என்னுடைய உரையை மார்க்சியம் பற்றி அம்பேத்கர் என்றும், அம்பேத்கர் பற்றி மார்க்சியம் என்றும் இருபெரும் பிரிவுகளாகப் பிரித்துக் கொள்கிறேன். முதல் விஷயத்தைப் பொறுத்தவரை மார்க்சியம் பற்றிய தனது கருத்துக்களை அம்பேத்கர் ஆங்காங்கே பேசியிருந்தாலும் “புத்தரா? கார்ல் மார்க்சா?” எனும் நெடுங்கட்டுரையில் இதுபற்றி விரிவாகவே அலசியிருக்கிறார்.
மார்க்சியத்தில் இப்போதும் காலப்பொருத்தம் உள்ளவையாக இருப்பவை என்று அவர் நான்கு கூறுகளைக் குறிப்பிட்டுள்ளார். ஒன்று - இதுவரை தத்துவஞானிகள் எல்லாம் உலகு பற்றிய பல்வேறு வியாக்யானங்களைத் தந்துள்ளார்கள், செய்ய வேண்டியது என்னவோ உலகை மாற்றுவதுதான். இரண்டு - ஒரு வர்க்கத்துக்கும் இன்னொரு வர்க்கத்துக்கும் இடையே அவற்றின் நலன்களில் முரண்பாடு உள்ளது. அதாவது, வர்க்கப் போராட்டம் நடக்கிறது. மூன்று - தனியுடைமை யின் காரணமாக ஒரு வர்க்கத்துக்கு அதிகாரமும், இன்னொரு வர்க்கத்துக்கு சுரண்டலினால் வரும் துன்பமும் ஏற்படுகின்றன. நான்கு - சமுதாயத்தின் நன்மைக்காக தனியுடைமையை ஒழிப்பதன் மூலம் துன்பத்தை நீக்குவது அவசியம்.
இந்த நான்கு கூறுகளை அம்பேத்கர் ஏற்றது என்பது மார்க்சியத்தை ஏற்றதாக அர்த்தமாகும். காரணம், மார்க்சியத்தின் அடிப்படைக் கூறுகள் இந்த நான்கும்தான். ஒரு சமூகப் போராளி என்ற முறையில் அவரை இந்த அம்சங்கள் வெகுவாக ஈர்த்திருந்தன. அதிலும் அடிப்படை சமுதாய மாற்றத்தை வேண்டியவர் என்பதால் இவற்றை உற்சாகமாக வரவேற்றார்.
அதே நேரத்தில், மார்க்சியத்தில் காலாவதியாகிப் போன கூறுகள் என்றும் சிலவற்றை அம்பேத்கர் குறிப்பிட்டிருக்கிறார். விசேஷம் என்னவென்றால் அவையெல்லாம் மார்க்சியத்தில் இருப்பதாக அதன் எதிரிகளால் இட்டுக் கட்டப்பட்டவை. அவர்களாகவே இதுவெல்லாம் மார்க்சியத்தின் கூறுகள் எனச் சொல்லிக் கொண்டு, அவர்களாகவே அவற்றை வன்மையாகக் கண்டனம் செய்து கொண்டார்கள். அந்த 1940-50களில் மார்க்சியத்தின் மூல நூல்கள் அனைத்தும் இந்தியாவில் பரவலாகக் கிடைத்ததில்லை. முதலாளித்துவ அறிவு ஜீவிகள் மார்க்சியம் பற்றிச் சொன்னதிலிருந்தே மார்க்சியம் பற்றிய நிர்ணயிப்புக்கு வரவேண்டியிருந்தது அம்பேத்கரால். எனவே அவற்றையும் மார்க்சியக் கூறுகள் என நினைத்துக் கொண்டு, ஆனால் அவற்றின் பொருத்தப்பாடின்மையைக் கச்சிதமாக உணர்ந்து நிராகரித்தார்.
