

இந்த வரலாறு எதற்காக என்றால், இந்துவான சாம்பாஜிக்கும் - முஸ்லீமான ஒளரங்கசீப்புக்கும்  இடையே போர் என்றால், வெற்றி பெற்ற ஒளரங்கசீப்தான் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருக்க வேண்டும். ஒரு இஸ்லாமியரிடம் ஆட்சிப் பொறுப்பு போயிருக்க வேண்டும்.

ஆனால் பார்ப்பன அடிமையான - இந்துவான - இராஜாராம் எப்படி ஆட்சிக்கு வந்தார்? ஒளரங்கசீப் கைதுசெய்து கொண்டு சென்ற சாகுஜி 18 ஆண்டுகள் கழித்து மீண்டும் மராட்டியத்துக்கு அனுப்பப்பட்டு அரசராகிறார். அரசரான உடனே யே பாஜிராவ் தலைமை அமைச்சராகிறார். அவருக்குப் பிறகு இரண்டாம் பாஜிராவ் ஆட்சிக் காலம் வரை - கி.பி.1818 ஜனவரி 1 ஆம் நாள் வரை மராட்டியத்தின் ஆட்சி முழுக்க முழுக்க பேஷ்வாப் பார்ப்பனர்களிடமே  இருந்தது.

எனவே நடந்தது இந்து-முஸ்லீம் போர் அல்ல; பார்ப்பனர் – பார்ப்பனரல்லா தாருக்கிடையே நடந்த போர். திராவிடர்-ஆரியர் போர். இதில் பார்ப்பனர்கள் இஸ்லாமியர்களைப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதே உண்மை. இந்த வரலாறு களைப் புரிந்துகொண்டு அதன் அடிப்படையில் தான் 1818 ஜனவரி முதல் நாள் நடந்த பீமா கோரிகாவ் போரையும் - 2018 ஜனவரியில் தலித்துகள் மீது நடந்த தாக்குதல்களையும் பார்க்க வேண்டும்.

பீமா கோரிகான் போர்

சாம்பாஜி மறைவுக்குப் பிறகு 1689 லிருந்து பேஷ்வாக்கள் முழுமையாக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினர். அவர்களது காலத்தில், இந்து மத வேதங்களின் சட்டத்தொகுப்பான மனுசாஸ்திரம் முழுவீச்சில் கடுமையாக நடைமுறைப்படுத்தப் பட்டது.  சிவாஜி. சாம்பாஜி மன்னர்களின் காலத்தில் பார்ப்பனக் கொடுமை களிலிருந்து விடுதலை பெற்றிருந்த மராட்டியத்தின் ஒடுக்கப்பட்ட மக்கள் மீண்டும் புதைகுழிக்குள் தள்ளப்பட்டார்கள். விடுதலை நெருப்பு அவர்களுக்குள் கனன்று கொண்டே இருந்தது.

1817 இல் ஆங்கிலேயர்களுக்கும், பேஷ்வாப் பார்ப்பனர்களுக்கும் மோதல் அதிகரித்தது. இரு தரப்புக்கும் இடையே போர் மூண்டது. போருக்கு முன்பாக, மகர்களின் தளபதி சித்தநாக், பார்ப்பன மன்னரான இரண்டாம் பாஜிராவைச் சந்திக்கிறார். ஆங்கிலேயர் தாக்குதல் நடத்தப்போகும் வேளையில் பாஜிராவிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இனி மேலாவது பார்ப்பன, மனு சாஸ்திரக் கொடுமை களிலிருந்து விலக்கு அளியுங்கள். உங்களுக்காக நாங்கள் போரிடுகிறோம் எனக் கூறுகிறார். போர் மேகம் சூழ்ந்த நிலையிலும், தான் தோற்றாலும் பரவாயில்லை. இந்து மத தர்மங்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்ற ஆதிக்க வெறியில், தளபதி சித்தநாக்கை அவமதிக்கிறார் பாஜிராவ்.

அதன் பிறகு தான், இந்து வேதங்களுக்கு எதிராக மகர்களும், பிற்படுத்தப்பட்ட மராட்டா ஜாதியினரும், ராஜ்புத் என்ற ஜாதியினரும், இஸ்லாமியரும் இணைந்து ஆங்கிலேயருடன் கைகோர்த்துப் போரைத் தொடங்குகின்றனர்.

