தோழர் இரவிசங்கர் அய்யாக்கண்ணு அவர்களின் மொழிபெயர்ப்பில் வெளியிடப்பட்டுள்ள “திசையறியா சூத்திரர்கள்” என்ற நூலைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பேராசிரியர் காஞ்சா அய்லய்யா அவர்கள் 2018 செப்டம்பரில் Caravan ஏட்டில் எழுதிய ஆங்கிலக் கட்டுரையை தமிழில் நிகர்மொழி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

kancha ilaiah bookதோழர்கள் பிரபாகரன், ஜான்சன் இருவரும், விடைகாண வேண்டிய ஒரு முக்கிய விவாதத்தைத் தொடங்கும் நோக்கில் இந்த நூலை வெளியிட்டிருக்கிறார்கள் என்றே கருதுகிறேன்.

இது ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஓரு கட்டுரையின் தமிழாக்கம் என்று குறிப்பு இல்லாவிட்டால், படிப்பவர்களுக்கு இது ஒரு நேரடியான தமிழ்க்கட்டுரை என்ற எண்ணம் தான் தோன்றும். அந்த அளவுக்கு இயல்பான எளிமையான தமிழ்ச் சொற்களால், புரியும்படி மொழிபெயர்த்த தோழர் இரவிசங்கர் அவர்களுக்கும், மெய்ப்புப் பார்த்த தோழர் சுபாஷினி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

காஞ்சா அய்லய்யாவின் இந்தக் கட்டுரையைப் பொறுத்தவரை அவர் பெரியாரையும், திராவிடர் இயக்கத்தையும் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்ற குறை நன்றாக வெளிப்படுகிறது. அதை முதலில் சொல்லிவிட வேண்டும். அதன் அடிப்படையில் நூலைப் படித்தால் குழப்பம் வராது.

அகில இந்திய அளவில் மண்டல் குழு அறிக்கை செயலுக்கு வருவதற்கு முன்பு பிற்படுத்தப்பட்டவர்களின் நிலை - மண்டல் அறிக்கை செயல்படத் தொடங்கிய பிறகு 25 ஆண்டுகள் கழித்து பிற்படுத்தப்பட்டவர்களின் நிலை - என்பவை பற்றிய தகவல்கள் மறுக்க முடியாதவை.

மண்டலுக்குப் பிறகும் பிற்படுத்தப்பட்டவர்களின் இழிநிலை பெரிய அளவில் மாறாமல் இருப்பதற்கு காஞ்சா அய்லய்யா அவர்கள் கூறும் காரணங்களும், இந்த நிலையை ஒழிப்பதற்கு அவர் காட்டும் வழிகளும் அடங்கியது தான் இந்நூல்.

சூத்திர இழிவு ஒழிய, காஞ்சா அய்லய்யா கூறுவதாக, நான் புரிந்து கொண்டவை

  1. தோழர் அம்பேத்கர் அவர்கள், பட்டியலின மக்களுக்கு மதமாற்றத்தைப் பரிந்துரைத்து செயல்படுத்தினார். அதுபோல பிற்படுத்தப்பட்ட மக்களும் இந்து மதத்திலிருந்து வெளியேறவும், இழிவைத் தராத பிற மதங்களைத் தேர்வு செய்யவும் வழிகாட்ட பிற்படுத்தப்பட்டவர்களிடையே எல்லா மாநிலங்களிலும் செல்வாக்குப் பெற்ற ஒரு தலைவர் இல்லை. அப்படி ஒரு தலைமை உருவாக வேண்டும்.
  1. அகில இந்திய அளவில் அம்பேத்கர் பட்டியல் ஜாதி மக்களின் ஒருங்கிணைப்பை உருவாக்கினார். அதுபோல பிற்படுத்தப்பட்ட ஜாதிகளை அகில இந்திய அளவில் ஒருங்கிணைக்க பிற்படுத்தப்பட்ட ஜாதித் தலைவர்கள் எவரும் இல்லை.
  1. பார்ப்பனர்கள் ஆங்கிலக் கல்வியை, தங்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்த ஒரு கருவியாகப் பயன்படுத்தினர். அதற்கு எதிராக அம்பேத்கர் ஆங்கில வழிக்கல்வியை விடுதலைக்கான கருவியாகப் பயன்படுத்தினார். அம்பேத்கரைப் போல, ஏராளமான பட்டியல் சாதி மக்களும், சீக்கியர்களும் ஆங்கிலக்கல்வியை, ஆங்கில வழிக்கல்வியைக் கருவியாக்கி வளர்ந்தனர். அதுபோல பிற்படுத்தப்பட்ட ஜாதி மக்களுக்கு ஆங்கில வழிக்கல்வியைக் கருவியாக்க, வழிகாட்ட பிற்படுத்தப்பட்ட ஜாதித் தலைவர்கள் யாரும் இல்லை.

