பார்ப்பன மேலாண்மையின் கீழ் அதிகார மையம் கொண்டு ஏற்படுத்தப்பட்ட இந்தியத் துணைக் கண்டத்தில் பார்ப்பன மேலாண்மை ஆதிக்கத் தகர்ப்பு புத்தரால் தொடங்கப்பட்டு விட்டது. எத்தகைய புரட்சியையும் நீர்த்து வடிகட்டித் தனக்காக வடிவங்களில் வெளியிடும் பண்பைப் பார்ப்பனியம் தன்னை உருவாக்கிக் கொண்ட அந்நொடியிலிருந்தே பெற்று விட்டது.
புத்தரின் பார்ப்பன எதிர்ப்புக் கருத்துகளை நீக்கச் செய்து அவரின் வாழ்வியல் நெறிமுறைகளை மதமாக்கி அதில் சாதகக் கதைகள் முதலான பல்வேறு மதம் சார்ந்த கற்பிதங்களைத் திணித்துச் சடங்கு மயமாக்கப்பட்ட ஒரு வடிவத்திற்குக் கொணர்ந்து புத்தத்தையும் காவிக்குள் திணித்த ஒரு சூழ்ச்சியைச் செய்தது பார்ப்பனியம். புத்தர் கூறிய வாழ்க்கை நெறி மனிதன் பின்பற்றத்தக்கவை என்ற நிலையிலிருந்து மாற்றி புத்தர் வழிபடத்தக்கவர் என்ற நிலையை ஏற்படுத்தித் துறவுக்கான அடையாளம் காவி அதற்கான சடங்கு முறைகளை புறத்தேயிருந்து புத்த மதத்திற்கே ஏற்படுத்தியது பார்ப்பனியம்.
புத்தருக்குப் பின்னர் பார்ப்பன அடக்குமுறைக்குப் பேரிடியாய் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாய் அவர்களின் உரிமைகள் என்னவென்று அவர்களுக்குக் கற்றுத் தரவும் அதனை நிலைநாட்டவும் மேலும் அவர்களை அரசியல்படுத்தவும் முயற்சிகளைச் செய்தவர் சோதிராவ் புலே ஆவார். ஒடுக்கப் பட்டோரின் விடுதலைக்கான ஆயுதம் ஒடுக்கப்பட்டோரின் கைகளில்தான் இருக்கிறது என்று அவர்கள் கல்வி பெற தீண்டப் படாதோருக்குப் பள்ளியைத் தொடங்கினார். சமூக மாற்றத்தின் வழி நாம் அரசியல் விடுதலையை வெல்ல முடியும் என்று உண்மை நாடுவோர் சங்கம் (சத்திய சோதக் சமாஜத்) என்ற அமைப்பை நிறுவி பார்ப்பன ஆதிக்கத்திலிருந்து விடுதலை, சடங்குகள், புராண இதிகாசச் சூழ்ச்சிகளிலிருந்து விடுதலை என்று பெரும் புரட்சியை ஏற்படுத்தினார்.
புலேவைத் தொடர்ந்து ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்காகப் பாடுபட்ட தலைவராக இந்தியத் துணைக் கண்டம் முழுவதுமாக அறியப்பட்டவர் அம்பேத்கர். உயர் சாதிகள், தீண்டப்படாதோருக்கு இழைக்கக் கூடிய அனைத்துக் கொடுமைகளையும் தன் வாழ்வில் அனுபவித்து அக் கொடுமைகளை அகற்றி அவர்களுக்கான உரிமைகளைப் பெறுவதையே தன் வாழ்நாள் இலக்காகக் கொண்டவர் அம்பேத்கர். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டங்கள் எதை மையமாய்க் கொண்டு எவ்வாறு இருக்க வேண்டும், அவர்களின் அரசியல் பாதை என்பது எது என்று தெளிவுபடுத்திக் காட்டியதோடு பல்வேறு போராட்டங்கள் மூலம் அதைச் செயல்படுத்தி மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தந்தார். தன் வாழ்வின் எல்லா இடங்களிலும் தலித்துகளின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தார்.
அம்பேத்கரைத் தலைவராகக் கொண்டு தொடங்கப்பட்ட தலித் இயக்கங்கள் பல குறிப்பாகத் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தலித்துகளின் ஒவ்வொரு உள்சாதிக்கும் ஒரு இயக்கம் என்றும், அதில் பல குழு இயக்கங்களும் தோன்றி யிருக்கின்றன. இந்த அனைத்து இயக்கங்களும் இவை தலித்து களின் வாக்கு வங்கிக் கட்சி களாக ஆன பின் ஆண்டுக்கு ஒருமுறை அம்பேத்கர் சிலைக்கு மாலையணிவிப்பது, அம்பேத்கர் படமிட்ட பதாகைகள் சுவரொட்டிகள் துண்டறிக்கைகள் போடுவது, அம்பேத்கரின் வாரிசுகள் என்று வாய்ச்சவடால் விடுவது என்பதை மட்டும் தவறாமல் செய்து வருகின்றனர்.