போர் தொடங்கிய 12 மணி நேரத்தில் பாஜிராவின் படைத் தலைவர் பார்ப்பனக் கோகலே உட்பட 600 பார்ப்பனர்கள் கொல்லப்பட்டார்கள். 20000 க்கும் மேற்பட்ட பார்ப்பனப் படைவீரர்கள் சிதறி ஓடினர். மராட்டியம் பார்ப்பனரின் நேரடிக் கொடுமைகளிலிருந்து சில காலம் விடுதலை பெற்றது. அந்த வரலாற்றைக் கடந்த இதழில் விரிவாகப் பார்த்தோம்.

சாம்பாஜி ப்ரிகேட்: “நாங்கள் இந்துக்கள் அல்ல”

சிவாஜி - சாம்பாஜி காலத்தில் தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும், சிறுபான்மையினரும் மனிதர்களாக மதிக்கப்பட்டார்கள். ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள். அதனால்தான் இன்றும் மராட்டிய மக்கள் இந்த இரு மன்னர் களையும் தங்கள் வழிகாட்டிகளாகக் கருதுகிறார்கள்.  

01.01.2018 அன்று பீமாகோரிகானில் உள்ள வெற்றித் தூணின் அருகே, தோழர் அம்பேத்கர் சிலையும், சிவாஜியின் சிலையும் தற்காலிகமாக நிறுவப்பட்டுள்ளது. இலட்சக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களும் ஆயிரக்கணக்கான பிற்படுத்தப் பட்ட, இஸ்லாமிய மக்களும் பீமா நதிக்கரையில் உள்ள வெற்றித்தூணுக்குச் செல்லும் முன்பாக - சாம்பாஜியின் உடல் விதைக்கப்பட்டுள்ள ‘வாது’ நினைவிடத்திற்கும், அங்குள்ள மகர் சமுதாய வீரர் கோவிந்த் கோபால் கெய்க்வாட் நினைவுச் சின்னத் திற்கும் மரியாதை செலுத்திவிட்டுத்தான் பீமா நதிக் கரைக்கு வருகின்றனர்.

மன்னர் சிவாஜியின் ஜாதியினர் பிற்படுத்தப் பட்ட சூத்திர வர்ணத்தைச் சேர்ந்தவர்கள்.  இவர்கள் கெய்க்வாட், போஸ்லே, மராட்டா எனப் பல பெயர்களில் உள்ளனர். (தலித்துகளிலும் கெய்க்வாட் என்ற பெயர் உள்ளது.) பொதுவாக மராட்டியத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ‘மராட்டா’ என அழைக்கப்படுகின்றனர். இந்த மராட்டா மக்களிடம் பெரும் செல்வாக்குப் பெற்ற அமைப்பு ‘சாம்பாஜி ப்ரிகேட்’ என்ற அமைப்பு ஆகும்.

1990 இல் உருவான ‘மராட்டி சேவா சங்’ என்ற அமைப்பின் முன்னணி அமைப்பாக 1997 இல் இந்த ‘சாம்பாஜி ப்ரிகேட்’ உருவானது. இந்த இரு அமைப்புகளையும் உருவாக்கியவர் புருஷோத்தம் கடேகர் ஆவார். சாம்பாஜியின் பரம்பரை வாரிசான ‘பிரவீன் கேய்க்வாட்’ என்பவர் இந்த அமைப்பின் தலைவராக இருந்துள்ளார். அரசியலிலும் சாம்பாஜி ப்ரிகேட் இறங்கியுள்ளது. ஆனால், பார்ப்பனர்களை உறுப்பினர்களாகக்கூடச் சேர்ப்பதில்லை என அறிவித்து அரசியலில் இயங்குகிறது.

இந்த அமைப்பினர் தங்களை இந்துக்கள் என்று சொல்வதில்லை. அவர்கள் ‘சிவ்தர்மம்’ என்ற பெயரில் மன்னர் சிவாஜியை வழிகாட்டியாகக் கொண்டு, தனி மதமாக அதை ஏற்று வாழ்ந்து வருகின்றனர். கடந்த 2002 லிருந்து இந்த சாம்பாஜி பிரிகேட் என்ற பிற்படுத்தப்பட்ட மக்களின் அமைப்பு, ‘பீமா கோரிகாவ்’ வெற்றியை வீரவணக்க நாளாகக் கொண்டாடிவருகிறது. இலட்சக் கணக்கான தலித் மக்களுடன் இந்த அமைப்பும் பீமாநதிக்கரைக்குச் செல்கிறது.