முதல் இரண்டு வாதங்களை எளிதாக மறுக்கலாம். திராவிடர் கழகம் வெளியிட்ட வடநாட்டில் பெரியார் என்ற நூலின் கட்டுரைகளும், பெரியாரின் சொற்பொழிவுகளும் முதல் இரண்டு வாதங்களையும் ஆணித்தரமாக மறுக்கின்றன. இந்த வாதங்களுக்கு பதில் சொல்வதற்காக, பெரியாரை ஒரு பிற்படுத்தப்பட்ட ஜாதிக்காரர் என்று சொல்வது தவறு.

பெரியார் பிற்படுத்தப்பட்ட ஜாதியில் பிறந்தவர் என்பது மட்டுமே உண்மை. அவர் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், தலித் மக்களுக்கும் ஒரு சேர உழைத்தவர். பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவும், முக்கியமாக அகில இந்திய அளவில் வாழும் அனைத்துப் பிற்படுத்தப்பட்டவர்களுக்காகவும் உழைத்தவர் என்பதை வடநாட்டில் பெரியார் நூல் உறுதிப்படுத்துகிறது.

ஜாத்பட் தோரக் மண்டல் என்ற பஞ்சாப் அமைப்பில் 1930 களில் பெரியார் துணைத் தலைவராக இருந்திருக்கிறார். அவரது இந்துமத எதிர்ப்புக் கருத்துக்களின் காரணமக அந்தப் பதவியிலிருந்து விலக்கப்பட்டார். அதன் பிறகு அந்த அமைப்பு நடத்திய மாநாட்டுக்கு அம்பேத்கர் அழைக்கப்பட்டதும், அந்த மாநாட்டு உரை தடை செய்யப்பட்டதும், பிறகு அந்த உரை ஜாதியை ஒழிக்கும் வழி என்ற நூலாக வந்ததும் நாம் அறிவோம்.

எம்.என்.ராய் அவர்கள், 11.10.1941 இல் பம்பாயில் நேஷனல் டெமக்ரடிக் யூனியன் என்ற பெயரில் ஒரு அகில இந்திய அமைப்பைக் கட்டமைக்கிறார். அப்போதய பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவாகவும், காங்கிரசுக்கு எதிராகவும் ஒரு கூட்டமைப்பாக அது உருவாக்கப்பட்டது. அந்த அகில இந்தியக் கூட்டமைப்பின துணைத் தலைராக பெரியார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அக்கூட்டமைப்பின் மாநாட்டில் பெரியார் தனது தனி திராவிட நாடு கொள்கையை விளக்கினார். குறிப்பாக,

“எங்கள் கொள்கையை நன்றாகச் சிந்தித்துப் பார்த்து, எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காகவே இங்கு வந்திருக்கிறேன். எங்கள் முயற்சிக்கு எல்லா இந்தியச் சம்பந்தம் இருக்க வேண்டும்” என்கிறார்.