மார்க்சியத்தின் கூறுகள் எனக்கருதி அம்பேத்கர் நிராகரித்தவை மூன்று. ஒன்று - வரலாற்றுக்கான பொருளாதார விளக்கமே ஒரே விளக்கம். இரண்டு - மனித முயற்சியின்றி சோசலிசம் தானாக வந்துவிடும். மூன்று - புத்தருக்கும் மார்க்சுக்குமான வேறுபாடு குறிக்கோளில் இல்லை; ஆனால் வழிமுறையில் உண்டு . முன்னது அஹிம்சாபூர்வமானது, பின்னது வன்முறையிலானது.
மார்க்சியத்தை “பொருளாதார நிர்ணயவாதம்” என்று முதலாளித்துவ வாதிகள் பழிசுமத்தி வந்தார்கள். அதாவது, மனிதகுல வரலாற்றைத் தீர்மானிப்பது பொருளாதாரம் மட்டுமே என்று மார்க்சியம் கூறுவதாக இட்டுக்கட்டினார்கள். வரலாற்றை இறுதியாகத் தீர்மானிப் பது வாழ்வின் உற்பத்தி மற்றும் மறு உற்பத்தி என்றுதான் மார்க்சியம் கூறுகிறது. மதம், தத்துவம், சட்டம், கலை, இலக்கியம் போன்ற எத்தனையோ கூறுகளுக்கும் அதில் பங்கு உண்டு என்றது. சொல்லப்போனால் மனிதகுலப் போராட்டத்தின் வடிவத்தை தீர்மானிப்பதில் இந்த மேற்கட்டுக் கோப்பிற்கு அதிக முக்கியத்துவம் உண்டு என்றது. இது பற்றிய விளக்கத்தைத் தரும் எங்கெல்சின் கடிதங்கள் எல்லாம் அம்பேத்கர் காலத்தில் இந்தியாவில் கிடைத்ததா என்பது சந்தேகமே.
மனித முயற்சி இன்றி சோசலிசம் தானாக வந்துவிடும் என்று எங்கே கூறியது மார்க்சியம்? ஒரு கருத்தோட்டம் மனிதர்களைக் கவ்விப்பிடிக்கும் போதே அது பவுதீக சக்தியாகிறது என்று சொன்னார் மார்க்ஸ். புதிய சமுதாயத்திற்கான பிறப்பை பழைய சமுதாயம் தன்னில் கருக்கொண்டிருக்கிறது. ஆனால், அதற்கான மருத்துவச்சியாக இருந்து பிரசவம் பார்க்க வேண்டியது மனிதகுலமே, அதன் போராட்டமே. இதையும் சேர்ந்தே சொன்னார்கள் மார்க்சிய மூலவர்கள். இதைப் புரிந்து கொண்டிருந்ததால்தான் போல்ஷ்விக் கட்சியை உருவாக்கி, புரட்சியை நடத்திக் காட்டினார் லெனின். இது மனித முயற்சியின்றி வேறென்ன?
மார்க்சியம் வன்முறையை மட்டுமே வலியுறுத்துகிறது என்று விடாமல் சொல்லி வருகிறார்கள். மார்க்ஸ் லண்டனில் வந்து தங்கிய பிறகு, அங்கு எழுந்து வந்த நாடாளுமன்ற ஆட்சிமுறையைக் கண்டபிறகு சோசலிசத்துக்கான மாற்றம் இங்கிலாந்தில் அமைதி வழியில் நடக்கக்கூடும் என்று கூறினார். அவர் எந்தவொரு சாத்தியப்பாட்டையும் நிராகரிக்கவில்லை. அவருக்கு குறிக்கோளே முக்கியம். அதற்கான வழிமுறைகள் நாட்டுக்கு நாடு வேறுபடக்கூடும் என்பதை உணர்ந்திருந்தார் அந்த மாமேதை. மார்க்சியத்தை வன்முறையோடு முடிச்சுப்போடுவது அதன் எதிராளிகளின் திட்டமிட்ட திருகல் வேலையாகும்.