அம்பேத்கரின் பேரனான பிரகாஷ் அம்பேத்கர், 2018 ஜனவரி 4 ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில், பீமாகோரிகானில் பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட மக்களுக்கிடையே எந்த மோதலும் இல்லை. தலித்துகளுடன் ‘சாம்பாஜி ப்ரிகேட்’ என்ற பிற்படுத்தப்பட்ட அமைப்பும் இணைந்துதான் பீமா கோரிகான் நிகழ்ச்சியை நடத்துகிறது. அங்கு நடந்த தாக்குதலுக்குக் காரணம், ஆர்.எஸ்.எஸ் ஆதரவு இந்துமதவெறி அமைப்புகளே என அறிவித் துள்ளார்.

சாம்பாஜி பிரிகேட் நடத்தும் பல கூட்டங் களின் துண்டறிக்கைகளில் அம்பேத்கர், புத்தர் படங்கள் இடம்பெற்றுள்ளன. புனே நகரிலிருந்து கோரிகாவ் செல்லும் சாலை முழுவதும் உள்ள ஃப்ளக்ஸ்களில் அம்பேத்கர், புத்தர், சாம்பாஜி ஆகிய மூவரின் படங்கள் தவறாமல் இடம்பெற்றுள்ளன. பல இடங்களில் சிவாஜியின் படமும் உள்ளது. இந்த அளவுக்கு அமைப்புகள் அங்கே ஒற்றுமையாகவே இயங்குகின்றன.

சிவாஜியைத் தனதாக்கிய பார்ப்பனர்கள்

மன்னர் சிவாஜி தனது இறுதிக்காலத்திலும், சாம்பாஜி தொடக்கத்திலிருந்தும் பார்ப்பன எதிர்ப்பாளர்களாகவே இருந்தனர். அதனாலேயே மராட்டிய மக்களிடம் இன்றுவரை நீங்காத இடம் பிடித்துள்ளனர். மராட்டிய மக்களிடையே  சிவாஜி, சாம்பாஜி மன்னர்களுக்கு இருக்கும் செல்வாக்கைத் தங்களது ஆதிக்கத்திற்குப் பயன்படுத்திக் கொள்வதற் காக ஆர்.எஸ்.எஸ் அமைப்பும், சித்பவன் பார்ப்பனர் களும் அதே சிவாஜி, சாம்பாஜி படங்களையும், பெயர்களையும் பயன்படுத்தி புதுப்புது அமைப்பு களையும், தலைவர்களையும் உருவாக்குகின்றனர். அந்த முயற்சியில் வெற்றியும் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டிலும் ‘சிவசேனா’ என்ற பெயரில் இந்து மத வெறி அமைப்புகள் இயங்குவதைப் பார்க்கிறோம்.

மேற்கண்ட மராட்டிய மன்னர்களின் வரலாற்றை நாம் கூறுவதற்கான அடிப்படைக் காரணம் சிவாஜியையோ, சாம்பாஜியையோ பார்ப்பனர்களிடமிருந்து மீட்டெடுக்க வேண்டும்; தமிழ்நாட்டில் முன்னெடுக்க வேண்டும் என்பதற்காக அல்ல. அந்த மாபெரும் பார்ப்பன எதிர்ப்பாளர்களுக்கு நேர்ந்த நிலை இனி வேறு எந்தத் தலைவருக்கும் நேர்ந்துவிடக் கூடாது என்பதற் காகவே கூறினோம்.  

தாக்குதலுக்குக் காரணம் என்ன?

வரலாற்று அடிப்படையிலும், 2018 ஜனவரி 1 நிகழ்விலும் பீமா நதிக்கரையில் தலித்துகளுக்கும் - பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் இடையே எந்தச் சிக்கலும் இல்லை. கடந்த 200 வருடங்களாக அங்கு நடைபெறும் வீரவணக்கநாள் நிகழ்வுகளில் எந்தச் சிறு சிக்கலும் ஏற்பட்டதில்லை. சட்டம் - ஒழுங்குக்கு எந்தப் பாதிப்பும் எழுந்ததில்லை.