தமிழ்நாடு பிரிய வேண்டும் என்று மட்டும் அவர் பேசவில்லை. இந்தியத் துணைக்கண்டத்தில் இருக்கும் அனைவருமே பிரிந்து செல்லுங்கள். ஏன் இரு ஒரே நாடாக இருக்க வேண்டும். இந்து மதத்திலிருந்து நாம் விடுதலை பெற இந்து மத ஆட்சியிலிருந்து விடுதலை பெற எல்லா நாடுகளும் தனித்தனியாகப் போகட்டும் என்று தான் பேசுகிறார்.

அதாவது எல்லா தேசிய இனங்களுக்குமான விடுதலையையும், அந்த விடுதலைக்குத் தேவையான அகில இந்திய அளவிலான ஒருங்கிணைப்பையும் ஒருசேரவே பேசுகிறார்.

14.10.1941 இல் பம்பாயில் நடைபெற்ற தென்னிந்திய தாழ்த்தப்பட்டோர் மாநாட்டில், இந்து மதத்திலிருந்து விடுதலை பெற மதமாற்றத்தைப் பரிந்துரைக்கிறார்.

பம்பாய் டெமாக்ரெடிக் மாநாடு முடிந்த பிறகு, லாகூர், அரித்துவார், டேராடூன், பஞ்சாப், ஷகரன்பூர், கல்கத்தா, பீகாரின் பாட்னா, புத்த கயா, உ.பி.யில் லக்னோ, காசி அருகே உள்ள சாரநாத் புத்த மடம், கான்பூர் என இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் சென்று அனைத்து முற்போக்கு அமைப்புகள், தலைவர்களைச் சந்திக்கிறார்.

எல்லா மாநிலத் தலைநகரங்கள், பெருநகரங்களில் மாபெரும் கூட்டங்களில் உரையாறினார். எல்லாக் கூட்டங்களின் தொகுப்பாக வந்துள்ள உரையில், மதமாற்றத்தையும், தனி திராவிட நாட்டையும், தொடர்ச்சியாகப் பேசியுள்ளார்.

பிறகு 1944 இல் எம்.என்.ராய் அவர்களின் நேஷனல் டெமாக்ரடிக் அகில இந்திய மாநாடுகள் வடமாநிலங்களில் தொடர்ச்சியாக நடந்தன. அவற்றிலும் பங்கேற்றார்.

1944 டிசம்பர் 29, 30, 31 தேதிகளில் நடைபெற்ற அகில இந்தியப் பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டில் ஒரு கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்கிறார். அதில் அகில இந்தியத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறார். 1951 வரை ஏறத்தாழ 7 ஆண்டுகள் அந்த அமைப்பின் அகில இந்தியத் தலைவராக இருந்திருக்கிறார்.

அந்த அமைப்பின் முதல் நாள் மாநாட்டில் பெரியார் தொடக்க உரையாற்றுகிறார். அதில் மனு சாஸ்திரம், பகவத் கீதை, இராமாயணம் இவற்றைக் கொளுத்த வேண்டும் என்கிறார். அதனால் அந்த மாநாட்டின் தலைவரான எம்.என்.சர்க்கார் மாநாட்டிலிருந்து வெளியேறுகிறார். அடுத்த இரண்டு நாள் நிகழ்வுகளும் பெரியார் தலைமையிலேயே நடந்துள்ளன. முக்கியமாக,