ஆக, யோசித்துப் பார்த்தால் அம்பேத்கர் நிராகரித்தவை எல்லாம் மார்க்சியம் என்ற பெயரில் இட்டுக்கட்டப்பட்ட மார்க்சியமல்லாத கூறுகளே. அவற்றை அவர் நிராகரித்ததில் நமக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை. நமக்கு முக்கியம் அவர் ஏற்றுக் கொண்டிருந்த அந்த நான்கு கூறுகள். அவையே மார்க்சியத்தின் அடிப்படை அம்சங்கள். அவற்றை அவர் ஒப்புக் கொண்டிருந்தது அவர் மார்க்சியத்தோடு எவ்வளவு நெருங்கி இருந்தார் என்பதைக் காட்டுகிறது. இதற்காக அவரை நாம் போற்றுகிறோம், புகழ்கிறோம்.
இத்தகைய மார்க்சியத்தை “ஐரோப்பியத் தயாரிப்பு” என்றும், “இறக்குமதியான சரக்கு” என்றும் இப்பொழுதும் சிலர் பேசுகிறார்கள். ஒவ்வொரு மனிதனிடமும் மனிதகுலத்தின் பொதுத்தன்மையும் உள்ளது. அவன் பிறந்த பகுதியின் தனித்தன்மைகளும் உள்ளன. பொதுத்தன்மை பற்றிய தனது கருத்தோட்டத்தைத் தருகிற மார்க்சியம் தனித்தன்மைகள் பற்றி பேசக்கூடாது என்று கூறுவதில்லை. இரண்டையும் சேர்த்தே பேசச் சொல்கிறது. ஐரோப்பாவிலிருந்து வந்த ரயிலிலும், பேருந்திலும் ஏற மறுக்காதவர்கள் அங்கிருந்து வந்த மார்க்சியத்தை மட்டும் புறந்தள்ளும் வினோதம் நடக்கிறது. அவர்கள் என்ன பேசினாலும் உண்மையானது சகலத்தையும் மீறித் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும்.
இந்தப் பின்புலத்தில் அம்பேத்கரை மார்க்சியவாதிகள் எப்படிப் பார்க்கிறார்கள் அல்லது எப்படிப் பார்க்க வேண்டும் என்கிற விஷயத்திற்கு வருவோம். சாதி பற்றிய அம்பேத்கரின் ஆய்வுகளை மார்க்சியவாதிகள் உற்சாகமாக வரவேற்கிறார்கள், கற்றுக்கொள்கிறார்கள். 1916லேயே சாதிகள் பற்றிய ஆய்வுக்கட்டுரையை அவர் அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் சமர்ப்பித்தார். சாதியின் அடிப்படையான இயல்பு அகமணம் - அந்தக் குறிப்பிட்ட குழுவுக்குள் மட்டுமே திருமணம் புரிவது என்பதைச் சுட்டிக் காட்டினார். தனக்குத்தானே விதித்துக் கொள்கிற இந்தக் கட்டுப்பாடு பெண்ணடிமைத்தனத்திற்கு இட்டுச் சென்றது என்கிற ஒரு புதிய கோணத்தைத் தந்தார்.
யுத்தம், வேட்டை போன்ற காரணங்களால் ஆண்கள் இளம் வயதிலேயே இறக்கும்போது ஒரு சாதிக்குள் பெண்கள் தொகை பெருகி, ஆண்கள் தொகை குறைந்துவிடுகிறது. பெண்களைச் சாதிவிட்டுத் திருமணம் செய்து கொடுத்தால் பிரச்சனை தீர்ந்துவிடும். கறாரான அகமண முறை அதற்கு இடம் கொடுக்காத நிலையில் பலதார மணம், உடன்கட்டை ஏற்றல், கட்டாய விதவைத்தனம் போன்றவற்றில் பெண்களைத் தள்ளிக் கொடுமைப்படுத்தினார்கள் என்றார் அம்பேத்கர். இத்தகைய ஆய்வுகள் மார்க்சியர்களை ஈர்க்கின்றன. சாதியத்திற்கும் ஆணாதிக்கத்திற்கும் இடையிலான தொடர்பு புரிகிறது.