இலட்சக்கணக்கான மக்கள் கூடும் இடத்தில் பாதுகாப்புக்கு வந்திருந்த காவலர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அதிர்ச்சியான உண்மை இது. அதிகப்பட்சம் 50 காவலர்கள் மட்டுமே வந்திருந்தனர். புனே - அவுரங்காபாத் சாலை யிலிருந்து, சாம்பாஜி மன்னரின் நினைவிடத்துக்குச் செல்லும் பிரிவில் மட்டும் 10 காவலர்கள் போக்கு வரத்தை ஒழுங்குசெய்தனர்.  கோரிகாவ் 3 கி.மீக்கு முன்பு எல்.இ.டி ப்ரொஜெக்டரில், பிரதமர் மோடி அவர்களின் பிரச்சார ஆவணப்படம் ஒன்று ஓடிக் கொண்டே இருந்தது. அந்த இடத்துக்கு 5 காவலர்கள் போடப்பட்டிருந்தனர். மேலும் ஒரு சில காவலர்கள் ஜீப்பில் இருந்தனர். அவ்வளவுதான்.

‘அகில பாரத பிராமண மகாஜனசபா’ என்ற பார்ப்பன அமைப்பு, வெளிப்படையாக, “பீமா கோரிகான் போராட்டம் என்பது தேச விடுதலைக்கு எதிராக நடந்த போராட்டம். அதைக் கொண்டாடுவது தேசத்துரோகம்” என்று அறிக்கை வெளியிட்டு, அந்த நிகழ்வுகளைத் தடைசெய்ய வேண்டும் என்று காவல்துறையில் புகார் அளித்துள்ளது.

2017 டிசம்பர் 31 இல் புனே நகரில் பிரகாஷ் அம்பேத்கர் தலைமையில், ஜிக்னேஷ் மேவானி உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்கும் பீமா கோரிகான் நினைவுக் கூட்டம் ஏற்பாடு செய்யப் பட்டது. அதற்கு அனுமதி வழங்கக்கூடாது என இந்தப் பார்ப்பன அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டுவரை சட்டம் ஒழுங்குக்கு எந்தச் சிக்கலும் உருவாகாத நிலையில், 2017 டிசம்பர் 29 இல், ‘சிவப்ரதிஷ்டான் ஹிந்துஸ்தான்’, ‘சமஸ்தா ஹிந்து ஏகாடி’ என்ற இரு அமைப்புகளும் ஒரு குழப்பத்தை அரங்கேற்றின. இந்த இரு அமைப்பு களின் தலைவர்களும் பார்ப்பனர்கள். இவர்களால் தூண்டப்பட்ட சில மராட்டா ஜாதியினர், சாம்பாஜி நினைவிடத்தில் உள்ள கோவிந்த் கோபால் கெய்க் வாட் என்ற மகர் இன வீரரின் பெயரை அழித் துள்ளனர். அதன் காரணமாக, வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சிவப்ரதிஷ்டான் என்ற அமைப்பின் தலைவர் ‘மனோகர் பைடே’ என்பவர்  ஒரு சித்பவன் பார்ப்பனர். 10 வயதில் இருந்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முழு நேரப் பணியாளராகப் பணியாற்றியவர். பேராசிரியராகப் பணியாற்றி, ஓய்வு பெற்ற பிறகு ஆா.எஸ்.எஸ். இவரது தலைமையில் ஒரு அமைப்பை உருவாக்கியது. அமைப்புக்குத் தலைவராகும் போது இவரது பெயரை ‘சாம்பாஜி பைடே’ என்று மாற்றிக் கொண்டார். 2014 பாராளுமன்றத் தேர்தலின் போது, இவரது தலைமையில் நடந்த ஒரு கூட்டத்துக்கு நரேந்திர மோடி வந்திருந்தார். அக்கூட்டத்தில் அப்போதைய பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி பேசியது...

“குருஜி இந்தக்கூட்டத்திற்கு அழைக்கவில்லை. கட்டளை இட்டார். அவரது கட்டளைக்கு இணங்க இங்கு வந்துள்ளேன்” என்றார். மோடியையே கட்டுப் பாட்டில் வைத்திருக்கும் பார்ப்பனர்தான் இந்த மனோகர் பைடே. மற்றொரு கலவர அமைப்பின் தலைவராக ‘மிலிந்த் ஏக் போடே’ வும் சித்பவன் பார்ப்பனர்தான். 1997 லிருந்து பி.ஜே.பி. யில் முக்கியப் பொறுப்பாளராகப் பணியாற்றியவர்.