  1. எல்லா இந்திய இந்து பிற்படுத்தப்பட்டவர்கள் லீக் என்ற அந்த அமைப்பின் பெயர், எல்லா இந்திய பிற்பட்ட வகுப்பார் சங்கம் என்று மாற்றப்பட்டு, இந்து என்ற பெயர் நீக்கப்பட்டது.
  1. ஒரு சாமியார், வேதங்களில் இருக்கும் பார்ப்பன ஆதிக்க வாக்கியங்களைப் படித்துக்காட்டி வேத எதிர்ப்பைப் பதிவு செய்தார். மற்றொரு சாமியார், இராமாயணத்தின் ஆபத்தை விளக்கி, இராமயணத்தையும், இராமனையும் ஒழிக்க வேண்டும் என்றார். இன்னுமொரு சாமியார் பகவத் கீதையின் ஆபத்தை விளக்கி, கீதை ஒழிக்க வேண்டூம் என்றார்.
  1. பிராமணர், சத்திரியர், வைசியர் தவிர மற்ற பிற்படுத்தப்பட்ட ஜாதிகளுக்கு தேர்தல்களில் தனித்தொகுதி முறையும், வேலைவாய்ப்புகளில் வகுப்புவாரி உரிமையும் கோரி தீர்மானங்கள் நிறைவேறின.
  1. 1929 செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில் பிறப்பிக்கப்பட்ட ஜாதிப் பெயர் ஒழிப்புத் தீர்மானத்தைப் போலவே கான்பூரிலும், பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் இனிமேல் தங்களது ஜாதிப் பெயரைப் போடக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  1. இந்த மாநாட்டில் பெரியாரின் இறுதி உரை மதமாற்றத்தைப் பரிந்துரைத்தது. பிற்படுத்தப்பட்டவர் அனைவரும் துணிவிருந்தால், இந்து மதத்திலிருந்து வெளியேறி இழிவை ஒழிக்கும் எந்த மதத்தில் வேண்டுமானாலும் இணையுங்கள். அல்லது திராவிடர் என அழைத்துக் கொள்ளுங்கள். அல்லது சமரச சமயத்திலோ, ஜீககாருண்ய சமயத்திலோ இணையுங்கள் என்றார்.

அதன்பிறகு 1950, 1959, 1968 வரை தனது ஜாதி ஒழிப்பு, இந்து மத ஒழிப்பு, தனிநாடு கொள்கைகளைப் பரப்ப அகில இந்தியப் பயணங்களை மேற்கொண்டார்.

1947 இல் குடி அரசு ஏட்டில் “இன இழிவு ஒழிய இஸ்லாமே நன் மருந்து” குடிஅரசு - 22.03.1947 என்ற தலைப்பில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மதமாற்றத்தைத் தீர்வாக அறிவித்தார். தொடர்ந்து,

“திராவிடனே சிந்தித்துப் பார்!” - குடிஅரசு - 22.03.1947

“இழிநிலை நீங்கத் தகுதி ஆகுங்கள்!” - குடிஅரசு - 05.04.1947

“ஏன் இஸ்லாத்தில் சேரவேண்டும்?” - குடிஅரசு - 05.04.1947

“சூத்திரனாயிருக்க வெட்கப்படுகிறேன்” - 12.04.1947

என்ற தலைப்புகளில் பிற்படுத்தப்பட்டவர்களை இஸ்லாம் ஏற்கும்படி வேண்டுகோள் விடுத்தார். பெரியாரின் இந்த உரைகளுக்கு அவரது இயக்கத்திற்குள்ளேயே கடும் எதிர்ப்புகள் வந்தன. அந்த எதிர்ப்புகளுக்குரிய பதில்களையும் பெரியார் குடி அரசு ஏட்டில் மிகத் தெளிவாக எழுதியுள்ளார்.

சாதாரண பெரியாரியத் தோழனான எனக்குத் தெரிந்த இந்தச் செய்திகள் பெரும் ஆராய்ச்சியாளராக, சிந்தனையாளராகத் திகழும் பேராசிரியர் காஞ்சா அய்லய்யா அவர்களின் கவனத்தற்குச் செல்லவில்லையா? அல்லது தெரிந்தும் இவற்றைப் பதிவு செய்யாமல் விட்டுவிட்டாரா? எனத் தெரியவில்லை.

விடுதலை சிந்தனையை விதைக்கும் ஆங்கிலக் கல்வி

மண்டலின் பயனை அடையவிடாமல் தடுப்பது தாய்மொழி வழிக் கல்வி என்பது முற்றிலும் உண்மை. அதனால் தான் பெரியார் "விடுதலை சிந்தனையை விதைக்கும் ஆங்கிலக் கல்வி" என ஆங்கில வழி கல்வியை முதன்மைப் படுத்தினார்.

