திருப்பூரில் கடந்த ஜூலை மாத (2018) இறுதியில் நடந்த யூ-டியூப் பிரசவத்தின் விளைவாக ஒரு பெண் மரணமடைந்த செய்தி அதுவும் தமிழ்நாட்டில் நடந்தது என்று நினைக்கையில் நாம் அனைவரும் நிச்சயம் அவமானப்பட வேண்டும். பொது சுகாதாரத்துறை மருத்துவனான எனக்கு மிகப்பெரும் ஆற்றாமையும் கோபமும் கவலையும் வந்திருக்கிறது.

ஒரு நாடு அல்லது மாநிலம் முன்னேற்றம் அடைந்திருக்கிறதா என்பதை அறிய உலக சுகாதார நிறுவனம் மனித வள மேம்பாட்டுக் குறியீடுகளை நிருவியுள்ளது. அவற்றில் முக்கிய இடத்தைப் பெறுவது, பிரசவத்தில் தாய் மரணமடைவதைத் தடுக்கும் மருத்துவ வசதிகள் தான்.

கர்ப்பம் ஆன தேதியில் இருந்து பிரசவத் திற்குப் பின் 42 நாட்கள் வரை உள்ள இந்தக் காலத்தில் தாய் மரணமடைந்தால் அது கர்ப்ப கால தாய் மரணமாக கொள்ளப்படுகிறது. இதை Maternal Mortality Ratio (MMR) என்கிறோம்.home medicine

ஒரு இலட்சம் பிறப்பிற்கு எத்தனை தாய் மார்கள் இப்படி இறக்கிறார்கள் என்பதை வைத்தே ஒரு நாடு எந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறது என்று கூறிவிடலாம்.. தமிழ்நாட்டின் தற்போதைய MMR - 67 க்குக் குறைந்துள்ளது. இது 1990 களில் 450 ஆக இருந்தது.

அதாவது வருடத்திற்கு ஒரு இலட்சம் பிறப்புகள் நடக்கும் ஒரு ஊரில், உதாரணமாக, மதுரை என்று வைத்துக்கொள்வோம். 1980 களின் இறுதியில் 450 தாய்மார்கள் கர்ப்ப காலத்தின் போதோ, பிரசவத்தின் போதோ, பிரசவத்திற்கு பின்னோ இறந்து வந்தார்கள். கிட்டத்தட்ட வருடா வருடம் ஐநூறு தாய்களின் குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் அனாதை ஆயின.

இன்று நாட்டில் சிறப்பாக MMR குறைத்த மாநிலமாகத் தமிழ்நாடு வளர்ந்துள்ளது. அதற்காக, மத்திய அரசிடம் விருதும் வாங்கியிருக்கிறது. இந்த மாற்றம் எப்படி நடந்தது? தானாக இந்த இருபது வருடத்தில் எல்லாம் மாறி விட்டதா?

இது அனைத்தும் அரசின் கொள்கை, அரசு MMR ஐக் குறைக்கச் செலவிட்ட செலவினம், அரசு மருத்துவர்களின் அர்ப்பணிப்பு, கிராமச் சுகாதாரச் செவிலியர்களின் உழைப்பு, செவிலியர்களின் கண் அயறாப் பணி, தனியாரில் மேம்பட்ட சேவை கிடைக்கச்செய்தது போன்ற பல விசயங்கள் தமிழ்நாட்டில் கடந்த முப்பது வருடங்களில் நடந்தது.

ஒவ்வொரு பத்து கிலோமீட்டருக்குள் ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் - தாலுகாவுக்கு ஒரு அரசு மருத்துவ மனை - மாவட்டத்திற்கு ஒரு அரசு மருத்துவ கல்லூரி.

                ஒரு மாவட்டத்தை பத்துப் பனிரெண்டு வட்டாரங்களாகப் (Blocks) பிரித்து, அதில் ஒரு சுகாதார நிலையத்தை வட்டாரச் சுகாதார நிலையமாக நிறுவி அதற்குக் கீழ் பல ஆரம்ப சுகாதார (Primary Health Centres) நிலையங்கள் இயங்கும்.

                ஒவ்வொரு ஆரம்பச் சுகாதார நிலையத் திற்குக் கீழும் ஐந்து முதல் பத்து துணைச் சுகாதார நிலையங்கள் Health Sub centre).

வட்டாரம் முழுவதுக்குமான மருத்துவக் கண்காணிப்பை வட்டார மருத்துவ அலுவலர் கவனிக்கிறார். அவருக்குக் கீழே இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களைப் பொறுப்பு மருத்துவ அலுவலர்கள் கவனிக்கிறார்கள். அவர்களுக்குக் கீழே இயங்கும் துணைச் சுகாதார நிலையங்களில் கிராமச் சுகாதாரச் செவிலியர்( Village Health Nnurse) பணி புரிகின்றனர்.