  1. எந்த ஆண்டும் இல்லாத எதிர்ப்புகள் இந்த ஆண்டு உருவானதைத் தொடர்ந்து, பார்ப்பன முதல்வர் பட்னாவிஸ்  அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும்.
  2. அவுரங்காபாத் - புனே நான்கு வழிச் சாலையில், புனே யிலிருந்து பீமா கோரிகாவ் செல்லும் வழியில் 10 கி.மீக்கு முன்பே வாகனங்கள் தடைசெய்யப்பட்டிருந்தன. ஆனால், அதே சாலையில், அவுரங்காபாத்திலிருந்து பீமா கோரிகான் வரும் வழியில் அதாவது, எதிர்த்திசையில், வாகனங்கள் தடைசெய்யப் படவில்லை. பீமா நதியின் பாலம் வரை அனைத்து வாகனங்களும் அனுமதிக்கப் பட்டன. அந்தப் பாலத்தின் அருகேதான் வாகனங்கள் தாக்கப்பட்டன. எரிக்கப்பட்டன. இது அரசே கலவரத்தைத் திட்டமிட்டு நடத்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தை உருவாக்குகிறது.

பார்ப்பன அமைப்பின் எதிர்ப்பை அம்பலப்படுத்தாதது ஏன்?

மராட்டிய மண்ணின் பார்ப்பன எதிர்ப்பு வரலாற்றின் தொடர்ச்சியாக சில தலித் அமைப்பு களும் - சில பிற்படுத்தப்பட்ட அமைப்புகளும் - சில இஸ்லாமிய அமைப்புகளும் ஒன்றிணைந்து பணியாற்றத் தொடங்கியுள்ளனர். வாமன் மேஷ்ராம் தலைமையிலான பாம்செஃப் அமைப்பும், சாம்பாஜி ப்ரிகேட் அமைப்பும் பார்ப்பன எதிர்ப்பு நோக்கில் மக்களைத் திரட்டுகின்றனர். இந்த இரண்டு அமைப்புகளையும் தடை செய்ய வேண்டும் என்று ‘சிவபிரதிஷ்டான்’ தலைவர் பார்ப்பன ‘மனேகர் பைடே’ அறிக்கை வெளியிட்டுள்ளதையும் கவனிக்க வேண்டும்.  

தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மக்களிடையே பார்ப்பன எதிர்ப்பு மனநிலை உருவாகி விடக்கூடாது - ஒருங்கிணைப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக, இந்து பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டு நடத்திய கலவரம் தான் 2018 ஜனவரி 1 இல் பீமா கோரிகானில் நடந்த கலவரம்.

காவிப் பார்ப்பனர்களின் கனவு பலிக்க வில்லை. அவர்களது திட்டம் அவர்களுக்கே எதிராகத் திரும்பிவிட்டது. பீமா கோரிகான் கலவரங்களுக்கு எதிராக நடந்த போராட்டங்களில், 250 க்கும் மேற்பட்ட தலித் அமைப்புகளும், பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின அமைப்பு களும், கம்யூனிச இயக்கங்களும் இணைந்து போராடினர்.

அனைவரும் இந்தக் கலவரங்களுக்குக் காரணமான இந்து மதவெறி அமைப்புகளின் தலைவர்களான சாம்பாஜி பைடே, ஏக் போடே இருவரையும் தூக்கிலிட வேண்டும் என அறிவித்தனர். பிரகாஷ் அம்பேத்கர் அறிக்கையாக வெளியிட்டுள்ளார். மராட்டா கிராந்த்தி மோர்ச்சா, சாம்பாஜி ப்ரிகேட் போன்ற பிற்படுத்தப்பட்டோர் அமைப்புகளும் இதே கோரிக்கையை முன்வைத்துத் தொடர்ச்சியாகப் போராடிவருகின்றன.