1938 இல் மொழிப்போராக அடையாளப்படுத்தப்பட்ட போரின் தொடக்கம் 1937. அந்த ஆண்டில் பல ஆங்கில வழிக் கல்விக்கூடங்களை இராஜாஜி அரசு மூடிவிட்டது. அதையும் குறிப்பிட்டு ஆங்கில வழிப் பள்ளிகளை மூடியதையும் கண்டித்து பெரியார் அறிக்கை விடுகிறார்.

1967 ல் தி.மு.க.அரசு தமிழ்வழிக் கல்வியை அறிமுகப்படுத்தியபோதுகூட,

“புதிய உலகில் வாழ்கின்ற, வாழ வேண்டிய மக்களுக்கு மொழிப் பைத்தியம் எதற்கு? அதுவும் ஜாதி போன்ற, மதம் போன்ற மொழிப்பைத்தியம், மொழி வெறி என்பது எதற்காக இருக்க வேண்டும்? போதாக்குறைக்கு, “பெரியார் கல்லூரியில் படித்தவர்கள்” என்றும், நாங்கள் “பகுத்தறிவுவாதிகள்” என்றும் சொல்லிக் கொள்ளும் இன்றைய மந்திரிகள், “தமிழுக்கு - தமிழ்மொழிக்குக் கேடு வந்தால் நாங்கள் பதவியை விட்டு வெளியேறி விடுவோம்” என்று சொல்லுகிறார்கள் என்றால், இதில் என்ன பகுத்தறிவு இருக்கிறது? என்ன பெரியார் வாசனை இருக்கிறது?

உயர்தரப் படிப்புகளை எல்லாம், கல்லூரியிலும் கூடத் தமிழிலேயே ஆக்குகிறோம் என்றால், மக்களை முட்டாள்களாக்குகிறோம் என்றுதானே பொருள்? இப்படியான நிலை ஏற்பட்டால் இது முக்கொலை என்றுதானே ஆகும். தமிழ்மொழியும் கெட்டு, பாட விஷயமும் பொருளும் கெட்டு, ஆங்கிலமும் கெடும்படி ஆவதால், மூன்று கொலை செய்வதாகத்தானே முடியும்? இதுதானா சிப்பாய்கள் வேலை?” - தோழர் பெரியார், விடுதலை, 05.04.1967

என தமிழ்வழிக் கல்விக்கு எதிராகவே பெரியார் இருந்தார். இறுதியாக 1973 இல்,

“கேள்வி: தமிழ்மொழியைக் “காட்டுமிராண்டி பாஷை” என்று நீங்கள் குறிப்பீட்டீர்களே?

பெரியார்: ஆமாம். சொன்னேன். என்ன தப்பு?...இந்தி மேலே இருந்த துவேஷம் தமிழ் மேலே அன்பா மாறியது. அதுதான் உண்மை. குழந்தைகளெல்லாம் வீட்டிலேயே இங்கிலீஷில் பேச வேண்டும். அது நல்ல நாகரீகத்தையும் கொண்டு வருகிறது. - கலைமகள் ஏடு, பிப்ரவரி 1973, “ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான்” நூல்.

என ஆங்கிலத்தின் பக்கமே பெரியார் நின்றார்.

இப்படி காஞ்சா அய்லய்யா கூறும் மூன்று தளங்களிலும் பெரியார் மிகச் சரியாக காஞ்சா அய்லய்யாவின் கருத்தை ஒட்டியே இயங்கியிருந்த போதும் பெரியாரைப் பற்றியும், திராவிடர் இயக்கத்தைப் பற்றியும் சரியாக அறிந்தது கொள்ளாமல் ஒரு கட்டுரையை ஒரு ஆய்வாளரே வெளியிட்டிருப்பது வியப்பாக உள்ளது.