ஜாத்-பட்-தோடக் மண்டல் என்கிற அமைப்பில் ஆற்றுவதற்கு அம்பேத்கர் தயாரித்திருந்த உரை “சாதி ஒழிப்பு” எனும் பெயரில் 1936ல் நூலாக வெளி வந்தது. சாதியின் இயல்பு அகமணம் என்பதால், சாதி ஒழிப்புக்கான வழி அந்த அகமணம் மறுப்பு என்றார் அதில். அத்தகைய சாதி மறுப்பு மணத்திற்கு மனத்தடை ஒரு பிரதான காரணம் என்றும், அதை உருவாக்கியதில் இந்து மதத்திற்குத் தீவிரப் பங்கு உண்டு என்றும் கூறினார்.
இந்துமதம் பற்றிய அம்பேத்கரின் ஆய்வுகள் மிகப் பிரமாதமானவை. அந்த மதத்திலே தத்துவ விசாரணையைவிட சடங்குகள் அதிகம். அது ஏவல்கள் மற்றும் தடைகளைக் கொண்ட ஒரு தொகுப்பாக உள்ளது. ஒவ்வொரு சாதியாரும் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது எனும் கட்டளைகளைக் கொண்டதாக உள்ளது. அத்தகைய தர்மசாஸ்திரங்களின் அஸ்திவாரத்தில் அந்த மதம் நிற்கிறது. அத்தகைய மதத்தை எதிர்க்காமல் சாதியை ஒழிக்க முடியாது என்று கூறினார்.
இத்தகைய சாதி மறுப்பு இயக்கத்தின் தேவையை வற்புறுத் தும்போதுதான் அவர் சாதி ஒழிப்புக்கு அன்றைய சோசலிஸ்டுகள் கூறிய தீர்வை கேள்விக்கு உட்படுத்தினார். அவர்கள் சோசலிச சமுதாயத்தில் இந்தப் பிரச்சனை தீர்ந்துவிடும் என்றார்கள். அம்பேத்கரோ சோசலிச சமுதாயம் அமைப்பதற்கான போராட்டத்தில் சகல உழைப்பாளி மக்களையும் ஒன்று திரட்டவே சாதி மறுப்பு இயக்கம் தேவை என்றார். அதாவது சாதி மறுப்பானது சோசலிசத்தின் பின்விளைவாக மட்டுமல்லாது, அதன் ஒரு காரணியாகவும் இருக்கிறது என்றார்.
இதற்கு அவர் இரண்டு விசயங்களை நினைவுபடுத்தினார். ஒன்று, உழைப் பாளர்கள் மத்தியிலே வர்க்க உணர்வோடு சாதி உணர்வும் இருக்கிறது என்பது. இரண்டு, தொழிற்சாலையிலும் நிர்வாகம் சாதி வேறுபாடு காட்டுகிறது என்பது. உதாரணமாக, ரயில்வேயில் சுமைதூக்கிகளாகக்கூட அந்தக் காலத்தில் தாழ்த்தப் பட்டோர் சேர்க்கப்பட்டதில்லை. காரணம் அவர்களையே ரயில்வே அதிகாரிகள் தங்கள் வீட்டுவேலைகளுக்கும் பயன்படுத்தினார்கள். தாழ்த்தப்பட்டோரை நியமித்தால் வீட்டு வேலைகளுக்குப் பயன்படுத்த முடியாதல்லவா? அதனால்தான் 1938ல் ரயில்வேத் தொழிலாளர்கள் மத்தியில் பேசும்போது அவர்களின் எதிரிகள் பார்ப்பனியம் மற்றும் முதலாளித்துவம் என்றார் அம்பேத்கர்.