இந்து மதவெறி அமைப்புகளுக்கு எதிராக மராட்டிய மண்ணின் மைந்தர்கள் ஒருங்கிணைந்து நடத்திய முழுஅடைப்புப் போராட்டம் ஒட்டு மொத்த இந்தியாவையே மிரட்டியது மகிழ்ச்சிதான். ஆனால், கலவரங்களுக்குக் காரணமான முக்கிய மான அமைப்பு ‘அகில பாரத பிராமண மகாஜனசபா’ ஆகும். வெளிப்படை யாகவே,  “பீமா கோரிகான் போராட்டம் என்பது தேச விடுதலைக்கு எதிராக நடந்த போராட்டம். அதைக் கொண்டாடுவது தேசத்துரோகம்” என்று அறிவித்தது. அந்த அமைப்பைக் கலவரங்களுக்குக் காரணமான அமைப்பாக எவரும் அறிவிக்கவில்லை. பாம்செஃப் மட்டும் அறிவித்தது. நூற்றுக்கணக்கான தலித் அமைப்புகளும், பிற்படுத்தப்பட்ட அமைப்புகளும் இணைந்து முழுஅடைப்பு நடத்தினாலும், உண்மையான எதிரியைத் தப்பவிடுவது ஏன் என்பதுதான் நெருடலாக உள்ளது.

தமிழ்நாட்டில் முதன்முறையாக பீமா கோரிகான் வீரவணக்கநாள்

மேற்கண்ட 400 ஆண்டு கால வரலாறுகளின் அடிப்படையில், பார்ப்பன எதிர்ப்பு - பார்ப்பனர் அல்லாதார் ஒருங்கிணைப்பு என்ற நோக்கத்தில், இந்த 2018 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் முதன் முறையாக, பீமா கோரிகான் 200 வது வீரவணக்க நாளை ஒரு உறுதி ஏற்பு நிகழ்வாகக் காட்டாறு ஏடு திட்டமிட்டது. திருப்பூரில் காட்டாறு ஏடு சார்பா கவும், திண்டுக்கல்லில் சாதி மதவெறி எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பாகவும் உறுதி ஏற்புகள் நடந்தன.

ஜாதி ஒழிப்பில் அக்கறை உள்ளவர்கள் என நாம் நம்பியிருந்த பல தோழர்கள் இதை வரவேற் றனர். பலர் கள்ளமவுனம் காத்தனர். சில தோழர்கள் வெளிப்படையாக எதிர்த்தனர்.

“ பிற்படுத்தப்பட்டவர்கள் இதில் பங்கேற்க வில்லை. இது முழுக்க முழுக்க மகர் இனம் மட்டுமே களமாடிய போர்”,

“மகர் மக்களைத் ‘திராவிடர்கள்’என்று கூறக்கூடாது”,

“இந்த இரண்டும் திராவிடத்தின் திரிபுகள் -தலித் மக்களின் அடையாளங்களை அழிக்கும் வேலைகள்”

என்பது போன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்துச் சமூக வலைத்தளங்களில் களமாடினர்.

பார்ப்பனர்களை எதிர்த்து வென்ற இந்தப் போரில் 500 மகர் வீரர்கள் போரிட்டுள்ளனர். இது மகர்களின் வீரத்தைப் பறைசாற்றிய வெற்றி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. மகர் இன வீரர்கள் மட்டுமே போரிட்டனர் என்பது தவறான வரலாறு. தோழர் அம்பேத்கரே இவர்களுக்குப் பதில் அளித்துச் சரியான வரலாற்றைப் பதிவு செய்துள் ளார்.

அம்பேத்கர் தொகுப்புநூல் வரிசையில் ஆங்கிலத்தில் வெளியான தொகுதி 17, பிரிவு 3 லும், தமிழில் வெளியாகியுள்ள தொகுதி 37, பகுதி 1 லும் பீமா கோரிகான் போர் தொடர்பாக எழுதப் பட்டுள்ள கட்டுரையில் இருந்து...

“போரில், சென்னை பீரங்கிப் படையினர், பம்பாய் உட்நாட்டுக் காலாட்படை இரண்டாம் பிரிவின் வீரர்கள் 50 பேர், பிரிட்டிஷ் அலுவலர்கள் 3 பேர் உயிர் துறந்தனர். கொல்லப்பட்ட பம்பாய் உட்நாட்டுக் காலாட்படை இரண்டாம் பிரிவின் வீரர்கள் ‘மகர்கள்’ எனப்படும் ‘பார்வாரி’ வகுப்பினர். (‘னாக்’ என்ற பெயர் விகுதிகளிலிருந்து இதை அறியலாம்) 16 மராத்தியர்கள், 8 ராஜ்புத்திரர்கள், இருவர் முஸ்லீம்கள், ஓரிருவர் இந்திய யூதர்கள்”

பீமா கோரிகான் போர் என்பது தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட - சிறுபான்மை - பழங்குடி மக்கள் ஒருங்கிணைந்து நடத்திய போர்தான் என்பதைத் தோழர் அம்பேத்கரே விளக்கிவிட்டார். மராட்டி மொழியில் அவர் எழுதியுள்ள “பாகிஸ்க்ரிட் பார்டாட்டில் அக்ரலேக்” என்ற நூலில் இருந்து இத்தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.