இந்துமதக் கருத்தாக்கங்கள், தத்துவங்கள், வாழ்க்கைமுறை, சிந்தனைமுறை, படைப்புகள் என எல்லாவற்றுக்குமே எதிரான ஒரு கருத்தாக்கத்தையும், சிந்தனை முறையையும், பண்பாட்டையும், அரசியலையும் திராவிடர் இயக்கம் பெற்றுள்ளது. அவை எதுவுமே இந்தக் கட்டுரை பதிவு செய்யாதது வருத்தம் தான்.

அதேநேரம், இப்படி எல்லாத் தளங்களிலும் இந்து மதத்திற்கு எதிரான கருத்தையும், செயல்பாட்டையும் திராவிடர் இயக்கங்கள் கொண்டிருந்தாலும், அவற்றை முழுமையாகச் செயல்படுத்தவும், முழுவீச்சில் இயங்கிடவும் என்ன தடை என்பதையும் யோசிக்க வேண்டும் என்பதை இந்நூல் உணர்த்துகிறது.

மதமாற்ற ஆதரவு, இந்திய அளவிலான செயல்பாடுகள், ஆங்கிலவழிக்கல்வி ஆதரவு, என பெரியார் இயங்கியிருக்கிறார். ஒரு ஆய்வாளருக்கே இந்தக் கருத்துக்கள் சென்று சேராததற்கு, அவர் மட்டுமே காரணமாக இருக்க முடியாது. இன்றளவும் கருப்புச்சட்டை போட்ட சில தமிழ்த்தேசிய ஆதரவாளர்களால் பெரியாரின் மதமாற்ற ஆதரவு, ஆங்கிலவழிக்கல்வி ஆதரவு, அகில இந்தியச் செயல்பாடு போன்ற கருத்துக்கள் இழிவாகவும் தவறாகவும் பரப்பப்படுவதும் முக்கியக் காரணமாகும்.

சூத்திரராக இணைவதைவிட திராவிடராக இணைவதே சரி

நூலில் முக்கிய பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டிய பெரியாரின் பணி பதிவு செய்யப்படவில்லை என்பதை பேராசிரியரின் ஆய்வில் உள்ள ஒரு குறையாகப் பார்க்கலாம். ஆனால் அதைவிட இந்நூலில் பெரும் சிக்கலாக நான் உணருவது நூலின் 31 ஆம் பக்கத்தில் வருகிறது.

"ஒவ்வொரு சாதியும் தனித்தனியாகப் போரடுவதைவிட ஒரு வர்ணமாக இணைந்து பார்ப்பனர்களை எதிர்கொள்ள வேண்டும்" என்று பொருளில் ஒரு பத்தி வருகிறது.

பார்ப்பனர்களால், இந்து மதத்தால் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட – பட்டியலின – சிறுபான்மையினர் அனைவரும் பார்ப்பனருக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என்பதே சரியாக இருக்கும்.

சூத்திரர்கள் மட்டும் இணைவது, சூத்திரர்களுக்கு மட்டுமான தேசிய அரசியல் என்பவை பார்ப்பனர்களுக்கு சாதகமானது தான். வர்ணங்களை இறுக்கமாக்கி, அந்த வர்ணங்களுக்குள் மோதலை உருவாக்கி, பழைய வர்ணாஸ்ரமத்தை மீண்டும் வேறு வகையில் நிலைநிறுத்தவே அவை பயன்படும்.

ஆனால், அதே பக்கத்தில், “தலித், பழங்குடிகளின் பார்ப்பன எதிர்ப்பைத் தோழமையாகப் பார்க்க வேண்டும்” என்கிறார் கட்டுரையாசிரியர்.

ஒருங்கிணைவே தலித் + பிற்படுத்தப்பட்டோர் + சிறுபான்மையினர் என இருப்பது தான் பார்ப்பன ஆதிக்கத்தை அழிக்கும். அது தான் திராவிடம். அந்த அடிப்படையில் தான் பெரியார் திராவிடர் என்ற கருத்தியலையே உருவாக்கினார்.

