தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் மதுரை மாநகர் மாவட்டக்குழு சார்பில் ஜன-8 ந்தேதி கலைஇரவு நடைபெறுகிறது. மைனா இயக்குநர் பிரபுசாலமன், மக்கள் பாடகன் கரிசல் குயில் கிருஷ்ணசாமி ஆகியோர் இவ்விழாவில் பாராட்டப்பட உள்ளனர். கவிஞர் ப.கவிதாகுமார் எழுதிய கவிதை நூல் விழாவில் வெளியிடப்படுகிறது.

மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவில் திடலில் மாலை 6 மணியளவில் துவங்கும் இக்கலைஇரவு நிகழ்விற்கு மாவட்டத் தலைவர் அ.ந.சாந்தாராம் தலைமை வகிக்கிறார். ப.மணிவண்ணன் வரவேற்புரையாற்றுகிறார். மதுரை மாவட்ட ஆட்சியர் சி.காமராஜ் துவக்கவுரையாற்றுகிறார். பேரா.ஞானசம்பந்தன், கோ.நம்மாழ்வார் ஆகியோர் உரைவீச்சு நிகழ்த்துகின்றனர்.

கவிஞர் ப.கவிதா குமார்  எழுதிய, “தலைப்பை இன்னும் யோசிக்கவில்லை“ என்ற கவிதை நூலை சங்கத்தின் மாநிலத் தலைவர் அருணன் வெளியிட, மத்திய கலால்துறை  கண்காணிப்பாளர் ச.கஜேந்திரன் பெற்றுக்கொள்கிறார்.

திருவண்ணாமலை பாப்பம்பாடி ஜமா குழுவினரின் தப்பாட்டம், அரசபட்டி கலைக்குழுவினரின் கரகாட்டம்,லிம்போ கேசவனின் நெருப்பு சாகசம், கி.பிரியதர்ஷினியின் பரதநாட்டியம் ஆகியவை இடம் பெறுகிறது. இராசாமுகமது, மதுரை இராயப்பன், நிஷா ஆகியோர் இசைப்பாடல்கள் பாடுகின்றனர்.

ஓவியர் ஸ்ரீரசாவின் தீண்டாமை எதிர்ப்பு வரலாறு கண்காட்சி, ஓவியர் சரவணாச்சரியின் செல்போன் புகைப்படக்கண்காட்சி ஆகியவை திறக்கப்படுகிறது. மதுரை நாடக இயக்கம், மதுரை கலைவாணர் கலைக்குழு, சுடர் கலைக்குழுவினரின் நாடகங்கள் நடைபெறுகிறது.

கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம் ஒருங்கிணைப்பில் சாத்தூர் இலட்சுமணப்பெருமாள், பிரகதீஸ்வரன் ஆகியோர் பங்கேற்கும் புதுமையான விவாத அரங்கம் நடைபெறுகிறது.

மைனா இயக்குநர் பிரபு சாலமனைப் பாராட்டி சட்டமன்ற உறுப்பினர் என்.நன்மாறன், மக்கள் பாடகன் கரிசல் குயில் கிருஷ்ணசாமியைப் பாராட்டி தமுஎகச மாநிலப் பொதுச்செயலாளர் ச.தமிழ்ச்செல்வன் ஆகியோர் பேசுகின்றனர். வாள் வீச்சில் தேசிய சாதனை புரிந்த வி.இராகவன், வி.வினோத்குமார் ஆகியோரைப் பாராட்டி வடமலையான் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் புகழகிரி வடமலையான் பேசுகின்றார். இரா.தண்டபாணி, கோ.சுரேஷ்பாபு, இராம.அழ.கார்த்திகேயன், ச.விஜயகுமார் ஆகியோர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குகின்றனர். பூ.முத்துக்குமார் நன்றி கூறுகிறார்.

Pin It