ஒவ்வொரு 30,000 மக்கள் தொகைக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம், ஒவ்வொரு 5,000 மக்கள் தொகைக்கும் ஒரு துணை சுகாதார நிலையம் என தமிழகச் சுகாதாரத்துறை தனது விருட்ச வேர்களைச் சமூகத்தின் அடித்தளம் வரை பரவவிட்டிருக்கிறது.

கர்ப்பிணிகளைக் காக்கவே 108 ஆம்புலன்ஸ்

கர்ப்ப காலத்தில் ஒரு தாய் மரணமடையக் காரணமான அனைத்துக் காரணங்களும் தோண்டித் துருவி ஆராயப்பட்டு, அதற்கான விடை அறியப் பட்டு உடனே அரசின் கொள்கை முடிவாக ஏற்கப் படுகின்றன.

பிரசவத்தின் போது ஏற்படும் உதிரப்போக்கு போன்ற பிரச்சனைகளில் ஒரு தாய் ஒரு மருத்துவ மனையில் இருந்து மற்றொரு மருத்துமனைக்கு அழைத்து செல்கையில் அல்லது வீட்டில் இருந்து மருத்துவமனையை அடையப் பணம் இல்லாமல் காலதாமதம் ஆகிறது என்ற காரணம் கண்டறியப் பட்டவுடன் வந்த திட்டமே, 108 ஆம்புலன்ஸ். உண்மையில் அது தாய்களைக்காக்க ஆரம்பிக்கப் பட்ட திட்டம் தான். இதனால் பல Transit மரணங்கள் குறைந்தன.

அரசு மருத்துவமனைகளில் இலவச மருந்துகள், ரூ.18,000 உதவித்தொகை

கர்ப்ப காலத்தில் ‘அனீமியா’ எனும் இரத்த சோகை வருவதால் தாய்மரணங்கள் அதிகமாக நிகழ்கின்றன என்று கண்டறியப்பட்டது. உடனே பிரதிவாரம் அனைத்துச் சுகாதார நிலையங்களிலும் சிகிச்சைக்கு வரும் தாய்மார்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டன. அதில் கீரை, முட்டை போன்ற சத்துள்ள உணவுகள் சேர்க்கப்பட்டன. மூன்று மாதம் முதல் இலவசமாக இரும்பு சத்து மாத்திரை வழங்கப்படுகின்றன.

பிரசவ காலத்தில் பெண்களை ஏழை மக்களால் சரிவர கவனிக்க முடிவதில்லை. இதனால் அவர்களது உடல் நலிந்து அதனால் மரணம் ஏற்படுகிறது என்று கண்டறியப்பட்டதால் கொண்டு வரப்பட்டது தான், டாக்டர் முத்து லட்சுமி ரெட்டி மகப்பேறு உதவி திட்டம். இப்போது ரூபாய் 18000 வழங்கப்படுகிறது. தாய்மார்கள் நல்ல உணவு உண்டு திடகாத்திரமாக இருக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.

1980 களில் தமிழகத்தில் சிசேரியன் சிகிச்சை அறிமுகத்துக்கு வந்தது. நானும் சிசேரியன் சிகிச்சையால் உயிர் பிழைத்தவன் என்பதில் என்றும் எனக்கு சிசேரியன் மீது ஒரு நன்றி உண்டு. அதைக் கண்டறிந்தவர்களுக்கு என்றும் நான் நன்றிக் கடன் பட்டவன்.

இந்த சிசேரியன் சிகிச்சை 2000 ஆண்டு வரை கூடப் பரவலாக்கப்பட வில்லை. சிசேரியன் சிகிச்சை சரியான நேரத்தில் கிடைக்காததால் தாய் மரணங்கள் நடக்கின்றன என்று அறியப்பட்டது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிசேரியன் சிகிச்சை செய்யும் அளவுக்குத் தரம் உயர்த்தப் பட்டன. வட்டாரச் சுகாதார நிலையங்கள் பல சிசேரியன் சிகிச்சை கிடைக்கும் நிலையங்களாக உருமாறின. சிசேரியன் சிகிச்சையினை உடனே பெற்று பல மரணங்கள் தவிர்க்கப்பட்டன.