பெரியாரின் திராவிடர் எனும் ஒருங்கிணைப்பு அணுகுமுறைக்கு நேர் எதிராக “சூத்திரராக” இணையுங்கள் என்று கூறுவதற்கு, பெரியாரைப் பற்றி கட்டுரையாசிரியருக்குத் தெரியவில்லை என்பது தான் காரணம், என்றால் அது பெரிய தவறில்லை.

ஆனால், வடமாநிலங்களில் தோழர் வாமன் மேஷ்ராம் அவர்களின் தலைமையிலான பாம்செஃப் (BAMCEF: Backward and Minority Communities Employees Federation) அமைப்பு பெரியாரின் அணி திரட்டலைப் போலவே தலித், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையின மக்களின் கூட்டமைப்பை நடத்துகிறது. தலித் மக்களையும் “பிற்படுத்தப்பட்டோர்” என்ற பெயரிலேயே அடையாளப்படுத்துகிறது.

அந்த அமைப்பினர் “ஜெய்பீம்” என்று முழங்குவதுகூட ஒரு பிரிவினை முழக்கமாகிவிடும் என்ற கருத்தில், “ஜெய்மூல்நிவாசி” எனும் முழக்கத்தை வைக்கின்றனர். “மூல்நிவாசி” என்றால் “மண்ணின் மைந்தர்கள்” என்று பொருள். இந்த அமைப்பு பார்ப்பனர்களை உறுப்பினர்களாகச் சேர்ப்பதில்லை. திராவிடர் கழகத்தைப் போலவே பார்ப்பன எதிர்ப்பு, இந்து மத எதிர்ப்பு, வேத சாஸ்திரங்கள் எதிர்ப்பு என இயங்குகிறது. வெகு மக்கள் இயக்கமாகவும் இருக்கிறது. BMP ஒரு அரசியல் கட்சியையும் நடத்துகிறது. தேர்தல் அரசியலில் சொல்லிக் கொள்ளும்படி வளரவில்லை என்றாலும் ஒரு மக்கள் இயக்கமாக வலுவாக இயங்குகிறது.

தோழர் கான்ஷிராம் அவர்களால் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. ( தோழர் மாயாவதி அவர்களின் அமைப்பு அல்ல. அவர் தலைமையிலும் ஒரு பாம்செஃப் இயங்குகிறது ) பெரியாரின் “திராவிடர்” அணிதிரட்டலைப் போலவே, அதே அணுகுமுறையில் இலட்சக்கணக்கான மக்களைத் திரட்டியுள்ளது பாம்செஃப்.

வடமாநிலங்கள் எல்லாவற்றிலும் பெரும் எண்ணிக்கையில் தொண்டர்களைப் பெற்று இயங்கிவரும் பாம்செஃப் பற்றியும், அந்த அமைப்பின் தலித், பிற்படுத்தப்பட்டவர், சிறுபான்மையினர் கூட்டு ஒருங்கிணைப்பு முயற்சிகளையும் தோழர் காஞ்சா அய்லய்யா பதிவு செய்யவில்லை எனும் போது. கட்டுரையின் அடிப்படைக் கருத்தே “சூத்திரர்” எனும் வர்ணத்தை மீட்டெடுப்பதாக உள்ளதோ? என யோசிக்க வைக்கிறது.

காஞ்சா அய்லய்ய கூறுவது போல, அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற பிரிவிற்காக உழைக்கும் தலைவர்கள் இல்லை. பிற்படுத்தப்பட்டவர்களுக்குள்ளேயே தனித் தனி ஜாதிச்சங்கங்களாகப் பிரிந்து அந்த ஜாதிகளுக்காகக் குரல் கொடுப்பவர் களும், அந்தந்த ஜாதி வாக்குகளை அடமானம் வைத்துப் பிழைப்பவர்களும் மட்டுமே இருக்கிறார், அகில இந்திய அளவில் ஒருங்கிணைத்துச் செயல்படும் தலைவர்கள் இல்லை என்பதெல்லாம் அப்பட்டமான உண்மை தான்.