இதிலே எல்லாம் மார்க்சியர்களுக்கு எவ்வித முரண்பாடும் இல்லை. சொல்லப்போனால் 1930களில் “குடி அரசு”, “பகுத்தறிவு” போன்ற பெரியாரின் சுயமரியாதை இயக்க ஏடுகளில் இத்தகைய கருத்துக்களை எழுதி வந்தார் கம்யூனிஸ்டு சிங்காரவேலர். பார்ப்பனியம் - முதலாளித்துவம் இரண்டையும் எதிர்த்துச் சண்டமாருதம் செய்தவர் அந்தக் கம்யூனிஸ்டு தலைவர்.
ஆனால் கம்யூனிஸ்டுகள் வேறு சில உண்மைகளையும் சேர்த்துப் பார்த்தார்கள். முதலாளித்துவத்தின் உச்சகட்ட வளர்ச்சியாக ஏகாதிபத்தியம் எழுந்திருந்தது. அன்று அது இந்தியாவில் நேரடி ஆட்சியில் இருந்தது, நம்மை அடக்கி ஆண்டு வந்தது. எனவே ஏகாதிபத்திய எதிர்ப்பிலும் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்கள். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளைக் காட்டிலும் மிகக் கோரமான எதிரிகளாக நாஜிசவாதிகளும் பாசிசவாதிகளும் கிளம்பிய போது அவர்களை எதிர்த்தும் கம்யூனிஸ்ட்டுகள் போராடினார்கள். அம்பேத்கரும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வட்டமேஜை மாநாட்டில் பேசினார். நாஜிசம் - பாசிசத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார் என்பது உண்மை.
ஆனால் 1942-1946 காலத்தில் அவர் பிரிட்டிஷ் மந்திரி சபையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தார். ஒரு சமூகப் போராளி மத்திய மந்திரி சபையில் இடம்பெற்றார், தொழிலாளர்களுக்கு ஆதரவான சில சட்டங்களைக் கொண்டு வந்தார் என்பது அதில் சாதகமான அம்சம். அதுவே தொழிற்சங்கங்களுக்கும் அவருக்கும் இடையில் சில உரசல்களைக் கொண்டு வந்தது என்பது பாதகமான அம்சம். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் பிரதிநிதியாய் பேச வேண்டிய நிலையில் அம்பேத்கர் இருத்தப்பட்டார். 1945-46ல் நடைபெற்ற தேர்தல்களில் அவரது “பட்டியல் சாதியினர் சம்மேளனம்” கட்சி தோற்றதற்கு- ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு வீறு கொண்டெழுந்திருந்த அந்தக் காலத்தில் அவரது கட்சி தோற்றதற்கு - இதுவும் ஒரு காரணமாகும். சாதி எதிர்ப்பு இயக்கத்தையும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தையும் இணைத்து நடத்த வேண்டும் என்பதே இதில் கிடைத்த பாடமாகும்.
சுதந்திர இந்தியாவின் அமைச்சரவையில் அம்பேத்கர் சட்ட அமைச்சராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியதில் பிரமாதமான பங்களிப்பைச் செய்தார். இதை மூடிமறைத்து “பொய் தெய்வங்களைக் கும்பிடுவது” என்றொரு நூல் எழுதியிருக்கிறார் ஆர். எஸ். எஸ். பரிவாரத்தைச் சேர்ந்த அருண்ஷோரி. அந்தக் கேவலமான நூலுக்கு தமிழகத்தின் அம்பேத்கரிஸ்டுகள் சரியான பதிலடி தராதது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. கம்யூனிஸ்டுகளை விமர்சிப்பதில் காட்டுகிற ஆர்வத்தில் ஒரு பகுதியையாவது இந்ததுத்துவாவாதிகள் எதிர்ப்பில் அவர்கள் காட்டினால் நல்லது.
உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் அம்பேத்கர் தந்த கடும் உழைப்பை அரசியல் நிர்ணயசபை உறுப்பினராகிய டி. டி. கிருஷ்ணமாச்சாரி அங்கேயே பாராட்டிப் பேசினார். அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழுவில் அம்பேத்கரைத் தவிர்த்து இன்னும் ஆறுபேர் இருந்தார்கள். அவர்களால் முழுமையாகச் செயல்பட முடியவில்லை என்கிற விபரத்தை எல்லாம் தந்த டி. டி. கே. “இறுதியில் அரசியலமைப்புச் சட்டத்தைத் தயாரிக்கும் சுமை டாக்டர் அம்பேத்கரின் மீது விழுந்தது. ஐயத்திற்கிடமற்ற முறையில், மிகவும் பாராட்டத்தக்க விதத்தில் இந்தக் கடமையைச் சாதித்ததற்காக நாம் அவருக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம்” என்றார். இப்படிப்பட்டதொரு மகத்தான பணியைத்தான் மிகவும் சிறுமைப்படுத்தி எழுதியிருக்கிறார் அருண்ஷோரி.
ஷோரியின் ஆத்திரத்திற்கு காரணம் உண்டு. அரசியல் நிர்ணய சபையில் பார்ப்பனியத்தின் குரல் வன்மையாக ஒலித்தது. அதை எதிர்த்து வலிமையாகப் போராடி, முடிந்த அளவு வெற்றி பெற்றார் அம்பேத்கர். உதாரணமாக, அரசியலமைப்புச் சட்டத்தின் அடிநாதமாக கிராமப் பஞ்சாயத்து முறை இருக்க வேண்டும் என்றார்கள் பழமைவாதிகள். இதை அம்பேத்கர் ஏற்கவில்லை.
வரைவு அரசியலமைப்புச் சட்டத்தை முன்மொழிந்து அவர் பேசிய பேச்சு அபாரமானது. அந்நியப் படையெடுப்பாளர்கள் இந்த நாட்டுக்குள் வந்த போதெல்லாம் வேடிக்கை பார்த்தன இந்தக்கிராம சமூகங்கள் என்பதை நினைவுபடுத்தினார். “உள்ளூர்வாத சாக்கடைத் தொட்டியாகவும், அறியாமை நிறைந்த இருள் குகையாகவும், குறுகிய மனப்பான்மை மற்றும் சாதி ஆதிக்கத்தின் பிறப்பிடமாகவும் உள்ளது தானே கிராமம்? வரைவு அரசியலமைப்புச் சட்டமானது கிராமத்தை ஒதுக்கிவிட்டு தனிமனிதனைத் தனது அடிப்படை அலகாக வைத்துக் கொண்டுள்ளது பற்றி எனக்கு மகிழ்ச்சியே” என்று பளிச்சென்று கூறினார் அவர். இந்திய கிராமங்கள் பற்றி மாமேதை மார்க்ஸ் எழுதியதன் சாடை இதில் தெளிவாக வெளிப்பட்டது.
குடியரசுக் கோட்பாட்டை முடிந்த அளவு நமது அரசியலமைப்புச் சட்டத்தில் கொண்டு வந்ததில் அம்பேத்கருக்கு ஒரு தனித்த பங்கு உண்டு. ஆனால், இந்திய அரசு முழுமையான குடியரசு அல்ல என்பதை நாம் அனுபவத்தில் கண்டுவிட்டோம். அதை முழுமை யானதாக ஆக்குவதற்கு முதலாளித்துவத்தை எதிர்த்த வர்க்கப் போராட்டம் அவசியம். காங்கிரஸ் மந்திரி சபையில் அம்பேத்கர் அங்கம் வகித்தது, அதற்கானதொரு போராட்டத்தை அரசியல் நிர்ணயசபையில் அவர் நடத்த உதவியது என்பது உண்மை. மறுபுறத்தில் அவர் காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரதிநிதியாகப் பேச வேண்டிய கட்டாயத்தில் இருத்தப்பட்டார் என்பதும் உண்மை. இதுவும் அவருக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் இடையிலான உரசலை உருவாக்கியது.