தாய்-சேய் நலத்திற்குத் தனித்துறை CEMONC

மருத்துவர்கள் பல்வேறு துறைகளைப் பார்த்துக்கொண்டு தாய் சேய் நலனிலும் கவனம் செலுத்துவதால், தாய் சேய் நலத்தின் தரம் குறைவதால் இதற்கெனப் பிரத்யேகமான ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்று அரசு நினைத்து உருவாக்கியதே CEMONC எனும் அமைப்பு. (Comprehensive and Emergency Obstetric and Neonatal Care unit)

இங்கே 24 மணிநேரமும் மகப்பேறு மருத்துவர்களும் குழந்தைகள் நல மருத்துவர்களும் பணியில் இருப்பார்கள். எப்போதும் தேவையான இரத்தம் தயாராக இருக்கும். அறுவை அரங்குகள் தயாராக இருக்கும். இவர்கள் வேலையே உயிருக்குப் போராடிக்கொண்டு வரும் தாயையும் சேயையும் காப்பது தான். தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு சீமாங்க் இருக்கிறது.

தாயின் மரணங்கள், தாயின் பிரசவ எண்ணிக்கை கூடக்கூட High Order Birth அதிகரித்துக் கொண்டே செல்வதால் அதைத் தடுக்க, குடும்ப நல அறுவை சிகிச்சைகள் அவரவர் கிராமங்களிலேயே இலவசமாக செய்யப்படுகின்றன. தங்கும் போது இலவச உணவு வழங்கப்படுகிறது. சிகிச்சை முடிந்ததும் இலவசமாக வீட்டிற்கு அழைத்துச் சென்று விடப்படுகிறது.

இதுபோக, கர்ப்ப காலத்தில் இறக்கும் ஒவ்வொரு தாயின் மரணமும் அவமானமாகக் கருதப்பட்டு ஆடிட் எனும் தணிக்கை செய்யப்படும். நான் ஆரம்பச் சுகாதார நிலைய மருத்துவராக இருக்கும் போது சில தணிக்கைகளைச் சந்தித்துள்ளேன். உண்மையில் அந்தத் தணிக்கைக்கு முதல் வாரம் முழுவதும் உறக்கமே வராது.

அந்தத் தாயின் மரணம் எப்படி நடந்தது? எங்கு நடந்தது? ஏன் நடந்தது? எங்கு குறை? யார் மீது தவறு? என்று தணிக்கை செல்லும். முதலில் தணிக்கை அதிகாரி ஆய்வு செய்வார்.. பிறகு துணை இயக்குநர் தணிக்கை. அடுத்து ஆட்சியர் தணிக்கை. பிறகு தேசியச் சுகாதாரக் குழும இயக்குநர் தணிக்கை என்று அந்த மரணத்தின் காரணத்தைக் கண்டறியாமல் ஆய்வு முடியாது. மீண்டும் அந்த மரணம் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்ற அரசுக் கொள்கை உடனே வகுக்கப்படும்.

அனைத்து அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்களும் 2000 களுக்கு முன்பு வரை மருத்துவர் இன்றியோ அல்லது வாரம் இரண்டு நாள் மட்டும் தான் மருத்துவரோடு இயங்கியிருக்கும். காரணம் மருத்துவர் பற்றாக்குறை.

உடனே ‘மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி’ எனும் கொள்கை முடிவு எடுக்கப்பட்டு இன்று அத்தனை ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்துவர்கள் இருக்கிறார்கள். இன்னும் நிறைய இருக்கிறது. நீளமாக செல்வதால் இத்தோடு முடிக்கிறேன்.

இவையனைத்துக்கும் பின்னால் இருக்கும் ஒரே குறிக்கோள், கர்ப்ப காலத்தில் தாய் இறப்பைத் தடுக்க வேண்டும், சிங்கப்பூர், ஸ்வீடன் போன்ற வளர்ந்த நாடுகளின் ஒற்றை இலக்க MMR ஐ அடைய வேண்டும் என்பதே. அதை எப்படியாவது தடுத்து நாட்டின் மக்கள் தொகையைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் யூ-டியூப் போலிகள் திரிகிறார்கள். ஒன்று கூறி இந்தக் கட்டுரையை முடிக்கிறேன் .

‘கர்ப்பம் ஒரு நோயல்ல.... அதற்கு மருத்துவம் தேவையில்லை’ என்ற கருத்து பரப்பும் விசமிகளின் கருத்துக்கு எனது கருத்து ‘கர்ப்பம் நோயல்ல, அது ஒரு இயற்கை நிகழ்வு. ஆணும் பெண்ணும் கூடினால் இயற்கையாகக் கர்ப்பம் நிகழும். ஆனால் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல மாற்றங்களை அறியவும், பிரசவம் மற்றும் அதற்குப் பின்பு ஏற்படும் பிரச்சனைகளை உடனே அறிந்து உயிரைக் காக்கவும் கட்டாயம் சரியான மருத்துவக் கண்காணிப்பு தேவை.’ என்று கூறி முடிக்கிறேன். சிந்திப்பவர்களுக்கு இதில் செய்திகள் உண்டு.

Pin It