அந்த உண்மையான நோய்க்கு சரியான மருந்து என்பது, அகில இந்திய அளவில் சூத்திரர்கள் ஒருங்கிணைய வேண்டும் என்பதற்கு மாற்றாக, அகில இந்திய அளவில் பட்டியலின, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினரின் கூட்டமைப்பு உருவாக வேண்டும் என்பதே ஆகும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டு உரிமைப் போரில் பட்டியலின மக்களும், தலித் அமைப்புகளும் பங்கேற்றுள்ளன. தலித் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களில் பிற்படுத்தப்பட்டோரும், தலித்துகளும் இணைந்து இயங்கும் திராவிடர் இயக்கங்கள் முழுவீச்சுடன் இயங்குகின்றன.

1951 இல் அகில இந்திய அளவில் இடஒதுக்கீட்டு உரிமைக்குச் சிக்கல் வந்தபோதுகூட திராவிடராக ஒருங்கிணைந்த தோழர்களைக் கொண்ட தி.க, தி.மு.க, ஆகிய இயக்கங்களின் போராட்டமே வெற்றியைக் கொடுத்தது.

அண்மையில் மருத்துவ உயர்கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு மறுக்கப்பட்டது. நீட் தேர்வு மோசடியால் பிற்படுத்தப்பட்டவர்களின் ஆயிரக்காண மருத்துவ இடங்கள் அபகரிக்கப்பட்டன.

அதற்கு எதிராக தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, சிறுபான்மை மக்கள் ஒருங்கிணைந்து இயங்கும் தி.மு.க. சட்டப்போராட்டத்தை நடத்தி வென்றது. அதேபோல, திராவிடராக ஒருங்கிணைந்த தி.க, தி.வி.க, த.பெ.தி.க.ஆகிய இயக்கங்களும், பிற்படுத்தப்பட்ட ஜாதிச் சங்கங்களும், தலித் விடுதலை அமைப்புகளும் ஓரணியில் திரண்டு போராடின, இந்த முன்மாதிரிகளை அகில இந்தியாவுக்கும் புரியவைப்போம்

நாம் அகில இந்திய ஒருங்கிணைப்பை உருவாக்க வேண்டியது அவசியம். தோழர் வே.ஆனைமுத்து அவர்கள் 2011 இல் தனது சிந்தனையாளன் ஏட்டில் இதுகுறித்து “பெரியார் ஈ.வெ.ரா. சொன்னது என்ன? இருப்பது என்ன? நாம் செய்ய வேண்டியது என்ன?” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில்,

“பெரியார், பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் அனைத்திந்திய இயக்கமாக உருவாக்கப்பட வேண்டும். அதற்குத் துணையாக - The Hindu ஆங்கில நாளிதழ் போன்று நமக்கு ஆங்கிலத்தில் ஒரு நாளிதழ் வேண்டும்” என்று வெளிப்படையாக அறிக்கை விடுத்தார். அன்றும் முதலமைச்சராக விளங்கிய கலைஞர் மு. கருணாநிதிக்கு இதுபற்றி வேண்டுகோள் விடுத்தார். - சிந்தனையாளன்-மார்ச் 2011

பெரியாரின் வேண்டுகோளை நிறைவேற்ற, திராவிடராக அகில இந்திய அளவில் இணைவோம். அன்றைய தி.மு.க.தலைவரிடம் வைக்கப்பட்ட கோரிக்கை இன்றைய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காலத்தில் “அகில இந்திய சமூகநீதிக் கூட்டமைப்பாக” இந்தியாவின் மண்ணின் மைந்தர்களை - திராவிடர்களாக ஒருங்கிணைக்கும்! அவரது முயற்சிக்கு முழுமையாகத் துணை நிற்போம். திராவிடராக ஒருங்கிணைவோம்! அகில இந்திய திராவிடர் கூட்டமைப்பு உருவாக உழைப்போம்!

அதிஅசுரன்

Pin It