தலித்துகளின் தலைவர் அம்பேத்கர் இன்றைய இளம் தலைமுறையினர் எத்துணை தலித் இளைஞர்களுக்கு அம்பேத்கரை முழுமையாகத் தெரியும்? எத்துணை மக்களிடம் அம்பேத்கரை இக்கட்சிகள் கொண்டு போய்ச் சேர்த்திருக்கின்றன. அம்பேத்கர் சுவரொட்டிகளிலும், துண்டறிக்கை களிலும், பதாகைகளிலும் இவர்களின் சிறு அடையாளமாய்ச் சுருக்கப்பட்டு விட்டார்.
தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சாதிய வன் கொடுமைகள் நடந்து கொண்டே இருக்கின்றன. திண்ணியம் அவலம், எறையூர்த் தாக்குதல், தலித் மாணவர்கள் மீது தாக்குதல், தலித் பெண்கள் மீது தாக்குதல், உச்சகட்ட உயிர்ப் பலிகளாய் மேலவளவு படுகொலை, கீழ் வெண்மணி படுகொலை இன்னும் நீண்டு கொண்டே போகும் இந்தப் பட்டியல்.
ஆதிக்க உயர்சாதிகள் முதல் அனைத்து சமுதாயமும் தலித்துகளின் மீது நிகழ்த்திய இன்னும் நிகழ்த்திக் கொண்டிருக்கும் இந்த வன்கொடுமை களைப் பார்த்து நரம்புகள் புடைத்தெழுந்த கட்சிகள் எத்தனை? அதில் எந்த வன்கொடுமைக்குத் தடுப்புச் சட்டத்தின் கீழ்த் தண்டனை பெற்றுக் கொடுத்திருக் கின்றன? ஆதிக்கச் சாதி எதிரிகளை அரசியல் நண்பர்களாக எப்பொழுது ஆக்கிக் கொண்டனரோ அப்பொழுதே இவர்கள் தலித் அரசியல் நோக்கத்தைக் கைவிட்டவர்களாகி விட்டனர்.
ஆதிக்கச் சாதி அரசியல் நண்பர்களுடன் மேடைகளில் அரசியல் நடத்தும் கட்சிகளாகி விட்டன. இன்றைய தலித் கட்சிகள் "சாக்கடை நாறுகிறது என்பதற்காக மீன்கள் தரையில் வாழ்வதில்லை' என்று பேசுமளவிற்கு அரசியல் கட்சிகளின் அரவணைப்பு தேவைப்படுகிறது.
போலியான மக்களாட்சியில் மக்கள் பிரதிநிதிகள் என்று சட்ட அவை நாடாளும் அவைக்குச் செல்பவர்கள் எல்லாருமே கோடிகளில் வாழ்பவர் களையும் பெரு நிறுவனங்களால் கோடிகளுக்கு விலை பேசப்படுபவர்களாகவுமே உள்ளனர். இன்றைய அரசியல் கூட்டணிகள் அமைவது முதல் அமைச்சரவை அமைப்பது வரை பெரு நிறுவனங்களின் கைகளில்தான் இருக்கிறது.
இதில் தலித் கட்சித் தலைவர்கள் மட்டும் மக்கள் குரலாக ஒலித்து விடுவார்களா என்ன? அவர்களும் பெட்டிகளைப் பெற்றுக் கொண்டு வாக்கு வங்கிகளைத் தக்க வைக்க வீர உரையாற்றி மக்களை ஏமாற்றும் கயவர்களாகி விட்டனர். தன் மூலம் யாரை எதிர்க்க வேண்டுமோ அவர்களிடமே மக்களை அடகு வைத்து விட்டனர்.
யாரை எதிர்த்துப் போராடி மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுத்தர வேண்டுமோ அவர்களிடமே கைகோர்த்து உறவாடிப் போராட்டங்களை மழுங்கச் செய்து விட்டனர். எதிரியை எதிரியாக நிறுத்தி அவர்களின் அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் பண்பை இழந்து விட்டனர். மக்களுக்கான களப்பணி ஆற்றும் இயக்கங்கள் என்பது மாறிப் போலியான தேர்தல் கட்சிகளாக மாறிய பொழுதே, தலித் மக்களின் முதல் எதிரிகளாகவும் அவை மாறிவிட்டன.
தமிழகத்தின் தலித் கட்சிகளும், தலித் தலைவர்களும் புத்தரின் பெயரையோ, புலேவின் பெயரையோ, அம்பேத்கரின் பெயரையோ உச்சரிக்கவே தகுதியற்றவர்கள். பார்ப்பனியம் செய்யக் கூடிய வேலைகளை இன்றைய தலித் கட்சிகள் செய்து கொண்டிருக்கின்றன.
அம்பேத்கர் வாழ்க்கையையும் அவர் கொள்கை களையும் மறைப்பதற்கு யாரும் தேவையில்லை. அதை இன்றைய தலித் தலைவர்கள் செய்து கொண்டிருக்கின்றனர். சாதி இந்துக்களோ பிற மதத்தினரோ அம்பேத்கரை மக்களுக்கோ குழந்தை களுக்கோ கற்றுக் கொடுக்கப் போவதில்லை.
சமூக அநீதிகளுக்கு எதிராகப் போராடுகிற ஒவ்வொருவர் வீட்டிலும், ஒவ்வொரு தலித் வீட்டிலும் அம்பேத்கர் விதைக்கப்பட வேண்டும். அவரின் கொள்கைகள் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.