மறுபுறத்தில் அம்பேத்கரால் காங்கிரஸ் மந்திரி சபையில் தொடர்ந்து இருக்கவும் முடியவில்லை. மாதர் விடுதலையை மனதில் கொண்டு அவர் தயாரித்த இந்து சட்டத்திருத்த மசோதாவை இந்து மகாசபையினர் மட்டுமல்ல, காங்கிரசிலிருந்த பழமைவாதிகளும் ஆதரிக்கவில்லை. இதனால் வெறுத்துப்போன அம்பேத்கர் 1951ல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். பெண்ணியம் குறித்த அம்பேத்கரின் சிந்தனைகள் போற்றத்தக்கவை, அவையும் தனித்து ஆராயப்பட வேண்டும்.
இப்படி காங்கிரசோடும் தொடர்ந்து போக முடியாமல், அரசியலமைப்புச் சட்ட ஆக்கப்பணியில் மூழ்கி சொந்தக் கட்சியையும் வளர்க்க முடியாமல் போன நிலையில் 1952 பொதுத் தேர்தல் வந்தது. இவர் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை யில், வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை என்ற அடிப்படையில் நடந்த முதல் தேர்தல். பம்பாய் தொகுதி ஒன்றிலிருந்து மக்களவைக்கு போட்டியிட்ட அம்பேத்கர் அநியாயமாகத் தோற்றுப்போனார், அதிகம் அறியப்படாத ஒரு வெண்ணெய் வியாபாரி வெற்றி பெற்றார். இது தரும் பாடம் என்ன? சாதி எதிர்ப்பு இயக்கம் என்பதை முதலாளித்துவத்தை எதிர்த்த வர்க்கப் போராட்டத்தோடு இணைந்தே நடத்த வேண்டும் என்பது. இல்லையென்றால் மகத்தான சமூகப் போராளிகளையும் தேர்தல் அரசியல் ஓரங்கட்டிவிடும்.
அம்பேத்கரியவாதிகளுக்கும் மார்க்சியவாதிகளுக்கும் இடையே முரண்பாடு ஏதுமில்லை; இருப்ப தெல்லாம் சில வேறுபாடுகளே. தனியுடைமைச் சமுதாயம் ஒழிய வேண்டும், சாதியச் சமூகம் ஒழிய வேண்டும் என்பதில் இரு சாராருக்கும் ஒருமித்த கருத்து இருக்கிறது. வேறுபாடு, அதை எப்படி அடைவது என்பதில்தான். சாதி எதிர்ப்பு இயக்கம் மட்டுமே போதும் என்கிறார்கள் அம்பேத்கரியவாதிகள். அதை ஏகாதிபத்திய - நிலப் பிரபுத்துவ - முதலாளித்துவ எதிர்ப்பு வர்க்கப் போரோடு இணைத்து நடத்த வேண்டும் என்கிறார்கள் மார்க்சிய வாதிகள். இதுவே காலப்பொருத்தப்பாடு உடைய நிலைபாடு.
ஒரு காலத்தில் வருணமே வர்க்கமாக இருந்தது. இப்போதோ வருணமும் இருக்கிறது. அதிலி ருந்து பிறந்த வர்க்கமும் இருக்கிறது. அதிலும் வர்க்கப் பிரிவினையே வளரும் உண்மையாக இருக்கிறது. ஆகவேதான் வருண எதிர்ப்பையும் வர்க்கப்போரையும் இணைத்து நடத்த வேண்டும் என்கிறார்கள்.
இதை அம்பேத்கரியவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறோம். அவரவர் மற்றவர் நிலை பாட்டைப் புரிந்து கொள்வது அவசியம். காரணம் இரு சாராரும் இணைந்து போராட வேண்டிய காலமிது. வேறுபாடுகளைப் பெரிதுபடுத்துவதைவிட பொது உடன்பாடுள்ள விஷயங்களில் இரு சாராரும் ஒன்று பட்டுப் போராட வேண்டும். இதற்கு மார்க்சியவாதிகள் எப்போதும் தயாராக இருக்கிறார்கள்.