மேலும் பீமா கோரிகானில் உள்ள நினைவுச் சின்னத்தில் வீரமரணமடைந்த 49 வீரர்களின் பெயர்ப்பட்டியல் கல்வெட்டில் பொறிக்கப் பட்டுள்ளது.  வடநாடு என்பதால் அதில் அனைத்து வீரர்களின் ஜாதிப்பெயரும் தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. அதில், ‘பவார்’, ‘சவான்’, ‘கோரே’ ‘சாவந்த்’ போன்ற பல மராட்டா ஜாதியினரின் பெயர்கள் உள்ளன. ஷேக் அகமத், அப்துல் கர்சான் என்ற இரண்டு இஸ்லாமியரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

தோழர் அம்பேத்கரும், பீமா கோரிகான் வெற்றித்தூணும் அறிவித்ததைத்தான் நாம் பதிவு செய்தோம். இது “தலித்துகளின் அடையாளத்தை அழிக்கும் முயற்சி - திராவிடத்தின் சூழ்ச்சி” என்று சாதி ஒழிப்பாளர்கள் என நாம் நம்பியவர்களே எதிர்ப்பது நியாயமா?

திராவிடர் - ஆரியச் சமர் என்பது தவறா?

பீமா கோரிகான் போரில் வீரமரணமடைந்த மகர் இன வீரர்கள் அனைவருக்கும் ‘நாக்’ என்ற விகுதிப் பெயர் இருக்கிறது. அதைத் தோழர் அம்பேத்கரே பதிவு செய்துள்ளதைப் படித்தீர்கள். அந்த ‘நாக்’ மக்கள்தான் நாகர்கள். நாகர்களுக்கும் திராவிடர்களுக்கும் என்ன தொடர்பு? இதோ அம்பேத்கரே விளக்குகிறார்.

“நாகர்கள் - திராவிடர்கள் இருவரும் ஒரே இனத்தைச் சேர்ந்த மக்களே. ஒரே இன மக்களுக்கு உள்ள இரண்டு பெயர்கள் தான் நாகர் - திராவிடர்.”

“இந்தியாவில் நாகர்கள், ஆரியர்கள் என்ற இரண்டு இனம் இருந்தது. நாகர்கள் என்பது திராவிடர்களே. திராவிடம் என்பது மொழியால் வந்த பெயர். நாகர் என்பது இனப்பெயர்.” - தோழர் அம்பேத்கர் - ஆங்கில நூல் தொகுப்பு 7; பக்கம் 300

“தமிழ் அல்லது திராவிடம் என்பது தென் இந்தியாவின் மொழியாக மட்டுமே இருக்கவில்லை; மாறாக அது ஆரியர்கள் வருவதற்கு முன்னர் இந்தியா முழுவதும் பேசப்பட்ட மொழியாகவும் இருந்தது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை பேசப்பட்டு வந்தது என்பதே ஆகும். உண்மையில், இந்தியா வெங்கிலும் நாகர்களால் பேசப்பட்டு வந்த மொழி யாகவும் திகழ்ந்தது.” - தோழர் அம்பேத்கர் நூல் தொகுப்பு, (தமிழ்) தொகுதி 14, பக்கம் 95

திராவிடர் என்பதற்குத் தோழர் பெரியார் கூறும் விளக்கத்தையும் பாருங்கள்.

“முஸ்லீம்களும், கிறிஸ்துவர்களும், தாழ்த்தப்பட்ட மக்களும், தங்களை ஆரியர் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர் அல்லாத மற்ற இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளுகிறவர்களும் ஆகிய எல்லோரும் ‘திராவிடர்கள்’ என்ற தலைப்பின் கீழ் வருவார்கள்”. -தோழர் பெரியார் - குடி அரசு -  26.11.1939

எனவே, அழுத்தமாகச் சொல்வோம். பீமா கோரிகான் போர் என்பது திராவிடர் - ஆரியச் சமரே!  

தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கக் காலமான 1925 - 1938 வரையில், அப்போது இருந்த பிற்படுத்தப்பட்ட ஜாதி அமைப்புகள், தாழ்த்தப் பட்டோருக்கான ஜாதி அமைப்புகள், சிறுபான்மை யினரின் அமைப்புகள் அனைத்தும் பார்ப்பன எதிர்ப்பில் அக்கறை கொண்டிருந்தன.

1928 இல் பெரியார் மனுசாஸ்திர எரிப்புப் போராட்டத்தை நடத்தியபோது, ஆதி திராவிட மகாஜனசபையும் மனுசாஸ்திரத்தை எரித்தது. மருத்துவர் குல சங்க மாநாடுகளிலும், உடை யார்கள், நாடார்கள், செட்டியார்கள் மாநாடு களிலும் மனுசாஸ்திரத்தை எரிக்க வேண்டுமெனத் தீர்மானங்கள் நிறைவேறியிருக்கின்றன. 1980 களில் மண்டல்குழு அறிக்கையை நிறைவேற்றக்கோரி பிற்படுத்தப்பட்ட ஜாதிச் சங்கங்கள் போராடிய காலங்களில் திராவிடர் கழகத்திற்கு நெருக்கமாகவே இயங்கின.

அதுபோன்ற ஒரு சூழல்தான் தற்போது மராட்டிய மண்ணில் நிலவுகிறது. ஆனால் தமிழ் நாட்டில் சுயமரியாதை இயக்கக் காலத்தில் இருந்த சூழல் மாறிவிட்டது. பிற்படுத்தப்பட்டோர் அமைப்புகளும், தலித் அமைப்புகளும் - பார்ப்பனர் களுக்கும், இந்துத்துவ அமைப்புகளுக்கும் நெருக்க மாகச் சென்று கொண்டுள்ளன. வெளிப்படையா கவும், மறைமுகமாகவும் இந்த ஜாதிச்சங் கங்க ளுக்குப் பார்ப்பன நெருக்கங்கள் அதிகரித்துள்ளன. அதனால்தான் ஜாதியத் தாக்குதல்களும் அதிகமாகி யுள்ளன.

ஜாதிஒழிப்பில் அக்கறை கொண்ட நமது தோழர்கள் நமது அணுகுமுறையைக் கொஞ்சம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். சுயமரியாதைக் காலத்தைப் போல, 1980 களைப் போல ஜாதிச் சங்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அவர் களைப் பார்ப்பன - பார்ப்பனிய எதிர்ப்பு நோக்கித் திருப்ப வேண்டும். நாம் பிறந்த ஜாதியின் சங்கத்தை விட்டுவிட்டு, வேறு ஏதாவது ஒரு ஜாதியின் சங்கத்தையோ, சங்கப் பொறுப்பாளரையோ மாற்ற முயற்சிக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் - தாழ்த்தப்பட்டோர் - சிறுபான்மையினர் ஒருங் கிணைப்புக்கு வேண்டிய அனைத்து முயற்சி களையும் மேற்கொள்ள வேண்டும். அதைத்தான் ‘பீமா கோரிகாவ்’ 200 வது வீரவணக்கநாள்  உணர்த்துகிறது.  

மராட்டிய பேஷ்வாக்களை நேரடியாகப் போர்க்களத்தில் வென்றோம். ஆனாலும் அடிமைத்தனம் ஒழியவில்லை. ஏனென்றால்,

நாம் அடக்கப்படுவது ஒரு தனி மனிதராலோ - ஒரு குறிப்பிட்ட பேரரசாலோ, ஒரு குறிப்பிட்ட கட்சி ஆட்சியாலோ மட்டுமல்ல. பார்ப்பனர்களுக்கும், அவர்களின் ஆதிக்கத்தில் இருக்கும் அரசர்களுக்கும், பிரதமர்களுக்கும் மேலே நிரந்தர ஆதிக்கக் கருத்தியலாக இருக்கும் இந்துமத வேதங்களாலும், சாஸ்திரங்களாலும் அவை உருவாக்கியுள்ள பண்பாடுகளாலும்தான் அடிமைப்படுத்தப் பட்டோம். அவற்றை அழித்து ஒழிக்காமல் நமக்கு வெற்றி என்பது உண்மையல்ல.  

Pin It