இந்தப் பார்வையிலிருந்துதான் அம்பேத்கரிட மிருந்து கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கிறது என்கிறார்கள். அவர் நடத்திய சவுதார்குளம் நீர் எடுக்கும் போராட்டம், நாசிக் காளாராம் கோவில் நுழைவுப் போராட்டம் போன்றவை இப்போதும் நமக்கெல்லாம் உத்வேகம் தருபவை.
பிற்காலத்தில் இத்தகைய போராட்டங்களை அம்பேத்கர் நடத்தவில்லை என்றாலும் அதற்கான அவசியம் என்னவோ இருந்தது. அவர் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தாலும் பூரிஜெகன்னாதர் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. பக்கத்துவீட்டு மொட்டை மாடியிலிருந்துதான் கோவிலை எட்டிப் பார்த்தார். இது சுயமரியாதைப் பிரச்சனை. இதுபோன்ற தீண்டாமை ஒழிப்புப் பிரச்சனைகளை அவசியம் கையில் எடுக்க வேண்டும். நிலப்பிரச்சனை, வீட்டுமனைப் பிரச்சனை,வறுமை ஒழிப்பு பிரச்சனை, பொருளாதார ரீதியாக தலித்துகள் சொந்தக்காலில் நிற்கும் பிரச்சனை என்பவற்றை பிரதானமாக எடுக்க வேண்டும். இதற்கு ஒரு விரிந்த அணிவகுப்பை உருவாக்க வேண்டும்.
பார்ப்பனியம் பற்றி அம்பேத்கர் எழுதியுள்ள படைப்புகள் பலவற்றையும் நாம் படிக்க வேண்டும். அதே நேரத்தில் பார்ப்பனிய எதிர்ப்பு வேறு, பார்ப்பனர் எதிர்ப்பு வேறு என்று அவர் கச்சிதமாக வேறுபடுத்தியிருப் பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சவுதார்குளம் போராட்டத்தின்போது அது நடந்தது. தங்களது ஆதரவு வேண்டும் என்றால் பார்ப்பனர்களை அதில் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்றார்கள் பார்ப்பனரல்லாத தலைவர்கள். அப்போது அம்பேத்கர் கூறினார் - பார்ப்பனியச் சிந்தனையோடு வரும் பார்ப்பனரல்லாத வரை நிராகரிப்பேன், பார்ப்பனியச் சிந்தனை இல்லாத பார்ப்பனரை வரவேற்பேன். பார்ப்பனியத்தை ஒரு சமூகக் கட்டமைப்பாக அவர் கண்டார். வெறும் ஒற்றை சாதிப் பிரச்சனையாகப் பார்க்கவில்லை. அந்த நோக்கையே மார்க்சியர்களும் கொண்டிருக்கிறார்கள்.
ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை பெற வேண்டும் என்றால், ஒடுக்குபவரிடம் பிளவை ஏற்படுத்த வேண்டும். கோட்டைக்குள்ளே குத்துவெட்டு நடக்கட்டும். ஒடுக்கப்பட்டோரை எத்தனை பிரிவுகளாகப் பிளந்தார் கள். நாம் ஒடுக்குபவரிடையே ஒரேயொரு பிளவைத்தான் விரும்புகிறோம். அதுதான் முற்போக்கு, பிற்போக்கு எனும் பிளவு. பிறந்த உயர்சாதிக்குத் “துரோகம்” செய்கிறவர் களையும் சமூகநீதி அணிவகுப்பில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சற்றே யோசித்தால் அது உழைக்கும் வர்க்க அணிவகுப்பாக இருப்பதைக் காணுவீர்கள். இப்படியாக சமூகநீதிப் போராட்டமும் வர்க்கப் போரும் ஒரே புள்ளியில் குவிவதையும் உணருவீர்கள். அத்தகைய அணிவகுப்பு வென்றே தீரும்.
(நெல்லையில் நடைபெற்ற அம்பேத்கர் சிந்தனைகள்- ஆய்வரங்கில் ஆற்றிய உரை.)